நாத்திகர்களுக்கு ஒரு நீண்ட பகிரங்கக் கடிதம்!

in 2010 ஜுன்,பகுத்தறிவாளர்களே!

நாத்திகர்களுக்கு ஒரு நீண்ட பகிரங்கக் கடிதம்!

 ஏப்ரல் தொடர் : 11

உண்மை இதழ் ஆசிரியர் திரு. கி.வீரமணி அவர்களே! அந்நஜாத்திற்குப் பதிலடி என மூட நம்பிக்கைகளைப் பகுத்தறிவு எனக் கிறுக்கியுள்ள திரு. ந.வெற்றியழகன் அவர்களே, உண்மையை-சத்தியத்தைநேர்வழியை உள்ளது உள்ளபடி மிகமிகச் சரியாக அறிந்து அதன்படி நடப்பதோடு அதையே மக்களுக்குப் போதிப்பவர்களுக்கே இறுதி வெற்றி கிடைக்கும் என நான் உறுதியாக நல்வாழ்த்துக் கூறி ஆரம்பிக்கிறேன்.

“உண்மை” மார்ச் 16-31, 2008 பக்கம் 26: குழப்பத்தின் கூடாரம் “”ஐம்புலன்கள் கொண்டு கிடைக்கும் தகவல்களைக் கொண்டு மட்டுமே, பகுத்தறிவு செயல்பட முடியும். இந்த ஐம்புலன்களுக்குள் அடைபடாத ஒன்றை இந்தப் பகுத்தறிவால் விளங்க முடியாது; ஏற்க முடியாது. அதனால்தான், கோவூர் போன்றவர்கள், கடவுளைக் காட்டுங்கள்! கண்ணால் பார்த்து ஏற்றுக் கொள்கிறோம் என்ற அறிவற்ற வாதத்தை வைத்தனர். இது கட்டுரையாளர் எடுத்து வைக்கும் வாதங்களின் ஒரு பகுதி. குழப்பத்தின் கூடாரமாக இவர் மாறி தானும் குழம்பி, பிறரையும் குழப்புகிறார். “”ஐம்புலன்களுக்கும் அடைபடாத ஒன்று” என்று இவர் எதைக் கருதுகிறார்? “ஐம்புலன்களுக்கும் அடைபடாத ஒன்று என்று சொன்னால் அது உள்பொருள் அல்ல; இல்பொருள்! அப்படி புலன்களுக்கு எட்டாத ஒன்றைப் பகுத்தறிவால் விளக்க முடியாதுதான்; ஏற்க முடியாதுதான்.

இது உண்மைதானே! புலன்களுக்கு எட்டாத அந்தப் பொருள் அது சரி, இவர் ஐம்புலன்களுக்கும் அடைபடாத ஒன்று என்று எதனைக் கூறுகிறார்? வெளிப்படையாக இப்போது சொல்லி விடுகிறார் இவ்வாறு; “அதனால் தான் கடவுளைக் காட்டுங்கள்! கண்ணால் பார்த்து ஏற்றுக் கொள்கிறோம்” என்ற அறிவற்ற வாதத்தை வைத்தனர் கோவூர்  போன்றவர்கள் என்கிறார் கட்டுரையாளர். இது திரிபு வாதமல்லவா? தகிடுதத்தம் அல்லவா? பித்தலாட்டம் அல்லவா? ஐம்புலன்களுக்கும் அகப்படாதது பொய்: பகுத்தறிவு பகலவன் தந்தை பெரியார், பகுத்தறிவாளர் டாக்டர் கோவூர், சார்லஸ் பிராட்லா, இங்கர்சால் முதலான உலகின் தலை சிறந்த பகுத்தறிவாளர் பெருமக்கள் எல்லாம் கடவுளைக் கண்ணால் மட்டும் பார்க்கும்படியாகவா கேட்டனர்? வாதிட்டனர்? கண், காது, செவி, (வாய்க்கு மாறாக செவி என்று தவறாக எழுதியுள்ளது உண்மை இதழ்) மூக்கு, மெய் ஆகிய ஐம்பொறிகளுள் ஒன்றினாலேயோ மெய்ப்பித்துக் காட்டுங்கள் என்றல்லவா வலிவான பகுத்தறிவு வாதங்களை எடுத்து வைத்தனர்?

“பஞ்சேந்திரிய(ஐம்பொறி)களுக்குத் தட்டுப்படாத வி­யம், பொருள், நடப்பு எது வானாலும் அது பொய்! இதுதான் பகுத்தறிவுவாதிகளின் கொள்கை” (9.2.70 விடுதலை) என்றல்லவா தந்தை பெரியார் கூறினார். (உண்மை: மார்ச் 16-31,2008 பக்கம் 26)

நமது விளக்கம்: “காட்டுங்கள் ஏற்றுக் கொள்கிறோம்” என்பது தான் நாத்திகர்களின் அறை கூவல்; ஒரு சமயம் ஒரு தொண்டன் பெரியாரிடம், “”ஐயா! கடவுள் இல்லை என்று மறுத்து வருகிறோம். திடீரென்று கடவுள் தோன்றி நமக்கு காட்சி தந்து விட்டால் என்ன செய்வது என்று கேட்டதாகவும், அதற்குப் பெரியார் “”உடனே கடவுளை ஏற்று விட்டுப் போகி றோம்” என்று சொன்னதாகவும் நாத்திகர்களே கூறி வருகிறார்கள்.

சமீபத்தில் கூட நாத்திக வழியினருக்கும் (மத்ஹபு) ததஜ மத்ஹபினருக்கும் இடையில் நடந்த விவாதத்தில் நாத்திகர்கள் கடவுளைக் காட்டுங்கள்; கடவுளின் கன பரிமாணங்களைச் சொல்லுங்கள் கடவுளை ஏற்றுக் கொள்கிறோம் என்று பலமுறை கூறியதை விவாத குறுந்தகட்டைப் போட்டுக் கேட்பவர்கள் அறிய முடியும். மேலும் எமது 2008 ஜனவரி இதழ் பக்கம் 16ல் என்ன கூறி இருக்கிறோம்? ஐம்புலன்கள் கொண்டு கிடைக்கும் தகவல்களைக் கொண்டு மட்டுமே பகுத்தறிவு செயல் பட முடியும். இந்த ஐம்புலன்களுக்குள் அடைபடாத ஒன்றை இந்தப் பகுத்தறிவால் விளங்க முடியாது. ஏற்க முடியாது. அதனால்தான் கோவூர் போன்றவர்கள் கடவுளைக் காட்டுங்கள்; கண்ணால் பார்த்து ஏற்றுக் கொள்கிறோம் என்ற அறிவற்ற வாதத்தை வைத்தனர் என்றல்லவா எழுதியுள்ளோம்.
எமது இந்த எழுத்துக்கள், ஐம்புலன்களையும் குறிக்கிறதா? அல்லது கண்ணால் பாப்பதை மட்டும் குறிக்கிறதா? இப்போது சொல்லுங்கள்; திரிபு வாதம் யாருடையது? தகிடுதத்தம் யாருடையது? பித்தலாட்டம் யாருடையது? உண்மை இதழுடையதா? அந்நஜாத் இதழுடையதா?

 ஐம்புலன்களைக் கொண்டு மட்டும் அடைவது முழுமையான பகுத்தறிவல்ல; ஐம்புலன்களை மட்டும் கொண்டு அறிவது ஐயறிவு; அதாவது மிருக அறிவு என்பதை நாத்திகர்களே உறுதிப்படுத்தியுள்ளனர். எப்படி என்று பாருங்கள்! எமது ஜனவரி 2008 கட்டுரையில் ஒரு பொருளை கண்ணால் பார்ப்பதற்கு சில விதி முறைகள் உண்டு. அப்பொருளுக்கு கன பரிமாணமுடைய ஒரு தோற்றம் இருக்க வேண்டும்; அப்பொருளில் வெளிச்சம் பட வேண்டும்; அந்தப் பொருளுக்கும் பார்க்கும் மனிதனுக்கும் இடையில் மறைக்கும் திரை இருக்கக் கூடாது; இந்த நிபந்தனைகள் நிறைவேறினால்தான் அப்பொருளைப் பார்க்க முடியும். இப்படிப்பட்ட நிபந்தனைகளுக்குக் கட்டுப்பட்ட நிலையில் நாம் பார்க்கும் ஒன்று நமது அறிவை மயங்கச் செய்தாலும் அது கடவுள் சக்தியாக ஒருபோதும் இருக்க முடியாது என்று நாம் தெளிவுபடுத்தி இருந்தோம். அதாவது கண்பார்வைக்குக் கட்டுப்பட்ட ஒன்று ஒருபோதும் கடவுளாக இருக்க முடியாது என்பதை உரிய ஆதாரங்களுடன் விளக்கி இருப்பதால் அதை மறுக்க முடியாமல்தான் கண்ணில் மட்டுமா காட்டச் சொல்கிறோம். ஐம்புலன்களில் சிலதாலோ அல்லது முழுவதாலோ மெய்ப்பித்துக் காட்டுங்கள் என்று பகுத்தறிவு வாதம் செய்கிறார்களாம். பாவம் போலி பகுத்தறிவாளர்கள்! மிருகங்களுக்குரிய ஐயறிவை பகுத்தறிவு என பகல் கனவு காண்கிறார்கள். அவர்களுக்குக் கொடுக்கப்பட்டுள்ள ஐம்புலன்களின் அதாவது கண், காது, வாய், மூக்கு, மெய் ஆகிய புலன்களின் தகுதி, ஆற்றல் இவற்றை அறியாமல் இருக்கிறார்கள் நாத்திகர்கள்.

நாத்திகர்கள் பகுத்தறிவு என்று கூறுவது பகுத்தறிவல்ல; ஐயறிவு-மிருகங்களுக்குரிய அறிவு என்பதைத் தக்க ஆதாரங்களுடன் அறியத் தருகிறோம். பெரியார் பக்தியால் புத்தி முட்டிப் போய் அதாவது புத்தி பேதலித்துத் தடுமாறாமல் நடுநிலையோடு சிந்தித்துச் சீர்தூக்கிப் பார்ப்பார்களா? ஓர் ஐயறிவு மிருகமான ஆட்டை எடுத்துக் கொள்ளுங்கள். தூரத்தில் அந்த ஆடு நின்று கொண்டிருக்கிறது. அது விரும்பிச் சாப்பிடும் தழை ஒன்று கீழே கிடக்கிறது. அந்த ஆட்டைப் பார்த்து ஓ ஆடே இங்கே வா; நீ விரும்பிச் சாப்பிடும் தழை இங்கே இருக்கிறது என்று கூவி அழைத்தால் அந்த ஆடு வருமா? ஒருபோதும் வராது; மாறாக மனிதன் போடும் கூப்பாட்டினால் விரண்டு ஓடலாம். அதற்கு மாறாக கீழே கிடக்கும் அந்தத் தழையை கையில் எடுத்து அந்த ஆடு பார்க்க அதை ஆட்டினால் அது ஓடோடி வரும். இப்போது சொல்லுங்கள் கண்ணால் பார்த்து ஏற்பது பகுத்தறிவா? மிருக அறிவா?

அடுத்து அந்த ஆடு ஒரு கற்பாறைக்குப் பக்கம் நிற்கிறது. அப்பாறையை வெடி வைத்துத் தகர்க்கப் போகிறார்கள். ஓ ஆடே! நாங்கள் இப்பாறையை வெடிவைத்து தகர்க்கப் போகிறோம்; இங்கிருந்து போய்விடு என்று அன்பாகச் சொன்னால் அது போகுமா? ஒரு போதும் போகாது. விரட்டும் நோக்கில் கடுமையாகச் சப்தமிட்டாலோ, அல்லது அந்த வெடியின் சத்தத்தைக் கேட்டோதான் அது விரண்டோடும். இது பகுத்தறிவைச் சேர்ந்ததா? அல்லது மிருக அறிவைச் சார்ந்ததா? அதுபோல் அந்த ஆடு முகர்ந்து பார்த்து மட்டுமே தான் சாப்பிடும் நல்ல உணவா? அல்லது விஷச் செடியா என அறிந்து கொள்ள முடியும். வாய் வைத்துப் பார்த்தே தான் குடிக்கும் நல்ல நீரா, அல்லது குடிக்கத் தகுதியற்ற நீரா என அறிந்து கொள்ளும். அந்த ஆட்டிடம் பழுக்கக் காய்ச்சிய கம்பியைக் காட்டி அது உன் உடம்பில் பட்டால் பொத்துவிடும் என்றால் அது ஏற்குமா? ஒருபோதும் ஏற்காது. அக்கம்பி அந்த ஆட்டின் உடம்பில் பட்டால் மாத்திரமே அந்தச் சூட்டின் வேதனையை அது உணரும். ஆக ஐம்புலன்களுக்கு எட்டும் அறிவு இவை தான். அது தான் மிருக அறிவு.

மற்றபடி அந்த ஆட்டிற்குத் தனது தாய், பிள்ளை, அப்பன் போன்ற வேறுபாடு தெரியுமா? இது ஆகும், இது ஆகாது என்ற ஒழுக்க மாண்புகள் அதற்குத் தெரியுமா? ஒருபோதும் தெரியாது. ஆக ஐம்புலன்களால் அறியும் அறிவு பகுத்தறிவு அல்ல; அது மிருகங்களுக்கும் இருக்கும் ஐயறிவு என்பது புரிகிறதா? இல்லையா? அது மட்டுமா? சில பிராணிகளுக்கு மனிதனுக்கு இருக்கும் ஐம்புலன்களைவிட ஆற்றல் மிக்க புலன்கள் இருப்பதையும் அறிகிறோம். நாய்க்கிருக்கும் மோப்ப சக்தி மனிதனுக்கு இருக்கிறதா? தேனீக்கு இருக்கும் சென்று திரும்பும் பாதையை அறியும் சக்தி மனிதனுக்கு இருக்கிறதா? இப்படிப் பல பிராணிகளுக்கு இருக்கும் ஐம்புலன்களின் சக்தி மனிதனுக்கு இல்லை. அப்படியானால் அவற்றைப் பகுத்தறிவுப் பிராணிகள் என்ற சொல்ல முடியுமா? ஒரு போதும் முடியாது.

ஆம்! நாத்திகர்களே நீங்கள் கூறும் பகுத்தறிவு பகுத்தறிவே அல்ல; ஐயறிவு மிருகங்களுக்குரிய அறிவு. ஐயறிவு மிருகங்களைப் போல் நானும் ஒரு மிருகமாக வாழ்ந்து விட்டுப் போகிறேன் என்று கூறுகிறவன் இந்த ஐம்புலன்களைக் கொண்டு திருப்தி அடையலாம். மேலும் இவ்வுலக வாழ்க்கைக்கு ஆறாம் அறிவான பகுத்தறிவு கிஞ்சின்றும் தேவையே இல்லை. பகுத்தறிவு இல்லாமல் நிச்சயமாக மனிதன் மிருகங்களைப் போல் மிக மகிழ்ச்சியாக வாழ்ந்து மடிய முடியும். ஐம்புலன் கடந்த மெய்யியல் (Metaphyhics) ஆறாவது அறிவை உடையவனே பகுத்தறிவாளன். இணை துணை இல்லாத தன்னந்தனியனான, எவ்வித தேவையுமற்ற ஏகன் இறைவனையும், மறுமையையும் மறுக்கும் நாத்திகர்கள், இவ்வுலகமே சதம் என்ற உறுதியுடன் செயல்படும் நாத்திகர்கள், இறைவனையும், மறுமையையும் பகுத்தறியும் ஆற்றல் அற்றவர்களாக இருந்து கொண்டு தங்களை பகுத்தறிவாளர்கள் என கூறிக் கொள்ளத் தகுதியற்றவர்கள்.

“”பஞ்சேந்திரியங்(ஐம்பொறி)களுக்குத் தட்டுப்படாத விஷயம், பொருள், நடப்பு எதுவானாலும் அது பொய்!  இதுதான் பகுத்தறிவு வாதிகளின் கொள்கை” என்பது உண்மையில் பகுத்தறிவாளர்களின் கொள்கையாக இருக்க முடியாது. ஐம்புலன்களுக்குக் கட்டுப்படுவது ஐயறிவு மட்டும்தானே. அங்கு எங்கே ஆறாம் அறிவான பகுத்தறிவு இருக்கிறது? மிருகங்களுக்கும் இருக்கும் ஐயறிவை பகுத்தறிவு எனக் கூறுவது பேதமையல்லவா? உண்மையில் ஐயறிவுக்கும் அப்பால் இருக்கும் உண்மைகளைக் கண்டறிந்து செயல்படுவதுதான் பகுத்தறிவு. உதாரணமாக நம்பிக்கை யான ஒரு மனிதர் அடுத்த ஜுலை மாதம் 25ம் தேதி தனது வீட்டில் ஒரு விருந்துக்கு ஏற்பாடு செய்ய இருப்பதாகவும் அதில் அவசியம் கலந்து கொள்ளுமாறு அழைப்பு விடுக்கிறார். இந்த அழைப்பை அவர்மீதுள்ள  நம்பிக்கையால் ஏற்க முடியுமே அல்லாமல் இப்போதே அதாவது ஒரு மாதத்திற்கு முன்னரே விருந்தின் உண்மை நிலையை தனது ஐம்புலன்களைக் கொண்டு அறிந்து கொள்ள முடியுமா? ஒருபோதும் முடியாது. அதனால் விருந்து சொன்ன மனிதர் பொய்யர் என நாத்திகர்கள் சொன்னால் உண்மையில் பொய்யர் யார்? நாத்திகரா? விருந்து சொன்னவரா? சொல்லுங்கள். நாத்திகர்தானே!

ஆம்! வரும் ஜுலை மாதம் 25ம் தேதி அன்றே தனது ஐம்புலன்களைக் கொண்டு, அதாவது கண்ணால் கண்டு, காதால் கேட்டு, மூக்கால் நுகர்ந்து, வாயால் ருசித்து, கையால் தொட்டு தெரிய வேண்டிய அந்த உண்மை நிகழ்வை அந்தக் குறிப்பிட்ட நாளுக்கு முன் னால், காட்டுங்கள்; ஐம்புலன்களைக் கொண்டு அறிந்த பின்னரே விருந்தை ஏற்பேன் என்று கூறும் ஒருவன் பகுத்தறிவுவாதியா? மிருகத்திற்குரிய ஐயறிவுவாதியா? சொல்லுங்கள். ஐம்புலன்களுக்குள் அடைபடாத ஒன்று என்று சொன்னால் அது உள்பொருள் அல்ல; இல்பொருள்” என்ற பெரியாரின் பகுத்தறிவுக்கு ஒவ்வாத கருத்தைக் கண்மூடி ஏற்பவர்கள் பகுத்தறிவாளர்களா? சொல்லுங்கள். பெரியார் பக்தர்களின் பெரியாரிய பக்தி! பக்தி என்றால் புத்தி முட்டிப்போகும்; புத்தி பேதலித்து விடும் என்று பெரியார் கூறிய மணி வாசகம் பெரியார் பக்தர்களுக்கும் 100% பொருந்திப் போவதைப் பாருங்கள்.

1.ஐய்யறிவுக்குள் அடைபடுவதை மட்டுமே உள்பொருளாக ஏற்கவேண்டும் என்று பெரியார் கூறியதை அப்படியே கண்மூடி ஏற்பவர்கள் நாத்திகர்கள். அதாவது மிருகங்களுக்குரிய ஐயறிவை பகுத்தறிவு என பெரியார் சொன்னதை கண்மூடி ஏற்பவர்கள் பெரியார் பக்தர்கள் -நாத்திகர்கள்.

2.திருமணத்தால்தான் பெண் அடிமையாக்கப்படுகிறாள். எனவே திருமணத்தை கிரிமினல் குற்றமாக அரசு சட்டம் இயற்ற வேண்டும் என்று ஐயறிவு மிருகங்களுக்குரிய சட்டத்தை ஆறறிவு மனிதனுக்குரிய சட்டமாகச் சொன்ன பெரியாரின் ஐயறிவு சட்டத்தை ஆறறிவு சட்டமாக ஏற்பவர்கள் பெரியார் பக்தர்கள் – நாத்திகர்கள்.

3.பெரியார் அவரது சொல்லுக்கு முரணாகவே மணியம்மையை மணமுடித்ததையும் சரி கண்டு அதை நியாயப்படுத்தி சுயவிளக்கம் கொடுப்பவர்கள் பெரியார் பக்தர்கள் -நாத்திகர்கள்.

4.பெண்கள் தங்கள் கர்ப்பப்பையை அறுத்தெரிந்துவிட வேண்டும். அது இருக்கப் போய்தானே பிள்ளை பெறும் இயந்திரமாக ஆண்களால் ஆக்கப்படுகிறார்கள் என்ற பகுத்தறிவுக்கு முரணான பெரியார் கூற்றை பகுத்தறிவாக ஏற்பவர்கள் பெரியார் பக்தர்கள் -நாத்திகர்கள்.

5. பெண் குழந்தைகளுக்கு ஆண் குழந்தைகளுக் குரிய ஆடைகளை அணிவித்து அவர்களை ஆண் குழந்தைகளாகவே வளர்க்க வேண்டும் என்ற பகுத்தறிவுக்கு முரணான பெரியார் கொள்கையை சரி காண்பவர்கள் பெரியார் பக்தர்கள் – நாத்திகர்கள்.

6.பெரியாரின் இப்படிப்பட்ட பகுத்தறிவு ஏற்றுக்கொள்ளாத எண்ணற்ற கொள்கைகளை அப்படியே கண்மூடி ஏற்பவர்கள் பெரியார் பக்தர்கள் -நாத்திகர்கள்.

7.பெரியார் சொன்ன பகுத்தறிவுக்கு ஒவ்வாத பல கொள்கைகளை தங்களால் கடைபிடிக்க முடியாத நிலையிலும் அவற்றை பகுத்தறிவுக் கொள்கை என அடம் பிடிப்பவர்கள் பெரியார் பக்தர்கள் -நாத்திகர்கள்.

8.திருமணம் முடிப்பதை கிரிமினல் குற்றமாகச் சட்டம் இயற்ற வேண்டும் என்று சொன்ன பெரியார், அவரது சொல்லுக்கே முரணாகப் பல திருமணங்களை முடித்து வைத்ததையும் சரி கண்டு, அவரது சொல்லுக்குச் செயல் முரண்பட்டதையும் நியாயப்படுத்திப் பேசுகிறவர்கள் பெரியார் பக்தர்கள் -நாத்திகர்கள்.

ஆம்! கற்சிலைகளைக் கடவுளாக நம்பி வணங்கும் பொய்க்கடவுள் பக்தியாளர்களை விட தரம் கெட்ட நிலையில் பெரியார் பக்தர்கள் இருக்கிறார்கள். சமாதிகளுக்கு வழிபாடு செய்யும் முஸ்லிம் குருட்டு பக்தர்களை விட தரம் தாழ்ந்த குருட்டுப் பக்தர்களாக இருக்கி றார்கள் பெரியார் பக்தர்கள்-நாத்திகர்கள்.

காரணம் அந்தச் சிலைக்குரியவர்கள், சமாதிக் குரியவர்கள் பெரியாரை விட சிறந்த மேன்மக்களாக, செய்ததைச் சொன்ன, சொன்னதைச் செய்த மனிதப் புனிதர்களாக இருந்திருக்க வாய்ப்பு இருக்கிறது. பெரியார் செய்த சாதனையாக எதைச் சொல்லலாம் என்றால், தாழ்த்தப்பட்டவர்கள், இழி ஜாதியினராக உயர்ஜாதியினரால் கற்பனை செய்யப்பட்டு, அதை அந்த தாழ்த்தப்பட்ட மக்களும் மனப்பூர்வமாக ஏற்று, அந்த உயர் ஜாதியினரை சாமி, சாமி எனக் கும்பிட்டு அவர்கள் காலால் இடும் வேலைகளை இவர்கள் தலையால் செய்து வந்த இழிநிலையை மாற்றி, அந்த தாழ்த்தப்பட்ட மக்களில் கனிசமானவர்களைச் சிந்திக்கச் செய்து, உயர்ஜாதியினர் தங்களை ஏமாற்றி வருகின்றனர் என்பதை உணர்ந்து, உயர் ஜாதியினரின் ஆதிக்கத்தை எதிர்த்துப் போராடவும், தாழ்த்தப்பட்டவர்களுக்கு மறுக்கப்பட்டு வந்த கல்வி கற்கும் உரிமையைப் பெற்றெடுத்து உயர் கல்வி கற்று அரசுத் துறைகளில் பணியாற்றவும், சுதந்திர மாகச் சிந்திக்கவும் உள்ள சூழ்நிலைகளை ஏற்படுத்திக் கொடுத்ததுதான்.

அந்த வகையில் தாழ்த்தப்பட்ட மக்களின் கல்வி,பொருளாதார நிலை சிறிது உயர்ந்திருந்தாலும் அவர்களை விட்டு இன இழிவு இன்னும் நீங்கவில்லை. அதற்குப் பெரியாரின் கடவுள் மறுப்புக் கொள்கை எவ்வித பலனையும் தரவில்லை என்பதுதான் உண்மை. அதே சமயம் பெரியாரின் போதனைக்கு மேலாகவும் சிந்தித்து சத்தியத்தை நேர்வழியை உணர்ந்து இஸ்லாத்தை தழுவி முஸ்லிமானவர்களோடு ஒட்டிக் கொண்டிருந்த இன இழிவு அவர்களை விட்டும் இருந்த இடம் தெரியாமல் மறைந்து விட்ட அற்புதக் காட்சியைக் கண்டும், தாழ்த்தப்பட்ட இழி ஜாதியினராகக் கருத்தப்படும் நாத்திகர்கள் உணர்வு பெறவில்லை என்றால் அவர்களை ஆறாவது அறிவான பகுத்தறிவுடையவர்களாகக் கருத முடியுமா? ஒரு போதும் முடியாது. ஐம்புலன்களைக் கொண்டு அடையும் ஐயறிவினரே அல்லாமல் அவர்கள் ஆறாவது அறிவான பகுத்தறிவாளர்கள் அல்லர். பெரியார் பக்தியில் புத்தி முட்டிப்போய் புத்தி பேதலித்து தடுமாறுகிறவர்களே பெரியாரிய நாத்திகர்கள்.

இறைவனின் இறுதி வழிகாட்டி, நெறி நூல் தெளிவாக இப்படிச் சொல்கிறது: (நேர்வழி நடக்கும் முஸ்லிம்கள்) தங்களுடைய இறைவனுடைய வசனங்களைக் கொண்டு நினைவூட்டப்பட்டாலும் செவிடர்களையும், குருடர்களையும் போல் அவற்றின் மீது விழமாட்டார்கள். (சிந்தனையுடன் செவியேற்று விளங்கிச் செயல்படுவார்கள்) (அல்ஃபுர் ஃகான் பிரித்தறிவித்தல் 25:73)

நாத்திகர்களை விட உண்மை முஸ்லிம்களே முழுமையான பகுத்தறிவாளர்கள் என்பதை ஐயறிவை பகுத்தறிவாகச் சொல்லும் நாத்திகர்கள் மறுக்க முடியுமா? ஆம்! “கடவுள் இல்லை’ என முழக்கமிட்டு சாதி இழிவோடு வாழ்வதை விட, ஏக இறைவனை ஏற்றுச் சாதியை ஒழித்து விடுவதே மேல் நடைமுறைச் சாத்தியம் என்பதை நாத்திகர்கள் எப்போது உணர்கிறார்களோ அப்போதுதான் கீழ்சாதி மக்களுக்கு விடிவு காலம் பிறக்கும். உண்மையிலேயே மனிதனை நினைத்து மனித நேயம் வலுவடைய வழி பிறக்கும். நாத்திகம் மனிதனை மறக்கச் செய்யுமே அல்லாமல் ஒரு போதும் நினைக்கச் செய்யாது.

 (தொடரும்)

Previous post:

Next post: