ஐயமும்! தெளிவும்!!

in 1989 நவம்பர்,ஐயமும்! தெளிவும்!!

ஐயம் : “ஜின்னு” இனத்தைப்பற்றி விவரிப்பதோடு, இப்லீஸுக்கும் ஷைத்தானுக்கும் உள்ள வேறுபாட்டை விவரிக்க!  (முஷ்தக் அஹ்மத், பம்பாய்)

தெளிவு : மனிதரைப் போல் ஜின்னும் ஓர் இனத்தவராவார். “இப்லீஸ்” இந்த இனத்தவானாவான். “ஆதமுக்கு ஸஜ்தா செய்யுங்கள்” என்று நாம் மலக்குகளிடத்தில் கூறியதை (நபியே) நீர் நினைத்துப்பாரும்! இப்லீஸைத் தவிர அவர்கள் அனைவரும் ஸஜ்தா செய்தார்கள். அவனோ ஜின்னுவின் இனத்தைச் சேர்ந்தவனாயிருந்தான். அதனால் தன் இறைவனுடையக் கட்டளைக்கு மாறு செய்துவிட்டான்.                      (18:56)

    இவ்வசனத்தில் ” இப்லீஸ்” ஜின்னுடைய இனத்தவன் என்பது தெளிவாகிறது.  இப்லீஸும் ஷைத்தானும் ஒருவனுக்குரிய இருப் பெயர்களாகும். ஏனெனில் அல்குர்ஆன் (2:34) வசனத்தில் இப்லீஸைத் தவிர அவர்கள் அனைவரும் ஸஜ்தா செய்தார்கள்” என்பதாகக் கூறப்பட்டிருக்கிறது. அடுத்து 2:36 வசனத்தில் “எனினும் ஷைத்தான் அவ்விருவரையும் தவறிழைக்கும் படி செய்து அவ்விருவரும் இருந்த நிலையிலிருந்து அவர்களை வெளியேரும்படி செய்து விட்டான்” என்று உள்ளது. ஆகவே 2:34 வசனத்தில் இடம் பெற்றுள்ள இப்லீஸையே 2:36 வசனத்தில் “ஷைத்தான்” என்றுக் கூறப்பட்டுள்ளது,

    * மலக்குகள் நூர் – ஜோதியால் படைக்கப்பட்டுள்ளார்கள். இப்லீஸ் நெருப்பின் கொழுந்தால் படைக்கப்பட்டுள்ளான். ஆதமோ (குர்ஆனில்) உங்களுக்குக் கூறப்பட்டுள்ளப் பொருளிலிருந்து (மண்ணினால்) படைக்கப்பட்டுள்ளார்” என்று நபி(ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள்.

                                                    (ஆயிஷா(ரழி), முஸ்லிம்)

    * “இப்லீஸ்” இமைப்பொழுதேனும் மலக்குகளை சேர்ந்தவனாக இருந்ததில்லை. ஆதம்(அலை) அவர்கள் மனித இனத்தவரின் மூலப் பொருளாயிருந்ததுப் போல், இப்லீஸும் ஜின்னு இனத்தவரின் மூலப் பொருளாக இருந்துள்ளான்.                                        (ஹஸன் பஸரீ(ரழி), இப்னு ஜரீர்)

    சிலர் இப்லீஸை மலக்குகளின் இனத்தவன் என்றும், ஆதம்(அலை) அவர்களுக்கு ஸஜ்தா செய்ய மறுப்பதற்கு முன், மலக்குகளின் பெயரைப் போன்றே “அஜாஜில்” என்ற அழகிய பெயரை உடையவனாயிருந்தான் என்றும், வானத்திலோ, பூமியிலோ அவனுடைய நெற்றிப் படாத இடமே கிடையாது. அந்தளவு அவன் அல்லாஹ்வுக்கு வணக்க வழிபாடு செய்துக் கொண்டும் தான் இருந்தான். அவன் ஆதம்(அலை) அவர்களுக்கு ஸஜ்தா செய்யாததன் காரணமாகவே தன்னுடைய உயர் பதவியை இழந்து இப்லீஸ்….”அல்லாஹ்வின் அருளை இழந்தவன்” என்ற இழிப்பெயருக்கு ஆளாகி விட்டான் என்றும் கூறுகின்றனர்.

    இது குர்ஆனுக்கும், ஹதீஸுக்கும் புறம்பான ஆதாரமற்றதோர் கூற்றாகும். ஏனெனில் அல்குர்ஆன் 18:50 வசனத்தில்,

    “அவனோ ஜின்னுவின் இனத்தைச் சேர்ந்தவனாயிருந்தான், அதனால் தான் இறைவனுடைய கட்டளைக்கு மாறு செய்துவிட்டான்.” என்று கூறப்பட்டுள்ளது.

    மேற்காணும் ஆயிஷா(ரழி) அவர்கள் வாயிலாக முஸ்லிமில் இடம் பெற்றுள்ள ஹதீஸில் மலக்குகள் நூர் – ஜோதியால் படைக்கப்பட்டவர்கள் என்றும், இப்லீஸ் – நெருப்பால் படைக்கப்பட்டவன் என்றும் தெளிவுப் படுத்தப்பட்டிருப்பதால் இப்லீஸ், மலக்கு ஆகியோரின் இயற்கை அமைப்பே வேறுபட்டுள்ளது. மலக்குகள் ஜோதியாலும், இப்லீஸ் நெருப்பாலும் படைக்கப்பட்டுள்ளார். மலக்குகள் ஜோதியால் படைக்கப்பட்டவர்களாயிருப்பதால் தான், அல்லாஹ் அவர்களைப் பற்றிக் கூறும் போது, “அல்லாஹ் மலக்குகளுக்கு இட்ட கட்டளைக்கு அவர்கள் மாறு செய்ய மாட்டார்கள். மேலும் அவர்கள் தங்களுக்கு ஏவப்பட்டதையே செய்வார்கள்.” (66:6) என்று கூறுகிறான்.

    எனவே அல்லாஹ் இப்லீஸை ஜோதியால் படைக்காமல் நெருப்பினாலும், இவ்வாறே மனிதனை மண்ணினாலும் படைத்திருப்பதால். ஜோதியால் படைக்கப்பட்டுள்ள மலக்குகளைப் போல், சொன்னவற்றை மட்டுமே செயல்படுத்தும் தன்மை இல்லாமல். சுய அபிப்ராயத்தின் படி செயல்படும் தன்மை வாய்ந்தவர்களாக இப்லீசும், மனிதர்களும் ஆகிவிட்டார்கள்.

    ஆகவே இப்லீஸ் படைக்கப்பட்ட பொருள் வேறுபட்டு, தனது சொந்த அபிப்ராயத்தின் படி நடக்கும் தன்மையுள்ளவனாக இருப்பதால், இப்லீஸை மலக்குகளின் இனத்தைச் சார்ந்தவன் என்ற கூறுவது தவறு என்பதை அறிகிறோம்.

    அல்குர்ஆனும், ஹதீஸும் இப்லீஸை ஜின்னுவின் இனத்தைச் சேர்ந்தவன் என்றும், மேலும் நெருப்பினால் படைக்கப்பட்டவன் என்றும் கூறுவதற்கேற்ப. ஜின்னு இனமும் மனித இனத்தைப் போன்றதோர் இனம் என்பதையும், நன்மை தீமை ஆகியவற்றில் எதனையும் செய்வதற்கான சுய அபிப்ராயம் – சுதந்திரம் உடையவர்களேயன்றி மலக்குகளைப் போல் இறைவனால் ஏவப்பட்டதை மட்டும் செய்து, அவனுடைய கட்டளைக்கு மாறு செய்வதற்கே இயலாத்தன்மையுடையவர்கள் அல்லர் என்பதையும் அறிகிறோம். மேலும் இவர்களில் முஸ்லிம்களும் காஃபிர்களும், சுவர்க்கவாதிகளும், நரகவாதிகளும் உள்ளனர் என்பதை அல்குர்ஆனும், ஹதீஸும் தெளிவுப்படுத்துவதோடு, இவர்களைப் பற்றி அறிந்துக் கொள்ளும் வகையில் “சூரத்துல் ஜின்னு” எனும் ஓர் அத்தியாயமும் 72-வது அத்தியாயமாக குர்ஆனில் இடம் பெற்றுள்ளது.

ஐயம் : நபி(ஸல்) அவர்கள் எல்லாரைப் பார்க்கினும் சிறப்புக்குரியவர்களாயிருப்பதால் அவர்கள் உடலிலிருந்து நிழல் கீழே விழுவதில்லை. நிழல் உருவம் அவர்களுக்கு கிடையாது என்று சிலர் கூறும் கூற்றுக்கு குர்ஆன், ஹதீஸின் வாயிலாக ஏதேனும் ஆதாரமுண்டா?

                                                    எஸ். ஏ. ஷாஹுல் ஹமீது, துபை.

தெளிவு : இதற்கு குர்ஆனிலோ, ஸஹீஹான ஹதீஸ்களிலோ ஆதாரம் ஏதுவுமில்லை. இவ்வாறு  சிலர் கூறி, நபி(ஸல்) அவர்கள் நூர் – ஜோதியால் படைக்கப்பட்டுள்ளார்கள் என்ற பொய்யான ஹதீஸினை மெய்யாக்க எத்தனிக்கின்றனர். எவ்வாறெனில் நபி(ஸல்) அவர்கள் ஜோதியால் படைக்கப்பட்டிருப்பதனால் தான் அவர்களின் உடலிலிருந்து நிழல் கீழே விழுவதில்லை. காரணம், பிரகாசமுள்ள விளக்குக்குப் பக்கத்தில் மற்றொரு பிரகாசமுள்ள விளக்கைக் கொண்டுவந்து வைத்தால் எவ்வாறு இரு விளக்குகளின் நிழல்களும் கீழே விழாத நிலையில் இருக்கிறதோ இவ்வாறே நபி(ஸல்) அவர்கள் நூர் – ஜோதியால் படைக்கப்பட்டவர்களாயிருப்பதால் அவர்களின் நிழல் கீழே விழுவதில்லை என்று விஞ்ஞான ரீதியில் உதாரணம் காட்டி, நபி(ஸல்) அவர்கள் நூர் – ஜோதியால் தான் படைக்கப்பட்டுள்ளார்கள் என்று வாதிடுகின்றனர்.

   ஆயிஷா(ரழி) அவர்கள் மூலம் முஸ்லிமில் இடம் பெற்றுள்ள ஹதீஸுக்கு ஏற்ப மலக்குகளை ஜோதியாலும், இப்லீஸ் -ஜின்னுவை  நெருப்பினாலும், மனிதரை மண்ணினாலும் படைக்கப்பட்டுள்ளது என்று நபி(ஸல்) அவர்கள் கூறியிருக்கிறார்கள். நபி(ஸல்) அவர்கள் ஜோதியால் படைக்கப்பட்டவர்களாயிருப்பின் மலக்குகளுடைய இனத்தைச் சார்ந்தவர்களாகவல்லவா இருந்திருக்க வேண்டும். ஆனால் அல்குர்ஆனில்,

    “(நபியே!) சொல்வீராக! நிச்சயமாக நான் உங்களைப் போன்றதொரு மனிதனே” என்று குர்ஆன் நபி(ஸல்) அவர்களைப் பற்றி மனிதர் என்றே கூறுவதால் (18:110) அவர்களும் மற்றவரைப் போல் மண்ணால் படைக்கப்பட்ட இனத்தைச் சேர்ந்தவர்கள் என்பதில் ஐயமில்லை. அவர்களுக்கு நிழல் இல்லை என்று கூறுவது அபத்தமானதாகும்.

ஐயம் : சிலர் கிராஅத் ஓதும் போது அஊது ஓதிய பிறகு ” பிஃபழ்லி பிஸ்மில்லாஹிர்ரஹ்மானிர்ரஹிம்” என்று ஓதுகிறார்களே! இதற்கு ஹதீஸில் ஆதாரமுண்டா?

                                      ஷைக் ஸலாஹுத்தீன், பேட்டை, திருநெல்வேலி.

தெளிவு : இவ்வாறெல்லாம் பிஸ்மியுடன் ” பிஃபழ்லி” என்று இணைந்து ஓதுவதற்கு ஹதீஸில் அறவே ஆதாரமில்லை.

ஐயம் : தொழுகையில் முதல் தக்பீரின் போது, ருகூவுக்காக குனியும் போதும், ருகூஃவிலிருந்து தலையை உயர்த்திய போதும், இரண்டாவது ரகாஅத்திலிருந்து  (நடு இருப்பிலிருந்து) எழுந்து நிற்கும் போதும் இரு கைகளையும் உயர்த்தவத பற்றி இப்னு உமர்(ரழி) அவர்களின் வாயிலாக புகாரீயில் ஒரு ஹதீஸ் உள்ளது என்பதை அறிகிறோம். ஆனால் திர்மிதீயில் “முதல் தக்பீரின் போது மட்டுமே அன்றி மற்ற சந்தர்ப்பங்களில் நபி(ஸல்) அவர்கள் தமது கைகளை உயர்த்தியதில்லை” என்பதாக ஒரு ஹதீஸ் இருப்பதாகவும், அதுப்பற்றி இமாம் திர்மிதீ(ரஹ்) அவர்களே ஹஸன் ஸஹீஹான ஹதீஸ் என்று குறிப்பிட்டுள்ளார்கள் என்பதாக அறிகிறேன். இந்த ஹதீஸ்படி கைகளை உயர்த்தாமல் தொழலாம் அல்லவா? சரியான விளக்கம் தரவும்!

                                          ஷைக் ஸலாஹுத்தீன், பேட்டை, திருநெல்வேலி.

தெளிவு : திர்மிதீயில் இடம் பெற்றுள்ள ஹதீஸின் பொருள்!

    இப்னுமஸ்ஊத்(ரழி) அவர்கள்: “நான் உங்களுக்கு நபி(ஸல்) அவர்களின் தொழுகையைத் தொழ வைத்துக் காட்டுகிறேன்” என்று கூறி விட்டு தொழ வைத்தார்கள். அப்போது அவர்கள் முதல் முறையைத் தவிர (மற்ற சந்தர்ப்பங்களில்) தமது கைகளை உயர்த்தவில்லை.                    (திர்மிதீ)

    இந்த ஹதீஸைப் பற்றி இமாம் திர்மிதீ(ரஹ்) அவர்கள் “ஹஸன்” என்று மட்டுமே குறிப்பிட்டுள்ளார்களே அன்றி தாங்கள் எழுதி இருப்பது போல் “ஹஸன் ஸஹீஹான ஹதீஸ்” என்று குறிப்பிடவில்லை” மேலும் இது வகையில் இப்னு உமர்(ரழி) அவர்கள் பற்றி அவர்களின் மகன் “ஸாலிம்” என்பவர் மூலம் அறிவிக்கப்பட்டுள்ள ஹதீஸ் தான் ஸஹீஹானதாயிருக்கிறது. இப்னு மஸ்ஊத்(ரழி) அவர்கள் மூலம் அறிவிக்கப்படும் ஹதீஸ் உறுதியானது அல்லவென்று இப்னு முபாரக்(ரஹ்) அவர்கள் குறிப்பிட்டிருப்பதாக இமாம் திர்மிதீ தமது நூலில் இனம் காட்டியுள்ளார்கள்.

    இந்த ஹதீஸின் அறிவிப்பாளர் தொடரில் “ஆஸிமுபின் குலைப்” என்பவர் இடம் பெற்றுள்ளார். இவர்ப் பற்றி பலர் நம்பகமானவர் என்று கூறியபோதிலும் இவரில் காணப்படும் ஒரு சில குறைகளை வைத்து இவர் தனித்த நிலையில் ஒரு ஹதீஸை கூறுவாரானால் அது ஆதாரமாகக் கொள்ளத்தக்கதல்ல என்று இப்னு மத்யனீ(ரஹ்) கூறியிருப்பதாக இப்னு ஹஜர்(ரஹ்) அவர்கள் தமது தஹ்தீபுத் தஹ்தீபு எனும் நூலில் பாகம் 5, பக்கம் 56ல் குறிப்பிட்டுள்ளார்கள்.

    இவ்வாறே பின்வரும் ஓர் அறிவிப்ப அபூதாவூதிலும் இடம் பெற்றுள்ளது; பர்ராஉபின் ஆஜிப்(ரழி) அவர்கள் கூறுகிறார்கள். “நான் நபி(ஸல்) அவர்கள் தொழ ஆரம்பிக்கும் போது தமது கைகளை உயர்த்துவதைப் பார்த்துள்ளேன். அதற்குப் பிறகு தொழுது முடிக்கும் வரை தமது கைகளை அவர்கள் உயர்த்தவில்லை.”

    அபூதாவூத்(ரஹ்) அவர்கள் இந்த ஹதீஸை எடுத்தெழுதிவிட்டு இது ஸஹீஹானது அல்லவென்றும் குறிப்பிட்டுள்ளார்கள்.

    இவ்வாறே “நபி(ஸல்) அவர்கள் தொழத் துவங்கினால் தமது கைகளைத் தமது காதுகளுக்கு அருகில் உயர்த்துவார்கள், அதன் பிறகு மீண்டும் உயர்த்தமாட்டார்கள்” என்று பர்ராஉபின் ஆஜிப்(ரழி) அவர்களின் மற்றொரு அறிவிப்பும் அபூதாவூதிலேயே இடம் பெற்றுள்ளது. அதில் யஜீத்பின் அபீஜியாத் எனும் நம்பகமற்றவர் இடம் பெற்றுள்ளார். ஆகவே இந்த அறிவிப்பும் பலகீனமானதாகும்.

    இதுவகையில் ஒரு ஹதீஸும் முறையானதாக இல்லை. அவ்வாறு முறையானதாக இருப்பினும் இப்னு உமர்(ரழி) அவர்களின் ஹதீஸ் ஒரு விஷயத்தை உண்டு என்று கூறும் போது அவ்வாறு இல்லை என்று கூறும் ஹதீஸ் தள்ளுபடியாகிவிடும். காரணம், ஹதீஸ்களில் ஒன்றை இல்லை என்று கூறும் ஹதீஸைப் பார்க்கினும், அது உண்டு என்று கூறும் ஹதீஸுக்கே முதலிடம் அளிக்கப்படும் என்று இமாம் இப்னு ஹஜர்(ரஹ்) அவர்கள் தமது “ஃபத்ஹுல்பாரீ” எனும் நூலில் பாகம் 2, பக்கம் 220ல் குறிப்பிட்டுள்ளார்கள்.

    தொழுகையில் கைகளை (4முறை) உயர்த்துவது பற்றிய அறிவிப்புக்குக் கிடைத்துள்ள சரியான ஆதாரங்கள் மற்றவைக்குக் கிடைக்கவில்லை. இதை 17 ஸஹாபாக்கள் அறிவித்துள்ளார்கள் என்று இமாம் புகாரீ(ரஹ்) அவர்கள் தமது “ரஃப்உல்தைன்” கைகளை உயர்த்தல் எனும் நூலில் குறிப்பிட்டுள்ளார்கள். மேலும் இந்த ஹதீஸை எடுத்துக் கூறியவர்களில் அஷரத்துல்முபஷ்ஷரா – சுவர்க்கவாசிகள் என்று நன்மாராயம் கூறப்பட்ட 10 ஸஹாபாக்களும் உள்ளனர் என்று இமாம் ஹாக்கிம் கூறுவதாக இப்னு ஹஜ்ர்(ரஹ்) அவர்கள் ஃபத்ஹுல்பாரீ மேற்காணும் பாகத்தில் அதே பக்கத்திலேயே குறிப்பிட்டுள்ளார்கள்.

    ஆகவே தொழும் போது நான்கு சந்தர்ப்பங்களில் கைகளை உயர்த்த வேண்டும் என்ற அறிவிப்பு ஸஹீஹானதாகவும், பலம் வாய்ந்ததாகவுமிருப்பதால் இதன்படி அமல் செய்வதே நபிவழி என்பதை அறிகிறோம்.

ஐயம் : வெள்ளிக்கிழமைக்கு ஜும்ஆ தினம் என்று பெயர் வரக் காரணம் என்ன? ஜும்ஆ தினத்தன்று ளுஹ்ரு நேரத்தில் தொழப்படும் ஜும்ஆத் தொழுகையை 4 ரகாஅத்துக்களாகத் தொழாமல் 2 ரகாஅத்துக்களாகத் தொழக் காரணம் என்ன?

                                                    எஸ்.ஐ. அலி அக்பர், சென்னை.

தெளிவு: ஜும்ஆ தினத்தன்று தொழுகைக்காக அனைவரும் ஒன்று திரண்டு வைத்து பள்ளியில் ஆஜராகுவதால் “ஜும்ஆ – ஒன்று கூடும்” தினம் என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது. இஸ்லாம் வந்தப் பின்னரே இப்பெயர் வழக்கில் வந்தது. அதற்கு முன் அறியாமை காலத்தில் “கவ்முல் அரூபா” என்பதாக இதற்குப் பெயர் இருந்துள்ளது.

    நபி(ஸல்) அவர்கள் ஜும்ஆ தொழுகையை ளுஹ்ரைப் போன்று 4 ரகாஅத்தக்களாகத் தொழாமல் 2 ரகாஅத்துக்களாகத் தொழுதுள்ளார்கள். அவற்றில் முதல் ரகாஅத்தில் “ஸப்பிஹிஸ்ம ரப்பிக்கல் அலா” வையும் 2வது ரகாஅத்தில் “ஹல் அத்தாக்க ஹதீஸுல் காஷியா” என்பதையும் ஓதி வந்துள்ளார்கள். (நுஃமான் பின் பஷீர்(ரழி), முஸ்லிம்) என்ற விபரங்களை நாம் ஹதீஸில் காண முடிகிறதே அன்றி அவர்கள் ஏன் 4 தொழாமல் 2 தொழுதுள்ளார்கள்? என்று சிந்திக்க வேண்டிய தேவையும் இல்லை. காரணம், “நமது தூதர் உங்களிடம் எதைக் கொண்டு வந்தாரோ அதைப் பற்றிப் பிடித்துக் கொள்ளுங்கள். உங்களை விட்டும் எதைத் தடுத்தாரோ அதைத் தவிர்த்துக் கொள்ளுங்கள். (59:7) என்று தான் அல்லாஹ் நமக்குக் கட்டளையிட்டுள்ளான்.

ஐயம் : நபி இப்றாஹீம் (அலை) அவர்களின் தாயார் பெயர் என்ன? என்பது எங்களுக்குத் தெரியாது. ஒருவர் எங்களிடம் இதுப் பற்றி கேட்கிறார் அவசியம் இதைத் தெரிவிக்கவும்.

                                            M.S. முஜீபுர்ரஹ்மான், பெரம்பலூர்.

தெளிவு : (நபியே!) நாம் உமக்கு முன்னரும் பல தூதர்களை அனுப்பியுள்ளோம். அவர்களில் சிலரைப் பற்றி உமக்கு நாம் எடுத்துக் கூறியுள்ளோம். பலரைப் பற்றி உமக்கு நாம் எடுத்துக் கூறவில்லை.    (40 : 78)

    மேற்காணும் வசனத்தில் ஒரு சில நபிமார்களின் விபரங்கள் மட்டுமே நபி(ஸல்) அவர்களுக்கு எடுத்துக் கூறப் பட்டுள்ளது. அநேகருடைய விபரங்கள் எடுத்துக் கூறப்படவில்லை என்பதாக அல்லாஹ்வே கூறியிருக்கும் போது, நபி இப்றாஹீம்(அலை) அவர்களின் தாயாரின் பெயரைக் கேட்டால் எவ்வாறு நாம் கூற முடியும். அவர்களின் பெயரின் விபரத்தை நபி(ஸல்) அவர்கள் கூறியிருப்பதாக ஹதீஸ்களிலும் காண முடியவில்லை.   

    ஆகவே இதுப் போன்ற விஷயங்களை நாம் அறியாதிருப்பதால் மார்க்க அடிப்படையில் நமக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படபோவதில்லை என்பதை அறிகிறோம்.

ஐயம் : ஒருவர் இமாமுடன் சேர்ந்து பர்ளான தொழுகையைத் தொழுது விட்டு பிறகு மற்றவர்களுக்கு அதே பர்ளான தொழுகையை தொழ வைப்பது கூடுமா?           M. B. அப்தூர் ரஹ்மான், இளங்காங்குறிச்சி.

தெளிவு : முஆதுபின் ஜபல்(ரழி) அவர்கள் நபி(ஸல்) அவர்களுடன் (ஜமாஅத்தாகத்) தொழுதுவிட்டுப் பிறகு தமது கூட்டத்தாரிடம் வந்து அவர்களுக்குத் தொழ வைப்பார்கள்.        (ஜாபிர்(ரழி), புகாரீ, முஸ்லிம்)

    (மற்றொரு அறிவிப்பில் முஆவுதுபின் ஜபல்(ரழி) அவர்கள் நபி(ஸல்) அவர்களுடன் இஷாவைத் தொழுதுவிட்டு பின்னர் தமது கூட்டத்தாரிடம் வந்து அதே இஷாவைத் தொழ வைப்பார்கள். அது அவருக்கு நபிலாகி விடும் என்று உள்ளது)                             (பைஹகீ, தாருகுத்னீ, தஹாவீ)

    இவர் இவ்வாறு ஜமாஅத்துபின் தொழுதவர் பிறருக்குத் தொழ வைக்கக் கூடாது என்று கூறுகிறார்கள். ஆனால் இவ்வாறு தொழ வைப்பதற்கு புகாரீ, முஸ்லிமில் ஸஹீஹான ஹதீஸ் இடம் பெற்றிருப்பதால் தொழ வைப்பது ஆகும் என்பதை அறிகிறோம்.

ஐயம் : தொழுவருக்கு எதிரில் குறுக்கே செல்வது பாவம் என்று கூறுகிறார்களே, ஸஹீஹான ஹதீஸ் ஆதாரமாக உள்ளதா? பாவம் என்றால் சாதாரணமான பாவமா? பெரும் பாவமா? தொழுபவர் ஸஜ்தா செய்யும் இடத்திற்கு அப்பால் நடந்து செல்வது பாவமா? தெளிவுப்படுத்தவும்.    (முஹம்மத் இல்யாஸ், சென்னை.

தெளிவு : உங்களில் ஒருவர் (தாம் தொழும் போது) மக்கள் குறுக்கே சென்றுவிடாதவாறு “சுத்ரா” -தடுப்பு பொருளை (த் தமக்கு எதிரில்) வைத்துத் தொழும்போது, எவரும் குறுக்கே சென்றால் அவரைத் தடுத்து நிறுத்துவாராக! அதை மறுத்துவிட்டு அவர் மீண்டும் வந்தால் அவரைக் கொன்று விடுவாராக! ஏனெனில் அவர் ஷைத்தானாவார்” என்று நபி(ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள்.

                                                (அபூஸயீத்(ரழி), புகாரீ, முஸ்லிம்)

    ஒருவர் பிறர் குறுக்கே செல்லாத வகையில் தடுப்புப் பொருளைத் தமக்கு எதிரில் வைத்துத் தொழுதுக் கொண்டிருக்கும் போது, அத்தடுப்புப் பொருளுக்கு உள்பாகத்தில் குறுக்கே சென்றால் தான் அவரைத் தடுப்பதற்கு தொழுபவருக்கு உரிமை உண்டு. அதன் எல்லைக்கு அப்பால் நடந்து செல்பவரை தடுக்கக் கூடாது. ஏனெனில் அவர் இவருக்குக் குறுக்கே செல்லவில்லை.

    இதன்படி ஒருவர் தொழும் போது, ஸஜ்தா செய்யும் இடத்திற்கு அப்பால் மற்றொருவர் செல்வது பாவமாக மாட்டாது. காரணம் தொழும் எல்லைக்கு அப்பர் செல்வதால் தொழுபவருக்கு குறுக்கே சென்றார் என்ற நிலை ஏற்படுவதற்கில்லை.

    தொழுதுக் கொண்டிருப்பவரின் குறுக்கே செல்பவர் தம்மீது என்ன ஏற்படுகிறது என்பதை அவர் அறிந்திருப்பாராயின் அவர் 40 நாட்கள் அல்லது மாதங்கள் அல்லது வருடங்கள் அவர் நின்றுவிட்டு பின்னர் செல்வது அவருக்கு சிறப்பானதாகிவிடும் என்று (நபி(ஸல்) அவர்கள் 40 நாட்கள் என்றார்களா? அல்லது மாதங்கள் என்றார்களா? அல்லது வருடங்கள் என்று கூறினார்களா? என்பதை நான் அறியவில்லை என்று இதன் அறிவிப்பாளர் தொடரில் இடம் பெற்றுள்ள “அபுன்நழ்ரு” என்பவர் கூறியுள்ளார்)

                                                        (அபூஜுஹைம்(ரழி), புகாரீ)

    மற்றொரு அறிவிப்பில் முஸ்னது பஜ்ஜாரில் 40 வருடங்கள் என்பதாகத் தெளிவாக்கப்பட்டுள்ளது. இப்னு ஹிப்பான், இப்னு மாஜ்ஜா ஆகியவற்றில் அபூஹுரைராவின் வாயிலாக தொழுபவருக்கு எதிரில் குறுக்கே செல்லும் வகையில் ஒருவர் எடுத்து வைக்கும் ஒரு எட்டைவிட 1000 வருடங்கள் நின்றுவிட்டுப் பிறகு அவர் செல்வது அவருக்கு மேலானதாகிவிடும் என்று உள்ளது.

    மேற்காணும் அறிவிப்புகளின் வாயிலாக பார்க்கும் போது அவ்வாற தொழுபவருக்கு எதிரில் குறுக்கே செல்வதானது சாதாரணமான பாவமல்ல; கடுமையான பெரிய பாவம் தான் என்பதை ஸஹீஹான ஹதீஸ்களின் மூலம் அறிகிறோம்.

****************************************************************

பெரும்பாவங்களில் மிகப்பெரியவை!

நாங்கள் நபி(ஸல்) அவர்களிடம் இருந்தபோது, அவர்கள் பெரும் பாவங்களில் மிகப் பெரியவை இன்னவை என்று உங்களுக்கு எடுத்துக் கூறட்டுமா? என்று மும்முறை கூறிவிட்டு, அல்லாஹ்வுக்கு இணை கற்ப்பிப்பதும், பெற்றோர்களை இம்சிப்பதும், பொய் சாட்சி கூறுவதும் என்றார்கள்.

                            (அப்துல் ரஹ்மானுபின் அபீபக்ரா(ரழி), முஸ்லிம்)

Previous post:

Next post: