இதுதான் புரோகிதம்!
அல்லாஹ் அன்றே இட்ட ‘முஸ்லிம்’ என்ற பெயர் அல்லாத வேறு பெயர்களில் நேர்வழி நடக்கும் முஸ்லிம்கள் செயல்பட முடியாது என்பதற்குத் தெள்ளத் தெளிவான, பல நூல்களில் பதிவாகி இருக்கும் ஆதாரபூர்வமான ஹதீஸ் ஒன்றை அந்நஜாத் 93 மார்ச் இதழ் பக்கம் 38-ல் அரபி மூலத்துடன் வெளியிட்டிருந்தோம். அந்த ஹதீஸ் ஆதாரமற்றது என்று கூற வழியில்லாமல் ஹதீஸை திரித்து எழுதிவிட்டு, நாம் ஒரு முடிவை முன்னரே எடுத்து கொண்டு அதற்கேற்ப ஹதீஸின் தமிழாக்கத்தை வளைத்திருப்பதாகக் குற்றஞ்சாட்டியுள்ளனர். ஹதீஸில் மோசடி செய்துள்ளது யார்? ஹதீஸை திரிக்கும் புரோகித புத்தி யாருடையது? என்பதை விரிவாக அலசுவோம்.
முதலில் ஒன்றைத் தெளிவாகச் சொல்லிக் கொள்கிறோம். நாம் கூறாததையும், பொய்களையும் கூறி மக்களை திசை திருப்புவதை அவர்கள் விட்டு விடவேண்டும். அதன் காரணமாகவே அவர்களைக் கடுமையாகச் சாடி அடையாளம் காட்டும் கட்டாயம் நமக்கேற்படுகிறது. ‘நபி(ஸல்) அவர்கள் முஸ்லிம் ஜமாஅத் என்ற பெயரில் செயல்படுமாறும். முஸ்லிம் ஜமாஅத் என்ற அமைப்பை உருவாக்குமாறும் கூறியிருந்தால் குர்ஆன், ஹதீஸை அடிப்படையாகக் கொண்ட எந்த முஸ்லிமும் அதை மீறமாட்டார்” என்று எழுதி நாம் கூறாததைச் சொல்லி முஸ்லிம்களை திசை திருப்பியுள்ளார். இன்று ‘முஸ்லிம் ஜமாஅத்’ என்ற அமைப்பை உருவாக்கச் சொல்லியோ, அல்லது புதிதாக ‘முஸ்லிம் ஜமாஅத்’ என்ற அமைப்பை உருவாக்கச் சொல்லியோ என்றுமே நாம் சொன்னதும் இல்லை எழுதியதும் இல்லை. நாம் சொல்வதெல்லாம் 1400 ஆண்டுகளுக்கு முன்பு நபி(ஸல்) அவர்கள் அமைத்துச் சென்ற முஸ்லிம் ஜமாஅத்தை முஸ்லிம் சமுதாயத்தைக் கூறுபோடாதீர்கள். ஆளுக்கொரு பெயர் சொல்லி தனித்தனி இயக்கம் – ஜமாஅத் அமைத்து சமுதாயத்தைச் சிதறடிக்காதீர்கள் முஸ்லிம்களில் எவரையும் ‘காஃபிர்’ என்று ஃபத்வா கொடுத்து சமுதாயத்தைப் பிரிக்காதீர்கள் புதிதாக தனித்தனி பெயர்கள் அமைத்துக் கொள்வது சமுதாயத்தைக் கூறுபோடுவதாகவே ஆகிவிடுகிறது என்றே சொல்லி வருகிறோம். அடுத்து குறிப்பிட்ட ஹதீஸுக்கு வருவோம்.
‘கல்முன் யஹ்தூன பிகைரி ஹத்யி தஃரிஃபு மின்ஹும் வ துன்கிரு’ இந்த அரபி சொற்றொடருக்கு நாம் (அவர்கள் எண்ணப்படி யாவும் கொடுத்த மொழி பெயர்ப்பு.
ஒரு கூட்டம் எனது நேர்வழியல்லாததைக் கொண்டு மக்களை வழி நடத்துவார்கள். நீங்கள் அவர்களை (செயல்களின் மூலம்) கண்டறிந்து மறுத்து விடுவீர்கள். நமது மொழி பெயர்ப்பை மறுத்து தவ்ஹீது மவ்லவி (அரபி பண்டிதர்) கொடுத்துள்ள மொழி பெயர்ப்பு வருமாறு:
ஒரு கூட்டம் எனது நேர்வழியல்லாததைக் கொண்டு வழி நடத்துவார்கள். ‘தஃரிபு பின்ஹும் அவர்களில் நல்லவற்றையும் காண்பீர் ‘வதுன்கிரு’ தீயவற்றையும் காண்பீர்! இதில் முந்திய முக்கிய பாகத்தை சாதாரண எழுத்திலும், அவர்கள் திரித்து எழுதியுள்ளதை தடித்த எழுத்திலும் கொடுத்திருப்பது அவர்களது ஆதரவாளர்களின், சுய சிந்தனையற்றவர்களின் கண்ணை மறைக்க, சுய சிந்தனையாளர்கள் அவர் புரிந்துள்ள மோசடியை எளிதில் புரிந்து கொள்வார்கள். அவர் சாதாரண எழுத்தில் எழுதியுள்ள முக்கிய முன்பகுதி என்ன சொல்கிறது?
‘ஒரு கூட்டம் எனது நேர்வழியல்லாததைக் கொண்டு வழிநடத்துவார்கள்?
அதாவது தவ்ஹீது மவ்லவியின் மொழி பெயர்ப்புப்படி, நபி(ஸல்) அவர்களே ‘எனது நேர்வழியல்லாதது’ என்று குறிப்பிட்டுள்ளவற்றிலும் நல்லவற்றையும் தீயவற்றையும் காண முடியும் என்று மக்களை நம்பச் சொல்லுகிறார். முகல்லிது மவ்லவிகள், நரகிற்கு இட்டுச் செல்லும் பித்அத்தில் நல்லவையும் (பித்அத் ஹஸனா) கெட்டவையும் (பித்அத் ஸய்யிஆ) இருக்கின்றன என்று சொல்லி வழிகெடுப்பதற்கும் இந்த தவ்ஹீ மவ்லவி நேர்வழியல்லாததிலும் நல்லவையும், கெட்டவையும் இருப்பதாக மொழி பெயர்த்து வழிகெடுப்பதற்கும் வேறுபாடு இருக்கிறதா? சுய சிந்தனையாளர்கள் இதற்குப் பின்பும் இந்த தவ்ஹீத் மவ்லவியின் பின்னால் செல்ல முடியுமா? சிந்தியுங்கள்.
‘தஃரிஃபு’ என்ற அரபி பதத்திற்கு ஒன்று ‘நல்லவை’ என்று அவர் பொருள் எடுத்ததுபோல் எடுக்கலாம். அல்லது ‘கண்டறிந்து’ என்று நாம் எடுத்துள்ளது போல் எடுக்கலாம். ஆனால் ‘நல்லவை’ என்றும் ‘காண்பிர்’ என்றும் ஒரே சமயத்தில் இரு பொருள்கள் எடுக்க எங்கே அங்கு அரபி பதம் இருக்கிறது ‘மாவைத் தின்றால் பணியாரமில்லை’ என்ற பெண்கள் கூறும் சாதாரண விஷயம் கூட இந்த அரபி பண்டிதருக்குத் தெரியவில்லையா? எனவே இங்கு ‘ஒரு கூட்டம் எனது நேர்வழியல்லாததைக் கொண்டு வழி நடத்துவார்கள். நீங்கள் அவர்களைக் கண்டறிந்து மறுத்து விடுவீர்கள்” என்று பொருள் கொள்வதே பொருத்தமாகும்.
அடுத்து இரண்டாவது நிலையை “இஸ்லாம் முற்றிலுமாகப் புறக்கணிக்கப்படும்” என்று பொருள் கொண்டுள்ளாரே இது எந்த ஆதார அடிப்படையில் எடுக்கப்பட்ட முடிவு? இதை நாமும் சரிகண்டுள்ளதாக ஒரு பொய்யைக் கூறியுள்ளாரே? எதற்காக? இஸ்லாம் முற்றிலும் நிராகரிக்கப்பட்டபின் எந்த நபி வந்து மீண்டும் இஸ்லாத்தை நிலைநாட்டினார்? பதில் சொல்லுவாரா?
தீமைக்குப் பிறகு ஏற்படும் நன்மை என்று எதை நபியவர்கள் கூறினார்களோ, அதை மறுத்து விடுவீர்கள் என்று எப்படிக் கூறி இருப்பார்கள்? என்று தடித்த எழுத்தில் எழுதி அவரது ஆதரவாளர்களைக் குழம்பச் செய்துள்ளாரே? இதுதான் தெளிவாகச் சொல்லும் லட்சணமா?
நன்மையை மறுத்து விடுவீர்கள் என்று எங்கே நபி(ஸல்) சொல்லியிருக்கிறார்கள்? ‘நேர்வழி அல்லாததில் வழி நடத்துவோரை மறுத்து விடுவீர்கள்? என்றல்லவா நபி(ஸல்) கூறியிருக்கிறார்கள். இவ்வாறு எழுதுவது மோசடியில்லாமல் வேறு என்ன?
இதை, எப்படி தீமைக்குப்பின் விளையும் நன்மை என்று தவ்ஹீது மவ்லவி கேட்கிறாரா? அதைத் தெளிவாக அப்படிச் சொல்லிக் கேட்கட்டும் வழி கெடுப்போரின் கெடுநிலை அறிந்து கொண்டு அவர்களைப் புறக்கணித்துவிடுவது நன்மைதானே? இது நன்மை இல்லையா? இது நன்மை இல்லை என்று மறுப்பாரா?
கபுரு சடங்குகள், தரீக்கா, மத்ஹபுகள், இஜ்மா, கியாஸ் என்றெல்லாம் நபி வழியல்லாததில் – நேர்வழியல்லாததில் வழி நடத்துவோரை – முகல்லிது மவ்லவிகளை கண்டறிந்து அவர்களை மறுத்துவிட்டது நன்மை இல்லையா? அதே சமயம் குர்ஆன், ஹதீஸ் அடிப்படையில் செயல்பட விரும்பும் முஸ்லிம் சகோதரர்களே ஜ.உ.ச. ஜாக்ஹ் போன்ற மற்றும் பிரிவுப் பெயர்களின் கெடுதிகளை குர்ஆன், ஹதீஸ் மட்டும் என்று தந்திரமாகக் கூறும் இந்த தவ்ஹீது மவ்லவிகள் பின்னால் செல்வது கொண்டு கண்டறிய முடியாமல், பித்அத்தில் சிக்கி நரகில் தூக்கி எறியப்படும் நிலையில் இருப்பது பெருந்தீமை இல்லையா? அவர்களின் தடுமாற்றத்திற்கு இந்த தவ்ஹீத் மவ்லவிகள் – புரோகிதர்கள்தான் காரணம் என்பதில் சந்தேகமுண்டா?
ஒரு சில புரோகிதர்களைக் கண்டறிந்து மறுத்துவிடுவதை நன்மை என்றும், குர்ஆன், ஹதீஸ் என்று ஏமாற்றும் சில புரோகிதர்களைக் கண்டறியத் தவறியதால் அவர்களின் தீய வழிகாட்டுதலுக்குப் பலியாகி நரகில் எறியப்படுவதை தீமை என்றும் பொருள் கொண்டால் அதிலுள்ள தவறு என்ன? விளக்குவாரா?
“இத்தீமைக்குப்பின், இந்நன்மைக்குப்பின்..” என்ற இரண்டு கேள்விகளுக்கு இடையே அமைந்த பதில் நிச்சயம் நல்ல நிலையைக் கூறுவதாகத்தான் இருக்க முடியும்” என்று எழுதி தனது ஆதரவாளர்களைக் குழப்பி இருப்பதோடு, இங்கு இந்த தவ்ஹீது மவ்லவி இன்னொரு மாபெரும் தவறையும் செய்துள்ளார். தனது புரோகித இனத்தைக் காப்பாற்றிக் கொள்ள இந்த அளவா தரம் தாழ்ந்து செல்லவேண்டும்? ஒரு நபிமொழியை மக்கள் தவறாக விளங்க இடம் தரக்கூடாது என்பதற்காக இப்படி விளக்கும் அவசியம் அவருக்கு ஏற்பட்டுள்ளதாம். ஆடு நனைகிறதென்று ஓநாய் அழுகுதாம்.
ஒரு கூட்டம் எனது நேர்வழியல்லாததைக் கொண்டு வழி நடத்துவார்கள் ‘தஃரிபு மின்ஹும்’ அவர்களில் நல்லவற்றையும் காண்பீர்! ‘வதுன் கிரு’ தீயவற்றையும் காண்பீர்! எனது மொழி பெயர்ப்பதன் மூலம் நேர்வழியில் வழி நடத்துபவர்களிடம் தீயவற்றைப் பார்க்க முடியாது. நல்லவற்றை மட்டும் பார்க்க முடியும் என்ற தவறான சிந்தனைக்கும் வழி வகுத்துள்ளார்.
‘ஆதம் தவறு செய்தார், ஆதத்தின் மக்களும் தவறு செய்பவர்களே” என்ற நபி மொழிக்கு மாற்றமாக தவறே செய்யாத மனிதர்களும் உண்டு என்ற தோற்றத்தை உண்டாக்குகிறார்.
இமாம்கள், அவுலியாக்கள் தவறு செய்திருக்க முடியுமா? என்று வாயைப் பிளப்பதோடு, முகல்லிதுகளை வழிகெடுக்கும் முகல்லிது மவ்லவிகளுக்கும், குர்ஆன், ஹதீஸ் படி நடக்க விரும்புகிறவர்களே வழிகெடுக்கும் இந்த தவ்ஹீது மவ்லவிகளுக்குமுள்ள வேறுபாடு என்னவோ?
“அமீருக்கு வழிபடுவதெல்லாம் நன்மையான காரியங்களில் மட்டுமே” என்ற நபி(ஸல்) அவர்களின் அறிவுரைக்கு இந்த தவ்ஹீது மவ்லவிகளிடம் பொருள் என்னவோ?
‘பித்அத்’ புரிந்த சில நபித்தோழர்கள் நரகில் எறியப்படுவார்கள் என்று ஆதாரபூர்வமான ஹதீஸ்களின் காணப்படுகிறதே? முகல்லிது மவ்லவிகளைப் போல் ஹதீஸின் கருத்தைப் புரட்டப் போகிறார்களா? செய்தாலும் செய்வார்கள். இந்த ஹதீஸை புரட்டிப்பார்ப்பவர்களுக்கு அந்த ஹதீஸையும் புரட்ட சொல்லியா கொடுக்க வேண்டும். அல்லது அந்த நபித்தோழர்களை விட எங்கள் ‘ஜாக்ஹ்’ உறுப்பினர்கள் மேலானவர்கள் என்று சொன்னாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.
‘பித்அத்’ பற்றிய கடுமையான எச்சரிக்கைகளை எடுத்துக் காட்டி எச்சரித்தால்” நன்மை கலப்பில்லாத முற்றிலும் தீமை மலிந்த நான்காவது கட்டத்தில் நீங்களோ, நாமோ இருக்கவில்லை என்பதையும் கவனத்தில் கொள்க” என்று எறுதி, அவரது ஆதரவாளர்களை ‘ஜாக்ஹ்’ பித்அத்தில் மூழ்கி இருக்க வழி சொல்லித் தருகிறார். நன்மை கலப்பில்லாத முற்றிலும் தீமை மலிந்தவர்கள் மட்டுமே நரகில் எறியப்படுவார்கள் என்று கூற எங்கிருந்து இவருக்கு ஆதாரம் கிடைத்தது? ‘பித்அத்’ செய்வதன் மூலம் நரகையடைவார்கள் நன்மையே செய்யாதவர்கள் என்பது இந்த தவ்ஹீத் மவ்லவியின் தீர்ப்பா? சொல்லுவதைத் தெளிவாகச் சொல்லட்டும்.
சில வருடங்களுக்கு முன் புரோகிதர் சங்கராச்சாரியார் ஹிந்துக்களுக்கும் முஸ்லிம்களுக்குமிடையே துவேஷத்தைக் கிளப்பிவிட ‘முஸ்லிம்கள் சொல்லுவதை ஏற்றுக் கொள்ள முடியுமா? இஸ்லாத்தைத் தழுவியவர்கள் மட்டுமே சுவர்க்கம் புக முடியுமாம். நம்மைப் போன்ற இஸ்லாத்தை ஏற்றுக் கொள்ளாத ஹிந்துக்கள் சுவர்க்கம் புக முடியாதாம். நரகத்தில் எறியப்படுவோமாம். அப்படியானால் ஹிந்து பெருங்குடி மக்களில் நன்மை செய்வோரே இல்லையா? ஹிந்துக்கள் நன்மை கலப்பே இல்லாத தீமை செய்யும் மக்களா? என்ற கருத்துப்பட ஒரு குண்டைத்தூக்கி போட்டார்.
இதைக் கேட்ட மாத்திரத்தில் ஹிந்துக்களுக்கு முஸ்லிம்கள் மேல் எவ்வளவு பெரிய கோபம் ஏற்பட்டிருக்கும் என்பதை நாம் சொல்லித் தெரிய வேண்டியதில்லை. அதேபோல் இந்த தவ்ஹீத் மவ்லவி புரோகிதர் அவரது ஆதரவாளர்களுக்கு நம்மீது கோபம் கொப்பளிக்கும் வகையில், நன்மை கலப்பில்லாத முற்றிலும் தீமை மலிந்த நிலையிலேயா நாமிருக்கிறோம். ‘ஜாக்ஹ்’ என்று பெயர் வைத்துச் செயல்படுவதால் நாம் நரகில் எறியப்படுவோமா? என்று முடுக்கி விடுகிறார். அந்த சங்கராச்சாரி புரோகிதருக்கும் இந்த தவ்ஹீத் மவ்லவி புரோகிதருக்குமுள்ள வித்தியாசம் என்னவோ? மலையளவு நன்மைகள் இருந்தாலும் ஷிர்க், பித்அத் அவற்றை மிகைத்து நரகில் கொண்டு சேர்த்து விடும் என்பதை இந்த தவ்ஹீத் மவ்லவி அறியமாட்டார்?
‘ஹும்மின் ஜில்ததினா வயதகல்லமூன பிஅல்ஸினதினல’ என்ற சொற்றொடருக்கு அவர் கூறும் குறுகிய பொருளா? அல்லது நாம் கூறியிருந்த விரிவான பொருளா? என்பது பிரிதொரு கட்டுரையில் விரிவாக விளக்கப்பட்டடுள்ளது; பார்த்து உண்மையை உணரவும்.
‘முஸ்லிம் ஜமாஅத்’ என்றால் அதற்கொரு பொருள் ‘முஸ்லிம்களின் கூட்டமைப்பு” என்றால் அதற்கு இன்னொரு பொருள் என்று கூறி மக்களை ஏமாற்றுவதுதான் புரோகிதமா? ‘முஸ்லிம்’ பெயரில்லை. கட்டுப்பட்டவன் என்று மொழி பெயர்க்க வேண்டும் என்று ‘ஜாக்ஹ்’ விவாத அமர்வுகளில் வாதிட்டவர் இங்கு முஸ்லிம் பதத்தை மொழி பெயர்க்கவில்லையே! அதற்குக் காரணமென்ன?
‘முஸ்லிம்’ பெயர் அல்ல, கட்டுப்பட்டவன் என்பதற்குரிய அரபி பதம் என்று வாதிடுகிறவர் ‘முஸ்லிம்’ என்று வரும் இடங்களிலெல்லாம் கட்டுப்பட்டவன் என்றல்லவா மொழி பெயர்த்து எழுத வேண்டும்? ‘முஸ்லிம்’ என்ற பெயர் இடம் பெயறாமல் கட்டுப்பட்டனவன் என்ற மொழி பெயர்த்து எழுதப்பட்ட ஒரே ஒரு அல்ஜன்னத் இதழையாவது அவர்களால் காட்டமுடியும்? அவர்கள் தங்கள் புரோகித இனத்தைக் காப்பாற்றிக் கொள்ள விதண்டாவாதமே செய்கிறார்கள் என்பதற்கு இதற்கு மேலும் ஆதாரம் வேண்டுமா?
தங்களது ‘ஜாக்ஹ்’ ஜமாஅத்தை மட்டும் முஸ்லிம் ஜமாஅத் அல்லாமல் காஃபிர் ஜமாஅத் என்று கூறப்போகிறீர்களா? என்று கேட்டிருக்கிறாரே? ஹனபி, ஷாபி இன்னும் இவைபோன்ற ஜமாஅத்துகள் மட்டும் காஃபிர்களுடைய ஜமாஅத் என்பது இந்த தவ்ஹீத் மவ்லவியின் எண்ணமா? ‘ஜாக்ஹ்’ ஜமாஅத்தாகிய இவர்கள் மட்டும்தான் குர்ஆன், ஹதீஸை செயல்படுத்துகிறார்கள். மற்ற முஸ்லிம் உம்மத்திலுள்ள ஜமாஅத்துகள் அனைத்தும் பைபிளையும், கீதையையும் செயல்படுத்துகிறார்கள் என்று இவர் சொல்ல வருகிறாரா? பிரிவினை வாதிகளான மற்ற ஜமாஅத்துகள் தெள்ளத் தெளிவான குர்ஆன், ஹதீஸ் ஆதாரங்களை நிராகரித்து விட்டு தங்கள் முன்னோர்களின் யூகங்களை எப்படிச் செயல்படுத்துகிறார்களோ அதேபோல் இவர்களின் ‘ஜாக்ஹ்’ ஜமாஅத்தும் தெள்ளத் தெளிவான குர்ஆன் வசனங்கள் (22:78, 41:33), மற்றும் ஹதீஸ்களை நிராகரித்துவிட்டு தங்கள் சொந்த யூகங்களையே செயல்படுத்தி வருகின்றனர். எனவே ‘ஜாக்ஹ்’ ஜமாஅத்தினரும் பிரிவினை வாதிகளே என்பதில் சந்தேகமுண்டா?
குர்ஆன், ஹதீஸ் அடிப்படையில் ஒன்றுபட்ட சமுதாயத்தைக் காண விழைகிறவர்களுக்கு ‘முஸ்லிம்’ அல்லாத வேறு பெயர் எதற்காகவோ? ‘முஸ்லிம்’ அல்லாதவேறு பெயர் எதற்காகவோ? முஸ்லிம் சமுதாயத்திலிருந்து தங்களைப் பிரித்துக் காட்ட என்பதல்லாத வேறு உண்மையான காரணம் கூற முடியுமா?
ஒன்றுபட்ட சமுதாயத்தை – ஜமாஅத்தை உடைக்க முயல்பவனைக் கொன்றுவிட வேண்டும். என்ற கருத்தில் முஸ்லிமில் இடம் பெற்றுள்ள இரண்டு ஹதீஸ்களை எடுத்து எழுதியிருக்கிறார் தவ்ஹீத் மவ்லவி.
இருக்கக் கூடிய அமீர் சரியாக இல்லாவிட்டாலும் கூட நீங்கள் உண்மை முஸ்லிம்களை இரண்டாகப் பிரிக்க முயல்வது கொடுமையான குற்றம் ‘யாரேனும் தனது அமீரிடம் விரும்பத்தகாதவற்றைக் கண்டால் அவர் பொறுத்துக் கொள்ளட்டும். எவரேனும் கூட்டமைப்பிலிருந்து ஒரு ஜான் விலகினால் அறியாமைக் கால மரணத்தையே அவர் தழுவுகிறார்’ என்ற புகாரி, முஸ்லிமில் காணப்படும் ஹதீஸையும், ‘தெளிவான ‘குஃப்ர்’ இருந்தால் தவிர அமீரைப் புறக்கணிக்க முடியாது’ என்ற மற்றொரு ஹதீஸையும் எடுத்து எழுதியிருக்கிறார்.
1987-ல் கண்ணில் படாத ஹதீஸ்கள் இப்போது 1993-ல் எப்படிக் கண்ணில் பட்டன? ஒரு வேளை ‘ஜாக்ஹ்’ கூடாரம் கலகலத்து வருவதால் இந்த ஞானம் பிறந்ததோ?
ஆம் இவை அனைத்தும் மறுக்க முடியாத உண்மை. ஜமாஅத்தை – கூட்டமைப்பை உடைக்க முற்படுகிறவன் மாபெரும் சண்டாளன். கொல்லப்பட வேண்டியவன் அறியாமைக் கால மரணத்தையே தழுவுகிறான் என்பதில் எவ்வித சந்தேகமுமில்லை. இஸ்லாமிய ஆட்சி இல்லாத காரணத்தால் இங்கு தப்பினாலும் நாளை மறுமையில் இப்படிப்பட்டவனுக்கு மிகக் கடுமையான தண்டனை உண்டு என்பதில் அணுவளவும் சந்தேகம் வேண்டாம். ஆனால் எந்த ஜமாஅத்தை? நபி(ஸல்) அவர்கள் அறிவித்துச் சென்ற அந்த முஸ்லிம் ஜமாஅத்தை இதைத்தான் நமக்கு விபரம் தெரிந்ததிலிருந்து கூறிக் கொண்டிருக்கிறோம். அமீர் பதவிக்கு ஆசைப்பட்டு ஆளுக்கொரு இயக்கம் அமைத்து முஸ்லிம் சமுதாயத்தைக் கூறு போடாதீர்கள் என்று மீண்டும் மீண்டும் கடுமையாகத் தொடர்ந்து எச்சரித்து வருகிறோம். ‘ஜாக்ஹ்’ இயக்கத்தினர் காதில் அன்று இது விழவில்லையா?
இந்த ஹதீஸ்கள் கூறும் கூட்டமைப்பு இவர்களது ‘ஜாக்ஹ்’ அமைப்புத்தான் என்பதற்கு இவரிடமுள்ள ஆதாரம் என்ன? 1000 வருடங்களுக்கு மேலாகச் செயல்பட்டுக் கொண்டிருக்கும் அஸ்ல சுன்னத் வல் ஜமாஅத்திற்கு இந்த தகுதி இல்லையா? அரை நூற்றாண்டகளுக்கு மேல் செயல்பட்டுக் கொண்டிருக்கும் தப்லீக், ஜமாஅத்திற்கு இந்த தகுதி இல்லையா? அதேபோல் அரை நூற்றாண்டுகளுக்குமேல் செயல்பட்டுக் கொண்டிருக்கும் ஜமாஅத்தே இஸ்லாமிற்கு இந்த தகுதி இல்லையா? அவர்கள் எல்லாம் குர்ஆன், ஹதீஸ்படி செயல்படவில்லை என்று சொல்ல வருகிறாரா? அப்படியானால் ‘ஜாக்ஹ்’ இயக்கம் மட்டும் குர்ஆன், ஹதீஸ்படி செயல்படுகிறதா? 4:59 வசனப்படி ‘ஜாக்ஹ்’ பெயரை குர்ஆனிலிருந்து எடுத்தாரா? ஹதீஸிலிருந்து எடுத்தாரா? குர்ஆன், ஹதீஸில் ‘ஜாக்ஹ்’ என்ற பெயரை இவர் காட்டுவாரா? ‘முஸ்லிம்’ என்ற பெயரை நாம் குர்ஆனிலும், ஹதீஸிலும் காட்டிவிட்டோம். ஆனால் இந்த தவ்ஹீத் மவ்லவி இதற்குச் செய்யும் விதண்டாவாதம் என்ன தெரியுமா? ‘ஜாக்ஹ்’ பெயராம், ஆனால் முஸ்லிம் பெயரில்லையாம். இதை நாமெல்லாம் நம்பவேண்டுமாம், குட்டியிலும் குட்டி ஜமாஅத் ஒன்றுக்குப் பெயர் இல்லாமல் செயல்பட முடியவில்லையாம். அதற்காகப் பெயரிட்டுள்ளார்களாம். அகில உலகிலும் விரிந்து பரந்து காணப்படும் முஸ்லிம் ஜமாஅத்திற்கு பெயரே வைக்கப்படவில்லையாம்! அல்லாஹ்வும், ரசூலும் மறந்துவிட்டார்களாம். 1400 வருடங்களுக்குப் பிறகு இந்த தவ்ஹீத் மவ்லவி கண்டுபிடித்துள்ள இந்த நவீன கண்டுபிடிப்பை நாமும் ஏற்றுக் கொள்ளவேண்டுமாம்.
‘வஸீலா’ அரபி பதத்திற்கு அல்லாஹ்வின் ரசூலும், நபித்தோழர்களும் கொடுத்த விளக்கத்தை விட்டு, 500 வருடங்களுக்குப் பிறகு இந்த முகல்லிது மவ்லவிகள் கொடுக்கும் புது விளக்கத்தை ஏற்றுக் கொள்வதா? என்று கேட்கும் இந்த தவ்ஹீத் மவ்லவிக்கு மட்டும் முஸ்லிமுக்கு அல்லாஹ்வின ரசூலும் நபித்தோழர்களும் கொடுத்த விளக்கத்தை விட்டு, 1400 வருடங்களுக்குப் பிறகு புது விளக்கம் கொடுக்கும் அதிகாரம் எங்கிருந்து கிடைத்தது? அந்த முகல்லிது மவ்லவி புரோகிதர்களுக்கும், இந்த தவ்ஹீத் மவ்லவி புரோகிதருக்குமுள்ள வித்தியாசம் தான் என்னவோ?
ஒரு வாதத்திற்கு அவரது கூற்றை ஏற்றுக் கொண்டாலும், அங்கும் இந்த தவ்ஹீத் மவ்லவிகளே மேற்படி ஹதீஸ்கள் எச்சரிக்கும் கடுமையான தண்டனைக்குரியவர்கள்.
1986-ல் அந்நஜாத்தை ஆரம்பித்தோம்; எங்களது பிரிவுப் பெயர்களில்லாத, புரோகிதமில்லாத, சமத்துவ சகோதரத்துவ முஸ்லிம் சமுதாயம் என்ற கொள்கையை ஏற்றுக் கொண்டு, முஸ்லிம் ஜமாஅத்தின் எமது தலைமையை ஒப்புக் கொண்டு சுமார் 11 மாதங்கள் செயல்பட்டுள்ளனர். அதற்குப் பின்பும் பிரச்சினைகளை உருவாக்கி அவதூறுகள் பரப்பி எமது ராஜினாமாவுக்குப் பின் அட்ஹாக் கமிட்டி அமைத்து விசாரணைகள் பல செய்து, வரவு, செலவு கணக்குகளைக் குற்றம் பிடிக்கும் நோக்குடனேயே ஆராய்ந்து தோல்வியுற்று, அவர்களின் அவதூறுகள் அனைத்தும் வடிகட்டிய பொய் என நிரூபணமாகி, மீண்டும் எம்மையே அமீராக அவர்களே தேர்ந்தெடுத்து அதன் பிறகும் 4 மாதங்கள் எமது தலைமையின் கீழ் செயல்பட்டுள்ளனர். ஆக.15 மாதங்கள் எமது தலைமையை ஏற்று முஸ்லிம் ஜமாஅத்தில் செயல்பட்டார்கள். அவர்களே இப்போது மிகக் கடுமையான குற்றமாக ஹதீஸ் ஆதாரங்களுடன் எழுதி இருக்கும் அந்தக் குற்றத்தைச் செய்து உண்மை முஸ்லிம்களை இரண்டாகப் பிளந்து வெளியேறினர். 1987-ல் AQH அமைத்து பின்னர் JAQH ஆக மாற்றிக் கொண்டார்கள். நாம் அவர்களது AQHயோ அல்லது JAQHயோ என்றுமே ஏற்றுக் கொண்டதுமில்லை. அவர்களது தலைமையின் கீழ் செயல்பட்டதுமில்லை. உள்ளே சென்றிருந்தால் அல்லவா’ உடைத்துக் கொண்டு வெளியேறும் நிலை ஏற்படும். இதுகூட தவ்ஹீத் மவ்லவிகளுக்குத் தெரியாதா?
இந்த நிலையில் அவர்களின் JAQHஐ நாம் உடைக்க முயலுவதாக குற்றஞ்சாட்டி மேற்படி ஹதீஸ்களை எடுத்து எழுதி அவரின் ஆதரவாளர்களைத் தூண்டி விட்டிருக்கிறாரே? அவரின் புரோகித புத்தி இன்னுமா புரியவில்லை? இந்த ஹதீஸ்கள் எல்லாம் 1987-ல் பிரிவில்லாத குர்ஆன் ஹதீஸ்படி செயல்பட்ட ஐக்கிய முஸ்லிம் ஜமாஅத்தை இரண்டாகப் பிளந்து அவர்கள் வெளியேறிய போது அவர்களுக்குத் தெரியாதா? அதுவும் அவர்கள் அன்று நம்மை விட்டு வெளியேறியதற்குக் கூறிய காரணம், அதுவும் அல்லாஹ்மீது சத்தியம் செய்து கூறிய காரணம் (அது அப்பட்டமான, கலப்படமேயில்லாத பொய் என்பது வேறு விஷயம்? அமானித மோசடியும், பிறருக்குச் சொந்தமானதைத்தான் தாக்கிக் கொண்டதும் தான் என்பதாகும். இது தெளிவான ‘குஃப்ர்’ அல்லவே?
இன்று அவர்கள் எடுத்து எழுதி இருக்கும் ஹதீஸ்களில் காணப்படும் “யாரேனும் தனது’ அமீரிடம் விரும்பத்தகாதவற்றைக் கண்டால் அவர் பொறுத்துக் கொள்ளட்டும், தெளிவான ‘குஃப்ர்’ இருந்தால் தவிர அமீரைப் புறக்கணிக்க முடியாது” போன்ற எச்சரிக்கைகள் அன்று கண்ணில் படவில்லையா? அறிவில் உறைக்கவில்லையா? அதுவும் இந்த ‘ஜாக்ஹ்’ அமீரை என்றுமே ஏற்றுக் கொள்ளாத நம்மைப் பார்த்துச் சொல்கிறாரே? எம்மை அமீராக ஏற்றுக் கொண்டு செயல்பட்டுவிட்டு, பின் முஸ்லிம் ஜமாஅத்தைப் பிளந்து வெளியேறினாரே அப்போது உறைக்கவில்லையா? இந்த தவ்ஹீத் மவ்லவிகளின் புரோகித புத்தியை உணர முடியாத சுய சிந்தனையாளன் இதற்குப் பிறகும் இருக்க முடியுமா?
முஸ்லிம் ஜமாஅத்தை 1987ல் பிளந்து அன்று ஏற்பட்டுக் கொண்டருந்த பிரமிக்கத்தக்க சமுதாய மறுமலர்ச்சியைப் பாழாக்கினாரே? அல்லாஹ் இவரை விட்டுவிடுவானா? அந்த ஜமாஅத் இன்றுவரை பிளவுபடாமல் செயல்பட்டிருந்தால் . புரட்சியை…….. மறுமலர்ச்சியை………… சொல்லவும் முடியுமா?
அமீரை விட்டு வெளியேறுவது பற்றி, முஸ்லிம்களின் கூட்டமைப்பை உடைப்பது பற்றி மாபெரும் குற்றங்கள் பற்றி, அதாவது அவர் செய்த பெருங்குற்றங்களை நாம் செய்வதாக கதையளந்து விட்டு, அவரது இன்னொரு உள்ள உறுத்தலையும் வெளியிட்டுள்ளார்.
1400 ஆண்டுகளுக்கு முன் நபி(ஸல்) அவர்கள் அமைத்த அந்த சமுதாய கூட்டமைப்பில் நேர்வழி நடக்க விரும்பும் நாம் அனைவரும் இருக்கவேண்டும். யாரும் வெளியேறவும் கூடாது. யாரையும் வெளியேற்றுவது கூடாது என்று எமது கூற்றைத் திரித்து புதிதாக நாம் முஸ்லிம் ஜமாஅத் அமைக்கப் போவதாகவும் அப்படி அமைக்கக் கூடாது. எட்டு ஆண்டுகளுக்கு முன்பே பாக்கிஸ்தானில் அப்படியொரு ஜமாஅத் அமைக்கப்பட்டுவிட்டது. அதில் நாமும் சேர்ந்து கொள்ள வேண்டும் என்று உபதேசித்துள்ளார். 1400 ஆண்டுகளுக்கு முன் நபி(ஸல்) அமைத்த ‘முஸ்லிம் ஜமாஅத்’ பற்றி நாம் கூறினால் 8 ஆண்டுகளுக்கு முன் பாகிஸ்தானில் புதிதாக அமைக்கப்பட்ட ‘ஜமாஅத்துல் முஸ்லிம்” பற்றி இந்த தவ்ஹீத் மவ்லவி எமக்கு அறிவுரை கூறுகிறார்.
இங்கும் அவரது புரோகித சுயநலமே வெளிப்படுகிறது: முஸ்லிம் சமுதாயம் புரோகிதர்களின் பிடியை விட்டு நழுவி விடக்கூடாது என்பதில் இந்த தவ்ஹீத் மவ்லவி மிகவும் எச்சரிக்கையாக இருக்கிறார். இந்த முஸ்லிம் சமுதாயத்தை புரோகிதர்களே ஆட்டிப்படைக்க வேண்டும் என்பதே அவரது நீங்காத நினைவாக இருக்கிறது.
8 ஆண்டுகளுக்கு முன் பாகிஸ்தானில் புதிதாக அமைக்கப்பட்டிருக்கும் ‘ஜமாஅத்துல் முஸ்லிமீன்” புரோகிதர்களால் அமைக்கப்பட்ட ஒரு புதிய ஜமாஅத்தேயாகும். அந்த ஜமாஅத்தை ஏற்று அதன் அமீருக்கு பைஅத் செய்தவர்கள் மட்டும் முஸ்லிம்கள், மற்றவர்களெல்லாம் காஃபிர்கள், என்று கூறுகிறார்கள். மற்ற முஸ்லிம்கள் பின்னால் இந்த புதிய ‘ஜமாஅத்துல் முஸ்லிமீன்” உறுப்பினர்கள் தொழ மாட்டார்கள். ஏன்? இவரையும் இவரது ‘ஜாக்ஹ்’ ஜமாஅத்தையும் ‘காஃபிர்’ என்று ‘ஃபத்வா’ கொடுத்த ஜமாஅத்.
நாம் பிரிவுப் பெயர்கள் கூடாது, கூடாது என்று அடித்துக் கொள்வதெல்லாம் குர்ஆன், ஹதீஸுக்கு மாற்றம் அதனால் முஸ்லிம் சமுதாயத்தில் பிரிவுகள் ஏற்படுகின்றன என்பதனாலேயாகும். இப்போது பாகிஸ்தான் ஜமாஅத்தினர். பெயரால் தவறு செய்யாவிட்டாலும், சமுதாயத்தைப் பிரிப்பதால் தவறு செய்கின்றார்கள். தீர்ப்பு அளிக்கும் விஷயத்தில் தனி அதிகாரம் பெற்ற எஜமானனான அல்லாஹ்வே நாளை மறுமைக்கு என்று தீர்ப்பளிப்பதை ஒத்தி வைத்திருக்கும் நிலையில், இவர்கள் இங்கேயே மற்றவர்களுக்கு ‘காஃபிர் ஃபத்வா’ கொடுத்து அல்லாஹ்வின் தனி அதிகாரத்தில் தலையிடுவதோடு, சமுதாயத்தை இவ்வுலகில் பிரிந்து குழப்பத்தை ஏற்படுத்துகின்றனர்.
நாம் கூறும் ‘முஸ்லிம் ஜமாஅத்’ 1400 வருடங்களுக்கு முன் அமைத்த பிரிவே இல்லாத ஒன்றுபட்ட ‘முஸ்லிம். ஜமாஅத்’ நபி(ஸல்) அவர்கள் அமைத்துத் தந்த ஜமாஅத் அந்த ஜமாஅத், முஸ்லிம் என்றும் கூறிக் கொள்ளும் யாரையும் ‘காஃபிர்’ என்று ‘ஃபத்வா’ கொடுக்காது. புரோகிதத்தை ஆதரிக்காது. சமுதாயத்தைக் கூறு போடாது. மாற்று மத சகோதரர்களுடன் மனித நேயத்திற்கு முரணாக நடந்து கொள்ளத் தூண்டாது. புரோகிதர்கள் மட்டுமே சமுதாயத்தைக் கூறு போடுவதில் குறியாக இருப்பார்கள். மதங்களிடையே மத்ஹபுகளிடையே குரோதங்களை வளர்த்து அதன் மூலம் குளிர்காய விரும்புவார்கள். காரணம் சமுதாயத்தைக் கூறு போடாமல் புரோகிதர்களுக்கு ஆதாயமில்லை. ஏன்? வாழ்வேயில்லை.
அதனால்தான் புரோகிதராகிய இந்த தவ்ஹீத் மவ்லவி அப்படியே தனது ‘ஜாக்ஹ்’ ஜமாஅத்தில் தற்போதிருக்கும் குர்ஆன், ஹதீஸ்படி நடக்க விரும்பும் சகோதரர்கள், அதன் தீமையை விளங்கி அதிலிருந்து பிய்த்துக் கொண்டு வெளியேறினாலும், புரோகித ஜமாஅத்தான ‘ஜமாஅத்துல் முஸ்லிமீன்” என்ற 8 ஆண்டுகளுக்கு முன் பாக்கிஸ்தானில் உருவான ஜமாஅத்தில் போய் தஞ்சமடையட்டும், தாமும் பின்னால் அதில் புகுந்து தனது புரோகித வியாபாரத்தை ஜாம், ஜாம் என்று நடத்தலாம் என்று திட்டமிட்டுள்ளாரோ என்னவோ? ‘ஜாக்ஹ்’ கூடாரம் கலகலத்து வருகிறது; இன்ஷா அல்லாஹ் வெகுவிரைவில் கூடாரம் காலியாகிவிடும் என்பதற்கு தவ்ஹீத் மவ்லவி தரும் ஒப்புதல் வாக்குமூலம் இது. ஆயினும் இவர்களின் இந்த ‘ஜாக்ஹ்’ ஜமாஅத்தை விட பாகிஸ்தானில் தற்போது உருவாக்கப்பட்டுள்ள ‘ஜமாஅத்துல் முஸ்லிமீன்’ வழிகேட்டில் குறைந்த நிலையையுடையது என்பதில் சந்தேகமில்லை.
அவர்கள் தனிப் பெயர் வைப்பதிலுள்ள வழிகேட்டிலிருந்து விடுபட்டு விட்டார்கள். ஆனால் தங்களை ஏற்காதவர்களை ‘காஃபிர்’ என்று ‘ஃபத்வா’ கொடுக்கும் வழிகேட்டிலிருந்துதான் இன்னும் விடுபடவில்லை. ஆனால் ‘ஜாக்ஹ்’ ஜமாஅத்தினரோ, தனிப் பெயர் வைக்கும் வழிகேட்டிலும், மற்ற முஸ்லிம் பிரிவுகளை ‘காஃபிர்ஃ என்று ‘ஃபத்வா’ கொடுக்கும் வழிகேட்டிலும் ஆக இரண்டு வழிகேட்டில் இருக்கின்றனர். மற்ற விஷயங்களில் குர்ஆன், ஹதீஸ்படி நடக்கத் தயாராகி விட்டனர்.
இந்த தவ்ஹீத் மவ்லவியின் எழுத்திலிருந்து மவ்லவி அல்லாத ஒருவர், புரோகிதத்தின் வாடையைக் கூட விரும்பாத ஒருவர் மார்க்கம் பற்றி பேசுவதையும், எழுதுவதையும் அதில் முன்னணிணில் இருப்பதையும் எந்த அளவு பொறாமை, பொச்சரிப்புடன் வெறுக்கிறார். எதிர்க்கிறார் என்பது கண்கூடாகத் தெரிகிறது. அவரது எழுத்தின் ஒவ்வொரு வரியும் அதை நிரூபித்துக் கொண்டிருக்கிறது.
ஏதோ நாம் அமீர் பதவிக்கு ஆசைப்பட்டு ஆலாப் பறப்பது போன்ற தோற்றத்தை தனது எழுத்தில் வெளிப்படுத்தியுள்ளார். 1986-லும் அமீர் பதவியை நாம் விரும்பவில்லை. அவர்களே அதனை நம்மீது சுமத்தினார்கள். 1987-லும் அவர்களது புரோகித மனப்பான்மை நாம் கடுகளவும் ஆதரிக்காத காரணத்தால் அமீர் பொறுப்பிலிருந்து நம்மை அகற்ற மவ்லவிகள், அவர்கள் பின்னால் சென்ற படித்த பட்டதாரிகள், செல்வந்தர்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து கொண்டு பெரும் முயற்சிகள் செய்து அனைத்திலும் கடும் தோல்வியுற்று, மீண்டும் எம்மையே அமீராகத் தேர்ந்தெடுக்கும் கட்டாயத்திற்க மன விருப்பமில்லாமலேயே ஆளாயினர். அவர்கள் உறுப்பினர்கள் ஒவ்வொருவரையும் அணுகி எம்மை அமீராக்க வேண்டாம் என்று கேட்டுக் கொண்டார்கள். நாமோ யாரிடமும் சென்று எம்மை அமீராக்குங்கள் என்று கேட்கவில்லை. அமீர் பதவிக்கு ஆசைப்பட்டிருந்தால் அப்படி இருந்திருக்க முடியுமா?
எனவே நான்கு மாதங்களுக்குள் அவர்களே, இப்போது எடுத்தெழுதியுள்ள ஹதீஸ்களின் படி ‘குர்ஆனையும், ஹதீஸையும் அடிப்படையாகக் கொண்டு செயல்பட்டு, ஒரு அமீரின் தலைமையின் கீழும் இயக்கும்போது அதை உடைக்க முயல்வது எவ்வளவு பெரிய குற்றம் என்பதை இதிலிருந்து விளங்கலாம்? என்று அவர்களே ஜன்னத் ஏப்.93 பக்கம் 18-ல் குறிப்பிட்டுள்ள பெருங்குற்றத்தைச் செய்து முஸ்லிம் ஜமாஅத்தைப் பிளந்து வெளியேறி AQH பின் JAQH அமைத்து முஸ்லிம் ஜமாஅத்தின் வியக்கத்தக்க வளர்ச்சியைப் பாழாக்கினார்.
அதே சமயம் என்றுமே ‘ஜாக்ஹ்’-ல் இருந்திராத நாம் இப்போது ‘ஜாக்ஹ்’ ஜமாஅத்தை உடைக்க முயல்வதாக இந்த ஹதீஸ்களை எடுத்து எழுதி தனது ஆதரவாளர்களைத் தூண்டிவிட்டிருக்கிறார். இஸ்லாமிய ஆட்சி இங்கு இல்லாததால் அவர் இவ்வுலகில் தப்பினாலும், நாளை மறுமையில் அல்லாஹ்வின் தர்பாரில் நிச்சயம் தப்பவே முடியாது.
தவ்ஹீத் மவ்லவிகள் 2.8.87-ல் அனைத்து பொறுப்புகளையும் எம்மிடம் ஒப்படைத்து வெளியேறிவிட்டனர். 9.8.87-ல் நாமே ஒரு புது நிர்வாகக் குழு அமைத்தோம். அந்த ஜமாஅத் சகோதரர்களும் எம்மையே மீண்டும் அமீராகத் தேர்ந்து எடுத்தனர். அந்தப் பொறுப்பில் தற்காலிக நிலையில்தான் இன்று வரை செயல்பட்டு வருகிறோம். காரணம் குர்ஆன், ஹதீஸ்படி நடக்க முடிவு செய்துள்ள முஸ்லிம் சகோதரர்கள் ஒன்றுபட்டு விட்டால் அவர்கள் அனைவரும் சேர்ந்து மனமொப்பி ஒரு அமீரை தேர்ந்து எடுக்க வழி விடும் நோக்கத்தில் தான் அவ்வாறு செயல்பட்டுவருகிறோம். நாம் தான் அமீராக இருக்கிறோம். இவர் மேலும் நாமே அமீராக இருப்போம் என்று என்றுமே சொல்லவில்லை.
அமீர் பதவியில் ஆசையிருந்தால் அமீர், ஷூரா ஜமாஅத் அனைத்திலும் இப்போதிருப்பவர்களே தொடர்ந்து நீடிக்கலாம். அவர்களின் கீழ் ஒரு சாதாரணத் தொண்டனாகப் பணிபுரியத்தயாராக இருக்கிறோம். ஆனால் அவர்கள் ‘ஜாக்ஹ்’ ஜ.உ.ச. போன்றவற்றை கலைத்துவிட்டு முஸ்லிம் என்று மட்டும் செயல்பட ஒப்புக் கொள்ளவேண்டும். அவர்கள் பரப்பிவிட்ட அவதூறுகளை வாபஸ் வாங்கவேண்டும் என்று நஜாத் டிசம்பர் 92, பக்கம் 64-ல் பகிரங்கமாக அறிவிப்பு வெளியிட்டிருப்போமா? நீங்களே சொல்லுங்கள்.
அமீர் பதவிக்கு ஆசைப்படுகிறவருக்கு அந்தப் பதவி கொடுக்கப்படக் கூடாது. அப்படியே கொடுக்கப்பட்டாலும் அல்லாஹ்வின் உதவி அந்த அமீருக்கு இருக்காது என்பதை தெளிவாக அறிந்து வைத்திருக்கிறோம். நமது நோக்கம் முஸ்லிம் சமுதாயம் ஒன்றுபட்டு ஒரே தலைமையில் ஓரணியில் செயல்பட வேண்டுமென்பதே. அமீர் பதவியை அடைய வேண்டுமென்பதல்ல. தகுதியுடையோர் தாராளமாக அமீராகத் தேர்வு செய்யப்படலாம். அதற்கு நாம் ஒரு போதும் குறுக்கே நிற்கப் போவதில்லை; இது உறுதி.
முகல்லிது மவ்லவிகள் மத்ஹபுகளை நியாயப்படுத்தி 4:59 வசனத்தை திரித்து எழுதிவிட்டு அதன் இறுதிப் பகுதி அவர்களின் திரிப்புக்கு எதிராக இருப்பதால் அதனை வைத்து விடுவதுபோல், இந்த தவ்ஹீத் மவ்லவியும் தனது ‘ஜாக்ஹ்’ இயக்கத்தை நியாயப்படுத்தி மேற்படி ஹதீஸை திரித்து எழுதிவிட்டு அவரது திரிப்புக்கு எதிராக அந்த ஹதீஸின் இறுதிப்பகுதியாகிய ‘அப்போது எல்லாப் பிரிவுப் பெயர்களை விட்டும் ஒதுங்கி வாழ்வீராக….” என்ற பாகத்தை விளக்காமல் மறைத்து இருட்டடிப்பு செய்துள்ளார். புரோகிதத்தைக் காப்பாற்ற முகல்லிது மவ்லவிகள் செய்யும் அதே தந்திரத்தை இந்த தவ்ஹீத் மவ்லவியும் செய்ய ஆரம்பித்துவிட்டார் என்பதற்கு வேறு ஆதாரமும் வேண்டுமா?
இந்த தவ்ஹீத் மவ்லவி தனது புரோகித இனத்தைக் காப்பாற்றிக் கொள்ளவே இவ்வாறு முன்னுக்குப்பின் முரணாக எழுதி அவரது ஆதரவாளர்களைக் குழப்புகிறார் என்பதற்கு இதோ இன்னொரு ஆதாரம்.
‘பாகிஸ்தானிலுள்ள முஸ்லிம் ஜமாஅத்தில் ஏன் நீங்கள் சேரவில்லை என்று எங்களைக் கேட்க முடியாது. ஏனெனில் குர்ஆன், ஹதீஸை அடிப்படையாகக் கொண்டு செயல்பட்ட ஜமாஅத்திலிருந்து பெயரைச் சொல்லிக் கொண்டு அவர்கள் தனி அமைப்புக் கண்டவர்கள், இலங்கையிலும் இவ்வாறே பெயரைக் கூறுவதாக இந்த ஹதீஸ் இல்லாததால் பெயரை மட்டும் பார்த்து, நபிவழிக்கு மாற்றமாக உருவான புதுத் தலைவரை நாம் ஏற்க முடியாது? (அல்ஜன்னத் ஏப்ரல் 93 பக்கம் 20) அதாவது எட்டு ஆண்டுகளுக்கு முன் ‘முஸ்லிம்’ பெயரில் மட்டுமே செயல்படவேண்டும் என்ற நல்ல நோக்கத்துடன் குர்ஆன், ஹதீஸ் அடிப்படையிலும் ‘முஸ்லிம்’ அல்லாத பெயரிலும் செயல்பட்ட ஒரு ஜமாஅத்திலிருந்து பிரிந்து ஜமாஅத்துல் முஸ்லிமீன் அமைத்தவர்கள் புதிய ஜமாஅத்தால், அதனால் உருவான புதுத்தலைவர்கள் தவ்ஹீத் மவ்லவியும் அவரது ஆதரவாளர்களும் ஏற்க முடியாதாம்.
அதே சமயம் குர்ஆன், ஹதீஸ் வழியிலும், ‘முஸ்லிம்’ என்ற பெயரிலும் செயல்பட்ட ஜமாஅத்தின் அமீரை ஒப்புக்கொண்டு அவரின் கீழ் 1 1/2 வருடம் செயல்பட்டு விட்டு, எவ்வித நியாயமான காரணமுமில்லாமல், தங்கள் புரோகித வர்க்கத்தைக் காப்பாற்றிக் கொள்ளும் ஒரே நோக்கத்துடன் 6 வருடங்களுக்கு முன் குர்ஆன், ஹதீஸ் அடிப்படையில் செயல்பட்ட முஸ்லிம் ஜமாஅத்தைப் பிளந்து அமைத்துக் கொண்ட JAQH ஜமாஅத்தும் அதன் அமீருமாம். மிகவும் உவப்பாம். அவரது இந்த உளரலை நாம் ஏற்க வேண்டுமாம். பாகிஸ்தான் புதிய ஜமாஅத்தில் காணப்படும் நியாயமான பெயர் காரணம் கூட இவர்களது JAQH ஜமாஅத்துக்கு இல்லையே. இந்த நிலையில் அதைவிட தனது JAQH ஜமாஅத் ஏற்றமானது என்று எந்த முகத்தோடு எழுதியுள்ளார். விளக்கம் தருவாரா?
ஆக மவ்லவிகள் மவ்லவிகள்தான், புரோகிதர்கள்தான், தங்கள் புரோகித இனத்தை விட்டுக் கொடுத்து சமுத்துவ, சகோதரத்துவ சமுதாயம் அமைய அவர்கள் ஒருபோதும் முன்வரப்போவதில்லை. முஸ்லிம் சமுதாயம் தான் குறிப்பாக குர்ஆன், ஹதீஸை நேரடியாக விளங்கிச் செயல்பட விரும்பும் சகோதரர்கள் அவர்களை இனங்கண்டு புறக்கணிக்கவேண்டும். அப்போது தான் சமத்துவ சமுதாயம் மலர வழிபிறக்கும். அல்லாஹ் அருள்புரிவானாக.