நாகை, ஜி. அஹ்மது.
ஒரு மனிதன் இன்னொரு உயிருக்கு உதவிட நினைக்கும்போது, “மனித நேயம்’ பிறக்கிறது. ஆனால், ஒரு மனிதன் பொறாமை, கோபம், பழி வாங்கும் எண்ணம் ஆகியவைகளை ஏற்றுக் கொள்ளும் போது, இம் “மனித நேயம்’ என்கிற மலர் கருகி சாம்பலாகி விடும்.
ஒவ்வொரு மனிதனும், “தான் பார்க்கிற, பேசுகிற, பழகுகிற உயிர்களுக்கு எந்தத் துன்பமும் செய்யக் கூடாது’ என்று உறுதி கொண்டு வாழ்ந்தால் “மனித நேயம்’ மலர்ந்து மனதினுள் நம்மை அறியாமலேயே ஒரு மகிழ்ச்சி பிறக்கும்.
மனித குலம் எதிர்பார்க்கிற உலக அமைதி மற்றும் சமாதானம் இவற்றைப் பெற மிகச் சிறந்த வழி, “மனித நேயம்’ என்பது உண்மையிலும் உண்மை.
அரபு நாட்டில் பிறந்த நபி(ஸல்) அவர்கள் உலக மக்களுக்கு மனித நேயத்தை போதித்ததுடன், அதன்படி வாழ்ந்தும் காட்டினார்கள். இதனால், நபிகளார் போற்றுதலுக்குரியவராய் மக்கள் இதயங்களில் இடம் பிடித்துக் கொண்டார்கள்.
மக்களின் கண்களில் கண்ணீரை வரச் செய்பவர் தலைவர் அல்ல; உதடுகளில் சிரிப்பை வரச் செய்பவரே உண்மையான தலைவர் என்பதை உலகுக்கு எடுத்துச் சொன்னது மனித நேயம்.
மனித குலத்தின் முன்னேற்றத்துக்கு தடையாய் இருக்கும் சாதி, மத, இன வேறுபாடுகளை மனித நேயம் போக்கும்.
உலகில் சமாதானத்தையும், மனித உரிமையையும் பாதுகாக்கும் நோக்குடன் ஐ.நா. சபை போன்ற சில அமைப்புகளும் இயங்கத்தான் செய்கின்றன. மக்கள் அமைதியாக வாழக் கூடி கூடி பேசுகின்றனர். ஆனால், மனித சமுதாயம் நிம்மதியாக வாழ இயலவில்லை. காரணம், மனிதன் ஆக்க சக்தியை விட்டு, அழிவு சக்தியை கையில் எடுத்துக் கொண்டுள்ளான். ஒவ்வொரு நாட்டினரும் தங்களது மக்களிடம் மனிதாபி மான உணர்ச்சியை, மனித நேயத்தை மக்கள் உள்ளங்களில் வளர்க்காததே காரணம்!
மனித நேயத்தின் அடித்தளமே சகோதரத் துவம்தான். கூட்டுத் தொழுகை(ஜமாஅத்) மூலம் சகோதரத்துவத்தை ஏற்படுத்திய மார்க்கம் இஸ்லாம் மட்டுமே! “ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்’ என சொல்லி விட்டால் மட்டும் போதுமா? பணம் படைத்த செல்வந்தர்களை ஏழைகளுக்கு பொறுப்பேற்க, “ஜகாத்தை’ (ஏழை வரி) கடமையாக்கி, “மனித நேயத்துக்கு’ முக்கியத்துவம் அளித்துள்ளது இஸ்லாம்.
“நோன்பு’ (விரதம்) தனி நபர் கடைப்பிடிக்க வேண்டிய ஒரு செயல் என்றாலும், காலத்தை பொதுவாக ஆக்கி சகோதரத்துவத்தை உண் டாக்கி மனித நேயத்தையும் காட்டுகிறது இஸ்லாம். “ஹஜ்'(மக்காவிற்கு செல்லும் புனித யாத்திரை) வணக்க வழிபாட்டில் அரபாத் சம வெளியில் ஒரே சமயத்தில் லட்சக்கணக்கான மக்களை ஒன்று திரட்டி வைத்து சகோதரத்துவத்தையும், மனித நேயத்தையும் வெளிப் படுத்துகிறது இஸ்லாம்.
இப்படி அடுக்கிக் கொண்டே போகலாம். இந்த அளவுக்கு சகோதரத்துவ புரட்சியை ஏற் படுத்தியுள்ளதைப் பார்க்கும்போது மனித நேயத்தின் மறுபெயராக இஸ்லாம் இம்மண் ணில் வாழ்ந்து கொண்டிருக்கிறது. மனித நேயம் என்பது ஒவ்வொரு மனிதனின் இதயத்தினுள்ளும் இருக்கிறது. எனவே, மனித நேயத்தின் நலன் அறிந்து, அனைவரும் மனித நேயத்துடன் வாழ்வோமாக!
இஸ்லாமிய வாழ்வில் அமைதி!
இஸ்லாம் என்றால் “அமைதி’ என்று பொருள். அமைதியான வாழ்வு வாழ இஸ்லாம் அருமையான வழியைக் காட்டுகிறது. அமைதியைத் தேடி அலைய வேண்டியது இல்லை. நம்முடைய உண்மை நிலையை புரிந்து கொண்டு, அதன் மூலம் இறைவன் எங்கும் நிறைந்தவன் என்பதை தெளிவாக தெரிந்து கொண்டால், எல்லாம் ஒன்று என்ற நிலை ஏற்பட்டுவிடும். அதன் பின் கருத்து வேறுபாடு, சண்டை சச்சரவு எதுவும் ஏற்படாது. அமைதியான வாழ்வு ஒன்றே எங்கும் நிலை பெற்றிருக்கும். அதுதான் உண்மையான மார்க்கம்.
இக்கால வாழ்க்கை இயந்திர மயமாகி விட்டது. இப்போது கம்ப்யூட்டர் யுகம் வேறு; பல வசதிகள் இருந்தும் மக்களிடம், “இடியாப்ப சிக்கல்’ போன்ற பல பிரச்சினைகள் இருந்து கொண்டு ஆட்டிப் படைப்பதை நாம் அன் றாட வாழ்வில் காணலாம். இறுதியில் அவர்கள் தேடிச் செல்வது அமைதியை மட்டுமே. ஒருவர், “வியாபாரத்தில் நட்டம் ஏற்பட்டு விட்டது’ என புலம்புவார். இன்னொருவர், “கடன் வாங்கி எனது பிள்ளைகளை படிக்க வைத்தேன். ஆனால், அவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கவில்லையே!’ என அங்கலாய்ப் பார். மூன்றாமவர், “எனது கடைசி மகளின் திருமண செலவுக்கு வீட்டை விற்க வேண்டிய நிலை வந்தது. ஆனால், இப்போது வீட்டு வாடகைக்கூட கொடுக்க இயலாது அல்லல் படுகிறேன்’ என்பார். இப்படிப் பலர் தங்களது வாழ்க்கையில் ஏற்படும் துன்ப-துயரங்களை, அல்லல்-அங்கலாய்ப்புகளை மற்றவர்களிடம் கூறி புலம்புவர். இவர்களும் நிம்மதியைத் தேடக் கூடியவர்களாகவே இருப்பர்.
வசதி வாய்ப்புள்ள மக்கள் தங்களது நேரத்தை செலவிட நிம்மதியைத் தேடி அலை கின்றனர். டி.வி. பார்ப்பதும், திரை இசைக் கேட்பதும், விளையாட்டிலும், கேளிக்கை கூத்திலும் பொழுதைக் கழித்து விட்டு அமைதி யைத் தேடுபவர்களாக இருக்கின்றனர். ஆனால், இஸ்லாம் மார்க்கமானது ஒரு மனி தனுக்குத் துன்பமோ, துயரமோ ஏற்பட்டால் அவற்றைப் போக்கி அமைதி ஏற்படுத்த மேலே கூறப்பட்ட வழிமுறைகளையயல்லாம் கடை பிடிக்கும்படி கூறவில்லை.
அவர்கள் எத்தகையோர் என்றால், அவர்கள் தான் முற்றிலும் நம்பிக்கை கொண்டவர்கள்; மேலும், அல்லாஹ்வை நினைவு கூர்வதைக் கொண்டுதான் இதயங்கள் அமைதி பெறுகின்றன என்பதை அறிந்து கொள்க!
(திருக்குர்ஆன் 13:28)
ஒரு மனிதனுக்கு துன்பமோ, துயரமோ ஏற் பட்டால் மனம் அமைதி பெற இறைவனை நினைவு கூர்வதால் தான் மனித உள்ளங்கள் அமைதி பெறுகின்றன என்று அல்லாஹ் கூறுகி றான். அகிலத்தின் இறைவனே இப்படி கூறி விட்ட பிறகு வேறு எதில் அமைதியைத் தேடுவது!
நபி(ஸல்) அவர்களின் மகளார் பாத்திமா நாயகி, “எனது அன்பிற்குரிய தந்தையே! வீட்டு வேலைகளை நானே செய்வதால் எனது கைகள் காய்த்து விட்டன; எனக்கு ஒரு அடிமையை தந்து உதவினால் பேருதவியாக இருக்கும்!’ என வேண்டினார்.
எனது அருமை மகளே! நீங்கள் இரவில் உறங்குமுன், சுப்ஹானல்லாஹ்(அல்லாஹ் தூயவன்) 33 தடவைகளும், அல்ஹம்துலில் லாஹ் (எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே) 33 தடவைகளும், அல்லாஹு அக்பர் (அல்லாஹ் பெரியவன்) 34 தடவைகளும் கூறுங்கள். அது உங்களுக்கு ஒரு பணியாளரை விட திக்ரு (அல்லாஹ்வை தியானித்தல்) சிறந்தது எனக் கூறி பதிலளித்தார்கள்.
அறிவிப்பவர்: அலீ(ரழி) ஆதாரம் : புகாரி.
மேற்கூறப்பட்ட நபி மொழி மூலம் இறை வனை “திக்ரு’ செய்வதால் நமது கஷ்டங்கள்- கவலைகள் நீங்கி மன அமைதி ஏற்படுகின்றன என்பதை நாம் அறிந்து செயலாற்றுவோமாக!