அன்பார்ந்த சகோதர, சகோதரிகளே!
அஸ்ஸலாமு அலைக்கும்(வரஹ்),
அல்லாஹ்வின் அருளால், தீனில் ஆர்வமுள்ள சகோதர சகோதரிகளின் ஒத்துழைப்பைக் கொண்டு, அந்நஜாத் தன் பணியை உற்சாகத்துடன் செய்து வருகின்றது. மலை போல் வரும் இடுக்கண்கள், இச்சகோதர, சகோதரிகளின் ஒத்துழைப்பைக் கொண்டு பனிபோல் கரைந்து விடுகின்றன. அல்ஹம்துலில்லாஹ்.
சத்தியத்தை உள்ளது உள்ளபடி சொல்லுவதென்றால், அது அனைத்துப் பிரிவாரின் கடும் எதிர்ப்பிற்கும், ஏச்சுக்கும், பேச்சுக்கும் ஆளாக வேண்டி வரும் என்பதே பொருளாகும். சமாதிச் சடங்குகளைச் சாடுவதால், அவர்களின் வெறுப்புக்கும் ஆளாக வேண்டியுள்ளது. மத்ஹபுகளையும், தரீக்காக்களையும் கண்டிப்பதால், அவர்களின் வெறுப்புக்கும் ஆளாக வேண்டியுள்ளது. இஸ்லாத்தில் பிரிவுப் பெயர்களை உண்டாக்குபவர்களைப் பற்றி எழுதுவதால் அவர்களின் வெறுப்புக்கும் ஆளாக வேண்டியுள்ளது. ஆளுக்கென அமைப்புப் பெயர்களை அமைத்துக் கொண்டு செயல்படுவதால் ஏற்படும் கெடுதிகளை விளக்குவதால் அவர்களின் வெறுப்புக்கும் ஆளாக வேண்டியுள்ளது. இப்படி எல்லாப் பிரிவாரின் வெறுப்புக்கும், ஏச்சுக்கும், பேச்சுக்கும், வீண் பழிக்கும் ஆளாகித்தான் சத்தியத்தைச் சொல்ல முடிகின்றது. அனைத்துச் சாரார்களும் இதில் ஒன்று சேர்ந்து கொள்வதால் சத்தியவான்களைப் பற்றிய அவதூறுகள் விசுவரூபமெடுத்துப் பரவுகின்றன.
இதனால் சத்தியத்தை விளங்கியவர்கள் அனைவரும் சத்தியத்தை எடுத்துச் சொல்ல முன் வருவதில்லை. காரணம், இப்படிப்பட்ட அவர் சொல்களுக்கு ஆளாக அவர்கள் விரும்புவதில்லை. என்பதை தெரிந்தும் தெரியாததுபோல் இருந்து விடுகிறார்கள்.
சத்தியத்தை உள்ளது உள்ளபடி சொல்வதால் உலக மக்கள் அனைவரின் ஏளனச் சொல்லிற்கும், பழிக்கும் ஆளானாலும் அல்லாஹ்வின் பொருத்தம் நமக்குக் கிடைக்கின்றது என்ற திருப்தியோடு நமது பணியை தொடர்ந்தால், அல்லாஹ் சோதனைக்குப் பின் நமது முயற்சியில் வெற்றியைத் தரத்தான் செய்கிறான். பெயர் புகழை விரும்பாமல் இஃலாசுடன் செயல்படுபவர்களுக்கே இது சாத்தியப்படுகிறது. நம்மைப் பற்றி தப்பாக எண்ணுபவர்களும் உண்மையை உணர்ந்து சத்தியத்தின்பால் வரத்தான் செய்கிறார்கள். எனவே எதிர்ப்பைக் கண்டு துவண்டு நமது முயற்சியில் தளர்ந்து விடக்கூடாது. நிச்சயமாக சத்தியமே வெல்லும். சத்தியவான்களுக்கே அல்லாஹ்வின் உதவி நிச்சயம் உண்டு. உலகமே எதிர்த்தாலும் சத்தியவான்களை வீழ்த்த முடியாது என்ற உள்ள உறுதியோடு நமது முயற்சிகளை முடுக்கி விடுவோமாக! அல்லாஹ் அருள்புரிவானாக!