அபூ அப்தில்லாஹ்
குர்ஆன், ஹதீஃதில் அணுவளவும் ஆதாரமில்லாமல் தங்களைத் தாங்களே மவ்லவிகள், ஆலிம்கள், அல்லாமாக்கள், மார்க்க விற்பன்னர்கள், மார்க்கத்தில் அதிகாரம் பெற்றவர்கள் என 4:49, 53:32 இறைக் கட்டளைகளுக்கு முரணாக தம்பட்டம் அடிப்பவர்கள், இந்த வானத்தின் கீழுள்ள படைப்புகளிலேயே ஆகக் கேடு கெட்டவர்கள், அதிலும் குறிப்பாக மற்ற மதங்களின் குருமார்களை விட கேடுகெட்டவர்கள் என்பதற்கு வாழ்வியல் வழிகாட்டி இறுதி நெறிநூல் அல்குர்ஆனிலிருந்தே பல வசனங்களை எடுத்துக்காட்டி 1984லிலிருந்து நிலைநாட்டி வருகிறோம். பெருங்கொண்ட முஸ்லிம்களால் எமது இந்தக் கூற்றை ஜீரணிக்க முடியவில்லை. எம்மீது அளவு கடந்து ஆத்திரம் கொள்கிறார்கள்.
யார் நேர்வழி பெறுவார்?
மற்றபடி இறைவன் மனிதர்களாகிய இவர்களுக்கென்றே தெளிவாக விளக்கியுள்ள குர் ஆன்மொழி பெயர்ப்புகளை நேரடியாகப் படித்துப் பார்த்து அல்லாஹ் என்ன சொல்கிறான் என்பதை விளங்க முற்படுவதில்லை. 29:69 இறைவாக்குக் கூறுவது போல் அப்படி முயற்சி செய்தால் அல்லவா அல்லாஹ் அவர்களுக்கு ஞானத்தை – நேர்வழியை அருள் புரிவான்.
குருகுல மட ஃபத்வா!
இப்போது பாருங்கள்! இந்தியாவிலேயே மிகப் பிரபல்யமான தாருல் உலும் தேவ்பந் மதரஸா அதாவது குருகுல மடம் அளித்துள்ள ஒரு கூமுட்டை ஃபத்வா-தீர்ப்பு எந்த அளவு மார்க்க விரோதமானது, ஆண் ஆதிக்கத்தை நிலைநாட்டுவது; பெண்ணியத்தைக் கொச்சைப்படுத்தி பெண்களை அடிமைப்படுத்தி கேவலப்படுத்துவது, மாற்று மதத்தினர் இஸ்லாமிய மதம் காட்டுமிராண்டி காலத்து மதம் என துர் பிரச்சாரம் செய்ய வழிவகுப்பது என்பதை நடு நிலையோடு பரிசீலனை செய்து பாருங்கள்.
ஒரு கணவன் குடிபோதையில் நேரடியாகவோ இரு சாட்சிகளை வைத்துக் கொண்டோ அல்ல; தொலைபேசி மூலம் தனது மனைவியை தலாக், தலாக், தலாக் என ஒரே தவணையில் முத்தலாக் சொன்ன விவகாரம் பற்றித் தீர்ப்பு இவர்களிடம் கேட்கப்பட்டு விவகாரத்து நிறைவேறிவிட்டது, இனி கணவன் மனைவியாக வாழ முடியாது என்று 13.03.2012-ல் கூமுட்டை தீர்ப்பு அளித்துள்ளனர்.
இத்தனைக்கும் போதை தெளிந்த கணவன் உண்மையில் மனைவியை தலாக் சொல்லும் எண்ணமில்லை; போதையில் உளறி விட்டேன் என்றும் கூறியுள்ளான். அப்படி இருந்தும் தலாக் நிறைவேறிவிட்டது என்று மூடத் தனமாகத் தீர்ப்பு அளித்துள்ளனர். “”குடிகாரன் பேச்சு விடிந்தால் போச்சு” என்ற சாதாரண அறிவு கூட தங்களைத் தாங்களே மேதைகள் எனப் பீற்றிக் கொள்ளும் இந்த மூட முல்லாக்களுக்கு இல்லையே!
பரேல்வி புருடா!
தேவ்பந் ஃபத்வா இப்படி இருக்க, பரேல்வி பிரிவு “”இத்திஹாதே மில்லத்” தலைவர் தாகீர் ரஜாகான் இத்தீர்ப்பைச் சரிகண்டு ஒரு சுய விளக்கமும் கொடுத்துள்ளார். ஷரீஅத்தை(?) மாற்ற முடியாது. குடிபோதையில் தலாக் சொன்னாலும் செல்லும். தலாக் கல்லைப் போன்றது, திருமணம் கண்ணாடி. கண்ணாடியில் கல்லை எறிந்தால் அது நொறுங்கி விடத்தான் செய்யும் என்பதே அவரது சுயவிளக்கம்.
பரேல்வி மூடமுல்லா கூறும் “ஷரீஅத்’ அல்லாஹ் 45:18-ல் கூறும் அல்லாஹ் கொடுத்த “ஷரீஅத்’ அல்ல; இவர்கள் கண்மூடிப் பின்பற்றும் புரோகித முன்னோர்களான யூதக் கைகூலிகளின் கற்பனையில் உருவானதையே “ஷரீஅத்’ என்கிறார். ஹிந்துப் புரோகிதர்களிடம் நடைமுறையில் இருக்கும் “மனுநீதி’ போன்று முஸ்லிம் மதப்புரோகிதர்கள் நடை முறைப்படுத்தும் மனுநீதியையே இவர்கள் “ஷரீஅத்’ என்று கூறி மக்களை ஏமாற்றி வயிறு வளர்க்கிறார்கள்! 45:17யும் படித்துத் தெளிவு பெறவும்.
மதகுருமார்கள் மூடர்கள் என்பது சரியே!
இவர்களை நாம் மூடர்கள், மூட முல்லாக் கள் என்று கூறுவதை அறிவு ஜீவிகளும் மிகக் கடுமையாக ஆட்சேபிக்கிறார்கள். நாம் வரம்பு மீறுவதாகக் குற்றப்படுத்துகிறார்கள். அல்லாஹ் பாதுகாப்பானாக. நிச்சயமாக நாம் வரம்பு மீறவில்லை. மக்களை வழிகேட்டில் இட்டுச்செல்லும் இந்த மதகுருமார்களைக் கடுமையாகக் கண்டித்துச் சொல்லும், இழித்தும் பழித்தும் சொல்லும், சபித்தும் சாபமிட்டும் சொல்லும், அவர்களைச் சபிப்பதற்கும் சாபமிடுவதற்கும் அல்லாஹ், மலக்குகள், மனிதர்கள் அனைவருக்கும் முழு உரிமையும் இருக்கிறது என்று கூறும் எண்ணற்ற குர்ஆன் வசனங்கள், குறிப்பாக 2:159,161,162 இறைவாக்குகள் கொடுத்துள்ள உரிமையின் அடிப்படையிலேயே இம்மதகுருமார்களை மிகக் கடுமையாக விமர்சிக்கிறோம். கடுமையாக விமர்சிக்கிறோமே அல்லாமல் அல்லாஹ் 2:159,161,162 இறைவாக்குகளில் அனுமதித்தபடி சபிக்கவில்லை.
மதகுருமார்களின் மமதையே வரம்பு மீறல்!
தெளிவான, நேரடியான குர்ஆன் வசனங்களையும், ஆதாரபூர்வமான நபிமொழிகளையும் எடுத்துக் கொடுத்த பின்னரும் 2:160 சொல்வதுபோல் தங்கள் தவறை உணர்ந்து அல்லாஹ் விடம் பாவமன்னிப்புக் கோராமல், வீம்பாக மமதையுடன் தங்கள் தவறான-வழிகேடான தீர்ப்புகளையே ஷைத்தானைப் போல் நிலை நாட்ட முற்படுகிறவர்களை எவ்வளவு கடுமையாக விமர்சித்தாலும் அது வரம்பு மீறிய செயல் அல்ல. குர்ஆன் அனுமதிக்கும் செயலே. மேலும் இறுதி இறைத் தூதரும் அன்று கஃபாவுக்கு மிகச் சமீபமாக இருந்த குருகுல மடமான தாருந் நத்வா ஆலிம்களை-அடிமுட்டாள்கள்-ஜாஹில்கள் என்றும் அவர்களின் தலைவன் தமக்கு மிக நெருங்கிய உறவினன், குறைஷ்களால் அபுல் ஹிக்கம்-ஞானத்தின் தந்தை என வானளாவ போற்றப்பட்டவனை அபூ ஜஹீல்-மூடர்களின் தந்தை எனவும் அடையாளம் காட்டி வழி காட்டி இருக்கிறார்கள்.
குர்ஆன் வழிகாட்டுகிறது!
இப்போது இவர்கள் கொடுத்துள்ள கூமுட்டை ஃபத்வாவுக்கும், குர்ஆன், ஹதீஃதுக்கும் அணு வளவாவது தொடர்பு இருக்கிறதா என்று பாருங்கள். தலாக் பற்றி வாழ்வியல் இறுதி நெறி நூல் குர்ஆன் எத்தனையிடங்களில் தெளிவு படுத்தி இருக்கிறது என்பதை நீங்களே குர்ஆனை எடுத்துப் படித்துப் பாருங்கள். 2:225-237, 4:35,128, 58:1-4, 65:1-7, 66:5 இறைவாக்குகள் அனைத்தையும் முழுமையாக நிதானமாக சுய சிந்தனையுடன் படித்துப் பார்த்தாலே “”தலாக்” எப்படிச் சொல்ல வேண்டும், அதன் பின்னர் எப்படி நடக்க வேண்டும் என்பதை தெளிவாக அறிந்து கொள்ள முடியும். ஒரே தவணையில் “”முத்தலாக்” அனுமதி இல்லை என்பதையும் அறிய முடியும். மேலும் மனைவி மாதவிடாயை விட்டு தூய்மையாக இருக்க வேண்டும்(65:1), தலாக் சொல்லும் போது இரு சாட்சிகள் இருக்க வேண்டும் (65:2), தலாக் மூன்று தவணைகளில் சொல்ல வேண்டும். ஒரே தவணையில் மூன்று தலாக் சொன்னால் அது ஒரு தலாக்காகவே கணக்கிடவேண்டும், ஆண்களுக்கு இருக்கும் அதே உரிமைகள் பெண்களுக்கும் உண்டு, ஆனால் ஆண்களுக்கு ஒரு படி உயர்வுண்டு (2:228) அதாவது ஆண் சாட்சிகளுடன் நேரடியாகவே தலாக் சொல்லலாம். பெண் ஜமாஅத்தார் மூலம் “”குலா” பெற வேண்டும். இது மட்டுமே வேறுபாடு.
ஹதீஃத் வழிகாட்டுகிறது!
இந்த குர்ஆன் வசனங்கள் அல்லாமல், நபி மொழிகளிலும் “”தலாக்” பற்றித் தெளிவான ஆதாரங்கள் கிடைக்கின்றன. புகாரீ(ர.அ) பாகம் 4 பக்கம் 703லிருந்து 705 வரை மற்றும் ஹதீஃத் எண் 4003, முஸ்லிம்(ர.அ) பாகம் 2 ஹதீஃத் எண் 2932, 2933, 2934,இந்த ஹதீஃத் கள் அனைத்தையும் கவனமாகப் படிப்பவர்கள் நபி(ஸல்) அவர்கள் ஒரே தவணையில் முத்தலாக் கூறினால் அதை ஒரே தலாக்காக கணக்கிட்டார்கள், மூன்றாகக் கணக்கிடவில்லை என்பதும் (நிய்யத்) எண்ணம், மற்றும் 2:286 இறைவாக்கு அடிப்படையில் நெருக்கடி, நிர்ப்பந்தம், போதை, பைத்தியம், தவறுதல், மறதி ஆகிய நிலைகளில் ஒருவர் மணவிலக்கு அளித்தல், (இறைவனுக்கு) இணை கற்பித்தல் உள்ளிட்ட செயல்களைச் செய்துவிட்டால் அவை ஏற்புடையதாக ஆகாது என்பது தெளிவாகத் தெரிகிறது. அப்படியானால் இந்த மவ்லவிகளான மதகுருமார்களின் வழிகெட்ட சிந்தனைக்கு அடித்தளம் இட்ட ஆதாரம் எது?
ஆம்! அவர்கள் தும்பை விட்டு வாலைப்பிடிக்கும் ஒரே ஆதாரம் முஸ்லிம் 2932-234 ஹதீஃத் களில் காணப்படும் உமர்(ரழி) பற்றிய செய்தி தான். அது வருமாறு:
இப்னு அப்பாஸ்(ரழி) அவர் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள் மற்றும் அபூபக்கர்(ரழி) அவர் ஆட்சி காலத்திலும் உமர் (ரழி) அவர்களது ஆட்சியின் (முதல்) இரண்டு ஆண்டுகளிலும் முத்தலாக் ஒரு தலாக்காகவே இருந்தது. பின்னர் உமர்(ரழி) அவர்கள், நிதானமாகச் செயல்பட்டு வந்த ஒரு விஷயத்தில் மக்கள் அவசரம் காட்டுகிறார்கள். எனவே முத்தலாக்கை அவர்களுக்கெதிராக நாம் செயல் படுத்தினால் என்ன என்று கூறி அவ்வாறே அதைச் செயல்படுத்தினார்கள்.
உள்ளச்சத்தோடு சிந்தியுங்கள்!
இங்கு அல்லாஹ்வின் அச்சத்தை உள்ளத்தில் இருத்தி நடுநிலையுடன் சிந்திக்க வேண்டும். ஒரே தவணையில் முத்தலாக் விஷயத்தில் அல் லாஹ்வின் தூதரின் நடைமுறை தெளிவாக இருக்கிறது. அடுத்து கலீஃபா பொறுப்பேற்ற அபூ பக்கர்(ரழி) நடைமுறை தெளிவாக இருக் கிறது. ஏன் உமர்(ரழி) ஆரம்ப இரண்டு வருட காலத்தில் இருந்த நடைமுறை தெளிவாக இருக் கிறது. இப்படி நேர்வழி உள்ளங்கை நெல்லிக்கனி போல் தெள்ளத் தெளிவாக இருந்தும், உமர்(ரழி) பின்னர் சுயமாக நடைமுறைப்படுத்தியதாகச் சொல்லப்படுவது தான் இம்மதகுருமார்களுக்கு மார்க்கமாக-நேர்வழியாகத் தெரிகி றது. இவர்கள் முஹம்மது(ஸல்) அவர்களை இறைத் தூதராக ஏற்றிருக்கிறார்களா? அல்லது உமர்(ரழி) அவர்களை இறைத் தூதராக ஏற்றி ருக்கிறார்களா? அல்லாஹ் குர்ஆனில் முஹம்மது (ஸல்)அவர்களைப் பின்பற்றக் கட்டளையிட்டிருக்கிறானா? அல்லது முஹம்மது(ஸல்) அவர்களைப் புறக்கணித்து உமர்(ரழி) அவர்களைப் பின்பற்றக் கட்டளை இட்டிருக்கிறானா? மதகுருமார்களின் பதில் என்ன?
இதற்கு முன்னரும் ஒரு சமயத்தில் இதே தேவ்பந்து குருகுலமட மதகுருமார்கள் ஓர் அறிவீனமான ஃபத்வாவைக் கொடுத்து ஒரு பெண்ணின் வாழ்க்கையைப் பாழ்படுத்திச் சீரழித்தனர். அதாவது ஒரு பெண்ணின் கணவனின் தகப்பன் அதாவது அப்பெண்ணின் மாமன் குடிபோதையில் அப்பெண்ணைப் பலாத்காரம் செய்து கற்பழித்து விட்டான். இது பற்றி அப்பெண்ணின் கணவன் தேவ்பந்த் முல்லாக்களிடம் ஃபத்வா கேட்டுள்ளார். அவர்கள் கொடுத்த கொடூர ஃபத்வா என்ன தெரியுமா?
அப்பெண் அவளது கணவனுக்கு ஹராமாகி விட்டாள். அவளுடன் அக்கணவன் வாழ முடியாது என்பதே. குடிகார காமுகனான பெண்ணின் மாமனைத் தண்டிக்கும் யோக்கியதை இந்த மதகுருமார்களுக்கு இல்லை. உண்மையில் தண்டிக்கப்படவேண்டியவன் அக்குடிகார மாமனே! அதற்கு யோக்கியதையோ தகுதியோ, அதிகாரமோ இல்லாத இந்த மூட முல்லாக்கள் பாவம் அந்த அப்பாவி அபலைப் பெண்ணின் வாழ்வைச் சீரழிக்கும் கொடூர ஃபத்வாவை கொடுத்து அப்பெண்ணின் வாழ்வையே இருளச் செய்து விட்டனர். இதுதான் இந்த மூட முல்லாக்களின் பெரும்(?) சாதனை!
மதகுருமார்கள் எப்படி ஏமாற்றுகிறார்கள்?
உடனே இம்மதகுருமார்கள் என்ன சொல்லி அப்பாவி மக்களை திசை திருப்புவார்கள் தெரியுமா? அப்படியானால் உமர்(ரழி) தவறு செய்து வழிகெட்டுச் சென்றுவிட்டார்கள் என்று சொல்கிறீர்களா? அவர்கள் நரகவாதியா? என்று கேட்டு தங்களின் பக்த கோடிகளை ஏமாற்றி வஞ்சிப்பார்கள். அவர்கள் சென்று போனவர்கள்; அவர்கள் செய்தது அவர்களுக்கு; நீங்கள் செய்ததே உங்களுக்கு; அவர்கள் செய்தது பற்றி நீங்கள் விசாரிக்கப்படமாட்டீர்கள் (2:134,141) என்று அல்லாஹ் தெளிவுபடுத்தியிருப்பது இந்த மூட முல்லாக்களின் உள்ளங்களில் உறைக்காது.
“”ஆதம் தவறு செய்தார். ஆதத்தின் மக்களும் தவறு செய்யக்கூடியவர்களே. தவறு செய்பவர் களில்(தவ்பா) மன்னிப்புக் கேட்பவர்களே சிறந்தவர்கள்” என்ற நபி(ஸல்) எச்சரிக்கை இவர்களது கல் மனதில் உறைக்காது.
இறைத் தூதர்களும் தவறிழைப்பவர்களே!
இறைத்தூதர்களும் தவறுக்கு அப்பாற்பட்டவர்கள் அல்ல; ஆயினும் அவர்கள் அல்லாஹ்வின் கண்காணிப்பிலும் வஹியின் தொடர்பிலும் இருந்த காரணத்தால் அவர்கள் உடனுக்குடன் வஹி மூலம் திருத்தப்பட்டார்கள். இறுதி நெறிநூல் குர்ஆனைப் பெற்ற இறுதித்தூதரையும் கண்டித்துத் திருத்தப்பட்ட குர்ஆன் வசனங்களைப் பார்க்கிறோம். (பார்க்க: 2:120,145, 4:105, 6:35, 45:18, 66:1,2, 80:1-10) இறுதித் தூதரின் நிலையே இதுவென்றால் மற்றவர்களின் நிலை பற்றி நாம் என்ன சொல்ல முடியும்? இறுதித் தூதருக்குப் பிறகு யார் மார்க்கத்தில் இல்லாததை மார்க்கமாக்கினாலும் அது ஒரு போதும் மார்க்கமாகாது. அது பெரும் வழி கேடு; நரகில் கொண்டு சேர்க்கும்.
உமர்(ரழி) அவர்களின் பல சிறப்புகள்!
உமர்(ரழி) சுவர்க்கத்து நன்மாராயம் பெற்றவர்களில் ஒருவர், “”உமரின் நாவில் அல்லாஹ் பேசுகிறான்” என்று நபி(ஸல்) புகழ்ந்து பேசி இருக்கிறார்கள். உமர்(ரழி) விருப்பப்படி சில குர்ஆன் வசனங்களே இறங்கியுள்ளன. யுத்த கைதிகளைப் பற்றிய தீர்ப்பில் இறைத்தூதர், அபூபக்கர்(ரழி) இருவரின் முடிவை விட உமர் (ரழி) அவர்களின் முடிவை அல்லாஹ் சரிகண்டிருக்கிறான். நபி(ஸல்) அவர்களுக்குப் பிறகு நபி இல்லை; அப்படி நபி வருவதாக இருந்தால் அதற்கு முழுத் தகுதி பெற்றவர் உமர்(ரழி) என்று நபி(ஸல்) சிலாகித்துக் கூறி இருக்கிறார் கள். உமர்(ரழி) செல்லும் வழியில் ஷைத்தான் வரமாட்டான் என்றும் புகழ்ந்து கூறப்பட்டுள்ளது. பதுரு யுத்தத்தில் உமர்(ரழி) அவர்கள் கலந்து கொண்டதால் அவர்களின் முன், பின் பாவங்கள் அனைத்தும் அல்லாஹ்வால் மன்னிக்கப்பட்டு விட்டன. அவரது பாவங்கள் நன்மையாக மாற்றப்பட்டும் இருக்கலாம். இவை அனைத்தும் உமர்(ரழி) அவர்களின் சிறப்பு அம்சங்கள்.
உமர்(ரழி) அவர்களும் தவறிழைப்பவரே!
இத்தனைச் சிறப்பு அம்சங்களைப் பெற்ற உமர்(ரழி) அவர்களும் மனிதர் என்ற நிலையில் தவறுக்கு அப்பாற்பட்டவர் அல்ல; மனிதர்களில் எவரும் தவறுக்கு அப்பாற்பட்டவர்களாக ஒருபோதும் ஆகமுடியாது என்பதை மனிதர்களுக்கு உணர்த்த அல்லாஹ் உமர்(ரழி) அவர்களையே இரண்டு மாபெரும் தவறுகளைச் செய்ய வைத்து அத்தவறுகள் குர்ஆனை மட்டுமே கொண்டு திருத்தப்பட்டு அதன் மூலம் தனது வல்லமையை நிலைநாட்டியுள்ளான். மனிதர்களில் யாரையுமே பின்பற்றக்கூடாது என எச்சரிக்கிறான். (பார்க்க 7:3, 33:36)
முதல் பெரும் தவறு!
முதல் மாபெரும் தவறு, அல்லாஹ்வின் கட்டளைக்கு அடிபணிந்து நபி(ஸல்) அவர்கள் ஹுதைபியாவில் குறைஷ்களின் மிகமிக அநீதமான நிபந்தனைகளை ஏற்றதை உமர்(ரழி) அவர்களால் ஏற்க முடியவில்லை. நபி(ஸல்) அவர்களிடமே நேரில் சென்று கடுமையாக விமர்சித்தும் ஆறுதலடையாமல், அபூபக்கர் (ரழி) அவர்களிடமும் கடுமையாக விமர்சித்தது வரலாற்றில் தெளிவாகப் பதிவாகியுள்ளது. அவர்களது விமர்சனத்திற்கு மாறாக, அந்த ஹுதைபியா உடன்படிக்கை மகத்தான வெற்றி என்று 48-வது அத்தியாயத்தையே அல்லாஹ் இறக்கி அருளினான். உமர்(ரழி) அவர்கள் இத்தவறுக்காக நீண்டகாலம் வேதனைப் பட்டு அல்லாஹ்விடம் மன்னிப்புக் கேட்டுக் கொண்டிருந்தார்கள்.
இரண்டாவது பெரும் தவறு!
அடுத்து இரண்டாவது ஹிமாலயத்தவறு அதாவது மாபெரும் ´ஷிர்க்கை ஏற்படுத்தும் தவறு, நபி(ஸல்) அவர்கள் இறந்துவிட்ட நிலையில், நபி(ஸல்) அவர்களின் இறப்பை ஏற்காமல், யாராவது நபி(ஸல்) இறந்து விட்டதாகச் சொன்னால் அவரின் தலையைக் கொய்து விடுவேன் என்று வாளைக் காட்டி வீராவேசமாகக் கர்ஜித்துக் கொண்டிருந்தது. உமர்(ரழி) அவர்களை எதிர்த்துப் பேசும் துணிச்சல் நபி தோழர்களில் எவருக்கும் இருக்கவில்லை. மெளனம் காத்தனர்.
வெளியே சென்றிருந்த அபூபக்கர்(ரழி) வந்து நபி(ஸல்) அவர்களின் உடலைப் பார்த்து, அவர்களின் மரணத்தை உறுதி செய்து கொண்டு, “”யார் முஹம்மதை வணங்கிக் கொண்டிருந்தார்களோ, அந்த முஹம்மது இறந்து விட்டார்; யார் அல்லாஹ்வை வணங்கிக் கொண்டிருக்கிறார்களோ, அல்லாஹ் என்றும் உயிருடன் இருப்ப வன், நித்தியஜீவன், அவனுக்கு மரணமே இல்லை என்று கூறி 3:144, 39:30 குர்ஆன் வசனங்களைப் படித்துக் காட்டிய மாத்திரத்தில் உமர்(ரழி) அவர்கள் தனது தவறை உணர்ந்து அப்படியே உட்கார்ந்துவிட்டார்கள். இதுவே ஈமானுடைய அடையாளம். மனிதன் தவறு செய்வது இயற்கை. தவறு செய்வது மனிதன் கூடவே பிறந்த குணம். ஆனால் அந்தத் தவறு வாழ்வியல் நெறிநூல் குர்ஆன் வசனங்களைக் கொண்டு உணர்த்தப்பட்டால் தனது தவறிலிருந்து உடன் மன்னிப்புக் கேட்டு மீள்வதே ஈமானிருப்பதற்குரிய அடையாளம். அதற்கு மாறாக சுய விளக்கம் கொடுத்து குர்ஆன் வசனங்களை நிராகரிப்பது ஷைத்தானுடைய குணம். ஷைத்தானைப் பின்தொடர்ந்து நரகில் சேர்க்கும்.
மதகுருமார்களின் உண்மை நிலை என்ன?
இப்போது இந்த மதகுருமார்களான மவ்லவிகள் அல்லாஹ்வின் நேரடிக் கட்டளைகளுக்கு அடிபணிகிறார்களா? அல்லது ஷைத்தானைப் போல் அல்லாஹ்வின் கட்டளைகளுக்கு சுய விளக்கம் கொடுத்து அவற்றை நிராகரிக்கிறார்களா? அவர்கள் விளங்காவிட்டாலும் அவர்களின் முகல்லிதுகளில் சிலராவது சிந்தித்து நேர்வழி பெறவேண்டும் என்பதே எமது வேண்டுகோள்.
உமர்(ரழி) தக்லீது செய்யவில்லை!
மேலும் உமர்(ரழி) 7:3 இறைக் கட்டளைக்கு முற்றிலும் அடிபணிந்து யாரையும் தக்லீது செய்யாமல் சுயமாக ஆய்வு செய்தே முடிவெடுத்திருக்கிறார்கள். எனவே அது தவறாக இருந்தாலும் நிச்சயம் ஒரு கூலி உண்டு; தண்டனை இல்லை. ஆனால் இந்த மதகுருமார்களான மவ்லவிகளோ குர்ஆனையும், நபி செய்திகளையும் ஆராயாமல் உமர்(ரழி) அவர்களை 7:3 இறைக் கட்டளைக்கு முற்றிலும் முரணாக தக்லீது செய்கிறார்கள். இவர்கள் இறைத் தண்டனையிலிருந்து தப்ப முடியுமா?
மனிதர்களில் யாருக்கும் கொடுக்கப்படாத தனிச் சிறப்புகளை உடைய உமர்(ரழி) அவர்களையே இரு பெரும் தவறுகளைச் செய்ய வைத்து இறைவன் மனித குலத்திற்கு என்ன உணர்த்துகிறான்? சிந்திக்க வேண்டாமா? மனிதர்களில் எத்தனைப் பெரிய மேதையாக இருந்தாலும், எப்படிப்பட்டக் கொம்பனாக இருந்தாலும் அவர் தவறுக்கு அப்பாற்பட்டவர் அல்ல. அவரும் தவறு செய்யும் மனிதனே. “”யானைக்கும் அடி சறுக்கும்” என்பது முது மொழி. இதைப் படிப்பினையாகக் கொள்ள வேண்டும். படிப்பினை பெறுவார்களா?
குர்ஆன், நபிவழிகாட்டல் அல்லாத வேறு நேர்வழி இல்லை!
எனவே அல்லாஹ்வின் கண்காணிப்பிலும், வஹி மூலம் இறைத் தொடர்பிலும் இருந்த இறுதித் தூதரின் வழிகாட்டலைத் தவிர்த்து வேறு எவருடைய வழிகாட்டலும் ஒருபோதும் மார்க்கம் -நேர்வழி ஆகாது; அதுவே கோணல் வழி-வழிகேடு- நரகில் கொண்டு சேர்க்கும் என்பதை உணர்ந்து செயல்படுகிறவர்களே வெற்றியாளர்கள்; பாக்கியவான்கள்.
எனவே உமர்(ரழி) நடைமுறைப்படுத்தினார்கள் என்பதை ஆதாரமாகக் கொண்டு நபி (ஸல்) அவர்களின் தெளிவான வழிகாட்டலைப் புறக்கணித்து மூன்று தலாக் ஒரே நேரத்தில் சொல்வதை ஏற்று கணவன்-மனைவி உறவைப் பிரிப்பது பெருங்குற்றமாகும். அதே போல் நெருக்கடி, நிர்பந்தம், போதை, பைத்தியம், தவறுதல், மறதி ஆகிய நிலைகளில் “தலாக்’ சொன்னால் அது செல்லத்தக்கதல்ல என்பதற்கு தெளிவான ஹதீஃத் ஆதாரங்கள் இருக்கும் நிலையில், குடிபோதையில் ஒரே தவணையில் முத்தலாக் சொன்னதை ஏற்று கணவன்-மனைவி உறவைப் பிரிப்பதும் பெருங்குற்றமாகும், பெரும் பாவச்செயலாகும்.
பெண்களுக்கு மதகுருமார்கள் பெரும் அநீதி இழைக்கிறார்கள் :
மதகுருமார்களான இந்த மவ்லவிகள் பெண்கள் விஷயத்தில் நடைமுறைப்படுத்தும் பெரும் கொடுமை, பெண்களுக்கு பெருத்த அநீதி இழைக்கும் பெரும் பாவம் இன்னொன்றும் உண்டு. குர்ஆன், ஹதீஃத் நேரடிப் போதனைக்கு முற்றிலும் முரணாக குடிபோதையில், ஆத்திரத்தில், வற்புறுத்தலில் ஒரே தவணையில் சொல்லப்படும் முத்தலாக்கை ஏற்று கணவன்- மனைவி உறவைப் பிரித்துப் பெண்ணுக்குப் பெரும் அநீதி இழைக்கும் பெரும் பாவிகளான இந்த மதகுருமார்கள், அதற்கு நேர் மாறாக கணவன் கொடுமைப்படுத்துகிறான், மடாக் குடிகாரன், ஹராமான வழியில் வைப்பாட்டியை வைத்துக் கொண்டோ அல்லது இரண்டாவது திருமணம் முடித்துக் கொண்டோ முதல் மனைவியை வாழ வைப்பதில்லை என்று உரிய காரணங்களைக் காட்டி கணவனிடமிருந்து விவாக விடுதலை செய்யுங்கள்(குலா) என்று மனைவி கோரினால் கேடுகெட்ட இம்மதகுருமார்கள் அப்போது என்ன ஃபத்வா-தீர்ப்பு கொடுப்பார்கள் தெரியுமா?
கொடுமையான தீர்ப்பு!
கணவன் மனைவி உறவைப் பிரிப்பதால் அர்ஷே நடுங்குகிறது. அந்தப் பாவத்தை நாங்கள் செய்யமாட்டோம். கல்லானாலும் கணவன், புல்லானாலும் புருஷன். நீ அந்தக் கணவனுடன் தான் வாழவேண்டும் என்று தீர்ப்பளித்து அந்த அபலைப் பெண்ணின் வாழ்க்கையைப் பாழடிப்பார்கள். இதை விடப் பெரியதொரு கொடுமை பெண்ணினத்திற்கு இழைக்கப்படுவதை உங்களால் பார்க்க முடியுமா? இந்த மதகுருமார்களின் அகராதியில் பெண் என்றால் அவள் அடிமை. அவள் கல்வி அறிவு பெறக் கூடாது; கணவன் எப்படிப்பட்டக் கொடுமைக் காரணமாக இருந்தாலும் சாகும் வரை அவனுடன்தான் வாழவேண்டும். யார் என்றே அடையாளம் தெரியாமல் பெண் தனது முகத்தை மூடிக்கொண்டே வெளியில் வர வேண்டும்.
அதனால் எப்படிப்பட்ட ஆள் மாறாட்டங்கள், எப்படிப்பட்ட ஏமாற்றுவித்தைகள், கூட்டங்களில் கணவனே தனது மனைவியையே கண்டுபிடிக்க முடியாமல் தடுமாறித் தத்தளித்தாலும் பரவாயில்லை. ஆள் அடையாளம் தெரியாமல் பெண்கள் முகத்தை மறைத்தே தீர வேண்டும். அதுவே மார்க்கக் கட்டளை(?) இப் படி எல்லாம் மார்க்கம் அல்லாததை மார்க்கம் ஆக்கியும், மார்க்கத்தை மார்க்கம் அல்லாததாக்குவதோடு, மார்க்கம் பெருங்குற்றம், கொடிய இணைவைப்பு என்று சொல்வதை எல்லாம் மார்க்கமாக்கும் கொடும்பாவிகள் தான் இம் மதகுருமார்கள்.
இம்மதகுருமார்களிடம் இருக்கும் ஒற்றுமை!
ஆதித்தந்தை ஆதம்(அலை) அவர்களது காலத்திலிருந்து இறுதித் தூதர் முஹம்மது(ஸல்) அவர்கள் வரை அதன் பின்னர் இன்றுவரை மனித சமுதாயத்தில், சட்ட விரோதமாக, திருட்டுத்தனமாக நுழைந்து கொண்டு மக்களிடையே போலி கடவுள் பக்தியைப் போதித்து, இணை துணை, தேவை எதுவுமே இல்லாத ஏகன் இறைவனுக்கும் அவனது அடிமைகளான மனிதர்களுக்குமிடையில் இடைத்தரகர்களாகப் புகுந்து கொண்டு பெருங்கொண்ட மக்களை ஏமாற்றி வஞ்சித்து அவர்களை நரகில் தள்ளி நரகத்தை நிரப்ப அதாவது ஷைத்தானின் சபதத்தை நிறைவேற்ற அவனுக்குத் துணை போகும் அனைத்து மதங்களின் குருமார்களிடமும் அவர்களது செயல்பாடுகளில் ஒற்றுமை காணப்படவே செய்கிறது. அவையாவன.
1. 2:186, 7:3, 33:36 இறைக்கட்டளைகளுக்கு முரணாக இறைவனுக்கும் அடியானுக்கும் இடையில் இடைத்தரகனாகப் புகுவது.
2. முன்னோர்கள், மூதாதையர்கள் மீது முரட்டுப் பக்தியை ஊட்டி படைப்புகளை இணை தெய்வங்களாக ஆக்குவது. அதன் உச்சக் கட்டம் கற்களையும், மரங்களையும், பிராணிகளையும், பறவையினங்களையும், கபுருகளையும் குட்டித் தெய்வங்களாக ஆக்குவது.
3. இறைக் கட்டளைகளை நிராகரித்து அவற்றிற்கு முரணானவற்றை சுய விளக்கம் கொடுத்து அவற்றை ஏற்று நடக்கச் செய்வது.
4. பெண்ணினத்தை ஆன்மா அற்றப் படைப்பாக ஆக்கி, பெண்களை ஆண்களுக்கு அடிமைப்படுத்துதல்.
5. மூட நம்பிக்கைகளையும், அநாச்சாரங்களை யும் பக்தியின் பெயரால் வளர்த்து அவை மூலம் மக்கள் சொத்துகளை தவறான முறை யில் கொள்ளை அடித்தல்; வயிறு வளர்த்தல்.
6. இவற்றை மக்கள் மீது திணிக்க நாங்கள் தான் கடவுளுக்கு நெருங்கியவர்கள், மதத்தில் அதிகாரம் பெற்றவர்கள், மோட்சத்திற்கு வழி காட்டுகிறவர்கள் என அகந்தையுடனும், ஆணவத்துடனும் பெருமை பேசுவது.
7. 7:3, 33:36 இறைக் கட்டளைகளுக்கு முர ணாக இறைவனுக்கும் அடியானுக்கும் இடையில் எந்த வகையிலாவது இடைத்தரகைப் புகுத்தி இறைவனுக்கு இணைவைக்கச் செய்து 4:48,116 சொல்வதுபோல் நரகில் தள்ளுவது ஷைத்தானின் நேரடி ஏஜண்டாகச் செயல்படுவது.
முஸ்லிம் மதகுருமார்களான மவ்லவிகளி லிருந்து ஏனைய மதங்கள் அனைத்தின் மதகுரு மார்களிடமும் இப்படிப்பட்டக் கேடுகெட்ட குணங்கள் அனைத்துமோ, அல்லது இவற்றில் ஒரு சில நீங்கலாகவோ மண்டிக் கிடப்பதை புத்தியுள்ளவர்கள் அவதானிக்க முடியும். புத்தியை இந்த மதகுருமார்களிடம் அடகு வைத்து விட்டு, அவர்கள் சொல்வது தான் வேதவாக்கு எனக் கண்மூடி ஏற்றுச் செயல்படுகிறவர்கள் நாளை நரகில் கிடந்து வெந்துக் கரியாகிக் கொண்டு, இறுதி வாழ்வியல் வழி காட்டி அல்குர்ஆன் 7:35-41, 33:66-68, 34:31-33, 37:27-33, 38:55-64, 40:47-49, 41:29, 43:36-45 இறைவாக்குகள் கூறுவது போல் அழுது கண்ணீர் வடித்துக் கதறுவதோடு இந்த மதகுருமார்களை மிகக் கடுமையாகச் சபிக்கப் போகிறார்கள். அறிவுள்ளவர்கள் இம்மதகுருமார்களின் வெளிவேஷத்தைக் கண்டறிந்து அவர்களைப் புறக்கணித்து குர்ஆனைப் பற்றிப் பிடித்து வெற்றியடைவார்கள். அல்லாஹ் அருள் புரிவானாக!