முஸ்லிம் சமுதாயம் இன்று முழுக்க முழுக்க தங்களை மார்க்க அறிஞர்கள் என்று ்சொல்லிக் கொள்ளும் ஆலிம்கள் – மவ்லவிகளின் கட்டுப்பாட்டில் இருக்கிறது. இந்த மவ்லவிகளின் தாக்கமும், ஆதிக்கமும் சமுதாயத்தில் புரையோடிப் போயிருக்கிறது. அவர்களின் பிடியிலிருந்து முஸ்லிம் சமுதாயத்தை விடுவிப்பது நடக்கக்கூடிய காரியமல்ல. எனவே உங்களின் இந்த முயற்சி வீண் முயற்சி. இதை விடுத்து வேறு உருப்படியான காரியங்களைச் செய்துவிட்டுப் போகலாம் என்று பலர் (அவர்களில் மெத்தப்படித்த அறிவு ஜீவிகளும் அடக்கம்) எமக்கு அறிவுரை கூறிவருகிறார்கள்.
அவர்களில் சிலருக்கு இந்த மவ்லவிகள் மீதுள்ள அபாரமான நன்னம்பிக்கையால் மவ்லவிகளை இவ்வளவு கடுமையாக விமர்சிப்பதை விட்டுவிடுங்கள் என்று கோரிக்கை வைக்கிறார்கள். அல்குர்ஆனை தன்னம்பிக்கையுடன் பொருள் அறிந்து சிந்தனையுடன் படித்து விளங்குவதற்கு முன்னால், அதாவது 1960லிருந்து 1983வரை நாமும் இந்த மவ்லவிகள்மீது மிகமிக அபார நம்பிக்கை வைத்து அவர்களின் வாக்குகளை வேதவாக்காகக் கொண்டு செயல்படத்தான் செய்தோம். அதனால் 1964-ல் துறவு மனப்பான்மையுடன் வீட்டைவிட்டு வெளியேறி இரவு மட்டும் ஒரு வேளை சாப்பிட்டு பல மாதங்களை ஓட்டத்தான் செய்தோம். இமாம் கஸ்ஸாலியின் கீமீயா சஆதத் என்ற நூலை பெரும் பொக்கிஷமாகக் கருதினோம். 1981-ல் ஹஜ்ஜுக்குச் செல்லும்போது அந்த நூலை பெரும் மதிப்புடன் எடுத்துச் சென்றோம். சவூதி கஸ்டம்ஸில் அந்த நூல் என்ன நூல் என்று கேட்டபோது இமாம் கஸ்ஸாலியின் கீமியா சஆதத் என்று பெருமிதத்துடன் சொன்னவுடன் அதை வாங்கி விட்டெறிந்ததைக் கண்டவுடன் எமது இதயமே நின்றுவிட்டது. அந்த பதற்றத்தால் கையில் வைத்திருந்த ஒரு பையையும் அங்கு விட்டுவிட்டு வெளியேற நேரிட்டது.
இந்த அளவு, அளவுக்கு மீறிய முரட்டு பக்தி வைத்திருந்த நாம் எப்போது அல்லாஹ்வின் இறுதி வழிகாட்டல் நூல் அல்குர்ஆனை நேரடியாக தன்னம்பிக்கையுடன் சுய சிந்தனையுடன் பொருள் அறிந்து படிக்க ஆரம்பித்தோமோ அப்போதே நாம் எவ்வளவு பெரிய வழிகேட்டில் இழுத்துச் செல்லப்படுகிறோம் என்பதை அறிய முடிந்தது. அல்குர்ஆனிலிருந்து நேரடியாகப் புரிந்து கொண்ட உண்மை-நேர்வழி கருத்துக்களை கடிதமாக எழுதி தமிழக அனைத்து அரபி மதரஸாக்களுக்கும் பிரபல மவ்லவிகளுக்கும் விளக்கம் கேட்டு எழுதினோம். அப்போதும் அவர்கள் மீது நல்லெண்ணத்துடனேயே இருந்தோம். அவர்கள் மனமுரணாக, வீம்பாக ஆணவத்துடன் சத்தியத்தை மறைக்க முற்படுகிறார்கள் என்பதைப் புரிந்து கொண்ட பின்னரே மக்கள் மன்றத்தைத் தொடர்பு கொண்டோம்.
அல்குர்ஆன் வசனங்கள் தெள்ளத் தெளிவாக, நேரடி விளக்கமாக அமைந்துள்ளன. அதற்கு மேலும் இறுதித் தூதர் நபி(ஸல்) அவர்கள் அல்லாஹ்வின் கட்டளைப்படி (பார்க்க 7:157, 16:44, 64, 62:2) அல்குர்ஆனை நடைமுறையில் செயல்படுத்தி விளக்கி விட்டார்கள். இந்த நிலையில் ‘பாமர மக்களாகிய உங்களுக்கு குர்ஆன், ஹதீஸ் விளங்காது அதை நாங்கள்தான் விளக்க வேண்டும்’ என்று இந்த மவ்லவிகள் கூறினால் அதன் பொருள் என்ன? பாமரர்களாகிய உங்களுக்கு மார்க்கத்தை விளக்க அல்லாஹ்வுக்கும் ஆற்றல் இல்லை, அவனது தூதருக்கும் ஆற்றல் இல்லை. (நவூது பில்லாஹ்) அந்த ஆற்றல் எங்களுக்கே இருக்கிறது என்றுதானே கூறுகிறார்கள். இப்படிப்பட்டவர்கள் யாராக இருக்க முடியும்? நேர்வழியை கோணல் வழியாக ஆக்கும் ஷைத்தானின் ஏஜண்டுகளாகத்தானே அவர்கள் இருக்க முடியும்
அதற்கும் காரணம் இருக்கிறது. நேர்வழி செல்பவர்கள் மிகமிக சொற்பமானவர்களே. வழிகேட்டில் சென்று நரகில் விழுபவர்களே மிகமிக அதிகம். இந்த மவ்லவிகள் அல்குர்ஆனின் சுமார் (50) ஐம்பது இறைவாக்குகளின் எச்சரிக்கைகளுக்கு முரணாக மார்க்கத்தைத் தொழிலாக – வியாபாரமாகக் கொண்டிருப்பதால், நேர்வழி நடக்கும் சொற்பமான வாடிக்கையாளர்களைக் கொண்டு பெருத்த ஆதாயம் அடையமுடியாது. வழிகேட்டில் சென்று நரகில் விழுபவர்களை வாடிக்கையாளர்களாகக் கொண்டால்தான், அவர்களின் வியாபாரத்தை ஜாம் ஜாம் என்று நடத்த முடியும். வழிகேடர்களை வாடிக்கையாளர்களாக கொள்ள விரும்பினால் அந்த வழிகேடர்கள் விரும்பும் வழிகேட்டுப் போதனைகளை – கோணல் வழிகளை நேர்வழியாக எடுத்துச் சொன்னதால்தான் அது சாத்தியமாகும்.
வழிகேட்டில் சென்று நரகில் விழுபவர்கள் கூட்டம் கூட்டமாக இந்த மவ்லவிகளின் பின்னால் அணி வகுப்பார்கள். இந்த மவ்லவிகளும் தங்கள் ஹறாமான வியாபாரத்தை செழிப்பாக நடத்த முடியும். மார்க்கத்தைப் பிழைப்பாகக் கொண்டால் சத்தியத்தை உள்ளது உள்ளபடி சொல்ல முடியாது என்ற காரணத்தால் அனைத்து நபிமார்களையும் ‘இதற்காக உங்களிடம் எவ்வித கூலியையும் எதிர்பார்க்கவில்லை’ என’று பகிரங்கமாக அறிவிக்கக் கட்டளையிட்டுள்ளான். அல்லாஹ் மார்க்கத்தைப் பிழைப்பாக்கிக் கொண்ட, முன்னைய நபிமார்களைப் பின்பற்றுவதாகச் சொல்லிக் கொண்ட புரோகிதர்கள் எப்படிப்பட்ட தில்லு முல்லுகளைச் செய்தார்கள் என்பதையும் தெள்ளத் தெளிவாக அல்குர்ஆனில் அல்லாஹ் அறிவித்துள்ளான். முழுமை பெற்ற இஸ்லாமிய மார்க்கத்தையும் மதமாக்கி அதைப் பிழைப்பாகக் கொண்டுள்ள இந்த மவ்லவிகளும் அப்படிப்பட்ட தில்லுமுல்லுகளையே செய்து வருகிறார்கள் என்பது உள்ளங்கை நெல்லிக்கனியாக விளங்குகிறது.
இவை அனைத்தையும் திட்டமாக, தெள்ளத் தெளிவாக எவ்வித சந்தேகத்திற்கும் இடமின்றி தெரிந்து கொண்ட பின்னரே துணிந்து செயல்படத் தொடங்கினோம். எம்முடைய இந்த முயற்சி பலன் அளிக்குமா? இல்லையா? பலன் அளித்தால்தான். இந்த முயற்சியில் இறங்க வேண்டும் என்றெல்லாம் நாம் சிந்திக்கவில்லை. அல்குர்ஆன் 5:67-ல் அல்லாஹ் நபிக்கு கட்டளையிட்டுள்ளதை கருத்தில் கொண்டு குர்ஆன், ஹதீஸில் உள்ளதை உள்ளபடி எடுத்து வைப்பதே எமது கடமை. அனைத்து தீங்குகளிலிருந்தும் அல்லாஹ் எம்மைக் காப்பாற்றப்போதுமானவன் என்ற உறுதியான நம்பிக்கையுடன்தான் செயல்பட்டு வருகிறோம். எத்தனையோ நபிமார்கள் தங்களின் பிரசார பணியைக்கொண்டு ஒரு நபரைக் கூட நேர்வழிக்குக் கொண்டு வர முடியாவிட்டாலும், அவர்கள் தங்கள் பணியில் வெற்றியடைந்து சுவர்க்கம் போவதை ஹதீஸ்களில் பார்க்கிறோம். நபி நூஹ்(அலை) 950 வருடங்கள் பாடுபட்டும் சின்னஞ்சிறிய கப்பலில் ஏற்றிக்கொள்ளும் அளவுக்கே வெகு சிலரே நேர்வழிக்கு வந்தனர். அவர்களது மகனே நேர்வழியை ஏற்றுக் கொள்ளவில்லை. எனவே முஸ்லிம்கள் அனைவருமே இந்த மவ்லவி புரோகிதர்களின் பிடியில் இருக்கின்றார்கள்; அவர்கள அப்பிடியிலிருந்து விடுவிக்க முடியாது என்ற எண்ணத்தில் எமது முயற்சியை கைவிட வேண்டியதில்லை.
மேலும் அல்லாஹ்வின் கட்டளைகளை நமது அறிவு ஏற்றுக்கொண்டால்தான், அவை நடைமுறை சாத்தியமாக இருந்தால்தான், அவற்றைச் செயல்படுத்த முற்பட வேண்டும் என்ற போதனை ஷைத்தானின் துர்போதனையாகும். இப்றாஹீம்(அலை) அவர்களுக்கு, அவரது அருமை மனைவி ஹாஜரா(அலை) அவர்களையும், அருமையாக வேண்டிப்பெற்ற ஆசைமகன் இஸ்மாயீல்(அலை) அவர்களையும் உயிர் வாழ்வதற்கு வாய்ப்பு அறவே இல்லாத பொட்டல் காட்டில் கொண்டு விடும்படி அல்லாஹ் கட்டளையிட்டபோது இப்றாஹீம்(அலை) அவர்களின் அறிவு அதை ஏற்றுக் கொண்டா செயல்படுத்தினார்கள்? அது நடைமுறை சாத்தியம் என்று எண்ணியா அதைச் செயல்படுத்தினார்கள். அல்லாஹ் எஜமானன், நாம் அவனது அடிமைகள். எஜமானனாகிய அல்லாஹ்வின் கட்டளையை அடிமைகளாகிய நாம் மீற முடியாது. அப்படி மீறினால் அது கடும் குற்றம் என்று விளங்கியே செயல் படுத்தினார்கள். பின்னர் அதே மகனை அறுத்துப்பலியிட அல்லாஹ் கனவில் கட்டளையிட்ட போதும், எஜமானனின் கட்டளையை அடிமை நிறைவேற்றுவதைத்தவிர வேறு மாற்றுக் கருத்துக்கு இடமில்லை என்ற தெளிவான விளக்கத்தின் அடிப்படையிலேயே செயல்பட்டார்கள். இறைவனது கட்டளைகளுக்கு அடிபணிந்ததால், மனித அறிவுக்கு எட்டாத, அறிவு ஏற்றுக்கொள்ளாத அளவில் பெரும் மாற்றத்தை அல்லாஹ் உண்டாக்கிக் காட்டினான். பொட்டல்காடு பெரும் நகரமாகிவிட்டது. மனித குலத்திற்கே அபயமளிக்கும் பட்டணமாகிவிட்டது. உலக முஸ்லிம்கள் அனைவரும் அங்கு நோக்கித் தொழவும், உலக மக்கள் அங்கு கூடி, இப்றாஹீம்(அலை) அவர்களின் குடும்பத்தில் நடந்த அந்த செயல்களை ‘ஹஜ்’ செயல்பாடுகளைக் கொண்டு நினைவு கூறவும் ஏற்பாடு செய்துவிட்டான். அல்லாஹ்வின் முடிவை யாராலும் மாற்ற முடியாது.
ஸலஃபி, JAQH, TNTJ, முஜாஹித், அஹ்ல ஹதீஸ் இவற்றிற்கு அல்லாஹ்வின் அங்கீகாரம் உண்டா?
தர்கா, தரீக்கா, மத்ஹபுகள் பெயரால் ஷிர்க், பித்அத்களில் மூழ்கி இருக்கும் முஸ்லிம்களிலிருந்தும், காதியானிகளிலிருந்தும், தங்களை வேறுபடுத்திக் காட்ட வேண்டும் என்ற நோக்கோடு தங்களை ஸலஃபி, JAQH, TNTJ, முஜாஹித் அஹ்ல ஹதீஸ் என இவர்களாக தங்களுக்குத் தாங்களே பெயர் சூட்டிக் கொண்டு மகிழ்ச்சி அடைந்து வருகிறார்கள்.
இவர்களிடம் சத்தியத்தை – நேர்வழியை அறிந்து கொள்ளும் ஆர்வம் உண்மையிலேயே இருக்குமானால், அவர்கள் ஆத்திரமோ, அனுதாபமோ இல்லாமல் நடுநிலையோடு கீழ்வரும் செய்திகளைப் படித்துப் பார்த்து எந்தக் கருத்து குர்ஆன், ஹதீஸ்படி இருக்கிறது? குறைந்தபட்சம் குர்ஆன், ஹதீஸ்களுக்கு நெருக்கமாக இருக்கிறது, முரண் இல்லாமல் இருக்கிறது என்ற முடிவுக்கு வரும்படி கேட்டுக் கொள்கிறோம்.
காதியானிகள், தர்கா, தரீக்கா, மத்ஹபுகாரர்கள் போன்ற வழிகெட்ட கூட்டங்கள் எல்லாம் தங்களை முஸ்லிம்கள் என்று சொல்லிக் கொள்ளும்போது, நம்மை வேறுபடுத்திக் காட்ட ‘ஸலஃபி’, JAQH, TNTJ, முஜாஹித், அஹ்ல ஹதீஸ் போன்ற பெயர்களில் தங்களை அழைத்துக் கொள்வது அவசியமாக இருக்கிறது என்று கூறி வருகிறார்கள். அவர்கள் கோபப்படாமல் சிறிது சிந்திக்க வேண்டும். அவர்களது பெற்றோர்கள்! அவர்களுக்கு சூட்டிய அப்துஸ்ஸலாம், உமர், முஸ்தஃபா, கமாலுத்தீன், ஜைனுல் ஆபிதீன் போன்ற பெயர்கள் போலவே, இன்று கபுரு வணங்கிகள், அத்துவைதத்தை சரி காணும் சூஃபிகள், காதியானிகள் (ஏன்? சபரி மலைக்கு மாலை போடுகிறவர்களும், திருப்பதிக்கு காவடி தூக்குகிறவர்களும் கூட) இன்னும் அனைத்து வழிகெட்ட கூட்டங்களிலும் அதேபோல் அதே பெயர்களை உடையவர்கள் இருக்கத்தானே செய்கிறார்கள். அவர்கள் எல்லாம் தங்களை அப்பெயர்களால் அழைத்துக்கொள்கிறார்கள். எனவே தங்கள் பெயர்களை மாற்றி வேறுபடுத்திக் காட்ட வேண்டும் என்று இப்பிரிவினைவாதிகள் என்றாவது எண்ணியிருக்கிறார்களா? கனவில் கூட நினைத்திருக்க மாட்டார்கள். தங்களது பெயர்களை சொல்லுவதையே சரி காண்கிறார்கள். இத்தனைக்கும் அவை அவர்கள் பெற்றோர்கள் சூட்டிய பெயர்கள் மட்டுமே.
இப்போது சிந்தியுங்கள், ‘முஸ்லிம்’ என்ற பெயர் அல்லாஹ் இந்த உம்மத்திற்குச் சூட்டிய பெயர். (பார்க்க அல்குர்ஆன் 22:78) அல்குர்ஆன் 41:33-ல் அல்லாஹ் தெளிவாக பிரசாரபணி புரிகிறவர்கள் தங்களை முஸ்லிம்கள் என்று அழைத்துக் கொள்வதையே விரும்புகிறான். ‘முஸ்லிம்’ அல்லாத நிலையில் மரணிக்காதீர்கள் என்றும் கட்டளை யிட்டுள்ளான். (பார்க்க அல்குர்ஆன் 2:132, 3:102)
இது அல்லாமல் ‘முஸ்லிம்’ என்ற பதம் பல திரிபுகளில் சுமார் 42 இடங்களில் வருகிறது. நபிமார்கள் அனைவருமே தங்களை ‘முஸ்லிம்’ என்றே சொல்லிக் கொண்டார்கள் என்று அல்குர்ஆன் கூறுகிறது. (பார்க்க.2:131,132,10:72,84, 12:101, 5:44,111) அல்குர்ஆன் 22:78-ல் அல்லாஹ் முஹம்மது(ஸல்) அவர்களை நபியாக ஏற்றுக் கொண்ட இந்த உம்மத்திற்கு இந்த அல்குர்ஆன் என்ற வழிகாட்டல் நூலிலும், இதற்கு முன்னர் இறக்கப்பட்ட வழிகாட்டல் நூல்களிலும் (இன்ஜீல், தவ்றாத், ஜபூர் போன்றவை) ‘முஸ்லிம்’ என்றே பெயர் சூட்டியுள்ளதாகக் கூறுகிறான்.
“அவன் உங்களைத் தேர்ந்தெடுத்துக் கொண்டான், இந்த மார்க்கத்தில் அவன் உங்களுக்கு எந்த சிரமத்தையும் ஏற்படுத்தவில்லை. இதுதான் உங்கள் பிதாவாகிய இப்றாஹீமுடைய மார்க்கமாகும். (அல்லாஹ்வாகிய) அவன்தான் இதற்கு முன்னர் உங்களுக்கு ‘முஸ்லிம்கள்’ என பெயர் சூட்டினான். இதிலும், (அவ்வாறே) கூறப் பெற்றுள்ளது.” (அல்குர்ஆன் 22:78)
இப்போது சிந்தியுங்கள்! காதியானிகள், கபுரு வணங்கிகள், இறைவனுக்கு நேரடியாகவே இணை வைக்கும் “அத்துவைத” கொள்கையை நிலைநாட்டும் சூஃபிகள் போன்ற, வழிகெட்டு நரகில் போய் விழுபவர்கள் எல்லாம் தங்கள் பெற்றோர் தங்களுக்குச் சூட்டிய பெயர்களில் இருக்கிறார்கள் என்பதற்காக தங்கள் தங்கள் பெற்றோர்கள் இட்ட – சூட்டிய பெயர்களை் மாற்றிக்கொள்ளத் துணியாத இவர்கள், மேற்கண்ட வழிகேட்டுக் கொள்கையுடையோர் எல்லாம் தங்களை முஸ்லிம்கள் என்று சொல்லிக் கொள்கிறார்கள் என்பதற்காக, அல்லாஹ் சூட்டிய ‘முஸ்லிம்’ என்ற பெயரில் வெறுப்புற்று தங்களை ‘ஸலஃபி’, JAQH, TNTJ, முஜாஹித், அஹ்லஹதீஸ் என்று அழைத்துக் கொள்ள, அதாவது தங்களுக்கு ‘ஸலஃபி’ JAQH, TNTJ, முஜாஹித், அஹ்லஹதீஸ் என பெயர் சூட்டிக் கொள்ள விரும்புகிறார்களே இது சரியா? இதுவும் ஷைத்தானின் மிகப்பெரிய ஏமாற்று வித்தை என்பதை அவர்களால் அறிந்து கொள்ள முடியவில்லையா?
அல்குர்ஆனில் ‘முஸ்லிம்’ என்று அழைத்துக் கொள்வதற்கு எண்ணற்ற ஆதாரங்களைத் தந்துள்ளோம். அதுபோல் இவர்கள் விரும்பி ஏற்றுக் கொண்டிருக்கும் ‘ஸலஃபி’ JAQH, TNTJ, முஜாஹித், அஹ்லஹதீஸ் என்பதற்கு ஒரேயொரு ஆதாரத்தை அல்குர்ஆனிலிருந்து தர முடியுமா? நபி(ஸல்) அவர்கள் தங்களை ‘ஸலஃபி’ JAQH, TNTJ, முஜாஹித், அஹ்லஹதீஸ் என்று அடையாளப்படுத்தி இருக்கிறார்களா? நான்கு கலீஃபாக்களில் யாராவது தங்களை “ஸலஃபி”, JAQH, TNTJ, முஜாஹித், அஹ்லஹதீஸ் என்று அழைத்துக் கொண்டார்களா? குறைந்தபட்சம் நபி தோழர்களில் யாராவது தங்களை ‘ஸலஃபி’ JAQH, TNTJ, முஜாஹித், அஹ்லஹதீஸ் என அடையாளப்படுத்தி இருக்கிறார்களா? நபி(ஸல்) அவர்கள் சிறப்பித்துக் கூறிய மூன்று தலைமுறைகளில் யாராவது தங்களை ‘ஸலஃபி’ JAQH, TNTJ, முஜாஹித், அஹ்லஹதீஸ் என அழைத்துக் கொண்டதாக ஆதாரம் தர முடியுமா? நிச்சயமாக முடியாது. ஆனால் அவர்கள் அனைவரும் தங்களை முஸ்லிம்கள் என்று சொன்னதற்கு எண்ணற்ற ஆதாரங்களைத் தர முடியும்.
அல்குர்ஆனை புரட்டிப்பார்த்தால் 2:275, 4:22,23 5:95, 8:38 ஆகிய ஐந்து இடங்களில் ‘ஸலஃபி’ என்ற வார்த்தை பயன்படுத்தப்பட்டுள்ளது. இந்த ஐந்து இடங்களிலும் முன்னர், முன்னால், முன்பு போன்ற பொருளிலும், 10:30, 69:24 இரு இடங்களில் செய்தனுப்பிய, முற்படுத்திய என்ற பொருளிலும், 43:56 பின்னால் வருவோருக்குப் பாடமாக அல்லாஹ்வின் கோபத்திற்கு ஆளாகி அழிக்கப்பட்ட முன் சென்றவர்களைக் குறிப்பிடுகிறது. இவை அல்லாமல் 2:170, 5:104, 7:28,70,71 10:78, 11:62, 87,109, 12:40, 14:10, 21:53, 54, 26:74, 76, 31:21, 34:43, 37:17,69, 43:22, 23, 56:48 இத்தனை இறைக் கட்டளைகளிலும் வழிகெட்டு நரகைச் சென்றடையும்-இறைவனது கோபத்திற்கும், சாபத்திற்கும், தண்டனைக்கும் ஆளாகியவர்கள், தங்களின் முன் சென்றவர்களை-முன்னோர்களை, ஸலஃபுகளை பின்பற்றி நரகிற்கிரையான கதையையே கூறுகின்றன. மற்றபடி ஸலஃபுகளைப் பின்பற்றி அல்லாஹ்வின் பொருத்தத்தையும், அதன் மூலம் சுவர்க்கத்தையும் அடைந்ததாக ஒரேயொரு குர்ஆன் வசனத்தையும் பார்க்க முடியவில்லை. ஆதாரபூர்வமான ஒரேயொரு ஹதீஸையும் பார்க்க முடியவில்லை.
“ஸலஃபுஸ்ஸாலிஹீன்” என்ற எண்ணத்தில் கூறுவதாக இருந்தாலும், “உங்களைத் தூய்மையானவர் என நீங்களே தற்புகழ்ச்சி செய்து கொள்ளாதீர்கள்; உங்களில் தக்வா உடையவர் யார் என்பதை (அல்லாஹ்வாகிய) அவனே நன்கறிவான்” என்ற 53:32 இறைக்கட்டளைப்படி பெரும் பாவமாகும்.
ஹனஃபி, ஷாஃபி, மாலிக்கி, ஹன்பலி என்பது போல் ஸலஃபியும் இதர பெயர்களும் மிகமிக சமீப காலத்தில் நடைமுறையில் வந்துள்ளதாகவே அறிய முடிகிறது. எமக்குத் தெரிந்தவரையில் இமாம் இப்னு தைமிய்யா(ரஹ்) அவர்களது காலத்தில் இந்த நான்கு மத்ஹபுகளின் பிடி அதாவது ‘தக்லீது’ மிகமிகக் கடுமையாக இருந்துள்ளதை அறிய முடிகிறது. அன்று தக்லீத் எனும் குருட்டுக் கொள்கையை எதிர்த்தவர்கள் சிறையிலடைக்கப்பட்டுக் கடுமையாகக் கொடுமைப்படுத்தப்பட்டார்கள். சித்திரவதை செய்யப்பட்டார்கள். தக்லீதை விட்டு முஸ்லிம்களை விடுவிப்பது கல்லில் நார் உரிப்பதுபோல் மிகக் கடினமாக இருந்திருக்கிறது. தக்லீதை விட்டு விடுபடாமல் அதில் உறுதியாக இருப்பவர்கள் வேண்டுமானால், கலஃபிகளான பின்னோர்களை தக்லீது செய்வதை விட்டு, முன்னோர்களான ஸலஃபிகளை தக்லீது செய்யட்டும். அது குறைந்த அளவு வழிகேட்டோடு தப்பிக்க வழி வகுக்கும் என்ற கருத்தில் “முகல்லிது யுகல்லிதுஸ்ஸலஃப்” என்று கூறி இருக்கிறார்கள். இது இமாம் இப்னு தைமிய்யா(ரஹ்) அவர்களின் தீர்ப்புகள், சவுதி அரசால் திரட்டப்பட்டு வெளியிடப்பட்டுள்ள “பதவா இப்னு தைமிய்யா” என்ற நூலின் 20-ம் பாகம் 9-ம் பக்கம் 12-ம் வரியில் பதிவாகியுள்ளது.
இதற்குப் பின்னரே ஸலஃபிகள், நாங்கள் ஸலஃபிகள் என்று கூறிக்கொள்ளும் நடைமுறை ஏற்பட்டுள்ளதாக அறிய முடிகிறது. எமது இந்த கருத்து தவறு என்றால், ஸலஃபி என்று அழைத்துக் கொள்வது எப்போது நடைமுறைக்கு வந்தது? என்பதை உரிய ஆதாரங்களுடன் நிரூபித்து, அவர்கள் தங்கள் கருத்தை நிலைநாட்டட்டும். தங்களை முகல்லிதுகள் என்று கூறிக் கொள்ள விரும்புவோர் தங்களை ஸலஃபிகள் என்று கூறிக் கொள்வதில் பொருள் இருக்கலாம். ஆனால் அல்லாஹ் அல்குர்ஆன் 7:3, 33:66,67,68 இறைவாக்குகளில் மறுத்துக் கூறும் தக்லீதை விட்டு விடுபட்டு, யாரையும் தக்லீது செய்யாமல் குர்ஆன், ஹதீஸை படித்து, சிந்தித்து, விளங்கிச் செயல்படுகிறவர்கள் தங்களை ஸலஃபிகள் என்றோ, இதர பெயர்களிலோ பெயரிட்டுக் கொள்வது சரியா? இறைவன் இதை அங்கீகரிப்பானா? ஏற்றுக் கொள்வானா? என்பதை தயவு செய்து முறையாகச் சிந்தித்து விளங்க அன்புடன் வேண்டுகிறோம்.
JAQH, TNTJ, முஜாஹித், அஹ்லஹதீஸ் போன்ற பெயர்களுக்கும் குர்ஆன், ஹதீஸிலிருந்து எந்தவித ஆதாரத்தையும் பார்க்க முடியவில்லை. இப்பெயர்கள் சமீபகால புரோகிதர்களின் கற்பனையில் உதித்த கற்பனைப் பெயர்களே!
42:21-ல் அல்லாஹ் சொல்வதுபோல் அல்லாஹ் விதிக்காததை மார்க்கமாக்க நபி(ஸல்) அவர்களே துணியவில்லை. 49:16-ல் அல்லாஹ் கடிந்து கூறுவதுபோல் அல்லாஹ்வுக்கு மார்க்கத்தைக் கற்றுக் கொடுக்க முற்படவும் இல்லை. மூஸா(அலை) பிர்அவ்னிடம் “இது பற்றிய அறிவு என்னுடைய இறைவனின் புத்தகத்தில் இருக்கிறது. என் இறைவன் தவறுவதுமில்லை; மறப்பதுமில்லை” (20:52) என்று கூறியதுபோல், அந்த நயவஞ்சகர்களின் முடிவை அல்லாஹ்விடம் விட்டுவிட்டு, அவர்களையும் இவ்வுலகில் முஸ்லிமாக ஏற்று, ஒரே உம்மத்-உம்மத்தன் வாஹிதா (23:52) என்ற அல்லாஹ்வின் கட்டளைக்கு அடிபணிந்தார்கள்.
முனாஃபிக்கள் பேசினால் பொய் பேசுவார்கள், வாக்களித்தால் மாறு செய்வார்கள், நம்பினால் மோசடி செய்வார்கள்” என்ற ஹதீஸை காட்டி இப்படிப்பட்ட குணமுடையவர்களே முனாஃபிக்குகள். அவர்கள் முஷ்ரிக்குகள் அல்ல; காஃபிர்கள் அல்ல; அதனால்தான் நபி(ஸல்) அவர்கள் அந்த நயவஞ்சகர்களை முஸ்லிம்களாக ஏற்றுக் கொண்டார்கள்; ஆனால் இன்றைய தர்கா, தரீக்கா, மத்ஹபு வழிபாட்டினர் ஷிர்க் செய்பவர்கள்; அவர்களை முஸ்லிம்களாக ஏற்க முடியாது. அவர்கள் பின்னால் தொழ முடியாது என JAQH, TNTJ வகையறாக்கள் வாதிட்டு வருகின்றனர். இது அவர்களின் அறியாமை வாதமாகும். அந்த மூன்று குணங்களையும் மேலதிகமாகக் கொண்டிருந்தார்கள் என்பதை, நயவஞ்சகர்கள் பற்றி குர்ஆன் வசனங்கள் அனைத்தையும் நடுநிலையோடு படித்து விளங்குகிறவர்கள் அறிந்து கொள்ள முடியும். இன்று கூட ஹிந்து தாய், தகப்பனுக்குப்பிறந்த காரணத்தால், ஹிந்துவாக இணைவைக்கும் முஷ்ரிக்காக இருக்கும் சிலரிடம், பொய் பேசாத நிலையையும், வாக்கு மாறாத நிலையையும், அமானிதத்தைப் பாதுகாத்துக் கொடுக்கும் உயர் குணத்தையும் பார்க்க முடியும். எனவே நபி காலத்து முனாஃபிக்குகள் முஷ்ரிக்களாக காஃபிர்களாக இருந்ததோடு, மேலே கூறிய மூன்று துர்குணங்களை மேலதிகமாகக் கொண்டிருந்தார்கள் என்பதே உண்மையாகும்.
நபி(ஸல்) காலத்து முனாஃபிக்குகள் ஈமான் கொள்ளவில்லை என்று அல்லாஹ் 2:8ல் கூறுகிறான். 2:19-ல் அந்த முனாஃபிக்கான காஃபிர்களை அல்லாஹ் சூழ்ந்து கொண்டு இருப்பதாகக் கூறுகிறான். 2:14-ல் அந்த முனாஃபிக்குகள் ஷைத்தான்களுடன் தனித்து இருக்கும்போது நிச்சயமாக நாங்கள் உங்களுடன்தான் இருக்கிறோம் என்று சொல்வதாக அல்லாஹ் கூறுகிறான்; ஷைத்தான்களுடன் இருப்பவர்கள் காஃபிராகவும் முஷ்ரிக்காகவும் இருப்பார்கள் என்பதில் ஐயம் இருக்க முடியுமா?
முனாஃபிக்குகள், காஃபிராகவும், முஷ்ரிக்காகவும் இருக்கிறார்கள் என்று அல்லாஹ்வும் கூறுகிறான். நபி(ஸல்) அவர்களும், நபிதோழர்களும் அந்த முனாஃபிக்குகளது குஃப்ரான, ஷிர்க்கான செயல்களைத் தங்கள் கண்களால் கண்டனர். அப்படிக் கண்டதால்தான் மற்றவர்கள் நம்பிக்கைக் கொண்டது போல் நீங்களும் நம்பிக்கை கொள்ளுங்கள் என்று முனாஃபிக்குகளைப் பார்த்து கூறி இருக்கிறார்கள். அதற்கு, “அறிவீனர்கள் நம்பிக்கை கொண்டதுபோல் நாங்களும் நம்பிக்கை கொள்வதா? என்று கேட்டு உண்மை முஸ்லிம்களை-நபிதோழர்களை அறிவிலிகள் என்று கூறியுள்ளனர் அந்த முனாஃபிக்கள் (பார்க்க 2:13)
முனாஃபிக்கள் பற்றிய குர்ஆன் வசனங்களை குறிப்பாக 4:88,138,139,145, 9:68,73, 33:1,48,73, 48:6, 63:3,6, 66:9 வசனங்களை நடுநிலையோடு முறையாகப் படித்து விளங்குகிறவர்கள், அவர்கள் முனாஃபிக்குகள்தான், காஃபிர்கள்தான், முஷ்ரிக்குகள்தான் என்பதைத் தெளிவாக விளங்கமுடியும். நபி காலத்து முனாஃபிக்கள், முனாஃபிக்குகள் மட்டுமே! அவர்கள் காஃபிர்களுமல்ல; முஷ்ரிக்குகளுமல்ல. ஆனால் இன்றைய தர்கா, தரீக்கா, மத்ஹபு முஸ்லிம்கள் காஃபிர்கள், முஷ்ரிக்குகள் என்று கூறும் JAQH, TNTJ மவ்லவிகள் மற்றும் அவர்களின் ஆதாரவாளர்கள் அல்குர்ஆனை முறையாக விளங்க முடியாத அறிவிலிகளாக இருக்க வேண்டும்; அல்லது தங்களின் JAQH, TNTJ பிரிவுப் பெயர்களை நியாயப்படுத்த அறிந்து கொண்டே மனட்சாட்சிக்கு முரணாகப் பொய்யுரைப்பவர்களாக இருக்க வேண்டும்; மூன்றாவது ஒரு நிலை இருக்க முடியாது. அவர்களின் உண்மை நிலையை அவர்கள்தான் விளக்க வேண்டும்.
அல்குர்ஆன் 4:116 வசனம் இணைவைப்பவர்கள் நிரந்தரமாக நரகில் இருப்பார்கள், விடுதலையே இல்லை என்று கூறுகிறது. முனாஃபிக்குகளுக்கும் நிரந்தர நரகம் என்றே குர்ஆன் கூறுகிறது. இதிலிருந்தே அவர்களும் இணைவைப்பவர்களே என்பது உறுதியாகிறதே. இதற்கும் இயக்கவாதிகளின் விளக்கம் தேவை.
இந்த நிலையில் அல்லாஹ்வையும், அவனது இறுதி வழிகாட்டல் நூல் அல்குர்ஆனையும், அவனது இறுதித் தூதரையும் மனப்பூர்வமாக – உளப்பூர்வமாக ஏற்று தங்களை முஸ்லிம்கள் என்று சொல்லிக்கொண்டு, அவர்கள் நம்பிக்கை வைத்துள்ள அவர்களை வழிகெடுத்து ஆதாயம் அடையும் கெட்ட ஆலிம்களான புரோகிதர்களின் வழிகேட்டு போதனைகளை நற்போதனைகளாக நம்பிச் செயல்பட்டு வழிகேட்டில் சென்று கொண்டிருக்கும் முஸ்லிம்களின் இறுதி முடிவை, அவர்களைப் படைத்த அல்லாஹ்விடமே விட்டுவிட்டு, இவ்வுலகில், நபி(ஸல்) அவர்கள் முஷ்ரிக்கான, காஃபிரான முனாஃபிக்குகளை முஸ்லிம்களாக ஏற்றிருந்ததுபோல், இந்த வழிகேட்டு முஸ்லிம்களை முஸ்லிம்களாக ஏற்று, அவர்களையும் அரவணைத்துச் செல்வதால், நபி(ஸல்) நிலைநாட்டிய உம்மத்தன் வாஹிதாவை-ஒரே சமுதாயத்தை நாமும் நிலை நாட்டுவதால், நமக்கு என்ன நட்டம் இவ்வுலகிலோ, மறு உலகிலோ ஏற்பட்டு விடப்போகிறது? என்பதை சிந்தித்து விளங்க அன்புடன் வேண்டுகிறோம்.
நபி(ஸல்) காலத்து முனாஃபிக்குகளான, முஷ்ரிக்குகளான, காஃபிர்களான அந்த நயவஞ்சகர்களின் இறுதி முடிவு நரகம்தான், மீட்சியே இல்லை என்று அல்லாஹ் அல்குர்ஆனில் திட்டமாக அறிவித்த நிலையிலும், அவர்கள் போலியாக, வஞ்சகமாக நாவினால் மட்டும் தங்களை முஸ்லிம்கள் என்று சொன்ன ஒரே காரணத்தால், இன்றைய முஸ்லிம்களைவிட மிகமிக கேடுகெட்டவர்களையே நபி(ஸல்) அவர்கள் இவ்வுலகில் முஸ்லிமாக ஏற்று தமது உம்மத்தில் அரவணைத்து “உம்மத்தான் வாஹிதாவை” நிலைநாட்டி இருக்க, இன்று அல்லாஹ்வையும், அவன் இறக்கியருளிய அல்குர்ஆனையும், தூதரையும் மனப்பூர்வமாக-உளப்பூர்வமாக ஒப்புக்கொண்டு தங்களை முஸ்லிம்கள் என்று சொல்லிக் கொண்டு வழிகேட்டுப் புரோகிதர்களின் துர்போதனை காரணமாக வழிகேட்டிலிருப்பவர்களை, அதுவும் அவர்களின் இறுதி முடிவைப் பற்றி அல்லாஹ் அறிவிக்காத நிலையில், அவர்கள் முஸ்லிம்கள் இல்லை என்று தீர்ப்பளிப்பதோ அல்லது அவர்களிலிருந்து வேறுபடுத்திக் காட்டும் எண்ணத்தில் அல்லாஹ் சூட்டியுள்ள முஸ்லிம் அல்லாத ஸலஃபி, JAQH, TNTJ, முஜாஹித், அஹ்ல ஹதீஸ் போன்ற பெயர்களைத் தங்களுக்குத் தாங்களே சூட்டிக்கொள்வதை அல்லாஹ் ஏற்றுக்கொள்வானா? என்பதை ஆத்திரமோ, அனுதாபமோ இல்லாமல் நடுநிலையோடு சிந்தித்து உணர வேண்டுகிறோம்.
வழிகெட்ட முஸ்லிம்களை தங்களிலிருந்து வேறுபடுத்திக் காட்ட வேண்டும் என்ற அடிப்படையில்தானே தங்களை “ஸலஃபி’ JAQH, TNTJ, முஜாஹித், அஹ்லஹதீஸ் என்று அழைத்துக்கொள்ள விரும்புகிறார்கள். அப்படி வேறுபடுத்திக் காட்ட வேண்டும் என்று அல்லாஹ்வோ, அவனது தூதரோ கூறி இருக்கிறார்களா? அப்படி ஒரு குர்ஆன் ஆயத்தையோ, ஹதீஸையோ அவர்களால் காட்ட முடியுமா? குர்ஆன், ஹதீஸ் ஆதாரமில்லாத ஒரு செயலை – அதுவும் ஒரே சமுதாயம் என்று அல்லாஹ் வலியுறுத்திக் கூறும் முஸ்லிம் சமுதாயத்தைப் பிரித்து, பிளவுபடுத்தி, கூறுபோடுவதை, நம்மைப் படைத்த அல்லாஹ் ஏற்றுக் கொள்வானா? என்பதை ஆத்திரமோ, அனுதாபமோ இல்லாமல் நடுநிலையோடு சிந்தித்து ஒரு முடிவுக்கு வர அன்புடன் வேண்டுகிறோம்.