இஸ்லாமிய ஒற்றுமையியல்
ஒன்றுபட்ட முஸ்லிம் சமுதாயமே இஸ்லாத்தின் இலட்சியம்
நபிகால இஸ்லாமிய ஒற்றுமை!
முஹிப்புல் இஸ்லாம்
அல்லாஹ்வின் கட்டளைக்கு உடன் வழிப்பட்ட மலக்குகள்!
இறைக் கட்டளை மீறிய மெகா மாபாதகன் ஷைத்தான்!
அல்லாஹ்வின் அருட்கொடை இஸ்லாமிய மார்க்கம்!
அல்லாஹ்வின் பிரகடனம்: இன்றைய தினம் உங்கள் மார்க்கத்தை உங்களுக்காக நிறைவு செய்து விட்டேன்.
* (இஸ்லாத்தின் மூலம்) எனது அருட்கொடைகளையும் நான் உங்கள் மீது நிறைவு செய்து விட்டேன்.
* இஸ்லாத்தை உங்களுக்கான (மனித சமுதாய) வாழ்க்கை நெறியாக பொருந்திக் கொண்டேன். (அல்மாயிதா: 5:3)
* அல்லாஹ்வின் கட்டளைகள்தான் இஸ்லாம்; இஸ்லாம்தான் அல்லாஹ்வின் கட்டளைகள். அல்லாஹ்வின் கட்டளைகள் இல்லையேல் அது இஸ்லாம் அல்ல.
* அல்லாஹ்வின் கட்டளைகளின் தொகுப்பு தான் இஸ்லாம்.
* அல்லாஹ்வின் கட்டளைகளின் சாரம்சம் இஸ்லாம்
* அல்லாஹ்வின் கட்டளைகள் அமலாக்கம் இஸ்லாம்.
அல்லாஹ் அருளிய அனைத்தும் இஸ்லாம்தான். இஸ்லாமிய கோட்பாட்டியல் (Practice), அதன் அடியயாற்றிய செயல்பாட்டியல் (Practice),இவ்விரண்டும் இஸ்லாமிய வாழ்வியலாய் (Islamic Life Style) பரிணமிக்கிறது. இஸ்லாத்தை வாழ்வியலாக்கு வதில் பிரதான அங்கம் வகிப்பது: இறைக் கட்டளைகள்தான்.
நபிகால இஸ்லாமிய ஒற்றுமை:
அல்லாஹ்வின் கட்டளைகளோடு இணைதலே இஸ்லாத்தோடு ஐக்கியமாவதாகும். அல்லாஹ்வின் கட்டளைகளை மீறுதல் இஸ்லாத்தை விட்டு பிரிவதாகும். இதை உலக அளவில் முஸ்லிம்கள் மிகப் பெரும்பாலோர் சரியாக உணரவில்லை. அதனால் தான் இணைதல், பிரிதல் என்பதன் தவறான பொருள் விளக்கத்தில் உலக முஸ்லிம்கள் விட்டில்களாய் பிரிவிலும், பிளவிலும் சிக்கித் தவிக்கின்றனர்.
அல்லாஹ்வின் கட்டளைகளோடு ஐக்கியமாவதே இஸ்லாமிய ஒற்றுமை. அல்லாஹ்வின் கட்டளைகளை மீறுதல்-இஸ்லாத்தை விட்டுப் பிரிவதாகும்.இதுதான் அல்குர்ஆன் ஒற்றுமைக்குத் தரும் வரைவிலக்கணம். இவ்வரைவிலக்கணத்துக்கு நபியவர்கள் வாழ்வியல் வடிவமானார்கள். நபியவர்களைத் தொடர்ந்த நபி தோழர்களும் இஸ்லாமிய ஒற்றுமைக்கு எடுத்துக்காட்டானவர்கள். நபி காலத்தில் நிலவியதே உண்மை இஸ்லாமிய ஒற்றுமை. இதையே நாம் ஆய்வின் பொதுத் தலைப்பாக்கியுள்ளோம். நபிகால இஸ்லாமிய ஒற்றுமை. இஸ்லாமிய ஒற்றுமையியல் என்பதும் இதுதான்.
படைப்பினங்கள் அனைத்தும் ஒரே முஸ்லிம் சமுதாயம் :
அல்லாஹ்வின் கட்டளையோடு இணைதல்; அல்லாஹ்வின் கட்டளையை விட்டு பிரிதல் -இரண்டையும் எப்படி பகுத்துப் பார்ப்பது? வானங்கள், பூமியில் உள்ள படைப்பினங்கள் அனைத்தும் அல்லாஹவின் மார்க்கம் இஸ்லாத்தோடு ஐக்கிய மாகியுள்ள்ன: வானங்களிலும் பூமியிலும் உள்ளவை விரும்பியோ விரும்பாமலோ (அல்லாஹ்) அவனுக்கு முற்றிலும் சரணடைந்து (வலஹூ அஸ்லம்) முஸ்லிமாக இருக்கின்றன. (ஆலி இம்ரான் :3:83)
வானங்களிலும் பூமியிலும் அல்லாஹ்வின் கட்டளைக்கு முற்றிலும் வழிப்பட்டு சரணடையும் படைப்பினங்கள் அனைத்தும் இஸ்லாத்தோடு ஐக்கியமாகிய முஸ்லிம்களே! இஸ்லாத்துடன் ஐக்கியமாகிய அனைத்து படைப்பினங்களும் ஒரே சமுதாயம்! அல்லாஹ், இதையே ஒன்றுபட்ட முஸ்லிம் சமுதாயம் என நமக்கு உணர்த்துகிறான்.
பூமியில் வாழும் உயிரினங்கள், தமது சிறகுகளால் (வானில்) பறந்து செல்லும் பறவைகள் யாவும் (உமமுன் அம்ஃதாலு(க்)கும்) உங்களைப் போன்ற சமுதாயங்களேயன்றி வேறல்ல. அந்த (இறைப்) பதிவேட்டில் எந்த ஒன்றையும் நாம் பதிவு செய்யாமல் விட்டு விடவில்லை (அல்அன்ஆம் : 6:38)
இன்றைய மானுட இயலாளர்கள் (ANTHROPOLOGISTS) மானுடப் பார்வை’, “அகிலத்துவப் பார்வை’ என மானுட ஒருமைப்பாடு காண கூப்பாடு போட்டுக் கொண்டிருக்கிறார்கள். அவர்கள் எல்லாம் தொட முடியாத சிகரத்துக்கு அல்லாஹ் நம்மை அழைக்கிறான். அல்லாஹ்வுக்கு முற்றிலும் சரணடைந்து அல்லாஹ்வின் கட்டளைகளுக்கு வழிபடும் அனைத்து படைப்பினங்களும் அல்லாஹ்வின் பார்வையில் ஒரே முஸ்லிம் சமுதாயம்! ஓ…. படைப் பினங்கள் அனைத்தையும் ஒரே சமுதாயமாகப் பார்க்கும் இஸ்லாமிய பார்வை! படைப்பினங்கள் அனைத்தையும் ஒரே சமுதாயமாகக் காணும் அகன்று விரிந்த இஸ்லாமிய தொலைநோக்கு- மனித அறிவுக்கும், கற்பனைக்கும் எட்டக் கூடியதல்ல. இது நம்மில் மிகப் பலருக்கு வியப்பூட்டலாம். ஏன் அதிர்ச்சியாகவும் இருக்கலாம். ஜீரணிப்பதும் கடினம். இதைக் கண்ணுறும் முஸ்லிம் பொதுமக்கள், ஒரு முறைக்குப் பலமுறை ஆழ்ந்து சிந்திக்க வேண்டும். அவசியம் படிப்பினை பெற வேண்டும்.
குறுகிய மனப்பான்மை :
இதையயல்லாம் உலக மக்களுக்கு உணர்த்தும் பொறுப்பும் கடமையும் மிக்க முஸ்லிம்கள்.. என்ன செய்கிறார்கள்..? அணி மனப்பான்மை, குழு மனப்பான்மை, பிரிவு மனப்பான்மை… என குறுகிய மனப்பான்மையால்… பிரிவிலும், பிளவிலும் சிக்கிச் சிதறி சின்னாபின்னமாகிக் கொண்டி ருக்கிறார்கள். பிரிவு, அணி, குழுக்களில் சிக்காத முஸ்லிம்கள் யார்? (தேடுகிறோம், தேடிக் கொண்டே இருக்கிறோம். அறிந்தோர் தெரியப்படுத்துங்கள்)
பிளந்தெடுக்கும் பிரிவுகள் :
* ஷிஆ, சுன்னா, ஸலஃபி, தவ்ஹீத், தரீக்கா, மதஹப்கள் போன்ற கணக்கற்ற பிரிவுகள் எதிலேனும் சிக்கி இருப்பினும் சரி.
* ஜமாஅத், கழகம், அமைப்பு, சங்கம், மன்றம், கிளப் என தனிமைப் படுத்தப்பட்டாலும் சரி.
இவை அனைத்தும் முஸ்லிம்களை பிளந்தெடுக்கும் பிரிவுகளே! அணிகளே! குழுக்களே!
இவற்றில் சிக்குண்டோர்: தவ்ஹீத்வாதிகளின் அணியைச் சார்ந்திருந்தாலும் சரி, அஃதல்லாத வேறு எந்தப் பிரிவுகளை, அணிகளை, குழுக்களைச் சார்ந்திருந்தாலும் சரி, இவர்கள் அனைவரும் குறுகிய வட்டத்துக்குள் தங்களைத் தாங்களே குறுக்கிக் கொண்டோர் ஆவர். இப்படிப்பட்டவர்கள் குறுகிய மனப்பான்மையிலிருந்து விடுபடாத குறைமதியாளர்களே!
இவர்கள் எங்கே யாரால் எப்படி பிளக்கப்பட்டிருப்பினும், “ஜமாஅத்’, கூட்டமைப்பு, இயக்கம் என்ற போலி “லேபிள்’ போதைப் பிரிவுகளிலும், பிளவுகளிலும் தள்ளப்படுகிறார்கள்.
அதனால் முஸ்லிம்கள் அனைவரும் அல்லாஹ்வின் அருளுரை 3:83, 6:38 யிலிருந்து அவசியம் படிப்பினைப் பெற்றுக் கொள்ள வேண்டும்.
பிரிவு, அணி, குழு என குறுகிய பிரிவு, பிளவு மனப்பான்மையிலிருந்து முஸ்லிம்கள் தங்களை விடுவித்துக் கொள்ள வேண்டும். அதற்கு முஸ்லிம்கள் என்ன செய்ய வேண்டும்?
அல்லாஹ்வின் கட்டளை எதுவானாலும் அக்கட்டளையோடு ஐக்கியமாக வேண்டும். அல்லாஹ்வின் கட்டளையோடு ஐக்கியமாதலே இஸ்லாமிய ஒற்றுமை; அல்லாஹ்வின் கட்டளையை மீறுதல்-இஸ்லாத்தை விட்டுப் பிரிதல்.
கல்வெட்டாய்ப் பதியவைத்துக் கொள்ள வேண்டும். இதை நம்மில் ஒவ்வொருவரும் உணர்ந்து மற்றவர்களுக்கு உணர்த்தவும் வேண்டும். இது அனைத்து முஸ்லிம்கள் மீதும் அல்லாஹ் விதியாக்கியுள்ள நீங்காக் கடமையாகும்.
நீங்காக் கடமை :
நாம் மார்க்கத்தை மலையைப் பெயர்ப்பதைக் காட்டிலும் சுமையாகக் கருதுகிறோம். இதனால் பாமரர் முதல் படித்தவர் வரை, அறிவிலி முதல் அறிஞர் வரை எல்லோரும் எளிதாக உணர, உணர்ந்ததை எளிதாய் உணர்த்த, உணர்ந்தபடி வாழ, மற்றவர்களை வாழத் தூண்ட, அனைத்து அறிவுகளின் ஒரே உரிமையாளனான அல்லாஹ் மார்க்கத்தை எளிமையாக்கியுள்ளான்.
நாம் விரயமாக்கும் கணிசமான நேரங்களை மார்க்கம் கற்க ஒதுக்கினால் மார்க்கம் அறிவது பெரிய காரியமல்ல. முயல முன் வருவோமாக.
* இஸ்லாத்துடன் ஐக்கியமாதல்
* இஸ்லாத்திலிருந்து பிரிதல்
குறித்த தெளிவின்மையால் உலக முஸ்லிம்கள் ஒரு சில விடயங்கள் நீங்கலாய் இஸ்லாத்தை விட்டு முற்றாகப் பிரிந்து நிற்கிறார்கள்.
இஸ்லாமியப் பகை :
அல்லாஹ், ஷைத்தானையும், அவனது சந்ததிகளையும் மனித இனப் பகைவனாய் இனங்காட்டி எச்சரித்துள்ளான். அதிலிருந்து படிப்பினைப் பெறத் தவறியதால், மனித இனம் ஷைத்தானுடன் அவனது சந்ததிகளின் வழிகேட்டு சதிக்குப் பலியாகி வருகிறது. ஷைத்தானுடன் அவன் சந்ததிகளின் குள்ளநரித்தனம், மனித இனத்துக்கு இஸ்லாத்தின் மேல் பகை ஏற்படுத்துகிறது.
மனிதர்களின் இஸ்லாமியப் பகை பெரும்பாலோரை இஸ்லாத்திலிருந்து பிரித்து விடுகிறது. முற்றாக இஸ்லாத்தை மறுப்போர், நிராகரிப்போர், இறைக்கிணையாக்குவோர் என இஸ்லாத்தை விட்டு நிரந்தரமாய் பிரிந்து விடுகிறார்கள். இது போன்றோரையும் இஸ்லாத்தோடு ஐக்கியமாக்க வேண்டிய பொறுப்பும், கடமையும் மிக்கவர்களே முஸ்லிம்கள்… என்ன செய்கிறார்கள்…?
இஸ்லாத்தோடு ஐக்கியமாக வேண்டிய முஸ்லிம்கள், இஸ்லாத்தை விட்டுப் பிரிந்து நிற்கும் கொடுமையை என்னென்பது? ஆகவே இஸ்லாமிய ஐக்கியம் இஸ்லாத்தை விட்டு பிரிதல்-இரண்டையும் இஸ்லாத்தைப் படைப்பினங்களுக்குக் கொடையாக அருளிய அல்லாஹ் பகுத்துக் காட்டுகிறான்.
இஸ்லாத்தோடு ஐக்கியமாவதால் மனித இனம் இரு(இம்மை, மறு)மையிலும் அடையும் உயர்வுகள்! இஸ்லாத்தைவிட்டு பிரிவதால் விளையும் மாபாதகங்கள்! இரண்டையும் மனித இனத்தின் கவனத்துக் கொண்டு வருகிறான். இஸ்லாத்தோடு ஐக்கியமாக வேண்டிய அவசியத்தை அல்லாஹ் கோடிட்டுக் காட்டுகிறான். இஸ்லாத்தை விட்டு பிரிவோர், அடையப் போகும் தண்டனைகளையும் சுட்டிக்காட்டுகிறான். மனித இனத்தை இஸ்லாத்திலிருந்து பிரிக்கும் மனித இன விரோதியே ஷைத்தான், அவன் சந்ததிகளும் கூட. ஷைத்தானின் வழிகெடுக்கும் வசீகர யுக்திகளையும், சதிகளையும் அல்லாஹ் வெளிச்சம் போட்டுக் காட்டுகிறான்.
வேண்டாத விளக்கங்கள் :
அல்லாஹ்வின் கட்டளை! அதைத் துணிந்து மீறும் ஷைத்தானின் விஷமத்தனம்! இறைக் கட்டளை மீறலை நியாயப்படுத்தும் ஷைத்தானின் வேண்டாத விளக்கங்கள்! வலிந்துரைகள்! புனைந்துரைகள்! அகம்பாவ எதிர்வாதங்கள், விதாண்டா வாதங்கள் அனைத்தையும் இறை அருளிய வாழ்வியல் அறநூல்-அல்குர்ஆனில் அல்லாஹ் மிகத் தெளிவாக பதிவு செய்துள்ளான். ஏன்? மனித, ஜின் இனங்கள் படிப்பினை பெறுவதற்காக… படிப்பினை பெற்றார்களா? மிகச் சிலர் நீங்களாய் மிக, மிகப் பெரும்பான்மையினர் படிப்பினை பெறவில்லை. அனைவரும் படிப்பினைப் பெற முன் வருவோமாக. மனித இன பரம விரோதி ஷைத்தானின் விரோதம் மனித குலத்தின் மேல் பாயக்காரணம் என்ன?
அல்லாஹ்வின் கட்டளைக்கு உடன் வழிப்பட்ட மலக்குகள்:
அல்லாஹ்வின் கட்டளைக்கு வழிப்பட அல்லாஹ் பணித்தான். மலக்கு(வானவர்)கள் அல்லாஹ்வுக்கு அப்படியே உடன் வழிப்பட்டார்கள். முதல் மனிதர் ஆதமுக்கு சிரம் தாழ்த்தி மரியாதை செய்து, அல்லாஹ்வின் கட்டளைக்கு, அல்லாஹ்வின் விருப்பப்படி செயல் வடிவம் கொடுத்தார்கள். அல்லாஹ் அன்று விதித்தபடி, ஆதமுக்கு சுஜூது செய்தார்கள்.
* நாம்((அல்லாஹ்) வானவர்களிடம் ஆதத்துக்குச் (சுஜூது) சிரம் பணியுங்கள் எனக் கூறிய (கட்டளையிட்ட)தை நினைவு கூறுங்கள்.
* மலக்குகள் அனைவரும் (சுஜூது) சிரம் பணிந்தார்கள்.
* ஆனால் இப்லீஸ் சிரம் பணியவில்லை.
* அவன் ஜின் இனத்தைச் சார்ந்தவனாக இருந்தான்.
* ஆகையால், அவன் தன் அதிபதியின் கட்ட ளைக்கு வழிப்பட மறுத்து விட்டான். (அல்கஹ்ப்: 18:50 சிந்தித்து படிப்பினை பெறவும் மேலதிக விளக்கம் பெறவும் காண்க: அல்குர்ஆன் 2:34, 7:11, 15:28-31, 17:61, 20:116, 38:71-74)
அல்லாஹ்வுக்கு முற்றிலும் சரணடையும் இயல்பினரான மலக்குகள் அல்லாஹ்வின் கட்ட ளைக்கு உடன் வழிப்பட்டு விட்டார்கள். அல்லாஹ்வின் கட்டளையென்றால், உடன் வழிப்படுவதற்கு ஜின் மனித இனங்களுக்கு மலக்குகள் முன் உதாரணமானார்கள். “”காலூ ஸமிஃனா வ அதஃனா..” அல்லாஹ்வின் கட்டளைகளை நாங்கள் செவிமடுத்தோம். (அதற்கு) நாங்கள் வழிப்பட்டோம். (அல்குர்ஆன் 2:285)
அல்லாஹ்வின் கட்டளை என்றால் எந்தப் படைப்பினமாயினும் உடன் வழிப்பட்டு விட வேண்டும். அதற்கு மலக்குகள் மகத்தான எடுத்துக் காட்டாய்த் திகழ்ந்து வருகிறார்கள். அனைத்து படைப்பினங்களின் அதிபதி அல்லாஹ், ஜின், மனித இனங்களுக்கு, இந்நிகழ்வை அப்படியே படம் பிடித்துக் காட்டியுள்ளான். ஏன்? இரு இனங்களும் அவசியம் படிப்பினைப் பெற்றுக் கொள்ள வேண்டும். மற்றவர்களுக்குத் தெரியாது. மார்க்கம் அறிந்தவர் என மக்களால் நம்பப்படும் மவ்லவிகள் இதை மக்களுக்குத் தெரிவிப்பதில்லை. தெரிவித்தால் மவ்லவிகளில் மிகப் பெரும்பாலானோர் மிகப் பெரும்பாலான இறைக் கட்டளைகளுக்கு வழிப்படுவதில்லை என்ற பேருண்மை வெட்ட வெளிச்சமாகிவிடும். வெளிச்சமாகிவிட்டால், ஏன் இந்த இறைக்க கட்டளைக்கு வழிப்படவில்லை என மவ்லவிகளை மக்களே துளைத்தெடுக்கத் துவங்கி விடுவார்கள்.
ஷைத்தானின் இறைக் கட்டளை மீறல்:
மலக்குகள் குழாமில் இருந்தபோதிலும், அல்லாஹ்வுக்கு முற்றிலும் சரணடைந்து, அல்லாஹ்வின் கட்டளைக்கு வழிப்படும் மலக்குகள் உன்னத நல்லியல்புக்கு இப்லீஸ் முரண்பட்டான். அல்லாஹ் வின் கட்டளையைத் துணிந்து மீறிய முதல் மாபதகன் இப்லீஸ். அதனால் ஷைத்தான் ஆனான்.
இது ஷைத்தானுக்கு வைக்கப்பட்டத் தேர்வு. ஷைத்தான் அல்லாஹ்வின் உத்தரவை மீறி, அல்லாஹ்வின் வெறுப்புக்கும், கோபத்துக்கும், சாபத்துக்கும் ஆளானான். அல்லாஹ்வால் விரட்டப்பட்டான் ஷைத்தான். ஷைத்தானின் இறைக் கட்டளை மீறல், இறைக் கட்டளைகளிலிருந்து பிரிவதாகும். இறைக் கட்டளையிலிருந்து பிரிவதே இஸ்லாத்திலிருந்து பிரிவதாகும்.
முதல் மனிதர் ஆதமுக்கு உணர்த்தப்பட்ட படிப்பினைகள்:
இறைக் கட்டளைக்கு முற்றிலும் சரணடைந்து வழிப்பட்டு இறைப் பொருத்தம் பெற்ற மலக்குகள் ஒரு பக்கம்.
இறைக் கட்டளையிலிருந்து பிரிந்து, இறை வெறுப்புக்கும், கோபத்துக்கும், சாபத்துக்கும் ஆளான ஷைத்தான் மறுபக்கம்.
இது முதல் மனிதர் ஆதமின் கண்முன்னே நடந்தது. அனைத்து படைப்பின் அதிபதி அல்லாஹ் இந்நிகழ்வின் இரு மாறுபட்ட நிலைகளை முதல் மனிதர் ஆதமுக்கு உணர்த்தினான்.
1. அல்லாஹ்வுக்கு முற்றிலும் சரணடைந்து, அல்லாஹ்வின் கட்டளைக்கு உடன் வழிப்படும் மலக்குகளின் உயர்ந்த தன்மை.
2. அல்லாஹ்வின் கட்டளையைத் துணிந்து மீறிய முதல் மெகா மாபாதகன் ஷைத்தானின் நிராகரிக்கும் போக்கு.
இறைக் கட்டளையின் எதிர்வினை :
மலக்கு, ஜின், மனிதன் யாராக, எந்தப் படைப்பாக இருந்தாலும் அல்லாஹ்வின் கட்டளைக்கு முற்றிலும் வழிப்பட வேண்டும் என்ற இறை நியதியை முதல் மனிதர் ஆதமுக்கு மேற்கண்ட நிகழ்வின் மூலம் அல்லாஹ் உணர்த்தினான். அத்தோடு அல்லாஹ்வின் கட்டளைக்கு எதிர்வினையான முதல் மெகா மாபாதகன் ஷைத்தானின் இறைக் கட்டளை மீறலும் ஆதமுக்கு நேருக்கு நேர் நிதர்சனமாய் காட்டப்பட்டு எச்சரிக்கப்பட்டார்.
முதல் மனிதர் ஆதம் மலக்குகளைப் பார்த்து அல்லாஹ்வின் கட்டளைக்கு வழிபடுவாரா? ஷைத்தானின் இறைக் கட்டளை மீறலை எச்சரிக்கையாக எடுத்துக் கொள்வாரா? இது அல்லாஹ் முதல் மனிதர் ஆதமுக்கு வைக்கப் போகும் தேர்வுக்கு ஓர் முன்னோட்டம்; தேர்வுக்குத் தயார் செய்ய ஆதமுக்கு ஓர் அரிய வாய்ப்பு. இந்த வாய்ப்பை மு.ம. ஆதம் சரியாகப் பயன்படுத்தினாரா?
குற்றத்தை நியாயப்படுத்திய ஷைத்தான் :
அல்லாஹ்வின் கட்டளையை மெகா மாபாதகன் ஷைத்தான் ஏன் மீறினான்? குற்றம் உணர்ந்து அல்லாஹ்விடம் பாவமன்னிப்புக் கோரும் கட்டாயம் ஷைத்தானுக்கு. ஆனால் ஷைத்தான் என்ன செய்தான்? இறைக் கட்டளை மீறல் ஒரு மாபாதகம் அதைத் தெரிந்தே, துணிந்து செய்தான் ஷைத்தான். செய்த குற்றத்தை நியாயப்படுத்தினான். இது அடுத்த மாபாதகம். குற்றத்தை நியாயப்படுத்த ஷைத்தான் கையாண்ட வழிகேட்டு யுக்திகள் மற்றொரு மாபாதகம். ஷைத்தானின் அடுக்கடுக்கான மாபாதகங்கள்… இப்படி மாபாதகங்களுக்கு மேல் மாபாதகம் செய்து வருபவன் ஷைத்தான்.
குற்றத்தை நியாயப்படுத்த அல்லாஹ்விடம் எதிர்வாதம்-விதண்டாவாதம் செய்தான். அனைத்து அறிவுகளின் ஒரே உரிமையாளன் அல்லாஹ்விடம் வேண்டாத விளக்கங்கள் கொடுத்தான். குற்றத்தை நியாயப்படுத்தினான். அந்த வேண்டாத தவறான விளக்கங்களே வலிந்துரைகள்…. புனைந்துரைகள்… தொடரும் ஷைத்தானின் விஷமத்தனம்! பாதகங்களுக்கு மேல் பாதகங்கள்… மாபாதகங்களுக்கு மேல் மாபாதகங்கள் செய்யும் ஷைத்தான் மெகா மாபாதகானானான்.
1. ஷைத்தான் கற்பித்த ஏற்றத் தாழ்வு :
இறைவன் கேட்டான்: இப்லீஸே! எனது கரங்களால் படைக்கப்பட்ட இவருக்கு சிரம் பணிவதை விட்டு உன்னைத் தடுத்தது எது? (அல்குர்ஆன் 38:75, 7:12)
அல்லாஹ் சமமாய் பாவித்த அல்லாஹ்வின் படைப்பினங்களை அல்லாஹ்விடமே பாகு படுத்திக்காட்டி உயர்வு தாழ்வுக் கற்பித்தான் மெகா மாபாதகன் ஷைத்தான்.
நான் அவரைவிட உயர்ந்தவன். நீ என்னை நெருப்பிலிருந்து படைத்தாய்; அவரை களிமண்ணி லிருந்து படைத்தாய். (அல்குர்ஆன் 7:12, 15:31-33, 17:61,62) என தன் குற்றத்தை நியாயப்படுத்தினான். மெ.மா.பா. ஷைத்தான். அல்லாஹ் மதிப்பளித்த மு.ம. ஆதமைத் தரம் தாழ்த்திக் கேவலப்படுத்தினான்.
2. ஷைத்தானின் எதிர்க்கேள்வி:
குற்றத்தை நியாயப்படுத்தி அல்லாஹ்விடம் எதிர்வாதம் செய்தான் விதண்டாவாதி ஷைத்தான். அல்லாஹ்விடம் எதிர்கேள்வியும் கேட்டான்.
மண்ணால் படைத்த இவருக்கு நான் எப்படி சிரம் பணிய முடியும்? (அல்குர்ஆன் 17:62)
3. இறை மரபைத் துணிந்து விமர்சித்த ஷைத்தான்:
விமர்சனங்களுக்கு எல்லாம் அப்பாற்பட்ட அல்லாஹ்வின் செயலைத் துணிந்து விமர்சிக்கும் ஷைத்தானின் அதிகப்பிரசங்கித்தனம்.
சற்று நீயே பார்… நீ என்னை விட இவருக்குக் கண்ணியம் அளித்துள்ளாயே? அதற்குத் தகுதியுடய வர் தானா இவர்? (அல்குர்ஆன் 17:62)
அல்லாஹ்வின் படைப்பினங்கள் அனைத்தும் அவன் முன் சமம் (அல்குர்ஆன் 6:38,3:83) எனும் இறை மரபைத் துச்சமாய் மதித்தான்.
அல்லாஹ்வின் செயலைக் குறைகூறி கடுமையாக விமர்சித்தான். மட்டுமின்றி, மலக்குகள் ஜின்களைக் காட்டிலும் மனித இனத்தை அல்லாஹ் சிறப்பித்ததை ஜின் இன ஷைத்தானால் ஜீரணிக்க முடியவில்லை. ஷைத்தான் சார்ந்துள்ள ஜின் இனத்தை அல்லாஹ் இப்படி சிறப்பிக்கவில்லையயன்ற பொறாமையின் கொந்தளிப்பு. பொறாமை கொள்ளும் பொறாமைக்காரனின் தீங்கை விட்டும் (அல்லாஹ்விடம்) பாதுகாப்புத் தேடுகி(றோம்)றேன்? (அல்குர்ஆன் 114:5)
மண்ணால் படைக்கப்பட்ட மனிதன் தாழ்ந்த வன். நெருப்பால் படைக்கப்பட்ட ஜின் இனம் உயர்ந்தது என முதன் முதலில் அல்லாஹ்வின் படைப்பில் தன் தவறான விeக்கத்தால் ஏற்றத் தாழ்வு கற்பித்தான். ஷைத்தான் பெருயைடித்தான். அகம்பாவத்தால் தன்னைத்தானே உயர்த்தி ஆதமைத் தாழ்த்தி பெருமையடித்தான் (அல்குர்ஆன் 38:14, 2:34)
அல்லாஹ் இந்நிகழ்வை மானுடத்துக்குக் குறிப்பாக முஸ்லிம்களாகிய நமக்கு எடுத்துக்காட்ட வேண்டுமா? வேண்டியதில்லையே. இருந்தும் நமக்கு எடுத்துக் காட்டுகிறான் ஏன்? நாம் சிந்திக்க வேண்டும். அவசியம் படிப்பினைப் பெற்றுக் கொள்ள வேண்டும்.
மெகா அகம்பாவ அதிகப் பிரசங்கித்தனம்:
அறிந்தே ஷைத்தான் செய்தக் குற்றத்தை நியாயப்படுத்தும், தவறான, வேண்டாத விளக்கங்கள், வலிந்துரைகள், புனைந்துரைகள் மூலம் அனைத்தும் அறிந்த அல்லாஹ்வுக்கே அறிவுரை கூறும் மெகா அகம்பாவ அதிகப் பிரசங்கித்தனம், அகம்பாவத்தால் தன்னை உயர்த்தி ஆதமைத் தாழ்த்தி பெருமையடித்தல்… இவை எதுவும் நடை பெறாமல் அல்லாஹ் தடுத்திருக்கலாம். அப்படியே நிகழ்ந்திருந்தாலும் அல்லாஹ் அதை நமக்குத் தெரிவிக்க வேண்டிய அவசியமும் இல்லை. அனைத்துப் படைப்பினங்களுக்கும் அருள் பாலிக்கும் அர்ரஹ்மான் நிகழ்ந்தவைகளை நம் அறிவுக் கண்முன் நிகழ்ந்ததாய்க் காட்டுவது ஏன்? ஷைத்தானின் வழிகேட்டு யுக்திகள் எதுவும் அல்லாஹ்விடம் எடுபட வில்லை. இதை நாம் நன்குணர்ந்து அவசியம் படிப்பினை பெற்றுக் கொள்ள வேண்டும்.
அல்லாஹ்வின் கண்டனம் தண்டனை:
இறைக் கட்டளை மீறலுக்காக அல்லாஹ்வின் கண்டனக் கணைகள் ஷைத்தானின் மீது பாய்ந்தன. அல்லாஹ் தண்டனையையும் விதித்தான்.
* ஆணவத்தால் இறைக் கட்டளையை மறுத்த ஷைத்தான் இறைக்கட்டளை மீறிய (முதல்) இறை நிராகரிப்பாளன். (அல்குர்ஆன் 2:34, 38:74)
* ஷைத்தானே கர்வம் கொள்ளாதே! நீ சிறுமைய டைந்தவன்.(அல்குர்ஆன் 7:13)
* இறைப் படைப்புகளில் ஏற்றத் தாழ்வைக் கற்பித்தவன். தன்னை உயர்த்தி ஆதமைத் தாழ்த்தியவன். (அல்குர்ஆன் 38:75, 76)
* நீ நிந்திக்கப்பட்டவன்! விரட்டப்பட்டவன்! இங்கிருந்து வெளியேறிவிடு. (அல்குர்ஆன் 7:18, 38:77)
* நிச்சயமாக நியாயத் தீர்ப்பு நாள் வரை உன்மீது என் சாபம் இருக்கும் என அல்லாஹ் தீர்ப்பளித்தான். (அல்குர்ஆன் 38:78, 15:35)
* உன்னையும், உன்னைப் பின்பற்றுவோரையும் நரகிலிட்டு நிரப்புவேன் என அல்லாஹ் தண்டனையையும் விதித்து விட்டான். (அல்குர்ஆன் 7:18, 38:85)
இறைக்கட்டளை மீறல் ஓர் மெகா மாபாதகம்! இம்மெகா மாபாதகத்தைத் துணிந்து செய்த ஷைத்தான் மெகா மாபாதகன்! இறைக் கட்டளை மீறல்தான் இஸ்லாத்தைவிட்டுப் பிரிவதாகும். இறைக் கட்டளையை மீறி இஸ்லாத்தை விட்டு பிரிந்த ஷைத்தானை இறை நிராகரிப்பாளனாய் அல்லாஹ் நமக்கு இனங்காட்டி எச்சரித்துள்ளான் ஏன்? நாம் படிப்பினை பெற வேண்டும். ஆனால் இன்றளவும் முஸ்லிம்கள் படிப்பினை பெறவில்லை. இனியாவது அவசியம் படிப்பினை பெற்றுக் கொள்ள வேண்டும். முன் வருவோமாக.
நியாயமிலா நியாயங்கள் :
இன்னும் நாம் கூர்ந்து நோக்க வேண்டியது யாதெனில், ஆணவத்தால், அகம்பாவத்தால் சுயமே தன்னை உயர்த்தி அல்லாஹ் சிறப்பித்த முதல் மனிதர்ஆதமைக் கேவலப்படுத்தி தாழ்த்தி அதற்காக இறைக் கட்டளை ஒன்றைத் துணிந்து மீறினான் ஷைத்தான். அனைத்து அறிவுகளின் கருவூலமான அல்லாஹ்விடம் தன் தவறான வேண்டாத விளக்கங்களால் அதை நியாயப்படுத்தினான் ஷைத்தான். அநியாயத்தைத் தவறான வேண்டாத விளக்கங்களால் சப்பைக் கட்டு கட்டி நியாயப்படுத்தினான் ஷைத்தான். அதற்காக எழுந்தவைகளே ஷைத்தானின் வலிந்துரைகள், புனைத்துரைகள், பொய்யுரைகள்.. அவைகளால் அல்லாஹ்விடமே ஷைத்தான். எதிர் வழக்காடினான். அல்லாஹ்விடம் எதிர் வாதம், விதண்டாவாதம் செய்தான். எதிர்க் கேள்வியும் கேட்டான். அல்லாஹ்வின் செயலைக் குறை கூறி கடுமையாக விமர்சித்தான். அல்லாஹ் சிறப்பித்த ஆதமை வேண்டிய மட்டும் இழிவுபடுத்தினான். அல்லாஹ்விடமே எதிர்வழக்காடி அல்லாஹ்வின் கட்டளையைத் துணிந்து மீறினான்.
எனினும், அனைத்து படைப்பினங்களின் அதிபதி அல்லாஹ் அவை எதையும் ஏற்கவில்லை. அல்லாஹ்வின் கட்டளை மீறலுக்கு ஷைத்தான் கற்பித்த நியாயமிலா நியாயங்கள் எதுவும் அல்லாஹ்விடம் எடுபடவில்லை.
படிப்பினை: அல்லாஹ்வின் கட்டளைக்கு வழிப்படுவதற்கு மலக்குகளை மனித சமுதாயம் முன் உதாரணமாக்கிக் கொள்ள வேண்டும்.
எச்சரிக்கை: அல்லாஹ்வின் கட்டளையைத் துணிந்து மீறி ஆணவம் பேசி அழிந்தான் ஷைத்தான். இன்றளவும் மனித அறிஞர்கள், மார்க்க அறிஞர்கள் என்று யாரெல்லாம் எங்கெல்லாம், எப்போதெல்லாம் எப்படியெல்லாம் அல்லாஹ்வின் கட்டளை மீறலுக்குத் தவறான சுய விளக்கம் கொடுக்கிறார்ளோ, வலிந்துரை, புனைந்துரை, பொய்யுரைகளால் கவர்ச்சியூட்டுகிறார்களோ அவர்கள் அனைவரும் ஷைத்தானின் அடிச்சுவடுகளை அணு அணுவாய்ப் பின்பற்றும் ஷைத்தானின் வாரிசுகளே. இவர்கள் விரிக்கும் மயக்குமொழி வலைகளில் சிக்கிக் கொள்ளாமல் நம்மை நாம் தற்காத்துக் கொள்ள வேண்டும். (இன்ஷா அல்லாஹ் மீண்டும் சந்திப்போம். சிந்திப்போம், இஸ்லாத்தோடு ஐக்கியமாவோம்)