அருள்மறையை அறிந்துகொள்வாராக! அருண்ஷோரி-2.
மாற்று மதத்தவர்களுக்கு இஸ்லாம் கொடுக்கும் கண்ணியம்
அப்துல்லாஹ்
ஜனவரி 89 இதழில் இந்தியன் எக்ஸ்பிரஸ் ஆசிரியர் அருண்ஷோரி இஸ்லாம் ஒரு வெறிபிடித்த வன்முறையைத் தூண்டும் மார்க்கம் என்று தவறாக எழுதியதை விமர்சித்து (கண்டித்து) இஸ்லாத்தின் உண்மை நிலையை விளக்கி இருந்தோம். அருண்ஷோரி அறிந்து கொண்டே, இஸ்லாம் மாற்று மதத்தவரை கண்ட இடங்களில் கொலை செய்ய வேண்டும் என்று கூறுவதாக 2:191 திருக்குர்ஆன் வசனத்தை தவறாக ஆதாரம் காட்டியிருந்தார். அதன் பின்பும் மதத்தில் இஸ்லாத்தில் உள்ளதுபோல் உயர்ந்த கொள்கை இல்லை என்ற காழ்ப்புணர்ச்சிதான் அவரை அவ்வாறு எழுதத் தூண்டியது என்பதையும் விளக்கினோம்.
அதற்கும் மேலாக இஸ்லாம் மாற்று மதத்தவர்களை எந்த அளவிற்கு கண்ணிணப்படுத்துகின்றது. மாற்று மதத்தவர்களோடு எத்தகைய பரஸ்பர தொடர்புடன் வாழ வேண்டும் என்பதைப் பற்றி இஸ்லாம் கூறுவதைப் பார்ப்போம்.
முதலாவதாக இஸ்லாம் கூறுகின்றது.
“லா இக்ராஹஃபித்தீன்”
மார்க்கத்தில் நிர்ப்பந்தமே இல்லை; வழிகேட்டிலிருந்து நேர்வழி பிரிந்து முற்றிலும் தெளிவாகிவிட்டது.
அன்று மீனாட்சிபுரம் போன்ற இடங்களில் மாற்றத்துக்கும் நாட்டுப் பணம்தான் காரணம் என்று சொல்லும் மாற்று மதத்தவர் இஸ்லாத்தில் உள்ள இத்தகைய உண்மை நிலையை அறியாதவர்களாகவே இருக்கிறார்கள். பணத்தையோ, பதவியையோ அல்லது வேறு எதையும் விலையாகக் கொடுத்து மக்களை இஸ்லாத்தின் பக்கம் ஈர்ப்பதை இஸ்லாம் விரும்பவில்லை. அவ்வாறு இஸ்லாத்திற்கும், இவர்களுக்கும், அவ்வாறு வருவதற்கு காரணமானவர்களுக்கும் இறைவனிடம் எந்தக் கூலியும் கிடையாது என்பது நபி(ஸல்) அவர்கள் காலத்திலேயே தெளிவாகக் கூறப்பட்டு விட்டது என்பதை முஸ்லிம்கள் தெளிவாகவே அறிந்திருப்பதால், மாற்று மதத்தவர்கள் இத்தகைய பொய் குற்றச்சாட்டை கூறுவது பொருத்தமற்றதும், பொறாமையுமாகும், அன்று மக்காவை விட்டு நபி(ஸல்) அவர்களும், நபித்தோழர்களும் மதீனாவுக்கு ஹஜ்ஜுக்குச் சென்றார்கள். அதில் இறை திருப்திக்காக பலர் நாடு துறந்தார்கள். வேறு சிலர் மதீனாவின் செழிப்பை நாடி, அங்கு சென்று செழிப்பாக வாழலாம் என்ற நோக்கோடு புறப்பட்டனர். மேலும் சிலர் மக்காவில்தான் மணந்து கொள்ள வேண்டும் என்று திட்டமிட்டு வைத்திருந்த பெண்கள் மதீனா சென்று விட்டார்கள். அப்பெண்களைத் தாம் அடைய வேண்டும் என்ற நோக்கோடு சென்றனர். அச்சமயம் நபி(ஸல்) அவர்களிடம் இவர்கள் நிலைபற்றி கேட்கப்பட்டது. அதற்கு அவர்கள், “இன்னமல் அஃமாலு பின்னிய்யாத்”
செயல்கள் அனைத்தும் எண்ணத்தின் அடிப்படையிலேயே எண்ணத்திற்கு ஏற்றவாறே கூலி வழங்கப்படும்.
என்று கூறினார்கள். ஆகவே இறைவனுடைய திருப்தியை பெறுவதற்காக ஹிஜ்ரத் சென்றார்களோ அதன் பலனை மறுமையில் பெற்றுக் கொள்வார்கள். யார் வேறு நோக்கோடு சென்றார்களோ அவர்களுக்கு மறுமையில் யாதொரு நன்மையும் இல்லை என்றார்கள்.
அதோடு மட்டுமில்லாமல் இந்த 2:256 வசனம் இறக்கப்பட்ட வரலாற்றை அறிந்து கொண்டால் இஸ்லாத்தின் உண்மை நிலை இன்னும் தெளிவாகும்.
அன்ஸார்களில் ஸாலிமுபின் அல்ஃபு என்னும் கோத்திரத்தில் ஒருவருக்கு இரு குமாரர்கள் இருந்தார்கள். அவ்விருவரும் கிறிஸ்தவர்களாயிருந்து கொண்டிருந்தனர். தாம் முஸ்லிமாயிருந்து, மக்கள் இருவரும் கிறிஸ்தவர்களாயிருந்து கொண்டிருந்தனர். தாம் முஸ்லிமாயிருந்து, மக்கள் இருவரும் கிறிஸ்தவர்களாயிருப்பது தமக்கு விருப்பமில்லாமல் நபி(ஸல்) அவர்களிடம் வந்து நான் எனது மக்கள் இருவரையும் கிறிஸ்தவ நிலையிலிருந்து மாற்றி பலவந்தப்படுத்தி முஸ்லிம்களாக்க விரும்புகிறேன். இவ்வாறு நான் செய்வது பற்றி நாங்கள் என்ன கூறுகிறீர்கள் என்று கேட்டார். அப்போதுதான் லாஇக்ராஹ ஃபித்தின் “மார்க்கத்தில் நிர்பந்தம் இல்லை” என்ற இறைவசனத்தை ஓதிக்காட்டி, அவர்கள் அவ்வாறு செய்வதை நபி(ஸல்) அவர்கள் தடுத்துவிட்டார்கள். மாற்று மதத்தவர்கள் இஸ்லாத்தைத் தழுவும் வரை அவர்களுடன் போர் புரிய வேண்டும். அவர்களை வெட்டுவது, கொலை செய்வது ஜிஹாத் புனித போர் என்றெல்லாம் நாகூசாமல் “இஸ்லாம் கூறுகின்றது” என்று பொய் கூறும் அருண்ஷோரி போன்றவர்கள் இத்தகைய வசனங்களைக் கண்டபிறகேதும் காழ்ப்புணர்ச்சியை மறந்து உண்மையை உரைக்கவேண்டும்.
இரண்டாவது இஸ்லாம் கூறுகின்றது.
“அல்லாஹ் அல்லாத பிற தெய்வங்களைத் திட்டாதீர்கள். அவர்கள் அறியாமையினால் உங்கள் அல்லாஹ்வை திட்டுவார்கள்” (6:105)
அடுத்தவர்களுடைய, மாற்று மதத்தவருடைய தெய்வங்களைக் கூட திட்ட அனுமதிக்காத இஸ்லாம். அவர்களை பலவந்தமாக இஸ்லாத்தை ஏற்கச் சொல்கிறது என்றால் அருண்ஷோரீ போன்றவர்கள் பொய் சொன்னாலும் பொருந்தச் சொல்ல வேண்டாமா?
மூன்றாவதாக மாற்று மதத்தவர்களுடைய வழிபாட்டு ஆலயங்களும் பாதுகாக்கப்பட வேண்டும் என்கிறது இஸ்லாம்.
“தீங்கு செய்யும் சிலரைச் சிலவாக கொண்டு அல்லாஹ் தடுக்காவிட்டால் யூத ஆலயங்களும், கிறிஸ்தவ சர்ச்சுகளும், இறைவனைத் துதிக்கும் பள்ளிவாயில்களும் அழிந்தே போயிருக்கும்”. (22:40)
என்று திருமறை மற்றவர்களின் ஆலயங்களையும் பாதுகாப்பது இஸ்லாமிய அரசின் கடமை என்கிறது.
நான்காவதாக அஹ்லுல் கிதாபு வேதம் கொடுக்கப்பட்ட யூத கிறிஸ்தவ பெண்களை மணப்பதற்கு இஸ்லாம் அனுமதிக்கின்றது.
“மூமின்களான கற்புடைய பெண்களும், உங்களுக்கு முன்னர் வேதம் அளிக்கப்பட்டவர்களிலுள்ள கற்புடைய பெண்களுக்கும் விலைப் பெண்டிராகவோ, ஆசை நாயகிகளாகவோ வைத்துக் கொள்ளாது அவர்களுக்குரிய மஹரை அவர்களுக்கு அளித்து, மணமுடித்தும் கொள்வது உங்களுக்கு அனுமதிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு இஸ்லாத்திற்கும், மாற்று மதத்தவர்களுக்குமிடையில் உறவு முறையில் வளர்க்கிறது இஸ்லாம்.
ஐந்தாவதாக இஸ்லாம் மாற்று மதத்தவர்களுடன் அன்பளிப்பை பரிமாறிக் கொள்ள ஊக்குவிக்கின்றது
நபி(ஸல்) அவர்கள் மாற்று மதத்தவர்கள் அன்பளிப்போ அல்லது விருந்திற்கோ அழைத்தால் எவ்வித கசப்புணர்வும் இன்றி உடனே ஏற்றுக்கொள்வார்கள். அவர்களுடைய இந்த வெள்ளை உள்ளத்தை பயன்படுத்தி ஒரு யூதப்பெண்மணி உணவில் விஷத்தை வைத்து கொல்ல முயற்சித்தாள். அந்த அளவிற்கு ஏன்? எதற்கு? என்ற சந்தேகக் கண்ணில்லாமல் திறந்த மனதுடன் மாற்று மதத்தவருடன் தொடர்பு கொண்டிருந்தார்கள்.
இஸ்லாம் மத வேறுபாடின்றி அந்நிய நாட்டுடனும் நல்லுறவு கொள்ளச் சொல்கிறது. அவர்கள் தங்கள் நாட்டிற்கு வந்தால் சிறந்த உபசரிப்பும் கொடுக்கச் சொல்கிறது.
ஒரு முறை நஜ்ரான் தேசத்திலிருந்து கிறிஸ்தவக் கூட்டமொன்று நபி(ஸல்) அவர்களைக் காண வந்தது. பள்ளியில் இருந்த நபி(ஸல்) அவர்களைக் கண்டு பேசிவிட்டு தங்கள் பிரார்த்தனையை நிறைவுற்றுவதற்காக வெளியில் செல்ல முனைந்த சமயம், நீங்கள் உங்கள் பிரார்த்தனையை இந்தப் பள்ளியிலேயே நிறைவேற்றிக் கொள்ளலாம் என்று கூறினார்கள். (அல்பிதாயா வன்னிஹாயா பாகம் 5, பக்கம் 56) என்றால் மாற்று மறந்தவர்களுக்கு எத்தகைய கண்ணியம் கொடுக்கின்றது இஸ்லாம் என்பதை இயம்பத் தேவை இல்லை.
இதுபோன்றே மற்றொரு சந்தர்ப்பத்தில் தன்னுடைய தொழுகையை வெளியே நிறைவேற்றிக் கொண்டிருந்த கலீபா உமர்(ரழி) அவர்களை சர்ச்சுக்குள் வந்து நிறைவேற்றிக்கொள்ளுமாறு பாதிரியார் அழைக்க வேண்டாம், நான் உள்ளே வந்து என்னுடைய தொழுகையை நிறைவேற்ற, அதன் விளைவாக இந்த சர்ச் நாளை பள்ளி வாயிலாக முஸ்லிம்களால் ஆக்கப்பட்டு விடுமோ என்று நான் அஞ்சுகிறேன் என்று மறுமொழி கூறினார்கள் என்றால் எத்தகைய கண்ணியத்தையும், பெருந்தன்மையையும் இஸ்லாம் போதிக்கின்றது என்பதை அறியலாம்.
மாற்று மதத்தவர்களை எந்த வகையிலும் கொடுமைப்படுத்த இஸ்லாம் அனுமதிக்கவில்லை. மாறாக கண்ணியப் படுத்தவும், அவர்களின் ஆலயத்தைப் பாதுகாக்கவும், கட்டளையிடுவது ஏன்? அவர்களின் தெய்வங்களை திட்டுவதைக் கூட இஸ்லாம் அனுமதிக்கவில்லை என்பதைப் பார்த்தோம். இதையே இஸ்லாத்தை தழுவாத அர்னால் என்ற அறிஞர் தன்னுடைய “Preaching of Islam” என்ற நூலில் எழுதியுள்ளார். எந்த அளவிற்கென்றால் இஸ்லாமியப் படைகள் அபூஹுரைரா(ரழி) அவர்கள் தலைமையில் கிறிஸ்தவர்கள் ஆட்சி செய்துவந்த ரோம தேசத்திற்குள் நுழைந்தபோது அந்த மக்கள் வரவேற்றார்கள். கடிதங்கள் கூட எழுதினார்கள். ஏனென்றால் எங்களை ஆட்சிசெய்ய எங்கள் மதத்தைச் சார்ந்த கிறிஸ்தவர்கள் எங்களை மிகவும் கொடுமைப் படுத்துகிறார்கள். முஸ்லிம்கள் இங்கு வந்தால் நேர்மையான, நீதியான ஆட்சியைத் தருவார்கள் என்று கூறினால், அன்றைய நீதியான நபித்தோழர்கள் எவ்வளவு சீரான ஆட்சியை செய்திருப்பார்கள் என்பதை நாம் எண்ணிப் பார்க்க வேண்டும்.
சமீபத்தில் வெளியான “O Jerusalem” என்ற நூலில் கூட அதை எழுதிய யூத ஆசிரியர்கள் கூறுகிறார்கள். ஐரோப்பாவில் யூதர்கள் அமைதியாகவும், சுபீட்சமாகவும் வாழ்ந்த காலம் ஒன்று உண்டென்றால் அது ஸ்பெயினில் முஸ்லிம்கள் ஆட்சி செய்து வந்த காலம்தான் யூதர்கள் எவ்வித தொல்லைகளுக்கும் ஆளாகாத பொற்காலம் என்று கூறுகிறார்கள். இவ்வாறு மாற்று மதத்தவர்கள் கூட நற்சான்றிதழ் வழங்கிய மார்க்கம்தான் இஸ்லாம் என்பதை அருண்ஷோரீ போன்ற சரித்திரம் தெரிந்த வகுப்புவாதிகள், இனியும் அவ்வுண்மையை மறைக்க முற்படவா போகிறார்கள்.
“மார்க்க (விஷயத்தில் உங்களிடம் போரிடாமலும், உங்கள் இல்லங்களிலிருந்து உங்களை வெளியேற்றாமலும் இருந்தார்களே அவர்களுக்கு நீங்கள் நன்மை செய்வதையும், அவர்களுக்கு நீங்கள் நீதி செய்வதையும், அல்லாஹ் விலக்கவில்லை. நிச்சயம் அல்லாஹ் நீதி செய்கிறவர்களை நேசிக்கிறான்.” (60:8)
இந்த இறைவசனம் தெளிவாக சத்தியத்தை நேரடியாக எதிர்க்காத மாற்று மதத்தினருக்கு உதவி செய்வதையும், நீதி செய்வதையும் உற்சாகப்படுத்துகிறது.
ஆக இஸ்லாம் மாற்று மதத்தவர்மீது போர் தொடுக்கச் சொல்லவில்லை. ஆனால் எத்தகையோர் மீது போர் தொடுக்கச் சொல்லவில்லை. ஆனால் எத்தகையோர் மீது போர் தொடுக்கச் சொல்கிறது என்பதைக் கீழே காண்போம்.
“உங்களை எதிர்த்துப் போர் புரிபவர்களுடன் நீங்களும் அல்லாஹ்வின் பாதையில் போரிடுங்கள், ஆனால் வரம்பு மீறாதீர்கள் நிச்சயமாக அல்லாஹ் வரம்பு மீறுபவர்களை நேசிப்பதில்லை.” (2:190)
இரண்டாவதாக அக்கிரமம், அநியாயத்திற்கும் எதிராக போராடுவதையும் இஸ்லாம் புனிதப் போர் என்கிறது.
“ஃபித்னா (குழப்பமும், கலகமும்) நீங்கி அல்லாவுக்கே மார்க்கம் என்பது உறுதியாகும் வரை, நீங்கள் அவர்களுடன் போராடுங்கள், ஆனால் அவர்கள் ஒதுங்கி விடுவார்களானால் அக்கிரமக்காரர்கள் தவிரவேறு யாருடனும் பகை (கொண்டு போர் செய்தல் கூடாது)” (2:193)
“(மூமின்களே, இவர்களுடைய) விஷமங்கள் முற்றிலும் நீங்கி, அல்லாஹ்வின் மார்க்கம் முற்றிலும் அல்லாஹ்வுக்கே ஆகும்வரையில் அவர்களுடன் போர் புரியுங்கள்: ஆனால் அவர்கள் (விஷமங்கள் செய்வதிலிருந்த) விலகிக்கொண்டால் (விட்டு விடுங்கள்). நிச்சயமாக அல்லாஹ் அவர்கள் செய்வதை உற்று நோக்கியவனாகவே இருக்கின்றான்.” (8:39)
இறுதியாக நசுக்கப்பட்ட, ஒடுக்கப்பட்ட மக்களைக் காப்பாற்றுவதற்காக அல்லாஹ்வுடைய பாதையில் போர் செய்வதையும் இஸ்லாம் ஜிஹாத் என்கிறது.
அல்குர்ஆன் முழங்குகிறது.
“பலவீனமான நசுக்கப்பட்ட ஆண்களையும், பெண்களையும் பாதுகாக்க அல்லாஹ்வுடைய பாதையில் போர் புரியத் தயங்குவதேன்? அவர்கள் அல்லாஹ்விடம், எங்களை இந்த அநியாயக்காரர்களிடமிருந்து வெளியேற்றி விடு: அல்லது எங்களுக்கு ஒரு சிறந்த பாதுகாப்பாளனையாவது அனுப்பித்தா” என்று பிரார்த்திப்பதாகக் கூறுகிறது.” (4:75)
உண்மையிலேயே இன்று உமர்(ரழி) போன்ற கலீபாக்களின் ஆட்சி இருந்திருக்குமேயானால் இனவெறி கொண்டு அலைகின்ற தென்ஆப்பிரிக்காவை எதிர்த்து ஒரு பெரும்படையே சென்றிருக்கும். ஆனால் துரதிருஷ்டம் இன்றைய இஸ்லாமிய நாடுகள் அதுவும் இஸ்லாத்தை அரைகுறையாகவே பின்பற்றுபவையும், வல்லரசுகளும் தங்களுடைய சுய லாபத்தைக் கருதியே நாகரீகம் வளர்ந்த இந்தக் காலத்திலும் இக்கொடுமையைக் கண்டும் காணாதிருக்கின்றன.
ஆக இஸ்லாம் எக்காலத்திலும், எக்காரணத்திற்கும் மாற்று மதத்தவர்களைத் துன்புறுத்தவோ, நிர்பந்திக்கவோ இல்லை. மாறாக கண்ணியமும், பாதுகாப்புமே கொடுக்கச் செல்கிறது. இதற்கு மாறாக எங்கேனும் ஏதும் நடந்திருந்தால் அது முஸ்லிம்களின் தவறாக இருக்குமேயன்றி இஸ்லாத்தின் போதனையில் உள்ள தவறு அல்ல என்பதை அருண்ஷோரீ போன்றவர்களுக்கு அறியத் தருகிறோம். வல்லநாயன் எல்லாரும் நேர்வழி அடைய தெளஃபீக் செய்வானாக! ஆமீன்.