விஞ்ஞானம் இஸ்லாத்திற்கு எதிரானதா?
“உலமாக்களின் அலட்சியமும், முஸ்லிம்களின் அறியாமையும்”
ஜாபர் சித்தீக், கம்பம்
இன்றைய அறிவியல் உலகில் நிரூபிக்கப்பட்ட உண்மைகளும், நிரூபிக்கப்படாதவைகளும் உள்ளன. மனித உயிர்கள் பெருகப் பெருக விஞ்ஞானத்தின் வளர்ச்சியில் பல முன்னேற்றங்களும் காணப்படுகின்றன. மனித இன வளர்ச்சி மற்றும் அவனது ஆராய்ச்சி திறனால் கற்காலத்தில் இருந்து கணினி யுகத்திற்கு முன்னேறியுள்ளது. பல அறிவியல் கண்டுபிடிப்புகளை வாழ்க்கை யில் பயன்படுத்தி அனுபவித்து வருகிறோம். மாபெரும் படைப்பாளனாகிய ரப்புல் ஆலமீன் அல்லாஹ்(ஜல்) மனிதர்களுக்கு பகுத்தறிவைக் கொடுத்துள்ளான். அல்லாஹ் மனித சமுதாயத் திற்கு தேவையான அனைத்து விஷயங்களையும் வஹீ மூலமாக இறைத்தூதர்கள் வாயிலாக தெள்ளத் தெளிவாக அறிவித்து விட்டான். முழு மனித சமுதாயமும் பின்பற்றுவதற்கு எந்த வழிகோணலும், முரண்பாடுகளும் இல்லாத அல்குர்ஆன் இன்று அனைவரிடமும் உள்ளது.
“”(நபியே!) இந்நெறிநூலை நாமே உம்மீது இறக்கி வைத்தோம். அறிவுடையவர்கள் இதன் வசனங்களை கவனித்து ஆராய்ந்து நல்லுணர்ச்சி பெறுவார்களாக! (அல்குர்ஆன் 38:29)
அல்குர்ஆன் ஓர் வாழும் அற்புதம்:
இன்று மட்டுமல்லாமல் எதிர்காலத்தில் நிகழக் கூடிய எந்த ஒரு நிகழ்வும் அல்லாஹ்வுடைய கட்டளையில்லாமல் நடைபெறாது. அல்குர்ஆனில் உள்ள அறிவியல் சம்பந்தமான எந்த ஒரு வசனத்தையும் ஆராய்ந்து பார்த்தால் அது 100% உண்மையாகவே இருக்கும்.உதாரணமாக,
* சூரியன் சுயமாக ஒளிரும் தன்மை உடையது (91:1-2)
* பெரும் வெடிப்பிற்கு பின் அண்டம் உருவானது. (21:30)
* உயிருள்ளவற்றை நீரிலிருந்து படைத்தது (21:30)
* கர்ப்பபையில் குழந்தையின் பல நிலைகள் (22:5)
* ஒவ்வொரு உயிரினங்களையும் ஜோடியாகப் படைத்திருப்பது (36:36)
* ஒவ்வொரு கோள்களுக்கும் பாதைகள் (21:33, 7:54)
இந்த அறிவியல் நிகழ்வுகள் சில நூற்றாண்டுகளுக்கு முன்புதான் அறிவியல் அறிஞர்களால் கண்டுபிடிக்கப்பட்டன. ஆனால் 1431க்கு முன்பே இறுதி இறைத்தூதர் நபி(ஸல்) அவர்களால் எந்தவித அறிவியல் வளர்ச்சி இல்லாத காலத்தில் எவ்வாறு கூற முடிந்தது? ஏனென்றால் இவை அனைத்தும் ஏக இறைவனிடமிருந்து வந்தவையாகும். மேற்கண்ட ஆயத்துகளை அறிவியல் கற்றவர்கள் உண்மை என்றே நம்புவார்கள்.
பிறை மட்டும் விதிவிலக்கா?
மனிதர்களின் வாழ்க்கைக்கு நாட்கள், மாதங்களின் எண்ணிக்கை முக்கியமானது. ஹஜ், நோன்பு, ஜக்காத் கொடுப்பது, போன்ற கடமைகளைச் செய்ய சந்திர நாட்காட்டி அவசியமாகிறது. இதை அல்லாஹ் அல்குர் ஆனில் 2:189ல் தெளிவு படுத்துகிறான்.
மேலும் 6:96, 17:12, 55:5 ஆகிய வசனங்களில் “”ஹூஸ்பானா”, “”ஹூஸ்பான், “துஹ்சூஹூ”, “”ஹிஸாப்” என்ற அரபிச் சொல் இடம் பெற்றுள்ளது. அரபி அகராதியில் “Calculate’, “Count’, “Punctual’ என்ற அர்த்தம் காணப்படுகிறது.
சந்திரனின் படித்தரங்களைக் கண்ணால் கண்டு மாதத்தை ஆரம்பிப்பதில் பல்வேறு குழப்பங்கள் இருக்கின்றன. ஆனால் கணக்கில் முரண்பாடோ, குழப்பமோ ஒருபோதும் இருக்காது. ஏனெனில் இது அல்லாஹ் விதித்த கணக்காகும்.
“வானங்களையும், பூமியையும் படைத்த நாளிலிருந்தே அல்லாஹ்விடம் அவனுடைய பதிவேட்டில் மாதங்களின் எண்ணிக்கை பன்னிரண்டு ஆகும்… (9:36)
நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்.
மாதம் இப்படியும், இப்படியுமாய் இருக்கிறது. நாமோ உம்மி சமுதாயம், எழுதுவதையும் கணக்கிடுவதையும் நாம் அறிந்திருக்கவில்லை. அதாவது நாட்கள் சில வேளை 29ஆகவும், சில வேளை 30 ஆகவும் இருக்கிறது.
இப்னு உமர் (ரழி), நூல்: புகாரீ, ஹதீஸ்எண் 1913
மேற்கண்ட அல்குர்ஆன் வசனம் மற்றும் நபி மொழியிலிருந்து 12 சந்திர மாதங்களுக்கு 29 அல்லது 30 நாட்கள் எனில் மொத்தம் 354/355 நாட்கள்தான் இருக்க வேண்டும். இதில் எந்த மாதம் 29 நாட்கள், எந்த மாதம் 30 நாட்கள் என்று எவ்வாறு முடிவு செய்வது?
உலமாக்களின் அலட்சியப்போக்கு:
அரபி கற்ற மவ்லவிகள் என்று சொல்லக் கூடியவர்கள் பாக்கவி, மதனீ, உமரி, உலவி, காசிமி என்ற பட்டத்தைத் தன் பெயருக்கு பின்னால் போடுகிறார்களே அல்லாமல் அல்குர் ஆன் என்ன கூறுகிறது என்பதை நடுநிலையோடு சிந்திக்கத் தவறி விட்டார்கள். மற்றவர்கள் கூறக் கூடிய கருத்துக்கு சிறிதும் செவிசாய்ப்பதில்லை.
சூரியன், சந்திரன் பற்றிய வசனங்களில் அரபி பதமானது கணக்கீடு, எண்ணிக்கை பற்றி கூறுகிறதே அல்லாமல் கணிப்பைப் பற்றி கூறவில்லை. அல்லாஹ்வுடைய அத்தாட்சிகள் தெளிவாக இருக்கும்போது கணிப்பிற்கு அவசியமில்லை. துல்லியமான கணக்கீட்டிற்கும், கணிப்பிற்கும் வித்தியாசம் தெரியாமல் உள்ளார்கள்.
மக்களின் அறியாமை:
மார்க்கம் தொடர்பான எந்த ஒரு விஷயமாக இருந்தாலும் தங்களுடைய ஆலிம்களை முழுவதும் நம்பி இருப்பதால் மக்கள் ஒவ்வொரு வருட மும் ஆழ்ந்த குழப்பத்திலேயே உள்ளனர். முதலில் குர்ஆன், ஹதீஸ்களைப் படித்து பின்பு மார்க்க அறிஞர்களின் பேச்சைக் கேட்டு, குர்ஆன், ஹதீஸிற்கு ஒத்து வந்தால் அதை ஏற்றுச் செயல்படலாம்.
சுய விளக்கம் அல்லது தங்களுடைய இயக்கத்திற்கோ, ஜமாஅத்திற்கோ சாதகமாக வளைத்து, திரித்து, விளக்கம் கொடுத்தால் நிராகரித்து விடலாம். ஏனென்றால் தங்களுடைய ஆலிம்களை கண்மூடித்தனமாக பின்பற்றுவதை 9:31ல் அல்லாஹ் எச்சரிக்கிறான்.
ஒரு சமயம் அதிபின்ஹாதிம் என்கிற சஹாபி (இவர் கிறிஸ்தவ மதத்திலிருந்து இஸ்லாத்தைத் தழுவியவர்) நபி(ஸல்) அவர்கள் 9:31 என்கிற இறை வசனத்தை ஓதுவதை செவியுற்றார். அவர் நபி(ஸல்) அவர்களிடம் “நிச்சயமாக நாங்கள் அவர்களை வணங்கவில்லை என்று கூறினார். அதற்கு நபி(ஸல்) அவர்கள் அவர்பால் திரும்பி அல்லாஹ் உங்களுக்கு ஹலாலாக்கியதை அவர் கள் உங்களுக்கு ஹராமாக்கவில்லையா? அதை நீங்களும் ஹராமாக்கிக் கொண்டீர்கள். மேலும் அல்லாஹ் ஹராமாக்கியதை அவர்கள் உங்க ளுக்கு ஹலாலாக்கவில்லையா? அதை நீங்கள் ஹலாக்கிக் கொண்டீர்கள் அல்லவா? என்று வினவினார்கள். அதற்கு அதி பின் ஹாதிம் அவர்கள்: நாங்கள் நிச்சயமாக அதைச் செய்தோம் என்று பதிலுரைத்தார். அதற்கு நபி(ஸல்) அவர் கள் “அந்த வகையில் தான் நீங்கள் அவர்களைத் தொழுதீர்கள் என்று கூறினார்கள்.
இந்த நிலைதான் முஸ்லிம் சமுதாயத்திலும் புற்றுநோய் போல புரையோடிப் போய் உள்ளது. ஒவ்வொரு பிரிவு ஜமாஅத்துகளும், இயக்கங்களும் தக்லீது கூடாரத்திற்குள் சிக்கிக் கொண்டு தவிக்கின்றனர். ஷஃபான் இறுதியில் மேற்கு நோக்கி பார்வையை செலுத்துகின்றனர். ஒவ்வொரு வருடமும் நோன்பு ஆரம்பிப்பதிலும், நோன்பை முடிப்பதிலும் தடுமாற்றத்தையும், சந்தேகத்தையும், மன சஞ்சலத்தையும் சந்திக்கின்றனர்.
மவுண்ட் ரோடு மவ்லவியின் மெளட்டீகம்:
பிறை விஷயத்தைப் பொறுத்தவரை சு.ஜவினர். ததஜ மெளலவிகள், ஜாக் மெளலவிகள் ஆகியோரிடையே இன்னும் தெளிவான நிலைப்பாடு இல்லை.JAQH ஆதரவாளர்கள் அறிவியலை ஏற்றுக் கொண்டால் ததஜவினர் கண்ணால் பிறை பார்க்கச் சொல்கின்றனர். ததஜ மவ்லவிகளின் ஏகத்துவம் (நவம்பர் 2008) இதழில் பிறை பற்றிய விளக்கம் இவர்களைப் பற்றிய அறியாமையை வெளிச்சம் போட்டு காட்டியது.
காதியானிகளுக்கு காஃபிர் ஃபத்வா கொடுத்து ஒவ்வொரு ரமழானிலும் தமிழன் TV சஹர் நேர நிகழ்ச்சியில் புகழ் பெற்றவர் மவுண்ட் ரோடு மவ்லவி அவர்கள். பிறை பற்றிய கேள்வி கேட்டபோது அபூ அப்தில்லாஹ்வும், அலிமனிக் பானும் கணிக்கிறார்கள் என்று பச்சைப் பொய்யை அள்ளி விட்டார். இவர்கள் இருவரும் பிறையைக் கணிக்கிறார்கள் என்பதற்கு ஆதாரம் தருவாரா?
மேலும் ருஃயத் வார்த்தைக்கு கண்ணால் பார்ப்பது மட்டுமே என்று விளக்கம் கூறி, தன்னுடைய அரபி புலமையை(?) வெளிக் காட்டினார். மேலும் உலகில் பிறை பிறந்த செய்தியை கேட்டாலும் ஏற்றுக் கொள்ளலாம் என்கிறார்.
மக்கா ஹஜ் சர்வீஸை மூடுவாரா?
ரமழான் மாதம் பிறந்து விட்டாலே நோன்பு நோற்பது கட்டாயக் கடமை. இன்றைய சூழலில் முதல் பிறையை கண்ணால் காண்பது மிகமிகக் கடினம். பிறை பிறந்த செய்தி கிடைத்ததும் நோன்பு நோற்காமல் இருந்தால் அது மாபெரும் குற்றம். அதுபோல் அல்குர்ஆன் 22:27 என்ற வசனத்தில் ஹஜ் செய்ய மெலிந்த ஒட்டகத்தில் வருவார்கள் என்பதை ஆதாரம் காட்டி ஒட்டகம் இருந்தால்தான் ஹஜ் செய்ய வேண்டும் என்று சட்டம் சொல்வார்களா?
நியாயத் தீர்ப்பு நாளில் வசதி படைத்த ஒருவர் ஹஜ் செய்யாமல் இருந்து, அது பற்றி அல்லாஹ்(ஜல்) கேட்கும்போது அந்த வசதி படைத்தவர் யா அல்லாஹ் என்னிடம் ஒட்ட கம் இல்லை. அதனால் ஹஜ் செய்யவில்லை என்று கூறுவாரா? மேலும் மெளலவி அவர்கள் ஹஜ் செய்வது ஒட்டகத்தில் சென்றால்தான் கூடும் என்று நேரடியாக மேற்கண்ட ஆயத்திற்குப் பொருள் கொண்டால், தன்னுடைய ஹஜ் சர்வீஸ் அலுவலகத்தை குர்ஆன் வசனத்திற்கு முரண்படுகின்றது என்று மூடிவிடுவாரா?
முஸ்லிம்களே கண்மூடித்தனமாக அப்படியே இவர்கள் சொல்வதைக் கேட்காமல் குர்ஆனை நன்கு ஆராய்ந்து யாருடைய கருத்து குர்ஆன், ஸுன்னாவிற்கு ஒத்து வருகிறது என்று பார்த்து செயல்படுங்கள். ஏனென்றால் அல்லாஹ் கூறுகிறான்.
“”எவர்கள் நம்முடைய வழியில் முயற்சிக்கின்றார்களோ அவர்களை நிச்சயமாக நாம் நம்முடைய வழியில் செலுத்துகின்றோம். நன்மை செய்பவர்களுடன் நிச்சயமாக அல்லாஹ் இருக் கின்றான்” (அல்குர்ஆன் 29:69)
அரபி கற்றவர்களுக்கு அனைத்தும் தெரியுமா?
உலகில் உள்ள மனிதர்களுக்கு அனைத்து விஷயங்களையும் கற்றுக் கொள்ள முடியாது. அரபி தெரிந்தவர்களுக்கு அறிவியல் தெரியாமல் இருக்கலாம். எவ்வளவு பெரிய அறிவாளியாக இருந்தாலும் சிறிய விஷயம் கூட தெரியாமல் இருக்கலாம். கணக்கீட்டின் அடிப்படையில் சந்திரக் கணக்கை நம் சகோதர முஸ்லிம்கள் ஹிஜ்ரா கமிட்டி மூலமாக ஆய்வு செய்து கடின முயற்சிக்குப் பிறகு சமர்ப்பித்துள்ளனர். உலமாக்கள் அனைவரும் சேர்ந்து நடுநிலையோடு ஆய்வு செய்து எந்தவித விருப்பு வெறுப்பு மின்றி உலக ஆதாயம் தேடாமல் அல்லாஹ்விற்காக முயற்சி செய்தால் நல்வழி கிடைக்க வாய்ப்பு ஏற்படும்.
குர்ஆனைப் பற்றிய அறிவும், உலகக் கல்வியும் கற்று அல்லாஹ்விடம் துஆ செய்து, கல்வி ஞானத்தைக் கேட்டால் நிச்சயமாக அல்லாஹ் நேர்வழி காட்டுவான். மதரஸாவில் குர்ஆனை மனனம் மட்டும் செய்து, அதனை கவனமாக ஆராயாமல் இருந்தால் எப்படி மார்க்கத்தை விளங்கமுடியும்?
மெல்லிய பிறையும், துல்லிய பார்வையும்:
ஏகத்துவம் மாத இதழ்(ஆகஸ்ட்2010) பக்கம் 54ல் மேற்கண்ட தலைப்பில் ஒரு ஆக்கம் இடம் பெற்றிருந்தது. பங்காளிகளாக TNTJ ம் JAQHம் பல வருடங்களாக பிறை பற்றி பிதற்றிக் கொண்டே இருக்கின்றனர். இவர்களுடைய பக்தர்களை ஏமாற்ற ஃபான் இறுதி யில் பிறை பற்றிய கருத்தரங்கம் நடத்தி அறிவுப் பூர்வமான(?) விளக்கத்தை கொடுத்து முஸ்லிம் களை முட்டாள்களாக ஆக்குகின் றனர். இந்த வருடமும் மூபுஞக்ஷி சார்பாக கருத்தரங்கம் சென்னையில் நடைபெற்றது.
SKன் முடிவுக்கு வக்காலத்து வாங்கிய ஏகத்துவக் குழு:
பக்கம் 54ல் அல்லாஹ்வின் கிருபையால் ஜாக் தலைமை இதற்கு ஒரு முற்றுப்புள்ளி வைத்து முடிவு கண்டுள்ளது. இதில் கமாலுத்தீன் மதனி யாருடைய முகத்தாட்சண்யமும் பார்க்காமல் விமர்சனத்திற்குக் கவலைப்படாமல் 17:36 வசனத்தை மேற்கோள்காட்டி “கணிப்பு நிலைப்பாட்டை’ உடைத்திருக்கின்றார்”. பிறையைக் கண்ணால் கண்டு நோன்பு நோற்பது, விடுவது என்ற அழகிய முடிவுக்கு, ஹதீஸிற்கு ஒத்த கருத்திற்கு வந்திருக்கின்றார்.
என்னே மதியீனம்? கணிப்பிற்கும், கணக்கீட்டிற்கும் இன்னும் வித்தியாசம் தெரியாத ஜாஹில்களாகவே இருக்கின்றார்கள். செவிடன் காதில் ஊதிய சங்கு நிலைதான் உள்ளது. அறியாமை உச்சக் கட்டத்தில்தான் உள்ளார்கள்.
இவர்களுடைய நிலையை அல்குர்ஆனில் அல்லாஹ் நெற்றிப் பொட்டில் அடித்தது போல் சொல்கிறான்.
“”ஆனால் அவர்களோ தம் காரியத்தைத் தமக்கிடையே பல பிரிவுகளாகப் பிரித்து விட்டனர். ஒவ்வொரு பிரிவினரும் தம்மிடம் இருப்பதைக் கொண்டே மகிழ்ச்சி அடைபவர்களாய் இருக்கின்றனர்” (23:53)
“எனவே அவர்களை ஒரு காலம் வரை தம் அறியாமையிலேயே ஆழ்ந்திருக்க (நபியே!) நீர் விட்டுவிடும்” (23:54)
மேலும் அதே பக்கம் 54ல் (ஏகத்துவம் ஆகஸ்ட் 2010)
…. மார்க்கத்தை சரியாக விளங்காத அரை வேக்காடு ஆசாமிகளின் அறியாமைக்கும், அதிகப்பிரசங்கித் தனத்திற்கும் அதிரடி கொடுத்திருக்கின்றார். மேற்கு வானத்தில் பிறக்கின்ற மெல்லிய பிறையை நோக்கி ஒரு துல்லிய பார்வையை செலுத்தியிருக்கின்றார்.
அன்பிற்குனிய சகோதரர்களே தவ்ஹீத் முல்லாக்களின் வார்த்தை ஜாலத்தைக் கவனித்தீர்களா? இவர்களுடைய திருச்சபைகளில் மதரஸா க்களில்(?) கல்வி கற்றால்தான் மார்க்கம் விளங்கும் என்று சொல்ல வருகிறார்களா? யார் அரை வேக்காடு? யார் அறியாமையில் இருக்கின்றார்கள்? யாருக்கு அதிகப் பிரசங்கித்தனம்? உள்ளது நீங்களே முடிவு செய்து கொள்ளுங்கள்.
மார்க்கத்தை சரியாக விளங்காதவர்கள் அரை வேக்காடு என்றால், மார்க்கத்தை சரியாக விளங்கியவர்கள் முழு வேக்காடு ஆசாமிகளா? துல்லிய பார்வையை செலுத்திய சகோதரர் SKஐ ஏகத்துவ நிபுணர் குழுவினர் பிறையைப் பார்த்து தகவல் சொல்ல சாட்சியாக வைத்துக் கொள்வார்களா?
பிறை பற்றிய கேள்விக்கு SKன் தடுமாற்றமான பதில் : (அல்ஜன்னத் ஜூலை 2010)
17:36 ஆயத்தை மேற்கோள்காட்டி, “எனக்கு பிறைக் கணக்கை “கணித்து’ முன்கூட்டியே சொல்லக்கூடிய ஞானம் இல்லை. அடுத்தவர்கள் சொல்வதைக் கேட்டுத்தான் சொல்ல வேண்டும். அது சரியா? தவறா? என்று ஆய்வு செய்து தீர்மானிக்கின்ற ஞானமும் எனக்கில்லை. அப்படியிருக்க நான் பொறுப்பில் இருந்து கொண்டு கண்மூடித் தனமாக அறிவிப்புச் செய்ய முடியாது. அது இறைத் தூதரின் நேரடி சொல், செயலுக்கு எதிரானதாக ஆகிவிடும்…
SK அவர்களே
மதனியான உங்களுக்கும் கணிப்பிற்கும்- கணக்கீட்டிற்கும் உள்ள வேறுபாடு தெரிய வில்லையா?
ஆய்வு செய்து தீர்மானிக்கின்ற ஞானம் உங்களைத் தவிர வேறு யாருக்கும் அல்லாஹ் தர மாட்டானா?
பொறுப்பில் இருப்பதால் 21:7வது வசனம் உங்கள் துல்லிய பார்வைக்கு தெரியவில்லையா?
சரியா? தவறா? ஆய்வு செய்து தீர்மானிக்கின்ற ஞானம் உங்களுக்கு இல்லாவிட்டாலும் நபி(ஸல்) கூறிய செய்தி உங்களுக்குத் தெரியாதா?
“ஒரு ஆய்வாளன் ஆய்வு செய்து சரியான முடிவைக் கண்டால் அவனுக்கு இரு நற்கூலிகள். தவறான முடிவைக் கண்டால் ஒரு நற்கூலி வழங்கப்படும்”… புகாரீ, 344, 3662, 6919, 7351, முஸ்லிம்: 1716, 3576, 4584, திர்மிதி: 1326.
இறைத்தூதரின் நேரடி சொல், செயலுக்கு எதிரானதாக ஆகிவிடும் என்கிறீர்களே, அப்படியென்றால் உங்கள் தவ்ஹீது கூட்டாளிகள் மக்களை கூறுபோட்டு நபி(ஸல்) அவர்களின் போதனைக்கு மாற்றமாக (காண்க புகாரீ 7084) மட்டும் செயல்படுகிறீர்களே. இதற்கு மட்டும் ஞானம் உங்களுக்கு எப்படி வந்தது?
7:3ல் அல்லாஹ் எச்சரித்தும் நீங்கள் பொறுப்பில் இருந்து மற்றவர்கள் உங்களைப் பின்பற்ற வேண்டும் என்கிறீர்களா? இப்படித்தான் ஒவ்வொரு பிரிவினரும் நாங்கள்தான் ISAமுத்திரை பெற்ற Pure ஜமாஅத், சொர்க்கத்து ஜமாஅத், இந்த ஜமாஅத்தை விட்டுச் சென்றால் வழி கேட்டில் சென்று விடுவான், நாங்கள்தான் பரிசுத்தவான்கள் மற்றவர்கள் எல்லாம் முஸ்லிம்களே இல்லை என்று பீற்றுகிறார்களே. இது தான் இஸ்லாத்தைப் பின்பற்றுவதன் அடையாளமா? அல்லாஹ் கூறுகிறான்.
“சிலரை அவன் நேரான வழியில் செலுத்தியிருக்க மற்றோர் மீது வழிகேடே விதிக்கப்பட்டதன் காரணம், நிச்சயமாக அவர்கள் அல்லாஹ் வையன்றி ஷைத்தான்களையே தங்கள் தோழர்களாக எடுத்துக் கொண்டதுடன் தாங்கள் நிச்சயமாக நேரான வழியில் இருப்பதாகவும் எண்ணிக் கொண்டதுதான். (7:30)
மேலும் பக்கம் 56ல் கண்மூடித்தனமாக எதையும் பின்பற்றக்கூடாது.அப்படியிருந்தும் சிலருடைய பேச்சை அப்படியே நம்பி விடுகின்றனர். அவர்களிடத்தில் விளக்கம் கேட்டால் சொல்லத் தெரிவதில்லை. இது கண்மூடிப் பின் பற்றுவதாகாதா? இது எந்த அடிப்படையில் நியாயமானது? எனவே எது தெளிவாக இருக்கிறதோ அதையே பின்பற்ற வேண்டும்.
சகோ. SK அவர்கள் இவ்வாறு சொல்வதற்குக் காரணம் பிறை பற்றி அறிவிப்பு செய்து JAQH சார்பாக நோட்டீஸ் அடித்தால் அதை ததஜவினர் நையாண்டி செய்வர். எனவேதான் எதற்கு இந்தப் பிரச்சனை என்று நினைத்து கண்ணால் பார்த்து தெரிந்து கொள்ளுங்கள் என்று ததஜவினர் பக்கம் திரும்பியுள்ளார். ஹிஜ்ரா கமிட்டியினர் ஆய்வு செய்து கருத்து சொன்னாலும் எங்கள் மண்டையில் ஏறவில்லை என்று கூறுகின்றனர். ஆயினும் தங்களை ஆலிம்கள் என பெருமைப்பட்டுக் கொள்கின்றனர்.
SK அவர்கள் விளக்கம் கேட்டால் சொல்லத் தெரிவதில்லை என்று கூறுகிறார். யாரிடம் விளக்கம் கேட்டார்? அல்லாஹ் 21:7ல் கூறுவது போல் திக்ரை உடையவகளிடம் தானே கேட்கச் சொல்கிறான்.
முஸ்லிம்கள் குர்ஆனைப் பற்றிப் பிடிக்காதவரை விடிவு காலம் கிடையாது:
அல்குர்ஆனை நன்கு அரபி கற்றவர்கள் மொழி பெயர்த்தாலும் அதை தாராளமாகப் படிக்கலாம். சில தவறுகள் ஏற்படவும் வாய்ப்புண்டு. இதில் யாரும் விதிவிலக்கு கிடையாது. அப்படியும் சந்தேகம் வந்தால் தெரிந்தவர்களிடமோ, அரபி அகராதியைப் பார்த்தோ அறிந்து கொள்ளலாம். ஆனால் ததஜவினரிடம் புதிய தக்லீது மீண்டும் தோன்றியுள்ளது. சுன்னத் வல் ஜமாஅத்தினர் மொழி பெயர்த்த குர்ஆனைப் புறக்கணிக்க வேண்டுமாம். அண்ணன் மொழி பெயர்த்த தர்ஜமாவைப் படித்தாலே ஆலிம் ஆகி விடலாமாம். மேலும் மதரஸா போகாமலே மார்க்க அறிஞர் ஆகிவிடலாமாம் என்ற செய்தி எமக்கு வந்த SMS மூலம் தெரிந்து கொண்டோம்.
ஆனால் தவ்ஹீது ஆலிம்கள் என்று சொல்லக் கூடியவர்கள் தாயீக்கள் பற்றாக்குறையைப் போக்க கிளைகளே பொறுப்பேற்க வேண்டும் என்று சொல்கிறார்கள். ஆனால் கிளை நிர்வாகிகளோ அண்ணன் தர்ஜமாவைப் படித்தாலே பெரிய அறிஞராகி விடலாம் என்கின்றனர். இந்த விஷயம் தலைமை குருக்கள் பீடத்திற்கு தெரியுமோ? என்னவோ! சகோதரர்களே எல்லா தர்ஜமாக்களையும் படியுங்கள். நடுநிலைப் போக்கை மேற்கொள்ளுங்கள்.
மேலும் ததஜவின் ஒரு தீவிர பக்தர், பீ.ஜை அவர்களை ரஹ்மத்துல்லாஹி அலைஹி என்று அடைப்புக் குறிக்குள் போட்டு Internet ல் கேட்ட கேள்விக்கு மறுப்பு கொடுக்கும் விதமாக பதிவு செய்துள்ளார். (ரஹ்) என்று இறந்து போன இஸ்லாமியப் பெரியவர்களுக்காக இப்படிப் பிரார்த்திப்பது வழக்கம். அந்த ததஜ தீவிர பக்தர் என்ன சொல்ல வருகிறார்? நாளை ரழியல்லாஹு அன்ஹு என்று சொன்னாலும் சொல்வார்கள். அதையும் மீறி நபி என்று சொன்னாலும் சொல்வார்கள். அல்லாஹ் தான் காப்பாற்ற வேண்டும்.
Telescope, Microscope வித்தியாசம் தெரியாத சவூதி முஃப்திகள்:
பிறையை Telescope மூலம் பார்க்க அனுமதி இருக்கிறதா என்ற கேள்விக்கு சவூதி முஃப்தி, Telescope மூலம் பார்த்தால் பிறை பெரிதாக தெரியும் என்று பிதற்றியுள்ளார். Telescope (தொலைநோக்கி) என்பது தொலைவில் உள்ள பொருளை நன்கு பார்க்க முடியும். ஆனால் அது பெரிதுபடுத்திக்காட்டாது என்ற சிறிய விஷயம் கூட தெரியாமல் இருக்கிறார்கள். இந்த Fatwa(?)வை மாற்று மத சகோதரர்கள் பார்த்தால் சிரிப்பார்களா? இல்லையா? Microscope-நுண்ணோக்கிதான் சிறிய பொருளை பெரிது படுத்திக் காட்டும் என்ற விஷயமும் அறிந்துள்ளார்களோ என்னவோ? வானில் பிறை தெரியாவிட்டாலும், வானவியல் நிகழ்வுகளை கணக்கீடு செய்யக்கூடாதாம். ஆனால் பிறை தெரிந்தாலும், அந்தப் பிறை பார்க்கப்பட்ட விதம் வானவியல் ரீதியாக அறிந்தாலும் அதை ஏற்றுக் கொள்ளலாம் என்று கூறுகிறார். தெரியக்கூடிய பிறையை ஏன் மீண்டும் தொலைநோக்கி மூலம் பார்க்க வேண்டும். தெரியும் ஆனால் தெரியாது என்கிறார்களோ இந்த சவுதி முஃப்திகள்.
ததஜவின் அதிசய காலண்டர் :
பிறையைக் கண்ணால் பார்க்க வேண்டும் என்று கூறும் பிரிவினர் 12 மாதத்திற்கும் பிறை தேதியை போட்டுள்ளார்கள். இது எப்படி சாத்தியம் என்று தெரியவில்லை. இவர்களுடைய காலண்டரில் ஆகஸ்ட் 9ம் தேதி அன்று (திங்கள்) அமாவாசை என்று குறிப்பிட்டுள்ளார்கள். அன்றைய தேதிக்கு பிறை 27 என்றும் போட்டுள்ளார்கள்.
மாதத்தின் இறுதி நாளில் Conjuction நடை பெறுவதால் அமாவாசை ஏற்படுமா? அல்லது மன்ஸிலின் 27வது படித்தரத்தில் அமாவாசை ஏற்படுமா? எப்படிப்பட்ட ஞான சூன்யங்களாக இருக்கிறார்கள். ஆனால் கணக்கீட்டின்படி 10.08.10 அன்றுதான் Conjuction நடைபெற்றது. மறுநாள் 11.08.10 முதல் நோன்பு இருந்திருக்க வேண்டும்.
குறிப்பு என்று காலண்டரின் கீழே போட்டுள்ளார்கள். அதாவது காலண்டரில் உள்ள பிறை உத்தேசமானது. எனவே நபிவழிப்படி தீர்மானிப்பது சிறந்தது என்றும் கூறியுள்ளனர். இவர்கள் சொல்வது உத்தேசமானதா? மாபெரும் கிறுக்குத்தனமான உளறலா? மேலும் தீர்மானிப்பது நபிவழி என்கிறார்களே, அதை எப்படி தீர்மானிப்பது என்று விளக்குவார்களா?
முஸ்லிம்களே, மெளலவிகள், இயக்கத் தலைவர்கள் சொல்வதை கண்மூடிப் பின்பற்றாமல் குர்ஆன், ஹதீஸிற்கு ஏற்ப கருத்தை யார் சொல்கிறார்கள் என்பதை கவனியுங்கள். அல்லாஹ் ரப்புல் ஆலமீன் மார்க்கத்தை விளங்கக் கூடிய ஞானத்தையும், நேர்வழியும் காட்டப் போதுமானவன்.