அபூபக்கர், பேட்டவாய்த்தலை
” எந்த மனிதனுக்கு அவனுடைய தீய செயல் அலங்காரமாக்கப்பட்டிருக்கிறதோ, மேலும் அதனை அவன் நல்லதென்று கருதிக் கொண்டிருக்கின்றானோ (அந்த மனிதனின் வழிகேட்டிற்கு எல்லையேதும் உண்டா என்ன?)
திண்ணமாக, அல்லாஹ் தான் நாடுவோரை நெறி பிறழச் செய்கின்றான். மேலும், தான் நாடுவோரை நேர்வழியில் செலுத்துகின்றான்…”. (அல்குர்ஆன்’ 35:8)
மனிதனைப் படைத்த இறைவன் மாபெரும் கொடையாளி; தான் எழுதுகோலைக் கெர்ணடு (எழுதக்) கற்றுக் கொடுத்தான்; இன்னும், அவன் வாழ வேண்டிய வாழ்க்கை நெறியையும் அவனுக்குக் கற்றுக் கொடுத்தான். மனிதனுக்கு எது நன்மையளிக்க வல்லது, எது தீங்கிழைக்கக்கூடியது என்று பிரித்தறிவித்தான்; அதுமட்டுமா….!
அவ்வாழ்க்கை நெறியின் வரம்பிற்குட்பட்டு வாழ்வது சாத்தியமே என்பதை மனிதர்களைக் கொண்டே உதாரணம் காட்டி மெய்ப்பித்தான்.
ஆயினும், மனிதன் -“இறைநெறியை” புறந்தள்ளிவிட்டு தன் மனோ இச்சைக்கு அடிமைப்பட்டவனாக வாழத் துவங்கியதால், தவறான செய்கைகளுக்கும் நியாயம் கற்பிக்கவே முற்படுகிறான்.
அல்லாஹ் ரப்புல் ஆலமீன் ஆரம்ப மனிதராகிய ஆதமை படைத்து அவரிடம் ஷைத்தானாகிய இப்லீஸை குறித்து எச்சரிக்கை செய்கின்றான்.
“ஆதமே! நிச்சயமாக இவன் உமக்கும், உம்முடைய மனைவிக்கும் பகைவனாகவான்; ஆதலால், உங்களிருவரையும் இச்சுவனபதியிலிருந்து திட்டமாக வெளியேற்ற (இடந்) தர வேண்டாம்; இன்றேல் நீர் பெரும் இன்னலுக்குள்ளாவீர்..” (என்று கூறி எச்சரித்தோம்) (அல்குர்ஆன் 20:17)
ஆனால் ஷைத்தான் அவருக்கு (ஊசலாட்டத்தையும்) குழப்பத்தையும் உண்டாக்கி: “ஆதமே! நித்திய வாழ்வளிக்கும் விருட்சத்தையும், அழிவில்லாத அரசாங்கத்தையும் உமக்கு நான் அறிவித்துத் தரவா? என்று கேட்டான். பின்னர் (இப்லீஸின் ஆசைவார்த்தைப்படி) அவ்விருவரும் அ(ம்மரத்)தினின்று புசித்தனர்; உடனே அவ்விருவரின் வெட்கத்தலங்களும் வெளியாயின; ஆகவே அவ்விருவரும் சுவர்க்கத்துச் சோலையின் இலையைக் கொண்டு அவற்றை மறைத்துக் கொளள்ளலானார்கள்; இவ்வாறு ஆதம் தம்முடைய இறைவனுக்குமாறு செய்து, அதனால் வழி பிசகி விட்டார். (அல்குர்ஆன் 20:120: 121)
இவ்வாறக – “மனித வர்க்கத்தை வழி கெடுக்கம்” ஷைத்தானைக் குறித்து இறைவன் தனது திருமறையில் பல இடங்களில் மனித சமூகத்திற்கு எச்சரிக்கை செய்கின்றான். அதில், ஒரு சிலவற்றை மட்டும் இங்கு காண்போம்.
மனிதர்களே! நிச்சயமாக அல்லாஹ்வின் வாக்குறுதி உண்மையானதாகும்; ஆகவே, இவ்வுலக வாழ்க்கை உங்களை ஒருபோதும் ஏமாற்றி விட வேண்டாம்; இன்னும் (ஷைத்தானாகிய) ஏமாற்றுபவன் உங்களை அல்லாஹ்வை விட்டும் ஏமாற்றி விட வேண்டாம். நிச்சயமாக ஷைத்தான் உங்களுக்குப் பகைவனாக இருக்கின்றான். ஆகவே, நீங்களும் அவனைக் பகைவனாகவே எடுத்துக் கொள்ளுங்கள். அவன், (தன்னைப் பின் பற்றும்) தன் கூட்டத்தாரை அழைப்பதெல்லாம் அவர்கள் கொழுந்து விட்டெரியும் (நரக) நெருப்புக்கு உரியவர்களாய் இருப்பதற்காகவேதான். (அல்குர்ஆன் 35:5,6)
ஈமான் கொண்டவர்களே! ஷைத்தானுடைய அடிச்சுவடுகளை நீங்கள் பின்பற்றாதீர்கள்; இன்னும் எவன் ஷைத்தானுடைய அடிச்சுவடுகளைப் பின்பற்றுகிறானோ அவனை, ஷைத்தான் மானக்கேடானவற்றையும், வெறுக்கத்தக்கவற்றையும், (செய்ய) நிச்சயமாக ஏவுவான்;……. (அல்குர்ஆன் 24:21)
விசுவாசிகளே! நீங்கள் தீனுல் இஸ்லாத்தில் முழுமையாக நுழைந்து விடுங்கள். தவிர, (இதனைத் தடை செய்யும்) ஷைத்தானுடைய அடிச்சுவடுகளை நீங்கள் பின்பற்றாதீர்கள்; நிச்சயமாக அவன் உங்களுக்கு பகிரங்கமான விரோதியாவான். (அல்குர்ஆன் 2:208)
மனித வர்க்கத்தின் மீது ஷைத்தான் இவ்வளவு “பகைமை” பாராட்ட காரணம் என்னவென்று திருகுர்ஆனின் ஒளியில் சிறிது காண்போம்:
இறைவன் மலக்குகளிடம்: “ஓசை தரும் கருப்பான களிமண்ணிலிருந்து, மனிதனை நிச்சயமாக நான் படைக்கப் போகிறேன்” என்றும், அவரை நான் செவ்வையாக உருவாக்கி, அவரில் என் ஆவியிலிருந்து ஊதியதும், ‘ அவருக்கு சிரம் பணியுங்கள்’ என்றும் கூறினான்.
அவ்வாறே மலக்குகள் யாவரும் சிரம் பணிந்தார்கள் இப்லீஸைத் தவிர. அவன் சிரம் பணியாது விலகிக் கொண்டான்.
“இப்லீஸே! சிரம் பணிந்தவர்களுடன் நீயும் சேராமல் (விலகி) இருந்தமைக்கு காரணம் என்ன?” என்று (இறைவன்) கேட்டான். அதற்கு இப்லீஸ் “ஓசை தரும் கருப்பான களிமண்ணிலிருந்து, நீ படைத்துள்ள (ஒரு) மனிதனுக்கு நான் சிரம் பணிவதற்கில்லை!” என்ற கூறினான். “அவ்வாறாயின், நீ இங்கிருந்து வெளியேறிவிடு; நிச்சயமாக நீ விரட்டப்பட்டடவனாக இருக்கிறாய்.”
நீ பெருமை கொள்வதற்கு இங்கு இடமில்லை; நிச்சயமாக நீ சிறுமை அடைந்தோரில் ஒருவனாகி விட்டாய்.
“மேலும், நிச்சயமாக நியாயத் தீர்ப்பு நாள் வரை உன் மீது சாபம் உண்டாவதாக!” என்று (இறைவன்) கூறினான். (அதற்கு)இப்லீஸ் ”என்னுடைய இறைவனே! இறந்தவர்கள் எழுப்பப்படும் நாள் வரை எனக்கு அவகாசம் கொடுப்பாயாக!” என்று கேட்டான்.
“நிச்சயமாக, நீஅவசாகம் அளிக்கப்பட்டோரில் ஒருவனாவாய்,”
“குறிப்பிட்ட நேரத்தின் நாள் வரும வரையில்” – என்று அல்லாஹ் கூறினான். (அதற்கு இப்லீஸ்,) “என் இறைவனே! என்னை நீ வழிகேட்டில் விட்டு விட்டதால்; நான் இவ்வுலகில் (வழி கேட்டை தரும் அனைத்தையும்) அவர்களுக்கு “அழகாகத் தோன்றும் படி ” செய்து(அதன் மூலமாக) அவர்கள் அனைவரையும் வழி கெடுத்து விடுவேன்”. இன்னும், அவர்கள் அனைவரையும் வழி கெடுத்து விடுவேன்”. இன்னும், அவர்கள் உன்னுடைய நேரான பாதையில் (செல்லாது தடுப்பதற்காக அவ்வழியில்) உட்கார்ந்து கொள்வேன்.
“பின் நிச்சயமாக நான் அவர்கள் முன்னும், அவர்கள் பின்னும், அவர்கள் வலப்பக்கத்திலும், அவர்கள் இடப்பக்கத்திலும் வந்து (அவர்களை வழி கெடுத்துக்) கொண்டிருப்பேன்; ஆதலால் நீ அவர்களில் பெரும்பாலோரை (உனக்கு) நன்றி செலுத்துவோர்களகாக் காணமாட்டாய்” (ஆயினும்) ” அவர்களில் அந்தரங்க சுத்தியுள்ள (உன்னருள் பெற்ற) உன் நல்லடியார்களைத் தவிர” என்று கூறினான்.
(அதற்கு இறைவன்) “நிச்சயமாக என் அடியார்கள் மீது உனக்கு எவ்வித அதிகாரமுமில்லை உன்னைப் பின்பற்றி வழிகெட்டவர்களைத் தவிர” (இன்னும்) நிச்சயமாக, (உன்னைப் பின்பற்றும்) அனைவருக்கும் நரகமே வாக்களிக்கப்பட்ட இடமாகும். அதற்கு ஏழு வாசல்கள் உண்டு; அவ்வாசல்களில் ஒவ்வொன்றும் பங்கிடப்பட்ட (தனித்தனிப்) பிரிவினருக்குரியதாகும் என்று (இறைவன்) கூறினான். (அல்குர்ஆன் 15:28-44, 7:11018)
மேற்கானும் உரையாடலை மீண்டும் ஒருமுறை பார்வையிடுங்கள். முதலாவதாக: இறைவன் (ஆரம்ப மனிதராகிய) ஆதமைப்படைத்து அவருக்கு சிரம் பணிய கட்டளையிடுகின்றான். ஆனால் இப்லீஸ், அவருக்கு சிரம்பணிய மறுத்து இறை ‘சாபத்திற்காளாகிறான்.’
2வதாக : இறந்தவர்களை எழுப்பப்படும் நாள் வரை அவகாசம் கேட்டு அதனை (இறைவனிடமிருந்து) பெறுகின்றான்.
3வதாக : (இப்லீஸ்) தான் வழிகேட்டில் விடப்பட்டுவிட்டதால் (அதற்கு காரணமான மனிதனை) தான் இவ்வுலகில் (வழிகேட்டைத் தரும் அனைத்தையும்) அவர்களுக்கு அழகாகத் தோன்றும்படி செய்து (அதன் மூலமாக) அவர்களனைவரையும் வழிகெடுத்து விடுவதாக இறைவனிடமே சபதம் செய்கினறான்.
இவ்வாறானதொரு சூழ்நிலையில் ஷைத்தானின் தாக்குதலிலிருந்து மீள்வதற்கான வழியை இறைவேதம் பின்வருமாறு எடுத்துரைக்கிறது.
“ஷைத்தான் ஏதாவதொரு (தவறான) எண்ணத்தை உம் மனத்தில் ஊசலாடச் செய்து (தவறு செய்ய உம்மைத்) தூண்டினால், அப்போது அல்லாஹ்விடம் பாதுகாப்புத் தேடுவீராக! மெய்யாகவே அவன் செவியேற்பவனாகவும், (யாவற்றையும் நன்கு அறிபவனாகவும் இருக்கின்றான்.”
நிச்சயமாக எவர்கள் (அல்லாஹ்வுக்கு) அஞ்சுகிறார்களோ, அவர்களுக்குள் ஷைத்தானிலிருந்து தவறான எண்ணம் ஊசலாடினால், அவர்கள் (அல்லாஹ்வை) நினைக்கின்றார்கள். அவர்கள் திடிரென விழிப்படைந்து (ஷைத்தானின் சூழ்ச்சியைக்) காண்கிறார்கள்…. (அல்குர்ஆன் 7:200, 201)
இதுவரை எடுத்து எழுதப்பட்ட வசனங்கள் மூலமாக ஷைத்தானைக் குறித்து ஓரளவு விளங்கியிருப்போம். இனி,
ஒரு மனிதன் இஸ்லாத்தை முழுமையகா முறையாகப் பேணி வாழ எத்தனிக்கையில் அனைத்து செய்கைகளையும் சிந்தித்து சீர்தூக்கிப் பார்த்து செயலாற்ற வேண்டியுள்ளது. இல்லையேல் – மனித விரோதியான ஷைத்தான் நிச்சயமாக வழி கெடுத்து விடுவான். பொதுவாக மனிதன் சிந்தனை சக்தி நிறைந்தவன், சிந்திக்க கூடியவன்; ஆயினும், அனைவரும் சிந்தித்துதான் செயல்படுகிறார்கள் என்று கூற இயலாது. இங்கே ஒரு விஷயத்தை நாம் நன்றாக மனதில் நிறுத்த வேண்டும். அதாவது: ஒவ்வொரு செய்கைகளையும் சிந்தித்து செயலாற்றுகையில் அது தீமைகளுடன் (ஷைத்தானுடன்) கடுமையாகப் போராடும் வாழ்வாகவே அமையும்; எனினும் அவ்வாறு வாழ முயற்சித்து வெற்றி காணும் வாழ்க்கையில் தான் இம்மை, மறுமை மேன்மை கிட்டும்; மேலும் சமூகப்பண்பாட்டை வளப்பதாலும் பிறர் நலனில் அக்கறை கொள்வதிலும் ஒரு பற்றுதலை ஏற்படுத்தும்.
இனி பீடி, சிசரெட், புகையிலை, பான்மசாலா ( பான் பராக்….etc) ரகங்களை கீழ்வரும் தலைப்புகளில் இஸ்லாத்தின் பார்வையில் சீர்தூக்கிப் பார்ப்போம்:-
1. உடல நலம், 2. பெருமை, 3. பொய்யுரைத்தலை், 4. அமானிதம், 5. பிறருக்கு தீங்கிழைத்தல் , 6. வீண்’ விரயம், 7. வியாபாரம், 8. அழகிய சொல்.
1.உடல் நலம்:
சிகரெட் பாக்கெட்டின் அட்டையில் அரசு ஓர் சட்டபூர்வமான எச்சரிக்கை விடுகின்றது.
“GIGARATTE SMOKING IS INJURIOUS TO HEALTH” சிகரெட் புகைத்தல் உடல் நலத்திற்கு தீங்கானது.”
உடல் நலத்திற்கு பாதகம் விளைவிக்கக்கூடிய உணவுகளிலிருந்தும், செயல்களிலிருந்தும் தவிர்ந்து நடக்க வேண்டியதை வலியுறுத்தும் விதமாக பின் வரும் இறை வசனங்கள் அமைந்திருப்பதை காணலாம்.
“நல்ல பொருள்களிலிருந்தே நீங்கள் உண்ணுங்கள்; நல்ல அமல்களைச் செய்யுங்கள்”…
(அல்குர்ஆன் 2:168, 172, 23:51, 5:88)
“(மேலும்) உங்களை நீங்களே ஆபத்திற்குள்ளாக்கிக் கொள்ளாதீர்கள்”… (அல்குர்ஆன் 2:195)
இவ்வாறு எடுத்துரைத்த போதும், அதனை ஏற்க மறுத்து மீண்டும் தவறான செய்கைகளைத் தொடர்ந்து செய்பவர்களைப் பற்றி இறை வசனம் ஒன்று இவ்வாறு இடித்துரைக்கிறது.
“நிச்சயமாக நாம் ஜின்களிலிருந்தும், மனிதர்களிலிருந்தும் அநேகரை நரகத்திற்கென்றே படைத்துள்ளோம். அவர்களுக்கு இருதயங்கள் இருக்கின்றன. ஆனால் அவற்றைக் கொண்டு அவர்கள் (இறைவனின் அத்தாட்சிகளைப்) பார்க்க மாட்டர்கள்; அவர்களுக்குக் காதுகள் உண்டு; ஆனால் அவற்றைக் கொண்டு அவர்கள் (நற்போதனைகளைக்) கேட்க மாட்டார்கள். இத்தகையோர் கால்நடைகளை போன்றவர்கள். இல்லை! அவற்றை விடவும் கேடு கெட்டவர்கள். இவர்கள்தாம் (நம் வசனங்களை) அலட்சியம் செய்்தவர்கள்.” (அல்குர்ஆன் 7:179)
மனித உடம்பில், ‘ஜீன்கள்’ எனப்படும் வம்சாவழி மரபு செல்கள் 50,000க்கும் அதிகமாக உள்ளன. இவை தான் தமது உடம்பின் ஒவ்வொரு அமைப்பையும் (நோய் எதிர்ப்புத் திறன் உட்பட) தீர்மானிக்கின்றன. இவற்றில் நூற்றக்கும் அதிகமான ஜின்களின் செயல்கள் மாறுபடும் போதுதான் அது புற்றுநோயாக (கேன்சராக) உருவெடுக்கிறது. பிறகு தன்னிச்சையாக செயல்பட்டு வெகுவேகமாகப் பரவும். இவை காரிஸீனோஜீன்கள் (Caricinogens) எனப்படுகின்றன.
புகையிலையில் உள்ள ஒருவகை நச்சசுப் பொருள்தான் இந்த காரிஸீனோஜீன்களை தூண்டி விடுகின்றன. பல வருட ஆராய்ச்சிக்குப் பிறகு புற்று நோய் வருவதற்கான முக்கிய காரணங்களை மருத்துவர்கள் பட்டியலிட்டிருக்கிறார்கள். அவற்றில் புகையிலையும் முக்கிய பங்கு வகிக்கிறது.
புற்று நோயால் பாதிக்கப்படுபவர்களில் 30% சதவிகிதத்தினர் புகைபிடிப்பவரும் 44% சதவிகிதத்தினர் மது அருந்திக் கொண்டு புகைப்பிடிப்பவர்களும் அடங்குவர்.
புகைப்பழக்கம், மூக்குப் பொடி, புகையிலை போடுதல், மது அருந்துதல், பான்பராக் உபயோகித்தல் ஆகிய தீய பழக்கங்களினால் உடல் நலம் பாதிக்கப்படுகையில் உடலின் முக்கிய உறுப்புகளான சிறுநீரகம், நுரையீரல், இருதயம், தொண்டை ஆகிய பகுதிகள் பாதிக்கப்படுவதுடன்; ஆஸ்த்தமா, நரம்புத் தளர்ச்சி, சிறு குடல் வீக்கம், மூளை வரட்சி உள்ளிட்ட பல நோய்களுக்கும் காரணமாகிறது.
ஓர் உதாரணம்: 2 அவுன்ஸ் நீரில் ஒரு சிகரெட்டை ஊறவைத்து “அந்த நீரை” ஒரு நாயின் உடலுக்குள் ஊசி மூலம் செலுத்தினால் சற்று நேரத்தில் அந்த நாய் இறந்து விடும் என்கின்ற அளவிற்கு சிகரெட்டில் நச்சுத்தன்மை அமைந்திருப்பதாக மருத்துவ ஆராய்ச்சியாளர்கள் கூறுகிறார்கள்.
மேற்கண்ட தவறான பழக்க வழக்கத்தால், குறைவாகவோ, அதிகமாகவோ பாதிக்கப்பட்டவர்களை; அவர்களது சுற்றத்தாரோ அல்லது மருத்துவரோ மேற்படி தீய பழக்கத்தை விட்டுவிடும்படி ஆலோசனை கூறிய போதும் அதனை விட்டு மீள்பவர்கள் வெகு சொற்பமே!
இறைவசனம்: ” நம்மிடமிருந்து வேதனை வந்த போது அவர்கள் பணிந்திருக்க வேண்டாமா? அதற்கு மாறாக அவர்களுடைய இருதயங்கள் இறுகிவிட்டன; அவர்கள் செய்து கொண்டிருந்ததையே, ஷைத்தான் அவர்களுக்கு அழகாகக் காட்டி விட்டான்.” (அல்குர்ஆன் 6:43)
2.பெருமை:
பெருமையடித்தல் ஷைத்தானின் குணம் என்பதாக குர்ஆன் (7:13) கூறுகிறது.
இறைவனை – இறை வசனங்களை – இறை “கட்டளைகளை” புறக்கணிப்பவர்களை மறுமையில் (நரக) நெருப்பின் முன் கொண்டு வரப்படும். (அப்போது இறைவன் கூறுவான்)
“உங்களின் உலக வாழ்க்கையின் போது உங்களுக்குக் கிடைத்திருந்த மணமான பொருட்களையெல்லாம், வீண் செலவு செய்து, (உலக) இன்பம் தேடினீர்கள்,” ஆகவே நீங்கள் பூமியில் அநியாயமாகப் பெருமையடித்துக் கொண்டு, வரம்பு மீறி (வாழ்ந்து) கொண்டும் இருந்த காரணத்தால், இழிவு தரும் வேதனையை இன்று நீங்கள் கூலியாகக் கொடுக்கப்படுகிறீர்கள்.” (அல்குர்ஆன் 46:20)
‘பெரிய மனிதர்கள் என்று மக்களால் கருதப்படுபவர்களில் பலருக்கு இந்த புகைப் பழக்கம் ஒரு ‘பெருமை’யான பந்தாவான – செயலாகவே உள்ளது.
நபி(ஸல்) அவர்கள்:
“யார் மனதில் அணுவளவு பெருமை இருந்ததோ அவர் சுவனம் புக மாட்டார்” என்று கூறியதாக அபூஹுரைரா(ரழி) அறிவிக்கக் கூடிய ஹதீஸ் முஸ்லிம் நூலில் இடம் பெற்றுள்ளது. மேலும்,
“நிச்சயமாக அல்லாஹ் கர்வமுடையோராக, வீண் பெருமை உடையோராக இருப்பவர்களை நேசிப்பதில்லை.” (அல்குர்ஆன் 4:36)
“அகப்ெபருமைக்காரர், ஆணவங் கொண்டோர் எவரையும் நிச்சயமாக அல்லாஹ் நேசிப்பதில்லை.” (அல்குர்ஆன் 31:18)
என்று பெருமை தெளிவாகவே எச்சரிக்கப்பட்டடுள்ளது.
பெரும்பாலோரிடம் ‘புகைப்பழக்கம்’ எந்த பருவத்தில் எந்த நோக்கத்தில், எப்படி – ஆரம்பமாகிறது என்று ஆராய்கையில் –
பருவம்: Teenage (என்று சொல்லக்கூடிய 13 to 19குட்பட்ட) வயதில் தான் பெரும்பாலோரிடம் இப்பழக்கம் ஆரம்பமாகிறது.
நோக்கம்: வெட்டிக் கும்பல் என அழைக்கப்படுகின்ற ஊர் சுற்றும் சோம்பேறிகளிடம் ‘பொழுது போக்காகவும்; மாணவப் பருவத்தினருக்கு ‘ஜாலி’யாகவும்; ரெளடிகளிடம் “பந்தா’வாகவும், ஏனையோருக்கு அலங்காரமான, “பெருமையான” செயலாகவுமே இப்புகைப் பழக்கம் திகழ்கிறது என்றால் அது மிகையில்லை.
காரணம்: இவர்களிடையே இப்பழக்கம் உருவாக காரணம் பெரும்பாலும், சக தோழர்களும், அஃதன்றி பெற்றோர், ஆசிரியர், முதலாளி ஆகியவர்களுமே எனலாம்.
இந்த (டீன் ஏஜ்) வயதை ‘இள இரத்தம்” ‘இளங்கன்று பயமறியாது’ என்றெல்லாம் கூறுவார்கள். இவ்வயதில் சிந்திக்கும் திறன் இருந்தும் – புகைப்பது தவறு என்று உணர்ந்தாலும் மன இச்சையினால ‘தவறை’ – யாரும் பொருட்படுத்துவதில்லை. மேலும் நம் தகப்பனாரே குடிக்கிறார். நாம் குடித்தாலென்ன, நமது ஆசிரியர் அல்லது முதலாளி சிகரெட் பிடிப்பதைப் போன்று நாமும் பிடிக்க வேண்டும் ன்று மனதில் நினைத்து திரை மறைவில் இப்பழக்கம் உருவாகி பின்பு வெளிச்சத்திற்கு வந்து பிறகு நிறுத்த முடியாமல் ‘நிலைத்து விடுகிறது.’
3.பொய்யுரைத்தல்:
பொடி போடுபவர்கள், புகைப்பிடிப்பவர்கள், புகையிலை போடுபவர்கள், மது அருந்துபவர்கள் ஆகியோரிடம் மேற்படி செயல்களை விட்டு விடும்படி அல்லது விடுவதற்கான முயற்சியை மேற்கொள்ளும்படி அறிவுருத்தப்பட்டால்; அறிவுறுத்துவோர், தங்கள் பெற்றோராயினும், அல்லது மனைவியாயினும், அல்லது தங்கள் மேலதிகாரியாயினும் அல்லது தோழர்களாயினும் ஆக யாராக இருந்தாலும் அவர்களிடம் இவர்கள் முயற்சிப்பதாகவோ அல்லது விட்டு விடுகிறேன் என்பதற்காவோ மிக சர்வ சாதாரணமாக வாக்குத்தருவார்கள். ஆயினும் தங்கள் பழக்கங்களை விட்டொழிக்க மாட்டார்கள். (ஒரு சிலரைத் தவிர), மேலும், மற்றவர்கள் அறியா வண்ணம் தங்கள் பழக்கத்தை தொடந்தே வருவார்கள். (சிலர் பகிரங்கமாகவே)
அல்லாஹ் கூறுகின்றான்:
“வாக்குறுதி செய்தி விட்டு மாறு செய்யாதீர்கள்.” (அல்குர்ஆன் 17:34) மேலும், “பொய் சொல்பவர்கள் அழிந்தே போவார்கள். அவர்கள் எத்தகையோரென்றால் மடமையினால் மறதியில் இருக்கிறார்கள்.” (அல்குர்ஆன் 51:10,11)
இன்னும் நபி(ஸல்) அவர்கள் கூறுகிறார்கள்:
“நான்கு விஷயங்கள் யாரிடம் இருந்ததோ அவர் கலப்பற்ற நயவஞ்சகராகிவிட்டார். அவற்றில் ஏதாவது ஒன்று யாரிடம் இருக்குமோ, அவர் அதை விட்டு விடும் வரையில் நயவஞ்சகத்தின் ஒரு பகுதி அவரிடம் இருக்கும்.”
1.”அவர் பேசினால் பொய்யுரைப்பார். 2. ஒப்பந்தம் செய்தால் மோசடி செய்வார். 3. வாக்குறுதி கொடுத்தால் மீறி விடுவார். 4.தர்க்கம் செய்தால் உண்மையை மறைக்க முற்படுவார்” (அறிவிப்பவர்: அப்துல்லாஹ் இப்னு உமர்(ரழி) நூல்: புகாரீ, முஸ்லிம்
“ஒரு விசுவாசி கோழையாக இருப்பானா? என்று நபி(ஸல்) அவர்களிடத்தில் கேட்கப்பட்டது; அவர்கள் ஆம்!” என்றார்கள். பிறகு, கருமியாக இருக்க முடியுமா? என்று கேட்கப்பட்டது. ‘ஆம்’ என்றனர். பிறகு “பொய்யனாக இருக்க முடியுமா? என்று கேட்கப்பட்டதற்கு இல்லை என்று பதில் சொன்னார்கள்.” (அறிவிப்பாளர் : சஃப்வான் பின் ஸுலைம்(ரழி),நூல்: பைஹகீ
பொய்யுரைப்பவன் விசுவாசியாக இருக்க முடியாது என்பதை இந்த ஹதீதுகள் மூலம் அறியலாம்.
4.அமானிதம் :
மனிதனுக்கு இயற்கையாக அமைந்திருக்கும் உடல் அங்கங்களும் பிறகு கிடைக்கக் கூடிய செல்வங்களும் இறைவனால், அவனுக்கு அருட் கொடையாக வழங்கப்பட்ட அமானிதப் பொருட்களாகும்.
அவற்றை இறை நெறிக்குட்பட்டே பயன்படுத்திட வேண்டும். ஏனெனில், உடல் அங்கங்களை எம்முறையில் செலவழித்தோம் என்பது பற்றி நிச்சயமாக கேள்வி கணக்கு கேட்கப்படும்.
இன்னும், விசுவாசிகளின் தன்மைகளைப் பற்றி இறை’மறை’ கூறுகையில்;
அவர்கள்…., வீணான (பேச்சு, செயல் ஆகிய)வற்றை விட்டு விலகியிருப்பார்கள். இன்னும், அவர்கள் தங்கள் (இடம் ஒப்படைக்கப்பட்ட) அமானிதப் பொருட்களையும், தங்கள் வாக்குறுதிகளையும் காப்பாற்றுவார்கள்….., என்தகா எடுத்தியம்புகிறது. (அல்குர்ஆன் 23:3,8)
மேலும், (நபியே! ஒரு நாளை நீர் அவர்களுக்கு ஞாபகமுட்டும்:) அந்நாளில் அவர்களுடைய நாவுகளும் அவர்களுடைய கைகளும் அவர்களுடைய கால்களும் அவர்களுக்கு விரோதமாக, அவர்கள் செய்தவைகளைப் பற்றிச் சாட்சியம் கூறும்.(என்றும்) (அல்குர்ஆன் 8:27)
ஒவ்வொரு மனிதனுக்குமுள்ள பொறுப்புகளைப் பற்றி நபி(ஸல்) இவ்வாறு கூறுகிறார்கள்:
“நீங்கள் ஒவ்வொருவரும் கண்காணிப்பாளராகவும் அது குறித்து அல்லாஹ்விடம் பதில் சொல்லக் கடமைப்பட்டவராகவும் இருக்கிறீர்கள்! ஆட்சித் தலைவர் கண்காணிப்பாளராக இருக்கிறார். (மறுமை நாளில்) அவருடைய குடி மக்கள் விஷயத்தில் அவரிடம் கேள்வி கணக்கு கேட்கப்படும். (மது அவர்களை ‘குடி’ மக்களாக ஆக்கியது பற்றி; விபச்சார விடுதி, ஆபாச சினிமா ஆகியவற்றை அனுமதிப்பது கொண்டு விபச்சாரகர்கள் பெறுகியது பற்றி; லாட்டரி,சூதாட்ட கிளப், (குதிரை) ரேஸ் போன்றவற்றின் மூலம் சூதாடி ‘மக்களை’ உருவாக்கியது பற்றி, இறைவனால் போதிக்கப்டாத பிரிவுக் பெயர்களைக் குறித்து பதில் சொல்லக் கடமைப்பட்டவரா இருக்கிறார். ஒவ்வொரு மனிதரும் அவரவருடைய மனைவி மக்களை நிர்வகிகப்பவராகவும், பதில் சொல்லக் கடமைப் பட்டவராகவும் இருக்கிறார். மனைவி, அவளது கணவரின் வீட்டைக் கண்காணிப்பவளாகவும் (வீட்டு நிர்வாகம் சம்பந்தமாக) பதில் சொல்லக் கடமைப்பட்டவளாகவும் இருக்கிறாள். ஓர் ஊழியர் அவருடைய எஜமானரின் பொருளைக் கண்காணிப்பவராகவும் (அல்லாஹ்விடத்தில் அதுபற்றிக்) கணக்கு கொடுக்க வேண்டிய பொறுப்புடையவராகவும் இருக்கிறார். எச்சரிக்கையாக இருங்கள்! நீங்கள் ஒவ்வொருவரும் பொறுப்பாளராகவும் பதில் சொல்லக் கடமைப்பட்டவராகவும் இருக்கிறீர்கள். (அறிவிப்பவர்: இப்னு உமர்(ரழி) நூல்: புகாரி.
5. பிறருக்கு தீங்கிழைத்தல்:
“ஒரு மனிதர் அல்லாஹ்வின் தூதரிடம் முஸ்லிம்களில் மிகச் சிறந்தவர் யார்? எனக் கேட்டார். அதற்கு பிற முஸ்லிம்கள் எவரது நாவு, கரம் ஆகியவற்றின் தீமையிலிருந்து பாதுகாப்பு பெற்றார்களோ, அவர்தான் (சிறந்த) முஸ்லிம் எனக் கூறினார்கள். (அறிவிப்பவர்:அப்துல்லாஹ் இப்ன அம்ரு, இப்னு அல் ஆஸ்(ரழி), நூல்: முஸ்லிம்)
பீடி, சிகரெட் போன்ற புகைப் பழக்கமுள்ள வர்களின் வாயிலிருந்து கிளம்பும் நாற்றம் எல்லோரையும் வெறுப்படையச் செய்கிறது. அது பிறருக்கு பெரும் தொல்லையைத் தருவதுடன் தொழுகையின் போது பக்கத்திலிருப்பவருக்கு பெரும் கஷ்டத்தை உண்டாக்குகிறது. மூக்கு பொடி உபயோகமும் இப்படித்தான். அதன் கழிவுகள் பள்ளிவாயிலின் பாய்களிலும், விரிப்பிலும் படிந்து தொழுகிறவர்களுக்கு இடையூறை ஏற்படுத்துகின்றது.
உமர் இப்னு கத்தாப்(ரழி) அவர்கள் நிகழ்த்திய ஜும்ஆ பிரசங்கித்தல்:
ஜனங்களே! நிச்சயமாக நீங்கள் இரு செடிகளை உண்ணுகின்றீர்கள். அவ்விரண்டையும் கெட்டதாகவே தவிர நான் காணவில்லை. (அது) இந்த வெங்காயமும், பூண்டும்தான் எனக் கூறினார்கள். நிச்சயமாக நான்; “அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள், பள்ளியில்(எந்த) மனிதரிடத்திலாவது இவ்விரண்டின் வாடகையை கண்டு விட்டால், அவரை வெளியேற்ற கட்டளையிடுவதை கண்டேன்” அவ்விரண்டையும் யாரேனும் உண்டால் முதலில் சமைத்து அதன் நாற்றத்தை நீக்கவும் என்றனர். அறிவிப்பவர் : ஜாபிர்(ரழி), நூல்: புகாரீ, முஸ்லிம்.
புகைப் பழக்கத்தால் உண்டாகும் துர்நாற்றம் பூண்டு, வெங்காயம் ஆகியவற்றின் நாற்றத்தை விட அருவெருக்கத்தக்கது ஆகும். மேலும் சிறிது நேரமே வாடை இருக்கக் கூடிய பச்சை வெங்காத்தையும் பூண்டையும் சாப்பிட்டு விட்டு பள்ளிக்கு வரக்கூடாது என்று தடுக்கப்பட்டுள்ளது என்றால் நிரந்நதரமாக இருக்கக்கூடிய இந்நாற்றத்தின் நிலை என்ன?
6,7 வீண் விரயம் ரூ வியாபாரம் :
….வீண் விரயம் செய்யாதீர்கள். நிச்சயமாக – அல்லாஹ். வீண் விரயம் செய்பவர்களை நேசிப்பதில்லை. (அல்குர்ஆன் 6:141)
“நிச்சயமாக வீண் விரயஞ்செய்பவர்கள் ஷைத்தானின் – சகோதரர்களாவார்கள்” (அல்குர்ஆனே் 17:27)
“எவனொருவன் அர்ரஹ்மானின் நல்லுபதேசத்தை விட்டும் கண்ணை மூடிக்கொள்வானோ – அவனுக்கு, நாம் ஒரு ஷைத்தானை ஏற்படுத்தி விடுகிறோம்; அவன் இவனது நெருங்கிய நண்பனாகி விடுகின்றனர்.” (அல்குர்ஆன் 43:36)
எவன் – அவனை (ஷைத்தானை)ச் சிநேகிதனாக எடுத்துக் கொள்கிறானோ, அவனை அவன் நிச்சயமாக வழிகெடுத்துக் கொடிய வேதனையின் பால் செலுத்திவிடுவான் என்று விதிக்கப்பட்டு விட்டது. (அல்குர்ஆன் 22:4)
மனிதன் தன் நண்பனின் மார்க்கத்தைக் கடைப்பிடிப்பவனாக இருக்கிறான். எனவே உங்களில் எவர், எவரை நண்பர்களாக ஆக்கிக் கொள்கின்றீர்கள் என்பதை கவனிக்கவும். (நபி மொழி) அறிவிப்பவர்: அபூஹுரைரா(ரழி), நூல்: அபூதாவூத், திர்மிதி.
‘இறைவன் – உங்களுக்கு வழங்கிய அருட்கொடைகளில் உங்கள் தேவை போக உபரியானவற்றை வீணே அழித்து விடாமல்:
“பந்துக்களுக்கும், ஏழைகளுக்கும், வழிப்போக்கர்களுக்கும் அவர்களுடைய பாத்தியதைகளகை கொடுத்து வரவும்.” (செல்வத்தை) அளவு கடந்து வீண் செல்வு செய்ய வேண்டாம் என் குர்ஆனில் எச்சரிக்கின்றான். (அல்குர்ஆன் 17:26)
வியாபார ரீதியில் வீண் விரையம்:
25 பீடிகள் கொண்ட கட்டின் விலை ரூ. 2முதல் 3.ரூ.வரையும் 10 சிகரெட் கொண்ட பாக்கெட் ஒன்றின் விலை ரூ.1.50 முதல் ரூ.30.00 வரையும் உள்ளது. வெளிநாடுகளிலிருந்து இறக்குமதியாகும் சிகரெட் (திருச்சியில்) மட்டும் நாள் ஒன்றுக்கு ஒரு கோடி ரூபாயையும் தாண்டுவதாக ஒரு புள்ளி விபரம் கூறுகிறது.
தமிழ்நாட்டில் திருச்சி மாவட்டத்தில் மட்டும் ஒரு நாளைய சிகரெட் விற்பனை.
கோல்டுகிங், வில்ஸ் ஃபில்ட்டர்,கோல்டு பில்ட்டர், சிசர், கோல்டு ப்ளெய்ன், பெர்க்கிலி. கிளாசிக், இந்தியன் கிங்ஸ் முதலிய சிகரெட் வகைகளில் மொத்த விற்பனை சுமார் 5 கோடி ரூபாய்.
இதில், மிகப் பிரபல்யமான நிறுவனம் ஒன்று திருச்சி மாவட்டத்தில் மட்டும் வாரம் 400 மூட்டை வரை சப்ளை செய்கிறது. (சுமார் 30,000 பீடிகள் கொண்டது ஒரு மூடை). மற்றொரு கம்பெனியின் அன்றாட தயாரிப்பு மட்டும் 2 கோடி (பீடி)யைத் தாண்டுகிறது.
இன்றைய சூழ்நிலையில் வருந்தத்தக்கதொரு விஷயம் என்னவெனில் அதிகமான பீடி தயாரிப்பாளர்கள் – முஸ்லிம்களாய் இருப்பதுதான் அல்லது, முஸ்லிம்கள் என்று தங்களைக் கூறிக் கொண்டிருப்பதுதான்.மேலும், புகையிலை ரகங்களிலும் முன்னணியில் உள்ளனர்.
காரணம் யாதெனில் :
1. ஹலால்(ஆகுமானதும்) ஹராம் (தடுக்ககப்பட்டதும்) முறையாக அறிந்து கொள்ளாமை.
2. தவறெனத் தெரிந்தும் சொகுசான வாழ்க்கை வாழ பணம் சேகரிக்கும் முயற்சியில் (மனோ இச்சைக்கு அடிமைப்பட்டு) ஏற்படுத்தி கொண்ட எளிய வழி (மார்க்கம்).
3.இறையச்சம் இல்லாமை.
முறையாக பொருளீட்டுவதைக் குறித்து அநேக இறைவசனங்களும், நபிமொழியும் இருக்கவே செய்கிறது. பொருளீட்டுவதில் இறைவனுக்கு அஞ்சி நடப்பதின் அவசியத்தை பின் வரும் வசனத்தின் மூலம் காணலாம்.
செல்வத்தைப் பெருக்கும் ஆசை உங்களை (அல்லாஹ்வை) விட்டும் பராக்காக்கி விட்டது. நீங்கள் கப்ருகளைச் சந்திக்கும் வரை. அவ்வாறில்லை, விரைவில் (அதன் பலனை) நீங்கள் அறிந்து கொள்வீர்கள்.
அவ்வாறல்ல -மெய்யான அறிவைக் கொண்டு அறிந்திருப்பீர்களேயானால் (செல்வத்தைப் பெருக்கும் அவ்வாசை உங்களை திசை திருப்பியிராது).
நிச்சயமாக (அவ்வாசையால்) நீங்கள் நரகத்தைப் பார்ப்பீர்கள். பின்னும், நீங்கள் அதை உறுதியாகக் கண்ணால் பார்ப்பீர்கள்.
பின்னர் அந்நாளில் (இம்மையில் உங்களுக்கு அளிக்கப்பட்டிருந்து) அருட் கொடைகளைப் பற்றி நிச்சயமாக நீங்கள் (கேள்வி) கேட்கப்படுவீர்கள். (அல்குர்ஆன் 102:1-3,5-8)
நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள் : “மக்கள் மீது ஒரு காலம் வரும்; (அப்பொழுது) மனிதன் அக்காலத்தவரிடமிருந்து தான் அடையும் எதனையும் ஹலாலானதா அல்லது ஹராமானதா என்பதைப் பொருட்படுத்த மாட்டான்.” (அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரழி), நூல்: புகாரீ, நஸயீ)
உண்மையில் இந்த நாட்டில் -இறைவனால் தடுக்கப்பட்ட வட்டியை ‘முஸ்லிம்கள்’ – என்று தங்களை கூறிக் கொள்ளும் ஒரு சிலர் (தொழிலாக) செய்துதான் வருகிறார்கள். ஆனால் அல்லாஹ் ரப்புல் ஆலமீன். வட்டியை மட்டும் தடை செய்யாமல் இருந்திருந்தால் இன்று முஸ்லிம்களில் அநேகர் பெரும் செல்வந்தர்களாய் ஆகி இருப்பார்கள். அது போன்று மதுவை விற்கலாம் என்று இறைவன் அனுமதித்திருந்தால் பெரும்பான்மையான முஸ்லிம்கள் கோடீஸ்வரர்களாகியிருப்பார்கள். இன்னும், அது போன்று சூதாட்டம் இறைவனால் தடுக்கப்படாமல் இருந்திருந்தால் இன்று வியாபாரம் செய்யக் கூடிய அதிகமான முஸ்லிம்கள் லாட்டரி சீட்டு விற்பனை செய்து, பல சூதாட்ட கிளப்களை நடத்தி லட்சாதிபதிகளாக திகழ்வார்கள். அது போன்று விபச்சாரத்தின் பக்கம் மக்களை திசை திருப்பக் கூடிய ‘சினிமா’-க்களை இறைவன் தடை செய்யவில்லையெனில் நிறைய பட அதிபர்களும், ஸ்டார் ஹோட்டல் உரிமையாளர்களும், அதன் வழியாய் குபேரர்களாகவும் முஸ்லிம்களே முன்னணியில் இருப்பார்கள். ஆயினும் இவையாவும் இவ்வுலக வாழ்க்கையின் அற்ப இன்பங்களே!…. மேற்சொன்ன யாவும் இறைவனால் தடை செய்யப்பட்டதாலேயே நாட்டில் உண்மையான முஸ்லிம்கள் பெரும்பாலும் ஏழ்மையாகவும், நடுத்தரமான வாழ்வும் வாழ்ந்து வருகிறார்கள்.
வல்ல ரஹ்மான் நம் சமுதாய மக்கள் அனைவரையும் தவறான – இழிவான தொழில்களை விட்டும், வீண் விரயங்களும் துணை போவதை விட்டும் மாற்றி வேறு பல, நல்ல பலனுள்ள தொழில்களுக்கு அதிபர்களாக்கி வைப்பானாக! ஆமீன்! ஆமீன்!
8.அழகிய செயல்…!
மனித வாழ்க்கையின் பயணம் இப்படித் தொடங்குகிறது. முதலில் குழந்தைப்பருவம். பிறகு மாணவப் பருவம். அதன் பின் வாலிபம். கடைசியில் முதுமை.
குழந்தைகளுக்கு யாரும் இத்தகைய பழக்கத்தை கற்றுத் தருவதில்லை. மேலும் சிறு வயதில் யாருக்கும் இத்தகைய (புகை) பழக்கம் இருக்கவும் முடியாது. மாணவப் பருவத்தையும், வாலிபத்தையும் கடந்து முதுமையடைந்து விட்டவர்களிடம் (ஏற்கனவே இருந்தாலேயொழிய) புதிதாக இப்பழக்கம் உருவாவது மிகமிக அபூர்வம். எனவே இப்பழக்கம் ஒரு மனிதனிடம் உருவாகக்கூடிய கால கட்டமாக மாணவப் பருவத்தையோ அல்லது வாலிபப் பருவத்தையோ தான் கருத முடியும். ஒரு (நல்ல) மாணவரின் தந்தையிடம் ஆசிரியர் கூறுகிறார்: பையனை கொஞ்சம் கண்டித்து வையுங்கள் சேர்க்கைகள் சரியில்லை, கூடாத சகவாசத்தால் தவறான பழக்கங்களெல்லாம்….என்று.
ஒரு மாணவனிடம் இத்தகைய பழக்கம் காணப்படின் ஆசிரியரும் பெற்றோரும் அவனைக் கண்டிக்கவே செய்வார்கள். இதுவே நடைமுறை. கண்டிக்கத்தக்கதொரு செயல். அழகிய செயலா? அருவருக்கத்தக்க செயலா?
அன்றாடம் உத்யோகம் முடிந்து இல்லம் திரும்பும் யாரும் மனைவி மக்களுக்கு வாங்கிக் செல்லக் கூடிய (திண்பண்ட) பொருட்களில் காரம், பிஸ்கட், மிட்டாய், கேக் வகைகளைப் போன்று சிகரெட், பீடி வகைகளை வாங்கிச் செல்ல முன் வருவார்களா? ஒருக்காலும் முன்வர மாட்டார்கள். காரணம் அதன் தீமையை உணர்ந்திருப்பது தான். (மாறாக அது, தீமை இல்லை எனக் கூறுபவர்கள் தன் இல்லத்தாருக்கு தலைக்கு இரண்டு என்று வாங்கி தர முன் வருவார்களா?….
ஒரு மாணவன் தன் ஆசிரியரின் முன்போ அல்லது ஒரு தொண்டன் தன் தலைவரின் முன்போ அல்லது ஒரு மகன் தன் தந்தையின் முன்போ (சாதாரணமாக) உண்ணுவதையும் – பருகுவதையும் யாரும் தவறாகக் கருதமாட்டார்கள். ஆயினும் அவர்களின் முன்ப புகை பிடித்தலை நிச்சயமாக தவறாகவே கருதுவார்கள். காரணம் என்ன….!?
இது ஒரு முறைகேடான கண்ணியக் குறைவான செயல் என்பதனால் தானே! அது மட்டுமன்று. இன்னும், “பார் அவனுக்கு எவ்வளவு திமிர்….!” யார் முன்னால் எப்படி நடந்து கொள்கின்றான்!”
“ரொம்ப கொழுப்பு…..” “வேறொன்றுமில்லை. எல்லாம் பணத்திமிர்….” என்றெல்லாம்….’ஏசுவதை” சாதாரணமாகவே நாம் கேட்கலாம்….
ஆக இவ்வாறெல்லாம் உள்ள புகைப் பழக்கம் மனிதனுக்கு தீங்கிழைத்தாலும் வாலிபப் பருவத்தில் அவனுக்கு அழகானதொரு செயலாகவே தோன்றுகிறது. இன்னும் இப்பருவத்தில் பெண்களை கேலி கிண்டல் செய்வதும், (அவர்களை) ரசிப்பதும் நண்பர்களுடன் ‘ஜாலி’யாக மேற்சொன்னவைகளை செய்வதும் ‘ஊர்’ சுற்றுவதும் பழக்கமாகி பிறகு இதில் சில ‘வழக்கமாக’ – நிலைத்து விடுகிறது.
நிறைவாக ஒரு சில விஷயங்கள்…..
உலக வாழ்க்கையைப் பற்றி
அறிந்து கொள்ளுங்கள்: “நிச்சயமாக இவ்வுலக வாழ்க்கை விளையாட்டும், வேடிக்கையும், அலங்காரமுமேயாகும், மேலும் உங்களிடையே பெருமையடித்துக் கொள்வதும்; பொருள்களையும், சந்ததிகளையும் பெருக்குவதுமேயாகும்…., (எனவே உலக வாழ்வில் மயங்கியோருக்கு) மறுமையில் கடுமையான வேதனையுண்டு; (முஃமின்களுக்கு) அல்லாஹ்வின் மன்னிப்பம், அவன் பொருத்தமும் உண்டு – ஆகவே, ‘இவ்வுலக வாழ்க்கை’ – ஏமாற்றும் சொற்ப சுகமே தவிர (வேறு) இல்லை. (அல்குர்ஆன் 57:20)
(முஃமின்களைப் பற்றி அல்குர்ஆனில் அத்தியாயம் 23/1-9, 40-ல் பார்க்க)
ஹலால், ஹராம்:
“என் இறைவன் ஹராம் எனத் தடுத்திருப்பவையெல்லாம், வெளிப்படையான அல்லது அந்தரங்கமான, மானக்கேடான செயல்கள்; பாவங்கள்;…., (ஆகிய இவையே என்று நபியே!) நீர் கூறுவீராக:” அல்குர்ஆன் 7:33)
இறை வசனங்களை (சிந்திக்காமல்) விட்டு மனோ இச்சையை பின்பற்றாதீர்:
“எவர் தம் இறைவனின் தெளிவான பாதையில் இருக்கிறாரோ அவர் என்னுடைய செயலின் தீமை அவனுக்கு அழகாகக் காண்பிக்கப்ட்டுள்ளதோ, இன்னும், எவர்கள் தம் மனோ இச்சைகளைப் பின்பற்றுகின்றார்களோ அத்தகையோருக்கு ஒப்பாவாரா?” (அல்குர்ஆன் 47:14)
வரம்பு மீறாதீர்கள் : (இறைவனுக்கு பயந்து கொள்ளுங்கள்)
“எவன் வரம்மை மீறினானோ – இந்த உலக வாழ்க்கையைத் தேர்ந்தெடுத்தானோ – அவனுக்கு, நிச்சயமாக நரகந்தான் தங்குமிடமாகும்.”
“எவன் தன் இறைவன் முன் நிற்பதை அஞ்சி மனதையும் இச்சைகளை விட்டு விலக்கி கொண்டானோ, நிச்சயமாக அவனுக்கு சுவர்க்கம் தான் தங்குமிடமாகும்.” (அல்குர்ஆன் 79:37-39)
“வரம்பு மீறுபவர்களுக்கு அவர்களுடைய செயல்கள் (இவ்வாறு) அழகாகக்பட்டு விடுகின்றன.)” (அல்குர்ஆன் 10:12)