ஐயமும்! தெளிவும்!!
ஐயம்: திருமணம் செய்யும் போது (அதற்கு முன்னால்) திருமண அழைப்பிதழ் (அச்சு பதித்து) வைத்து அழைப்பது நபிவழியா? அழைப்பிதழ் அடிப்பது “பித்அத்தா?” தெளிவு தாருங்கள்கீழக்கரை: மதார், அபுதாபி.
தெளிவு: திருமண அழைப்பிதழ் அச்சடித்து அதன் மூலம் உறவினர்களுக்கும், அறிமுகமானவர்களுக்கும் அழைப்புக் கொடுப்பது நபிவழியுமல்ல; பித்அத்துமல்ல. பழக்கத்திலுள்ளது. அச்சு எந்திரம் இல்லாத அந்தக் காலத்தில் வாய் வழியாக சொல்லப்பட்டதை இன்று எழுத்து வடிவில் கொடுக்கிறோம். அன்று ஹதீஸ்கள் வாய்வழியாகத்தான் அறிவிக்கப்பட்டன. இன்று அச்சடித்த நூல்கள் மூலம் அறிந்து கொள்கிறோம். இதை “பித்அத்” என்று சொல்ல முடியுமா? முடியாது. விஞ்ஞான வளர்ச்சி மூலம் அடையும் அனுகூலங்களை மனிதன் முறைப்படி அனுபவிப்பது “பித்அத்” அல்ல. எனவே திருமண அழைப்பிதழ் அச்சடித்துக் கொடுப்பதும், வாழ்த்துச் செய்திகள் கடித மூலமோ, தந்தி மூலமோ அனுப்புவதும் “பித்அத்” அல்ல என்பதை விளங்கவும்.
அல்லாஹ்வின் புறத்திலிருந்து வஹி மூலம் மட்டுமே பெறப்பட்டு மார்க்கமாக அறிவிக்கப்பட்ட விஷயங்களில் அவற்றின் லாப – நஷ்டங்களை மறுமையில் மரணத்திற்குப் பின்னரே நாம் சந்திக்கும் நிலையிலிருக்கும் விஷயங்களில் நபி(ஸல்) அவர்கள் காட்டித்தராத விஷயங்களை (அமல்களை) நுழைப்பதே பித்அத்தாகும்.