முகம்மது அலி, M.A., திருச்சி.
நபி(ஸல்) அவர்கள் இந்த சமுதாயத்திற்காகப் பாடுபட்டதற்காகவும், அவர்களின் மூலமாகவே அல்லாஹ் நமக்கு நேர்வழி காட்டினான் என்பதற்காகவும், நாம் அவர்களை நன்றியோடு நினைத்துப் பார்க்கிறோம். அதன் அடிப்படையில் அவர்களுக்காக நாம் துஆ செய்கிறோம். அதுவே ஸலவாத் எனப்படும் என்று சென்ற இதழில் கண்டோம். ஸலவாத் சொல்வதால் ஏற்படும் பயன்களையும், அதன் சிறப்பையும் நாம் காண்போம்.
“யார் என்மீது ஸலவாத் சொல்கிறானோ, அதன் காரணமாக அல்லாஹ் அவனுக்குப் பத்து மடங்கு அருள்புரிகிறான்” என்று நபி(ஸல்) கூறியுள்ளனர். அறிவிப்பவர்: அப்துல்லாஹ் இப்னு அம்ரு(ரழி) நூல்:முஸ்லிம்
என்மீது அதிகம் ஸலவாத் கூறியவர்கள்தான், மறுமையில் எனக்கு மிகவும் நெருக்கமானவர்கள்” என்பதும் நபிமொழியாகும். அறிவிப்பவர்: அப்துல்லாஹ் இப்னு மஸ்ஊது(ரழி) நூல்: திர்மிதீ
என்னுடைய கப்ரை திருவிழாக்கள் நடக்கும் இடமாக ஆக்காதீர்கள்! என்மீது ஸலவாத் கூறுங்கள்! நீங்கள் எங்கே இருந்தாலும் உங்கள் ஸலவாத் என்னை வந்து சேரும்” என்றும் நபி(ஸல்) கூறியுள்ளார்கள். அறிவிப்பவர்: அபூஹுரைரா(ரழி), நூல்: அபூதாவூத்
இந்த நபிமொழி நமக்கு ஒரு உண்மையைத் தெளிவாக்குகின்றது. நபி(ஸல்) அவர்களைப் புகழ்கிறேன் என்று திருவிழாக்கள் கொண்டாடுவதோ, பாடல்கள் பாடிக்கொண்டிருப்பதோ நபி(ஸல்) அவர்களின் மீது நாம் கொண்ட அன்புக்கு சரியான அடையாளமாகாது. மாறாக அவர்களுக்காக அல்லாஹ்விடம் ஸலவாத் எனும் துஆவைச் செய்வதுதான் உண்மையான அன்பாகும் என்பதை இந்த ஹதீஸ் மூலம் நாம் உணரலாம்.
“உங்கள் ஸலவாத் என்னை வந்தடையும்” என்று நபி(ஸல்) அவர்கள் குறிப்பிட்டுக் கூறுவதிலிருந்து, ஸலவாத்தைத் தவிர மற்ற பாடல்கள், கொண்டாட்டங்கள் அவர்களை அடையாது என்றும் விளங்க முடியும். என்னைப் பற்றிக் கூறப்படும்போது எவன் என்மீது ஸலவாத் சொல்லவில்லையோ அவன் நாசமாகட்டும்” என்றும் நபி(ஸல்) அவர்கள் கூறியுள்ளனர். அறிவிப்பவர்: அபூஹுரைரா(ரழி) நூல்: திர்மிதீ.
“என்னைப் பற்றிக் கூறப்படும்போது எவன் என்மீது ஸலவாத் கூறவில்லையோ அவன்தான் கஞ்சனாவான்” என்பதும் நபி(ஸல்) அவர்களின் பொன்மொழிகளாகும். அறிவிப்பவர்: அலி(ரழி), நூல்: திர்மிதீ.
யாரேனும் என்மீது ஸலவாத் கூறினால் (அதாவது துஆ செய்தால்) அவன் அவ்வாறு செய்யும்போதெல்லாம் மலக்குகள்(வானவர்கள்) அவனுக்காகத் துஆ செய்கிறார்கள்” என்று நபி(ஸல்) கூறினார்கள். அறிவிப்பவர்: ஆமீர் இப்னு ரபிஆ(ரழி), நூல்கள்: அஹ்மத், இப்னுமாஜா
அல்லாஹ் கூறுவதாக நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். “நபியே! யார் உமக்காக ஸலவாத் சொல்கின்றாரோ, அவருக்கு நான் அருள்புரிகிறேன். யார் உம்மீது ஸலாம் கூறுகிறாரோ, அவருக்கு நான் பாதுகாப்பு அளிக்கிறேன்” அறிவிப்பவர்: அப்துர்ரஹ்மான் இப்னு அவபு(ரழி) நூல்: அஹ்மத்.
உங்கள் நாட்களில் வெள்ளிக்கிழமை மிகவும் சிறப்பு வாய்ந்ததாகும். அந்த நாளில் என்மீது அதிகம் ஸலவாத் கூறுங்கள்! ஏனெனில் உங்களின் ஸலவாத் எனக்கு எடுத்துக்காட்டப்படுகின்றது” என்று நபி(ஸல்) அவர்கள் கூறியபோது, சில நபித் தோழர்கள்: நீங்கள் (மண்ணோடுமண்ணாக) மக்கிவிடும்போது எங்கள் ஸலவாத் எப்படி எடுத்துக்காட்டப்படும்?” என்று கேட்டனர். அதற்கு நபி(ஸல்) அவர்கள், “நபிமார்களின் உடல்களை அல்லாஹ் மண்ணுக்கு ஹராமாக்கிவிட்டான். (அதாவது நபிமார்களின் உடல்கள்மக்கிவிடாது) என்றனர். அறிவிப்பவர்: அவ்ஸ் இப்னு அவ்ஸ்(ரழழி நூல்கள்: அபூதாவூது, நஸயீ, இப்னுமாஜா
இந்த ஹதீஸிற்குச் சிலர் தம் மனம்போன போக்கில் விளக்கம் கொடுக்க முற்பட்டுவிட்டதால் இங்கே சில விளக்கங்களைச் சொல்வது மிகவும் அவசியமாகிவிட்டது.
“நபிமார்களின் உடல்கள் மக்கி விடாது” என்ற சொற்றொடரிலிருந்து சிலர் அவ்லியாக்களின் உடல்களையும் மண் மக்கிவிடச் செய்யாது என்று தவறான விளக்கங்கள் கூறத் துவங்கிவிட்டனர். அது எவ்வளவு தவறான விளக்கம் என்பது அறிவுடையோருக்கு நன்றாகவே தெரியும். ஸஹாபாக்களில் சிலர், “நீங்கள் மக்கிவிடும்போது எப்படி எங்கள் ஸலவாத் உங்களுக்கு எத்திவைக்கப்படும்?” என்று கேட்டதற்குப் பதிலாகவே இதனை நபி(ஸல்) கூறினார்கள். இந்த இடத்தில் ஒன்றை நன்றாகச் சிந்தித்துப் பாருங்கள்!
அல்லாஹ்வின் நேசர்களிலேயே நபிமார்களுக்கு அடுத்த இடம் ஸஹாபாக்களுக்குத்தான் உண்டு. அவ்லியாக்களின் உடல்கள் மக்கிவிடாது என்றால் ஸஹாபாக்களின் உடல்கள்தான் அதில் முதலிடம் பெறும். ஆனால் நபி(ஸல்) அவர்கள் அந்த ஸஹாபாக்களை நோக்கி “நபிமார்களையும், ஸஹாபாக்களாகிய உங்களையும் மண் திண்ணாது” என்று கூறாமல், “நபிமார்கள்” என்று மட்டும் சொல்கிறார்கள். இதிலிருந்து ஸஹாபாக்களுக்கே இந்த உத்திரவாதம் இல்லை என்பது தெளிவு. ஸஹாபாக்களுக்கு இல்லாத சிறப்பு அவர்களுக்குப் பின்னர் தோன்றியவர்களுக்கு இருக்க முடியாது என்று தெரிய முடிகின்றது.
எனவே நபிமார்களின் உடல்கள் மட்டும்தான் மக்கிப் போகாமலிருக்கும். மற்றவர்களின் உடல்களை அல்லாஹ் நாடினால் அவன் பாதுகாக்கலாம்: பாதுகாக்காமலுமிருக்கலாம். திட்டவட்டமாகச் சொல்லமுடியாது. அல்லாஹ் நாடினால் பிர்அவ்ன் போன்ற கொடியவனின் உடலையும் கூடப் பாதுகாப்பான். மிகச்சிறந்த நல்லடியார் ஒருவரின் உடலையும் பாதுகாக்காமல் அழித்துவிடவும் செய்யலாம். இதுதான் உண்மை.
“நீங்கள் கூறும் ஸலவாத் எனக்கு எத்திவைக்கப்படுகின்றது” என்ற கூற்றிலிருந்து மற்ற விஷயங்கள் அவர்களை எட்டாது என்பதையும், “எத்திவைக்கப்படுகின்றது” என்ற சொல்லிலிருந்து, தானாக நபி(ஸல்) அவர்கள் இதனைச் செவியுறுவதில்லை: மலக்குகள் மூலம் தான் அது எடுத்துச் சொல்லப்படுகின்றது என்பதையும் நாம் தெரியமுடிகின்றது.
ஸலவாத் சொல்வதன் சிறப்புப் பற்றி இன்னும் ஏராளமான ஹதீஸ்கள் உள்ளன. நம்பிக்கையாளர்களுக்கு இவ்வளவு போதும் என்பதால் ஒருசில ஹதீஸ்களை மட்டும் எடுத்துத் தந்துள்ளோம். இனி அடுத்த இதழில் ஸலவாத்திலிருந்து நாம் பெறவேண்டிய பாடமும் படிப்பினையும் என்ன என்று பார்ப்போம். இன்ஷா அல்லாஹ்.
(தொடரும்)