அபூ அப்தில்லாஹ்
தங்களை மவ்லவிகள், ஆலிம்கள், அல்லாமாக்கள், ஷேக்குகள் குர்ஆன், ஹதீஸை கரைத்துக் குடித்த மேதைகள் எனக் கூறும் மதகுருமார்கள் அனைவரும் ஏகோபித்துப் பிறையைக் கண்ணால் பார்த்தே மாதம் பிறப்பதைத் தீர்மானிக்க வேண்டும் என்று தொடர்ந்து கூறி வருகின்றனர். இதற்கு அவர்கள் கொடுக்கும் ஆதாரம் பிறை பார்த்து நோன்பை ஆரம்பியுங்கள். பிறை பார்த்து நோன்பை முடியுங்கள். பிறை பார்க்காமல் நோன்பை ஆரம்பிக்காதீர்கள்; பிறை பார்க்காமல் நோன்பை முடிக்காதீர்கள் போன்ற கருத்தைத் தரும் பல ஹதீஸ்களாகும். இந்த ஹதீஸ்களை ஆதாரமாக வைத்துப் பிறையைக் கண்ணால் பார்ப்பது மார்க்கத்திற்கு உட்பட்டது; இபாதத். மாதம் பிறப்பதைக் கண க்கீட்டின் மூலம் திட்டமாகத் துல்லியமாகத் தெரிந்து கொண்டாலும் அதை ஆதாரமாக வைத்து நோன்பை ஆரம்பித்து முடிக்கக் கூடாது என்பதே அவர்களின் ஏகோபித்த வாதம். பிறையைப் புறக்கண்ணால் பார்த்துத் தீர்மானிப்பது மார்க்கத்திற்கு உட்பட்டதாக, இபாதத்தாக இருந்தால் அதில் அணுவளவல்ல அணுவின் முனை அளவும் மாற்றம் செய்யக் கூடாது என்பதில் இந்த மதகுருமார்களை விட நாம் மிகமிக உறுதியாகவே இருப்போம்.
இந்த மதகுருமார்களாவது மார்க்கத்திற்கு உட்பட்ட, வணக்க வழிபாடுகளைச் சேர்ந்த எண்ணற்ற விஷயங்களில் அதாவது தர்காக்கள், தரீக்காக்கள், மத்ஹபுகள், மஸ்லக்கள், இயக்கங்கள், ஜமாஅத்துகள் போன்ற எண்ணற்ற பிரிவுகள், ஆலிம்-அவாம் வேறுபாடு என இவை அனைத்தையும் மார்க்கத்திற்கு உட்பட்டவை அல்ல என இவர்களாகக் கற்பனை செய்து சரி கண்டுச் செயல்படுகிறார்கள். நாமோ இவை அனைத்தும் மார்க்கத்திற்கு உட்பட்டவை, அதனால் பெருத்த வழிகேடுகள், நரகில் கொண்டு சேர்ப்பவை என உரத்துச் சொல்லிக் கொண்டிருக்கிறோம். ஆதாரமாக எண்ணற்ற குர்ஆன் வசனங்களைக் கொடுத்துக் கொண்டிருக்கிறோம். இந்த நிலையில் பிறையைக் கண்ணால் பார்ப்பது மார்க்கத்திற்கு உட்பட்டதாக, மார்க்கமாக இருந்தால் இந்த மத குருமார்களைவிட அதில் நாம் மிகமிக உறுதியாகவே இருப்போம். ஆனால், பிறையைப் புறக்கண்ணால் பார்ப்பது நிச்சயமாக மார்க்கத்திற்கு உட்பட்டதல்ல; இபாதத் அல்ல.
இந்த அனைத்துப் பிரிவுகளின் மதகுருமார்கள் சொல்வது போல் பிறையைக் கண்ணால் பார்ப்பது மார்க்கத்திற்கு உட்பட்டதாக இருந்தால், அதே அடிப்படையில் அதைவிட முக்கியமாக 22:27 இறைக் கட்டளைப்படி ஹஜ்ஜுக்கு ஒட்டகத்தில் செல்வதும் மார்க்கத்திற்கு உட் பட்டது; இபாதத். “”என்னை எவ்வாறு தொழக் கண்டீர்களோ அவ்வாறே தொழுங்கள்” என்ற நபி(ஸல்) உத்திரவுப்படி சூரிய ஓட்டத்தைக் கண்ணால் மட்டுமே பார்த்து ஐங்கால தொழுகை களின் நேரத்தை முடிவு செய்வது மார்க்கத்திற்கு உட்பட்டது; இபாதத். தூரத்து இறப்புச் செய்தியைக் காலம் கடந்து ஆள் நேரில் வந்து சொல்வதை மட்டுமே ஏற்க வேண்டும். அதுவே மார்க்கத்திற்கு உட்பட்டது; இபாதத் என்று இவை அனைத்திலும் அன்றைய நடை முறையை மட்டுமே பின்பற்ற வேண்டும். அப்படியா இந்த மதகுருமார்கள் நடக்கிறார்கள்?
பிறையைப் பார்க்க வேண்டும் என்று கூறும் ஒரேயொரு ஹதீஸிலாவது 3:13ல் காணப்படுவது போல் “”ரஃயல்ஐன்”-கண்களால் கண்டனர் என்று இருப்பது போல் ஐன்-கண் என்ற பதம் இருக்கிறதா? என்று கேட்டால் இந்த மதகுருமார்களின் பதில் என்ன தெரியுமா? அன்று கண்ணால்தானே பிறையைப் பார்த்தார்கள் என்பது தான் அவர்களின் பதில். அப்படியானால் அன்று போல் இன்றும் ஒட்டகத்தில் ஹஜ்ஜுக்குப் போங்கள். நவீன வாகனங்களில் போகாதீர்கள். சூரிய ஓட்டத்தைக் கண்ணால் பார்த்து ஐங்கால தொழுகைகளைத் தொழுங்கள்; கடிகாரத்தைப் பார்க்காதீர்கள். தூரத்து இறப்புச் செய்தியை அன்றுபோல் இன்றும் காலம் தாழ்ந்து ஆள் நேரில் வந்து சொன்னதின் பின் ஏற்றுக் கொள்ளுங்கள். தொலைபேசித் தகவலை ஏற்காதீர்கள். இவையும் உங்கள் கருத்துப்படி மார்க்கம்; இபாதத் என்று கூறினால் இவற்றிற்குத் தங்களின் சுய விளக்கங்ககளைக் கொடுக்கின்றனர். மார்க்கததில் சுய விளக்கம் செல்லாது என்பதை வசதியாக மறந்து விடுகிறார்கள்.
” ததஜ நவீன இமாம்(?) 22:27ல் ஒட்டகத்தில் உம்மிடம் வருவார்கள் என்றிருக்கிறதே அல்லாமல் ஹஜ்ஜுக்கு வருவார்கள் என்று சொல்லப்படவில்லை எனப் புதுவிளக்கம் கொடுக்கிறார். இப்றாஹீம்(அலை) தன் வீட்டுக்கு விருந்துக்கு அழைத்தார் என்கிறார் போலும். சூரிய ஓட்டத்தைப் பார்த்துத் தொழாமல் எப்படிப் புதிய கண்டுபிடிப்பான கடிகாரத்தைப் பார்த்துத் தொழுகிறீர்கள் என்று கேட்டால், தஜ்ஜாலுடைய காலத்தில் கணித்துத் தொழும்படி நபி (ஸல்) கூறி இருக்கிறார்கள் என்கிறார். அவரது கூற்றுப்படி கடிகாரம் கண்டுபிடித்த காலம் தஜ்ஜாலின் காலம் போலும்.
நபி(ஸல்) காலம் போல் தூரத்துக் கணவன் இறப்புச் செய்தியை காலம் தாழ்ந்து ஆள் நேரில் வந்து சொன்ன பின்னர் அல்லவா அவரது மனைவி ஏற்க வேண்டும்; எப்படி தொலை பேசித் தகவலை ஏற்கச் சொல்கிறீர்கள் என்று கேட்டால், அது ஒரு பெண்ணின் தனிப்பட்ட விவகாரம், பிறை பார்த்தால் ஒட்டுமொத்த சமூக விவகாரம் எனப் புதுக்கரடி விடுகிறார். இங்கு தத்தம் பகுதிப் பிறை என்பது காற்றில் பறக்கவிடப்பட்டு ஒட்டு மொத்த சமுதாயம் எனக் கதையளக்கிறார்.
இவர் தமது ஆதரவாளர்களின் காதுகளில் இப்படிப் பூ சுற்றும்போது, ஜாக் புதிய அமீர் என்ன சுய விளக்கம் கொடுக்கிறார் தெரியுமா? மாதவிடாய்ப் பெண்கள் நோன்பை பின்னர் நோற்க வேண்டும்; தொழுகைகளைப் பின்னர் தொழ வேண்டியதில்லை என்பதால், சூரிய ஓட்டத்தைப் பார்க்காமல் கடிகாரம் பார்த்துத் தொழலாம். ஆனால் பிறையைப் பார்க்காமல் கணினி கணக்கீட்டைப் பார்த்து நோன்பை ஆரம்பித்து முடிக்கக் கூடாது எனப் புது விளக்கம் தருகிறார்.
அல்குர்ஆன் 2:189, 6:96, 10:5, 13:2, 14:33, 17:12, 21:33, 31:29, 55:5 போன்ற இறை வாக்குகள் சூரியனும், சந்திரனும் கணக்கீட்டின்படியே குறிப்பிட்ட வட்டவரைகளில் தவறாமல் சுழல்கின்றன என்று கூறுவதும், அதன்படி அவை மனிதனின் கண்ணின் கட்டுப்பாட்டில் இல்லை என்பதும் தெளிவாக இருந்தும் இந்த தர்கா, தரீக்கா, மத்ஹபு, இயக்க மவ்லவிகள் மேற்கண்ட குர்ஆன் வசனங்களைக் கண்டு கொள்வதாக இல்லை; நிராகரிக்கிறார்கள். அல்குர்ஆன் வசனங்களை நிராகரிப்பவர்கள் யாராக இருக்க முடியும் என்பதை அல்குர்ஆனை முறையாகப் பொருள் உணர்ந்து படித்து அறிகிறவர்கள் நிச்சயம் உணர முடியும்.
அப்படியானால் அதைப் பார்க்கமால் நோன்பை ஆரம்பிக்காதீர்கள்; அதைப் பார்க்காமல் நோன்பை முடிக்காதீர்கள் என நபி (ஸல்) அவர்கள் ஏன் அழுத்தமாகக் கூற வேண்டும்? அப்படிப்பட்ட பல ஹதீஸ்கள் இருக் கின்றனவே என சந்தேகம் தோன்றலாம். அன்றையக்காலச் சூழ்நிலையை நாம் தெளிவாக அறிந்து கொண்டால் இந்த ஐயமும் விலகி விடும். அந்தக்காலத்தில் சுமார் 10 மைல்கள் தூரத்தில் உள்ள ஊரில் நடப்பதை உடனடியாக அறிய முடியாது. அன்று மக்காவில் நடப்பது பக்கத்திலுள்ள தாயிஃபுக்குத் தெரியாது, தாயிஃபில் நடப்பது மக்காவுக்குத் தெரியாது. அந்தந்த ஊரில் நடப்பவை மட்டும்தான் அந்தந்த ஊருக்குத் தெரியும்.
மாதம் பிறப்பதை அறிந்து கொள்ள நவீன கருவிகள் இல்லாத நிலையில், பிறையைப் பார்க்கும் கட்டாயத்தில் அன்றைய மக்கள் இருந்ததோடு, பிறை பார்த்தத் தகவலை உட னடியாகப் பக்கத்து ஊருக்கு அறிவிக்கும் தொலை தொடர்பு வசதியும் இருக்கவில்லை. எனவே அவரவர்கள் பார்த்த பிறை அவரவர்களுக்கு மட்டுமே. பக்கத்து ஊரில் பிறை பார்த்து விட்டார்கள். நாம் பார்க்கவில்லை என்ற சர்ச்சை எழ வாய்ப்பே இல்லை. இது வியத்தில் உள்ளூர்களில் அமைதி காக்க முடிந்தது.
ஆனால் உள்ளூரில் எப்படிப்பட்ட சர்ச்சை எழுந்தது தெரியுமா? இன்று இந்த மவ்லவிகள் அமாவாசைக்கு அடுத்த நாளுக்கும் அடுத்த நாள் மேற்கில் மறையும் பிறையைப் பார்ப்பது போல் அன்று பிறை பார்க்கப்படவில்லை; சூரிய ஓட்டத்தைத் தினசரி பார்த்து வந்தது போல் பிறை ஓட்டத்தையும் தினசரி பார்த்து வந்தார்கள். அப்படிப் பார்த்துக் கணிக்கும் போது சிலரிடம் அம்மாதம் 29ல் முடிகிறது என்றும், சிலரிடம் 30ல் முடிகிறது என்றும் கருத்து வேறுபாடு, சர்ச்சை உள்ளூரிலேயே ஏற்பட்டது.
“”நாங்கள் கருத்து வேறுபாடு ஏற்பட்ட நிலையில் 30ம் நோன்பை நோற்றவர்களாகக் காலைப் பொழுதை அடைந்தோம். அன்று காலையில் இரு கிராமவாசிகள் வந்து நேற்று பிறை பார்த்தோம் என்று சாட்சி சொன்னார்கள்…..” என்ற ஹதீஸ் இதை உறுதிப்படுத்துகிறது.
இந்த ஹதீஸில் வரும் “ஷஹிதூ-சாட்சி சொன்னார்கள்” என்ற பதத்தை ததஜ நவீன இமாம்(?) சாட்சியை மறைத்து சொன்னார்கள், கூறினார்கள் என்று அரசியல் அற்ப உலக ஆதாயம் கருதி சுய நலத்துடன் இருட்டடிப்புச் செய்து சுமார் ஐந்து இடங்களில், முன்னர் எழுதி இருந்ததையும், 1997-நவம்பர் அல் ஜன்னத் மாத இதழில் பல மவ்லவிகள், விஞ்ஞானிகள் இணைந்து பல அமர்வுகள் கடும் ஆய்வுகள் செய்து சர்வதேச பிறையை சரிகண்டு எழுதியதை மறுத்து அந்தர் பல்ட்டி அடிப்பதற்காக இந்த ஹதீஸை திரித்து மறைத்து எழுதியதையும் நாம் முன்னர் அடையாளம் காட்டி இருந்தோம். பலர் மறந்திருக்கலாம்; சிலருக்கு ஞாபகம் இருக்கலாம். அவரது அந்தர்பல்ட்டி பற்றி நாம் எழுப்பிய சுமார் 10 கேள்விகளுக்கு இன்றுவரை அவரால் பதில் அளிக்க முடியவில்லை என்பதே அவரது வழிகெட்ட கொள்கையை அடையாளம் காட்டப் போது மானதாகும்.
ஆம்! “”பக்கத்துப் பக்கத்து ஊர்களில் பிறை பார்த்துவிட்டார்கள்; நாம் இன்னும் பிறை பார்க்கவில்லை”என்று இன்று காணப்படும் சர்ச்சையோ கருத்து வேறுபாடுகளோ அன்று இல்லை; அதற்கு மாறாக இம்மாதம் 29ல் முடிகிறது என்று ஒரு சாராரும், இல்லை! 30ல் முடிகிறது என்று பிரிதொரு சாராரும் கருத்து வேறுபாடுபட்டு சர்ச்சை செய்யும் நிலையே அன்று ஒரு ஊருக்குள்ளேயே இருந்தது.
இந்தக் கருத்து வேறுபாட்டைத் தீர்க்க இன்றிருப்பது போல் துல்லியக் கணக்கீட்டு முறை அன்று இருக்கவில்லை. அன்றிருந்த ஒரே வழி பிறையைப் பார்ப்பதுதான். அதனால் தான் அன்று மாதம் 30ல் முடிகிறதா? 29ல் முடிகிறதா? என்ற உள்ளூர் கருத்து வேறு பாட்டைத் தீர்க்கப் பார்த்து ஆரம்பியுங்கள்; பார்த்து விடுங்கள் என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். பார்க்காமல் ஆரம்பிக்காதீர்கள், பார்க்காமல் முடிக்காதீர்கள் என்றும் கூறினார்கள். ரமழானில் கண்ட பிறைச்செய்தி மாத இறுதியில் மதீனாவுக்கு கிடைத்து இப்னு அப்பாஸ்(ரழி) அதை மறுத்த அஃதர், 2ம் பிறை 3ம் பிறை எனச் சச்சரவிட்டுக் கொண்டு இப்னு அப்பாஸ்(ரழி) அவர்களிடம் வந்து கேட்டபோது “”என்றைய தினம் பார்த்தீர்களோ அன்றைய தினத்தின் பிறை” என்று அவர்கள் சச்சரவுக்கு முற்றுப்புள்ளி வைத்த அஃதர் இன்னும் இவை போல் பிறையைக் கண்ணால் பார்ப்பதற்கு பெரிய வலிய ஆதாரங்களாக எடுத்து வைக்கும் அனைத்து ஹதீஸ்களும் அஃதர்களும் அன்று மாதம் 29ல் முடிகிறது; இல்லை 30ல் முடிகிறது என்ற கருத்து வேறுபாட்டை – சர்ச்சையை முடிவுக்குக் கொண்டு வரக்கூறப்பட்டவையே அல்லாமல் இம்மதகுருமார்கள் கூறுவதுபோல் பிறையைக் கண்ணால் பார்ப்பதை வலியுறுத்தி அல்ல என்பதை இம்மவ்லவிகளைக் கண்மூடிப் பின்பற்றாமல் சுயமாகச் சிந்தித்து விளங்குகிறவர்கள் அறிய முடியும்.
இன்று யூதமதக் கலாச்சாரத்தைப் பின்பற்றி மேற்கில் மறையும் 3ம் பிறையை மட்டும் பார்த்துவிட்டு மாதம் பிறந்துவிட்டதாகவும் நாள் மாலையில் ஆரம்பிப்பதாகவும் சொல்லும் இம்மவ்லவிகள் தினசரி பிறைகளைப் பார்ப்பதில்லை. எனவே அன்று போல் இன்று மாதம் 29ல் முடிகிறது, 30ல் முடிகிறது என்று சர்ச்சை எழ வாய்ப்பில்லை. அதற்கு மாறாகப் பல ஊர்களில் பிறையைப் பார்த்து விட்டார்கள். நாம்தான் பார்க்கவில்லை என்ற சர்ச்சையே மேலோங்குகிறது. எனவே இந்தச் சர்ச்சையைத் தீர்க்க மிகமிகத் துல்லியமான கணினி கணக் கீட்டை ஏற்பதே சமூக ஒற்றுமைக்கு வழிவகுக்கும்.
காரணம் சூரியனும், சந்திரனும் அல்லாஹ்வின் கட்டுப்பாட்டில், அவற்றிற்கு நிர்ணயிக்கப்பட்டச் சுற்றுப் பாதைகளில் ஒரு வினாடி கூட முன்பின் ஆகாமல் துல்லிய கணக்கீட் டின்படிச் சுழல்கின்றன என்றும் (அவை மனிதனின் கண்ணின் கட்டுப்பாட்டில் (remote control) இல்லை என்றும்) தெளிவாக, நேரடியாகப் பல குர்ஆன் வசனங்கள் இருக்க, அந்த இறைவாக்குகள் அனைத்தையும் நிராகரித்து விட்டுச் சந்திரன் மனிதக் கண்களின் கட்டுப் பாட்டில் இயங்குகிறது, எனவே பிறையைக் கண்ணால் பார்த்தே மாதம் ஆரம்பிப்பதைத் தீர்மானியுங்கள் என்று நபி(ஸல்) அவர்கள் கட்டளையிட்டிருக்க முடியுமா? ஒருபோதும் முடியாது என்பதைப் பாமரனும் புரிவான். ஆனால் அரபி படித்தப் பண்டிதர்கள் என ஆணவம் பேசும் மவ்லவிகள் ஒருபோதும் அறிய மாட்டார்கள்.
“நமக்கு எழுதவும் தெரியாது; கணக்கீடும் தெரியாது, மாதம் 29லும் முடியலாம், 30லும் முடியலாம்” என விரல்கள் மூலம் சுட்டிக் காட்டிச் சொன்னதாக உள்ள ஹதீஸ் இந்த உண் மையைக் குன்றிலிட்ட தீபமாக விளக்குகிறது.
இந்த ஹதீஸுக்கும் ததஜ நவீன இமாம்(?) புது சுயநல விளக்கம் கொடுத்துத் தனது பக்தர்களை மூடர்களாக ஆக்குகிறார். அது விண்ணியல் கணக்கு அல்லவாம்; சாதாரணமாக நடை முறையில் இருக்கும் கணக்காம். சாதாரண நடைமுறைக் கணக்குத் தெரியாமல் தான் நபியாவதற்குமுன் கதீஜா(ரழி) அவர்களின் பெருங்கொண்ட வியாபாரத்தைத் திறம்பட நடத்திப் பெரும் ஆதாயம் காட்டினார்கள் நபி(ஸல்) அவர்கள் என்பதுதான் இந்த மூட முல்லாவின் சுயவிளக்கம். இதை அப்படியே கண்மூடி ஏற்காமல் அதாவது 47:24ல் அல்லாஹ் கூறுவது போல் தங்கள் உள்ளத்திற்குப் பூட்டுப் போடாமல், சிந்திக்க முன்வந்தால் இந்த அபத்தக் கருத்தைப் புரிந்து கொள்ள முடியும்.
மேலும் அல்குர்ஆனில் 6:96, 10:5, 13:2, 14:33, 17:12, 21:33, 31:29, 55:5 போன்ற பல இறைவாக்குகள் சூரியன் சந்திரன் பற்றிய விண்ணியல் கணக்கை கணக்கு (ஹிசாப்) என்று கூறும் நிலையில், நபி(ஸல்) அவர்கள் அதற்கு மாறாக சந்திரன் பற்றிய விண்ணியல் கணக்கைக் கூறாமல் சாதாரண கணக்கைக் கூறினார்கள் என்று சுய விளக்கம் கொடுப்பதைவிட அடிமுட்டாள்த்தனம் பிரிதொன்று இருக்க மடியாது என்பதையும் அறிந்து கொள்ள முடியும்.
உண்மை இதுதான்! சூரியனும் சந்திரனும் விண்ணியல் கணக்கின்படி உலகம் படைக்கப்பட்டக் காலத்திலிருந்து சுழன்று கொண்டிருந்தாலும், நபி(ஸல்) அவர்களது காலத்தில் அந்த விண்ணியல் கணக்குக் கண்டுபிடிக்கப்பட்டு நடைமுறைக்கு வராத காரணத்தால் சூரிய ஓட்டத்தைக் கண்ணால் பார்த்து ஐங்காலத் தொழுகைகளைத் தொழுதார்கள். வைகறை (பஜ்ர்)யிலிருந்து நோன்பு நோற்க ஆரம்பித்து, அஸ்தமனத்தில் நோன்பு துறந்தார்கள். மேலும் சந்திர மாதங்களைச் சந்திர ஓட்டத்தைப் பார்த்துக் கணக்கிட்டார்கள். ரமழான் பிறப்பதை அறிந்து நோன்பை ஆரம்பித்து ஷவ்வால் பிறப்பதை அறிந்து நோன்பை முடித்தார்கள்.
என்று சூரிய ஓட்டத்தைக் கணக்கிடும் கடிகாரம் கண்டுபிடிக்கப்பட்டதோ அன்றிலிருந்து சூரிய ஓட்டத்தைக் கண்ணால் பார்க்காமல் கடிகாரம் பார்த்து நேரம் அறிந்து ஐங்காலத் தொழுகை தொழும் நிலை ஏற்பட்டது. பஜ்ர், மஃறிபு நேரம் கடிகாரம் பார்த்து நோன்பு கடைபிடிக்கும் நிலை ஏற்பட்டது. அப்போதும் இந்த மதகுருமார்கள் கடிகாரம் பார்த்துத் தொழுவதையும், நோன்பு நோற்பதையும் கடுமையாக எதிர்க்கத்தான் செய்தார்கள். காலப் போக்கில் அவர்களும் ஏற்றுக் கொள்ளும் கட்டாயம் ஏற்பட்டது. இப்போது தொழுகை, நோன்பு கால நேர அட்டவணை ஒவ்வொரு பள்ளியிலும் காணப்படுகிறது.
அதேபோல் இன்று சந்திர ஓட்டத்தைக் கணக்கிடும் கணினி கண்டுபிடிக்கப்பட்டுப் பல சந்திர ஆண்டுகளின் 12 மாதங்களின் ஆரம்பத்தையும் முடிவையும் திட்டமாகத் துல்லியமாக முன் கூட்டியே கணக்கிடும் வாய்ப்பை அல்லாஹ் தந்துள்ளான். எனவே சூரியனைக் கண்ணால் பார்ப்பதை விட்டு கடிகாரத்தைப் பார்ப்பது போல், சந்திரனைக் கண்ணால் பார்ப்பதை விட்டு, கணினி கணக்கீட்டைப் பார்த்துச் செயல்படுவது குர்ஆனுக்கோ, ஹதீசுக்கோ முரணான செயல் அல்லவே அல்ல..
ஆனால் இம்மதகுருமார்களுக்கு எப்படிப்பட்ட விளக்கத்தைக் கொடுத்தாலும் அவர்கள் ஏற்கமாட்டார்கள். காரணம் நாங்கள்தான் மார்க்கம் கற்ற மேதைகள், மார்க்கம் போதிக்கும் அதிகாரம் பெற்றவர்கள் என்று அன்று அபூ ஜஹீல் வைத்த அதே பொய் ஆணவவாதத்தை வைப்பதால், ஆணவம் அகந்தை பேசுவதால், அபூ ஜஹீலைப் போல் இம்மதகுருமார்களால் ஒரு போதும் உண்மையை-சத்தியத்தை விளங்கவும் முடியாது, ஒப்புக் கொள்ளவும் முடியாது. காலமே அவர்களை ஒப்புக் கொள்ள வைக்கும்.
“”அல்அவாம் கல் அன்ஆம்”-அவாம்களாகிய பாமரர்கள் ஆடுமாடுகளைப் போன்றவர்கள் என இம்மதகுருமார்களால் இழிவுபடுத்தப் படும் பொதுமக்கள் இம்மதகுருமார்களின் வசீகர சூன்ய உடும்புப் பிடியிலிருந்து விடுபட்டுச் சுயமாகச் சிந்தித்தால் நிச்சயமாக அவர்களால் சத்தியத்தை நேர்வழியை விளங்க முடியும் என்பது உறுதி. இன்னும் பாருங்கள் இம்மத குருமார்களின் அறிவீனத்தை! பிறையைப் புறக் கண்ணால் பார்த்தே 3ம் பிறையை முதல் பிறையாகக் கொண்டு ரமழான் மாதத்தின் ஆரம்ப இரண்டு நாட்களைப் பாழ்படுத்தி 3ம் நாளிலிருந்து நோன்பு நோற்று ஹராமான ஷவ்வால் மாதத்தின் முதல் நாளிலும் நோன்பு நோற்று பொதுமக்களைப் பெரும் பாவிகளாக்குகிறார்களே!
அன்று நபி(ஸல்) காலத்தில் எவ்வாறு பிறை பார்க்கப்பட்டது என்பதையாவது முறையாக அறிந்திருக்கிறார்களா? இல்லையே! அன்று தினசரி எப்படி சூரிய ஓட்டத்தைப் பார்த்து வந்தார்களோ அதேபோல், சந்திர ஓட்டத்தையும் தினசரி பார்த்து வந்தார்கள். அப்படி அன்றாடம் பார்த்து வரும் போது குர்ஆன் 36:39 கூறுவது போல் பிறை அன்றாடம் ஆரம்பத்தில் வளர்ந்து 15க்குப் பின் தேய்ந்து இறுதியில் பார்வையில் படக்கூடிய “”உர்ஜூனில் கதீம்” என்ற நிலையையும் பார்த்தார்கள்.
இந்த உர்ஜூனில் கதீமை பஜ்ருக்குப் பின்னர் கிழக்குத் திசையில் பார்க்க முடியும். அதற்கு அடுத்த நாள் பிறையை மேற்கிலோ கிழக்கிலோ பார்க்கவே முடியாது. அந்நாளே மாதத்தின் கடைசி நாள். அதற்குமேல் அம்மாதம் நீடிக்கவே நீடிக்காது. எனவே அந்நாளிற்கு அடுத்த நாள் புதிய மாதத்தின் முதன் நாள்-முதல் பிறையாக இருந்தே ஆகவேண்டும். நபிகாலத்து இந்த அழகிய நடைமுறை யைக் கைவிட்டு, சங்கமத்திற்கு (Conjunction) அதாவது அமாவாசைக்கு அடுத்த நாளுக்கு அடுத்த நாள் காலையில் உதித்து மாலையில் மறையும் 3ம் நாள் பிறையை 1ம் பிறையாகக் கொள்ள யார் கற்றுத் தந்தது? யாருடைய கலாச்சாரம் இது?
ஆம்! மாற்று மதத்தினரான யூதருடைய கலாச்சாரமே இதுவாகும். கிறித்தவர்கள் இரவு 12 மணிக்கு நாள் ஆரம்பித்து அதே 12 மணிக்கு முடிவதாகக் கொள்கிறார்கள். யூதர்கள் மாலையில் நாள் ஆரம்பித்து மாலையில் முடிவதாகக் கொள்வதுடன், கண்ணுக்குத் தெரியும் 3ம் பிறையையே முதல் நாளாக-முதல் பிறையாகக் கொள்கிறார்கள். மாற்று மதக் கலாச்சார மான யூதர்களின் இந்த நடைமுறையையே முஸ்லிம் மதகுருமார்களான மவ்லவிகள் அனைவரும் கண்மூடிப் பின்பற்றுகின்றனர். மற்றபடி மாலையில் மறையும் பிறையைப் பார்த்து நபி(ஸல்) அவர்கள் பிறை பிறந்து விட்டதாகவோ, நாள் ஆரம்பிப்பதாகவோ சொன்ன ஒரேயொரு ஆதாரத்தையும் இந்த மவ்லவிகளால் தரமுடியாது. யூதர்களாவது இன்றைய துல்லிய கணக்கீட்டின்படி சிலதை மாற்றிக் கொண்டிருக்கிறார்கள். முஸ்லிம் மத குருமார்களான மவ்லவிகளோ தாங்கள் பிடித்த முயலுக்கு மூன்று கால்கள் மட்டுமே எனப் பிடிவாதம் பிடித்துக் கொண்டிருக்கிறார்கள்.
பெரம்பலூர் நிகழ்ச்சியில் ஒரு சுவாரஸ்ய மான சம்பவம்! அன்றாடம் பிறை பார்க்கப்பட வேண்டும். பிறை 15க்கு முன்னால் மறையும் பிறையை மாலையில்-இரவில் மேற்கில் பார்க்க வேண்டும். 15க்குப் பிறகு தேய் பிறைகளைக் கிழக்கில் பார்க்க வேண்டும் என்றும் கூறும் போது, ஒரு மவ்லவி உடனடியாக எழுந்து கிழக்கில் பிறை பார்க்க ஹதீஸ் ஆதாரம் இருக்கிறதா? என்று கேட்டார். உடனே நாம் மேற்கில் பிறை பார்க்க ஹதீஸ் ஆதாரம் இருக்கிறதா? என்று மடக்கிக் கேட்டோம். பதில் சொல்ல முடியாமல் தடுமாறினார். இதிலிருந்து என்ன தெரிகிறது? மாற்று மதக் கலாச்சாரமான யூதக் கலாச்சாரத்தைப் பின்பற்றி காலையில் கிழக்கில் உதித்து மாலையில் மேற்கில் மறையும் பிறையைப் பார்த்து பிறை பிறந்துவிட்டதாகவும், நாள் ஆரம்பித்துவிட்டதாகவும், கண்ணுக்குத் தெரியும் மறையும் 3ம் பிறையே முதல் பிறை என்றும் கண்மூடி ஏற்க இந்த மவ்லவிகள் தயார். இம் மூடக் கொள்கைக்கு குர்ஆன், ஹதீஸ் ஆதாரம் கேட்க மாட்டார்கள்.
அதற்கு மாறாக அல்லாஹ்வின் ஃபிஅல்-செயலான அறிவியல் கண்டுபிடிப்புகள் திட்ட மாக, துல்லியமாகக் கணக்கிட்டுச் சொல்லும் சூரிய, சந்திர உதயம், அஸ்தமனம், மற்றும் சூரியன், சந்திரன், பூமி மூன்றின் சங்கமம் (Conjunction) இவற்றை ஏற்க ஹதீஸ் ஆதாரம் வேண்டுமாம். கோள்கள் அனைத்தும் துல்லிய கணக்கீட்டின்படியே அவற்றிற்குரிய சுற்றுப் பாதைகளில் தவறாமல் சுழல்கின்றன. அவை அனைத்தும் அல்லாஹ்வின் கட்டுப்பாட்டில் உள்ளன. அவற்றின் ஓட்டத்தைக் கணக்கிடும் வகையில் மனிதனுக்கும் அவற்றை வசப்படுத்தித் தந்துள்ளான் என்று கூறும் எண்ணற்ற இறைவாக்குகளை உற்றுணர்ந்து அறிய முடியா அறிவிலிகளாக இந்த அனைத்து ரக மவ்லவிகளும் திகழ்கிறார்கள். (பார்க்க. 6:96, 10:5, 13:2, 14:33, 17:12, 21:33, 31:29, 55:5, 7:54, 9:36, 16:12, 21:33, 29:61, 32:5, 36:37-40, 39:5)
இந்த மவ்லவிகள் மார்க்த்தை வயிற்றுப் பிழைப்பாகக் கொண்டிருப்பதால், 9:34ல் அல்லாஹ் கிறித்தவ மதகுருமார்கள் மக்களின் சொத்துக்களை தவறான வழிகளில் சாப்பிடு வதற்காக மக்களை அல்லாஹ்வின் நேர் வழியை விட்டும் கோணல் வழிகளில் இட்டுச் செல்கிறார்கள் என்று கடிந்து கூறுவதைக் காதில் வாங்காமல், நபி(ஸல்) எச்சரித்திருப்பது போல் யூத, கிறித்தவ மதகுருமார்களை ஜானுக்கு ஜான் முழத்திற்கு முழம் பின்பற்றி மவ்லவிகளான இந்த முஸ்லிம் மதகுருமார்களும், மக்களின் சொத்தைத் தவறான வழிகளில் சாப்பிட, அவர்களைக் கோணல் வழிகளில் இட்டுச் செல்கிறார்கள் என்பதே நிதர்சன உண்மையாக இருக்கிறது.
அதற்கும் இந்த ரமழான் மாதத்திலேயே அவர்கள் நோன்பு நோற்று நோன்பைத் துறப்பதில் ஆதாரம் இருக்கிறது. நோன்பு நோற்பது அதிகாலை ஃபஜ்ரில் ஆரம்பித்து மாலையில் சூரியன் மறைந்தவுடன் முடிகிறது என்று அல் குர்ஆன் 2:187 உறுதியாகக் கூறுகிறது. மேலும், இந்த ஹதீஸ்களை உற்றுக் கவனியுங்கள்.
“”மக்கள் தீவிரமாக நோன்பு திறந்து வரும் வரை நன்மையையே நுகர்ந்து வருவர்” என நபி (ஸல்) கூறினர். சஹ்லுப்னு சஃது(ரழி) புகாரீ, முஸ்லிம், முஅத்தா, திர்மிதீ, அல்ஹதீஸ் 3839
“”சஹரை இறுதி வேளையில் செய்வதும் நோன்பு திறப்பதில் தீவிரம் செய்வதும் நபித்துவத்தின் செயல்களில் உள்ளவையாகும்” என்று அப்துல் கரீம் இப்னு அபில் மகாரிக் கூற நான் கேட்டேன். இமாம் மாலிக்(ரஹ்) முஅத்தா, அல்ஹதீஸ் 3840.
நபி(ஸல்) தீவிரப்பட்டு நோன்பு துறந்ததை புகாரீ(ர.அ) 1959 ஹதீஸ் உறுதிப் படுத்துகிறது. அது வருமாறு.
“”நபிஸல்) அவர்கள் காலத்தில் மேகம் சூழ்ந்த ஒரு நாளில் நாங்கள் நோன்பு துறந்த பின்னர் சூரியன் தென்பட்டது”
பேணுதல் என்ற அடிப்படையில் நோன்பு துறப்பதைப் பிற்படுத்த அனுமதி இருந்தால் மேகமூட்டமான நாளில் அவசரப்பட்டு நபி (ஸல்) அவர்கள் ஒருபோதும் நோன்பைத் துறந்திருக்க மாட்டார்கள். இதை உறுதிப்படுத்தும் இன்னும் சில ஹதீஸ்களும் உண்டு.
சஹரைப் பிற்படுத்துவதும், நோன்பு துறப்பதை முற்படுத்துவதும் மார்க்கக் கட்டளையாக இருந்தும் இபாதத்தாக இருந்தும் அவற்றை நிராகரித்து மக்களுக்கு எப்படிப் போதிக்கிறார்கள்? சஹரை 20 நிமிடங்களுக்கு முன்னரே முடிக்கும்படியும், இஃப்தாரை 7,8 நிமிடங்கள் பிற்படுத்தும்படியும் போதிக்கிறார்கள். இதைப் பேணுதல் என்கிறார்கள்.
இங்கு மார்க்கத்திற்கு உட்பட்டதை மார்க்கத்தற்கு உட்படாததாக ஆக்குகிறார்கள். பிறையைக் கண்ணால் பார்க்கும் மார்க்கத்திற்கு உட்படாததை மார்க்கத்திற்கு உட்பட்டதாக ஆக்குகிறார்கள். மக்கள் சொத்தைத் தவறான வழிகளில் சாப்பிடுகிறவர்கள் நேர்வழியிலிருந்து மக்களைத் தடுப்பார்கள் என்று அல்லாஹ் 9:34ல் கூறுவதை அப்படியே உண்மைப் படுத்துகிறார்கள். பிறையைக் கண்ணால் பார்ப்பது மார்க்கம் அல்ல; இபாதத் அல்ல. நவீன கருவியான கணினி பார்த்தும் மாதம் ஆரம்பிப்பதைத் துல்லியமாக அறியலாம் என்று சொன்னால் இம் மவ்லவிகள் அப்படியானால் ஸ்கேன் மூலம் குழந்தை இருக்கிறதா என அறிந்து இத்தா இருப் பதைத் தவிர்க்கலாம் தானே எனக் கூறி மார்க்கத்தற்கு உட்பட்டதை, இபாதத்தை மார்க்கம் அல்லாததாக ஆக்க முற்படுகிறார்கள் தாஃகூத் களான இம்மதகுருமார்கள்.
இன்னும் கேளுங்கள்! இந்த மதகுருமார்கள் மக்களை ஏமாற்றும் தந்திரத்தை. அவர்களது கொள்கைப்படி மாதாமாதம் சங்கமத்திற்கு அடுத்த நாளுக்கு அடுத்த நாள் காலையில் கிழக்கில் உதித்து மாலையில் மேற்கில் மறையும் 3ம் பிறையைக் கண்ணால் பார்த்து முதல் பிறையாக யூதர்கள் கொள்வது போல் கொண்டு மாதத்தைக் கணக்கிடும் இவர்கள் எந்த அடிப்படையில், எந்த முகாந்திரம் கொண்டு வருட நாள் காட்டி அச்சடித்துக் காசாக்குகிறார்கள்? அவர்கள் தங்கள் கொள்கையில் உறுதியானவர்கள் என்றால் மாதாமாதம் மாத நாள்காட்டி மட்டுமே அச்சடிக்க முடியும். வருட நாள்காட்டி ஒருபோதும் அச்சடிக்க முடியாது. ஆனால் வருட நாள்காட்டி அச்சடித்துக் காசாக்குகிறார்கள் எப்படி?
ஆம்! மாற்றுமத யூத கலாச்சாரத்தைப் பின்பற்றி அவர்களின் கணிப்பின் (கணக்கீடு அல்ல) படி தயாரான யூத நாள்காட்டியைக் கண் மூடிப் பின்பற்றி (சிவகாசி நாள்காட்டி) நாள் காட்டி அச்சடிக்கிறார்கள். வருட நாள்காட்டி அச்சடிக்க இஸ்லாமிய மார்க்கத்தில் வழி இல்லை என்று அவர்கள் கற்பனை செய்து யூதர்களின் நாள்காட்டியைப் பின் பற்றி வருட நாள்காட்டி அச்சடிக்கிறோம் எனச் சொல்லாமல் செயல் மூலம் நடைமுறைப்படுத்தி மக்களை வஞ்சித்து ஏமாற்றுகிறார்கள். மக்கள் பணத்தை 9:34 சொல்வது போல் தவறான முறையில் சாப்பிடுகிறார்கள்.
அந்த அடிப்படையில் தான் சரியான கணக்கின்படி ரபிவுல் அவ்வல் பிறை 14ல் பெளர்ணமி -பூரணச் சந்திரன் அன்று பிறந்து அதே ரபிவுல் அவ்வல் பிறை 14ல் பெளர்ணமி பூரணச் சந்திரன் அன்று நபி(ஸல்) இறந்ததை, யூத நாள் காட்டிப்படி ரபிவுல் அவ்வல் பிறை 12 எனத் தவறாகக் கொண்டு, கிறித்தவர்களையும், அபூ லஹபையும் கண்மூடிப் பின்பற்றி மீலாது கொண்டாடுகிறார்கள்.
மார்க்கத்தை வயிற்றுப் பிழைப்பாகக் கொண்டுச் செயல்படும் மவ்லவிகளான இம்மதகுருமார்களுக்கு குர்ஆன், ஹதீஸ்படி நடப்பது எட்டிக் காயாகக் கசக்கிறது. அதற்கு மாறாக குர்ஆனுக்கும், ஹதீஸுக்கும் முரணான மாற்றும் மதக் கலாச்சாரங்களை இஸ்லாத்தின் பெயரால் நடைமுறைப்படுத்தித் தொப்பையை நிரப்புவது கரும்பு போல் இனிக்கிறது. இதுதான் இம்மவ்லவிகளின் உண்மை நிலை.
நாள் பஜ்ரில் ஆரம்பித்து பஜ்ரில் முடிகிறது என்பதற்கு 1000 மாதங்களைவிட சிறப்புக் குரிய கத்ருடைய நாளைப் பற்றிக் குறிப்பிடும் 97ம் அத்தியாயமும், 36:40, 74:32-34, 13:3, 7:54, 2:187, 6:96 போன்ற இறைவாக்குகளும் தெளிவாகக் கூறிக் கொண்டிருக்க, 97ல் லைலத்-நாள் என்றிருப்பதை இரவு எனக் கூறி மக்களை ஏமாற்றுகிறார்கள். இரவு என்றால் அது 12 மணி நேரம் மட்டும்தானே இருக்கும். உலகின் ஒரு பாதி மக்களுக்கு அந்தப் பாக்கியம் கிடைக்காதே என்று கேட்டால் அவர்கள் இரவை அடையும்போது அவர்களுக்கும் அந்தப் பாக்கியம் கிடைக்கும் என அறிவிலியாகப் பதில் கூறுகிறார்கள். ஆம்! முன்பாதி உலகின் மக்களுக்கு 12 மணி நேரம். பின்பாதி மக்களுக்கு 12 மணி நேரம் என்றால் 12+12=24 மணி நேரம். அதுஒரு நாள்தானே என்ற சாதாரணக் கணக்கும் தெரியாத மவ்லவிகள் அறிவிலிகளாகத் தானே இருக்க முடியும்.
இன்னும் சில மவ்லவிகள், நீங்கள் சொல்வது போல் லைலத் என்பதை நாள் என்று ஒப்புக் கொண்டாலும் அந்த நாள் பஜ்ரில் முடிகிறது என்றுதானே இருக்கிறது. நாள் பஜ்ரில் ஆரம்பிக்கிறது என்பதற்கு இது ஆதாரமில்லையே என அறியாத்தனமாக வினாத்தொடுக்கின்றனர். நடு நிலைப் பள்ளியையும் தாண்டாத இந்த மவ்லவிகளின் நிலை இதுதான். தவாஃபைப் போல் வட்டச் சுற்றுகளில் ஆரம்பிக்கும் இடத்தில்தான் முடியும் என்ற சாதாரண அறிவும் அவர்களுக்கு இல்லை என்பதுதான் நிதர்சன உண்மை.
இவர்கள்தான் தங்களை மார்க்கத்தைக் கசட றக்கற்ற மேதைகள் எனப் பீற்றுகிறார்கள். ஆம்! மதகுருமார்களாகிய நாங்கள் அபூ ஜஹீலின் நேரடி வாரிசுகள் எனச் சொல்லாமல் சொல்கிறார்கள்.
அல்குர்ஆன் 2:51, 7:142, 44:3, 97:1,2,3 இறை வாக்குகளை தங்கள் சுய சிந்தனையை இம் மவ்லவிகளிடம் அடகு வைக்காமல் சுயமாகப் படித்துப் பார்த்தால் “”லைலத்” என்ற அரபி பதத்திற்கு நாள் என்ற பொருளும் உண்டு. குறிப்பாக 3:41ல் வரும் அய்யாம் என்று நாளைக் குறிப்பிடும் அதே விஷயம் 19:10ல் லைலத் என்று குறிப்பிடப்படுவதால் “”லைலத்” என்ற பதம் நாளையும் குறிக்கும் என்பதைத் திட்ட மாக அறிய முடியும்.
2:238 இறைவாக்குக் குறிப்பிடும் நடுத் தொழுகை என்பது அசர் தொழுகைதான் என்பதைப் புகாரீ (ரஅ) 4533, 6396, அல்ஹதீஸ் 1481,1482 எண்களிலுள்ள ஹதீஸ்கள் உறுதிப் படுத்துகின்றன.
ஒருநாளின் நடுத்தொழுகை அசர் தொழுகை தான் என்றால் நாளின் ஆரம்பம் பஜ்ர் என்பது உறுதியாகிறது. வாகனக் கூட்டத்தார் மற்றும் இரு கிராமவாசிகள் “”நேற்று நாங்கள் பிறை பார்த்தோம்” என்றே சாட்சி சொல்கிறார்கள். (அபூ உமைர், அபூதாவூது, இப்னுமாஜா, நஸயீ, ரிப்யீ பின் கிராஷ், அபூதாவூது)
நாள் மஃறிபில் ஆரம்பித்தால் அவர்கள் “”இன்று நாங்கள் பிறை பார்த்தோம் என்றே சாட்சி சொல்லி இருக்க வேண்டும். ஆனால் அவர்கள் “”நேற்று” என்று சொல்லியதிலிருந்தே நாள் பஜ்ரிலிருந்து ஆரம்பிக்கிறது என்பது உறுதியாகிறது. இன்றும் சுன்னத் ஜமாஅத்தினர் ரமழான் இரவுகளில் சொல்லிக் கொடுக்கும் பித்அத்தான நோன்பு நிய்யத்தில் “”நாளைப் பிடிக்க நிய்யத் செய்கிறேன்” என்றே சொல்லிக் கொடுக்கிறார்கள். நாள் மஃறிபிலிருந்து ஆரம்பித்து முதலில் இரவு அடுத்துப் பகல் என்றால் “”இன்று பிடிக்க நிய்யத் செய்கிறேன்” என்றே சொல்லிக் கொடுக்க வேண்டும். இதிலிருந்து இன்னொரு உண்மையும் வெளிப்படுகிறது. மத்ஹபுகள் கற்பனை செய்யப்பட்ட ஆரம்பக் காலக் கட்டத்தில் கூட நாள் மஃறிபிலிருந்து ஆரம்பிக்கிறது என்ற யூதமதக் கலாச்சாரம் முஸ்லிம்களிடையே நுழையவில்லை. அதன் பின்னரே யூதக் கைக்கூலிகளான இம்மத குருமார்களால் நாள் மஃறிபிலிருந்து ஆரம்பிக்கிறது என்ற மாற்றுமத யூதக் கலாச்சாரம் முஸ்லிம்களிடையே சுயநலத்துடன் நுழைக்கப்பட் டிருக்கிறது என்பது குன்றிலிட்ட தீபமாக விளங்குகிறது. ஆனால் மவ்லவிகள் விளங்க மாட்டார்கள்.
இதற்கெல்லாம் மேலாக நாள் காலை பஜ்ரில் ஆரம்பிக்கிறது. முதலில் பகல் அதன் பின்னரே இரவு என்பது பகலில் அரஃபா மைதானத்தில் தங்கி இருக்கத் தவறியவர்கள் அன்றைய பகலின் பின்னால் வரும் இரவில் அரஃபாவில் தங்கினாலும் அவர்களது ஹஜ் நிறைவேறிவிடும் என்ற நபி(ஸல்) அவர்களின் ஆதாரபூர்வமான செய்தியாகும்.
இந்த அனைத்துப் பிரிவுகளின் மவ்லவிகள் சொல்வது போல் நாள் மஃறிபில் ஆரம்பித்து மஃறிபில் முடிவதாக இருந்தால், அதாவது முதலில் இரவு பின்னர் பகல் என்றிருக்குமானால் அரஃபா பகல் பொழுது கழிந்து வரும் இரவு 9ம் நாளின் அதாவது அரஃபாவின் இரவாக இருக்க முடியாது. அது பத்தாம் நாளின் இரவாகவே இருக்க முடியும். 10 நாளின் இரவில் தங்குவது மூலம் அரஃபா இரவில் தங்கிய பலனோ அதனால் ஹஜ் நிறைவேறும் பாக்கியமோ கிடைக்குமா என நடுநிலையுடன் சிந்தியுங்கள்.
அப்போது உங்களுக்குப் புரிய வரும், இந்த மூட முல்லாக்கள் சொல்வது போல் நாள் மஃறிபில் ஆரம்பிக்காது; முதலில் இரவு அடுத்து பகல் என்ற நிலை இல்லை. மாறாக நாள் பஜ்ரில் ஆரம்பித்து பஜ்ரில் முடிகிறது. முதலில் பகல் அதன் பின்னரே இரவு. அதனால்தான் அரஃபா பகலில் அரஃபாவில் தங்கத் தவறியவர்கள் அரஃபா பகலுக்குப் பின்னர் வரும் அரஃபா இரவில் அரஃபாவில் தங்கினாலும் ஹஜ் நிறை வேறிவிடும் என்று நபி(ஸல்) அவர்கள் முறையாகத்தான் கூறியுள்ளார்கள் என்பதும் புரியும்.
இதற்கெல்லாம் மேலாக நபி(ஸல்) அவர்கள் ஒவ்வொரு வருடமும் ரமழானில் இஃதிகாஃபை பஜ்ரில் ஆரம்பித்து பஜ்ரில் முடித்தது நாள் பஜ்ரில் ஆரம்பித்து பஜ்ரில் முடிகிறது என்பதற்கு மிகப் பெரிய ஆதாரமாக இருக்கிறது என்பது திட்டமாகத் தெளிவாகப் புரிகிறது. ஆனால் மவ்லவிகள் புரிய மாட்டார்கள். அவர்களது மமதை, ஆணவம், திமிர் அவர்களை சத்தியத்தை -உண்மையை-நேர்வழியை ஒப்புக் கொள்ள இடம் தராது. அபூ ஜஹீலை நேர்வழியை ஒப்புக் கொள்ளவிடாது தடுத்தது அவனது ஆணவமும், திமிரும், மமதையும் தானே. இந்த மவ்லவிகளின் பிடியிலிருந்து விடுபட்டு நேரடியாக குர்ஆன், ஹதீஸைப் படித்துச் சிந்தித்து விளங்குகிறவர்களே பாக்கியசாலிகள்.
இந்த மவ்லவிகள் உண்மையை ஒப்புக் கொள்வது ஒருபுறம் இருக்கட்டும். 9:34ல் அல்லாஹ் சொல்வது போல் மக்களை நேர்வழியிலிருந்து தடுக்க எப்படிப்பட்ட ஈனத்தனமான கருத்துக்களைச் சொல்லி மக்களை ஏமாற்றி வஞ்சிக்கிறார்கள் தெரியுமா?
நாள் பஜ்ரில் ஆரம்பித்து பஜ்ரில் முடிகிறது என்பதற்கு இத்தனை குர்ஆன், ஹதீஸ் ஆதாரங்களைக் கொடுத்திருக்கிறோம். யூத மதக் கலாச்சாரத்தைப் பின்பற்றி காலையில் உதித்து மாலையில் மறையும் 3ம் பிறையை பிறை பிறந்து விட்டது என்றும் நாள் ஆரம்பித்து விட்டது, மாதம் துவங்கிவிட்டது என்றும் கூறு வதைத் தவிர அதாவது யூதமதக் கலாச்சாரத்தைப் பின்பற்றுவதைத் தவிர வேறு குர்ஆன், ஹதீஸ் ஆதாரம் இந்த மவ்லவிகளிடம் இல்லை. அதற்கு மாறாக சம்பந்தமில்லாத ஹதீஸ்களுக்குச் சுய விளக்கம் கொடுத்து நாள் மஃறிபில் ஆரம்பிக்கிறது எனக் கூறி தங்கள் பக்தர்களை ஏமாற்றி வஞ்சிக்கிறார்கள்.
பேரீத்தம் பழத்தை நீரில் ஊற வைத்தால் எத்தனை நாட்களுக்கு மதுவாகாமல் குடிக்கத் தகுதியுள்ளதாக இருக்கும் என்ற ஹதீசுக்கும் நாள் ஆரம்பிப்பதற்கும் எவ்விதச் சம்பந்தமும் இல்லை. அந்த ஹதீஸைக் கொண்டு நாள் ஆரம்பிப்பதை நிரூபிக்க முற்படுவதை விட மடமை ஒன்றிருக்க முடியாது. அந்த ஹதீஸிலும் லைலத்-நாள் என்றிருப்பதை இரவு என மூடத்தனமாக மொழிபெயர்த்துக் கொண்டு,
“”திங்கள் நாளில் நீரில் பேரீத்தம் பழத்தை ஊறவைத்து, திங்கள் செவ்வாய் அஸர் வரை அருந்துவார்கள்” (முஸ்லிம் 3740) என்றிருப்பதை “”திங்கள் இரவில் நீரில் பேரீத்தம்பழத்தை ஊற வைத்து திங்கள், செவ்வாய் அஸர் வரை அருந்துவார்கள்” என்று தவறாக மொழி பெயர்த்துக் கொண்டு திங்கள் இரவில் ஊற வைத்ததை திங்கள் அன்று அருந்துவதாக இருந்தால், நாள் மஃறிபில்தானே ஆரம்பிக்கிறது என்ற முடக்கு வாதத்தை எடுத்து வைக்கின்றார். ததஜ தலைமை இமாம்(?).
நபிதோழர்களின் கூற்றுக்களை மார்க்க ஆதாரமாக எடுக்கக் கூடாது என வாதிடும் ததஜ நவீன இமாம்(?) ஒரு நபி தோழரின் கூற்றை பெரிய ஆதாரமாகத் தருவதோடு, அதில் வரும் லைலத்-நாள் என்ற பதத்தை இரவு என மொழி பெயர்த்துப் பித்த லாட்டம் செய்து நாள் மஃறிபிலிருந்து ஆரம்பிக்கிறது என்ற யூத மாற்று மதக் கலாச்சாரத்தை முஸ்லிம்களிடையே திணிக்க முற்பட்டுள்ளார். அவர் நாள் மஃறிபிலிருந்து ஆரம்பிக்கிறது என்பதை நிலைநாட்ட எடுத்து வைத்துள்ள அத்தனை வாதங்களும் இப்படிப்பட்டத் திருகுதாளங்களே அல்லாமல் நேரடி குர்ஆன், ஹதீஸ் ஆதாரங்கள் அல்ல.
“அல் அவாம் கல் அன்ஆம்” பாமர மக்கள் ஆடு, மாடு போன்ற கால்நடைகளுக்கு ஒப்பாவார்கள் என்று இம்மதகுருமார்கள் இழித்துப் பழித்துப் பேசும், முஸ்லிம் பொதுமக்களே நீங்கள் இந்த மதகுருமார்களை வழிகாட்டிகளாகக் கொண்டு அவர்கள் கூறும் குர்ஆன், ஹதீஸுக்கு முரண்பட்ட கருத்துக்களை-சட்டங்களை கண்மூடி வேதவாக்காக ஏற்று நடப்பதால்தான், இம்மதகுருமார்கள் உங்களை ஐயறிவு மிருகங்களான ஆடு மாடுகளுக்கு ஒப்பிட்டு உங்களை இழிவு படுத்துகிறார்கள்.
39:17,18 இறைக் கட்டளைகளுக்கு முற்றிலும் அடிபணிந்து தாஃகூத்களான இம்மவ்லவிகளை 9:31படி வணங்குவதை விட்டும் தவ்பா செய்து, அவர்களை விட்டும் முற்றிலும் விலகி அல்லாஹ்வின்பால் 2:186படி முன்னோக்குங்கள். குர்ஆன், ஆதாரபூர்வமான ஹதீஸ்களைப் பற்றிப் பிடியுங்கள். அப்படி நீங்கள் நடந்தால் அல்லாஹ்வின் நன்மாராயம் உங்களுக்குக் கிடைக்கும். அப்படிப்பட்டவர்களுக்குச் சுப சோபனம் கூற அல்லாஹ் கட்டளையிடுகிறான்.
கண்மூடித்தனமாக தாஃகூத்களான எந்த மவ்லவியின் பின்னாலும் செல்லாமல், அவரது பேச்சை மட்டும் கேட்காமல், அவரது எழுத்தை மட்டும் பாராமல், பலரது அறிவுரைகளைக் கேட்டும், பலரது எழுத்துக்களைப் பார்த்தும் அவற்றில் குர்ஆன், ஹதீஸுக்கு உட்பட்ட அழகானவற்றை எடுத்து நடக்க முன்வாருங்கள். அவர்களையே அல்லாஹ் நேர்வழியில் செலுத்துவதாக உத்திரவாதம் அளிக்கிறான். அவர்களே நல்லறிவுடையோர் எனப் புகழாரம் சூட்டுகிறான். மேற்படி 39:17,18 இறைவாக்குகளை மீண்டும் மீண்டும் படித்து உங்கள் நெஞ்சங்களில் நன்கு பதியவைத்துக் கொள்ளுங்கள். அதன்படி நடக்க முன்வாருங்கள். அதுவே உங்களை வெற்றியடையச் செய்யும்.
7:3, 33:36, 59:7, 18:102-106, 2:186, 50:16, 56:85 இறை வாக்குகளை தன்னம்பிக்கையுடன் சுயசிந்தனையுடன் நீங்கள் படித்துப் பார்த்தால் தாஃகூத்களான இம்மவ்லவிகளான மதகுருமார் களை அல்லாஹ்வுக்கும் உங்களுக்குமிடையில் இடைத் தரகர்களாகக் கொள்வது அல்லாஹ்வுக்கு இணைவைக்கும் பெருங்குற்றம் என்பதை நீங்களே அறிவீர்கள். அதற்கு மாறாக இந்த மவ்லவிகள் பின்னால் கண்மூடிச் சென்றால் நாளை மறுமையில் நெருப்பில் வெந்துகொண்டு வேதனை தாங்காமல் இந்த மவ்லவிகளைச் சபித்துச் சாபமிடப் போகிறீர்கள் என்பதை 33:66, 67,68 இறைவாக்குகளைப் படித்து உறுதிச் செய்து கொள்ளுங்கள். அல்லாஹ் பாதுகாப்பானாக.
இந்த மவ்லவிகளிடமிருந்து 39:17,18 இறைக் கட்டளைகள்படி விடுபட்டு நேரடியாக குர்ஆன், ஹதீஸைப் படித்துச் சிந்திக்க ஆரம்பித்தால், பிறையைக் கண்ணால் பார்ப்பது மார்க்கம் அல்ல; இபாதத் அல்ல. சூரிய ஓட்டத்தைக் கடிகாரம் மூலம் பார்ப்பது போல் சந்திர ஓட்டத்தைக் கணினி மூலம் பார்க்க முடியும். அது குர்ஆன், ஹதீஸுக்கு முரண் அல்ல. காலையில் கிழக்கில் உதித்து மாலையில் மேற்கில் மறையும் கண்ணுக்குத் தெரியும் 3ம் பிறையை முதல் பிறையாகக் கொள்ள நபி(ஸல்) கற்றுத்தர வில்லை. பிறை பிறந்து விட்டதாகவும் மாதம் பிறந்து விட்டதாகவும், நாள் மஃறிபில் ஆரம்பிப்பதாகவும் நபி(ஸல்) கற்றுத் தரவில்லை. இவை அனைத்தும் மாற்று மதக் கலாச்சாரமான யூத மதக் கலாச்சாரத்தின் அடிப்படையில் அமைந்தவை என்பதை நீங்களே உணர்வீர்கள். மாற்று மதக் கலாச்சாரப்படி நடப்பவர்கள் அவர்களைச் சார்ந்தவர்களே என்ற நபி(ஸல்) அவர்களின் கடுமையான எச்சரிக்கையையும் உணர்ந்து இந்த யூத மதக் கலாச்சார மூடநம்பிக்கையிலிருந்து விடுபட வழி பிறப்பதோடு, சமுதாயம் மூன்று பிரிவினராகி மூன்று நாள்கள் பெருநாள் கொண்டாடும் தீய நிலை மாறி ஒரே நாளில் ஜும்ஆ தொழுவது போல் ஒரே நாளில் பெருநாள் கொண்டாடும் சமுதாய ஒற்றுமைக்கும் வழி பிறக்கும். அல்லாஹ் அருள்புரிவானாக.