ஐயமும்! தெளிவும்!!

in 1996 பிப்ரவரி,ஐயமும்! தெளிவும்!!

ஐயம்: நானும் எனது நண்பனும் இங்கே அடுத்தடுத்த வீட்டில் வேலை செய்து வருகிறோம். என் நண்பனுடன் எனது அரபிக்கு ஏதோ ஒரு பிரச்சினை ஏற்பட்டு அதனால் எனக்கு எனது நண்பனுடன் கதைக்க வேண்டாம் என்று சொன்னார். நாங்கள் இருவரும் அரபிக்குத் தெரியாமல் கதைத்துக் கொண்டிருந்தபோது அரபி பார்த்து விட்டார். இனிமேல் நாங்கள் கதைக்க மாட்டோம் என எங்கள் இருவரிடமும் குர்ஆனைத் தொட்டு சத்தியம் செய்யச் சொன்னார். நாங்களும் கதைக்க மாட்டோம் என்று சத்தியம் செய்து கொடுத்து விட்டோம். நாங்கள் இருவரும் கதைத்துக் கொள்ள முடியாமல் பெரும் சிரமத்துக் மத்தியில் காலத்தை கழித்துக் கொண்டிருக்கிறோம். குர்ஆனில் சத்தியம் செய்யலாமா? அப்படி செய்தால் அதை மீறலாமா? சந்தா எண் 202

தெளிவு: நீங்களும் உங்கள் நண்பரும் கதைக்க வேண்டாமென்றுதானே சத்தியம் வாங்கியிருக்கிறார். எழுத்துக்கள் மூலம் உங்கள் கருத்துக்களை பரிமாறிக் கொள்ளலாமே. அப்படி முயற்சியுங்கள். உங்கள் அரபி குர்ஆனின் மீது சத்தியம் வாங்கியது தவறாகும். இது அவரது அறியாமையை தெளிவு படுத்துகிறது. அல்லாஹ்வைத் தவிர எதன் மீதும் சத்தியம் செய்தல் கூடாது.

ரசூல்(ஸல்) கூறினார்கள். எவராவது சத்தியம் செய்ய நாடினால் அல்லாஹ்வின் மீதே சத்தியம் செய்யட்டும். அல்லது வாய் மூடியிருக்கட்டும். அறிவிப்பாளர்: இப்னு உமர்(ரழி) ஆதாரம் புகாரி 8/129.

இதனடிப்படையில் நீங்கள் அச்சத்தியத்தை மீறுவதில் தவறில்லை. உங்களுடைய பிழைப்புக்காக அரபு நாடுகளுக்கு சென்றிருக்கும் தாங்கள் முடிந்தவரை உங்கள் முதலாளியின் ஹலாலான எண்ணங்களுக்கு செவிசாய்த்து செயல்படுங்கள். அல்லாஹ் உங்களுக்கு உதவி செய்யப் போதுமானவன்.

———————————-
ஐயம்: சாப்பிட்ட தட்டில் கை கழுவக்கூடாது என்றும்,ஒருவர் சாப்பிடும் போது ஸலாம் சொல்லக் கூடாது என்றும் சொல்கிறார்கள். இது சரியா? முஜாஹித்தீன், தம்மாம்.

தெளிவு: சாப்பிட்ட தட்டில் கை கழுவக் கூடாது என்று குர்ஆன், ஹதீஸில் எவ்வித ஆதாரமும் இல்லை. சாப்பிடும்போது சலாம் சொன்னால் சாப்பிடும் உணவு தொண்டையில் சிக்கிக் கொள்ளும் என்பதற்காக சொன்ன சொல்லோ என்னவோ? சாப்பிடும்போது பேசுகிறவர்களுக்கு சலாம் சொல்வது ஒன்றும் பெரிய விஷயமாகாது. சாப்பிடும் போது சலாம் சொல்லக் கூடாது என்பதற்கான ஆதாரம் நம்மால் காண முடிய வில்லை.

———————————-

ஐயம்: முஸ்லிம்கள் வாழும் ஒரே ஊருக்கு இரண்டு சங்கங்கள் தேவையா? இதில் மேலத்தெரு சங்கம், கீழத்தெரு சங்கம் என்ற வேற்றுமைகள் தேவைதானா? மார்க்கத்தில் அப்படி இருக்க இடம் உண்டா? இரண்டு சங்கங்களுக்கு தனித்தனி நிக்காஹ் ஒப்பந்தப் புத்தகம் வைத்துக் கொள்வதும் நம் மார்க்கத்தில் உண்டா?  இறையடியான் மதுக்கூர்.

தெளிவு : இன்று முஸ்லிம்களிடையே பிரபல்யமாக இருக்கும் பிரிவினை குரூப்புகளான மத்ஹபுகள், தரீக்காக்கள், இயக்கங்கள் இவற்றிற்கே இஸ்லாத்தில் இட மில்லை என்கிறபோது சங்கங்களுக்கு எப்படி இடமிருக்கும்? இவையனைத்தும் முஸ்லிம்களை பிரித்தாளும் ஷைத்தானின் செயல்களாகும். நாமனைவரும் ஏற்றிருப்பது ஒரே இறைவன் அல்லாஹ்; அவனது ஒரே வேதநூல் குர்ஆன்; நமது ஒரே நேர்வழி காட்டி, தலைவர் நபி(ஸல்); நமது மார்க்கம் இஸ்லாம் ஒன்றே என்ற அடிப்படையில் ஒன்றினையும் வரையும் இப்பிரிவினை கோஷங்கள் ஒலித்துக் கொண்டே இருக்கும்.

திருகுர்ஆனின் 3:103 ஆயத்தை தாங்களும் நிதானமாகப் படியுங்கள். உங்கள் ஊர் மக்களுக்கும் தெரிவியுங்கள். அல்லாஹ்வின் அறுபடாத கயிறான திருகுர்ஆனை நாம் முழுமையாக, ஒற்றுமையாக, கைப்பற்றாத வரை இப்பிரிவினைகளால் பாதிக்கப்படுவோம். நாம் ஒருவருக்கொருவர் பகைவர்களாகவே இருப்போம். நரகத்தின் விளிம்பிற்கு சென்று அதலபாதாள நரகத்தில் விழுவோம் என்பதை இவ்வசனத்தில் நீங்களே தத்ரூபமாகக் காணலாம். எனவே முஸ்லிம் என்ற ஒரே பெயரில் இஸ்லாமிய வழியில் வாழ அல்லாஹ் அனைவருக்கும் அருள் பாலிப்பானாக.

——————————————–

ஐயம்: இஸ்லாம் “சேமிப்பில் ‘(நாளைய தேவையில்) அக்கறை கொள்ள வில்லையே! இது இன்றைய கால கட்டத்தில் ஒத்து வராத ஒன்றாக இருக்கிறதே! தங்களின் தெளிவு என்ன?

தெளிவு : சிறிதாக சேமித்த பணத்தைக் கொண்டு ஹஜ் செய்ய வேண்டுமல்லவா? நாளைய சேமிப்பைப் பற்றி இஸ்லாம் வலியுறுத்தவில்லை என்றால் இவ்விரு கடமைகளையும் அல்லாஹ் நம்மீது ஆணையிட்டிருக்க வேண்டாமல்லவா? எனவே இஸ்லாம் சேமிப்பிற்கு முக்கியத்துவம் அளிக்கின்ற அதே நிலையில் அதற்கான கடமைகளையும் ஜகாத், சதகா, ஹஜ், போன்றவை மூலம் நிறைவேற்றவே ஆணையிடுகிறது.

இஸ்லாமிய சொத்து பிரிவினைகளிலும் ஒருவரின் மரணத்திற்குப் பின் அவரது வாரிசுதாரர்கள் என்னென்ன விகிதாச்சாரங்களில் மரணித்தவர் சேமித்து விட்டுச் சென்றதை பிரித்துக் கொள்ள நீண்ட நெடிய சட்டங்களை வகுத்துள்ளது. சூரா நிஸாவில் 7 முதல் 14 வரை பார்க்க.

இஸ்லாம் ஒருவர் செல்வதந்தராக வருவதை ஆட்சேபிக்கவில்லை. அவரால் முடிந்த அளவு செல்வங்களை ஹலாலான முறையில் சம்பாதித்து வைத்துக் கொள்ள அனுமதிக்கிறது. ரசூல்(ஸல்) அவர்கள் காலத்தில் பெரும் பணக்காரர்களாக அப்துர்ரஹ்மான் இப்னு அவ்ப்,அபூபக்கர், உத்மான் அல் கனி (ரழி-அன்ஹும்) போன்றோர் வாழ்ந்துள்ளதை நாம் இஸ்லாமிய சரித்திரங்களில் காணலாம்.

ஸஃது பின் அபீவக்காஸ் என்ற நபி தோழர் தனது மரணப் படுக்கையில் தனது முழு சொத்துக்களையும் தீனுக்கு அர்ப்பணிப்பதாக ரசூல்(ஸல்) அவர்களிடம் கூறினார்கள். ரசூல்(ஸல்) அதனை ஏற்க வில்லை. மூன்றில் இரண்டு பகுதியையாவது ஏற்றுக் கொள்ள வேண்டுகிறார்கள். அதனையும் ரசூல்(ஸல்) ஏற்கவில்லை. அவரது சொத்தில் பாதியையாவது ஏற்றுக் கொள்ள வேண்டுகிறார்கள். அதனையும் ரசூல்(ஸல்) ஏற்கவில்லை. கடைசியாக மூன்றில் ஒரு பகுதியையாவது ஏற்றுக் கொள்ள வேண்டுகிறார்கள். அதனை ஏற்றுக் கொண்ட ரசூல்(ஸல்) இதுவும் அதிகமே! நீங்கள் மரணிக்கும்போது உங்களுடைய வாரிசுதார்களை மற்றவர்களிடம் கையேந்தும்படி விட்டுச் செல்லாதீர்கள் என அறிவுரை பகர்ந்தார்கள். (ஆதாரம் புகாரி 7/266, முஸ்லிம் 3/39991 முதல் 99)

இந்நபி மொழி நாம் நமது வாழ்வில் பொருட் செல்வங்களை சம்பாதிப்பதற்கும், சேமிப்பதற்கும் அதனை நமது வாரிசுதாரர்களுக்கு விட்டுச் செல்வதையும் அனுமதியளிப்பதை காணலாம். நாம் சம்பாதிக்கும் பொருட் செல்வங்களுக்கு அல்லாஹ்வும் அவனது தூதரும் கூறியபடி கடமைகளை நிறைவேற்றினால் எவ்வளவு வேண்டுமானாலும் சம்பாதிக்கலாம். எவ்வளவு வேண்டுமானலும் சேமிக்கலாம். இதற்கு வரைமுறை இல்லை

Previous post:

Next post: