ஐயமும்! தெளிவும்!!
ஐயம்: கோபத்தில் அல்லாஹ், ரசூல் மேல் ஆணையாக ‘இன்னாருக்கு எந்த உதவியும் செய்யமாட்டேன்’ என்று சொல்லி விட்டேன் இதற்கு விளக்கம் தரவும்?
தெளிவு: நீங்கள் இரண்டு தவறுகள் செய்துவிட்டீர்கள்! அல்லாஹ்வின் மீது மட்டுமே சத்தியம் செய்ய வேண்டும்; ரசூலின் மீதோ, மற்ற எவர் மீதோ சத்தியம் செய்யக்கூடாது.
“எவன் அல்லாஹ் அல்லாத மற்றவரைக் கொண்டு சத்தியம் செய்கிறானோ, அவன் இணை வைத்து விட்டான்” என்பது நபிமொழி. நூல்: திர்மிதி
முதலில் இந்தத் தவறுக்காக அல்லாஹ்விடம் மன்னிப்புத் தேடிக் கொள்ளுங்கள்.
“உங்களில் (பொருள்) அருளப் பெற்றோரும் (பிறருக்கு உதவி செய்ய) இயல்புடையவரும், தங்கள் பந்துகளுக்கோ, ஏழைக ளுக்கோ அல்லாஹ்வுடைய பாதை யில் ஹிஜ்ரத் செய்தவர்களுக்கோ (எதுவும்) கொடுக்க மாட்டேன் என்று சத்தியம் செய்ய வேண்டாம். அதனை மன்னித்து பொருட்படுத்தாதுவிட்டு விடவும்!”
அல்குர்ஆன் 24:22
“நீங்கள் நற்கருமங்கள் செய்வதற்கோ, இறையச்சம் உடையவர்களாக ஆவதற்கோ, மக்களிடையே நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதற்கோ, உங்களின் சத்தியங்களில் அல்லாஹ்வை தடையாக ஆக்காதீர்கள்! அல்குர்ஆன் 2:224
அல்லாஹ்வின் கட்டளைக்கு மாற்றமாக “ஒருவருக்கு உதவி செய்வதற்கு தடையாக அல்லாஹ்வை ஆக்கி விட்டீர்கள்!” அல்லாஹ் அப்படிச் செய்யக் கூடாது என்று நமக்கு போதனை செய்கிறான். இந்த நிலையில் நீங்கள் என்ன செய்ய வேண்டும்? அல்லாஹ்வின் திருத்தூதர் அதனை தெளிவாக விளக்குகின்றார்கள்.
“அப்துர் ரஹ்மானே! நீ ஏதேனும் ஒரு சத்தியம் செய்து, அதை விட வேறொரு காரியத்தை சிறந்ததாகக் கருதினால், அந்தச் சிறந்ததையே செய்! (உன் சத்தியத்தை செயல்படுத்தாதே) எனினும் சத்தி யத்தை முறித்து விட்டதற்காக பரிகாரம் செய்துவிடு!” என்றுநபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: அப்துர் ரஹ்மான் இப்னு சமுரா (ரழி) நூல்கள்: புகாரி, முஸ்லிம்
இந்த நபிமொழியின் அடிப்படையில் நீங்கள் உங்கள் சத்தியத்தை செயல்படுத்தக் கூடாது. மாறாக எவருக்கு உதவி செய்வதில்லை என்று சத்தியம் செய்தீர்களோ அவருக்கு ஏதேனும் ஒரு உதவி செய்து விடுங்கள்! உங்கள் சத்தியத்தை, இவ்வாறு செய்வதன் மூலம் நீங்கள் முறித்து விட வேண்டும். அவ்வாறு முறித்ததற்கான பரிகாரத்தையும் நீங்கள் செய்ய வேண்டும். அதை அல்லாஹ் தெளிவு படுத்துகிறான்.
“சத்தியத்தின் பரிகாரமா வது”, நீங்கள் உங்கள் குடும்பத் தினருக்கு கொடுத்து வரும் ஆகா ரத்தில் நடுத்தர மானதை பத்து ஏழைகளுக்கு அளிக்க வேண்டும் அல்லது (அவ்வாறே) அவர்களுக்கு ஆடையளிக்க வேண்டும்! அல்லது ஒரு அடிமையை விடுதலை செய்ய வேண்டும்.“(இதற்கான வசதியை) ஒருவன் பெற்றிருக்காவிட்டால் மூன்று நாட்கள் நோன்பிருக்க வேண்டும். இதுதான் நீங்கள் சத்தியம் செய்து (அதை முறிக்கும் போது) சத்தியத்தின் பரிகாரமாகும் அல்குர்ஆன் 5:89 இந்த இறைக்கட்டளைப்படி உங்கள் சத்தியத்தை முறிக்கும் போது பரிகாரம் காண வேண்டும்.இதுவரை கூறியதன் விளக்கம்:
1. அல்லாஹ்வின் மீது மட்டுமே சத்தியம் செய்ய வேண்டும்.
2.நல்ல காரியங்கள் செய்வதாக சத்தியம் செய்தால் அதை நிறைவேற்ற வேண்டும்.
3.’நல்ல காரியங்கள் செய்வதில்லை’ என்று சத்தியம் செய்தால் அந்த சத்தியத்தை செயல்படுத்தக்கூடாது. முறிக்க வேண்டும். அதற்குரிய பரி காரத்தையும் செலுத்த வேண்டும்.
4. பத்து ஏழைகளுக்கு நடுத்தரமான உணவு அளிக்க வேண்டும் அல்லது பத்து ஏழைகளுக்கு நடுத்தரமான உடையளிக்க வேண்டும். (அடடிமை முறை இப்போது இல்லாத தால்) இவ்விரண்டுக்கும் வசதியற்றவர்கள் மூன்று நோன்பு நோற்க வேண்டும்.