மத்ஹப்களை பின்பற்றக் கூடாது-ஏன்?

in 2011 ஜனவரி

எம்.கே.தீன், திருச்சி

முஸ்லிம்களே!
திருகுர்ஆன் வசனங்கள் இறைவனிடமிருந்து அந்தந்தக் காலகட்டங்களில், ஜிப்ரயீல் என்கிற வானவர் மூலம், நபி(ஸல்) அவர்களுக்கு அருளப்பட்டவை என்பது, அனைவரும் அறிந்த ஒன்று. அப்படி இறங்கிய வசனங்களை துணியிலும், தோலிலும், எலும்புத் துண்டுகளிலும் எழுதி வைத்து, பிற்காலத்தில் அவை, ஒன்றாகத் தொகுக்கப்பட்டது என்பது அனைவரும் அறிந்த ஒன்று. ஆனால் நபி(ஸல்) அவர்களுடைய வாழ்வும்-வாக்கும் என்று அழைக்கப்பெறும் ஹதீஸ்கள், யாராலும் எதிலும் எழுதி வைக்கப்படாமல் இருந்து வந்தன. அதனால், நபி(ஸல்) அவர்களின் மறைவிற்குப் பின், இஸ்லாத்தை அழித்தால்தான் தங்களுடைய மதத்துக்கு வாழ்வு கிடைக்கும்; அதன்மூலம் உரிய ஆதாயங்களைப் பெறலாம் என எண்ணிய யூதர்களும் கிருஸ்தவர்களும், நபி(ஸல்) அவர்கள் அதைச் சொன்னார்கள், இதைச் சொன்னார்கள் என்று கூறி, இஸ்லாமிய மார்க்கத்தை வழிகெடுக்க நினைத்தார்கள். இதனைத் தெரிந்து கொண்ட இஸ்லாமியப் பெரியார்கள், ஸஹீஹான (உண்மையான) ஹதீஸ்க ளை திரட்டும் பணியில் ஈடுபட்டு, மிக சிரமத்துக் கிடையில் ஒன்று திரட்டி, நூல்களாக வெளியிட்டார்கள்.

இப்படி வெளியிடுவதற்கு முன்னரும் பின்னரும், இட்டுக் கட்டப்பட்ட ஹதீஸ்களுடன் கலந்து, மார்க்க சட்ட நூல்கள் என்ற பெயரில் பல நூல்கள் வெளி வந்து விட்டன. இமாம் மாலிக்(ரஹ்) அவர்கள் (காலம்; ஹிஜ்ரி 93-179) எழுதிய முஅத்தா மாலிகி என்கிற நூலும்; இமாம் ஷாபிஈ(ரஹ்) அவர்கள் (காலம்: ஹிஜ்ரி150-204) எழுதிய முஸ்னத் ஷாபிஈ என்கிற நூலும்; இமாம் ஹன்பலி(ரஹ்) அவர்கள் (காலம்: ஹிஜ்ரி 164-241) எழுதிய முஸ்னத் அஹ்மத் என்கிற நூலும் அன்றைய மக்களிடத்தில் மார்க்க சட்ட நூல்களாக இருந்து வந்தன.
ஆனால், இவர்கள் மூவருக்கும் முந்தியவராக (காலம் : ஹிஜ்ரி 80-150), இமாமுல் அஃலம் என்று போற்றப்பட்டவராக இருந்த இமாம் அபூ ஹனீபா(ரஹ்) அவர்கள், எந்தவித நூலையும் எழுதவுமில்லை; வெளியிடவுமில்லை. ஆனால், அவருடைய இறப்பிற்குப் பின், மேற்கூறிய மூவரின் பெயரில் மத்ஹபுகளை ஏற்படுத்திக் கொண்டு செயல்பட்டது போல், இவர்கள் பெயரிலும் ஒரு மத்ஹபை ஏற்படுத்திக் கொண்டு, எழுதியவர் யார்? எப்பொழுது எழுதப்பட்டது? என்கிற விபரம் கூட இல்லாத சில நூல்களை வைத்துக்கொண்டு, இதுதான் ஹனபி மத்ஹபின் சட்ட நூல்கள் என்று கூறிக் கொண்டு, அதன்படியே ஃபத்வாவும் கொடுத்து வருகிறார்கள். அந்த பல நூல்களில், ஃபத்வா ஆலிம்கீரி என்கிற நூல், கடந்த 12ம் நூற்றாண்டில், ஒளரங்கசீப் காலத்தில்தான் தயாரிக்கப்பட்டது என்பது தெரிய வருகிறது.

எனவேதான், முன்னோர்களான, அருமை இஸ்லாமியப் பெரியார்கள் மிகமிக சிரமப்பட்டு ஒன்று திரட்டிய ஹதீஸ் கிரந்தங்களில் அறிவிப்பாளர்கள் வரிசையுடன் (சனது) காணப்படும் ஹதீஸ்களை ஆராய்ந்து அவற்றில் ஆதாரப்பூர்வ மான ஹதீஸ்களை மட்டும் எடுத்து அவற்றின்படி நடக்காமல் பலவீனமான, இட்டுக் கட்டப்பட்ட ஹதீஸ்களுடன் கலந்து வெளியிடப்பட்ட நூல்களையும், மத்ஹபுகளையும் பின்பற்றுவது தவறாகும். நேர்வழிவிட்டு கோணல் வழிகளில் செல்வதாகும். காரணம் “உங்களிடம் இரண்டு பொருள்களை விட்டுச் செல்கிறேன்; அவற்றைப் பின்பற்றினீர்களேயானால் வழி தவறவே மாட்டீர்கள்” என்பது நபி (ஸல்) அவர்களின் நேரடியான கட்டளை. நபி (ஸல்) அவர்கள் கட்டளையிட்டுள்ளதற்கேற்ப, குர்ஆன், ஹதீஸ் ஆகிய இரண்டை மட்டுமே பின்பற்றி நடந்து, “தீயச் சக்திகளிலிருந்து தப்பித்துக் கொள்ள” வேணுமாய் (அல்குர்ஆன் 7:3, 33:36,66,67.68) கேட்டுக் கொள்கிறோம்.

Previous post:

Next post: