K.M.H. அபூ அப்தில்லாஹ்
எல்லாம் வல்ல அல்லாஹ் தனது வழிகாட்டும் வான்மறையில் ஜகாத் என்னும் தானம் எந்தெந்த வகையில் செலவிடப்பட வேண்டும் என்று 9:60 வசனத்தில் தெளிவுப்படுத்தியுள்ளான்.
அந்த வசனம் வருமாறு:
(ஜகாத் என்னும்) தானங்கள் தரித்திரர்களுக்கும், ஏழைகளுக்கும், தானத்தை வசூல் செய்யும் ஊழியர்களுக்கும், (இஸ்லாத்தின் பால்) உள்ளங்கள் ஈர்க்கப்பட்டவர்களுக்கும், அடிமைகளை விடுதலை செய்வதற்காகவும், கடன்பட்டிருப்பதற்காகவும், அல்லாஹ்வின் பாதையிலும், வழிக்போக்கர்களுக்கும் உரியவை. (இது) அல்லாஹ் விதித்த கடமையாகும்-அல்லாஹ் (யாவும் அறிபவன். மிக்க ஞானம் மிக்கவன்.) (9:60)
இந்த வசனத்தில் ஜகாத் எட்டு வகையாகச் செலவிடப்பட வேண்டும் என்று தெளிவுப்படுத்தப்பட்டுள்ளது. அவற்றில் ஏழு வகை நேரடியாக நபர்களைப் பற்றிக் குறிப்பிட்டிருப்பதால் எட்டாவது வகையான “பீஸபீலில்லாஹ்” வும் அல்லாஹ்வின் பாதையில் போர் புரிபவர்கள் அல்லது அல்லாஹ்வின் பாதையில் பாடுபடுகிறவர்களுக்கே அதாவது நபர்களுக்கே கொடுக்கப்பட வெண்டும் என்று பிக்ஹு சட்டம் வகுத்து வைத்துள்ளனர். அதுவும் குறிப்பிடட நபர்களின் கையில் போய் சேரும் போதே ஜகாத் நிறைவேறும் என்று வைத்துள்ளனர். உதாரணமாக இறந்துப் போன ஒரு நபரின் மையித்து செலவுக்காக செலவிடப்படும் பணம் ஜகாத்தில் சேராது; என் என்றால் அதனைப் பெற்றுக் கொள்ள அந்த நபர் உயிரோடில்லை என சட்டம் வகுத்துள்ளனர். குர்ஆனில் பல இடங்களில் ஜகாத் கொடுக்கும்படி வலியுறுத்தப்பட்டிருக்கிறது. கொடுப்பது என்றால் அங்கு வாங்குவதற்கும் ஒரு ஆள் இருக்க வேண்டும். எனவே ஜகாத் குறிப்பிட்ட நபரிடம் ஒப்படைத்தால் மட்டுமே நிறைவேறும் என்ற அவர்களின் யூகத்தின் அடிப்படையில் சட்டம் இயற்றியுள்ளனர்.
ஆனால் ஜகாத் நபர்களின் கையில் போய்ச் சேர்ந்தால் மட்டுமே அது நிறைவேறும் என்று சட்டம் வகுத்துள்ளது அல்லாஹ்வின் கட்டளையைப் புறக்கணித்துவிட்டு இவர்களாகத் தன்னிச்சையாக இயற்றியதாகும். “அல்லாஹ் விதிக்காததை விதிக்கும் இணையாளர்கள் அவர்களுக்கிருக்கின்றனரா?” (42:21) என்ற அல்லாஹ்வின் எச்சரிக்கை அவர்களுக்கு அச்சத்தைத் தரவில்லையா? கடன்பட்டிருப்பவர் கையில் பணத்தைக் கொடுக்காமல் கடன் கொடுத்தவர் கையில் அந்தப் பணத்தைக் கொடுத்து கடனைத் தீர்த்தால் ஜகாத் நிறைவேறாதா? அதேப் போல் அடிமையின் கையில் பணம் கொடுக்காமல் அடிமையின் உரிமையாளர்களிடம் பணத்தைக் கொடுத்து அந்த அடிமையை உரிமை விட்டால் ஜகாத் நிறைவேறாதா? இவ்வாறு செய்தாலும் ஜகாத் நிறைவேறத்தான் செய்யும். இதனை 9:60 வசனத்தில் குறிப்பிடப்படும் முதல் நாலு வகையில் அவர்களுக்கு எனக் குறிப்பிடும் அல்லாஹ் அடுத்துள்ள மூன்று வகையில் அவர்களுக்காக எனக் குறிப்பிடப்படும் எஞ்சியுள்ள ஒரு வகையை அல்லாஹ்வின் பாதையிலுள்ளவர்களுக்கென்றோ அல்லது அல்லாஹ்வின் பாதையில் உள்ளவர்களுக்காக என்றோ குறிப்பிடாமல் அல்லாஹ்வின் பாதைக்காக எனத் தெள்ளத் தெளிவாகக் குறிப்பிட்டுத் தெளிவுப்படுத்தியுள்ளான்.
அடுத்து முக்கியமாக ஜகாத் பணத்தை அல்லாஹ்வின் பாதையில் சத்தியமார்க்கம் நிலைநாட்டப்பட மக்கள் சத்திய மார்க்கத்தை அறிந்து செயல்பட்டால் ஜகாத் நிறைவேறாது என்று பிக்ஹு சட்டம் வகுத்து வைத்துள்ளதை ஆராய்வோம். ஆதார அடிப்படையில் இந்தச் சட்டம் இயற்றப்பட்டதாகத் தெரியவில்லை. அனுமான அடிப்படையிலேயே சட்டம் இயற்றப்பட்டுள்ளது. அதுவும் சுயநலநோக்குடன் அவ்வாறு இயற்றப்பட்டுள்ளது. அந்த வகையைக் கொண்டு தங்கள் பாக்கெட்டுகளை நிறைத்துக் கொள்ள சட்டம் வகுத்துள்ளனர். மார்க்கப் பிரசாரம் செய்ய பட்டயம் பெற்ற ஏகபோக உரிமையாளர்கள் நாங்கள் மட்டுமே. அரபி மொழிக் கற்றுக் கொள்ளாதவர்கள் பிரசார பணிக்கு அருகதையற்றவர்கள் என்று மவ்லவிகள் மார்தட்டிக் கொள்வதும் இங்கு குறிப்பிடத்தக்கது. மற்றபடி குர்ஆன், ஹதீஸ் ஆதாரங்கள் அல்லாஹ்வின் பாதையில் எல்லா வகைகளிலும் ஜகாத் பணம் செலவிடப்படலாம் என்பதையே வலியுறுத்துகின்றன. உதாரணமாக கீழ்வரும் வசனங்கள் உற்று கவனியுங்கள்.
அறிந்துக் கொள்க! அல்லாஹ்வின் பாதையில் செலவு செய்யுமாறு அழைக்கப்படும் கூட்டத்தினர் நீங்கள், ஆனால் உங்களில் கஞ்சத்தனம் உடையோரும் இருக்கிறார்கள்; எவன் கஞ்சத்தனம் செய்கிறானோ, அவன் தன் ஆத்மாவுக்கே கஞ்சத்தனம் செய்கிறான்-அல்லாஹ் எவ்வித தேவையுமற்றவன்-நீங்கள் தேவையுடையவர்களாக இருக்கின்றீர்கள். எனவே (சத்தியத்தை) நீங்கள் புறக்கணிப்பீர்களாயின், உங்களல்லாத(வேறு ஒரு) சமூகத்தாரை அவன் பதிலாகக் கொண்டு வருவான்-பின்னர், உங்களைப் போன்று அவர்கள் இருக்க மாட்டார்கள். (47:38)
அல்லாஹ்வின் பாதையில் செலவு செய்யுங்கள்; இன்னும் உங்கள் கைகளாலேயே உங்களை அழிவின் பக்கம் கொண்டு செல்லாதீர்கள்; இன்னும் நன்மை செய்யுங்கள்; நிச்சயமாக அல்லாஹ் முஹ்ஸின்களை-நன்மை செய்வோரை-நேசிக்கிறான். (2:195)
அல்லாஹ்வின் பாதையில் தங்கள் செல்வத்தைச் செலவிடுபவர்களுக்கு உவமையாவது; ஒவ்வொரு கதிரிலும் நூறு தானியங்களைக் கொண்ட ஏழு கதிர்களை முளைப்பிக்கும் ஒரு வித்தைப் போன்றது; அல்லாஹ் தான் நாடியவர்களுக்கு(இதை மேலும்) இரட்டிப்பாக்குகின்றான்; இன்னும் அல்லாஹ் விசாலமான(கொடையுடைய)வன்; யாவற்றையும் நன்கறிபவன். (2:261)
மேலும் பார்க்க 2:262, 8:60, 49:15, 61:11 இந்த வசனங்களிலெல்லாம் “ஃபீஸபீலில்லாஹ்” என்ற பதம் அல்லாஹ்வின் பாதையில் செலவிடப்படுவதைக் குறிக்கின்றனவே அல்லாமல் அல்லாஹ்வின் பாதையில் பாடுபடுகிறவர்களுக்கு மட்டுமே கொடுக்கப்பட வேண்டும் எனச் சொல்லவில்லை. அவ்வாறுப் பொருள் கொள்வது பெருந்தவறாகும். ஆயினும் அவர்களுக்கு கொடுக்கலாம் என்பதை மறுப்பதற்க்கில்லை. “ஜகாத் பற்றிக் குறிப்பிடும் இடங்களிலெல்லாம் “ஆத்தூஸ் ஜகாத்” என்று குர்ஆனிலும் “ஈத்தாவுஸ் ஜகாத்” என்று ஹதீஸிலும் காணப் படுகின்றது. ஆனால் மேலேக் காணப்படும் வசனங்களில் “அன்ஃபிகூ” செலவிடுங்கள் என்று அல்லாஹ் குறிப்பிடுகிறான். கொடுப்பதற்கும், செலவழிப்பதற்கும் வித்தியாசம் உண்டு. கொடுப்பதற்கு ஆள் கண்டிப்பாக இருக்க வேண்டும்” என்ற வாதத்தை அவர்கள் எடுத்து வைக்கலாம். பொருளைக் கொடுப்பது, செலவளிப்பது, தியாகம் செய்வது இவை அனைத்தும் பெரும்பாலும் ஒத்தக் கருத்தை உடையவைத் தான்; இவற்றில் வித்தியாசம் இருக்கிறது என்று வாதிடுகிறவர்கள் அல்லாஹ்வின் பாதையிலும் என்றிருப்பதை அல்லாஹ் பாதையில் பாடுபடுகிறவர்கள் என்று மட்டும் பொருள் கொள்வது அதனைவிடப் பெருந்தவறு என்பதை ஏன் உணர மறுக்கிறார்கள்? பிக்ஹு சட்டம் கூறுவதுப் போல் 9:60ல் வருடம் “ஃபீஸபீலில்லாஹ்” என்ற பதம் அல்லாஹ்வின் பாதையில் பாடுபடுகிறவர்களை மட்டுமே குறிக்கும் என்றிருந்தால் அல்லாஹ் அதனைத் தெளிவாக “வல்முஜாஹிதூன ஃபீஸபீலில்லாஹ்” என்றே குறிப்பிட்டிருப்பானே? உதாரணமாக 4:95 வசனத்தில் அல்லாஹ்வின் பாதையில் பாடுபடுகிறவர்கள் என்று குறிப்பாகக் குறிக்கின்றான். அந்த வசனம் வருமாறு:
ஈமான் கொண்டவர்களில் எந்தக் காரணமின்றி உட்கார்ந்திருப்பவர்களும், தங்களுடைய சொத்துக்களையும், உயிர்களையும் (அர்ப்பணித்தவர்களாக) அல்லாஹ்வின் பாதையில் பாடுபடுபவர்களும் சமமாகமாட்டார்கள். (4:95)
இங்கு அல்லாஹ்வின் பாதையில் பாடுபடுகிறவர்கள் என்று குறிப்பிட்டிருப்பதுப் போல் 9:60 வசனத்திலும் தெளிவாகவே குறிப்பிட்டிருப்பான். ஆனால் அவ்வாறுக் குறிப்பிடவில்லை. இந்த நிலையில் இங்கு இதற்கு இவர்கள் அல்லாஹ்வின் பாதையில் பாடுபடுகிறவர்களுக்கு மட்டுமே என்று எப்படி வலிந்து பொருள் கொள்கிறார்கள்? இப்படி சட்டம் வகுத்து வைத்துள்ளவர்கள் எப்படி அவர்கள் வைத்துள்ள சட்டத்தையே மதிக்காமல் நடந்து வருகிறார்கள் என்பதையும் உங்களுக்கு அறியத் தருகிறோம். அவர்களது இந்தச் சட்டப்படி அவர்கள் நடத்தி வரும் பிக்ஹு மதரஸாக்களுக்கு ஜகாத் பணத்தையும் வசூலிக்கவே செய்கின்றனர். ஜகாத் நிறைவேறாதே! எப்படி ஜகாத் பணத்தை வசூலிக்கிறீர்கள்? என்று கேட்டால், நாங்கள் வசூலித்த ஜகாத் பணத்தை மதரஸாவில் (பிக்ஹு சட்டங்களை) ஓதிவரும் மாணவர்களுக்கு உணவு வகைகளுக்குச் செலவிடுகிறோம். (இங்கு கொடுக்காமல் செலவிடுகிறார்கள் என்பதைக் கவனத்தில் கொள்ளவும்) எனவே ஜகாத் நிறைவேறிவிடும் என்று சால்ஜாப்பு சொல்கிறார்கள். இங்கு அவர்கள் சட்டம் வகுத்து வைத்திருப்பதுப் போல் மதரஸாவில் (பிக்ஹு சட்டம்) பயிலும் மாணவர்களின் கைகளில் ஜகாத் பணம் நேரடியாகக் கொடுக்கப்பட்டு அவர்கள் சுதந்திரமாக அதனைச் செலவிடுவதில்லை என்பதும், அவர்களுக்கு இலவச உணவும், தங்கும் வசதியும் செய்து கொடுத்துள்ளதாக அறிவிக்கப்படுவதும் சிந்தித்து உணர வேண்டிய விஷயங்களாகும்.
ஆக அவர்கள் வகுத்துள்ள சட்டத்தை அவர்களே மதித்த நடப்பதில்லை. மக்கள் ஏமாற்றவே அவர்கள் இவ்வாறு சட்டம் வகுத்து வைத்துள்ளனர் என்றே கூற வேண்டும். குர்ஆனையும், ஹதீஸையும் குழித் தோன்டிப் புதைத்துவிட்டு குர்ஆனுக்கும், ஹதீஸுக்கும் முற்றிலும் முரணான தக்லீதையும், தஸவ்வுஃபையும் நியாயப்படுத்தியும், அறிவுக்கே பொருந்தாத சட்டங்களையும், அசிங்கங்களையும் கொண்டுள்ள பிக்ஹு நூல்களை மார்க்கக் கல்வியாக போதிக்கும் அவர்களின் பிக்ஹு மதரஸாக்களுக்கும் ஜகாத் பணம் கொடுத்தால் அது நிறைவேறி விடுமாம். அல்லாஹ்வின் பாதையில்-அல்லாஹ்வின் மார்க்கத்தை-சத்தியத்தை நிலைநாட்டும் முயற்சிகளுக்கு ஜகாத் பணத்தை செலவிட்டால் அது நிறைவேறாதாம். அவர்களின் கூற்று வேடிக்கையாக இல்லையா?
எனவே பிக்ஹு நூல்களில் ஜகாத் விஷயமாக இயற்றி வைத்துள்ள இந்த தவறான சட்டத்தை நாம் மதித்து நடக்க வேண்டியதில்லை. அதனை மார்க்கச் சட்டமாகக் கொள்ள வேண்டியதுமில்லை. அல்லாஹ்வின் பாதையில் குர்ஆன் ஹதீஸை நிலைநாட்ட மக்களிடையே உண்மையான மார்க்கம் நடைமுறைக்கு வர செய்யப்படும் முயற்சிகளுக்குத் தாராளமாக ஜகாத் பணத்தைச் செலவிடலாம். நாம் மேலே எடுத்தெழுதியுள்ள வசனங்களிலிருந்து அல்லாஹ்வின் பாதையில் செலவிடப்படும் பணத்தைவிட அதிக நன்மையைப் பெற்றுத் தரும் வேறு வழி ஒன்று இருக்க முடியாது என்பதைத் தெளிவாக நாம் புரிந்துக் கொள்கிறோம்.
வறுமை-கொடிது; அதில் சந்தேகமேயில்லை. அதனைப் போக்க முயற்சிகள் செய்யப்பட வேண்டும் என்பதிலும் ஐயமில்லை. வசதி படைத்தவர்கள் வறுமையில் வாடுபவர்களுக்கு தங்களின் ஜகாத் பணத்தையும் சதகா பணத்தையும் தாராளமாகக் கொடுத்து அவர்களின் வறுமையைப் போக்க ஆவன செய்ய வேண்டும் என்பதிலும் ஐயமில்லை. ஆயினும் இவ்வுலக வறுமையை விட மறு உலக வறுமை கொடிதிலும் கொடிதாகும் என்பதையும் நினைவில் கொள்ள வேண்டும்.
இவ்வுலக வறுமை அற்பமான அதிக பட்சமான 100 வருட இவ்வுலக வாழ்க்கையை பாதிக்கும். ஆனால் மறு உலக வறுமையோ அழிவே இல்லாத நித்தியமான மறு உலக வாழ்க்கையை பாதித்து நரகில் சேர்க்கும் மகாக் கொடிய ஒன்றாக இருக்கிறது. அல்லாஹ்வின் கட்டளைகளையும், நபி(ஸல்) அவர்களின் நடைமுறைகளையும் அறியாது முன்னோர்களின் அடிச்சுவடைப் பின்பற்றிச் செல்வதுத் தான் மறுமையின் வறுமையைத் தோற்றுவிப்பதாகும்.
மறுமையின் வறுமை இவ்வுலகிலேயே அறிந்து நீக்கப்பட வேண்டும் மறுமையில் அதற்குரிய வாய்ப்போ, அவகாசமோ இல்லவே இல்லை.
எனவே இந்த மறுமையின் வறுமையைப் போக்க செய்யப்படும் முயற்சியே மிகச் சிறந்த முயற்சியாகும். (அதற்காக, ஜகாத்தின் முழுப்பகுதியையும் இதற்காக மட்டும் செலவிட வேண்டும் என்று யாரும் தப்பெண்ணம் கொள்ள வேண்டாம் மேற்கூரிய இறைவசனங்களின் படி, 8 வகையிலும் செலவிடுதல் வேண்டும் அதுவே சிறப்பு)
வறுமையிலும் கொடிய வறுமையைப் போக்க ஜகாத் பணத்திலிருந்து செலவியடுவதில் என்ன தவறு இருக்க முடியும்? செலவு செய்வதில் மிகச் சிறந்த செலவாகும் அது. இந்த முயற்சியையே கடந்த ஆறு வருடங்களாக அந்நஜாத் செய்து வருகிறது. அந்நஜாத்தின் இந்த முயற்சிக் கொண்டு முஸ்லிம்களிடையே ஏற்ப்பட்டு வரும் வழிப்புணர்வை யாருமே மறுக்க முடியாது. மக்களை மார்க்கத்தின் பெயரால் ஏமாற்றி வரும் மவ்லவிகளின் ஒப்பாரியே, மேடைக்கு மேடை அவர்கள் அந்நஜாத் பற்றி பேசி வருவதே இதற்குப் போதிய சான்றாகும்.
அந்நஜாத் தனது முயற்சியின் ஆரம்ப படிகளையே கடந்து வந்திருக்கின்றது. அது இன்னும் கடக்க வேண்டிய படிகள் அநேகம் உண்டு. அதற்கு மனவளமும், பொருள் வளமும் மிக்க செல்வந்தர்களின் ஒத்துழைப்பும், உதவியும் அவசியம் தேவை. எனவே அந்நஜாத்தின் பணியின் அவசியத்தைப் புரிந்துக் கொண்டவர்கள் தங்கள் ஜகாத் நிதியிலிருந்தும், சதகா நிதியிலிருந்தும் தாராளமாகக் கொடுத்து அந்நஜாத் தனதுப் பணியில் தொய்வின்றி முன்னேறிச் செல்ல தங்களால் ஆன ஒத்துழைப்பை நல்குமாறு அன்புடன் வேண்டுகிறோம். அல்லாஹ் அருள் புரிவானாக.