மக்காச்சுடரில் “ஹலோ மிஸ்டர் அந்நஜாத்” என்ற தொடரில் எழுதி வருவது பற்றி நீங்கள் ஏன் விரிவான விளக்கம் அளிப்பதில்லை?
எம். முஹம்மது ஸலீம், பாலக்கரை.
எரிந்த கட்சி! எரியாத கட்சி!! என்ற அடிப்படையிலோ, பட்டிமன்றம் நடத்தும் நோக்கத்துடனோ நாம் அந்நஜாத் பத்திரிக்கை நடத்தவில்லை. மக்களுக்கு முன் சத்தியத்தை எடுத்து வைத்து அவர்களை விளங்கிச் செயல்பட வைக்க வேண்டும் என்ற நோக்கத்துடன் செயல்பட்டு வருகிறோம். இந்த நிலையில் அவர்களது எழுத்தில் நியாயமான சந்தேகங்களோ, ஆட்சேபனைகளோ இருந்தால் அதற்காக நாம் விளக்கம் கொடுக்கக் கடமைப்பட்டுள்ளோம். அதல்லாமல் தரம் தாழ்ந்து திட்டத் தொடங்கினால் அதேப் போல் நாமும் தரம் தாழ்ந்து சொல்வது முறையல்ல. அது நமது நோக்கமும் அல்ல. WHEN ARGUMENT FAILS ABUSE STARTS- வாதம் தோல்வியுறும் போது வசைபாடல் ஆரம்பமாகும் என்ற ஆங்கிலப் பழமொழிப்படி அவர்கள் வாதத்தை வாதத்தால் வெல்ல முடியாமல் வசைபாட ஆரம்பித்துள்ளனர் பானையில் இருந்தால் தானே அகப்பையில் வரும். அவர்களின் இழிநடையைப் பார்த்து அவர்களின் ஆதாரவாளர்களே உணர்ந்து வருகிறார்கள். அவர்களின் எழுத்துக்களே அவர்களை அடையாளம் காட்டப் போதுமானதாக இருக்கும் போது நாம் வேறு எழுதி பக்கங்களை பாழாக்க வேண்டுமா?
லெப்பைக்குடி காட்டில் எந்தவொரு நிகாஹ் நிசழ்ச்சியிலும் நாம் கலந்துக் கொண்டதில்லை என்று தெளிவாக அறிவித்து விட்டோம் மீண்டும் இதே பல்லவியை பாடுகிறார் அந்த நிக்காஹ் லெப்பைக்குடி காட்டில் எந்தத் தெருவில், எந்த வீட்டில், எந்ந தேதியில் நடந்தது? மாப்பிள்ளை, பெண்ணின் பெயர் என்ன? என்ற விபரங்களை அவர்கள் அறியத் தருவார்களா? ஆண்களையும், பெண்களையும் ஒன்றாக வைத்து உபதேசம் செய்வதை லெப்பைக்குடி காடு ஜமாஅத்தினர் பார்த்துக் கொண்டா இருந்தனர்? இரவில் ஆண்களும், பெண்களும் திரையின்றி ஒன்றாக இருப்பதைப் பார்த்துக் கொண்டு வாளாவிருக்கும் அளவிற்கு வெப்பைக்குடி காடு ஜமாஅத்தினர் மார்க்கம் தெரியாதவர்களா? ஒரு ஜமாஅத்தினரை எந்த அளவு இந்த முகல்லிது மவ்லவிகள் இழிவுப்படுத்துகின்றனர் என்பதை இந்த பொதுமக்கள் உணரும் காலம் வெகு தூரத்திலில்லை.
நபி(ஸல்) அவர்கள் ஹதீஸில் வந்துள்ள மழைத் தொழுகைக்கு முன்னாலும் ஐங்கால கூட்டுத் தொழுகைகளில் கூட்டு துஆ ஓதிக்காட்டித் தரவில்லை. மழைத் தொழுகை சம்பவத்திற்குப் பிறகும் ஐங்காலக் கூட்டுத் தொழுகையில் கூட்டு துஆ ஓதிக் காட்டித் தரவில்லை. மக்களுக்கு மார்க்கத்தைக் கற்ப்பிக்க வந்த நபி(ஸல்) அவர்கள், கற்றுத்தர கடமைப்பட்ட நபி(ஸல்) அவர்கள் அப்படிக் கற்றுத்தரவில்லை. நபி(ஸல்) அவர்கள் கற்றத்தராத ஒன்றை மனித அபிப்பிராயப்படி மார்க்கமாக ஆக்கிக் கொண்டு குதியோ குதி என்று குதிப்பவர்களைப் பற்றி அவர்கள் இரவைப் பகல் என்று கூறினாலும் அதனை வேதவாக்காக எடுத்து நடக்கும் அவர்களின் பக்தகோடிகள் உணர்ந்திருக்கலாம். ஆனால் சிந்தனையாளர்கள் நாம் சொல்லித் தெரிந்துக் கொள்ளலாம் நிலை இல்லை என்பதே உண்மையாகும்.
அவர்களின் செப்டம்பர், அக்டோபர் ’89 இரண்டு மாத உளரல்களில் விளக்கம் சொல்லித் தெரிய வேண்டிய விஷயம் ஒன்றும் இல்லை. நபி(ஸல்) அவர்கள் 3 நாட்கள் மட்டும் 8+3 ரகாஅத் தொழுதுக் காட்டியதை மாதம் முழுவதும் தொழுவது பித்அத் இல்லையா? என்று நியாயமான ஒரு கேள்வியை மட்டும் கேட்டுள்ளனர். அதற்கும் அந்நஜாத் மே’86 இதழிலேயே தெளிவாக விளக்கம் கொடுத்துள்ளோம். அது வருமாறு:
“அடுத்து இந்தச் சிலர் இன்னொரு ஐயத்தைக் கிளப்புகிறார்கள். நபி(ஸல்) அவர்களை அப்படியே பின்பற்றுகிறவர்கள், ரமழான் இரவுத் தொழுகையை 3 நாட்கள் தானே ஜமாஅத்துடன் தொழுகிறார்கள்? என்ற கேள்வியே அது.
நபி(ஸல்) அவர்களின் செயல் மட்டும் தான் மார்க்கம் என்று நினைப்பவர்களின் அறியாமை குறித்து என்ன சொல்ல முடியும்? நபி(ஸல்) அவர்களின் சொல், செயல், அங்கீகாரம் மூன்றும் மார்க்கமே என்று எண்ணுபவர்களே நேர்வழி நடப்பவர்கள் ஆவார்கள். நபி(ஸல்) அவர்கள் மூன்று நாட்கள் ஜமாஅத்தாக தொழ வைத்தார்கள். நான்காவது நாள் வீட்டைவிட்டு வெளியே வரவில்லை. பஜ்ரில், “நீங்கள் எனக்காகக் காத்திருந்தீர்கள். இந்தத் தொழுகை பர்ளாக ஆக்கப்பட்டு விடுமோ என்ற அச்சமே என்னை வரவிடாமல் தடுத்து விட்டது” என்ற கருத்தில் தெளிவாக அறிவிப்புச் செய்தது. புகாரீயில் (பாகம்1, பக்கம் 342) காணப்படுகிறது. மேலும் நபி(ஸல்). அவர்கள் காலத்திலேயே நபித்தோழர்கள் சிறு சிறு ஜமாஅத்தாக தொழுததற்கும், நபி(ஸல்) அவர்கள் அதை அங்கீகரித்ததற்கும் ஆதாரங்கள் கிடைக்கின்றன, ஆக செயலில் 3 நாட்கள் ஜமாஅத்தாக தொழுதுவிட்டு, தக்க காரணத்தோடு நிறுத்திக் கொண்டாலும், சொல், அங்கீகாரம் இரண்டின் அடிப்படையில் ரமழான் முழுவதும் ஜமாஅத்தாக தொழுவதும் நபிவழியே ஆகும்”.
1986 லேயே இவ்வளவு தெளிவாக எடுத்து எழுதிய பின்பும் கண்ணை மூடிக்கொண்டு விஷயமே தெரியாதது போல் கூக்குரலிடுகிறவர்களுக்கு என்னதான் தெளிவாக விளக்கம் கொடுத்தாலும் அது அவர்களின் காதுகளில் விழப்போவதில்லை. செவிடன் காதில் ஊதிய சங்குத்தான். முகல்லிது மவ்லவிகளும் மிகப் பரிதாபத்திற்குரியவர்கள். அவர்களைக் கண்ணைமூடிக் கொண்டு பின்பற்றும் மக்களோ மிகமிகப் பரிதாபத்திற்குரியவர்கள். நமது குர்ஆன், ஹதீஸ் விளக்கம் குர்ஆன் ஹதீஸ் வழி நடக்க விரும்பும் மக்களுக்கே பலனளிக்கும். குருட்டுத் தனமாக முன்னோர்களையும், இன்றைய மவ்லவி வர்க்கத்தையும் பின்பற்றிச் செல்லும் கூட்டத்திற்கு பலனளிப்பது சந்தேகத்திற்குரியதே! காரணம், அல்லாஹ்வே “எந்த சமூகம் தனது நிலையை மாற்றிக் கொள்ளவில்லையோ அவர்களின் நிலையை நாம் மாற்றப் போவதில்லை” என்று கூறுகிறான்.