ஐயமும்! தெளிவும்!!
ஐயம்: அல்லாஹ்வை அவன் என்று சொல்வது ஏன்?கமால். திருச்சி B.முபாரக் குவைத்.
தெளிவு: நமது வேத நூல் திருகுர்ஆனின் 112 வது அத்தியாயத்தின் முதல் வசனத்தைப் பார்க்கவும். ஒரு சாதாரண முஸ்லிமும் அறிந்துள்ள மிகவும் பரிச்சயமான வசனமிது: “”குல்ஹுவ அல்லாஹு அஹது”. இதன் பொருள்: குல்=சொல்; ஹுவ=அவன்; அல்லாஹு=அல்லாஹு; அஹது= ஒருவன்.
அதாவது அவன் அல்லாஹ் ஒருவன் என சொல்வீராக! என அல்லாஹ் நம்மனைவருக்கும் ஆணையிடுகிறான். இங்கு ஹுவ என்ற அரபிச் சொல்லுக்கு தமிழில் அவன், அவர் எனப் பொருள் கொள்ளலாம். ஆங்கிலத்தில் He=அவன் எனப் பொருள். நாம் ஏன் மரியாதையுடன் அல்லாஹுவை அவர் என அழைக்கக்கூடாது? என்ற நியாயமான கேள்வி எழலாம்.
அவர் என அல்லாஹுவை மரியாதையுடன் அழைப்பதை விட மிக மிக முக்கியமான இஸ்லாத்தின் அடித்தளமான தெளஹீதை-ஏகத்துவத்தை- நிலைப்படுத்தும் விஷயம் “”அவன் ”என்று ஒருமையுடன் அழைப்பதில் தொக்கியிருப்பதை அறியலாம். தமிழின் அச்சர இலக்கணம அறிந்தவர்கள் அவன்-அவர் என்பதிலுள்ள வேறுபாட்டை இலகுவாக அறிவர். ” அவன் அல்லாஹ”என்று சொல்வதிலுள்ள ஏகத்துவக் கொள்கைப் பிடிப்பை அவர் அல்லாஹ் என அழைப்பதில் காணவே முடியாது. இதன் அடிப்படையில் அல்லாஹுவை அவன் என அழைப்பதற்கு கீழ்க்காணும் விஷயங்களை காரணமாகக் கொள்ளலாம்.
1.அல்லாஹ் அவனை அவன்(ஹுவ) என்று அழைக்கவே ஆணையிட்டுள்ளான். குர்ஆனில் எங்கெல்லாம் அவனைப்பற்றிக் கூறுகிறானோ அங்கெல்லாம் இதே சொல்லை உபயோகித்துள்ளளான்.
2. அவன் என்று அழைப்பதன் மூலம் அவன் ஒருவன் -ஏகன்-இணை துணையற்றவன் என்ற ஏகத்துவத்தை பறைசாற்ற வைக்கிறான்.
3.நமது பகுத்தறிவுக்கப்பாற்பட்ட மரியாதை, கெளரவத்தைக் கொண்டவன் அல்லாஹ். எனவே இதுபோன்ற மரியாதைகளை அவன் விரும்புவதில்லை. (அல்குர்ஆன்: 6:100;21:22; 23:91; 37:180; 43:82)
4.தன்னை அவன் என அழைக்கும்படி ஆணையிடும் அல்லாஹ் மனிதர்களில் பிறந்து நேர்வழிகாட்ட தேர்ந்தெடுக்கப்பட்ட நபி(ஸல்) அவர்களுக்கு நாம் விளங்கியுள்ள விதத்தில் மரியாதை அளிக்க ஆணையடுகிறான். (அல்குர்ஆன் 49:2,3)
5. அவனது படைப்பினங்களில் உயர்ந்த- வானவர்களையும், கண்ணியத்திற்குரியவர்களையும் நாம் விளங்கியுள்ள விதத்தில் மரியாதை அளிக்க உபதேசிக்கிறான்.
6. எவரை எப்படி அழைத்தாலும் என்னை “அவன்” என அழைத்து ஏகத்துவ இறைவனாக உலகில் பரைசாற்று என நமக்கு அல்லாஹ் பாடம் கற்பிக்கிறான். அவனை அவன் என்று அழைப்பது இஸ்லாத்தின் ஏகத்துவக் கொள்கையின் முழு வெளிப்பாடாகும்.