ஐயம்: நரகத்தின் எரிக்கட்டைகளாக மனிதர்களையும், கற்களையும் பயன்படுத்துவதாக வாக்களித்துள்ள வல்ல நாயன், இணை வைத்து வணங்கப்பட்டு கொண்டிருந்த கற்சிலைகளுக்கு உரிய மனிதர்களையம் இந்நரக வேதனைக்கு உள்ளாக்குவானா? அல்லது ஏகத்துவத்தை எடுத்தியம்பிய நபி ஈஸா(அலை), இப்ராஹீம்(அலை) போன்ற நல்லடியார்கள் நீங்கலாக ஏனையவர்கள்தான் இவ்வேதனைக்கு ஆட்படுத்தப்பட்டவர்களா? கே.ஷாஹுல்ஹமீது, ஜித்தா.
தெளிவு: ஏகத்துவத்தை மக்களுக்கு எடுத்தியம்பிய இப்ராஹீம்(அலை) அவர்களையே சிலையாக வடித்து மக்கத்து மக்கள் வணங்கி வந்தனர். அதே போல் ஈஸா(அலை) அவர்களையும், அவர்களது தாய் மர்யம்(அலை) அவர்களையும் இரு கடவுள்களாக இன்றும் கிறித்துவர்கள் வழிபட்டு வருகின்றனர். இவர்களது இவ்விழிச் செயலுக்கு சம்பந்தப்பட்ட நபி, ரசூல்கள் எப்படி பொறுப்பாவார்கள்! இவ்விளக்கத்தை குர்ஆனில் 5:116 முதல் 118 வசனங்களில் பாருங்கள்.
மறுமையில் ஈஸா(அலை) அவர்களைப் பார்த்து அல்லாஹ், “” நீர் உன்னையும், உனது தாய் மர்யமையும் இரு கடவுள்களாக எடுத்துக் கொள்ள மக்களை ஏவினாயா?” எனக் கேள்வி கேட்க, ஈஸா(அலை) அவர்கள் அதனை மறுத்து, தான் அல்லாஹ் அறிவித்ததைத் தவிர வேறு எதனையும் மக்களுக்கு தெரிவிக்கவில்லை என்றும், தனக்குப்பின் மக்கள் செய்ததை தான் அறியவில்லை என்றும் கூறி தப்பிப்பதைக் காணலாம். இதே நிலைதான் ஒவ்வொரு நல்லடியார்களுக்கும் ஏற்படும் என்பதற்கு இது ஒரு எடுத்துக்காட்டாகும். அது மட்டுமின்றி அல்லாஹ் கூறுகிறான்.
பாவம் செய்யும் ஒவ்வோர் ஆத்மாவும் தனக்கே, கேட்டைத் தேடிக் கொள்கிறது; ஓர் ஆத்மாவின் (பாவச் ) சுமையை மற்றோர் ஆத்மா சுமக்காது. (அல்குர்ஆன் 6:164; 17:15; 35:18;39:7; 53:38)
ஏகத்துவத்தையும்; அல்லாஹ் அறிவித்ததை மட்டுமே மக்களுக்கு போதித்த நபி, ரசூல்கள் மரணித்தப்பின் அவர்களது மக்கள் அந்நபி, ரசூல்கள் பெயரில், உருவில் உருவாக்கிய அல்லாஹ் அங்கீகரிக்காத செயல்களுக்கு அந்நலடியார்கள் எப்படிப் பொறுப்பேற்க முடியும்? அதற்காக அல்லாஹ் நீதிவான்களில் மிகச் சிறந்த நீதிவான் அல்லவா?
எனவே எவர்கள் ஏகத்துவத்திற்கும்; ஏக இறைவனின் ஆணைக்கும் கட்டுப்படாமல் நடந்தார்களோ- அவர்கள் நபிகளின் மக்களாயினும், மனைவியாயினும் சரியே- அவர்களையே நரகத்தின் எரிக்கட்டைகளாக அல்லாஹ் தண்டிப்பான் எனக் கொள்ள வேண்டும். மக்கள் செய்த தவறுகளை அவர்களது நபி, ரசூல்கள் மீது போடுவது அவர்களை அவமதிப்பதாகும். அச்செயலை அல்லாஹ் அறவே செய்யமாட்டான்.
———————————–
ஐயம்: தொழுகை முறைகள் அதாவது ருகூஃ, நிலை,ஸுஜூது போன்றவற்றில் ஆண்களுக்கு வேறு, பெண்களுக்கு வேறு எனத் தனித்தனியாக நபி(ஸல்) அவர்களால் அறிவிக்கப்பட்டுள்ளதா?
முஸ்தஃபா கமாலுத்தீன், துத்தோங்.
தெளிவு: தொழுகையில் நிலை, ருகூஃ, ஸுஜூது , இருப்புக்களில் ஆண்களுக்கும், பெண்களுக்குமிடையில் ஏதும் வேறுபாடுகள் இருப்பதாக உண்மையான நபிமொழிகளில் காணமுடியவில்லை. அபூதாவூதில் இடம் பெற்றுள்ள ஓர் அறிவிப்பில் பெண்கள் செய்யும் ஸஜ்தாவில் வேறுபாடு இருப்பதாக உள்ளது. ஆனால் அது முர்ஸலான நபிமொழியாகும். அதேப் போல் இமாம் அஹ்மது பின் ஹம்பல்(ரஹ்) அவர்களின் புதல்வர் அப்துல்லாஹ் எழுதிய மஸாயில் நூலில் (பக்கம் 71ல்) இப்னு உமர்(ரழி) அவர்கள் பெண்கள் தொழுகையில் வேறுபாடு இருப்பதாக கூறிய கூற்று பலஹீனமானதாகும். “” என்னை எவ்வாறு தொழக்கண்டீர்களோ அவ்வாறு தொழுங்கள்” என்ற நபிமொழி ஆண், பெண் என்ற வேறுபாடின்றி அனைவருக்கும் கூறப்பட்டதாகும்.