K.S.H. அபூ அப்தில்லாஹ் (ஜித்தா)
நபி(ஸல்) அவர்களைப் புகழ்கின்றோம், கண்ணியப்படுத்துகின்றோம் என்று கூறியே,”பித்அத்’ ஆன மீலாது, மெளலூது போன்ற மார்க்க முரணான செயல்கள் புரோகித ஆலிம்களால் அரங்கேற்றப்படுகின்றன; நபி(ஸல்) அவர்கள் மேல் கொண்ட முஹப்பத் (பிரியம்)தால் “பரக்கத்” (அபிவிருத்தி), “ஷபாஅத்” (பரிந்துரை) கிடைப்பதற்காகவே மெளலூது ராத்தீபுகள் எனப்படும் ஷிர்க்கான அரபி பஜனைப் பாடல்கள் இல்லங்கள் தோறும் இசைக்கப்படுகின்றன. இதுபோன்ற மீலாது, மெளலூது மார்க்கத்தில் இல்லாத “பித்அத்’கள் என விளங்கிக் கொண்டவர்கள் கூட, “”ஹஜ்ரத்” “”பெருமானார்,” “அண்ணல்’, “நாயகம்’ போன்ற அடைமொழிகளைக் கூறி புகழ்கின்றனர். இது போன்ற பெயர்களில் நபி(ஸல்) அவர்களை அழைப்பதற்கு மார்க்கம் அனுமதிக்கின்றதா? என்பதைப் பற்றி யாரும் சிந்திப்பதில்லை.
“ஹஜ்ரத்”
இன்று முஸ்லிம்களிடையே அதிகமாக புழங்கி வரும் வார்த்தை “”ஹஜ்ரத்”, அனைத்து மெளலவிகளையும் “”ஹஜ்ரத்”என்று அழைத்தால் தான் அவர்கள் திரும்பியே பார்க்கின்றார்கள்; தவ்ஹீது மெளலவிகள் உள்பட. தப்லீக் தஃலீம் நூல்களில் “”ஹஜ்ரத்” என்ற அடைமொழியில்லாமல் எந்தப் பெயரும் ஆரம்பமாகாது. கத்தம், பாத்திஹா ஓதி காசு சேர்ப்பவருக்கும் ஹஜ்ரத், குர்ஆனை ஓதி கயிறு முடிச்சுகளில் “”ஸ்டாக்” செய்யும் கயிறு வியாபாரிகளுக்கும் “”ஹஜ்ரத்” பட்டம். புரோகிதத்தை ஒழிக்க வந்த அல்லாஹ்வின் தூதர் நபி(ஸல்) அவர்களும் “ஹஜ்ரத்’; தவ்ஹீது மெளலவிகளில் சிலரிடம் ஹஜ்ரத் தவறாமல் இடம் பெறுகிறது.
“”மதனீ” மெளலவி ஒருவரிடம் இது பற்றி விளக்கம் கேட்டபொழுது, “”ஹஜ்ரத்” என்று அழைப்பதில் எந்த தவறும் இல்லை. ´ஷிர்க்கான பொருள் எதுவும் இல்லை. “ஆலி ஜனாப்’ என்று அழைப்பதை விட குறைவான அந்தஸ்து உள்ள சொல்லே “”ஹஜ்ரத்” என்று கூறி, தான் அந்தஸ்து உள்ள சொல்லே “”ஹஜ்ரத்” என்று கூறி, தான் அரபிமொழி படித்த மேதை என்ற நினைப்பில் அளந்தார்; ஆனாலும் அரபிமொழி அறிந்த அல்ஜன்னத் ஆசிரியர் P. ஜெயினுல் ஆபிதீன் உலவி கூறுகிறார்:
“”ஹஜ்ரத்” என்பதற்கு மதிப்பிற்குரிய என்ற பொருள் இல்லை. “”சன்னிதான்” என்பதே அதன் அர்த்தம். “”புனிதம் நிறைந்தவர்” என்ற கருத்தில் அமைந்துள்ளதால்தான் நாம் அதை நிராகரிக்கின்றோம். இத்தகைய மதிப்பை யாருக்கும் வழங்கிட இஸ்லாம் அனுமதிக்க வில்லை” -பார்க்க அல்ஜன்னத் ஆகஸ்ட் 1993 பக்கம்36.
பெருமானார்:
பெருமானார்(ஸல்) என்று தக்லீது, தவ்ஹீது போன்ற அனைத்து மெளலவிகளும் நபி(ஸல்) அவர்களை புகழ்ந்து கூறுகிறார்கள். “பெருமானார்’ என்றால் “”பெரு மகனார்” என்ற சொல் பெருமைக்குரிய மனிதர்களை குறித்துப் பேசுகிறது என்று கூறினாலும், தமிழ் இலக்கியங்களிலும், காவியங்களிலும், நடைமுறையிலும் “பெருமான்’ என்ற சொல் அவதாரங்களையும்,இந்து கடவுள்களையுமே முற்றும் முழுதாக குறிக்கிறது. இராமலிங்க அடிகள் தனது பெருமான் முருகனை,
” கண்ணாடியில் கண்ட கந்த பெருமான்” என்று புகழ்கின்றார். கிருபானந்தவாரியார் அடிக்கடி அழைப்பதும் எம்பெருமான், முருகப் பெருமானே! என்பதுதான். முருகனின் தந்தையாகிய சிவபெருமானை போற்றி
“”பித்தா! பிறை சூடி பெருமானே! அருள்வாய் நீ!” என்றெல்லாம் பெருமானார் போற்றுதல்கள் இங்கு உள்ளன. “”பெருமான்” என்று குறிப்பிடுவது தான் கடவுள் அவதாரங்களைக் குறிக்கும்; “”பெருமானார்” என்ற பதம் மனிதர்களைக் குறிக்கும் என்றும் சிலர் விளக்கம் கொடுக்கலாம்.
கடைச் சங்க புலவர் நக்கீரனார், சிவபெருமானைப் பற்றிக் கூறுகிறார். “”சங்கறுப்பது எங்கள் குலம்; சங்கனாருக்கு ஏது குலம்?” சிவனார், தாயுமானவர், சிவபெருமானார் போன்ற பதங்களும் இந்து கடவுள்களையே குறிக்கின்றன. இவ்வாறு போற்றிப் புகழ்ந்தார்கள் சைவர்கள். வைணவர்கள் தங்கள் பங்கிற்கு, பிரம்மனை புகழ்ந்து, பிரம்மா, திருமால், பெருநாள், பள்ளிகொண்ட பெருமாள, உலகளந்த பெருமாள் என்று “”பெரும்மாளும் ஆனார்” என்று புகழ்கின்றார்கள்.
பெருமானும் ஆனார் – பெருமானார்:
போலிக் கடவுள் பொம்மைகளை தரையில் வீழ்த்தி, ஏகத்துவ தீபத்தை ஏற்றி,ஒருவனே இறைவன் என்ற ஒப்பற்ற கொள்கையைச் சொன்ன அல்லாஹ்வின் தூதருக்கும் அவதார அந்தஸ்து அளிக்கும் “பெருமானும் ஆனால்” அதாவது கடவுளாகவும் ஆனால் என்னும் “பெருமானார்” பட்டம் தேவையா? நாம் எங்கே போகின்றோம்? பழைய ஜாஹிலியத்திற்கா? சிந்தியுங்கள்.
அல்லாஹ்விற்கு இணை வைக்கும் கொடிய பாவத்தை வேரோடும் வேரடி மண்ணோடு அழிக்க வந்த நபி(ஸல்) அவர்களை “”பெருமானும் ஆனார்”, எம்பெருமானும் ஆனார், அதாவது “”இறைவனாகவும் ஆனார்” என்ற நச்சுக் கருத்தை இனியும் நாம் கூறலாமா? அல்லாஹ்(ஜல்) நம்மைக் காப்பானாக!
இன்னும் சிலர் பெருமானார் என்பது “பெருமைக்குரிய அன்னார்’ என்றும் விளக்கம் தருகின்றனர். நபி(ஸல்) அவர்கள் பெருமைக்குரியவர்கள் என்று கூறுபவர்களுக்கு நபி(ஸல்) அவர்களே பதிலளிக்கிறார்கள்.
1. “”(கப்ருகளிலிருந்து) எழுப்பப்படும் பொழுது நான் தான் மனிதர்களில் முதல்வனாக வெளிப்படுவேன். அவர்கள் இறைவன்பால் செல்லும் பொழுது நான்தான் அவர்களுக்கு முன்னோடியாக இருப்பேன். அன்றி, அவர்கள் நம்பிக்கை இழக்கும் பொழுது நான் அவர்களுக்கு நன்மாராயம் கூறுவேன். அன்று என்கையில் புகழின் கொடி இருக்கும். என் இறைவனிடம் ஆதம்(அலை) அவர்களின் சந்ததிகளில் மிகவும் சிறப்புள்ளவன் நான்தான். ஆயினும் நான் பெருமை பாராட்டவில்லை” என்று கூறினார்கள். அனஸ்(ரழி) திர்மிதி.
2.மறுமை நாளில் நான் நபிமார்களுக்கெல்லாம் தலைவனாகவும் அவர்களின் பேச்சாளனாவும், இருப்பேன். அவர்களில் நான் தான் “ஷபாஅத்’ உடையவன். ஆயினும் நான் பெருமை பாராட்ட வில்லை” என்று நபி(ஸல்) கூறினார்கள். உபை இப்னுகஃபு(ரழி) திர்மிதி
பெருமை பாராட்டாத நபி(ஸல்) அவர்களைப் பெருமைக்குரிய அன்னார் என்பதும், கண்ணியத்திற்குரிய அன்னார் என்பவர்களும் கீழ்கண்ட ஹதீஸை பார்க்கவும்.
“”பெருமைகள் அனைத்தும் என் போர்வையாகும்; கண்ணியம் என் கால்சட்டையாகும். எனவே எவன் இவ்விரண்டிலிருந்து எதனையும் என்னிடமிருந்து அபகரிக்கின்றானோ அவனை நான் வேதனை செய்வேன்” என்று அல்லாஹ் கூறியதாக நபி(ஸல்) அவர்கள் தெரிவித்தனர்.
அறிவிப்பவர்கள்: அபூஸஈத்(ரழி), அபூஹுரைரா(ரழி) நூல்: முஸ்லிம், திர்மிதி,
நாயகம்:
நபிகள் நாயகம்(ஸல்), நாயகம்(ஸல்) என்றும் பலவாறு புகழ்கிறார்கள். தப்லீக்கில் இருந்து தவ்ஹீது வரை ஒருவர் பாக்கியில்லை. நாயகர்-தலைவர், நாயகம்-தலைமை என்ற பொருளைக் கொடுக்கலாம். நாயகம், நாயகர் என்ற சொல் மனிதர்களை மட்டுமா குறிக்கிறது? இங்கும் அதே இந்து கடவுள்களே இடம் பெறுகிறார்கள்.
வினை தீர்க்கும் நாயகர் – விநாயகர், விநாயகம்
செல்வத்திற்கு நாயகம்- செல்வநாயகம்
செல்வத்திற்கு விநாயகர் – செல்வ விநாயகர்.
நமது தர்ஹா பக்தர்களுக்கு தங்கள் பங்கிற்கு பல நாயகங்களை உண்டியல் கலக்ஷனுக்காக உருவாக்கியுள்ளார்கள்.
கல்வத்து நாயகம்,பாதுஷா நாயகம், ஷாதுலி நாயகம், இவை போக, ஜனங்களே ஜனங்களை ஆளும் ஜனநாயம், ஜனநாயகத்தை ஆளும் பண நாயகம். இப்படி பல நாயகங்கள் இங்குள்ளன. நாயகம் என்று புகழ்வது எந்த நாயகத்தை?
நபிகள் நாயகம்(ஸல்) :
அதாவது, நபி(ஸல்) அவர்கள் நபிமார்களுக்கெல்லாம் நாயகராக, நாயகமாக இருக்கிறார்கள். ஆகவே “”நபிகள் நாயகம்” என்று கூறுவதில் தவறில்லை என்பர். ஆனால் நபி(ஸல்) அவர்கள் கூறுகிறார்கள்:
1.”(எல்லா) நபிமார்களையும் விட என்னை மேலானவன் என்று கருதாதீர்கள்” அறிவிப்பவர்:அபூஸஈ(ரழி) அபூதாவூது.
மற்ற நபிமார்களை விட தன்னை மேலாகக் கருத வேண்டாம் என்பதற்கு, நபி(ஸல்) அவர்களே காரணம் கூறுகிறார்கள்.
2.”நபிமார்களெல்லாம் மாற்றாந்தாய்ப் பிள்ளைகளான சகோதரர்கள் ஆவர். அவர்களின் தாய்மார்கள் பலர் ஆவர். ஆனால் அவர்கள் மார்க்கமெல்லாம் ஒன்றுதான்.”
அபூஹுரைரா(ரழி) புகாரி, முஸ்லிம், அபூதாவூது.
மேற்கண்ட ஹதீஸின்படி நாயகம்(ஸல்) என்றெல்லாம் அழைப்பது நபி(ஸல்) அவர்களை வரம்பு மீறி அழைப்பதும், நபி(ஸல்) அவர்களின் கட்டளையை மீறிய செயலுமாகும் என்பதை அறிவோமாக!
அண்ணல்:
“”அண்ணல்” என்ற சொல்லை நாம் பலவாறு சிந்தனை செய்தும், அது உயர்ந்த மனிதர்களுக்கு வழங்கப்படும் சிறப்புப் பெயராகவே தோன்றியது. இருந்தாலும், நமது முன்னோர் ஆலிம் புரோகிதர்கள், இறைவனுடன் பங்கு பெரும் அவதார அந்தஸ்து உள்ள சொற்களைச் சேர்க்காமல் நபி(ஸல்) அவர்களை அழைக்கமாட்டார்களே என்று சிந்திக்கும் போது உண்மை புரிந்தது.
நமது புரோகித மெளலவிகளின் பயான்களில் கூறும் சம்பவங்கள் இரண்டு விஷயத்திலிருந்துதான் எடுக்கப்பட்டிருக்கும். குர்ஆன், ஹதீஸ் என்று எண்ணி ஏமாற வேண்டாம். அவை இரண்டும் இதிகாச இந்து புராணங்களான இராமாயணம், மகாபாரதமே. சம்பவங்களை அப்படியே சொல்லிப் பாத்திரங்களுக்கு முஸ்லிம் பெயரிடுவார்கள்.
இதற்கு உதாரணமாக டால்மியாபுரத்தில் “”கண்ணாடி போட்ட கழுகு பேசியது” என்று ஜும்ஆ குத்பாவில் மெளலவி பேசியதைக் கூறலாம். “”மகாபாரதத்தில் நாரத முனிவரர் குருஷேத்திர யுத்தத்தின் விளைவுகளைக் கழுகிடம் விவரிக்கின்றார்.” இதை அப்படியே “”டப்பிங்” செய்து இஸ்லாமிய பெயரில் நம் மெளலவி ரிலீஸ் செய்தார்.
அண்ணல்(ஸல்) என்று அழைக்கும் மெளலவிமார்கள் இந்த சொல்லை கம்பராமாயணத்திலிருந்து காப்பி அடித்திருக்கின்றார்கள்.
கம்பர் தந்த ராமாயணத்தில், தனது காவிய நாயகனை “அண்ணல்’ என்று கூறியே புகழ்கின்றார். அனைவரும் அறிந்த ஒரு காட்சி சுயவரப் படலம்; வில்லை முறித்து சீதையை மணக்க, இராமன் ராஜ வீதியில் நடக்கின்றான். அப்பொழுது அரண்மனை உப்பரிகை மேல் மாடத்திலிருந்து சீதை இராமனைப் பார்க்கின்றாள். அவதார இராமனை கம்பர் வர்ணிக்கின்றார்.
“அண்ணலும் நோக்கினான், அவளும் நோக்கினாள்; கண்கள் கலந்தன; கருத்தொருமித்தன” கம்பர் கண்டெடுத்த அண்ணலை, நம் புரோகித மெளலவிகள் காப்பியடித்து அண்ணல் நபி(ஸல்) என்று புகழ்கின்றார்கள்.
நம் மெளவிகள், புர்தா புகழ் (?) பூசிரியின் மாணவர்களல்லவா! இராமவதாரத்தைப் போல், நபி(ஸல்) அவர்களையும் அவதார புருஷராக்கி விட்டார்கள்.
ராமரும் அண்ணல் – அல்லாஹ்வின் தூதரும் அண்ணல்.
இந்துமத கவிஞர்கள், புலவர்கள் உபந்நியாசகர்கள், கடவுள் அவதாரங்களை,கதையாகவும், பஜனைப்பாட்டு, காலட்சேபம், மார்கழி பஜனை, உபந்நியாசம் என்ற பெயரில் வருட முழுவதும் விழா எடுத்து வருமானத்திற்கு வழி செய்து கொண்டார்கள்.
இதைப் பார்த்த மெளலவி புரோகிதர்கள், நபி(ஸல்) அவர்களை காவிய நாயகராக்கியும், அவதார புருஷராக சித்தரித்தும், மெளலூது, ராத்தீபு, புர்தா, கஸீதா, முனாஜாத்து என்று எழுதி வயிறு வளர்க்க வழி செய்து கொண்டார்கள்.
“”சூரிய சந்திர சோதியும் நீயே”! என்று சிவ “பெருமானாரை’ அவர்கள் புகழ்கின்றார்கள். நமது சுபுஹான மெளலூது முல்லா இதை அப்படியே அரபியில் மெட்டு போட்டார். நம் வீடுகளில் இன்றும் பாடி வருகின்றோம்.
“” அன்த சம்சுன், அன்த பத்ருன், அன்த நூருன்…..”
இவர்கள் நபி(ஸல்) அவர்களை இவ்வாறு புகழ்வதன் நோக்கமே,
இறைவனது அந்தஸ்து கொடுப்பதற்காகவேயன்றி வேறல்ல.
அண்ணல் காந்தி:
“”அண்ணல்” என்ற சிறப்பு கடவுள்களுக்கு கூறப்படுவதில்லை. காந்தி போன்ற மனிதர்களுக்கும் கூறப்படுகிறது என்று சிலர் கூறலாம். அண்ணல் காந்தி என்று அழைக்கக் காரணம், அவர் ஒரு தீவிர ராமபக்தர், குண்டடிபட்டு சாகும் பொழுது கூட “”ஹரே ராம்” என்று கூறியவர்.
இன்று நாட்டில் இருக்கும் ராமன் சிலைகளை விட காந்தி சிலைகளே அதிகம். ராமனுக்கும் மாலை, மரியாதை பிரார்த்தனை. ராம நவமிக்கும், கிருஷ்ண ஜெயந்திக்கும் அரசு விடுமுறை; காந்தி ஜெயந்திக்கும் அரசு விடுமுறை; காந்தி(கோயில்) மண்டபங்களில் தேசபக்தி பாட்டு “”வந்தே மாதரம்” பாடுவதில்லை. ராமன் கோயிலில் பாடப்படும் அதே ராம்பஜன் “”ரகுபதி ராகவராஜாராம் பதீத பாவன சீத்தாராம்….” பாடப்படுகிறது. புத்த பிரான், புத்த பகவான் ஆனது போல், அண்ணல் ராமனும், அண்ணல் காந்தியும் அவதார புருஷர்களாக இன்று ஐக்கியமாகிவிட்டார்கள்.
இந்த அவதார அண்ணல்தான் நபி(ஸல்) அவர்களைக் கண்ணியபடுத்தும் பெயராம். முகல்லிது மெளலிகளுக்கு இது போன்ற வேடிக்கைகள் வாடிக்கைகள்தான். ஆனால் “´ர்க்’, “பித்அத்’ தை எதிர்த்துப் போராடுவதாகக் கூறும் “”ஜாக்ஹ்” கூட்டமும், இது போன்ற ஷிர்க்கான புகழ்ச்சியில் சிக்கியது ஏன்?
நம் ஊர்களில் தாய்மார்கள் ஒரு பழமொழி கூறுவார்கள். “மக்கத்திற்குப் போயும், நொண்டிப் பக்கிரி காலிலா விழுவது?” என்று. தவ்ஹீது மெளலவிகளும் நொண்டிப்பக்கிரி காலில்தான் விழுந்து கொண்டிருக்கின்றார்கள். இது தான் நவீன “ஜாக்ஹ்’லியத்தோ?
ஜாஹிலியத்து காலத்தில் இறைவனுக்கு இணைவைக்கும் பெயர்களான அப்துல் காபாவை, அப்துர்ரஹ்மானாகவும், அப்துல் உஸ்ஸாவை அப்துல்லாஹ் என்றும் அழகிய பெயர் சூட்டிய அஸூலுல்லாஹு(ஸல்) அவர்களுக்கே அவதாரப் பட்டங்களை சூட்டுவது மாபெரும் கொடுமையல்லவா?
அல்லாஹ்வின் தூதர் நபி(ஸல்) அவர்களின் எச்சரிக்கை:
1. “”இறைவனுக்குரிய அடைமொழிகளைக் கொண்டு என்னை அழைப்பதன் மூலம் உங்களுக்கு உறுதுணையாக ஷைத்தானை அழைக்காதீர்கள்”.
அறிவிப்பவர்: இப்னு அப்துல்லாஹ்(ரழி) அபூதாவூது.
2. “மாற்றுமத கலாச்சாரத்தை எவன் பின்பற்றுகின்றானோ, அவன் நம்மைச் சேர்ந்தவனல்ல”.
ஆதாரம்: இப்னு உமர்(ரழி) நூல்: அபூதாவூத், திர்மிதி, அஹ்மத்
ஹதீஸை மொழி பெயர்க்கும் மெளலவிகளின் அறிவு நாணயம்?
ஹதீஸ்களை மேதைகள் மிகவும் சிரமப்பட்டும், தங்கள் வாழ்நாளை அர்ப்பணித்தும் ஹதீஸ்களை திரட்டிக் கோர்வை செய்து தந்துள்ளார்கள். அரபியில் உள்ள அந்த ஹதீஸ்களை தமிழில் மொழிபெயர்க்கும் பொழுது,உள்ளது உள்ளவாறே செய்யவேண்டும். ஆனால் இன்று நடப்பதென்ன? “”கால ரஸூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம்…. ” என்று ஒரு ஹதீஸை இமாம் புகாரி(ரஹ்) அவர்கள் எழுதியிருக்கின்றார்கள் என்றால், இதை அப்படியே தமிழில் “”அல்லாஹ்வின் தூதர்(ஸல்), அல்லது நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்” என்று மொழி பெயர்க்க வேண்டும. ஆனால் “”பெருமானார்(ஸல்)” என்றும் “”நாயகம்(ஸல்)” என்றும் “”அண்ணல் நபி(ஸல்)” என்றும் மொழி பெயர்ப்பது அமானித மோசடியல்லவா? ஹதீஸ் இமாம்கள் கூறாததை அவர்கள் கூறியதாக அறிவிப்பது அறிவு நாணயமா?
பெருமானார், அண்ணல்,நாயகம் போன்ற தமிழ்ச் சொல், அரபியல் ரஸூலுல்லாஹ்(ஸல்), நபி(ஸல்) என்ற பொருளைக் கொடுக்குமா? இறைவனின் தூதர், இறைத்தூதர், அல்லாஹ்வின் தூதர் என்ற தமிழ் பதமே,சரியான மொழிபெயர்ப்பு என்பதை உணர்ந்து திருந்துங்கள்.
நபி(ஸல்) அவர்களால் சிறந்த சமுதாயமாகக் கூறப்பட்ட, ஸஹாபாக்கள் காலத்திலும், அதற்குப் பின் தாபியீன்கள் காலத்திலும், பிறகு தபஉத்தாபியீன்கள், இமாம்கள் காலத்திலும் யாரும் இவ்வாறு புகழவில்லை. அல்லாஹ்வின் தூதர் என்று அழைந்தே புகழ்ந்தார்கள்; நாமும் அவ்வாறே புகழ்வோம்!
அன்புச் சகோதரர்களே!
அல்லாஹ்வின் தூதர் நபி(ஸல்) அவர்களை எப்படிப் புகழ்வது என்பதை அவர்களே கற்றுக் கொடுத்துள்ளார்கள். நாம் நடுநிலைச் சமுதாயம்; ஆகவே வரம்பு மீறிப் புகழவும் வேண்டாம்; நபி(ஸல்) அவர்கள் அந்தஸ்தை தாழ்த்தவும் வேண்டாம். அல்லாஹ்(ஜல்) தன் அடியாரும் தூதருமாகிய நபி(ஸல்) அவர்களைப் புகழ்ந்ததற்கு மேலாக நாம் புகழ முடியாது.
“” நபியே! நாம் உமது புகழை உயர்த்தி விட்டோம்”. (அல்குர்ஆன் 94:4)
பெருமானார், அண்ணல் நாயகம் போன்ற புகழுரைகள் மனிதக் கற்பனையில் தோன்றியவை. “அல்லாஹ் ‘ கூறுகின்றான்.
“”இவை யாவும் உங்கள் வாய்களால் கூறும்(வெறும்) வார்த்தைகளே(யன்றி உண்மையல்ல!) ஆனால், அல்லாஹ் உண்மையைக் கூறி, அவன் உங்களுக்கு நேரான வழியை அறிவிக்கின்றான் ” (அல்குர்ஆன் 33:4)
(நபியே!) “”நாம் உம்மை உலகத்தார் யாவருக்கும் ஓர் அருளாகவே அன்றி அனுப்பவில்லை” (அல்குர்ஆன் 22:107)
இன்று நம்மிடையே பெருமான்களும், பெருமானார்களும், அண்ணல்களும், ஹஜ்ரத்களும், நாயகங்களும் அதிகமதிகம் உள்ளனர். இது போன்ற மனிதர்களால் கற்பனை செய்யப்பட்ட பெயர்களைக் கொண்டு அல்லாஹ்வின் தூதரை அழைப்பது இறைக்கட்டளைக்கும், இறைத்தூதரின் கட்டளைக்கும் மாறு செய்வதாகும். ஆகவே நமது சொல், செயல், எண்ணம் அனைத்திலும் அல்லாஹ் தன் தூதருக்கு இட்ட பெயராலே அழைப்போம்.
பெருமான், அண்ணல், நாயகம் போன்ற சொற்களில் இணை வைப்பின் சாயலிருப்பதால் இவைகளை அடியோடு புறக்கணிப்போம்!
அல்லாஹ்வின் எச்சரிக்கை:
“”திட்டவட்டமான அறிவு இல்லாத வியத்தை நீர் பின்பற்ற வேண்டாம் ” (அல்குர்ஆன் 17:36)
அல்லாஹ்வின் தூதர் நபி(ஸல்) அவர்களின் அறிவுரை:
“”எறும்பு ஊர்வதை விட இரகசியமான இணைவைத்தலுக்கு அஞ்சுங்கள்” என நபி(ஸல்) கூறினார்கள்.
இறைத் தூதர்(ஸல்) அவர்களே! எறும்பு ஊர்வதை விட ரகசியமான ஒன்றை எப்படி அஞ்ச முடியும்? (வழி என்ன) என்று ஒருவர் கேட்டார். இறைவா! எதையும் நாங்கள் அறிந்து உனக்கு இணைவைப்பதை விட்டும், “” உன்னிடம் பாதுகாப்புத் தேடுகிறோம்” என்று பிரார்த்தியுங்கள் என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: அபூமூஸா அஷ்அரீ(ரழி) அஹ்மத், தப்ரானீ.
“”யா அல்லாஹ்! எதையும் நாங்கள் அறிந்து உனக்கு இணை வைப்பதை விட்டும் உன்னிடம் பாதுகாப்பு தேடுகின்றோம்.”