தொடர் : 38
அபூ அப்திர் ரஹ்மான்
“என்னைத் தொழக் கண்டவாறே நீங்களும் தொழுங்கள்”
(மாலிக்குப்பின் ஹுவைரிஸ்(ரழி), புகாரீ, முஸ்லிம்)
பிற்காலத்தவரால் “தராவிஹ்” என்றழைக்கப்படும் ரமழான் இரவுத்
தொழுகை
* நபி(ஸல்) அவர்கள் ரமழான்
இரவுத் தொழுகை விஷயமாக (மக்களுக்கு அதை) வலியுறுத்திக் கட்டளையிடாமல், “ரமழானில்
ஈமானோடும், நன்மைக் கிட்டும் என்ற நல்லாதரவோடும் நின்று வணக்கம் புரிவோரின் முன்
செய்த பாவங்கள் மன்னிக்கப்பட்டு விடும்” என்று கூறி ஆர்வமூட்டிக் கொண்டிருந்தார்கள்.
விஷயம் (ரமழான் இரவுத் தொழுகை தினசரி ஜமாஅத்தாக – பலரும் சேர்ந்து தொழாமலிருக்கும்)
இந்நிலையில் நபி(ஸல்) அவர்கள் காலஞ்சென்ற விட்டார்கள். பின்னர் அபூபக்ரு(ரழி)
அவர்களின் ஆட்சிக் காலத்திலும், உமர்(ரழி) அவர்களின் ஆட்சிக் காலத்தின் ஆரம்பக்
கட்டத்திலும் நிலமை இவ்வாறே நீடித்திருந்து வந்தது என்று இதன் அறிவிப்பாளரில்
ஒருவரான “இமாம் ஜுஹ்ரீ” அவர்கள் அறிவித்துள்ளார்கள்.
(அபூஹுரைரா(ரழி) புகாரீ, முஸ்லிம்)
ரமழான் இரவுத் தொழுகை ஒரு சில தினங்கள் மட்டும் ஜமாஅத்தாக நடத்தப்பட்டதேன்?
ஒருமுறை நபி(ஸல்) அவர்கள்
நடுநிசியின் போது புறப்பட்டுப் பள்ளியில் தொழுதுக் கொண்டிருந்தார்கள். அப்போது
மக்களில் சிலர் அவரைப் பின்பற்றித் தொழுதார்கள். காலையில் மக்கள் (இதுப் பற்றி)
பேச ஆரம்பித்து விடவே(மறுநாள்) அவர்களை விட அதிகமானோர் கூடி விட்டார்கள். அப்போது
நபி(ஸல்) அவர்கள் தொழ, அவர்களைப் பின்பற்றி அவர்களும் தொழுதார்கள். காலையில்
மக்கள் (முன்போல) பேச ஆரம்பித்து விட்டார்கள். மூன்றாம் நாள் இரவுப் பள்ளிக்கு
வந்தவர்கள் எண்ணிக்கை அதிகரித்து விட்டது. அன்றும் நபி(ஸல்) அவர்கள் புறப்பட்டு
வந்து, அவர்களின் தொழுகையைப் பின்பற்றித் தொழப்பட்டது.
நான்காம் இரவு வந்த மக்களால் பள்ளிக்
கொள்ளாத நிலை ஏற்ப்பட்டு விட்டது. அன்று நபி(ஸல்) அவர்கள் சுப்ஹு தொழுகைக்குத்
தான் வந்தார்கள், (இரவுத் தொழுகைக்கு வர வில்லை) சுப்ஹுத் தொழுகை தொழ வைத்து
முடித்தவுடன் (எப்போதும் தன் சொற்பொழிவுக்கு முன் ஓதக் கூடிய) “தஷஹ்ஹுது,
அம்மாபஃது” ஆகியவற்றை ஓதிவிட்டு மக்களை நோக்கி, உங்கள் நிலை எனக்கு மறைய வில்லை,
எனினும் நான் உங்கள் மீது இவ்விரவுத் தொழுகை கடமையாக்கப்பட்டு, அவற்றை நீங்கள்
தொழ இயலாது போய் விடுவீர்கள் என்பதைப் பயந்தே (நான் இரவு வெளியில் வராமல்) இருந்து
விட்டேன் என்று கூறினார்கள். இவ்வாறு ரமழானில் நிகழ்ந்தது.
(ஆயிஷா(ரழி), புகாரீ)
மேற்காணும் அறிவிப்புகளில் ரமழான்
தொழுகையின் மகத்தான பலன்கள் அறிவிக்கப்பட்டிருப்பதுடன், நபி(ஸல்) அவர்கள் காலத்தில்
ஒரு சில தினங்கள் மட்டுமே ரமழானுடைய இரவுகளில் இத்தொழுகை ஜமாஅத்துடன்
நடத்தப்பட்டுள்ளது என்பதை அறிகிறோம்.
நபி(ஸல்) அவர்கள் இரவுத் தொழுகை 11 ரகாஅத்துக்கு
அதிகமாகத் தொழுததில்லை.
அபூஸலமத்திப்பனு
அப்திர்ரஹ்மான்(ரழி) அவர்கள் ஒருமுறை ஆயிஷா(ரழி) அவர்களிடம் ரமழானில் நபி(ஸல்)
அவர்களின் இரவுத் தொழுகை எவ்வாறிருந்தது? என்று கேட்டதற்கு “ரமழானிலும் அது அல்லாத
மற்றக் காலங்களிலும் 11 ரகாஅத்துக்களை விட அதிகமாக அறவே தொழுததில்லை”. என்று
கூறிவிட்டு, (முதலில்) 4 ரகாஅத்துக்கள் தொழுதார்கள்; அவற்றின் அழகையும் நீளத்தையும்
(என்னிடம்) கேட்காதீர்கள். (என்னால் அவற்றை எடுத்தியம்ப இயலாது, அவ்வளவு
அம்சமாயிருந்தன.) பிறகு நான்கு ரகாஅத்துக்கள் தொழுதார்கள். அவற்றின் அழகையும்
நீளத்தையும் (என்னிடம்) கேட்காதீர்கள். (அவ்வளவு அம்சமாயிருந்தன.) பிறகு 3
ரகாஅத்துக்கள் தொழுதார்கள். என்று கூறினார்கள்.
(அபூஸலமத்துப்னு அப்திர் ரஹ்மான்(ரழி), புகாரீ)
நபி(ஸல்) அவர்கள் ரமழான் இரவில் 8+3 பதினொன்று என்ற
அமைப்பில் தான் தொழ வைத்துமுள்ளார்கள்.
*நபி(ஸல்) அவர்கள் எங்களுக்கு
ரமழானில் ஓரிரவு 8 ரகாஅத்துக்களும், வித்ரும் தொழ வைத்தார்கள். மறுநாள் நாங்கள்
அவர்களின் வருகையை எதிர்ப்பார்த்துப் பள்ளியில் கூடியிருந்தோம். அவர்கள் அதி காலை
வரை பள்ளிக்கு வரவில்லை. பிறகு நாங்கள் நபி(ஸல்) அவர்களிடம் சென்று, அல்லாஹ்வின்
தூதரே! நீங்கள் புறப்பட்டு வந்து எங்களுக்குத் தொழுகை நடத்துவீர்கள் என்று நாங்கள்
மிக ஆவலோடிருந்தோம் என்று கூறினோம். அதற்கு அவர்கள் இந்த (உபரியான) வித்ரு
தொழுகை உங்கள் மீது கடமையாக்கப்பட்டு விடும் என்பதைப் பயந்து (இருந்து) விட்டேன்
என்றார்கள்.
(ஜாபிருபின் அப்தில்லாஹ்(ரழி), இப்னு குஜைமா)
மேற்காணும் அறிவிப்புகளில் நபி(ஸல்)
அவர்கள் ரமழானுடைய இரவு மட்டுமின்றி எல்லா சந்தர்ப்பத்திலும் 8+3 பதினொரு
ரகாஅத்தக்கள் இரவுத் தொழுகைத் தாம் தொழுதிருப்பதோடு பிறருக்கு தொழ வைத்தப்
போதும் அவ்வாறே 11 ரகாஅத்துக்களே தொழ வைத்துள்ளார்கள் என்பது தெளிவாகிறது.
ஆயிஷா(ரழி) அவர்களிடம் நபி(ஸல்)
அவர்களின் இரவுத்தொழுகை ரமழானில் எவ்வாறிருந்தது என்று வினவப்பட்டப்போது, “ரமழானிலும்
அது அல்லாதக் காலங்களிலும் 11 ரகாஅத்துக்களுக்கு அதிகமாக அவர்கள் தொழுததில்லை”
என்று அவர்கள் பதில் அளித்திருப்பதன் மூலம் ரமழானுக்கென்று அவர்கள் விசேஷமாக எதுவும்
தொழாமல், வழக்கமாக – தினசரி தொழுதுக் கொண்டிருந்த 8+3 பதினொரு
ரகாஅத்துக்கள் மட்டுமே அவர்கள் தொழுதுள்ளார்கள் என்று தெளிவுப்படுத்தியுள்ளார்கள்.
ரமழான் இரவுத் தொழுகை பதினொரு ரகாஅத்துக்கள் என்பதற்கு
நபி(ஸல்) அவர்களின் அங்கீகாரம்
ஒருமுறை உபையுப்னுகஃபு(ரழி)
அவர்கள் நபி(ஸல்) அவர்களிடம் வந்து அல்லாஹ்வின் தூதரே! ரமழான் இரவில் நான் ஒரு
காரியம் செய்துவிட்டேன் என்றார். அதற்கு அவர்கள் உபையு அவர்களே! அது என்ன?
என்றார்கள். அப்போது அவர் என் வீட்டிலுள்ள பெண்கள் நாங்கள் குர்ஆன்(அதிகமாக) ஓத
இயலாதவர்கள் ஆகையால் (நீர் எங்களுக்கு தொழ வைத்தால்) உமது தொழுகையைப் பின் பற்றி
நாங்களும் தொழுதுக் கொள்கிறோம் என்றார்கள். ஆகவே நான் அவர்களுக்கு 8
ரகாஅத்துக்கள் தொழ வைத்துவிட்டுப் பிறகு வித்ரும் தொழ வைத்தேன் என்றார்கள். அதற்கு
அவர்கள் ஏதும் கூறாமல் மெளனமாயிருந்தார்கள். ஆகவே அவர்களின் அந்த மெளனமானது
அவர்களின் அங்கீகாரம் என்ற வகையில் சுன்னத்தாகி விட்டது.
(ஜாபிருபின் அப்தில்லாஹ்(ரழி), அபூயஃலா, தப்ரானீ)
உமர்(ரழி) அவர்கள் ரமழானுடைய இத்தொழுகை தினசரி
ஜமாஅத்துடன் நடைபெற ஏற்பாடு செய்தல்.
நான் ரமழானில் ஓரிரவு உமர்(ரழி)
அவர்களுடன் பள்ளிக்குப் புறப்பட்டுச் சென்றேன் அப்போது மக்கள் பல்வேறு குழுவினராக
இருந்துக் கொண்டிருந்தார்கள். சிலர் தனித்துத் தொழுது கொண்டிருந்தனர். மற்றும்
சிலர் தொழுக, அவர்களைப் பின்பற்றி பலரும் தொழுதுக் கொண்டிருந்தனர். அதுசமயம்
உமர்(ரழி) அவர்கள் இம்மக்கள் அனைவரையும் ஒரே இமாமுக்குப் பின் தொழும்படி செய்தால்
மிகவும் சிறப்பாயிருக்கும் என்று தாம் முடிவு செய்து, உபையுபின் கஃபு(ரழி)
அவர்களுக்குப் பின்னால் அவர்கள் அனைவரையும் ஒன்று சேர்த்தார்கள்.
பிறகு மற்றொரு இரவு அவர்களுடன்
புறப்பட்டு வந்தேன், மக்கள் அனைவரும் ஒரே இமாமைப் பின்பற்றி தொழுவதைக் கண்டு. “புதிய
இவ்வேற்பாடு மிகச் சிறப்பாயுள்ளது”. என்று அவர்கள் கூறினார்கள். மேலும் அவர்கள்
இரவின் பிற்பகுதியின் சிறப்பை மனதில் கொண்டவர்களாக, “இவர்கள் நின்று தொழதுக்
கொண்டிருக்கும் இந்நேரத்தை விட, இவர்கள் (தொழுது விட்டு) உறங்கும் அந்நேரமே (தொழுவதற்கு)
மேலானதாகும் என்று கூறினார்கள். அப்போது மக்கள் முன்நெரத்தில் தொழுதுக்
கொண்டிருந்தனர்.
(அப்துர்ரஹ்மான்(ரழி) புகாரீ)
மற்றொரு அறிவிப்பில் உபையுபின்
கஃபு(ரழி) அவர்களையும், தமீமுமுத்தாரீ(ரழி) அவர்களையும் உமர்(ரழி) அவர்கள் 11
ரகாஅத்துக்கள் தொழ வைக்கும்படி கட்டளையிட்டார்கள். என்று உள்ளது.
(ஸாயிபுபின்யஜீத்(ரழி), முஅத்தா மாலிக்)
இத்தொழுகையை இரவின் முற்பகுதி, நடுப்பகுதி,
பிற்பகுதிகளாகிய அனைத்துப் பகுதியிலும் தொழுதல்.
நாங்கள் நபி(ஸல்) அவர்களுடன் (ரமழான்)
நோன்பு நோற்றோம். ரமழானில் 7 நாட்கள் மீதியிருக்கும் வரை (22 நாட்கள் வரை)
எங்களுக்கு அவர்கள் தொழ வைக்கவில்லை. அதற்குப் பிறகு (23-வது நாள்) இரவில் மூன்றில்
ஒரு பகுதி வரை (சுமார் இரவு 10 மணி வரை எங்களுக்கு தொழ வைத்தார்கள்.
பிறகு 24-வது நாள் தொழ வைக்கவில்லை.
பிறகு 25-வது இரவில் பாதி வரை (சுமார் 12 மணி வரை) தொழ வைத்தார்கள். பிறகு ரமழானில்
மூன்று நாள் மீதமிருக்கும் வரை அவர்கள் தொழ வைக்கவில்லை. 27-வது நாள் ஸஹர் உணவு
தவறிவிடும் என்று நாங்கள் அஞ்சும் வரை (சுமார் 4 மணி வரை) எங்களுக்குத் தொழுகை
நடத்தினார்கள். இத்தொழுகைக்குத் தங்கள் மனைவிமார்களையும், குடும்பத்தாரையும்
அழைத்துக் கொண்டார்கள்.
(ஹதீஸ் சுருக்கம், அபூதர்ரு(ரழி), திர்மிதீ)
மேற்காணும் அறிவிப்பில் நபி(ஸல்)
அவர்கள் ஒரேத் தொழுகையைத் தான் பல நேரங்களில் தொழுதுள்ளார்கள். இதை உற்றுநோக்கும்
போது இஷாத் தொழுகைக்குப் பின் ஸஹர் நேரம் முடிய -சுப்ஹு நேரம் வருவதற்கு முன்னால்
வரை தொழப்படும் தொழுகைத் தான் அது என்பதுப் புலப்படுகிறது.
இதற்கு ஹதீஸ்களில் கியாமுல்லைல் –
இரவுத் தொழுகை, தஹஜ்ஜுது, வித்ரு என்ற பல பெயர்கள் காணப்படுகின்றன. “தராவீஹ்
தொழுகை” என்ற பெயரோ, பிற்காலத்தில் ரமழானுடைய மாதத்தில் இரவின் முற்பகுதியில்
தாமாக அதிகப்படுத்தித் தொழப்படும் 20 ரகாஅத் இரவுத் தொழுகைக்கு மக்கள் தாமாகவே
சூட்டிக் கொண்டதோர் பெயராகும்.
“வித்ரு” என்பதும் இரவுத் தொழுகைக்குரிய பெயர்களில்
ஒன்றுத் தான் என்பதற்குச் சான்று.
நபி(ஸல்) அவர்கள் இரவின்
முற்பகுதி. நடுப்பகுதி, பிற்பகுதி ஆகியவற்றில் ஸஹர் நேரம் வரை (பஜ்ருக்கு முன்பு வரை)
வித்ரு தொழுதுள்ளார்கள்.
(ஆயிஷா(ரழி), புகாரீ, முஸ்லிம்)
மேலும் ஜாபிருபின் அப்தில்லாஹ்(ரழி)
அவர்களின் வாயிலாக “இப்னுகுஜைமா” வில் பதிவாகியுள்ள இதே தொடரில் மேற்காணும்
அறிவிப்பில் “நீங்கள் புறப்பட்டு வந்து எங்களுக்குத் தொழுகை நடத்துவீர்கள் என்று
நாங்கள் மிக்க ஆவலோடிருந்தோம் என்று கூறினோம். அதற்கு அவர்கள் இந்த (உபரியான) “வித்ரு
தொழுகை” உங்கள் மீது கடமையாக்கப்பட்டு விடும் என்பதை பயந்து இருந்து விட்டேன்
என்றார்கள்” என்ற வாசகமே நபி(ஸல்) அவர்கள் இரவுத் தொழுகைக்கு “வித்ரு” என்றுப்
கூறியிருப்பதானது “வித்ரு” என்பதும் இரவுத் தொழுகைக்குரிய மற்றொருப் பெயர்தான்
என்பதை ஊர்ஜிதம் செய்கிறது பொதுவாக இஷாவுக்குப் பிறகு தொழக்கூடிய இரவுத் தொழுகையை
ஒற்றைப் படையாக தொழ வேண்டியிருப்பதால் அதை “வித்ரு” என்று அழைக்கப்படுகிறது.
ரமழான் இரவுத் தொழுகை 20 ரகாஅத்துக்கள் அறிவிப்புகளின்
நிலை
*நபி(ஸல்) அவர்கள் ரமழான்
மாதத்தில் ஜமாஅத்து அன்றி 2 ரகாஅத்துக்களும், வித்ரும் தொழுதார்கள்.
(இப்னு அப்பாஸ்(ரழி), பைஹகீ)
இதன் அறிவிப்பாளர் தொடரில்
இடம்பெற்றுள்ள “இப்றாஹீம் பின் உஸ்மான்” என்பவர் மிகவும் பலகீனமானவர். இவர்ப் பற்றி
இவர் பொய்யர் என்று ஷுஃபா அவர்களும், நம்பகமற்றவர் என்று அஹ்மத், இப்னு முயீன்,
புகாரீ, நஸயீ, அபூதாவூத், அபூஹாத்தம், தாருகுத்னீ ஆகியோரும் ஹதீஸ் கலையினரால்
புறக்கணிக்கப்பட்டவர் என்று திர்மிதீ, அபூதாலீப் ஆகியோர் விமர்சித்துள்ளார்கள்.
உமர்(ரழி) அவர்கள் காலத்தில் ரமழானில் மக்கள் 23
ரகாஅத்துக்கள் தொழுதுக் கொண்டிருந்தார்கள்.
(யஜீதுபின் ரூமான், பைஹகீ)
இதன் முதல் அறிவிப்பாளரான “யஜீதுபின்
ரூமான்” என்பவர் உமர்(ரழி) அவர்களின் காலத்தவர் அல்லர் என்று இமாம் பைஹகீ அவர்களே
விமர்சித்துள்ளார்கள். இவ்வாறு ஒருவர் காலத்தில் வாழ்ந்திராத ஒருவர் அக்காலத்தவரின்
நடைமுறைப் பற்றி எடுத்துக் கூறுவதை எவ்வாறு ஏற்க முடியும்? ஆகவே இந்த அடிப்படையில்
இவ்வறிவிப்பு கொளாறுடையதாயிருப்பதால் ஏற்புக்குரியதல்ல.
அலி(ரழி) அவர்கள் மக்களுக்கு 20 ரகாஅத்துக்கள் தொழ
வைக்கும்படி ஒருவருக்கு கட்டளையிட்டார்கள்.
(அபுல்ஹஸனாஃ, பைஹகீ, இப்னு அபீஷைபா)
இதன் அறிவிப்பாளராகிய “அபுல்ஹஸனாஃ”
என்பவர் ஹதீஸ்கலைக்கு அறிமுகமற்றவர் என்று இப்னு ஹஜர் அவர்கள் தமது “தக்ரீபு” எனும்
நூலில் விமர்சித்துள்ளார்கள். ஆகவே இது ஏற்ப்புக்குரியதல்ல.
ஒருமுறை அலி(ரழி) அவர்கள் ரமழானில், குர்ஆனை நன்கு ஓதும்
நபர்களை அழைத்து மக்களுக்க 20 ரகாஅத்துக்கள் தொழ வைக்கும்படி
கட்டளையிட்டிருப்பதோடு அலி(ரழி) அவர்கள் தாமே அந்த மக்களுக்கு வித்ரும் தொழ
வைத்துக் கொண்டிருந்தார்கள்.
(அபூ அப்திர் ரஹ்மானிஸ்ஸில் மீ பைஹகீ)
இதன் அறிவிப்பாளர் தொடரில் “ஹம்மாது
பின் சுஐபு” என்பவர் இடம் பெற்றுள்ளார். இவரை இப்னு முயீன், நஸயீ ஆகியோர்
பலகீனமானவர் என்கிறார்கள். இமாம் புகாரீ அவர்கள் இவர் பிரச்சனைக்குரியவர் என்றும்,
இப்னு அதீ அவர்கள் இவருடைய பெரும்பாலான அறிவிப்புகள் ஏற்புக்குரியவை அல்லவென்றும்
விமர்சித்துள்ளார்கள். ஆகவே இது முறையான அறிவிப்பல்ல.
உமர்(ரழி) அவர்கள் மக்களுக்கு 20 ரகாஅத்துக்கள் தொழ
வைக்கும்படி கட்டளையிட்டார்கள்.
(யஹ்யப்னுஸயீத் இப்னு அபீஷைபா)
இதன் அறிவிப்பாளர் வரிசையில்
இடம் பெற்றுள்ள “யாஹ்யா பின் ஸயீத்” என்பவர் உமர்(ரழி) அவர்கள் காலத்தில்
உள்ளவரல்லர். ஆகவே இதன் அறிவிப்பாளர் தொடரில் முறிவுக் காணப்படுவதால் இதுவும்
ஏற்புக்குரிய தகுதியை இழந்து விடுகிறது.
உபையுபின் கஃபு(ரழி) அவர்கள் மதீனாவில், ரமழான் மாதத்தில்
மக்களுக்கு 20 ரகாஅத்துக்கள் தொழ வைத்துவிட்டு, 3 ரகாஅத்துக்கள் வித்ரும் தொழ
வைத்துக் கொண்டிருந்தார்கள்.
(அப்துல் அஜீஸ்பின் ரஃபீஉ. இப்னு அபீஷைபா)
இதன் அறிவிப்பாளராகிய “அப்துல்
அஜீஸ்பின் ரஃபீஉ” என்பவர் உபையுபின் காலத்தில் உள்ளவர் அல்லர். ஆகவே இவ்வறிவிப்புத்
தொடரில் முறிவு ஏற்பட்டு ஏற்புத் தன்மையை இழந்திருப்பதோடு, உபையபின் கஃபு(ரழி)
அவர்கள் நபி(ஸல்) அவர்களிடத்தில் தாம் தமதுக் குடும்பத்தாருக்கு 8 ரகாஅத்துக்களும்
வித்ரும் தொழவைத்ததாக எடுத்துக் கூறப்பட்டு அறிவிப்பும். உமர்(ரழி) அவர்கள் உபையுப்
பின்கஃபு(ரழி) தமீமு முத்தாரீ(ரழி) ஆகியோருக்கு 11 ரகாஅத்துக்கள் தொழ வைக்கும்படி
கட்டளையிட்ட அறிவிப்பும் மிக பலம் வாய்ந்தவையாயிருக்கும் போது அவற்றுக்கு
முறண்பட்டதாகவுமிருக்கிறது.
இப்னு மஸ்ஊத்(ரழி) அவர்கள் 20 ரகாஅத்துக்கள் தொழுதுவிட்டு,
3 ரகா அத்துக்கள் வித்ரு தொழுவார்கள்.
(அஃமஷ், கிதாபு கியாமில்லைல்)
இதன் அறிவிப்பாளராகிய “அஃமஷ்”
என்பவர் இப்னு மஸ்ஊத்(ரழி) அவர்களைச் சந்திக்கும் வாய்ப்பிழந்தவராவார். ஆகவே இதுவும்
ஏற்புக்குரியதல்ல.
நாங்கள் உமர்(ரழி) அவர்கள் காலத்தில் 20 ரகாஅத்துக்களும்,
வித்ரும் தொழுதோம்.
(ஸாயிபுபின் யஜீத், பைஹகீ)
இதன் அறிவிப்பாளர் தொடரில்
இடம்பெற்றுள்ள “அபூஉஸ்மான் அப்தில்லாஹ்” என்பவர் ஹதீஸ் கலைக்கு
அறிமுகமற்றவராயிருப்பதோடு, மேலும் இதே தொடரில் “அபூதாஹிரில்ஃபகீஹ்” எனும் பைஹகீ
அவர்களின் ஆசிரியர் இடம் பெற்றுள்ளார். இவரை எவரும் நம்பகமானவர் என்று எடுத்துக்
கூறியதில்லை.
மேலும் இதே “ஸாயிபுபின் யஜீத்” என்பவர்
“நாங்கள் உமர்(ரழி) அவர்கள் காலத்தில் 11 ரகாஅத்துகள் தொழுதுக் கொண்டிருந்தோம்”
என்று அறிவித்துள்ள ஓர் அறிவிப்பு “சுனனு ஸயீப்திப்னிமன்சூர்” எனும் நூலில்
காணப்படுகிறது. இவ்வறிவிப்பு மிகவும் பலம் வாய்ந்த ஸஹீஹான அறிவிப்பாக உள்ளது. என்று
“அல்மஸாபீஹ் ஃபீ ஸலாத்திந்தராவீஹ்” எனும் நூலில் இமாம் ஜலாலுத்தீன் சுயூத்தீ அவர்கள்
குறிப்பிட்டுள்ளார்கள்.
இவ்வாறே உமர்(ரழி) அவர்கள் காலத்தில்
மக்கள் ரமழான் மாதத்தில் 20 ரகாஅத்துக்கள் தொழுதுக் கொண்டிருந்தார்கள்” என்ற ஓர்
அறிவிப்பும் பைஹகீயில் காணப்படுகிறது. இதன் அறிவிப்பாளரான “அபூ அப்தில்லாஹ்பின் ஃபன்ஜவைஹித்தைனூரி”
என்பவர் ஹதீஸ்கலைக்கு அறிமுகமில்லாதவராயுள்ளார்.
ஆகவே இதுவும் ஏற்ப்புக்குரியதல்ல.
மேற்கண்டவாறு 20 ரகாஅத்துக்கள்
என்ற வகையில் ஆதாரமற்ற பல அறிவிப்புகள் பல காணப்பட்டாலும், அவை அனைத்தும்
அதர்கள்-சஹாபாக்களின் சொற் செயல்கள் தான். நமக்கு 8+3 பதினொரு ரகாஅத்துக்கள்
என்பதற்கு மேற்கண்டவாறு நபி(ஸல்) அவர்களின் சொல்லும் செயலும் அங்கீகாரமும் அசைக்க
முடியாத ஸஹீஹான ஆதாரங்களாயிருப்பதால் ரமழானுடைய இரவுத் தொழுகை 8+3 பாதினொரு
ரகாஅத்துக்கள் தான் என்பதை மிகத் தெளிவாக அறிகிறோம்.
எனவே ரமழான் இரவின் முற்பகுதியில் 8+3
தொழுவது நபிவழியாகும் (ஸுன்னத்). இரவின் பிற்பகுதியில் தொழுவதும் நபிவழியாக
இருப்பதோடு மிகவும் சிறப்புக்குரியதாகவும் இருக்கிறது. அதிகப்படுத்தி ஜமாஅத்தாக
தொழுவது நிச்சயமாக நபிவழியே அல்ல. ஜமாஅத்தாக அல்லாமலும் குறிப்பிட்ட எண்ணிக்கையை
நிர்ணயம் செய்யாமலும் விரும்புகிறவர்கள் விரும்பிய எண்ணிக்கையில் எவ்வித
நிர்ப்பந்தமோ, சடைவோ இல்லாமல் தனித்தனியாக உபரி வணக்கமாக (நஃபீலாக) தொழுவதற்கு
மார்க்கத்தில் தடையேதும் இல்லை.