அபூ முஹம்மது நஜ்ம், ஏர்வாடி
…. என்று மாறும் யா அல்லாஹ்!
உன்னுடைய சத்திய வழிகாட்டல் நூல் அல்குர்ஆனில் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களைப் பார்த்து சொல்லும் போது
(நபியே!) நீர் பொறுமையுடனிருப்பீராக! நீர் பொறுமையாய் இருப்பது அல்லாஹ்வைக் கொண்டே தவிர இல்லை; அவர்களைப் பற்றி நீர் கவலைப்பட வேண்டாம்; அவர்கள் சூழ்ச்சி செய்வதினால் நீர்(மன) வேதனையில் ஆகி விட வேண்டாம். (16:127) என்று சொல்லி நபி ஸல் லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களைப் பார்த்து ஆறுதல் சொல்கிறாய். உன்னுடைய இந்த ஆறுதல் எல்லா விசுவாசிகளுக்கும் பொருந்தும்! யா அல்லாஹ்! உன்னுடைய இந்த சத்திய வார்த்தை “உம்மத்தன் வாகிதாவை’ ஒன்றுபட்ட சமுதாயத்தை நிலைநாட்ட வேண்டும்; உனது ரசூல் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் வழிகாட்டி விட்டுச் சென்ற “ஜமாஅத் அல் முஸ்லிமீன்’ மட்டுமே உலகளாவிய அளவில் இருக்க வேண்டும் என்று கவலை கொள்வோருக்கு மன ஆறுதலை அளித்தாலும், இந்த முஸ்லிம் சமுதாயத்தின் நிலையை பார்த்து வேதனைகள் படுவதைத் தவிர வேறு வழி எங்களுக்கு இல்லை! என்றாலும் மறுமை நாளில் தீர்ப்பு வழங்குவாய்! தீர்ப்பு வழங்கு வோனில் உன்னைத் தவிர நீதி வழங்குவோன் யாரும் நிச்சயமாக இல்லவே இல்லை! ஆனாலும் ஒன்றுபட்ட சமுதாயமாக இந்த முஸ்லிம் சமுதாயம் மாறவேண்டும் என்ற நல்ல நோக்கத் துடன் உன்னுடைய தூதர் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் வழிகாட்டிச் சென்ற ஒன்றுபட்ட உலகளாவிய அமைப்பான “ஜமாஅத் அல் முஸ்லிமீன்’ பற்றி முஸ்லிம் சகோதரர்களிடம் நாங்கள் பேசும்போது சில நேரங்கள் பொறுமையுடனும் சில நேரங்களில் பொறுமை இழந்த நிலையிலும் பேசி விடுவதோடு மன உளச்சலுக்கும் நாங்கள் உள்ளாகி விடுகிறோம். ஆகவே யா அல்லாஹ்! எங்களை பொறுமையாளர்களாக ஆக்குவாயாக. எவர்களின் மீது நீ அருள் புரிந்தாயோ அத்தகையோரின் வழியில் நடத்துவாயாக!
யா அல்லாஹு ரப்புல் ஆலமீனே! நீ உன்னுடைய சத்திய வழிகாட்டல் நூலில் சொல்லும்போது “”இந்த மார்க்கத்தில் உங்களின் மீது எவ்வித சிரமத்தையும் அவன் ஆக்கவில்லை. உங்களுடைய தந்தை இப்ராஹீமுடைய மார்க்கத் தை(ப் பற்றிப் பிடியுங்கள்); அவன் (அல்லாஹ்) முன்னமே உங்களுக்கு “முஸ்லிம்கள்’ என்று பெயரிட்டுள்ளான். இன்னும் (குர்ஆனாகிய) இதிலும் (அதே பெயர்)தான்; (இது ஏனெனில், நமது) தூதர் உங்களின் மீது சாட்சியாளராக இருப்பதற்காகவும் நீங்கள் (மற்ற) மனிதர்களின் மீது சாட்சியாளர்களாக இருப்பதற்காகவுமாகும். (அல்குர்ஆன் 22:78)
என்று அழகாகவும், அன்பாகவும், சிறப்பாக வும் சொல்கிறாய். மேல்கண்ட 22:78 வசனத்திற்கு பலம் சேர்ப்பதுபோல் உனது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் சொல்லும்போது “”நீர் “ஜமாஅத்அல் முஸ்லிமீன்’ ஐயும், அதன் இமாம் ஐயும் பற்றிக் கொள்வீராக!” நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் இந்த சத்திய சொல் சத்தியமானது-உண்மையானது! இந்த சத்திய வார்த்தையை தான் அந்நஜாத் தொடர்ந்து எழுதி கொண்டு இருக்கிறது. சத்தியத்தை சொல்லும் நம்மைப் பார்த்து இந்த புரோகித தவ்ஹீத் மவ்லவிகளின் பக்தர்கள் “நம்மை பார்த்து, தொடுக்கும் கேள்வி என்ன தெரியுமா?
நீங்கள் ஆள் பிடிக்கிறீர்களா? என்கின்ற முட்டாள்தனமான அறிவின்றி கேட்கப்படும் கேள்விகள் நம்முடைய உள்ளத்தை பதம் பார்க்கத்தான் செய்கிறது; இங்கே நாம் வேதனைகளை சுமந்துதான் ஆகவேண்டும். ஆனால் இயக்கவாதிகளான தவ்ஹீத் மத்ஹபுவாதிகளுக்கு அது பற்றிய கவலை நிச்சயமாக இருக்கவே செய்யாது. அபூ ஜஹிலின் வாரிசுகளான புரோகித மவ்லவிகளைத் தானே இப்படிப்பட்டவர்கள் குர்ஆன், ஹதீஃத் என்ற போர்வையில், யாரை தெய்வங்களாக்கி அல்லாஹ்வுக் கும் அல்லாஹ்வுடைய தூதர் நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்களுக்கும் மாறு செய்கிறார்கள் என்பதை, அந்நஜாத் தனது கற்பனையில் எழுதாது; அல்லது அந்நஜாத் ஆசிரியர் அபூ அப்தில்லாஹ் அவர்கள் அவரது சுய கருத்தை சொல்லவும் இல்லை; அல்லாஹு சொல்கிறான்.
“அல்லாஹ்வை விடுத்து, தங்களுடைய மத குருமார்களையும், துறவிகளையும், மர்யமுடைய மகன்(ஈஸா) மஸீஹையும் அவர்கள் தங்கள் தெய்வங்களாக ஆக்கிக் கொண்டனர்; (ஆனால்) ஒரே இறைவனை வணங்குவதற்கேயன்றி (பல தெய்வங்களை வணங்குவதற்கு) அவர்கள் ஏவப்படவில்லை; அவனைத் தவிர (வணக்கத்திற்குரி யவன்) வேறு எந்த தெய்வமும் இல்லை. அவர்கள் இணை வைப்பவற்றை விட்டும் அவன் மகாத் தூய்மை யானவன்” அல்குர்ஆன் 9:31
இந்த மனித கற்பனையில் உருவான நடை முறை ஜமாஅத்துகளான சுன்னத் வல் ஜமாஅத், ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த், தப்லீஃக் ஜமாஅத், ஜாக், தவ்ஹீத் ஜமாஅத், INTJ, SDPI, MNP, PFI, என்றெல்லாம் இவர்களுக்கு பெயர் சூட்டியவர்கள் இந்த மவ்லவி புரோகிதர்கள்தானே. இவர்களை அப்படியே கண்மூடித்தனமாக பின்பற்றி நடப்பவர்கள் யார் என்பதை மேல்கண்ட அல்குர்ஆன் வசனம் தெளிவாக்கி கொண்டு இருக்கிறது! மத்ஹபு, இயக்கத் தலைவர்களான புரோகித மவ்லவிகளை தெய்வங்களாக ஆக்கி கொண்டவர்கள் உணர்வார்களா? அல்லது அல்லாஹு ரப்புல் ஆலமீன் சொல்வது போல் “”எவர்கள் தங்கள் மார்க்கத்தை (மனம் போல்) பிரித்து, பல பிரிவினர்களாகி விட்டார்களோ, அத்தகையோரில், (உள்ளவர்களாக ஆகிவிடாதீர்கள்; அவ்வாறு பிரிந்தவர்கள் உண்மையைப் புறக்கணித்து) ஒவ்வொரு பிரிவினரும் தம்மிடமுள்ளதைக் கொண்டு மகிழ்ச்சி யடைபவர்களாகயிருக்கின்றனர்” (அல்குர்ஆன் 30:32)
ஒவ்வொரு பிரிவினரும் தம்மிடமுள்ளதைக் கொண்டு மகிழ்ச்சியடைபவர்களாகயிருக்கின்றனர் என்ற அல்லாஹ்வுடைய சொல் சத்திய மானது; ஆனால் இந்த மத்ஹபு, இயக்கவாதிகளான தலைவர்கள், மவ்லவி புரோகிதர்கள், அவர்களை கண்மூடித்தனமாக பின்பற்றும் தொண்டர்கள், அல்லாஹ், அல்லாஹ்வுடைய தூதர் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களை புறம் தள்ளுவது வேதனையிலும் வேதனை!
நாம் கொடுக்கும் சத்திய குரலுக்கு, இயக்கவாதிகள் கொடுக்கும் குரல், நம்மை கேலி கிண்டலோடு பார்ப்பது, அபூ அப்தில்லாஹ் வந்து விட்டார் என்று சொல்லி ஏளனமாக சிரிப்பது, கேலியும், கிண்டலும், நக்கலும் செய்பவர்கள் உள்ளங்களை அல்லாஹுவே மிக, மிக அறிந்தவன். இருந்தாலும் கேலி செய்பவர்கள் நம்மை பார்த்து கேலி, கிண்டலும், நக்கலும் செய்ய கூடியவர்கள் செய்துவிட்டு போகட்டும். ஆனால் அல்லாஹ்வுடைய தூதர் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் வழிகாட்டிச் சென்ற உலகளாவிய அமைப்பான “ஜமாஅத் அல் முஸ்லிமீனை’ ஏளனமாக பேசுபவர்கள், எழுதுபவர்கள் அல்லாஹு ரப்புல் ஆலமீனால் ஏளனப்படுத்தப்பட்டால் இவர்கள் தாங்குவார்களா? இவர்களுடைய ஏளனமான பேச்சுகள், சில நேரங்களில் என்னை தடம் புரள வைக்கப் பார்க்கிறது! (அல்லாஹ் என்னையும், நம் எல்லோரையும் காப்பாற்ற வேண்டும்)
இப்படிப்பட்ட அயோக்கியர்களால் தான் மார்க்மகத்திற்கு விரோதமான செயல்களில் “அஹ்லே குர்ஆன்’ என்ற போர்வையில் இருந்து கொண்டு அல்லாஹுவையும், அல்லாஹ்வுடைய தூதர் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களையும் கேலி, கிண்டலோடு பேசி திரிவதையும் கேள்விப்படுகிறோம். இதற்கெல்லாம் முழுக்க, முழுக்க காரணம் தவ்ஹீத் புரோகித மவ்லவிகளே! அவர்களுடைய சுய நலத்திற்காக அல்லாஹு ரப்புல் ஆலமீன் தந்த, நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் வழிகாட்டிச் சென்ற தூய்மையான மார்க்கம், வியாபாரப் பொருளாக மாற்றப்பட்டுள்ளது. அதுதான் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் சொல்வது போல் “தகனுன்’ களங்கப்பட்டிருக்கும். ஆனால் மார்க்கம் (ஜமாஅத் அல் முஸ்லிமீன்) களங்கப்படாது! களங்கப்படுவதெல்லாம் புரோகித மவ்லவிகளின் அமைப்புகளும் அவர்களுடைய மார்க்க விரோத செயல்களும் அவர்களை கண்மூடித் தனமாக பின்பற்றுபவர்களுமே!
“ஜமாஅத் அல்முஸ்லிமீன்’ அபூ அப்தில்லாஹ் அவர்களுடைய கற்பனையில் உருவான ஜமா அத்தாக (அமைப்பாக) இருந்தால் அதுவும் நிச்சயம் களங்கப்பட்டே இருக்கும், ஆனால் நிச்சயமாக இந்த “ஜமாஅத் அல்முஸ்லிமீன்’ அபூ அப்தில்லாஹ்வுடைய ஜமாஅத்தே அல்ல. அல்லாஹ்வுடைய தூதர் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் வழி காட்டிச் சென்ற களங்கமில்லாத தூய்மையான அமைப்பு என்பதை இந்த இயக்கவாதிகளுக்கு சொல்லி வைக்கிறோம்.
அல்லாஹுவுடைய மார்க்கத்தில், வேறு அபிப்பிராயம் கொள்ள அல்லாஹ்வுடைய தூதர் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்கே அதிகாரமில்லை! “”மேலும் (தூதரே) அல்லாஹ் இறக்கி வைத்ததைக் கொண்டு அவர்களுக்கிடையே நீர் தீர்ப்புச் செய்வீராக! அவர்களுடைய மனோ இச்சைகளைப் பின்பற்றாதீர்; மேலும், அல்லாஹ் உம்பால் இறக்கிவைத்த சிலவற்றை விட்டும் உம்மை அவர்கள் வழிகெடுத்து விடாமலிருக்க அவர்களிடம் எச்சரிக்கையாக இருப்பீராக!…” (அல்குர்ஆன் 5:49)
என்று அல்லாஹு ரப்புல் ஆலமீன் சொல்வதில் மிக உறுதியான அர்த்தம் உண்டு. நபி ஸல்லல் லாஹு அலைஹி வஸல்லம் அவர்களைப் பார்த்து சொல்லும் எச்சரிக்கை உலக மக்களைப் பார்த்து அல்லாஹ் சொல்லும் எச்சரிக்கை என்பதை அறிவுள்ளவர்கள் சிந்திக்க கடமைப்பட்டுள்ளார்கள். அப்படி என்றால் மதத் தலைவர்களான, இயக்க வாதிகளான மவ்லவி புரோகிதர்கள் தங்கள், தங்கள் மன இச்சைப்படி மார்க்கத்தை மதமாக்கி மக்களை நரகத்திற்கு அழைத்து செல்வது தங்கள் தங்கள் சுய நலத்திற்காக என்பதை அவர்களை கண் மூடித்தனமாக பின்பற்றும் தொண்டர்கள் உணர வேண்டும்.
அல்லாஹு ரப்புல் ஆலமீன் சொல்வது போல் “என்னுடைய வசனங்களுக்குப் பகரமாக சொற்பக் கிரயத்தை வாங்காதீர்கள்;” (5:44) ஆனால் இயக்கவாதிகளான புரோகித மவ்லவிகள், மார்க்கத்தை சொல்கிறோம் என்ற பெயரில் லட்சம், லட்சமாக அல்ல கோடி, கோடியாக சம்பாதிக்கிறார்கள், நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் நபித்துவத்திற்கு முன் மக்கமா நகரில் பெரும் செல்வந்தர்களாக இருந்தார்கள். ஆனால் அல்லாஹ்வின் கட்டளைப்படி என்று நபியாக (முத்திரை நபியாக) ஆக்கப்பட்டார்களோ அன்று முதல் மக்களிடம் இஸ்லாமிய அழைப்பு (தஃவா) பணி செய்ய ஆரம்பித்தார்களோ அன்று முதல் அவர்களுக்கு நெருக்கடி அதிகரித்தது, அவர்களுடைய மதீனா வாழ்க்கை யில் நபி ஸல்லல்லாஹு அலை ஹிவஸல்லம் அவர்கள் ரொம்பவும் ஏழ்மை நிலைக்கு தள்ளப் பட்டார்கள். அப்போது நபி அவர்கள் அல்லாஹ்வுடைய தூதராகவும், ஒரு நாட்டின் அரசராகவும், மாபெரும் படைத் தலைவராகவும், மக்களை தூய்மையான மார்க்கத்தில் வழி நடத்தும் மாபெரும் இமாமாகவும் செயல்பட்டார்கள். அவர்கள் அல்லாஹ்வுடைய மார்க்கப் பணிக்கு எந்த ஒரு கூலியையும் வாங்கியது இல்லை. அவர்கள் நினைத்தால் எப்படியும் வாழலாம். ஆனால் வாழவில்லை; உலக மக்களுக்கு அழகிய முன் மாதிரியாக திகழ்ந்தார்கள். (பார்க்க: 6:90, 10:72, 11:29,51, 25:57, 26:109,127,145,164,180, 34:47, 38:86, 42:23)
ஆனால் இன்றுள்ள மார்க்க போதகர்கள் அதாவது புரோகித மவ்லவிகள் குர்ஆன், ஹதீஃதை மக்களுக்கு சொல்ல வரும்போது மஞ்சள் பைகளுடன் வந்தார்கள். ஆனால் இப்போது அவர்கள் பொருளாதாரத்தில் உயர்ந்து நிற்கிறார்கள். மார்க்கத்தை சொல்லி கோடி, கோடியாக பணம் சம்பாதிக்கும் தவ்ஹீத் புரோகித மவ்லவிகள் குர்ஆன், ஹதீஃத் போர்வையில் வருவதுதான் நம்மை சங்கடப்படுத்துகிறது. நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் மக்களுக்கு மார்க்கத்தை எடுத்துச் சொல்ல, எடுத்துச் சொல்ல அவர்களுடைய வாழ்க்கை நிலை தாழ்வு நிலைக்கு வந்தது! ஆனால் ஆரம்பத்தில் மஞ்சள் பைகளுடன் மார்க்கத்தை சொல்ல வந்த தவ்ஹீத் புரோகித மவ்லவிகளின் இன்றைய நிலை உயர்ந்து நிற்கிறது. காரணம் என்ன? இயக்கவாதிகளான முஸ்லிம்கள் சிந்திப்பார்களா?
நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் தங்களின் இறுதி ஹஜ் உரையின்போது மக்களைப் பார்த்து சொன்னார்கள் “எனது சமுதாயத்திற்கு வறுமை வந்து விடும் என்று நான் அஞ்சவில்லை. ஆனால் செல்வம் வந்து விடுமோ என நான் அஞ்சுகிறேன் என்று சொன்ன சத்திய வார்த்தைகள் பொன் எழுத்துக்களால் பதியப்பட வேண்டியது.
ஆனால் இது பற்றிச் சிந்திப்பதற்கு சமுதாயத்தில் யார் இருக்கிறார்கள்? இயக்கவாதிகள் தான் தங்கள், தங்கள் பிரிவினை இயக்கவாதிகளான புரோகித மவ்லவிகளிடம் தங்கள் மூளையை அடகு வைத்து விட்டார்களே!
நாங்கள் ஒன்றும் மனித கற்பனையில் உருவான அமைப்புகள் போல் உறுப்பினர் அட்டைப் போட்டு எங்களின் வழிகெட்ட அமைப்புகளில் வந்து சேருங்கள் என்று சொல்ல வில்லை; ஆள் பிடிக்க வேண்டிய அவசியமும் எங்களுக்கு இல்லை. நீங்கள் விரும்பினால் முழு மையாக சத்திய இஸ்லாமான (ஜமாஅத் அல் முஸ்லிமீனில்) இணைந்து விடுங்கள். இல்லையேல் அல்லாஹ்வுக்கும், தூதர் நபி ஸல்லல் லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்கும் எந்த நஷ்டமும் இல்லை.
யா அல்லாஹ்! இந்த இயக்கவாதிகளால் எங்களுடைய உள்ளங்களை புரட்டிவிடாதே. இந்த இயக்கவாதிகளால் எங்களுடைய உள்ளங்கள் தடுமாற்றம் கண்டாலும், தடம் புரளச் செய்துவிடாதே, இயக்கவாதிகளின் கெடுதியிலிருந்து எங்களை பாதுகாப்பாயாக!
யா அல்லாஹ்! எங்களுடைய அனைத்து காரியங்களின் முடிவுகளையும் சிறந்ததாக ஆக்குவாயாக! இவ்வுலகின் இழிவை விட்டும் மறு உலகின் வேதனையை விட்டும் என்னையும், எங்கள் எல்லோரையும் பாதுகாக்க நீயே போதுமனவன்.