உணர்த்துங்கள்

in 1989 மே

உங்களில் ஒருவர் தீமையைக் கண்டால் அதைத் தனது கரத்தால் தடுத்து நிறுத்துவாராக! இயலாவிடில் தமது நாவால் அதைத் தடுத்து நிறுத்துவாராக! அவ்வாறும் இயலாவிடில் தமது உள்ளத்தால் அதை வெறுத்து விடுவாராக! இதுவே ஈமானில் பலகீனமான நிலை. (அபூஸயீத் அல்குத்ரீ(ரழி), முஸ்லிம்)

குர்ஆன், ஹதீஸ் வழியில் நடக்கும் சகோதர, சகோதரிகளே! நமது இஸ்லாமிய கோட்பாடுகளுக்கு முற்றிலும் மாறாக பல பாடல்களை இஸ்லாமிய கீதங்கள் என்ற பெயரில் தொலைகாட்சியிலும், வானொலியிலும் ஒளி, ஒலி பரப்புகிறார்கள்” அதற்கு ஓர் உதாரணம்: சென்ற ரமழானின் 27ம் இரவு லைலத்துல் கத்ரை சிறப்பித்து பாடிய பாடல் ஒன்று. அப்பாடலை ஐவேளைத் தொழுகையை தர்காவில் வந்து தொழுகுங்கள் என்ற கருத்தில் பாடினர். இது எவ்வளவு அனர்த்தமானது. அர்த்தமற்றது. இஸ்லாமிய கோட்பாடுகளுக்கு முற்றிலும் மாறானது என்பதை நாமறிவோம்.

தொலைக்காட்சி, வானொலிகளில் பணியாற்றும் மாற்று மத நண்பர்களுக்கு இதிலுள்ள அனர்த்தங்களும் அசிங்கங்களும் தெரியாததால் இதுவும் இஸ்லாமிய கொள்கை தான் என்ற தவறான நம்பிக்கையில் வெளியிட்டு விடுகிறார்கள். இதனை நாம் அவ்வப்போது கடிதங்கள் தந்திகள் மூலம் எடுத்துரைக்க கடமைப்பட்டுள்ளோம். எனவே குர்ஆன், ஹதீஸ் அடிப்படையில் வாழ நாடும் நாம் உடனுக்குடன் இத்தவறான கருத்துக்களை எடுத்துக் காட்டி, இடித்துரைத்து கடிதங்கள், தந்திகள் மூலம் தெரியப்படுத்துவோமாக!

யாருக்கோ வந்த விருந்தாக நினைத்தால் “இத்தவறை நீர் ஏன் எடுத்துரைக்கவில்லை?” என்ற அல்லாஹ்வின் கேள்விக்கு மறுமையில் பதில் சொல்ல நேரிடும். அவர்கள் திருத்திக் கொள்வதும், அவர்களை திருந்த வைப்பதும் அல்லாஹ்வின் செயலென அவன் மீது தவக்கல் வைத்து நாம் செயல்படுவோமாக!

Previous post:

Next post: