புலவர் செ. ஜஃபர் அலீ, பி.லிட்.,
அல் – அமீன் மெட்ரிகுலேஷன் பள்ளி, கும்பகோணம்.
மனிதர்களுள் நன்மையை ஏவும் ஒரு குழு இருப்பதைப் போல், நன்மைகளைத் தடுத்து, தீமைகளை நன்மைகளைப்போல் உருவகப்படுத்தி மக்கள் சமுதாயத்தைப் படுகுழியில் வீழ்ச்சியுறச் செய்வதில் ஒரு குழு செயல்பட்டுக் கொண்டே உள்ளது. அதுதான் “சுயநலக் கும்பல்”! எங்கே தங்கள் வயிற்றுப் பிழைப்புக்கு ஆபத்து வந்து விடுமோ என்றெண்ணி, உண்மைகளை மறைத்து, பொய்களை இட்டுக்கட்டி – சடங்குகளிலும் சம்பிரதாயங்களிலும் குளிர்காய்ந்து, தங்களின் வளமான வாழ்வைத் தக்கவைத்துக் கொள்ள என்னென்ன செய்யவேண்டுமோ, அத்தனையும் செய்து, அல்குர்ஆன் வசனங்களுக்கும், நபிமொழிகளுக்கும் புது விளக்கங்களையும் புகுத்தி வருகின்றனர்.
இத்தகைய கெடுமதியாளர்களை நோக்கித்தான் வல்ல இறைவனான அல்லாஹ்(ஜல்) வினவுகிறான், “நீங்கள் இரு வகுப்பாரும் (மனு,ஜின் கூட்டத்தார்) உங்கள் இறைவனுடைய அருட்கொடைகளில் எதனைப் பொய்யாக்குவீர்கள்?” அல்குர்ஆன் “அர்ரஹ்மான்” அத்தியாயத்தில் முப்பத்தோரு இடங்களிலே இவ்வாறு திரும்பத் திரும்ப வினவுகிறான்.
மனிதனைப் படைத்து, அவனுக்குப் பேசக் கற்பித்து, கதிரவனையும், நிலவையும் இயங்கச் செய்து, செடிகள் கொடிகள் மரங்கள் முதலிய யாவும் அல்லாஹ்வுக்கு வழிப்பட்டு சிரம் பணியச்செய்து, வானை உயர்த்தி, துலாக்கோலை நிலைநாட்டி, வசிக்கத் தக்க இடமாக பூமியை அமைத்து, பலவகைக் கனிகளை உற்பத்தியாக்கி, தானியம், புற்பூண்டுகளை முளைக்கச் செய்து தன் வல்ல ஆற்றலை மக்கள் முன் காண்பித்தான். “ஆகவே, (மனு,ஜின்களாகிய) நீங்கள் இரு வகுப்பாரும் உங்கள் இறைவனுடைய அருட்கொடைகளில் எதனைப் பொய்யாக்குவீர்கள்?” (அல்குர்ஆன் 55:13)
“மனிதனின் மூலம், களிமண்”
“‘ஜின்’னின் மூலம் நெருப்பு”
என்பதையும் அடுத்தடுத்த வசனங்களிலே இறைவன் சுட்டிக் காட்டி, “ஆகவே நீங்கள் இரு வகுப்பாரும் இறைவனுடைய அருட்கொடைகளில் எதனைப் பொய்யாக்குவீர்கள்?” என வினவுகிறான். (அல்குர்ஆன் 55:14,15,16)
இவ்வாறு அந்த அத்தியாயம் முழுவதும் தன் மாபெரும் அருட்கொடைகளைத் தெளிவாக உரைத்து, கேள்விமேல் கேள்விக்கணைகளைத் தொடுத்துக் கொண்டே இருக்கின்றான்.
இறை நம்பிக்கையும் இறையச்சமும் உடைய சான்றோர்களே வல்ல அல்லாஹ்வின் மாபெரும் ஆற்றல் – கருணையினாலேயே இவ்வுலகம் இயக்கம் பெறுகின்றது என்பதைக் கண் கூடாகக் கண்ட பின்பும் இறைவனுக்கு இணை வைக்க எவராவது எண்ணுவாரா? அப்படி கண்மூடித்தனமாக, இறையடியார்களை, இறைவனுக்கு ஒப்பாக உயர்த்தும் செயலைப் புரிபவர் எப்படிப்பட்டவர் என்பதையும் நாம் உணர வேண்டும். வல்ல அல்லாஹ்வின் மாபெரும் அருட்கொடைகளைப் பொய்யாக்கிய மாபெரும் குற்றத்துக்கு இவர் ஆளாவார் என்பதில் ஐயமில்லை.
இன்றைக்கு அடிப்படை இஸ்லாமியக் கோட்பாடுகளை மறந்து மறுத்து – தன்மனம் போன செயல்களுக்கெல்லாம் புதுவடிவம் கொடுத்து – முஸ்லீம் பெயர் தாங்கிகளாகப் பவனிவருபவர்களின் மனம் திருந்துமா?
“இஸ்லாம் எளிமையானது; பின்பற்றத் தகுதி வாய்ந்தது” – இத்தகைய எளிய இஸ்லாத்தை, கர்ண கடூரமாக்கி, பாமரர்களின் மூளைகளைச் சலவை செய்து தங்களின் போதனைகளின் மூலம் புதுப்புது விளக்கங்கள் கொடுத்து மக்களைக் குழப்பும் மகான்கள் என்று திருந்துவர்.
இவர்களெல்லாம் இறைவனுடைய அருட்கொடைகளை மட்டுமா பொய்யாக்குகின்றார்கள்? இறைவனையே மறுக்கும் நாத்திகர்கள் அல்லவா? தெளிவான எண்ணங்களின் சரியான வெளிப்பாடுகள் இவர்களின் உள்ளங்களிலிருந்து புறப்பட வல்ல நாயன் அருள்புரிவானாக!
**************************************
வேண்டாம் துறவறம்
துறவறம் பூண, உஸ்மான் இப்னு மழ்வூன்(ரழி) அவர்கள் நபி(ஸல்) அவர்களிடம் அனுமதி கேட்டபோது, நபி(ஸல்) அவர்கள் மறுத்துவிட்டனர். அவருக்கு நபி(ஸல்) அவர்கள் அனுமதித்திருந்தால் நாங்களும் ஆண்மை நீக்கம் செய்திருப்போம்.
அறிவிப்பவர்: ஸஃது(ரழி), நூல்: இப்னுமாஜா
அந்நஜாத்: ஆகஸ்ட், 1986