அபூ ஃபாத்திமா
எல்லாம் வல்ல அல்லாஹ் மனித வர்க்கத்தை ஆதம்-ஹவ்வா(அலை) என்ற ஒரே ஜோடியிலிருந்தே படைத்திருக்கின்றான். மனிதர்கள் அனைவரும் ஒரு தாய்-தந்தை வழியில் வந்தவர்கள். அவர்களது இறைவனும் ஒருவனே. அவர்களுக்குக் கொடுக்கப்பட்ட வாழ்க்கை நெறி மார்க்கம்-நேர்வழி ஒன்றே. இறைவனால் அனுப்பப்பட்ட இறைத்தூதர்கள் அனைவரும் ஒரே குரலில் அந்த ஒரே கொள்கையை போதித்துள்ளனர். இந்த நிலையில் மனிதரிடையே பற்பல மதங்கள், அந்த பல மதங்களிலும் பற்பல பிரிவுகள்-பிளவுகள்-வேற்றுமைகள். மனிதரில் இந்த பிளவுகளும், பிரிவுகளும் ஏற்பட அடிப்படைக் காரணம் என்ன? இதனை அறிவது நமது வெற்றிக்கு இன்றியமையாததாக இருக்கின்றது.
ஆதம்(அலை) அவர்களை இவ்வுலகிற்கு அனுப்பும்போதே அல்லாஹ் தெளிவாக இவ்வாறு எச்சரித்துள்ளான்:
நாம் சொன்னோம்: “நீங்கள் அனைவரும் இவ்விடத்தை விட்டும் இறங்கி விடுங்கள்; என்னிடமிருந்து நிச்சயமாக உங்களுக்கு நேர்வழி வரும்போது, யார் என்னுடைய நேர்வழியைப் பின்பற்றுகின்றாரோ, அவர்களுக்கு எத்தகைய பயமும் இல்லை. அவர்கள் துக்கப்படவும் மாட்டார்கள். அன்றி யார் மறுத்து, நமது வசனங்களை மறுத்து, நமது வசனங்களைப் பொய்ப்பிக்க முற்படுகிறார்களோ அவர்கள் நரக நெருப்பின் தோழர்கள் ஆவார்கள், அவர்கள் அதில் என்றென்றும் தங்கி விடுவார்கள்”. (2:33, 39)
இது அல்லாஹ் ஒரு நபிக்கு இட்ட கட்டளை ஆதம்(அலை) அவர்களை அல்லாஹ் முதல் மனிதனாகப் படைத்தான். அவர்களை வானவர்களை விட உயர்ந்தவராகவும் சிறப்பித்துக் காட்டியுள்ளான். மறுமை விஷயத்திலும், ஷைத்தானின் விஷமத்தனத்தின் கொடூரத் தன்மையிலும் அனுபவப்பூர்வமான ஞானம் பெற்றவர். அப்படிப்பட்ட ஒரு நபியையே தனது சொந்த மனித அபிப்ராயப்படி செயல்படக் கூடாது. எனது எனது கட்டளைப்படியே செயல்பட வேண்டும் என்று அறிவுறுத்தினான். அவனது கட்டளைகளுக்கு மாறு செய்தால் மீளா நரகமாகும் என்று எச்சரிக்கவும் செய்கிறான். அல்லாஹ்வுடன் வஹீ மூலம் தொடர்பு கொண்டிருந்த நபிமார்களின் நிலையே இதுவென்றால் மற்ற மனிதர்களின் நிலை பற்றி நாம் சொல்ல வேண்டியதில்லை. நிச்சயமாக மனிதர்களில் யாரும் தங்கள் சொந்த அபிப்ராயங்களை இறைவனது நேர்வழியில் புகுத்த முடியாது. அது மாபெரும் தவறு என்பது உறுதியாகத் தெரிகிறது. ஆயினும் மனிதர்களில் யாரும் தன்னைப் படைத்த இறைவனுக்கு மாறு செய்ய வேண்டும் என்ற நோக்கத்தில் செயல்படுவதில்லை. கல்லை வணங்கும் மனிதனும் அது இறைவனுக்கும் பிடித்தமான செயல் என்று நம்பியே செயல்படுகிறான். இதற்கு காரணம் மனிதனை வழிக் கெடுக்கக் கங்கணக் கட்டிக் கொண்டிருக்கும் ஷைத்தான் மனிதனது உள்ளத்தில் நல்லதைப் போன்று தீமையைப் புகுத்தி இறைவனுக்கு மாறு செய்யும் நிலைக்கு கொண்டுவந்து சேர்த்து விடுகிறான். இதனை “எவர்கள் இவ்வுலக வாழ்க்கையில் வழிகேடான முயற்சிகளை மேற்கொண்டு, தாங்கள் உண்மையில் அழகான காரியங்களைச் செய்வதாக எண்ணிக் கொள்கிறார்களோ அவர்கள் தாம் தம் செயல்களில் மிகப் பெரும் நஷ்டவாளிகள்” என்று அல்லாஹ் தெளிவாகக் குறிப்பிடுகிறான். (18:103,104)
இவர்கள் சென்றடையும் இடம் மீளா நரகமாகும் என்பதை இங்கும் (18:106) அல்லாஹ் குறிப்பிடத் தவறவில்லை.
ஷைத்தான் இந்நிலையை எவ்வாறு உருவாக்குகிறான்?
மனிதன் தன்னைப் படைத்த இறைவனுக்கு மாறு செய்ய துணியமாட்டான் என்பதை நன்கு அறிந்து வைத்துள்ள ஷைத்தான், இறை கொடுத்த நேர்வழியில் நடப்பதாக நம்பவைத்து, அந்த நேர்வழியில் பல இடைச் செருகல்களைச் சொருக வைத்து விடுகிறான். நேர்வழியில் நடப்பதும் ஒன்றுதான், அந்த நேர்வழியில் நடந்து சென்ற முன்னோர்களையும், மூதாதையர்களையும் பின்பற்றுவதும் ஒன்றுதான் என்ற வசீகரத் தோற்றத்தை உண்டுபன்னி விடுகிறான். இதனை சாதாரணமாக படிப்பவர்களும் இதில் என்ன தவறு இருக்க முடியும்? என்றே நினைப்பார்கள். ஆழ்ந்து நோக்கும்போது இறை கொடுத்த நேர்வழியை அறிந்து நடப்பதற்கும், நேர்வழி நடந்தவர்களைப் பின்பற்றுவதற்கும் உள்ள வித்தியாசம் தெளிவாகவே புரியும். நேர்வழி அறிந்து நடப்பதில் தவறு ஏற்பட பெரும்பாலும் வாய்ப்பில்லை. ஆனால், நேர்வழிநடந்தவர்களின் செயல்கள் அனைத்தும் நூற்றுக்கு நூறு சரியாகவே இருக்கும் என்பதற்கு எவ்வித உத்திரவாதமும் இல்லை. அவர்களிலும் இறை கொடுத்த நேர்வழிக்கு முரணாகச் சில சம்பவங்கள் இடம் பெற்றுவிடலாம். இந்த நிலையில் இறை கொடுத்த நேர்வழி அறியாது, நல்லடியார்களைப் பின்பற்றுகிறவர்கள், அவர்கள் அறியாது செய்த தவறுகளையும் மார்க்கமாக நம்பிச் செயல்படும் குற்றத்திற்கு ஆளாகிறார்கள். இங்கு இறைவனது நேர்வழியைப் பார்த்து செயல்பட்ட நல்லடியார்களிடம் இடம் பெற்ற தவறுகளை அல்லாஹ் மன்னிக்க வழி இருக்கிறது. காரணம், அல்லாஹ் மனிதன் தனது கட்டளைப்படி நடக்க முற்படுகிறானா? என்றே சோதிக்கின்றான். அந்த முயற்சியில் ஈடுபட்டு பின் தவறாக நடந்தால் இரண்டு நன்மைகள் முயற்சியில் ஈடுபட்டு தவறாக நடந்தால் முயற்சிக்கு ஒரு நன்மை. தவறுக்கு குற்றம் பிடிக்கப்படமாட்டான்.
“தீர்ப்பளிக்கும் ஒருவர், தாம் தீர்ப்பளிக்கையில் (குர்ஆன், ஹதீஸின்படி) தெண்டித்து அதை முறையானதாக்கி விட்டால் அவருக்கு இரண்டு கூலியுண்டு” என்று நபி(ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள் (அம்ருப்னில் ஆஸ்(ரழி), புகாரீ, முஸ்லிம்) என்ற ஹதீஸின்படி அவர்கள் தப்பி விடுகிறார்கள். ஆனால் இறை கொடுத்த நேர்வழியை அறியாது முன் சென்ற நல்லடியார்களைப் பின்பற்றுகிறவர்கள் மூன்று தவறுகளைச் செய்கிறார்கள். 2:37 வசனப்படி இறை கொடுத்த நேர்வழியை அறிய முயற்ச்சிக்கவில்லை. இது ஒரு தவறு. அடுத்து, “உங்கள் ரப்பிடமிருந்து, உங்களுக்கு இறக்கப்பட்டதையே பின்பற்றுங்கள்; அவனையன்றி வேறெவறையும் பாதுகாவலர்களாக்கி (அவர்களைப்) பின்பற்றாதீர்கள்” (7:3) என்ற இறைவசனத்தைப் பொய்யாக்கி முன்சென்ற நல்லடியார்களைப் பின்பற்றுவது இரண்டாவது பெருங்குற்றமாகும். முன்னோர்களை பின்பற்றுவதை கொண்டு ஒவ்வொரவரும் ஒவ்வொரு முன்னோரைப் பின்பற்றி தங்களுக்குள் பல பிரிவுகளாகப் பிரிந்து விடுகிறார்கள். இது 3-வது பெருங்குற்றமாகும். எனவே இவர்கள் இறைவனது தண்டனையிலிருந்து தப்ப முடியாது.
காலங்காலமாக ஆதத்தின் சந்ததிகள் இப்படி முன்னோர்களைப் பின்பற்றித்தான் வழிக்கேட்டில் சென்றுள்ளார்கள் என்பதற்கு குர்ஆனின் பல வசனங்கள் சான்றுகளாக இருக்கின்றன. உதாரணமாக.,
“அல்லாஹ் இறக்கி வைத்த இ(வ்வேதத்)தைப் பின்பற்றுங்கள் என்று அவர்களிடம் கூறப்பட்டால், அவர்கள் “அப்படியல்ல! எங்களுடைய மூதாதையர்கள் எந்த வழியில் நடக்கக் கண்டோமோ, அந்த வழியையே நாங்களும் பின்பற்றுகிறோம்” என்று கூறுகிறார்கள்; என்ன! அவர்களுடைய மூதாதையர்கள் எதையும் விளங்காதவர்களாகவும், நேர்வழிப் பெற்றவர்களுமாகவும் இருந்தாலுமா?” (2:170)
இறை கொடுத்த நேர்வழியிலிருந்து வழி சறுகச் செய்யவே ஷைத்தான் முன்னோர்களைப் பின்பற்றும் மோகத்தை மனிதனுக்கு ஊட்டுகிறான். இதனால் மனிதனை வழி கெடுக்க இரண்டுவித வாய்ப்புகள் அவனுக்குக் கிடைக்கின்றன. மனிதர்கள் என்ற அடிப்படையில் முன்னோர்களின் வாழ்க்கையில் இடம்பெற்ற தவறான செயல்களையும் மார்க்கமாக எடுத்து நடந்து வழிதவறிச் செல்லச் செய்யும் சந்தர்ப்பம் ஒன்று. முன்னோர்களின் பெயரால் பொய்யானவைகளை இட்டுக் கட்டி, அவற்றை எடுத்து நடப்பதன் மூலம் வழித்தவறிச் செல்லச் செய்யும் சந்தர்ப்பம் ஒன்று. முன்னோர்களின் பெயரால் பொய்யானவைகளை இட்டுக் கட்டி, அவற்றை எடுத்து நடப்பதன் மூலம் வழித்தவறிச் செல்ல செய்யும் வாய்ப்பு மற்றொன்று. எப்படியும் முன்னோர்களின் பெயரால் மனிதனை வழி தவறச் செய்து விடுகிறான் ஷைத்தான். இப்படி முன்னோர்களின் பெயரால் வழி தவறிச் செல்லும் மனிதன், அதன் காரணமாக நரகத்தை அடைந்து, அங்கு கடுமையான வேதனை அளிக்கப்படும்போது தான் அந்தத் தவறை உணர்ந்து கூச்சல் போடுகிறான். அதனை அல்லாஹ் இவ்வாறு குறிப்பிடுகிறான்.
நெருப்பில் அவர்களுடைய முகங்கள் புரட்டப்படும் அந்நாளில், “ஆ. கைசேதமே! அல்லாஹ்வுக்கு நாங்கள் வழிப்பட்டிருக்க வேண்டுமே!; எங்கள் ரப்பே! நிச்சயமாக நாங்கள் எங்கள் தலைவர்களுக்கும், பெரியவர்களுக்கும் வழிப்பட்டோம். அவர்கள் எங்களை வழிக் கெடுத்து விட்டார்கள். எங்கள் ரப்பே! அவர்களுக்கு இருமடங்கு வேதனையைத் தருவாயாக; அவர்களைப் பெருஞ்சாபத்தைக் கொண்டு சபிப்பாயாக” என்று கதறுவார்கள். (33:66-68)
இந்த அவர்களின் கதறல் அவர்களுக்குப் பலன் அளிக்காது. நரகை விட்டும் தப்ப வேண்டுமென்றால் இவ்வுலகிலேயே முன்னோர்களைப் பின்பற்றுவது தவறு என்று உணர்ந்து, அதை விட்டும் விலகி அல்லாஹ்வின் நேர்வழியான அல்குர்ஆனையும், ஆதாரப்பூர்வமான ஹதீஸ்களையும் விளங்கிப் பின்பற்ற முன்வர வேண்டும். இதுவரை மனித சமுதாயத்தில் பிரிவுகளும், வழிகேடுகளும் எப்படி ஏற்படுகின்றன என்று பார்த்தோம். இனி இறுதி மறை அல்குர்ஆனை ஒப்புக் கொண்டிருக்கும் முஸ்லிம் சமுதாயத்தில் பிளவுகள், பிரிவுகள் எப்படி ஏற்படுகின்றன என்று பார்ப்போம்.
முஸ்லிம் சமுதாயத்தில் பிரிவுகள்:
இறுதி நபிக்கு முன்புள்ள சமூகத்தினருக்கு தங்கள் முன்னோர்களின் மனித அபிப்ராயங்களை ஏற்று நடப்பதை விட்டு, அவற்றைச் சரிபார்க்கும் வழி அவர்களுக்கு இருக்கவில்லை. காரணம், அவர்களுக்கு அளிக்கப்பட்ட வேதங்கள் பாதுகாக்கப்பட்டிருக்கவில்லை. ஆனால் இறுதி வேதமான அல்குர்ஆன் பதிவு செய்யப்பட்டு பாதுகாக்கப்பட்டுள்ள நிலையில் அந்த உம்மத்தில் பிரிவுகளும், பிளவுகளும் ஏற்படக் காரணம் என்ன? இதனைத் துல்லியமாக விளங்குவது நமது ஈடேற்றத்திற்குரிய முக்கிய அம்சமாக இருக்கிறது.
“இது அதிகமானோரை வழிகெடுக்கவும் செய்யும், அதிகமானோரை நேர்வழியில் செலுத்தவும் செய்யும், பாவிகளைத் தவிர வேறு எவரையும் வழிக்கெடுக்காது” (2:26) என்ற இறை வசனத்திற்கு ஒப்ப பெரும்பாலோர் இறை வசனங்களில் தவறான பொருள்களைக் கற்பனை செய்து கொண்டு வழிகெட்டுச் செல்கின்றனர். உதாரணமாக,
“அல்லாஹ்வின் பாதையில் வெட்டுப்பட்டவர்களை(ஷஹீதுகளை) இறந்தவர்கள் என எண்ண வேண்டாம்”. (2:145) என்ற இறைவசனத்தைக் ஓதிக்காட்டி, கபுரு சடங்குகளை நியாயப்படுத்தும் பெருங்கூட்டத்தையும் “அல்லாஹ்வுக்கு வழிப்படுங்கள், ரஸுலுக்கும் வழிப்படுங்கள், உங்களில் அதிகாரம் வகிப்பவர்களுக்கும் வழிப்படுங்கள். (4:59) என்ற இறை வசனத்தை ஓதிக்காட்டி தக்லீதை (மத்ஹபுகளை) நியாயப்படுத்தும் பெருங்கூட்டத்தையும்,
“அல்லாஹ்வை அதிகமாக நினைவு கூறுங்கள், நீங்கள் வெற்றியடைவீர்கள்” (62:10)
ஈமான் கொண்டவர்களே! அல்லாஹ்வை அதிகமதிகமாக திக்ரைக் கொண்டு, திக்ரு செய்யுங்கள். இன்னும், காலையிலும் மாலையிலும் அவனை துதி செய்யுங்கள். (33:41,42)
என்ற இறைவசனத்தை ஓதிக்காட்டி தரீக்காக்களை (சூபிஸத்தை) நியாயப்படுத்தும் பெருங்கூட்டத்தையும்,
“நிச்சயமாக அல்லாஹ் நம்முடன் இருக்கிறான்” (9:40)
“அல்லாஹ் என்னுடன் இருக்கிறான்; அவன் எனக்கு வழி காட்டுவான்”(26:62)
என்ற வசனங்களை ஓதிக்காட்டி அல்லாஹ்வும், அடியானும் இரண்டறக் கலக்க முடியும் என்று அத்வைதத்தை (வஹ்தத்துல்ஜூது) நியாயப்படுத்தும் பெருங்கூட்டத்தையும் 2:62, 22:17, 49:13 போன்ற வசனங்களை ஒதிக்காட்டி. பிரிவுப் பெயர்களை நியாயப்படுத்தும் கூட்டத்தையும் இந்தச் சமுதாயத்தில் இன்று பார்க்கத்தானே செய்கிறோம்.
இந்த வசனங்களை மட்டும் பார்ப்பவர்கள் அவர்களின் வாதத்தில் நியாயம் இருப்பதாகவே எண்ணுகிறார்கள். இவர்கள் செய்யும் தவறு, இந்த வசனத்திலிருந்து இவர்கள் பெறும் விளக்கங்கள் மற்ற குர்ஆன் வசனங்களுக்கு முரண்படாமல் இருக்கின்றனவா? என்று சிந்திப்பதில்லை. ஒரு குர்ஆன் வசனத்திற்கு பெறப்படும் விளக்கம் மற்ற குர்ஆன் வசனங்களுக்கு முரணில்லாமல் இருந்தால் மட்டுமே அதனை விளக்கமாக ஏற்றுக் கொள்ளலாம். அது குர்ஆன் வசனத்திற்கு இவர்கள் கொடுக்கும் விளக்கம் வேறொரு குர்ஆன் வசனத்திலிருந்து பெறப்படும் நேரடி விளக்கத்திற்கு முரணாக இருக்கும்போது அதனை விளக்கமாக எடுத்து வைக்க முடியாது. அதனையே மனித அபிப்ராயம் அல்லது யூகம் என்று சொல்லுகிறோம்.
உதாரணமாக, 2:170 வசனத்தின் இறுதிப் பகுதியான “என்ன! அவர்களுடைய மூதாதையர்கள் எதையும் விளங்காதவர்களாகவும், நேர்வழி பெறாதவர்களாகவும் இருந்தாலுமா?” (அவர்களைப் பின்பற்றுவார்கள்) என்ற பாகத்தை ஓதிக்காட்டி, இதிலிருந்து நேர்வழி நடந்தவர்களை பின்பற்றலாம் என்று விளக்கம் சொல்லுவார்கள். இந்த வசனத்தை மட்டும் பார்ப்பவர்களுக்கு அவர்களின் இந்த விளக்கம் சரியாகவே தெரியும். ஆனால் இந்த விளக்கத்தை,
“(நபியே) நீர் கூறும்: “நீங்கள் அல்லாஹ்வை நேசிப்பீர்களேயானால், என்னை பின்பற்றுங்கள்; அல்லாஹ் உங்களை நேசிப்பான்; உங்கள் பாவங்களை உங்களுக்காக மன்னிப்பான்; மேலும், அல்லாஹ் மன்னிப்பவனாகவும், மிக்க கருணையுடையவனாகவம் இருக்கின்றான்.” (3:31) மற்றும் 2:213, 7:3 போன்ற வேறு வசனங்களோடு ஒப்பிட்டுப் பார்க்கும்போது இந்த விளக்கம் முரண்படுகிறது என்பது தெளிவாக புரிகின்றது எனவே இது மனித அபிப்ராயமாகும். அதே சமயம் சொல்லுகிறவர்கள் நல்லவர்களோ, கெட்டவர்களோ சொல்லுவது நேர்வழியில் (குர்ஆன், ஹதீஸில்) இருந்தால் அதனைப் பின்பற்றலாம் என்று கூறப்படும் விளக்கத்தை ஆராய்ந்து பாருங்கள், குர்ஆனின் எந்த வசனத்திற்கும் இந்த விளக்கம் முரணாக இல்லை. எனவே இந்த விளக்கத்தை ஏற்று செயல்படலாம்.
விளக்கத்திற்கும், மனித அபிப்ராயத்திற்கும் இடையே உள்ள வேறுபாடு:
ஒரு குர்ஆன் வசனத்திற்கோ, ஹதீஸுக்கோ ஒருவர் கொடுக்கும் விளக்கம் குர்ஆனின் ஏனைய வசனங்களுக்கோ, ஏனைய ஆதாரப்பூர்வமான ஹதீஸுக்கோ முரண் இல்லாமல் இருந்தால் மட்டுமே அதனை விளக்கமாக ஏற்றுக் கொள்ளலாம். முரணாக இருந்தால், அதனையே மனித அபிப்ராயம் என்று சொல்லுகின்றோம். மனிதனது கூற்று முன்னுக்குப் பின் முரண்படலாம். ஆனால், அல்லாஹ்வின் காலமான குர்ஆனின் வசனங்களோ, அல்லாஹ்வால் அங்கீகரிக்கப்பட்ட நபி(ஸல்) அவர்களின் நடைமுறைகளோ ஒன்றுக்கொன்று முரணாக இருக்க முடியாது என்று மறுக்க முடியாத உண்மையை ஒப்புக்கொள்கிறவர்கள் இந்த முடிவைத் தவிர வேறு முடிவுக்கு வர முடியாது.
ஆக, இப்படிப்பட்ட சிந்தனையில்லாமல் நுனிப்புல் மேய்வது போல் ஒரு குர்ஆன் வசனத்தை வைத்துக் கொண்டு அல்லது ஒரு ஹதீஸை வைத்துக் கொண்டு இவர்களாக சுய விளக்கம் கொடுக்க முற்படுவதால் இந்த நிலை ஏற்படுகிறது. இப்படி ஒருவர் கொடுக்கும் விளக்கத்தைப் பலர் ஏற்றுக்கொள்ளும் நிலையும் உருவாகிறது. இதன் காரணமாக ஒவ்வொருவர் பின்னாலும் ஒரு கூட்டம் செல்லும் நிலையும், அதனால் பல பிரிவுகளும், பிளவுகளும் ஏற்படுகின்றன. ஆக, அடிப்படையற்ற சுயவிளக்கம்-மனித அபிப்ராயம் மனிதரில் பிரிவுகளை ஏற்படுத்திவிடுகின்றன. ஒரு விஷயத்திற்குச் சம்பந்தப்பட்ட குர்ஆன் வசனங்கள், ஹதீஸ்கள் இவற்றை ஒப்பு நோக்கி அடிப்படையுடன் விளக்கம் பெற்றால் இந்த பிரிவுகள்-பிளவுகள் தவிர்க்கப்படலாம்.
ஒப்பு நோக்குவோம் :
“கபுரு வணக்கத்தை நியாயப்படுத்தச் சொல்லும் 2:154 வசனத்தின் விளக்கத்துடன் “உயிருள்ளவர்களும், இறந்தவர்களும் சமமாக மாட்டார்கள்’ (35:22) ‘நீரும் இறக்கக் கூடியவரே, அவர்களும் இறக்கக் கூடியவர்களே’ (39:30) போன்ற வசனங்களோடும், தக்லீதை நியாயப்படுத்திச் சொல்லும் 4:59 வசன விளக்கத்தை அதன் பிற்பகுதியோடும் 7:3, 3:31 போன்ற வசனங்களோடும், தரீக்காக்களை நியாயப்படுத்தும் 62:10, 33:41,42 வசனங்களின் விளக்கத்துடன் 33:21, 59:7, 3:31 வசனங்களோடும் பிரிவுகளை நியாயப்படுத்திச் சொல்லும் 9:40, 26:62 வசன விளக்கங்களுடன் 112:1-4, 2:255 போன்ற வசனங்களோடும், பிரிவுகளை நியாயப்படுத்திச் சொல்லும் 2:62, 22:17, 49:13 வசனங்களின் விளக்கத்தை 2:213, 6:159, 21:92,93, 23:53, 30:32, 42:14, 45:17 போன்ற வசனங்களுடனும் ஒப்புநோக்கிப் பார்த்தால் அவை ஒன்றுக்கொன்று முரண்படுவதையும், அதனால் அவை விளக்கங்கள் அல்ல, மனித அபிப்பிராயங்களே என்பதும் தெளிவாகத் தெரியவரும்.
நேர்வழி நடக்க விரும்பும் சகோதரர்களே!
உங்களுக்கு கபுருச் சடங்குகள், தக்லீது, தரீக்காக்கள் இவற்றில் தெளிவு ஏப்பட்டுவிட்டதால், அதற்கடுத்துள்ள பிரிவுப் பெயர்கள் விஷயமாக மிகத் தெளிவாக விரும்புகிறோம்.
பல இயக்கப் பெயர்களால் இயங்குவது குர்ஆன், ஹதீஸ்படி அனுமதிக்கப்பட்டதே என்பதற்கு ஆதாரமாக 2:62, 22:17, 49:13 வசனங்களையும் பிரிவுப் பெயர்களைக் கண்டித்துச் சொல்லும் 2:213. 6:159, 21:92,93, 23:53. 30:32. 42:14, 45:17 வசனங்களுக்கு அந்த விளக்கம் முரணானதல்ல என்பது சில சகோதரர்களின் வாதமாகும். வழிகேட்டிலிருப்பவர்களை விட்டும் வேறுபடுத்திக் காட்டுவதற்காக நாங்கள் இவ்வாறு பெயரிட்டுக் கொள்ளுகிறோம் என்று அவர்கள் சொல்லுகிறார்கள். இது உண்மையானால் இவர்கள் அனைவரும் ஒரே பெயரில்தான் இயங்க வேண்டும். ஆனால், இவர்களும் ஆளுக்கொரு பெயர் வைத்துக்கொண்டு தனித்தனியாக இயங்குகின்றனர். உதாரணமாக, குர்ஆன், ஹதீஸில் உள்ளதை கூட்டல், குறைத்தல், வளைத்தல், மறைத்தல், திரித்தல் இன்றி உள்ளதை உள்ளபடிச் சொல்ல முன்வந்துள்ள தமிழகத்தில் இயங்கும் இயக்கங்களை மட்டுமே நமது ஆய்வுக்கு எடுத்துக் கொள்வோம்.
அஹ்ல ஹதீஸ், ஐ.ஏ.சி, ஜம்யிய்யது அஹ்லில் குர்ஆன் வல்ஹதீஸ் (J.A.Q.H) இந்த மூன்றும் வழிகேடர்களில் நின்றும் தங்களைப் பிரித்துக் காட்டுவதற்காகப் பெயரிட்டுக் கொண்டும் சத்திய வழியில் பாடுவடுவதாகச் சொல்லுகின்றான. இந்த மூன்று இயக்கத்தாரும் ஒத்தக் கொள்கையில் இருப்பதாகவும் சொல்லிக் கொள்ளுகின்றனர். அப்படியானால் இவர்களிடையே வேறுபட்ட பெயர்கள் இருக்க காரணம் என்ன? வழிக்கேடர்களிடமிருந்து வேறுபடுத்திக் காட்ட பெயரிட்டுள்ளோம் என்ற அவர்களின் வாதம் இங்கு பொய்யாகி விடுகிறது. அது உண்மையானால் இந்த மூவரும் ஒரேப் பெயரில் இயங்க தடையாக இருப்பது எது? பிறர் வைத்துக் கொண்ட பெயரின் கீழ் நாம் எப்படி இயங்குவது? இதுவே ஒவ்வொரு இயக்கத்தாரின் கேள்வியாகும்.
இந்த மூன்று இயக்கத்தாரும் ஒன்றுகூடி ஆலோசித்து ஒப்புக்கொள்ளும் நான்காவது பெயரை தேர்ந்தெடுத்து அதன் கீழ் இயங்குகிறார்கள் என்று வைத்துக் கொள்வோம். அந்தப் பெயரின் கீழ் சத்தியத்திற்காகப் பாடுபடும் அனைவரும் ஒன்றுபடுவார்களா? என்றால் அதுதான் இல்லை நான்காவது பெயரைத் தேர்ந்தெடுக்க சம்பந்தப்பட்டவர்கள் மட்டுமே அந்தப் பெயரை ஏற்றுக் கொள்வார்கள். அதிலும் முன்னைய மூன்று பெயர்களும் இருக்கும் நிலையில் நான்காவது ஒரு பெயர் புதிதாக தோன்றியிருக்கும். மற்றவர்களைப் பொறுத்தமட்டிலும் அதே பழையக் கேள்விதான். அதாவது அவர்களாக வைத்துக் கொண்ட பெயர்களின் கீழ் நாம் எப்படி இயங்குவது? ஆக, இதற்கு முடிவே இல்லை என்பது புலப்படுகிறதா? ஆக, மனிதர்கள் கூடி தேர்ந்தெடுக்கும் பெயரின் கீழ் மனித சமுதாயத்தை ஒன்றிணைக்க முடியாது. அதனால்தான் அல்லாஹ் கொடுத்த பெயரான இஸ்லாத்தின் கீழ் ஒன்றிணைக்கும் முயற்சியை மேற்கொண்டுள்ளோம். இது ஒரு தூரநோக்கு முயற்சியாகும். இன்றில்லாவிட்டாலும் நாளை இது நல்ல பலனைத் தரும் என்ற நம்பிக்கை நமக்கிருக்கிறது. (இன்ஷா அல்லாஹ்).
“இஸ்லாம்” என்ற பெயரில் இயங்க முடியாது என்பதற்கு அவர்கள் கூறும் இன்னொரு காரணம், “கபுரு வணங்கிகளும், முகல்லிதுகளும், தரீக்காகாரர்களும் இன்னும் இதுபோன்ற வழிகேட்டில் இருக்கும் அனைவரும் தங்களை முஸ்லிம்கள் என்றே சொல்லிக் கொள்கிறார்கள். எனவே நாமும் முஸ்லிம்கள் என்று சொல்லிக் கொண்டால் அந்த வழி கேடர்களுக்கும் நமக்கும் வித்தியாசம் இல்லாமல் போய்விடுகிறது. அவர்களிலிருந்து நம்மை வேறுபடுத்திக் காட்ட நமக்குத் தனியொரு பெயரிடுவது அவசியமாகிறது” என்பது அவர்களின் வாதமாகும். இந்த வாதத்திலும் உண்மை இல்லை. இறை கொடுத்த நேர்வழி இஸ்லாம் ஆகும். ஆதம்(அலை) அவர்களிலிருந்து இன்று வரை ஏன்? உலகம் அழியும் வரை இஸ்லாமே நேர்வழியாக இருக்கும். எனவே ஆதம்(அலை) அவர்கள் காலத்திலிருந்து இன்று வரை வழிக்கேட்டில் சென்றவர்கள் அனைவரும் தாங்கள் நேர்வழியில் (இஸ்லாத்தில்) இருப்பதாகவே சொல்லிக் கொண்டனர். வழிக்கேட்டிலிருந்த குறைஷிகள் தாங்கள் நேர்வழியில் இஸ்லாத்தில் இருப்பதாகவே சொல்லிக் கொண்டனர். ஆக, ஒட்டுமொத்தமாக வழிக்கேட்டில் இருக்கும் அனைவருமே நேர்வழியில் (இஸ்லாத்தில்) இருப்பதாகவே சொல்லி வருகின்றனர்.
வழிக்கேட்டில் இருப்பவர்கள் தாங்கள் நேர்வழியில்(இஸ்லாத்தில்) இருப்பதாகச் சொல்லிக் கொள்கிறார்கள் என்பதற்காக அல்லாஹ் தான் கொடுத்த நேர்வழி இஸ்லாத்திற்கு புதியதொரு பெயரைத் தேர்ந்தெடுக்கவில்லை. அதற்கு அவசியமும் இல்லை. தீயவன் ஒருவன் தீய செயல்களைச் செய்துகொண்டு தன்னை நல்லவன் என்று சொல்லுவதால் மட்டும் நல்லவனாகி விடமாட்டான். யாரும் அவனை நல்லவனாக ஏற்றுக்கொள்ளவும் மாட்டார்கள். நல்லவன் என்று சொல்லிக் கொள்வதால் அவன் லாபாம் அடைந்துவிடப் போவதில்லை. நல்லவன் என்று சொல்லிக் கொள்வதோடு நல்லவனாக நடந்தால் மட்டுமே வெற்றி பெற முடியும். எனவே வழிக்கேட்டில் இருந்துகொண்டு நேர்வழியில்(இஸ்லாத்தில்) இருப்பதாகச் சொல்லிக்கொள்வதால் மட்டும் ஒருவன் வெற்றியடைந்து சொர்க்கம் சென்றுவிட மாட்டான், இந்த உலகில் சொர்க்கவாதிகளும், நரகவாதிகளும் ஒன்றாகவே வாழ்ந்து வருகின்றனர். எனவே நேர்வழியில் இருப்பவர்களும், வழிக்கேடர்களும் தங்களை இஸ்லாத்தில் இருப்பதாகச் சொல்லிக் கொள்வதால் இவ்வுலகில் நஷ்டம் ஒன்றும் ஏற்பட்டுவிடப் போவதில்லை. மாறாக, இவ்வுலகில் ஆதாயமே ஏற்படுகிறது. மாற்று மதத்தினருடன் ஏற்படும் விவகாரங்களில் (பாபரி மஸ்ஜித், யூனிபார்ம் சிவில்கோடு போன்றவை) இவர்கள் ஒன்றுபட்டுச் செயல்படுவதன் மூலம் சாதனைகள் புரிய முடியும். எனவே, இவ்வுலகில் வழிக்கேட்டில் இருந்துக் கொண்டு தங்களை முஸ்லிம்கள் என்று சொல்லிக் கொள்பவர்களிலிருந்து நேர்வழியில் இருப்பவர்கள் தங்களை வேறுபடுத்திக் காட்ட வேண்டிய அவசியம் இவ்வுலகில் எதுவும் இல்லை. அரசியல் கட்சிகளைப் போல், லோகாதாய இயக்கங்களைப் போல் பிரித்தாளும் சூழ்ச்சிகள் மூலம் ஆதாயம் அடைய விரும்புகிறவர்கள் மட்டுமே முஸ்லிம்களில் பிரிவுகளை உண்டாக்க முற்படுவார்கள். இஸ்லாமிய வரலாற்றை ஆழ்ந்து நோக்குகிறவர்கள் ஆரம்பத்தில் அரசியல் ஆதாயம் அடைவதற்காகவே-அற்ப உலக ஆதாயங்களை அடைவதற்காகவே முஸ்லிம்களில் பிரிவினைகளை சுய நலமிகளே உண்டாக்கினார்கள் என்பதை உணர முடியும். (உதாரணம் : உமையாக்கள், அப்பாஸிக்கள்)
அதன்பின் முகல்லிதுகள் தங்களை மற்றவர்களிடமிருந்து பிரித்து அறிந்துகொள்ளத் தனித்தனியாகப் பெயர்களைச் சூட்டிக் கொண்டார்கள். அவர்கள் கண்மூடிப் பின்பற்றும் பழக்கம் உடையவர்களாக இருந்தால் வழிக்கேடர்களாக அவர்கள் கருதுபவர்களை யாரும் தக்லீது செய்யும் நிலை ஏற்பட்டு விடக்கூடாது என்பதற்காக அடையாளம் காட்டி, மக்கள் யாரும் அவர்களை தக்லீது செய்யும் நிலை ஏற்படாமல் தடுக்க முற்பட்டார்கள். (உதாரணம் : ஷீஆக்கள்-அஹ்லு சுன்னத்வல் ஜமாஅத்) முகல்லிதுகளைப் பொருத்தமட்டிலும் இந்த அவர்களின் நிலை சரிதான். ஆனால் தக்லீதை விட்டும் விடுபட்டு குர்ஆன், ஹதீஸை விளங்கிச் செயல்படும் நேர்வழி நடக்கும் கூட்டத்திற்கு யாரையும் வழிகேடர்கள் என்று முத்திரை குத்தி, இந்த உம்மத்திலிருந்து பிரிக்கும் அவசியம் இல்லை. காரணம், வழிகேடான செயல்கள் எவை எவை என குர்ஆன், ஹதீஸ் மூலம் தெளிவுப்படுத்தி விடுகிறோம். குர்ஆன், ஹதீஸைப் பார்த்து செயல்படுகிறார்கள். எனவே தங்களோடு பழகும் எவரிடம் வழிகேடான செயல்கள் காணப்பட்டாலும் இவர்கள் உஷாராகி தங்களை அதிலிருந்து பாதுகாத்துக் கொள்வார்கள். எனவே அவர்களிலிருந்து தங்களைப் பிரித்துக் காட்டிக் கொள்ளவும் அவர்களுக்கு வழிக்கேடர்கள் என்றோ, காஃபிர்கள் என்றோ முத்திரை குத்தி அவர்களை இந்த உம்மத்திலிருந்து ஒதுக்கும் நிலையை ஏற்படுத்தும் அவசியமும் இல்லை. நேர்வழி நடப்பவர்கள் முஸ்லிம்கள் அனைவரையும் அவர்கள் நேர்வழியிலிருந்தாலும் சரி, வழிக்கேட்டிலிருந்தாலும் சரி அணைத்துச் செல்லவே முற்படுவார்கள். இந்த உம்மத்தைச் சிதர விடாமல் பாதுகாக்கவே முற்படுவார்கள். ஆனால் மறுமையில் அல்லாஹ் அவரவர்களின் செயல்களுக்கேற்ப வெகுமதியோ, தன்டனையோ கொடுக்க அவர்களைப் பிரித்து வேறுபடுத்தி விடுவான். (இன்றைய தீமை குற்றவாளிகளே நீங்கள் பிரிந்து நில்லுங்கள் 36:59) அல்லாஹ்வுடைய இந்த அதிகாரத்தில் நாம் தலையிட்டு இவ்வுலகிலேயே இந்த உம்மத்தில் பிரிவுகளை உண்டாக்குவது எவ்வளவு பெரிய குற்றம் என்பதை நாம் உணர வேண்டும்.
அடுத்து இன்னொரு விஷயத்தையும் அவர்கள் தங்கள் கவனத்தில் கொள்ள வேண்டும். வழிகேட்டிலிருப்பவர்களை விட்டும் தனித்துக் காட்டுவதற்காக தங்களுக்கென்று ஒரு தனிப்பெயரை அவர்களாகவே சூட்டிக் கொண்டு செயல்படுகிறார்களே, அந்த பெயரின் கீழ் செயல்படுகிறவர்கள் அனைவரும் நேர்வழியில் இருக்கிறவர்கள். மறுமையில் சுவர்க்கத்தை அடைந்து விடுவார்கள் என்ற உத்திரவாதத்தை இவர்களால் தர முடியுமா? ஒருபோதும் முடியாது. முஸ்லிம்கள் என்று சொல்லிக்கொண்டு அனைவரும் வழிக்கேட்டில் இருப்பது போல், இந்த பெயர்களின் கீழ் செயல்படுகிறவர்களில் பலரும் வழிக்கேட்டில் இருப்பதுபோல், இந்தப் பெயர்களின் கீழ் செயல்படுகிறவர்களின் பலரும் வழிக்கேட்டில் இருக்க முடியம். அதனால் தாங்கள் நேர்வழியில் இருப்பதைக் காட்டிக் கொள்ள வைத்த பெயரிலும் வழிக்கேடர்கள் வந்துவிட்டார்கள் என்பதற்காக அந்தப் பெயரையும் விட்டு அதிலிருந்து வேறொரு பெயரைத் தேர்ந்தெடுக்கப் போகிறார்களா? அப்படியே பெயரிட்டுக் கொண்டு சென்றால் அதற்கு ஒரே முடிவு தான் ஏற்படுமா? ஆக, எந்தக் கோணத்தில் பார்த்தாலும் தனிப்பெயர் வைத்துக்கொள்ள இவர்கள் கூறும் காரணங்கள் அனைத்தும் தவறானவை என்பது தெளிவாகவே புலனாகிறது.
அனுபவத்தைக் கொண்டாவது அறிவு பெற வேண்டும் :
இந்த விஷயத்தில் நாம் மிக உறுதியாக இருந்ததால் 1987-ல் நம்மை விட்டுப் பிரிந்து சென்றனர். அன்று நமது கூற்றை ஏற்றுக் கொள்ளாதவர்கள் இன்று தங்கள் சொந்த அனுபவத்தில் பெற்றிருப்பதைப் பார்ப்போம். அந்நஜாத் பத்திரிக்கை ஆரம்பிப்பதற்கு முன்பே அஹ்ல ஹதீஸ் இயக்கம் இயங்கிக் கொண்டிருந்தது. அந்நஜாத் பத்திரிக்கை ஆரம்பிக்கப்பட்ட பின் ஐ.ஏ.சி தோன்றியது. அவர்கள் அந்நஜாத் பத்திரிக்கையை விட்டுப் பிரிந்து சென்றபின் அஹ்லுல் குர்ஆன் வல்ஹதீஸ் அமைக்கப்பட்டு ஒரு வருடத்திற்குப் பின் அது ஜம்யிய்யது அஹ்லில் குர்ஆன் வல்ஹதீஸ் என்று மாற்றப்பட்டது. இந்த மூன்று இயக்கத்தாரும் நாங்கள் கொள்கையில் ஒன்றுபட்டவர்கள், பெயரில் வேறுபட்டிருந்தாலும் எங்களால் ஒன்றுபட முடியும் என்று சொல்லிச் செயல்பட்டார்கள். அது சாத்தியமானதா? என்று பார்ப்போம்.
பு. மின்னல் டிசம்பர், 88 இதழின் முதல் பக்கத்தில் இஸ்லாமிய மாநாடு, இடம் நாகூர், தேதி: பிப்ரவரி 18, 19-02-1989, மாநாடு அமைப்பு : ஐ.ஏ.சி என்ற விளம்பரம் வெளியானது. அனைவருக்கும் ஞாபகம் இருக்கலாம், அது நடைபெற்றதா? இல்லை, காரணம் என்ன தெரியுமா? மாநாட்டை ஐ.ஏ.சி பெயரில் நடத்துவதா? JAQH பெயரில் நடத்துவதா? என்பதே ஆலோசனைக் கூட்டத்தில் தகராறு’ சில தவ்ஹீத் சகோதரர்கள் எந்த அளவு உணர்ச்சி வசப்பட்டிருக்கிறார்கள் என்றால், “எங்களுக்கு இஸ்லாத்தை விட இயக்கம் தான் பெரிது” என்று பகிரங்கமாக அந்த ஆலோசனைக் கூட்டத்தில் கூறியுள்ளனர். இந்த தவ்ஹீத் சகோதரர்களின் தவறான போக்கிற்கு யார் காரணம்? சிந்திக்கக் கடமைப்பட்டிருக்கின்றோம். முடிவு! பெயர் பிரச்சனையால் விளம்பரப்படுத்தப்பட்ட மாநாடு நடைபெறாமலே போய் விட்டது.
ஐ.ஏ.சி இயக்கத்தார் நாகூரில் தங்கள் பெயரில் மாநாடு நடத்த முடியாவிட்டாலும் தங்களுக்கு ஆதரவு தரும் ஒரு ஊரில் மாநாடு நடத்தியே தீருவது என்ற வீறாப்புடன் பரங்கிப் பேட்டையில் 4, 5-3-1989 இரண்டு நாட்கள் மாநாடு நடத்தினர். அந்த மாநாட்டிற்கு JAQH இயக்கத்தாரின் ஒத்துழைப்பு இல்லை. அதன் விளைவு எதிர்பார்த்த அளவு மாநாடு பயன் தரவில்லை. பிப்ரவரி ’89ல் ஐ.ஏ.சி இயக்கத்தாரின் அறிவிப்புக்குப் பின் இப்போது ஜனவரி 90ல் நாகூரில் இஸ்லாமிய மாநாடு நடைபெற இருப்பதாக JAQH இயக்கத்தார் அறிவிப்பு வெளியிட்டுள்ளனர். இவர்களின் இந்த மாநாட்டிற்கு அஹ்ல ஹதீஸ் இயக்கத்தினரும், ஐ.ஏ.சி.இயக்கத்தினரும் எந்த அளவு ஒத்துழைப்பு தர இருக்கிறார்கள் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம். அதற்கும் சில அறிகுறிகள் தென்படுகின்றன. சென்ற செப்டம்பர் மாதம் 17ம் தேதி சென்னையில் ஒரு அஹ்ல ஹதீஸ் பள்ளியில் மார்க்க விளக்கக் கூட்டத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அறிவிப்பு வெளியிட்டவர்கள் அதன் அடியில் JAQH எனப் பதித்துள்ளனர். அவ்வளவுதான் அஹ்ல ஹதீஸ் பள்ளியில் JAQH இயக்கத்தினருக்கு இடமில்லை என கடைசி கட்டத்தில் கை விரித்து விட்டனர். அஹ்ல ஹதீஸ் இயக்கத்தினர் வேறு வழியின்றி வேறொரு இடத்தில் கூட்டத்தை நடத்தி, அஹ்ல ஹதீஸ் இயக்கத்தினரை விமர்சித்துள்ளார் JAQH இயக்கத்தினர் சத்தியத்தை நிலைநாட்ட ஒன்றுபட்டுச் செயல்படுவதாக சொல்லிக்கொள்ளும் மூன்று இயக்கத்தினரின் நிலை இதுதான்: அவரவர்களின் பெயர் ஓங்க வேண்டும் என்ற எண்ணமே சத்திய மார்க்கம் ஓங்க வேண்டும் என்ற எண்ணத்தை விட மிகைத்திருப்பது தெளிவாக தெரிகின்றதல்லவா? அதுமட்டுமல்ல, அந்த இயக்கங்களில் ஈடுபடும் இளைஞர்களின் உள்ளங்களிலும் இஸ்லாத்தை விட இயக்கவெறி மேலோங்கி விடுகிறது. அதனால்தான் சில சகோதரர்கள் எங்களுக்கு இயக்கம்தான் பெரிது என்று பகிரங்கமாகவே அறிவித்துள்ளனர்.
உதாரணமாக, நாகூரில் “இஸ்லாமிய கல்விக்கூடம்” என்று குழு அமைத்து இயங்கி வந்தது. இது JAQH இயக்கத்தினருக்குப் பிடிக்காததால் அதனை வலியுறுத்தி கலைக்கச் செய்து “JAQH கல்விக்கூடம்” என்று நாமும் சூட்டி, பதவியாளர்களை மாற்றி அவர்களிடையே மனக்கசப்பை ஏற்ப்படுத்தியுள்ளனர். அங்கு கட்டப்படப்போகும் பள்ளிவாசலுக்கும் JAQH பள்ளிவாசல் என பெயர் சூட்ட ஆர்வமாக உள்ளனர்.
மார்க்கத்தில் இன்றைய அரசியல் போக்கு நல்லதல்ல:
பொதுவாக இன்றைய உலகில் மனிதர்களிடம் குறிப்பாக இளைஞர்களிடம் வேலை வாங்குவதென்றால், அவர்களுக்கு ஒரு பதவியைக் கொடுத்துவிட்டால் போதும், பம்பரமாகச் சுழல்வார்கள். அவர்களை அவ்வாறு சுழல வைப்பது அந்த பதவிதான். அதனால் அரசியல் கட்சிகளும், மற்றும் லோகாதாய அடிப்படையில் அமைந்துள்ள அமைப்புகளும் ஒவ்வொருவருக்கும் ஒரு பதவியைக் கொடுத்து அதன் மூலம் வேலை வாங்கிக் கொள்கின்றன. இவ்வுலகத்தைப் பொருத்தமட்டிலும் இதில் தவறில்லை. ஆனால், மறுமையைக் குறிக்கோளாகக் கொண்ட முஸ்லிம்கள் பதவி கிடைப்பது கொண்டு உழைக்க முன்வரும்போது அவர்களிடம் அல்லாஹ்வின் பொருத்தம் பெறும் இஃலாஸ் எடுபட்டுவிடுகிறது. அவர்கள் பம்பரமாக சுழன்று தீனுக்காகப் பாடுபட்டாலும் இறுதியில் அவர்கள் நரகில் தூக்கி எறியப்படும் துர்பாக்கிய நிலைக்கு ஆளாக்கப்படுகின்றனர். உலகில் புகழுக்காக போராடி வெட்டுப்பட்ட ஷஹீத், மார்க்கம் போதித்த ஆலிம், கொடைவள்ளல் அனைவரும் முகம் கவிழ இழுக்கப்பட்டு நரகில் தூக்கி எறியப்படுவார்கள் என்பது நபி(ஸல்) அவர்களின் எச்சரிக்கையாகும். (ஹதீஸ் சுருக்கம்) (அபூஹுரைரா(ரழி), இல்மு-முஸ்லிம்)
இயக்க அமைப்புகளில் செயல்படும்போது இன்றைய அரசியல் கட்சிகளிலும், லோகாதாய இயக்கங்களிலும் காணப்படும் போட்டி போறாமை, பதவியாளர்களுக்கிடையே கடும் மோதல், அதனால் மனக்கசப்புகள், உட்பூசல்கள் இவை அனைத்தும் இந்த இயக்கங்களிலும் குறைவில்லாமல் காணப்படுகின்றன. இதனை இஸ்லாத்தின் உண்மையான வளர்ச்சியில் அக்கரை கொண்டுள்ள சகோதர, சகோதரிகள் கவனத்தில் கொண்டு செயல்பட முன்வர வேண்டும்.
இயக்கங்கள் விறுவிறுப்பாகச் செயல்பட காரணம்:
இயக்கங்களில் கொடுக்கப்படும் பதவிகளே மனிதர்களை குறிப்பாக இளைஞர்களை சுறுசுறுப்பாக வேலை செய்ய வைக்கிறது என்பதை நாம் நன்கு அறிவோம். அப்படிச் செயல்பட்டு ஒரு பெருங்கொண்ட இயக்கத்தை இயங்க வைத்துவிட முடியும். அதனைக் கொண்டு பல அரிய சாதனைகளையும். கோடிக்கனக்கான ரூபாய்களுக்குரிய வரவு செலவுகளையும் உண்டாக்க முடியும். இவ்வாறு ஓரிரு இயக்கங்கள் சுறுசுறுப்பாகக் கொண்டு சுறுசுறுப்பாகச் செயல்பட்டு, சில கூட்டங்களை நடத்தி, அதற்கு சில கூட்டங்களை நடத்தி, அதற்குச் சில ஊர்களில் வாலிபர்கள் ஆதரவு கொடுத்து விட்டால் இதனைப் பெரும் சாதனையாக சில சகோதரர்கள் கருதி விடுகின்றனர். இது பெரும் ஏமாற்றமே. ஒரு இயக்கத்தை திறம்பட நடத்தி விடுவதால் முஸ்லிம் சமுதாயம் மேன்மையடைந்து விடப் போவதில்லை என்பதை அச்சகோதரர்கள் உணர வேண்டும். உதாரணமாக காதியானிகள் தங்கள் இயக்கத்தின் நூற்றாண்டு விழா கொண்டாடுகிறார்கள். உலகின் பல பகுதிகளில் அவர்களின் கிளைகள் இயங்குவதாக அறிவிக்கிறார்கள். பல கோடிக்கணக்கான ரூபாய்க்கு வரவு செலவு இருப்பதாகக் கூறிக் கொள்கின்றனர். இதனால் அவர்கள் சாதித்து விட்டதாக சொல்ல முடியுமா? சரிந்து கிடக்கும் முஸ்லிம் சமுதாயத்தை தூக்கி நிறுத்த அவர்களால் முடிந்ததா? சிந்தித்து பார்க்க வேண்டும். அதேபோல் மாற்று மதங்களிலும் எண்ணற்ற இயக்கங்கள் மிகத் திறம்பட இயங்கிக் கொண்டிருக்கின்றன என்பதையும் நாம் உணர வேண்டும். இயக்கங்களை மிகத் திறம்பட நாம் இயக்கி காட்டமுடியும். ஆனால் சாதிக்க முடியாதது எது தெரியுமா? சுமார் 1000 வருடங்களுக்கு முன் சரிந்து விட்ட முஸ்லிம் சமுதாயத்தை மீண்டும் அதன் உன்னத நிலைக்குக் கொண்டுவர இப்படிப்பட்ட இயக்கங்களால் ஒருபோதும் முடியாது. நபி(ஸல்) அவர்களின் முறைகளை அப்படியே பின்பற்றுகிறவர்களால் மட்டுமே அது சாத்தியமாகும். இயக்க வெறிக்கு அடிமையாகாமல் இஃலாசுடன் அல்லாஹ்வுக்காகப் பாடுபடும் இளைஞர்களை ஈர்ப்பதைவிட இது மிகவும் கடினமான ஒரு வேலைதான். கூட்டம் குறைவாகவே இருக்கும். ஆயினும் கூட்டத்தை உடனடியாக எதிர்ப்பார்க்காமல் தூர நோக்குடன் செயல்பட்டால் இது சாத்தியமானதே. இளைஞர்களின் உள்ளத்தில் தக்வாவை உண்டாக்கி, பேர் புகழுக்காகவோ, பட்டம் பதவிகளுக்காகவோ இல்லாமல் அல்லாஹ்வுக்காக பாடுபட்ட நபித்தோழர்கள் அடைந்த அந்த ஆர்வத்தை இவர்களும் அடையப் பயிற்றுவிக்க வேண்டும். இந்த பயிற்சியை இயக்கங்கள் கொடுக்க முடியாது. காரணம், பதவிகள் இல்லை என்றால் இயக்கங்கள் இல்லை என்பதே பொருளாகும். இஸ்லாம் மட்டுமே இந்தப் பயிற்சியைக் கொடுக்க முடியும்.
பரிகாரம் என்ன?
மனித அபிப்ராயங்கள் மார்க்கத்தில் புகுத்தப்பட்டு மக்கள் பல மதத்தினராகவும், ஒரே மதத்தினர் பல பிரிவினர்களாகவும் பிரிந்துள்ளனர் என்று பார்த்தோம். முஸ்லிம் சமுதாயமும் இதற்கு விதிவிலக்காக இல்லை. அல்குர்ஆன் வசனங்களில் விளக்கம் என்ற பெயரால் மனித அபிப்ராயங்கள் புகுத்தப்பட்டு பர பிரிவினர் காணப்படுகின்றனர். ஏகத்துவத்தை நிலைநாட்டப் பாடுபடும்-சத்தியத்திற்காக உழைக்கும் நேர்வழி நடக்க விரும்பும் சிறு கூட்டமும் இயக்கங்களின் பெயரால் பிரிந்துள்ளனர் என்றுப் பார்த்தோம். இவர்கள் ஒன்றுபடாதவரை இவர்களின் முயற்சியில் வெற்றியடையப் போவதில்லை, சரிந்துவிட்ட முஸ்லிம் சமுதாயத்தை இவர்கள் தூக்கி நிறுத்தப் போவதில்லை என்ற விபரங்களையும் பார்த்தோம். ஒற்றுமைக்குரிய வழி என்ன? என்பது தான் இப்போது நம்முன் உள்ள பிரச்சனை. இதனை மனித அறிவுக் கொண்டு தீர்த்து விட முடியாது. நமது அறிவு ஆய்வுகளைத் தூக்கி மூலையில் வைத்துவிட்டு, அல்லாஹ்வின் கட்டளைகளை அப்படியே செயல்படுத்த நாம் தயாராக ஆக வேண்டும். அல்லாஹ்வின் கயிற்றைப்(குர்ஆன்) பற்றிப் பிடித்துக் கொள்ளுங்கள். பிரிந்து விடாதீர்கள்; (3:103) என்ற இறை ஆணைப்படி, உங்களுக்குள் கருத்து வேறுபாடு வந்துவிட்டால் அல்லாஹ்வின் பாலும், அவனது ரஸுலின் பாலும் திரும்பி விடுங்கள். (4:59) என்ற இறை வழி காட்டலின் படி குர்ஆனைக் கொண்டும், ஆதாரப்பூர்வமான ஹதீஸ்களைக் கொண்டு மட்டும் பிரச்சனைகளைத் தீர்க்க முன்வர வேண்டும். சிறிய விஷயமாக இருந்தாலும் சந்தேகமான விஷயங்களை விட்டு, உறுதியானதைச் செயல்படுத்த முன்வர வேண்டும்.
“உமக்கு திட்டவட்டமான அறிவு இல்லாத விஷயங்களை நீர் பின்பற்ற வேண்டாம்.” (17:36)
“உனக்கு சந்தேகம் தருபவற்றை நீ விட்டுவிடு. சந்தேகமற்ற (உறுதியான) விஷயங்களின் பால் நீ சென்றுவிடு”.
(புகாரீ(வியாபாரம்), திர்மிதீ(கியாமத்), அஹ்மத்)
ஆகுமானவையும் தெளிவானவை, ஆகாதவையும் தெளிவானவை. இவ்விரண்டுக்கும் மத்தியில் சந்தேகமானவையுமுள்ளன. எவர் பாவத்திலிருந்து தமக்கு சந்தேகமானவற்றைத் தவிர்த்துக் கொள்கிறாரோ, அவர் (பாவங்களில்) தெளிவானவற்றை விட்டும் நிச்சயமாக தவிர்த்துக் கொள்வார். எவர் பாவத்திலிருந்து சந்தேகமானவற்றை செய்யத் துணிகிறாரோ, அவர் பாவமென்று தெரிந்தவற்றையும் செய்ய முற்ப்பட்டு விடுவார். பாவங்கள் அல்லாஹ்வின் எல்லைகளாகும். எல்லை அருகில் மேய்ந்து கொண்டிருப்பவர் எல்லைக்குள்ளேயும் பிரவேசிக்க முற்ப்பட்டுவிடுவார் என்று நபி(ஸல்) கூறியுள்ளார்கள்.
(நுஃமானுபழன் பஷீர்(ரழி), புகாரீ)
உதாரணமாக பிஸ்மியை சப்தமின்றி தொழுகையில் ஓதுவதற்குரிய ஹதீஸ் தொழுகையில் என்றே திட்டமாகக் குறிப்பிடுகிறது. பிஸ்மியை சப்தமாக ஓதுவது தொழுகையிலா, வெளியிலா என்பது ஹதீஸில் திட்டமாகக் குறிப்பிடப்படவில்லை. ஒரு வாதத்திற்காக தொழுகையிலாக இருக்கலாம் என்று வைத்துக் கொண்டாலும் சந்தேகத்திற்கு அப்பாற்ப்பட்டதல்ல. எனவே சந்தேகமானதை விட்டு உறுதியானதை எடுத்து கருத்து வேறுபாட்டைத் தீர்த்துக் கொள்ளலாம். இரண்டையும் அனைவரும் செயல்படுத்துவது கொண்டு கருத்து வேறுபாட்டைத் தீர்த்து வைக்கலாம்.
இப்படி மனிதர்களிடையே ஏற்படும் கருத்து வேறுபாடுகளைக் களைந்து, அனைவரும் ஒன்றுபட்டுச் செயல்படும் அழகிய முறையை அல்குர்ஆனும், ஆதாரப்பூர்வமான ஹதீஸ்களும் நமக்குத் தெளிவாக தருகின்றன. மார்க்கம் தெளிவாக இருக்கும் நிலையில் அதில் மனித அபிப்ராயங்களைப் புகுத்தி மக்களைக் குழப்புவது பெருங்குற்றமாகும்.
இன்று சத்தியத்தை நிலைநாட்டப் பாடுபட்டு வரும் சகோதரர்களிடையே காணப்படும் கருத்து வேறுபாடுகளைக் கூர்ந்து கவனித்தால் ஒரு சாரரின் ஆதாரங்களை தெள்ளத் தெளிவானதாகவும், சந்தேகத்திற்கு இடமில்லாததாகவும், சந்தேகத்திற்குரியதாகவும் இருப்பதை அவதானிக்கலாம். ஆதாரங்கள் தெளிவில்லாத நிலையில் தங்கள் சொந்த விளக்கங்களையும் யூகங்களையும் வார்த்தை ஜாலாங்களையும் உபயோகித்து தங்கள் கட்சியை நியாயப்படுத்த முற்படுவதையும் அறிந்துக் கொள்ள முடிகிறது. சந்தேகமானவற்றை விட்டு, சந்தேகமற்ற உறுதியான விஷயங்களில் பால் சென்று விடச் சொல்லும் மேற்காணும் குர்ஆன், ஹதீஸ்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து கருத்து வேறுபாடுகளை தீர்க்க அனைவரும் முன்வந்து விட்டால், முஸ்லிம் சமுதாய ஒற்றுமைக்கு வழியேற்பட்டுவிடும். இது காலத்தின் கட்டாயமாக இருக்கிறது. எனவே முஸ்லிம் சகோதர, சகோதரிகள் அனைவரும் இது விஷயத்தில் உடனடி கவனம் செலுத்தி சமுதாய ஒற்றுமைக்குப் பாடுபடும் படி அன்புடன் வேண்டுகிறோம்.