குருகுலக் கல்வி!
இப்னு ஹத்தாது
அல்ஜன்னத் மார்ச் 2010 கடைசிப் பக்கத்தில் “அன்புள்ள கொள்கைச் சகோதரனுக்கு” என்ற பெயரால் இடம் பெற்றுள்ள வரிகள் இவை: எழுதியவர் அதன் ஆசிரியர் மற்றும் ஜாக் அமீர் சகோ. எஸ். கமாலுத்தீன்.
இஸ்லாமிய சமுதாய மக்களில் அனேகமானவர்கள் தங்கள் மார்க்கத்தைப் பற்றிய போதிய அறிவில்லாதவர்களாக வாழ்ந்து கொண்டிருக்கின்றனர். ஒவ்வொரு முஸ்லிமும் கட்டாயம் தெரிய வேண்டிய விஷயங்களைக் கூட தெரியாமல் வாழ்ந்து வருகின்றனர். கேவலம் இஸ்லாத்தின் அடிப்படையான கலிமாவின் பொருள் தெரியாதவர்கள் தான் அதிகம் பேர். ஒருபடி மேலே சென்று பார்ப்போமானால் பரிசுத்த இறை வேதமாகிய பரிசுத்தக் குர்ஆனை ஓதத் தெரிந்தவர்கள் மிகமிகக் குறைவு. பெண்களைப் பொறுத்த வரையில் மார்க்க கல்வி கற்கும் விஷயத்திலும் மிகவும் பின்தள்ளப்பட்டுள்ளார்கள். இதனால் அவர்களிடையில் அறியாமை தலைவிரித்தாடிக் கொண்டிருக்கிறது. சமுதாயத்திற்கு இஸ்லாமிய அறிவொளி வழங்கக்கூடிய கல்விக் கூடங்கள் மீது வெறுப்பைப் பாய்ச்சி அந்தக் கூடங்களில் மாணவர்கள் போய் படிப்பதைத் தடுத்துக் கொண்டிருக்கின்றனர். இறைவனைப் பற்றியும் இறை வேதத்தைப் பற்றியும் இஸ்லாமியர்கள் தெரிந்து விடக்கூடாது என்பதற்காக திட்ட மிட்டுச் செய்யப்படுகின்ற சதியாக இது இருக்கிறது.
குர்ஆன், சுன்னாவுடைய கல்வியை இரு கண்கள் போன்று பாதுகாத்து கட்டிக் காத்த அறிஞர்களை அவமரியாதை செய்கின்ற கூட்டம் உருவாகிவிட்டது. அந்த நல்லோர்களை இழித்துரைப்பதை சிலர் தொழிலாகக் கொண்டு செயல்பட்டு வருகின்றனர். அவர்களை திட்டியும் ஏசியும் எழுதுவதை விற்று காசாக்கி அதன் மூலம் பிழைப்பு நடத்தி வருகின்றனர். இதன் மூலம் இஸ்லாமிய கல்வியாளர்களை அடியோடு ஒழித்து விடலாமென மனப்பால் குடிக்கின்றனர்.
இப்படிப்பட்ட மோசமான ஒரு காலத்தில் நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். இந்த நேரத்தில் இஸ்லாமிய சமுதாயத்தவர்கள் குறிப்பாக இளைஞர்கள் மிகவும் எச்சரிக்கையாக இருக்கக் கடமைப்பட்டுள்ளனர். பெற்றோர்கள் தாங்களும் இந்த கல்வியை முறையாக கற்க முற்படுவதோடு தங்கள் பிள்ளைகளையும் சிறிய பருவத்திலிருந்தே குர்ஆனையும் சுன்னாவையும் கற்றுக் கொடுக்கின்ற கல்விக்கூடங்களுக்கு கட்டாயம் அனுப்பி வைக்க வேண்டும். இந்தக் கடமையை செய்யத் தவறுவார்களானால் எதிர்கால சந்ததிகள் அவர்களை சபிக்கும் என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும்.
“குர்ஆனை தானும் கற்று பிறருக்கும் கற்றுக் கொடுப்பவர்தான் உங்களில் சிறந்தவர்” என நபி(ஸல்)அவர்கள் கூறினார்கள். (நூல்:முஸ்லிம்) அல்ஜன்னத் மார்ச். 2010
இந்த வரிகளை மீண்டும் மீண்டும் படித்துப் பாருங்கள். முஸ்லிம்களின் மிகப் பெருந்தொகையினர் அவர் கூறுவது போல் அறியாமையின் அதலபாதாளத்தில் வீழ்ந்து கிடப்பதற்கு யார் காரணம்? முஸ்லிம்களை அல்குர் ஆனை விட்டுத் தூரப்படுத்தியவர்கள் யார்? அல்குர்ஆன் சமுதாயத்திலுள்ள சுமார் 5% மவ்லவிகளுக்கு மட்டுமே விளங்கும். 95% சாதாரண மக்களுக்கு விளங்காது என குர்ஆனோ, ஹதீஸோ சொல்லாத குருட்டுச் சட்டத்தை சமுதாயத்தில் புரையோடச் செய்தவர்கள் யார்? ஒளூ இல்லாமல் குர்ஆனைத் தொடக்கூடாது என குர்ஆனுக்கும் ஹதீஸுக்கும் முரணான சட்டத்தை கற்பனை செய்தது யார்? இப்படி அடுக்கடுக்கான கேள்விகளைக் கேட்டுப்பாருங்கள்.
மார்க்கத்தை வயிற்றுப் பிழைப்பாகக் கொண்டு புரோகிதத் தொழில் செய்யும் குருகுலக் கல்வி கற்ற மவ்லவி(?)களே! 9-ம் நூற்றாண்டிலிருந்து 13ம் நூற்றாண்டு வரை உலகியல் அனைத்து துறைகளிலும் முன்னோடியாக இருந்து பெரும் கண்டுபிடிப்புகளைக் கண்டு பிடித்த முஸ்லிம்களை, குர்ஆன் உங்களுக்கு விளங்காது எனச் சுயநலத்துடன் போதனைச் செய்து சுய சிந்தனையுள்ள அந்த முஸ்லிம்களின் மூளையை மழுங்கச் செய்தது இப்புரோகிதர்களே! அவர்களையே புரோகிதர் எஸ்.கே. மார்க்க அறிஞர்கள் என்றும், குருகுலக் கல்விக் கூடங்களையே இஸ்லாமிய அறிவொளி வழங்கும் கல்விக் கூடங்கள் என்றும் பிதற்றுகிறார்.
இன்று இவர்கள் நடைமுறைப்படுத்தும் குருகுல கல்விக் கூடங்கள் அன்று நபி(ஸல்) அவர்களது காலத்தில் இருக்கவில்லையா? ஆதி பிதா ஆதம்(அலை) அவர்களது காலத்திலிருந்தே சட்ட விரோதமாக, திருட்டுத்தனமாக ஷைத்தானின் நேரடிய ஏஜண்டுகளாக மனித சமுதாயத்தினுள் நுழைந்துகொண்ட புரோகிதர்கள் நடை முறைப்படுத்தி வரும் குருகுல கல்வி நடை முறையில் இருந்து வருகிறது. நபி(ஸல்) அவர்களது காலத்தில் யூத மதகுருமார்களை உற்பத்தி செய்யும் யூத குருகுலக் கல்வி நடைமுறையில் இருந்தது. கிறித்தவ மதகுருமார்களை உற்பத்தி செய்யும் கிறித்தவ குருத்துவக் கல்லூரி (Seminary) நடைமுறையில் இருந்தது. இந்தியாவில் இருந்த அனைத்து மதங்களின் மதகுருமார்களை உற்பத்தி செய்யும் குருகுல கல்வி நடைமுறையில் இருக்கத்தான் செய்தது.
ஏன்? நபி(ஸல்) பிறந்து வளர்ந்த மக்காவிலேயே கஃபாவுக்கு வடகிழக்குப் பகுதியில் கி.பி. 440-ல் புரோகிதர்களின் கற்பனையில் உருவான “”தாருந்நத்வா” என்ற மதகுருமார்களை உற்பத்தி செய்யும் குருகுலக் கல்வி நடைமுறையில் இருக்கத்தான் செய்தது. இப்படி உலகம் முழு வதும் நீக்கமறக் காட்சி தந்த 5% மத குருமார்கள் 95% மக்களை அவாம்கள் எனக் கூறி அவர்கள் மீது அதிகாரம் செலுத்தும், அவர்களை ஆட்டிப் படைக்கும் நடைமுறை இருக்கத்தானே செய்தது? அந்த நடைமுறையை இறைவனின் இறுதித் தூதர் ஏன் பின்பற்றவில்லை? ஏன் ஒழித்துக் கட்டினார்கள்?
இன்று இவர்கள் மதரஸா நடத்துவதுபோல் ஒரு கட்டிடத்தில் நூறு மாணவர்களைச் சேர்த்து, நபித்தோழர்களைக் கொண்டு அவர்களுக்கு உணவு கொடுக்கச் செய்து அம்மாணவர்களுக்கு சில உஸ்தாதுகளைக் கொண்டு மார்க்கக் கல்வி கற்றுக் கொடுக்க அன்று இருந்த தடை என்ன? நபி(ஸல்) அவர்கள் அழகாகக் காட்டித் தந்திருக்க முடியுமே! நபி(ஸல்) காட்டித்தராத ஒரு நடைமுறையை எந்த ஆதாரத்தைக் கொண்டு இப்புரோகிதர்கள் நடைமுறைப்படுத்துகிறார்கள்?
ஆம்! நபி(ஸல்) அவர்கள் நன்கு அறிந்திருந்தார்கள். அனைத்து மதங்களிலுமுள்ள மத குருமார்கள் இறைவன் நபிமார்கள் மூலம் அளித்த நேர் வழியை அந்த நபிமார்களுக்குப் பின் அச்சமுதாயங்களில் திருட்டுத் தனமாக சட்ட விரோதமாகப் புகுந்து கொண்டு ஒரே நேர்வழியைப் பல கோணல் வழிகளாக்கி, மார்க்கத்தை மதமாக்கி அதன் மூலம் வயிறு வளர்ப்பவர்களே இந்த மதகுருமார்கள் என்று அல்லாஹ் அறிவித்துக் கொடுத்தான். உலகிற்கு வந்த ஒவ்வொரு இறைத் தூதரும் இந்த மதகுருமார்களை எதிர்த்தே கடுமையாக போராட நேரிட்டது. இந்த வானத்தின் கீழ் அவர்களை விட ஒரு கேடுகெட்ட ஜென்மம் இல்லை என்றே ஒவ்வொரு நபியும் தம் மக்களுக்குப் போதித்ததையே அல்குர்ஆன் பல இடங்களில் சுட்டிக்காட்டுகிறது.
அதே வரிசையில் இறைவனின் இறுதித் தூதரும் தனது 6வது தலைமுறை ஓட்டன் குசையால் கி.பி. 440ல் ஆரம்பிக்கப்பட்ட “தாருந்நத்வா” என்ற குருகுல கல்வி போதிக்கும் மதரஸாவை இழுத்து மூடினார்கள். அதன் அறிஞர்களை மூடர்கள் என மக்களுக்கு அடையாளம் காட்டினார்கள். அதன் தலைவனை “அபுல் ஹிக்கம்” ஞானத்தின் தந்தை என குறைஷ்களால் பாராட்டப்பட்டவனை மூடர்களின் தந்தை-அபூ ஜஹீல் என நபி(ஸல்) அடையாளம் காட்டினார்கள். 21:92, 23:52 ஒன்றுபட்ட ஒரே சமுதாயம் என அல்லாஹ் திட்டமாகக் கூறுவதை ஆலிம் -அவாம் என இரு கூறுகளாக்கியும், அதுவும் 5% புரோகிதர்கள் 95% மக்கள் மீது ஆதிக்கம் செலுத்தி இவ்வுலக ஆதாயம் அடைவதையும் அல்லாஹ்வோ அவனது தூதரோ அனுமதித்து இருக்க முடியுமா? அது போதாதென்று இப் புரோகிதர்கள் அவர்களுக்கிடையே ஏற்படும் போட்டி பொறாமை காரணமாக ஒரே சமுதாயத்தை மத்ஹபுகள், தரீக்காக்கள், ஜாக், ததஜ, இதஜ போன்ற இயக்க மத்ஹபுகள் என பல கூறுகளாகக் கூறுபோட்டு வயிறு வளர்ப்பதை மார்க்கம் அனுமதிக்குமா? நடுநிலையோடு சிந்தியுங்கள்.
அல்குர்ஆன் 55:5 “சூரியனும், சந்திரனும் (துல்லிய) கணக்கீட்டின்படியே இயங்குகின்றன” என்று மிகத் தெளிவாகக் கூறி இருக்கும் நிலையில் அல்லாஹ் குறிப்பிடும் அந்த கணக்கீடு நபி (ஸல்) அவர்களது காலத்தில் கண்டுபிடிக்கப் படாததால் சூரிய ஓட்டத்தைக் கண்ணால் பார்த்தே ஐங்கால தொழுகைகளை நிறைவேற்றும் கட்டாயத்தில் அன்றைய மக்கள் இருந்தார்கள். சுமார் 400 ஆண்டுகளுக்கு முன்னர் சூரியனின் கணக்கீடு முறை கண்டுபிடிக்கப்பட்டு சூரியனைப் பார்த்து நேரத்தை அறிவதற்கு மாறாக கடிகாரத்தைப் பார்த்து நேரம் அறியும் முறையும் அதன் மூலம் தொழும் முறையும் நடைமுறைக்கு வந்தது. அப்போது இப்புரோகித முல்லாக்கள் “நபி (ஸல்) சூரியனைப் பார்த்தல்லவா தொழுதார்கள். நீங்கள் எப்படி கடிகாரத்தைப் பார்த்து தொழலாம்” என வானத்திற்கும் பூமிக்கும் இடையே குதித்தார்கள்.
ஆனால் இன்றோ அவர்களின் கட்டுப்பாட்டிலுள்ள பள்ளிகளில் தொழுகை, நோன்பு கால அட்டவணை என அறிவிப்புப் பலகை தொங்குகிறது. அதேபோல் சந்திரனின் கணக்கீட்டு முறை அன்று தெரியாமல் இன்று கண்டுபிடிக்கப்பட்டு துல்லியமாக மாதம் பிறப்பதை அறிய முடிவதால் பிறையைப் பார்த்து மாதம் பிறப்பதை அறிவதற்கு மாறாக கணக்கீட்டைப் பார்த்து மாதம் பிறப்பதைச் சொல்லுகிறோம். அதற்கு இப்புரோகிதர்கள், நபி(ஸல்) பிறையைப் பார்த்தல்லவா மாதத்தைத் தீர்மானித்தார்கள். நீங்கள் எப்படி கணக்கீட்டின் மூலம் மாதம் பிறப்பதைச் சொல்லலாம் என வானத்திற்கும் பூமிக்கும் இடையில் குதிக்கிறார்கள்.
இன்னும் சில ஆண்டுகளில் அவர்களே அவர்களது பள்ளிகளில் 12 மாதங்களும் பிறக்கும் கணக்கை குறிப்பிட்டு அட்டவணை தொங்க விடுவார்கள். இதுதான் மதகுருமார்களின் கையாலாகாத நிலை! இங்கு நமது கவனத்தில் கொள்ள வேண்டியது அன்று சந்திரனின் சுழற்சி கணக்கீட்டு முறை கண்டுபிடிக்கப்படாத காலத்தில், பிறையைக் கண்ணால் பார்த்து மாதம் பிறப்பதை அறிய வேண்டிய கட்டாயத்தில் இருந்த, மார்க்கத்திற்கு உட்படாத பிறை பார்த்தலை, கணக்கீடு துல்லியமாக தெரிந்த இக்காலத்திலும் கடைபிடிக்க வேண்டும் என அடம் பிடிக்கும் இந்த மதகுருமார்கள், அன்று நடை முறைப்படுத்த சாத்தியமான குருகுல கல்வி முறையை, அதுவும் அன்று இந்த முறை இருந்தும் மார்க்கத்தைக் கற்றுக் கொடுக்கக் கடமைப் பட்ட நபி(ஸல்) அவர்களால் அது வழிகேடு என இருந்த இடம் தெரியாமல் தரைமட்டமாக்கப் பட்ட அந்த குருகுல கல்வி முறையை முஸ்லிம் மதகுருமார்கள் எந்த முகத்தோடு புதிதாக உருவாக்கி நடைமுறைப்படுத்துகிறார்கள்.
முழுச் சமுதாயத்திலும் வெறும் 5% கையாலாத மக்களை அதுவும் படிப்பு ஏறாத, வீட்டுக்கடங்காத, பரம ஏழை மக்குப்பிள்ளைகளை மத குருமார்களாக, 95% மக்கள் மீது ஆதிக்கம் செலுத்தவும், கடவுள் பெயரைச் சொல்லி மக்களை ஏமாற்றவும், வழிவகுக்கும் இப்புரோகித குருகுல கல்வி முறையை எந்த முகத்தோடு நடைமுறைப்படுத்துகிறார்கள்? இவர்கள் பெருமையாகச் சொல்லும் அரபி மதரஸா நடைமுறை எப்போது இஸ்லாமிய சமுதாயத்தில் நடைமுறைப்படுத்தப்பட்டது. இந்தியாவில் தேவ்பந்த் மதரஸா 1866, தமிழ் நாட்டில் பாக்கியாத் 1885, அதன் பின்னர் பிரிக்கப்படாத தஞ்சாவூர் மாவட்டத்தில் பித்அத்தான மவ்லூது ஓதுவதற்கு மாணவர்கள் தேவை என்ற நோக்கத்தோடு ஆரம்பிக்கப் பட்ட அரபி மதரஸாக்கள், தப்லீஃக் சேவை ஆரம்பித்த பின்னர் 1950க்குப் பிறகு ஆரம்பிக்கப்பட்ட பல அரபி மதரஸாக்கள், 1987க்குப் பிறகு ஆரம்பிக்கப்பட்ட ஜாக், 2005க்குப் பின் ததஜ புதிய மத்ஹபுகளின் மதரஸாக்கள் என இந்த மதரஸாக்களின் வரலாறே 19ம் நூற்றாண்டுக்குப் பிறகுதானே.
ஆக 19ம் நூற்றாண்டுக்குப் பின்னர் கற்பனை செய்யப்பட்ட இந்த அரபி மதரஸாக்கள் 7ம் நூற்றாண்டில் நிறைவுபடுத்தப்பட்ட இஸ்லாமிய மார்க்கத்தை தூக்கி நிறுத்துகின்றன என யார் காதில் பூ சுற்றுகிறார் புரோகிதர் எஸ்.கே. இவர் வலியுறுத்தும் குருகுல கல்வி முறை 5% கையாலாகாத தகுதியற்ற இளைஞர்களிடம் குருபக்தியை வளர்த்து அவர்களது புத்தியை பேதலிக்கச் செய்து, அவர்கள் நம்பிக்கை வைத்துள்ள குரு நிலையிலுள்ள உஸ்தாதுகளின் மூடத்தனமான அனைத்து போதனைகளையும் அப்படியே வேதவாக்காக ஏற்று அதன்படி தானும் நடந்தும், அவர்களால் அவாம் என இழிவாக அழைக்கப்படும் முஸ்லிம்களுக்கும் அந்த மூட வழி கெட்ட கொள்கைகளையே போதிப்பதாகும்.
அவர்களின் மூட வழி கெட்ட கொள்கைகளுக்கு ஒரு சேம்பிள்:
அவர்களது மதரஸாக்களில் ஒழுக்கம் கற்பிப்பதற்கென்றே ஒரு பாட நூல். அதில் ஓர் அறிவுரை.
ஓர் உஸ்தாது பாடம் நடத்திக் கொண்டிருக்கும்போதே எழுவதும், உட்காருவதுமாக டிரில் செய்து கொண்டிருக்கிறார். மாணவர்கள் ஆச்சரியத்துடன் ஏன் எழும்பி, எழும்பி உட்காருகிறீர்கள் உஸ்தாது அவர்களே என்று கேள்வி கேட்டுள்ளனர். அதற்கு உஸ்தாதின் விடை என்ன தெரியுமா? இதோ கேட்டுச் சிரிப்பதுடன் சிந்திக்கவும் செய்யுங்கள்.
“எனது உஸ்தாதின் மகனார் எதிரேயுள்ள விளையாட்டுத் திடலில் விளையாடிக் கொண்டிருக்கிறார். அவர் எனது பார்வையில் படும் போது மரியாதைக்காக எழும்பி நிற்கிறேன். அவர் எனது பார்வையிலிருந்து மறைந்தவுடன் உட்கார்ந்து கொள்கிறேன். அதாவது எனது உஸ்தாதின் மகனாருக்குக் காட்டு மரியாதை எனது உஸ்தாதுக்குக் காட்டுவதாகும்” என்று விளக்கம் கொடுத்துள்ளார்.
பார்த்தீர்களா? எந்த அளவு குருபக்தியை வளர்க்கிறார்கள் என்று? இந்து புராணங்களில் தான் குரு சிஷ்யனிடம் குரு தட்சணையாக அவனது கட்டை விரலைக் கேட்டுப் பெற்றதாக எழுதி வைக்கப்பட்டுள்ளது. இவர்கள் யாரைப் பின்பற்றுகிறார்கள்? இப்படிப் பாடம் படித்த தமிழகத்தின் தலை சிறந்த அறிஞராக, தென்னாட்டு ஹஜ்ரத்ஜீயாக, ஒரு பிரபல மதரஸாவின் முதல்வராக இருக்கும் கலீல் அஹ்மது கீரனூரி, “நான் நூறு கிதாபுகளைப் படித்து அறிவதை விட எனது உஸ்தாது எனக்குக் கற்றுத் தந்ததே சிறந்த கல்வி’ என அந்நஜாத்தின் ஆரம்ப காலத்தில் கூறியதைப் பலர் மறந்திருப்பார்கள்.
நபி(ஸல்) அவர்கள் குரு சிஷ்யன் என்ற நடைமுறையைக் கற்றுத்தரவில்லை. தலைவன் தொண்டன் என்றும் கற்றுத்தரவில்லை. தன்னிடம் பாடம் படித்தவர்களைத் தனது தோழர்கள் என்றே அடையாளப்படுத்தினார்கள். தனக்கு மரியாதை செய்யும் நோக்கத்துடன் உட்கார்ந்திருப்பவர்கள் எழும்பி நிற்கக் கூடாது என கண்டிப்பாகக் கட்டளையிட்டிருக்கிறார்கள். இந்தப் புரோகிதர்கள் யாரைப் பின்பற்றுகிறார்கள்? நபி(ஸல்) அவர்களையா? அல்லது கோணல் வழிகளைக் கற்பிக்கும் முன் சென்ற மதப் புரோகிதர்களையா? சொல்லுங்கள்.
இவர்களது மதரஸாக்களில் கற்றுக் கொடுப்பது குர்ஆன், ஹதீஸை மட்டுமே கொண்டுள்ள மார்க்கக் கல்வியை அல்ல. குரு பக்தியை வளர்க்கும் புரோகிதக் கல்வியே கற்பிக்கப்படுகிறது. வேறு போக்கே இல்லாத சமுதாயத்திலுள்ள 5% ஏழைகளுக்குப் புரோகிதக் கல்வியைக் கற்றுக் கொடுத்து அவர்கள் 95% மக்கள் மீது அதிகாரம் செலுத்தி அவர்களை பல கோணல் வழிகளில் இட்டுச் செல்லவே முற்படுகிறார்கள்.
நபி(ஸல்) அவர்களின் அழகிய வழிகாட்டலைப் புறக்கணித்துவிட்டு, காலங்காலமாக மக்கள் கூட்டத்தை வழிகெடுத்து நரகில் தள்ளி ஷைத்தானின் சபதத்தை நிறைவேற்றத் துணை புரியும் புரோகிதர்களையே நவீன இயக்க முஸ்லிம் மதகுருமார்களும் அடிக்கு அடி சாணுக்குச் சாண் பின்பற்றி தாங்களும் வழிகெட்டு மக்களையும் வழிகெடுத்து நரகில் தள்ளி நரகை நிரப்புகிறார்கள். (பார்க்க 32:13, 11:118,119)
அல்குர்ஆன் 3:110, 9:71, 103:1-3 போன்ற இறைவாக்குகளைச் சுய சிந்தனையுடன் படித்து விளங்குகிறவர்கள் மார்க்கப்பணி சமுதாயத்தின் 100% ஆண்கள், பெண்கள் என்ற பாகுபாடு இல்லாமல் அனைவர் மீதும் கடமை என்பது உறுதியாகத் தெரிகிறது.
“என்னை பற்றி ஒரேயயாரு விபரம் தெரிந்தாலும் அதை மற்றவர்களுக்கு எடுத்துச் சொல்லி விடுங்கள்” என்ற நபி(ஸல்) அவர்களின் நேரடிக் கட்டளை பிரசார பணி 100% மக்கள் மீதும் கடமை என்பதை உறுதிப்படுத்துகிறது. இந்த நிலையில் வெறும் 5% கையாலாகாதவர்களுக்கு புரோ கித குருகுல கல்வியைக் கற்றுக் கொடுத்து அவர்கள் தாங்கள்தான் மார்க்கத்தில் அதிகாரம் பெற்றவர்கள் என்று மமதையுடன் கூறி 95% மக்கள் மீது குதிரைச் சவாரி செய்ய மார்க்கம் அனுமதிக்குமா? குர்ஆன், ஹதீஸ் ஒருபோதும் அனுமதிக்காது. இப்படிப்பட்ட மோசடி புரோகித குருகுல கல்விக்கே குர்ஆன், ஹதீஸை மட்டுமே பின்பற்றுகிறோம் என்று வாயளவில் சொல்லும் சகோ.எஸ்.கே. போன்றவர்கள் வக்காலத்து வாங்குகிறார்கள்.
தாருந்நத்வா மதரஸா நடத்தி வந்த புரோகித குருகுலக் கல்வி முறையைத் தரை மட்டமாக்கிவிட்டு நபி(ஸல்) அவர்கள் நடைமுறைப்படுத்திக் காட்டிய மார்க்கக் கல்வித் திட்டம் மிகமிக எளிமையானது. இயற்கையானது; எவ்வித செலவும் இல்லாதது. இதை விட ஒரு சிறந்த கல்வித்திட்டத்தை மனித சமுதாயமே ஒன்றிணைந்து பெரும் முயற்சி எடுத்து நடைமுறைப்படுத்தினாலும் அது சிறந்ததாக ஒருபோதும் ஆகாது. அது புரோகித குருகுலக் கல்வி என்ற அடிப்படையில் குரு பக்தியை, மனிதனே மனிதனை வணங்கும் ஷிர்க்கான (9:31) நிலைக்கே கொண்டு செல்லும்.
நபி(ஸல்) அவர்கள் கற்றுத்தந்த மிகமிக எளிய முறை ஆங்காங்கே உள்ள பள்ளிகளில், மனித சமுதாயத்தில் 7 வயதிலிருந்து 100 வயது வரை ஆண், பெண் என்ற பாகுபாடு இல்லாமல் அனைவரும் அனைத்துக் கல்வியை கற்கும் முறையாகும். இன்று இந்தப் புரோகித மூட முல்லாக்கள் ஏற்படுத்தியிருக்கும் மூடத்தனமான சட்டங்கள் காரணமாக சமுதாயத்திலுள்ள 5% கூட பள்ளிக்கு வருவதில்லை. இறைவனுக்கு இணை வைக்கும் கொடிய செயலைச் செய்ய தர்காக்களுக்குச் சாரை சாரையாகச் செல்லும் பெண்களுக்கு அதை அனுமதிக்கும் மூட முல்லாக்கள் அந்தப் பெண்கள் பள்ளிக்கு வர அனுமதிப்பதில்லை. காரணம் அவர்கள் மார்க்கத்தை முறையாகக் கற்றுக் கொண்டால் அவர்களை ஏமாற்றி வயிறு வளர்க்க முடியாது என்ற அச்சமே பெண்களைப் பள்ளிக்கு வருவதிலிருந்தும் தடுக்கிறது.
ஆனால் நபி(ஸல்) அவர்களின் பிரசார பணியின் போது பெண்கள் தாராளமாக பள்ளி வந்து ஜமாஅத் தொழுகையில் கலந்து கொள்ள, நபி (ஸல்) அவர்களின் மார்க்க அறிவுரைகளைக் கேட்டு விளங்கிக் கொள்ள அனுமதிக்கப் பட்டார்கள். அதனால் ஆண்களைப் போலவே பெண்களும் மார்க்க விற்பன்னர்களாகத் திகழ்ந்தார்கள். இப்படி ஐங்கால தொழுகைக்கும் 100% மக்களும் பள்ளிக்கு வருபவர்களாகவும், அங்கு தினசரி ஏதாவது ஒரு தொழுகைக்குப் பின் இடம் பெறும் அல்குர்ஆன் மொழிபெயர்ப்பை வாசிப்பதையும் அது பற்றிய கலந்துரையாடலையும் தவறாமல் கேட்டு வந்தால் ஒரு சில வருடங்கள் கழித்து 7 வயதிலிருந்து 100 வயது வரை ஆண்கள், பெண்கள் என்ற பாகுபாடு இல்லாமல் முழு குர்ஆனையும் அதில் பொதிந்துள்ள உன்னத கருத்துக்களையும் அறிந்து கொள்ள முடியும். 7 வயது குழந்தைகள் அவர்கள் 12வயதாகும்போது மனனசக்தி காரணமாக முழு குர்ஆனையும் மனனமிட்டுக் கொள்ள முடியும். பொருளையும் மனதில் இருத்த முடியும். இதேபோல் இன்னொரு தொழுகைக்குப் பின் ஆதாரபூர்வமான ஹதீஸ்களை மட்டும் படிக்கக் கேட்டு மனதில் இருத்திக் கொள்ள முடியும்.
ஆக தொடர்ச்சியாக விடாது ஒரு ஐந்தாண்டுகள் இந்த முயற்சியில் முழு மூச்சாக ஈடுபட்டால், இந்த புரோகித மவ்லவிகள் ஏழு ஆண்டுகளில் பெற்றுக் கொள்ளும் மார்க்க அறிவை விட மிக அதிகமான மார்க்க அறிவைப் பெற முடியும். இதற்காக எவ்விதப் பொருளாதார செலவும் இல்லை.
ஆனால் மார்க்கத்தை மதமாக்கி அதையே பிழைப்பாகக் கொண்ட ஷைத்தானின் நேரடி ஏஜண்டுகளான இப்புரோகித முல்லாக்கள் இதற்கு ஒருபோதும் உடன்பட மாட்டார்கள். இதற்கான முயற்சியை முளையிலேயே கிள்ளி எறியவே முற்படுவார்கள். இந்த முயற்சிக்கு ஷைத்தானின் உதவி கிடைக்குமா? ஒருபோதும் கிடைக்காது. அதேபோல் ஷைத்தானின் ஏஜண்டுகளான குருகுலக் கல்வி மூலம் குரு பக்தியை வளர்த்து வயிறு வளர்க்கும் இப்புரோகித முல்லாக்களும் உதவி செய்ய முன்வர மாட்டார்கள். நபி(ஸல்) கற்றுத் தந்த இந்த மிக உயர்ந்த கல்வித் திட்டத்தை 1986ல் நாம் நடைமுறைக்குக் கொண்டுவர பாடுபட்டுக் கொண்டிருந்த போது எம்மீது பெரும் பழிகளைச் சுமத்தி அத் திட்டம் நிறைவேறாமல் பாழாக்கியவர்கள் இதே எஸ்.கே, பீ.ஜை. மற்றும் புரோகிதர்கள் என்பதை நாடறியும்.
அதே சமயம் 1985,86களில் அந்நஜாத் ஆரம்பிக்க முன்னரே இப்புரோகிதக் கல்வி முறையை நாம் சரிண்டு, ஸலஃபி கொள்கைக்குப் பச்சைக் கொடி காட்டியிருந்தால் தமிழகமெங்கும் ஸலஃபி புரோகித மதரஸாக்களையும், பள்ளிகளையும் உருவாக்கி எமது ஆதிக்கத்தில் கொண்டு வந்திருக்க முடியும். அரபு நாட்டினர். கேரளா, இலங்கை நாடுகளில் அரபு நாட்டு உதவி கொண்டு நடைபெறும் மதரஸா, பள்ளி பிரசார பணிகள் இவற்றைச் சுட்டிக்காட்டி ஆசை வார்த்தை காட்டினர். ஆனால் அது நபி வழி அல்ல என்பதாலேயே நிராகரித்தோம். எஸ்.கே. பீ.ஜை. வகையறாக்கள் அதைத் தங்களுக்குச் சாதகமாக ஆக்கிக் கொண்டனர்.
நபி(ஸல்) அவர்கள் இந்த உம்மத்துக்கு கற்றுத் தந்த மிக எளிய நடைமுறையை முறியடித்து தங்களின் குருகுல-குருபக்தி கல்வி முறையையே நிலைநாட்டவே பாடுபடுவார்கள். அந்த முயற்சியையே ஜாக் மத்ஹபு அமீர் சகோ. எஸ்.கே. கைக்கொண்டுள்ளார். முஸ்லிம்களே விழிப்படையுங்கள்.
ஆக ஆலிம்-அவாம் என சமுதாயத்தை 21:92, 23:52 இறைக் கட்டளைக்கு முரணாக பிளவுபடுத்தியவர்களும், அனைத்து வகைக் கல்வியையும் முஸ்லிம்கள் கற்றுக் கொள்ள அல்குர்ஆனும், நபி வழியும், தெளிவாகக் கட்டளையிட்டிருக்க மதக் கல்வி, உலகக் கல்வி எனக் கூறுபோட்டுச் சமுதாயத்தை அதலபாதாளத்தில் தள்ளியவர்களும், குர்ஆன், நபிவழிக்கு முரணாக மார்க்கத்தை மதமாக்கி அதையே வயிற்றுப் பிழைப்பாக்கிக் கொண்டு 2:44, 4:112 குர்ஆன் வசனங்கள் கூறுவது போல் 1963லிருந்தே தொழில் செய்து பிழைப்பு நடத்தும் எம்மீது அப்பழியை சுமத்தி இருக்கிறார் எஸ்.கே. மவ்லவி, முல்லா பக்தி கொண்டு புத்தியை அவர்களிடம் கடன் கொடுத்தவர்கள் இதை நம்பலாம். சுய சிந்தனையுடன் அல்குர்ஆனையும், நபிமொழியையும் நேரடியாகப் படித்து விளங்குகிறவர்கள் இப்புரோகிதர்களிடம் ஏமாற மாட்டார்கள்.
இறுதியாக எஸ்.கே. எடுத்து எழுதி இருக்கும் ஹதீஸ் சமுதாயத்திலுள்ள 100% ஆண்களும், பெண்களும் குர்ஆனை கற்றுக் கொள்ளும் பிறருக்கும் கற்றுக் கொடுக்கும் முயற்சியையே வலியுறுத்துகிறது. 5% புரோகிதர்கள் 95% மக்கள் மீது குதிரைச் சவாரி செய்வதை அல்ல.