விமர்சனம்: பெரியார், வீரமணி, டாக்டர் கோவூர் போன்றவர்கள் கண்ணுக்குத் தெரியாத கடவுளை நம்புவது காட்டுமிராண்டித்தனம். பகுத்தறிவுக்கு ஒவ்வாதது. கடவுளைக் காட்டினால் நம்புகிறோம், என்று சவால் விட்டதை உண்மையான பகுத்தறிவு என்று ஏற்றுக் கொள்கிறீர்களா? S. அப்துல்லாஹ், திருச்சி – 8
விளக்கம்: எந்த உண்மையான பகுத்தறிவாளனும் இதை பகுத்தறிவு என்று ஒப்புக் கொள்ளமாட்டான். இதனைப் பார்த்தறிவு அதாவது ஐயறிவு என்றே சொல்லுவான். இன்னும் பச்சையாகச் சொன்னால் இதை மிருக அறிவு என்றே சொல்ல வேண்டும்.
கண்ணியமிக்க ஒரு கணவான் உங்களிடம் வந்து எதிர்வரும் 14.5.96 அன்று தனது வீட்டில் பெரியதொரு விருந்துபசாரம் நடைபெற இருப்பதாகவும், அதில் நீங்கள் அவசியம் கலந்துக் கொள்ள வேண்டும் என்று அழைப்பு விடுகிறார். பகுத்தறிவு ரீதியாக இதை எப்படி ஏற்பீர்கள்? அவர் வீட்டிற்குப் போய் அந்த விருந்துக்குரிய ஏற்பாடுகள் அனைத்தையும் கண்ணால் பார்த்த பின்னர்தான் ஏற்பீர்களா? அப்படியே அவர் வீட்டிற்குப்போய் நேரில் நீங்கள் பார்ப்பதால் 14.5.96 நடைபெற இருக்கும் விருந்துக்குரிய அறிகுறிகள் ஏதும் அதற்கு முன்னரே உங்கள் பார்வையில் படுமா? இல்லையே?
அந்த கனவானின் நன்னத்தையில் நம்பிக்கை வைத்து பகுத்தறிவு ரீதியாகச் சிந்தித்து அவரது கூற்றிலுள்ள உண்மையை ஏற்றுக் கொள்கிறீர்கள். குறிப்பிட்ட தேதியில் அவர் வீடு சென்று பார்க்கும் போது விருந்துக்குரிய அத்தனை ஏற்பாடுகளையும் கண்ணால் பார்க்கிறீர்கள். மகிழ்ச்சியுடன் உண்டு அனுபவிக்கிறீர்கள். இது யாருக்குப் பொருந்தும் பகுத்தறிவுள்ள மனிதனுக்கு மட்டும் தானே பொருந்தும்! மிருகத்திற்குப் பொருந்துமா?
ஒரு மாட்டையோ, ஆட்டையோ விழித்து ஏய்! மாடே அல்லது ஆடே உனக்காக 14.5.96 அன்று பெரியதொரு விருந்து ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. நீ அவசியம் வந்து கலந்து கொள்ள வேண்டும் என்று சொன்னால் அந்த மிருகத்திற்கு அது புரியுமா? ஐயறிவு மிருகமான அது பகுத்தறியும் திறன் பெற்றுள்ளதா? இல்லையே! அதற்கு முன்னால் ஒரு மரக் கொப்பைக் அசைத்துக் காட்டி அழைத்தால் அது வேகமாக ஓடிவரும். அதாவது கண்ணால் கண்ட பின் வேகமாக ஓடிவரும். இது பகுத்தறிவு செயலா? பார்த்தறிவு – மிருக அறிவு செயலா? சிந்தியுங்கள். எனவே கடவுளை பார்த்துத்தான் ஏற்றுக் கொள்வேன் என்று அடம் பிடிப்பது பகுத்தறிவு வாதமேயல்ல; பார்த்தறிவு வாதம். அதாவது மிருக வாதம்! இதைப் போய் பகுத்தறிவுடன் முடிச்சுப் போடுவது அதைவிட அறிவீனமாகும்.
இறைவனையும், மறுமையையும் கண்ணால் பார்த்த பின்னரே ஏற்பேன் என்பது பகுத்தறிவு வாதமே அல்ல. விருந்து கொடுத்த அந்த கண்ணியமான கனவானைப் போல் ஏன் அதைவிட ஆயிரம் மடங்கு கண்ணியத்திற்கும், உண்மைக்கும் உரித்தானவர்களான இறைத்தூதர்களை ஏற்று அவர்களின் உபதேசங்களை பகுத்தறிவு கொண்டு ஆராய்ந்து ஏற்பதே பகுத்தறிவாகும். விருந்துடைய குறிப்பிட்ட தேதிக்கு முன்னால் விருந்து கொடுப்பவரின் வீட்டுக்குப் போயே விருந்துடைய ஏற்பாட்டைக் கண்ணால் பார்க்க முடியவில்லையே. இந்த நிலையில் மரணத்திற்குப் பின்னுள்ள மறுமையின் வாழ்க்கையை இவ்வுலகிலிருந்து கொண்டே கண்ணால் பார்க்க முற்படுவது எவ்வளவு பெரிய மதியீனம் என்பதைச் சிந்தியுங்கள். மேலும் கண்ணால் கண்ட பின் ஏற்பதற்கு மனிதனுக்கு பகுத்தறிவு அவசியமில்லை. மிருகங்களுக்கு இருக்கும் ஐயறிவே தாராளமாகப் போதும். இறைமறுப்பாளர்கள் பகுத்தறிவாளர்களா அல்லது பார்த்தறிவாளகர்களா அதாவது ஐயறிவாளர்கள் என்பதை நீங்களே முடிவு செய்யுங்கள்.