விமர்சனங்கள்! விளக்கங்கள்!!

in 2011 நவம்பர்,விமர்சனங்கள்! விளக்கங்கள்!!

அல்லாஹ்வுக்கு மட்டுமே சொந்தமான பெருமை,கண்ணியம் இவற்றை அபகரிப்பவர்கள் மதகுருமார்கள்!

அன்புச் சகோதரர் M.A.அப்துல் வதூது அவர்களுக்கு, அபூ அப்தில்லாஹ் எழுதியது,

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)

எல்லாம் வல்ல ஏகன் அல்லாஹ் தனது இறுதி நெறிநூல் குர்ஆனில் எதை நேர்வழியாக
அறிவித்துள்ளானோ அந்த நேர்வழியை முறையாகவும் சரியாகவும் அறிந்து அதன்படி நடந்து
ஈருலகிலும் வெற்றிபெற, எனக்கும், உங்களுக்கும், அனைத்து முஸ்லிம்களுக்கும் அருள்
புரிவானாக. இது 7:3, 33:21,36, 59:7 இறைக் கட்டளைகள்படி பிடரி நரம்பை விட சமீபமாக
இருக்கும் (50:16) அல்லாஹ்வுக்கும் தங்களுக்குமிடையில் 2:186க்கு அடி பணிந்து
யாரையும் இடைத் தரகர் ஆக்காமல், 67:2 இறைக் கட்டளைப்படி இவ்வுலக வாழ்க்கையை பரீட்சை
வாழ்க்கையாக ஒப்புக் கொண்டு யாரையும் காப்பி அடிக்காமல் குர்ஆன், ஹதீஸை விளங்கி
அதன்படி நடப்பவர்களுக்கே சாத்தியமாகும். பரீட்சையில் காப்பி அடிப்பது போல் 4:49,
53:32 இறை வாக்குகளுக்கு முரணாக தங்களைத் தாங்களே மவ்லவிகள்-ஆலிம்கள், மார்க்க
அறிஞர்கள் எனப் பீற்றும் மதகுருமார்களின் கற்பனைக் கட்டுக்கதைகளை வேதவாக்காகக் கண்
மூடி பின்பற்றுகிறவர்களுக்கு வாழ்க்கைப் பரீட்சையில் வெற்றி பெற்று அல்லாஹ்வின்
பொருத்தத்துடன் சுவர்க்கம் நுழையும் பாக்கியம் ஒருபோதும் கிடைக்காது என்பதை
18:102-106, 33:66-68 இறைவாக்குகளைச் சுய சிந்தனையுடன், நடுநிலையுடன் படித்து
விளங்குகிறவர்கள் ஒப்புக்கொள்ளவே செய்வார்கள்.

தெற்கே கன்னியாகுமரி செல்லும் ரயிலில் ஏறி அமர்ந்து கொண்டு பிரயாணம் முழுக்க ஒரு
வினாடியும் வீணாக்காமல் தொழுது, தொழுது, அழுது அழுது “”யா அல்லாஹ் என்னைப்
பத்திரமாக வடக்கே சென்னை கொண்டு சேர்ப்பாயாக” என்று விடாது துஆ கேட்டாலும் அந்த
தொழுகையின் மகிமையால் துஆவின் மகிமையால் ஒருபோதும் அந்த ரயில் சென்னையை சென்றடையாது
என்பதை மறுப்பவர் உண்டா? அதேபோல் 7:3, 33:36,66-68, 59:7, 2:213, 16:44, 64, 2:134,
141 மற்றும் முன்னோர்கள், மூதாதையர்களைப் பின்பற்றுவது நரகிற்கு இட்டுச் செல்லும்
என்று கூறும் எண்ணற்ற குர்ஆன் வசனங்களுக்கு முரணாக இமாம்கள், அவுலியாக்கள்,
சாதாத்துகள், அகா பிரீன்கள், ஸலஃபுஸ்ஸாலிஹீன்கள் போன்ற முன்னோர்கள், மூதாதையர்கள்
பெயரால் நரகிற்கு இட்டுச் செல்லும் ரயிலில் அமர்ந்து கொண்டு வாழ்நாள் முழுதும்
விடாமல் தொழுது, நோன்பு நோற்று, ஜகாத் கொடுத்து, தான தர்மம் செய்து, ஹஜ் செய்து
இன்னும் பல நற்கருமங்கள் செய்து அழுதழுது அல்லாஹ்விடம் துஆ செய்தாலும், அவர்களது
அமல்கள் நாளை மறுமையில் நிறுக்கப்படாது, அவர்களின் அந்த ரயில் சுவர்க்கம் செல்வதற்கு
மாறாக நரகையே சென்றடையும் என்ற உண்மையை 7:3, 33:36, 66,67,68, 18:102-106
இறைவாக்குகளை நேரடியாக, சுய சிந்தனையுடன் படித்து அறிகிறவர்கள் மறுக்க மாட்டார்கள்.

மவ்லவிகள், ஆலிம்கள், அல்லாமாக்கள், மார்க்க அறிஞர்கள் என்ற பெயரால் ஒரு தனிப்பிரிவு
இஸ்லாத்தில் இல்லவே இல்லை; முஸ்லிமான ஒவ்வொரு ஆணும், பெண்ணும் தனக்குத் தெரிந்ததை
மற்றவர்களுக்கு எடுத்துச் சொல்லியும், தனக்குத் தெரியாததை 16:43, 21:7 இறைக்
கட்டளைப்படி குர்ஆன், ஹதீஸை அறிந்தவர்களிடம் கேட்டு அறிந்துகொள்ளவும் வேண்டும்
என்பதை 103:1-3, 9:71, 3:104,110 ஆகிய இறைவாக்குகளை நேரடியாகப் படித்து
விளங்குகிறவர்கள் ஒப்புக் கொள் வார்கள். அதிலும் குறிப்பாக 36:21 இறைவாக்குக்
கண்டித்துக் கூறுவது போல் மார்க்கத்தைப் பிழைப்பாக-தொழிலாகக் கொண்டு
கூலிக்கு-சம்பளத்திற்குக் கடமையான மார்க்கப் பணி புரிகிறவர்கள் ஒருபோதும்
நேர்வழியில் இருக்க முடியாது என்று உறுதிப்படுத்துகிறது.

கடமையான மார்க்கப் பணியை ஒருபோதும் பிழைப்புக்குரிய வழியாக ஆக்கக் கூடாது. அது
உலகின் அனைத்து வழிகேடுகளுக்கும், மூடச் சடங்கு சம்பிரதாயங்களுக்கும், தீவிரவாதம்,
வன் முறை போன்ற அடாத செயல்களுக்கும், பித்அத், குஃப்ர், ஷிர்க் போன்ற தன்னந்தனியனான
இறைவனுக்கு, இடைத்தரகர்களைப் புகுத்தி அல்லாஹ்வுக்கு இணைவைக்கும் கொடிய செயல்களுக்கு
வழி வகுக்கிறது என்பதை சுமார் 50 குர்ஆன் வசனங்கள் உறுதிப்படுத்துகின்றன.

இவை அனைத்தையும் உள்ளத்தில் உள் வாங்கிக் கொண்டு உங்களது கடிதத்தில் உள்ள
விமர்சனங்களை ஆராய்வோம். உண்மையில் உங்களுக்கு என்னை நேர்வழிப்படுத்த வேண்டும்,
அல்லது நீங்கள் தெளிவு பெற வேண்டும் என்ற நல்லெண்ணம் இருந்தால் நான்கு வருடங்களுக்கு
முன்னர் 11.04.2008-ல் நீங்கள் இக்கடிதத்தை நேரடியாக எனக்கே எழுதியிருப்பீர்கள்.
உண்மையான உங்களது நோக்கம் அபூ அப்தில்லாஹ் மவ்லவி அல்ல; அரபியைச் சரியாக உச்சரிக்கவே
அவருக்குத் தெரியவில்லை. அவர் எப்படி மார்க்கம் சொல்லத் தகுதி பெறுவார்? என்று
மக்களிடையே செய்தி பரப்பி, நாம் கூறும் குர்ஆன், ஹதீஸ் கருத்துக்கள் மக்களிடையே
செல்லாமல் தடுக்க வேண்டும் என்பதே உங்களின் அசல் குறிக்கோள்.

அதனால்தான் கடிதத்தை எனக்கு எழுதாமல்,IIMக்கு எழுதி அதை உலகமெங்கும் பரப்பி
வருகிறீர்கள். உங்களின் இந்த முயற்சி, மவ்லவிகள் மட்டுமே வழிகாட்டிகள், அவர்களின்
கற்பனைக் கட்டுக்கதைகளே வேதவாக்குகள் எனக் கண்மூடி(தக்லீது) செயல்படும்
முஸ்லிம்களிடம் எடுபடுமே அல்லாது, அபூ அப்தில்லாஹ்வாகிய என்னையோ, மவ்லவிகள்,
ஆலிம்கள், அல்லாமாக்கள் என 4:49, 53:32 இறைக் கட்டளைகளை நிராகரித்து 2:39 இறைக்
கட்டளைப்படி குஃப்ரிலாகி தங்களைத் தாங்களே பீற்றிக் கொள்ளும், ஆணவம், அகந்தை பேசும்
மதகுருமார்களையோ நம்பாமல், நேரடியாக குர்ஆனை தங்களுக்குத் தெரிந்த
மொழிபெயர்ப்புகளைப் படித்து விளங்கி நடப்பவர்களிடம் கால் காசும் பெறாது என்பதாலேயே
IIMக்கு நீங்கள் எழுதிய கடிதத்தை நாம் பொருட்படுத்தவில்லை.

இப்போது L.K.S.குடும்ப சகோதரர் அப்துல் காதரிடம் கொடுத்து என்னிடம் ஒப்படைத்து
இதற்கு பதில் பெற்றுத் தருமாறு கேட்டிருப்பதால் உங்கள் கடிதத்திற்கு பதில்
அந்நஜாத்திலேயே தரப்படுகிறது. மவ்லவிகளின் வசீகரப்பிடியிலுள்ள அல்லாஹ் நாடும் ஒரு
சிலருக்காவது உண்மையை உணர இது வழி வகுக்கும் என அல்லாஹ்விடம் நம்பிக்கை வைக்கிறேன்.
எல்லாம் வல்ல அல்லாஹ் நேர்வழியை அறிந்து அதன்படி நடந்து வெற்றி பெறும் சிறு கூட்டத்தில் அந்தத் தேட்டத்தோடு உழைப்பவர்களுக்கு அருள் புரிந்து இணைத்தருள்வானாக.

உங்களது பிரதான குற்றச்சாட்டு நான் மவ்லவி அல்ல, அரபியைச் சரியாக உச்சரிக்கத்
தெரியவில்லை என்பதுதான். அதனால் மார்க்கம் சொல்லும் தகுதி எனக்கில்லை என்பது தான்.
இதற்கு நான் உங்களைக் குறை சொல்லமாட்டேன். பல வருடங்களாகத் தெண்டச் சோறு கொடுத்து,
இலவசமாகத் தங்க வைத்து உங்கள் மண்டையில் நேரடியாக குர்ஆன், ஹதீஸ் போதனையை ஏற்றாமல்,
யூதக் கைக்கூலிகளான முன் சென்ற மதகுருமார்கள், மரியாதைக்குரிய இமாம்களின் பெயரால்
அவர்களுக்குச் சுமார் 200 ஆண்டுகள் கழித்து கற்பனை செய்தக் கட்டுக்கதைகளை “பிக்ஹு’
சட்டங்கள் என்ற பெயரால் உருப்போட வைத்த பித்அத்தான மதரஸாக்களையே குறை சொல்ல
வேண்டும்.

இப்போது குர்ஆன் என்ன சொல்கிறது என்று பாருங்கள்!

அவன்தான், எழுத்தறிவில்லாத மக்களிடம் அவனுடைய வசனங்களைப் படித்துக் காட்டி,
அவர்களைத் தூய்மையாக்கி, அவர்களுக்கு நெறி நூலையும், ஞானத்தையும் கற்பிக்கும் தூதரை
அவர்களிலிருந்தே அனுப்பி வைத்தான். அவர்களோ அதற்கு முன்னர் பகிரங்க வழி கேட்டிலேயே
இருந்தனர். (அல்ஜுமுஆ 62:2)

( மேலும் பாருங்கள்: 7:157,158 )

அன்று அரபி மொழியில் கரைகண்ட, இலக்கண, இலக்கியத்தில் புலிகளான, அரபி பண்டிதர்கள்,
கவிஞர்கள் என அரபு மக்களால் வானளாவ உயர்த்தப்பட்ட அன்றைய ஜ.உ.சவான தாருந் நத்வா அரபி
விற்பன்னர்களும், அச்சபையின் தலைவனும், அபுல் ஹிக்கம்-ஞானத் தந்தை என அம் மக்களால்
போற்றப்பட்டவனும் இருக்க, போயும் போயும் அல்லாஹ் எழுதப்படிக்கத் தெரியாத, ஆடு
மேய்த்த முஹம்மது(ஸல்) அவர்களை ஏன் தனது தூதராகத் தேர்ந்தெடுத்தான் என்று
என்றைக்காவது சிந்தித்தீர்களா? அது மட்டுமா? ஆதம்(அலை) அவர்களது காலத்திலிருந்து
இறுதி நபி வரை அல்லாஹ் தேர்ந்தெடுத்த பல்லாயிரக்கணக்கான நபிமார்களும் உங்களால்
அவாம்கள் என அழைக்கப்படும் சாதாரண மக்களிலிருந்தே என்பதையும், கல்விமான்கள்,
கற்றறிந்தோர் என பெருமை பேசிய மதகுருமார்களிலிருந்து நபிமார்கள் ஏன்
தேர்ந்தெடுக்கப்பட வில்லை என்பதையும் என்றாவது சிந்தித்தீர்களா? இல்லையே!

அப்படி நீங்கள் சிந்தித்திருந்தால் மார்க்கப் பணிக்கு கற்றறிந்த மேதைகள் என பெருமை
பேசும் மதகுருமார்கள் சிறிதும் அருகதையற்றவர்கள் என்பதை நீங்களும்
புரிந்திருப்பீர்கள். அந்த அறிவு உங்களுக்குச் சிறிதும் இல்லாத காரணத்தால்தான் அன்று
அபூஜஹீல் வைத்த அதே ஆணவ வாதத்தை இன்று நீங்கள் வைக்கிறீர்கள்.

அன்று கஃபத்துல்லாஹ்வின் உச்சியில் நின்று தொழுகைக்காக அழைப்பு விடுத்த பிலால் (ரழி)
அவர்களும் அவர்களைச் சார்ந்த அடிமைகளான அபிசீனிய ஹபஷிகளும், அரபியை சரியாக
உச்சரிக்கத் தெரியாதவர்கள் என்ற உண்மையாவது உங்களுக்குத் தெரியுமா? அன்று
பிலால்(ரழி) கஃபா உச்சியில் நின்று பாங்கு சொன்னதைப் பார்த்த குறைஷ் காஃபிர்கள்
வயிறெரிந்து, “”இந்த கண்றாவிக் காட்சியைப் பார்க்காமல் இறந்துபோன நமது முன்னோர்கள்
பாக்கியம் செய்தவர்கள்” என்று உளறினார்களே அதே உளறலையே இன்று நீங்கள் எழுத்து
வடிவில் தந்துள்ளீர்கள். உங்களின் அறியாமைக்கு வருந்துகிறேன்.

எழுதப் படிக்கத் தெரியாத மக்களிலிருந்தே இறுதித் தூதரைத் தேர்ந்தெடுத்து,
அவர்களுக்கு வஹீ மூலம் கிடைத்த குர்ஆனை படித்துக் காட்டி, அதன் மூலம்
இறைக்கட்டளைகளையும், ஞானத்தையும் போதித்து அப்பாமர மக்களை நேர்வழியிலாக்கினார்கள்;
அதற்கு முன்னர் அம்மக்கள் பகிரங்க வழிகேட்டிலேயே இருந்தனர் என்று அல்லாஹ் மண்டையில்
சம்மட்டியால் ஓங்கி அடிப்பது போல் அறைந்திருந்தும் அதை உங்களால் உணர முடியவில்லை
என்றால் உங்களின் மவ்லவி என்ற தற்பெருமை உங்களின் கண்களை மறைத்திருக்கிறது என்பதை
தற்பெருமை நிலையில் உங்களால் உணர முடியாது.

மவ்லவி, ஆலிம், மார்க்க அறிஞர் என தற்பெருமை கொள்ளும் உங்கள் போன்றோரின் நிலை பற்றி
இறுதித் தூதர்(ஸல்) அவர்கள் தெளிவுபடுத்தியுள்ளார்கள். படித்துப் பாருங்கள்.

“”பெருமைகள் அனைத்தும் என் போர்வையாகும். கண்ணியம் என் கீழாடையாகும். எனவே எவன்
இவ்விரண்டிலிருந்து எதனையும் என்னிட மிருந்து அபகரிக்கிறானோ அவனை நான் வேதனை
செய்வேன்” என்று அல்லாஹ் கூறிய தாக நபி(ஸல்) அவர்கள் தெரிவித்தனர்.
அபூ ஸஈத்(ரழி), அபூ ஹுரைரா(ரழி), முஸ்லிம், திர்மிதி,
(அல்ஹதீஸ் 2320)

அல்லாஹ்வுக்கு மட்டுமே உரிய பெருமைகள், கண்ணியம் இவற்றை மவ்லவிகளாகிய நீங்கள்
எடுக்கவில்லை; அபகரிக்கிறீர்கள். அதனால்தான் மவ்லவிகளை திருடனிலும் கேடுகெட்டத்
திருடர்கள் என மக்களுக்கு அடையாளம் காட்டுகிறோம்!

“”எவனுடைய உள்ளத்தில் அணுவத்தனை பெருமை குடிகொண்டுள்ளதோ அவன் சுவனபதி செல்ல மாட்டான்”
என்று நபி(ஸல்) கூறினர். அப்பொழுது ஒருவர், மனிதன் தன் ஆடை, காலணிகள் அழகாயிருப்பதை
விரும்புகிறானே என்று வினவினார். அதற்கு அவர்கள் “”நிச்சய மாக அல்லாஹ் அழகானவனே!
அழகானதை நேசிக்கிறான். பெருமை என்பது உண்மையை மறுப்பதும், (மற்ற) மனிதர்களை இழிவாக
எண்ணிச் செருக்கடைவதுமாகும்” என்று கூறினர். (இப்னு மஸ்வூத்(ரழி), முஸ்லிம்,
அபூதாவூது, திர்மிதி) (அல்ஹதீஸ் 2321)

அடுத்த ஹதீஸிலும், இவ்வாறு கூறி

“”…….இல்லை; எனினும் பெருமை என்பது உண்மையை மறுப்பதும் மற்ற மனிதர்களை இழிவாகக்
கருதிச் செருக்குறுவதும் ஆகும்” என்று நபி(ஸல்) கூறினர்.

(அபூ ஹுரைரா(ரழி), அபூதாவூத்) (அல்ஹதீஸ் : 2322)

பெருமை அடிப்போர் மறுமை நாளில் சிற்றெறும்புகள் போல் ஒன்று சேர்க்கப்படுவர்; அவர்களை
எல்லா இடங்களிலிருந்தும் இழிவு சூழ்ந்து கொள்வதுடன் அவர்கள் “யூலஸ்’ என்று
கூறப்படும் நரகத்தின் சிறைச்சாலைக்கு அழைத்துச் செல்லப்படுவர். நெருப்பின் சுவாலை
அவர்களுக்கு மேலாக எழுந்து நிற்கும். நரக வாசிகளின் (இரத்தம், உறைந்த இரத்தம், சீல்
இவை கலந்து) “தீனதுல்ஜனால்’ என்னும் சாறு அவர்களுக்குப் புகட்டப்படும் என்று நபி(ஸல்)
கூறினர். (அம்ருப்னு ஷிஐப் தம் தந்தை மூல மாகவும் அவர்தம் பாட்டனார் மூலமாகவும்)
(திர்மிதீ அல்ஹதீஸ் 2323)

மனிதன் தன்னையே தான் புகழ்ந்து உயர்வுபடுத்திக் கொண்டு பெருமை அடித்துக் கொள்வதில்
எப்பொழுதும் ஈடுபட்டுள்ளான். எனவே அவனுடைய பெயரை அநியாயக்காரர்களான
பெருமைக்காரர்கள் என்று (பிர்அவ்ன், ஹாமான், காரூன், நம்ரூது ஆகியவர்களின்
பட்டியலில்) எழுதப்படும். அவர்கள் அடைந்த கேட்டினை இவர்களும் அடைவார்கள் என்று
நபி(ஸல்) கூறினர்.

(ஸல்மதுப்னுல் அக்வஃ (ரழி) திர்மிதீ அல்ஹதீஸ் 2324)

அரபி கற்ற தங்களைக் கற்றறிந்த ஆலிம்கள் மேதைகள் என்று பெருமைப்படுத்தியும் அரபி
கல்லாத மற்றவர்களை அவாம்கள் என இழிவு படுத்தியும் செய்தி பரப்பியும் திரியும்
உங்களின் நிலை நாளை மறுமையில் என்னவாகும் எனச் சிந்தித்து விளங்க முற்படுங்கள்.

ஆதம்(அலை) காலத்திலிருந்து அனைத்து நபிமார்களின் சமுதாயங்களில் திருட்டுத்தனமாகப்
புகுந்து கொண்ட மதகுருமார்கள் அனைவரின் நாளைய முடிவும் இதுதான்!

கற்றவர்கள் அறிந்தவர்கள் எனத் தற்பெருமை கொள்ளும் மதகுருமார்களிலிருந்து நபிமார்களை
அல்லாஹ் ஏன் தெரிவு செய்யவில்லை என்ற உண்மை இப்போதாவது புரிகிறதா? எனவே அரபி மொழி
ஆணவத்தை-தற்பெருமையை உங்களைப் போன்றோர் விட்டொழிக்காதவரை நீங்கள் நேர்வழி பெற
முடியாது என்பதை அறிந்து கொண்டால் அது உங்களுக்கு நன்மை பயக்கும்.

62:2 இறைக் கட்டளைப்படி எழுத்தறிவில்லாத அரபி இலக்கணம், இலக்கியம் தெரியாத பாமர
மக்களுக்காக இறங்கிய குர்ஆனை அன்று அரபி இலக்கண இலக்கிய வாசனையே தெரியாத அந்தப்
பாமர மக்கள் தெளிவாக, எளிதாக விளங்கியது போல், இன்றும் தற்பெருமை இல்லாத பாமரர்கள்
குர்ஆனின் மொழி பெயர்ப்பைப் பார்த்து தெளிவாக, எளிதாக விளங்க முடியும். அதற்கு
மாறாக அரபி இலக்கண, இலக்கியத்தில் கொடிகட்டிப் பறந்த தாருந்நத்வா ஆலிம்களுக்கு
அவர்களின் ஆணவம் காரணமாக குர்ஆனை விளங்க முடியாமல் இருந்தது போல், இன்றும் மவ்லவி
ஆலிம், அரபி மொழி கற்ற மேதைகள் என பெருமை பேசும் மவ்லவிகளால் குர்ஆனில் உள்ளதை
உள்ளபடி விளங்க முடியாது. அவர்களும் வழிகெட்டு பெருங்கொண்ட மக்களையும்
வழிகெடுக்கிறார்கள் என்பதை ஆணவம் கொண்ட மவ்லவிகள் ஒருபோதும் விளங்க மாட்டார்கள்
என்பதே வரலாறு கூறும் உண்மை.

உங்களால் முடிந்தால் அரபி மொழி கற்ற மவ்லவிகளுக்கு இஸ்லாமிய மார்க்கத்தில் அதிகாரம்
உண்டு என்பதற்கு ஒரேயொரு குர்ஆன் வசனத்தையோ அல்லது
ஒரேயொரு ஆதாரபூர்வமான ஹதீஸையோ
தாருங்கள் பார்க்கலாம். அதற்கு மாறாக மவ்லவிகள், ஆலிம்கள், மார்க்கம் கற்ற மேதைகள்
என 4:49, 53:32 இறைக் கட்டளைக்கு முரணாகத் தற்பெருமை பேசும் மதகுருமார்கள்
கொல்லைப்புற இடுக்கு வழியாக, சட்டவிரோதமாக, திருட்டுத்தனமாக முஸ்லிம்களிடையே
நுழைந்து கொண்ட திருடனிலும் கேடுகெட்ட மெகா, மெகா திருடர் கள் என்பதற்கு
குர்ஆனிலிருந்தே பல இறைவசனங்களை 1983லிருந்து கொடுத்துக் கொண்டிருக்கிறோம். உங்களது
ஆணவம்-தற்பெருமை அரபி மொழி கற்றிருந்தும் அந்த குர்ஆன் வசனங்களை விளங்க விடாமல்
உங்களைத் தடுக்கிறது.

இமாம்களும் மார்க்க அறிஞர்களும் குர்ஆன், ஹதீஸிலிருந்து தாங்கள் எடுத்த ஆய்வின்
முடிவை மக்கள் முன் சமர்ப்பிக்கும் போது இறைவனின் நினைவை முன்னிலைப் படுத்தி அவனை
அஞ்சியவர்களாக அல்லாஹ்வே மிக அறிந்தவன். எங்களின் அறிவிற்கு இது சரியாகத்
தெரிகின்றது என்று பணிவுடன் கூறுவார்கள். இவரிடம் அந்த பணிவு இல்லையே! என்று எழுதி
இருக்கிறீர்கள்.

முஹ்க்கமாத் குர்ஆன் வசனங்களும், நடை முறைக்குரிய ஆதாரபூர்வமான ஹதீஸ்களும் பாமர
மக்களும் விளங்கும் நிலையில் மிகத் தெளிவாக, எளிதாக இருக்கும் நிலையில் நாங்கள்
அவற்றை ஆய்வு செய்கிறோம் பேர்வழிகள் எனக் கூறிக் கொண்டு தங்களின் சுய
விளக்கங்களையும், மேல் விளக்கங்களையும் கூறி குர்ஆன் வசனம் 2:159 கூறுவது போல்
அவற்றைத் திரித்து வளைத்து அவற்றின் உண்மைக் கருத்துக்களை மக்களிடம் இருந்து
மறைப்பவர்கள், அல்லாஹ்வே மிக அறிந்தவன் எங்களின் அறிவிற்கு இது சரியாகத் தெரிகிறது
என மழுப்பலாம்.

அவர்கள் சொல்வதுபோல் நாமும் எமது அறிவுக்குச் சரியாகப் படுவதை எடுத்து எழுதி
அவற்றைப் பின்பற்றச் சொன்னால், அவர்கள் கூறுவது போல் நாமும் கூறினால் அதில் அர்த்தம்
இருக்கும். நாமோ எமது சுய கருத்தைப் புகுத்தாமல் அனைத்திற்கும் குர்ஆன் வசனங்களையும்,
ஹதீஸ்களையும் மட்டுமே எடுத்துத் தருகிறோம். அவற்றை குர்ஆனை எடுத்து நேரடியாகப்
பார்த்தும், ஹதீஸ்களைப் பார்த்தும் அவற்றிலிருப்பதை அப்படியே எடுத்து
நடக்கும்படியும், எம்மையோ, அந்நஜாத்தையோ ஒருபோதும் தக்லீது செய்யக் கூடாது என்றல்லவா
தொடர்ந்து கூறுகிறோம். இங்கு எமது சுய ஆய்வுக்கு வேலையே இல்லையே!

அல்லாஹ் மட்டுமே மிக அறிந்தவன் என்பதை குர்ஆன் வசனங்களை எடுத்துக் கொடுத்து,
அவற்றைப் படித்து விளங்கி நடங்கள் என்று சொல்வதே உறுதிப்படுத்தும் போது, சுய
விளக்கங்களை மார்க்கத்தில் புகுத்துகிறவர்கள் போல் நாமும் சொல்ல வேண்டிய அவசியம்
என்ன? அல்லாஹ் மனிதர்களுக்காகவே (ஆலிம்களுக்கு மட்டும் அல்ல) நேரடியாக குர்ஆனில்
கூறியுள்ள கருத்துக்களை 2:159 சொல்வதுபோல் தங்கள் சுய ஆய்வின் மூலம் மறைத்துவிட்டு
“”அல்லாஹ்வே மிக அறிந்தவன்; எங்களின் அறிவிற்கு இது சரியாகத் தெரிகின்றது” என்று
பணிவுடன் கூறிவிட்டால் நாளை மறுமையில் இவர்களை தண்டிக்காமல் அல்லாஹ் விட்டு விடுவான்
என்ற நப்பாசையா? நிச்சயமாகத் தப்ப முடியாது என்பதை 2:159,160,161,162 இறைவாக்குகளை
நீங்களே படித்துப் பார்த்து விளங்கிக் கொள்ளுங்கள்.

குர்ஆன் வசனங்கள் நேரடியாகச் சொல்லும் கருத்துக்களைத் திரித்து மறைத்துச் சொல்வதை
ஆய்வு செய்து சொல்வதாகச் சொல்லி அல்லாஹ்வே மிக அறிந்தவன் என்று சொல்பவர்கள் உண்மையில் அல்லாஹ்வின் அச்சத்தால் அப்படிச் சொல்ல வில்லை. தங்களை நம்பியுள்ள அப்பாவி
மக்களை ஏமாற்றவே அவ்வாறு சொல்கிறார்கள். உண்மையில் அல்லாஹ்வின் அச்சம் இருந்தால்
7:3, 33:36 இறைக்கட்டளைப்படி 7:55, 205, 3:103,105, 6:153,159, 30:32 42:13,14
குர்ஆன் வசனங்கள் கூறும் நேரடிக் கருத்துக்களை மக்களிடம் சொல்வார்களே அல்லாமல்,
சுய விளக்கங்கள் கொடுத்து அவற்றின் நேரடிக் கருத்துக்களை 2:159 இறைவாக்கு கூறுவது
போல் மறைக்க மாட்டார்கள். சமுதாயத்தைப் பிளவு படுத்த மாட்டார்கள்.

தோராய கணிப்பிற்கும், துல்லிய கணக்கீட்டிற்குமிடையேயுள்ள பெரிய வேறுபாட்டை அறியாத
இந்த மவ்லவிகள் 2:51, 7:142, 19:10, 44:3, 97:1-3 ஆகிய 7 இடங்களில் நாள்
என்றிருப்பதை இரவு என மொழி பெயர்க்கும் இந்த மவ்லவிகள் அல்லாஹ்வின் கலாம்-சொல்
குர்ஆனாக இருப்பது போல் அல்லாஹ் வின் ஃபிஅலில் – செயலில் கட்டுப்பட்டவை அண்ட சராசர
கோள்களின் இயக்கம் என்பதை அறியாத இந்த மவ்லவிகள், எவையெல்லாம் மார்க்கத்திற்கு உட்பட்டவை, எவை எல்லாம் மார்க்கத்திற்கு உட்படாதவை என்பதை அறியும் திறனில்லாத இந்த
மவ்லவிகள் தங்களை மெத்தப் படித்த மேதைகள், அரபி பண்டிதர்கள் எனத் தற்பெருமை கொள்வது
எதை உணர்த்து கிறது? அவர்கள் அபூஜஹீலின் வாரிசுகள் என்பதை உணர்த்த வில்லையா?

21:92, 23:52 குர்ஆன் வசனங்களில் அல்லாஹ் வேற்றுமை இல்லா ஒன்றுபட்ட ஒரே சமுதாயம்
என்று கூறி இருக்க, இம்மத குருமார்கள் ஆலிம்-அவாம் என கூறுபோட்டு சமுதாயத்தைப்
பிளவுபடுத்தியதின் விளைவு காலக் கிரமத்தில் பரிணாம வளர்ச்சியின் அடிப்படையில் இந்து
மக்களிடையே ஜாதிப் பிரிவினைகளும், வேற்றுமைகளும் ஏற்பட்டு மனித குலம் எண்ணற்றப்
பிரிவுகளாகப் பிரிந்து சீரழிந்துக் கிடப்பது போல், முஸ்லிம்ளும் சிதறிச் சின்னா
பின்னப்பட்டு நாயிலும் கேடான ஒரு வாழ்க்கை வாழ்ந்து கொண் டிருப்பதை உங்களைப் போன்ற
மவ்லவிகளால் மறுக்க முடியுமா? சொல்லுங்கள்.

சர்வதேச பிறைக்கு ஆதாரம் கேட்கும் உங்க ளிடம் ஆலிம்-அவாம் வேறுபாட்டிற்கும், மத்ஹபுகளுக்கும், தரீக்காக்களுக்கும் குர்ஆன், ஹதீஸ் ஆதாரம் உள்ளதா? எவை மார்க்கத்திற்கு
உட்பட்டவை? குர்ஆன், ஹதீஸ் ஆதாரம் வேண்டும். எவை மார்க்கத்திற்கு உட்படாதவை?
குர்ஆன், ஹதீஸ் ஆதாரம் தேவை இல்லை என்ற சாதாரண அடிப்படை அறிவும் இல்லாத நீங்களா
ஆலிம்கள்?

முதன் முதலாக ஹஜ்ஜுக்கு ஒட்டகத்தில் செல்வதை விட்டு நவீன வாகனங்களில்
செல்வதற்கு ஆதாரம் கேட்ட வர்கள் தான் நீங்கள்!  சூரிய ஓட்டத்தைப் பார்த்துத் தொழுது
கொண்டிருந்ததை விட்டு, கடிகாரம் கண்டு பிடிக்கப்பட்டபின் தொழுகை நேரங்களை அறிந்து
தொழுவதற்கு குர்ஆன், ஹதீஸ் ஆதாரம் கேட்டவர்கள்தான் நீங்கள்! தூரத்து மரணச் செய்தியை
ஆள் நேரில் வந்து சொன்ன பின்னர் செயல்பட்டதை விட்டு தொலைத் தொடர்பு வசதியைப்
பயன்படுத்த முற்பட்ட போதும் குர்ஆன், ஹதீஸ் ஆதாரம் கேட்டவர்கள்தான் நீங்கள்.
இப்படிப் பல நவீன கண்டு பிடிப்புகள் கண்டு பிடிக்கப்பட்டு அவை பயன்பாட்டிற்கு
வந்தபோதெல்லாம் அவற்றிற்கு குர்ஆன், ஹதீஸ் ஆதாரம் கேட்ட வர்கள் தான் நீங்கள்.

அந்த வரிசையில் அன்று நபி(ஸல்) அவர்கள், “”நாம் எழுதுவதையும்,கணக்கிடுவதையும் அறியவில்லை” என்று சொன்னது போல், குர்ஆன் 10:5, 55:5, 17:12, 6:96, 14:33, 13:2,
21:33, 31:29, 39:5 ஆகிய 9 இறைவாக்குகளில் குறிப்பிட்டுள்ள சூரியன், சந்திரன்
பற்றிய துல்லிய கணக்கீட்டு முறை அன்று கண்டுப்பிடிக்கப்படவில்லை. சூரிய கணக் கீட்டு
முறையான கடிகாரம் கண்டுபிடிக்கப்பட்டவுடன் சூரியனைப் பார்ப்பதை விட்டு கடிகாரம்
பார்த்து (ருஃயத்) தொழ ஆரம்பிக்கப்பட்டது, அதேபோல் இன்று சூரியன், பூமி, சந்திரன்
மூன்று கொள்களின் ஓட்டம் துல்லிய கணினி கணக்கீட்டின் மூலம்
(Accurate Computer Calculation) சந்திர மாதம் பிறப்பதைப் பார்த்து (ருஃயத்)
அதன்படி செயல்படு வது குர்ஆனுக்கோ, ஹதீசுக்கோ முரண்பட்ட செயல் அல்ல. இதை
மறுப்பவர்கள் கடிகாரம் பார்த்து தொழுவதையும் மறுக்க வேண்டும். அல்லாஹ் சூரியனும்
சந்திரனும் துல்லிய கணக்கின்படி சுழல்கின்றன என்று தெளிவாக மேலே கண்ட வசனங்களில்
கூறி இருக்க சூரிய கணக்கை ஏற்று, சந்திரக் கணக்கை மறுப்பது குஃப்ரில்-இறை
நிராகரிப்பில் கொண்டு சேர்க்கும் என்பதை அறிய முடியாதவர்கள் ஆலிம்களா? “”நீங்கள்
நெறிநூலில் சிலவற்றை நம்பி சிலவற்றை நிராகரிக்கிறீர்களா? என்று 2:85-ல் அல்லாஹ்
கண்டிப்பது உங்களுக்கு உறைக்கவில்லையா? நிலையான மறுமைக்குப் பகரமாக அற்ப மான
இவ்வுலக வாழ்க்கையை விலைக்கு வாங்கிக் கொண்ட பரிதாபத்திற்குரியவர்கள் இவர்கள்தாம்
என்று 2:86 கூறுவது மவ்லவிகளாகிய உங்கள் போன்றோரின் மண்டையில் உறைக்கவில்லையா?

அறிவியல்(விஞ்ஞானம்) வளர்ச்சி காரணமாக அன்றில்லாமல் இன்று புதிதுபுதிதாகக்
கண்டுபிடிக் கப்படும் மார்க்கத்திற்கு உட்படாத நவீன கருவிகளைப் பயன்படுத்துவதற்கு
குர்ஆன், ஹதீஸ் ஆதாரம் கேட்கும் நீங்கள், மார்க்கத்திற்கு உட்பட்ட விஷயங்களில்,
குர்ஆன், ஹதீஸ் ஆதாரமில்லாத இஜ்மா, கியாஸ் பெயரால் கற்பனை செய்துள்ள மத்ஹபுகள்,
தரீக்காக்கள் அவற்றின் மூலம் கற்பனை செய்யப்பட்டுள்ள தர்கா சடங்குகள், தரீக்கா
சடங்குகள், மீலாது, மவ்லூது, கத்தம், பாத்தியா, இறந்தோரின் பெயரால் 3-ம், 7-ம்,
40-ம் வருட பாத்தியாக்கள்,
ஷபே பராஅத், ஷபே மிஃராஜ், 27ல் லைத்துல் கத்ர், திருமண
சடங்குகள், சுன்னத் கல்யாண சடங்குகள், இத்தியாதி, இத்தியாதி சடங்கு சம்பிரதாயங்களுக்கு குர்ஆன், ஹதீஸ் ஆதாரமிருக்கிறதா? என்று நீங்கள் கேட்டதுண்டா?
ஆராய்ந்ததுண்டா? சொல்லுங்கள். உங்கள் அறிவீனத்தின் ஆழம் இன்னுமா உங்களுக்குப்
புரியவில்லை?

 

சர்வதேச பிறை என்ற தலைப்பை எந்த அடிப் படையில் எடுத்தீர்கள்? என்று
கேட்டிருக்கிறீர்கள்.

அன்று சந்திர சுழற்சியின் கணக்குத் தெரியாததாலும், தொலைத் தொடர்பு வசதி
இல்லாததாலும் அந்தந்த ஊர் மக்கள் அவரவர்கள் ஊர்களில் பிறையைப் பார்த்து மாதம்
பிறப்பதை அறியும் கட்டாயத்தில், நிர்பந்தத்தில் இருந்தனர். எந்த ஆத்மாவையும் அதன்
சக்திக்கு மீறிச் சோதிப்பதில்லை என அல்லாஹ் பல இடங்களில் குர்ஆனில் கூறியுள்ளான்.
அன்றைய நிலைக்கு அது ஒன்றுதான் வழி. ஆனால் இன்றோ தகவல் தொடர்பு வசதிகளோடு சந்திர
ஓட்டத்தின் துல்லியக் கணக்கையும் அல்லாஹ் நமக்குத் தந்துள்ளான். எனவே அன்று ஊர்
ஊருக்குத் தனித்தனிப் பிறையாக இருந்த நிலை மாறி இன்று உலக மக்கள் அனைவருக்கும் ஒரே
தலைப்பிறை-சர்வதேச பிறை என்று கொள்வதில் என்ன தவறைக் கண்டீர்கள்?

மேலும் குர்ஆன் 2:189, 6:69, 9:36, 10:5, 36:39 வசனங்களும், மாதம் 29 அல்லது 30
நாட்களைக் கொண்டது என்ற ஹதீஸும் என்ன உணர்த்துகின்றன? அல்லாஹ் 36:39ல் கூறும்
மன்ஜில்கள் 29 அல்லது 30 நாட்களை மட்டுமே குறிக்கின்றன. தலைப்பிறை இரண்டு நாளோ,
மூன்று நாளோ வந்து மன்ஜில்களின் எண்ணிக்கை 30-ஐ தாண்டவே தாண்டாது என்ற சாதாரண
அறிவும் மவ்லவிகளாகிய உங்களுக்கு இல்லையா?

உலகில் காணப்படும் அனைத்துக் கொள்கையுடையவர்களின் நாள்காட்டி
(Calendar) களில்
ஒரு நாள், ஒரு தேதி, ஒரு கிழமை 24 மணிநேரம் மட்டுமே இருக்கும் என்று உலக மக்கள்
அனைவருமே ஏகோபித்து ஒப்புக் கொண்டிருக்கும் நிலையில், சு.ஜ. மவ்லவிகளாகிய
உங்களுக்கும், ததஜ தலைமை இமாம்(?)க்கும் மட்டும் தலைப்பிறை 2 நாள் 48 மணிநேரம், 3
நாள் 72 மணி நேரம் வரும் என்ற நிலைப்பாடு பகுத்தறிவு ஏற்றுக் கொள்ளும் கூற்றா?
36:39 இறைவாக்கு கூறும் மன்ஜில்கள் சரிகாணும் கூற்றா? என்பதை விளங்க முடியாத நீங்கள்
ஆலிம்களா? அறிந்தவர்களா? சொல்லுங்கள்.

உலகம் முழுவதும் கிழக்கிலிருந்து மேற்கு வரையுள்ள முஸ்லிம்கள் அனைவரும்
(24.11.1432) (21.10.2011) வெள்ளிக்கிழமை 24 மணி நேரத்திற்குள் ஜுமுஆ தொழுது
முடித்து விடுகிறார்கள். வெள்ளி, சனி என்று 48 மணி நேரமும், வெள்ளி, சனி, ஞாயிறு
என்று 72 மணி நேரமும் ஒருபோதும் தொழுவதில்லை. அதேபோல்
ஷவ்வால் முதல் பிறை முதல்
நாள் 24 மணி நேரத்திற்குள் உலகம் முழுக்க முஸ்லிம்கள் பெருநாள் தொழுகை தொழுது
முடித்து விட வேண்டும். ஒரு நாளைக்குரிய
ஷவ்வால் முதல் தேதிக்குரிய பெருநாள் தொழுகை
இரண்டு நாள் 48 மணி நேரம், மூன்று நாள் 72 மணி நேரம் ஒரு போதும் வர முடியாது என்று
கூறுவது குர்ஆன் ஹதீஸுக்கு உட்பட்டக் கருத்தா? முரண்பட்டக் கருத்தா? சொல்லுங்கள்.

எனது உரையில் சொன்னதாக 10 விடயங்களைப் பட்டியலிட்டுள்ளீர்கள். மவ்லவிகளாகிய நீங்களும், உங்களைக் கண்மூடிப் பின்பற்றும் முகல்லி துகளும் இந்த 10 விடயங்களையும் ஏற்க
மாட்டீர்கள். மதகுருமார்களின் பிடியிலிருந்து விடுபட்டுச் சுயமாகச் சிந்திப்பவர்கள்
ஒப்புக் கொள்ளவே செய்வார்கள். மேலும் அரபி மொழி கற்றவர்கள்தான் மார்க்கத்தை விளங்க
முடியும் என்ற உங்களின் அறிவற்ற பிதற்றலைப் போன்றதொரு பிதற்றல் தான் இந்த 10
விடயங்களையும் விஞ்ஞானம் படித்தவர்கள்தான் புரியமுடியும் என்பதும். ஆனால் எப்படி
மார்க்கத்தை எழுதப் படிக்கத் தெரியாத பாமரரும் சுயமாக சிந்தித்து விளங்க முற்பட்டால்
29:69 இறைவாக்குப்படி அவருக்கு மார்க்கம் விளங்குமோ அதுபோல் அதே பாமரரும் மேலே கண்ட
10 விடயங்களையும் சுயமாகச் சிந்தித்து விளங்க முற்பட்டால் அவருக்கு எளிதாக விளங்கவே
செய்யும்.

இனி விஷயத்திற்கு வருவோம் என சிலவற் றைப் பட்டியலிட்டுள்ளீர்கள்.

1. மத்ஹபுவாதிகள் மாற்று மதத்தவர்களின் கணிப்பான காலண்டரைத்தான் பின்பற்றுகின்றனர்
என்று நாம் கூறுவது தவறான குற்றச் சாட்டாம். அதற்கு ஆதாரமாக 1428 நோன்பு பெருநாளைக்
கொண்டாடியதே தக்க ஆதாரமாம்.

மாலையில் மறையும் பிறையை எப்போது பார்க்கிறீர்கள்?
சிவகாசி காலண்டரில் பிறை 29 என்று போட்டிருக்கும் நாளின் மாலையில்தானே பிறை பார்க்க
முற்படுகிறீர்கள். அது மட்டுமா? திருமணப் பதிவுப் புத்தகங்கள், மற்றும் முக்கியப்
பதிவுகளில் சிவகாசி காலண்டரில் உள்ள பிறைத் தேதியைத்தானே குறிப்பிடுகிறீர்கள். இது
என்னவாம்? சிவகாசி காலண்டரைப் பின்பற்றுகிறீர்கள் என்று நாம் கூறுவது தவறான
குற்றச்சாட்டா? அல்லது மாதம் முழுவதும் தினசரி பிறை பார்த்து முடிவு எடுக்கிறோம்,
அந்த அடிப்படையில் 1428 நோன்பு பெருநாளைக் கொண்டாடினோம் என்று நீங்கள் கூறுவது
பொய்யான பதிலா? அது சரி! உங்களின் மதரஸாக்களிலிருந்து வருடா வருடம் வருட காலண்டர்
அச்சடித்து காசாக்குகிறீர்களே! அது மாதாமாதம் பிறை பார்த்து அச்சடிக்கப்பட்டதா?
அல்லது ஹிந்து மதப் பஞ்சாங்கப்படி ஹிந்துப் புரோகிதர்களால் கணிக்கப்பட்டு (கணக்கிடப்பட்டு
அல்ல) சிவகாசியில் அச்சடிக்கப்பட்ட காலண்டரா? யாரை ஏமாற்ற இப்படிப் பிதற்றுகிறீர்கள்?

2. அன்று கணினிக் கணக்கு இல்லாததால் பிறை பார்க்கும் கட்டாயம் நிர்பந்தம் இருந்தது;
இன்று அந்த நிர்பந்தம் இல்லை என்று நாம் சொல்வதற்கு உங்களின் எதிர்க் கேள்வி.

விவாகரத்து செய்த பெண் தான் கருவுற இல்லை என்பதை நிரூபிப்பதற்கு 3 மாதவிடாய் வரை
இத்தா இருக்க வேண்டும் என்று குர்ஆன் கூறுகிறது. இன்று ஒரு நொடியில் பரிசோதித்து
முடிவை அறிந்து விடலாமே! அதனால் இத்தா இருக்கத் தேவை யில்லை என்று கூறலாமா? இது
உங்களின் கேள்வி.

ஆம்! எவை மார்க்கத்திற்கு உட்பட்டவை? எவை மார்க்கத்திற்கு உட்படாதவை என்பதை
அறியாதவர்கள் நீங்கள் என்று நான் முன்னரே குறிப்பிட்டிருக்கிறேன்.

இத்தா இருப்பது மார்க்கத்திற்கு உட்பட்டது. இத்தா கருத்தரித்திருப்பதை அறிவதற்கு
மட்டுமல்ல; அதை அறிய 3 மாதம் காத்திருக்கத் தேவையில்லை. வழமையாக வரும் மாதவிடாய்
வராமல் நின்று விட்டலே கருத்தரிப்பு பெரும்பாலும் ஊர்ஜிதமாகி விடும். மேலும் கணவன்
இறப்புக்குத் துக்கம் கடை பிடிப்பதும் மார்க்கமாகும். பொதுவாக மவ்லவிகளாகிய
உங்களுக்கு மார்க்கத்தை மார்க்கம் அல்லாததாக்குவதும், மார்க்கம் அல்லாததை மார்க்கம்
ஆக்குவதும் கை வந்த கலை. அந்த அடிப்படையி லேயே இந்தப் பிதற்றல். மாதம் பிறப்பதை
அறிவது தான் மார்க்கத்திற்கு உட்பட்டதே அல்லாமல், அன்று மாதம் பிறப்பதை அறிந்து
கொள்ள இருந்த ஒரேயொரு வழியான பிறை பார்ப்பது மார்க்கத்திற்கு உட்பட்டதல்ல என்பதை
அறிந்து கொள்ளுங்கள்.

3. திருகுர்ஆன் அல்லாஹ்வின் சொல்; விஞ்ஞானம் அல்லாஹ்வின் செயல் என்று கூறினார்
என்று கூறி நீங்கள் கூறும் பதில்… எல்லாமே அவன் செயல் என்றிருக்க விஞ்ஞானம்
மட்டும் அல்லாஹ்வின் செயல் என்று எந்த அடிப்படையில் கூறுகிறார்? இது அவரின் சொந்தக்
கருத் துதானே? தன் ஆய்வை சரியயன்று நிலை நாட்ட குர்ஆன், ஹதீஸில் கூறப்படாததை எவ்
வாறு கூறலாம்? அப்படியே சரியயன ஒரு வாதத்திற்கு இவரின் கூற்றை ஏற்றாலும், நபி (ஸல்)
அவர்களின் காலத்தில் அல்லாஹ் தன் செயலை-விஞ்ஞானத்தை ஏன் வெளிப்படுத்த வில்லை?
பின்னொரு காலத்தில் விஞ்ஞானம் வரும் அந்த நேரத்தில் பிறை பார்க்கத் தேவை யில்லை;
கணித்து முடிவு செய்யுங்கள் என்று கூறியிருக்கலாமே! இந்த கேள்விக்கு என்ன பதில்?
என்று பிதற்றி இருக்கிறீர்கள்.

உண்மையில் இது பிதற்றல்தான்; அறிவு ரீதியான கேள்வி இல்லை. எல்லாமே அல்லாஹ்வின்
செயல்கள்தான். எந்த ஒரு முஸ்லிமுக்கும் இதில் மாற்றுக் கருத்து இருக்க முடியாது.
ஆனால் பிறை பற்றிய சர்ச்சையில் நாம் கவனிக்க வேண்டியது கோள்களில் சுழற்சி
பற்றித்தான். அந்த அறிவியலைத்தான் அதாவது விஞ்ஞானத்தைத்தான் இங்கு நாம்
குறிப்பிடுகிறோம். நபி(ஸல்) அவர்கள் அறிவித்தது போல் அன்று இந்த கோள்கள் பற்றிய
கணக்கு தெரியாதுதான். நபி(ஸல்) அவர்களே இதைத் தெளிவாகக் கூறி இருக்க நீங்கள்
49:16-ல் அல்லாஹ் கூறிக் கண்டிப்பது போல் அல்லாஹ்வுக்கே மார்க்கம் கற்றுக் கொடுக்க
முற்படுகிறீர்கள்.

புகாரீ 1959 ஹதீஸ் கூறுவதைப் பற்றி சிந்திக்கிறீர்களா? நபி(ஸல்) சூரியன்
மறைந்துவிட்டது என்று நினைத்து நோன்பு துறந்தபின் சூரியன் மறையவில்லை என்பது தெரிய
வந்துள்ளது. அல்லாஹ் வஹீ மூலம் சூரியன் மறையவில்லை என்று அறிவித்து நபி(ஸல்) நோன்பு
துறப்பதை தடுத்திருக்கலாமே என அல்லாஹ்வுக்கே மார்க்கம் கற்றுக் கொடுக்க
முற்படுவீர்களா?

அப்படிப்பட்ட அபத்தமான ஒரு கேள்வியைத் தான் நீங்கள் கேட்டுள்ளீர்கள்.

அல்குர்ஆன் 10:5, 55:5, 17:12, 6:96, 14:33, 13:2, 21:33, 31:29, 39:5 ஆகிய
வசனங்களில் சூரியன், சந்திரன் இரண்டும் துல்லிய கணக்கின்படி சுழல்கின்றன என
அறிவித்து அவை பற்றிய அல்லாஹ்வின் ஃபிஅல்-செயல் பற்றிய விஞ்ஞானத்தை
வெளிப்படுத்தியுள்ளான். அவற்றை மனிதனுக்கு வசப்படுத்தித் தந்துள்ளதாகவும் அல்லாஹ்
கூறுகிறான். அவை பற்றிய கணக்கு அன்றுள்ள சமுதாயத்திற்குத் தெரியாது என்று நபி(ஸல்)
கூறியுள்ளார்கள். அந்தக் கணக்கை இன்று மனிதன் துல்லிய மாகக் கணக்கிடுகிறான் என்பதை
50 வருடம் நூறு வருடத்திற்குப் பின் இடம் பெறும் சூரிய, சந்திர கிரகணங்கள் பற்றிய
முன் அறிவிப்பும், அறிவித்தபடி அவை இடம் பெறுவதும் உறுதிப் படுத்துகின்றன.

இதில் எங்கே எமது சொந்தக் கருத்தோ, ஆய்வோ இடம் பெற்றுள்ளது? ஏன் இந்த வீண் பிதற்றல்?

4. முதன் முதலாக காலண்டர் போட்டது நாம் தான் என்பதில் சந்தேகமில்லை என்று நாம்
கூறியதாகக் கூறி அதற்கு நீங்கள் அளித் துள்ள பதில்:

உமர்(ரழி) அவர்கள்தானே போட்டார்கள். நபி(ஸல்) அவர்கள் ஏன் போடவில்லை? இது மட்டும்
பித்அத் இல்லையா? திராவிஹ் மற்றும் முத்தலாக் விஷயத்தில் நபிதோழர்களின் ஒருமித்த
கருத்துடன் இதே உமர்(ரழி) அவர்களின் காலத்தில் அவர்களால் ஏற்பட்ட முடிவை ஏற்க
மறுப்பவர் இதை மட்டும் ஏன் ஆதரிக்கிறார்? இவை வணக்கம் என்றால் பிறை பார்த்து நோன்பு
வைப்பதும் பெருநாள் கொண்டாடுவதும் வணக்கமில்லையா? ஏன் மாறுபாடு? என்று
கேட்டுள்ளீர்கள்.

எதைக் கொண்டாவது மாதம் பிறப்பதை அறிந்து நோன்பை ஆரம்பிப்பதும், பெருநாள்
கொண்டாடுவதும் வணக்கமே அல்லாமல் பிறையைப் பார்ப்பது வணக்க வழிபாட்டில் சேராது. எவை
எல்லாம் வணக்க வழிபாடுகளில் உள்ளவை? எவை எல்லாம் வணக்க வழிபாட்டிற்கு உட்பட்டவை
அல்ல என்று தெளிவாக நீங்கள் கல்வி கற்ற பித்அத்தான புரோகித மதரஸாக்களில் கற்றுக்
கொடுக்காத காரணத்தால், அங்கு கற்ற மனிதக் கற்பனைகளான பிக்ஹு சட்டங்களை உங்கள்
மண்டையில் ஏற்றிக் கொண்டு இப்படி அறிவீனமான பதிலை அளித்துள்ளீர்கள்.

5:3 இறைவாக்கைக் கவனமாகப் படித்துப் பாருங்கள். அல்லாஹ் மார்க்கத்தை நிறைவு
செய்துள்ளதாகத்தான் கூறியுள்ளான். துன்யாவை நிறைவு செய்து விட்டதாகக் கூறவில்லை.
நபி(ஸல்) மதீனாவிற்குப் போன புதிதில் அங்கு வழமையாக நடந்து வந்த பேரீச்ச மர
அயல்மகரந்தச் சேர்க்கையைத் தடுத்துவிட்டார்கள். அதனால் மகசூல் குறைந்ததை நபி(ஸல்)
அவர்களிடம் அன்சாரிகள் முறையிட்டார்கள். அப்போது நபி(ஸல்) அளித்த பதிலை நீங்கள்
அறிவீர்களா? இதோ அவர்கள் அளித்த பதில்.

“”மார்க்கம் பற்றி நான் ஒன்றைச் சொன் னால் அதன்படி நடப்பது உங்கள் மீது கடமை.
உலகியல் நடைமுறைப்பற்றி நான் ஒன்றைக் கூறுவேனேயானால் அதில் நீங்கள் என்னை விட
அனுபவமிக்கவர்களாக இருக்கலாம்
. இது போல் நபி(ஸல்) அவர்களது கருத்தைவிடச் சில நபி
தோழர்களின் கருத்துகள் உலகியல் அடிப்படையில் ஏற்கப்பட்ட மேலும் சில ஆதாரங்களும்
உண்டு. இவ்வளவு அழகாக நபி(ஸல்) அவர்கள் தெளிவுபடுத்தியிருந்தும் உலகியல் நடை
முறைகளை மார்க்க மாக்கியும், மத்ஹபு, தரீக்கா, இயக்கம் என பித்அத்களை
மார்க்கமாக்கியும் செயல்படுவது 33:36,66-68, 18:102-106 இறைக்கட்டளைகள்படி பெருத்த
வழிகேடுகள் என்பதை உங்களால் உணர முடிய வில்லையா?

உமர்(ரழி) அவர்கள் ஹிஜ்ரி ஆண்டைத் துவக்கியது உலகியல் நடைமுறை வசதிக்காக மட்டுமே
என்பதையும், மார்க்க அடிப்படையில் ஒரே நேரத்தில் எத்தனை தலாக் சொன்னாலும் அது ஒரு
தலாக்தான் என்ற நபி(ஸல்) அவர்களின் வழிகாட்டல் ஆதாரபூர்வமாகக் கிடைப்பதாலும்,
அதேபோல் ரமழானிலும், ரமழான் அல்லாத காலத்திலும் நபி (ஸல்) இரவுத் தொழுகையாக 8+3=11
ரகாஅத்துகளுக்கு மேல் தொழுததே இல்லை என்று நபி(ஸல்) அவர்களின் மனைவி ஆயிஷா(ரழி)
அவர்களே உறுதியாகச் சொல்லி இருப்பதாலும், உமர்(ரழி) அவர்களின் உலகியல் நடைமுறையான
ஹிஜ்ரி ஆண்டை ஏற்றும், இஷாவுக்குப் பிறகு தொழும் தராவீஹ் தொழுகை 20+3 ரகாஅத்தையும்,
ஒரே நேரத்தில் முத்தலாக் சொல்வதையும் விட மார்க்கத்தில் நபி(ஸல்) அவர்களின்
வழிகாட்டல் தெளிவாக இருப்பதால், நபி(ஸல்) அவர்களின் நடைமுறையை நிராகரித்துப்
புறக்கணித்துவிட்டு உமர்(ரழி) அவர்களின் நடைமுறையை ஏற்பது நேர்வழி அல்ல என்றே
முடிவு செய்து அதன்படி நடக்கிறோம்.

உடனே உமர்(ரழி) அவர்கள் நேர்வழியில் செல்லவில்லை என்று நாம் கூறுவதாக அவதூறு பரப்பி
உங்கள் முகல்லிதுகளை ஏமாற்றத் துணிவீர்கள். ஆனால் நாமோ 2:134, 141 இறைக் கட்டளைப்படி உமர்(ரழி) அவர்கள் சரியாகச் செய்தார்களா? தவறாகச் செய்தார்களா? என ஆராயாமல்
7:3, 33:21,36 இறைக் கட்டளைப்படி அல்லாஹ், ரசூல் காட்டிய வழியில் நடக்கிறோம்.
உமர்(ரழி) சுயமாகச் சிந்தித்துச் செயல்பட்டதால், அதற்கு ஒரு கூலி உண்டு; அல்லாஹ்
25:70 இறைவாக்கில் சொல்வது போல் அவர்களின் பாவங்களை நன்மையாக மாற்றியும் இருக்கலாம்.
2:134,141 இறைக்கட்டளைப்படி முன் சென்றவர்கள் பற்றிய கவலையோ சிந்தனையோ நமக்குத்
தேவையே இல்லை. நாம் செய்வது யாரையும் தக்லீது செய்யாமல் குர்ஆன், ஹதீஸ் போதனைப்படி
நடக்கிறோமா என்ற சிந்தனை, முயற்சி மட்டுமே! பிறை பார்ப்பது வணக்கமில்லை; மாதம்
பிறப்பதை அறிந்து செயல்படுவதே வணக்கமாகும்.

அன்று அறிவியல் கண்டுபிடிப்புகள் இல்லாத காலத்தில் பிறையைப் பார்த்ததை வணக்கமாகக்
கொண்டால், அதுபோல் 22:27 இறை அறிவிப்புப் படி ஒட்டகத்தில் ஹஜ்ஜுக்குப் போவது வணக்கம்,
சூரிய ஓட்டத்தைப் பார்த்து தொழுவது வணக்கம், ஆள் நேரில் வந்து இறப்புச் செய்தியைச்
சொல்வது வணக்கம் என்றெல்லாம் ஏற்க வேண்டி வரும்; அதுவே முறை. அதற்கு மாறாக
மற்றவற்றில் இன்றைய நவீன கருவிகளை ஏற்று நடந்து கொண்டு, பிறை விஷயத்தில் மட்டும்
அன்றுபோல் பார்க்க வேண்டும் என்று கூறுவது 2:85-ல் அல்லாஹ் கடிந்து கூறுவது போல்
குர்ஆனில் சிலவற்றை ஏற்று சிலவற்றை மறுக்கும் காஃபிர்களின் நிலைக்குத் தள் ளிவிடும்
என்பதை நீங்கள் உணர்ந்தால் நல்லது.

Previous post:

Next post: