அபூ அப்தில்லாஹ்
கற்றது கைமண் அளவு! கல்லாதது உலகளவு!! என்று ஒளவைப் பாட்டிக் கூறியுள்ளார். ஆக மனிதனுக்குக் கொடுக்கப்பட்டுள்ள அறிவு மிகமிக அற்பமான அறிவு, (குர்ஆன் 17:85) இந்த அற்பமான அறிவைக் கொண்டு உலகளவில் அல்ல, அண்ட சராசரங்களை விட மிகமிக அதிகமான முழுமையான அறிவுள்ள ஏகன் இறைவனுடன் போட்டி போட முடியுமா? அற்பமான அறிவுடைய மனிதனின் ஆய்வில் உருவானதுதான் ஜனநாயகம். ஜனநாயகம் என்றால் மக்களில் அதிகமானோரின் விருப்பப்படி நடைபெறும் ஆட்சி என்று பொருள்.
அதற்கு மாறாக அண்ட சராசரங்களையும் அவற்றிலுள்ளவற்றையும், மனிதனையும் படைத்த இணை துணை இல்லாத ஏகனான இறைவன் தன் முழுமை பெற்ற இறுதி வாழ்வியல் நெறிநூல் குர்ஆனின் ஆன்ஆம் ஆறாம் அத்தியாயம் 116-ம் வசனத்தில் என்ன கூறுகிறான் என்று பாருங்கள்!
“”பூமியில் உள்ளவர்களில் பெரும்பாலோரை நீர் பின்பற்றினால் அவர்கள் உம்மை இறைவனின் பாதையை விட்டு வழிகெடுத்து விடுவார்கள். வெறும் யூகங்களைத்தான் அவர்கள் பின்பற்றுகிறார்கள். இன்னும் அவர்கள் கற்பனைகளிலேயே மூழ்கிக் கிடக்கிறார்கள். (6:116)
இங்கு இறைவன் என்ன கூறியுள்ளானோ அவை நிதர்சணமாக ஜனநாயக ஆட்சியில் நடைமுறைப் படுத்தப்படுவதை அனுபவத்தில் பார்க்கத்தானே செய்கிறோம். ஜனநாயகம் பண நாயகமாக மாறி அதற்கு மேலும் குண்டர் நாயகமாகிக் குண்டர்களின் ஆட்சியே ஜனநாயக ஆட்சியின் பெயரால் பல்வேறு நாடுகளில் நடைபெற்று வருகிறது.
நீதித்துறையில் பணம் கொடுத்துத் தீர்ப்பைப் பெறுவது போல், ஜனநாயகத்தில் பணம் கொடுத்து வாக்குகளை வாங்கும் அவலமே காணப்படுகிறது. எங்களின் வாக்குகளுக்குப் பணம் கொடுக்கப்பட வில்லை. எனவே நாங்கள் வாக்களிக்கமாட்டோம் என்று சில இடங்களில் மக்களின் குரல் ஓங்கி ஒலிக்க ஆரம்பித்துவிட்டது.
மக்கள் வாக்குகளைப் பெற கையூட்டாகப் பணம் கொடுக்க வேண்டுமென்றால், கட்சிகளும் பணத்தைக் கையூட்டாகப் பெறும் கட்டாயத்திற்கு ஆளாகின்றன. டாஸ்மாக் மதுபானம் மூலம் நாட்டுக்கும், வீட்டுக்கும், குடும்பத்திற்கும், உடலுக்கும் மெகா கெடுதல் ஏற்படுகிறது என்பதை அறிய முடியாத அறிவீனர்கள் அரசியல் கட்சிகளில் இருக்க முடியுமா? அப்படியிருந்தும் ஆட்சியாளர் கள் பட்டி தொட்டிகளெல்லாம், தேநீர்க் கடைகளை விட அதிகமாக மதுக்கடைகளை நடத்துகிறார்கள். அதில் அரசுக்கு மட்டும் வருமானம் இல்லை. ஆட்சியாளர்களுக்கும் முறை தவறி பெரும் வருமானம் வரத்தான் செய்கிறது.
ஒருவனைக் குற்றவாளி எனச் சுட்டுவிரலால் சுட்டும்போது மூன்று விரல்கள் நம்மைச் சுட்டுகின்றன. அதாவது அதே தவறை நாமே செய்து கொண்டு, நம்மை மறந்து மற்றவர்களைக் குற்றப்படுத்த முற்படுகிறோம் என்பதை இது உணர்த்தவில்லையா? உதாரணமாகச் சமீபத்தில் தமிழக மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் “”குழந்தைகள் மூலம் வரும் வருமானம் வீட்டுக்கு அவமானம்” என்று மக்களுக்கு அறிவுரை கூறியது ஊடகங்கள் மூலம் மக்கள் அறிந்தது. ஆனால் டாஸ்மாக் மதுபானம் மூலம் வரும் வருமானம் அரசுக்கும், ஆட்சியாளர் களுக்கும், குறிப்பாக முதல் அமைச்சருக்கு அவமானம் என்பதை மாண்புமிகு முதலமைச்சர் கண்டு கொள்ளவில்லை என்பது தானே உண்மை. காரணம் தரங்கட்ட பணநாயக அரசியல்தானே!
இதுபோல் இன்று ஜனநாயக ஆட்சி முறையில் ஆட்சியில் அமரும் எந்தக் கட்சியினராக இருந்தாலும் அனைத்துத் துறைகளிலும் கையூட்டுப் பெறாமல் இல்லை. மக்கள் நலனுக்காகப் போடும் அனைத்துத் திட்டங்களிலும் கையூட்டு, இலவசங்களைக் கொடுப்பதிலும் கையூட்டு, இப்படி கையூட்டு இடம் பெறாத எந்த ஒரு நிகழ்வும் இடம் பெறுவதில்லை.
முன்னைய ஆட்சியில் கையூட்டுப் பெற்றுக் கொண்டு அனுமதித்த எப்படிப்பட்ட, உயர்வான மக்களுக்கு நலன் தரும் திட்டமாக இருந்தாலும் ஆட்சி மாறினால் அத்திட்டங்களும் முடக்கப்படும். பொதுமக்களுக்கு எப்படிப்பட்டத் துன்பங்கள், துயரங்கள் நேர்ந்தாலும் ஆட்சியிலுள்ளவர்கள் அதைக் கண்டுகொள்ள மாட்டார்கள். ஒருக்கால் அத்திட்டங்களை டெண்டர் எடுத்தவர்கள் அப்போது ஆட்சியிலிருந்தவர்களுக்குக் கொடுத்தது போல், புதிய ஆட்சியினருக்கும் கொடுத்தால் மட்டுமே திட்டம் தொடர வழி பிறக்கும். விளைவு திட்டத்திற்கு அரசு ஒதுக்கியத் தொகையில் மிகப் பெரும் பகுதி ஆட்சியருக்கும், அதிகாரிகளுக்கும் கையூட்டாகக் கரைந்து விடும். திட்டம் முழுமையாக முறையாக அமையாது; அரைகுறையாக முடிக்கப் பெற்று நட்டுக்கு, மக்களுக்குப் பெரும் நட்டத்தை ஏற்படுத்தும்.
இப்படி ஆட்சியில் அமர்வோர் குறுக்கு வழிகளில் கோடிகோடியாகப் பணத்தைக் குவிப்பதில் குறியாக இருக்கிறார்களே அல்லாமல் மக்களுக்குச் சேவை செய்வது, தொண்டாற்றுவது இரண்டாம் பட்சமே. ஆட்சியாளர்கள் செய்யும் அரைகுறை சேவையும் மக்களை மயக்கி மீண்டும் ஆட்சியில் அமரும் நோக்கமே அல்லாமல் உண்மையான சேவை மனப்பான்மையுடன் இருக்கவே இருக்காது. ஆட்சியாளர்களின் தரங்கெட்டப் போக்கிற்கு அடிப்படைக் காரணம் போலி ஜனநாயக ஆட்சி முறைதானே!
தேர்தலில் கோடிகோடியாக மக்களுக்கு லஞ்சம் கொடுத்து ஆட்சிக்கு வருவதாக இருந்தால் அப்பணத்தைக் கையிலிருந்தா கொடுக்க முடியும்? மேலே விளக்கியது போல் லஞ்சமாக கோடி கோடியாக மக்கள் பணத்தைக் கொள்ளை அடித்துத்தான் வாக்காளர்களுக்குப் பணமாக, துணிமணியாக, மது பாட்டில்களாகக் கொடுக்க முடியும்.
ஒரேயொரு தொகுதியின் இடைத் தேர்தல்; தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதிலிருந்து கோட்டை சென்னையிலிருந்து புதுக்கோட்டைக்கு மாற்றப் பட்டுவிட்டது. ஒட்டுமொத்த மந்திரிகளும் அங்குக் குடியேறிவிட்டனர். கோட்டையில் முறையாக நடக்க வேண்டியவை நடைபெற்றிருக்குமா? அங்கு அவர்களுக்கு என்ன தலைபோகும் பணி? மக்கள் அறிய முடியாத இரகசியமா? தேர்தல் ஆணையம் என்னதான் கட்டுப்பாடுகளை விதித்தாலும், தடுப்பு நடவடிக்கைகள் எடுத்தாலும் அதையெல்லாம் மீறி பல நூறு கோடிகள் கொடுத்து வாக்குகள் விலைக்கு வாங்கப்பட்டுள்ளன என்பதில் ஐயமுண்டா?
பணம் கொடுத்து வாக்குகளை விலைக்கு வாங்கும் அராஜகப் போக்கு நாளுக்கு நாள் வளர்ந்து கொண்டே போகிறது என்பது, மக்கள் நலனில் உண்மையான அக்கறை உள்ளவர்களை வேதனைப் படுத்தத்தான் செய்கின்றது. இந்த மனித நேயமற்ற அராஜகச் செயலை மாற்றி அமைக்க வழி வகை உண்டா? முன்னாள் தேர்தல் ஆணையர் வாக்காளர்களுக்குப் பணம் பட்டுவாடா செய்வதை எங்களால் தடுக்க முடியவில்லை என்று பகிரங்கமாகவே ஒப்புக் கொண்டுள்ளார்.
அப்படியானால் இதற்கு மாற்று வழியே இல்லையா? நிச்சயமாக உண்டு. அற்பப் புத்தியுள்ள மனிதனின் அறிவில் உதித்த இந்த ஜனநாயக ஆட்சி முறையை மாற்றி, வாழ்வியல் வழிகாட்டும் முழுமை பெற்ற நெறிநூல் அல்குர்ஆன் கொடுக்கும் இறையாட்சியை நிலைநாட்ட முன்வந்தால் நிச்சயம் சுபீட்சம் பிறக்கும். அனைத்து மக்களும் சுகமாக வாழ வழி பிறக்கும். இதுவே மிகமிகச் சிறந்த முதன்மையான வழி.
இதற்குத் தயாராகும் மனப்பக்குவம் மக்களுக்கு இல்லை என்றால், குறைந்தபட்சம் இந்தப் பணநாயக ஆட்சிமுறையையாவது மாற்றி அமைக்க முன்வர வேண்டும். தேர்தல் தேதி அறிவித்த பின்னர் அரசு மக்களுக்கு எவ்வித நல்லுதவித் திட்டங்களையும் செயல்படுத்தக் கூடாது என்ற விதி இருப்பது போல், தொகுதிக்குள் வேட்பாளர்களோ, வெளியாட்களோ யாரும் நுழையக் கூடாது என்ற விதியையும் ஏற்படுத்த வேண்டும்.
ஊடக வசதி இல்லாத முற்காலத்தில் வேட்பாளர்கள் தொகுதி தொகுதியாகச் சென்று மக்களை நேரில் சந்தித்து அவர்கள் சாதித்தவற்றையும், சாதிக்க இருப்பதையும் எடுத்துச் சொல்லும் கட்டாயம் இருந்தது. அன்று வேட்பாளர்களால் வீட்டு வாசல் வரைதான் செல்ல முடிந்தது. ஆனால் இன்றோ நவீன ஊடக வசதிகளால் அவர்களின் படுக்கையறை வரை வேட்பாளர்கள் நுழையும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. இப்போது நேரில் சென்று சந்திக்கும் அவசியம் இல்லவே இல்லை!
மரியாதை நிமித்தம் நேரில் சென்று சந்தித்தால் தான் மக்கள் மதிப்பளித்து எங்களுக்கு வாக்களிப்பார்கள் என்பது வெத்துவேட்டு. இன்றைய சூழ்நிலை எப்படி மாறிவருகிறது என்றால் தங்கள் வீட்டில் நடைபெறும் திருமணம் போன்ற நற்காரி யங்களுக்கே நேரில் சென்று அழைப்பது குறைந்து வருகிறது. அழைப்பிதழ் மூலம், அலைபேசி மூலம் அழைப்பதே இன்று அதிகரித்து வருகிறது. இந்த நிலையில் வேட்பாளர்கள் நேரில் சென்று கேட்டால் தான் மக்கள் தங்களுக்கு வாக்களிப்பார்கள் என்பது உண்மையல்ல. வாக்குகளை விலைக்கு வாங்கும் தீய நோக்குடனேயே மக்களைச் சந்திக்கச் செல்கிறார்கள்.
மக்கள் சொத்தை தவறான வழிகளில் கொள்ளை அடிக்கும் நோக்கம் இல்லாமல், உண்மையிலேயே மக்கள் தொண்டு செய்ய வேண்டும் என்ற நன்னோக் கம் இருந்தால், எவ்விதப் பதவியும் இல்லாமல் அன்றாடம் மக்கள் சேவை செய்ய முடியும். தொண் டாற்ற முடியும். அப்படி அத்தொகுதியில் தேர்தல் அல்லாத காலங்களில் மக்கள் சேவையில் தன்னை ஈடுபடுத்தும் ஒருவர் அத்தொகுதிக்கு எவ்வித விளம் பரமும் இல்லாமலேயே நன்கு அறிமுகமாகி விடு வார் என்பதில் சந்தேகமுண்டா? ஒருபோதும் இல்லை. அப்படிச் சேவையாற்றும் ஒருவர் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட பின்னர் அத்தொகுதிக்குள் தலைகாட்டாத நிலையிலேயே பெரும் வெற்றி பெறுவார் என்பதில் சந்தேகமுண்டா?
ஆம்! மக்கள் சொத்தை முறைதவறி தில்லுமுல்லு செய்து, தனது பதவியைத் தவறாகப் பயன்படுத்தி கோடிகோடியாகக் கொள்ளை அடிக்கப் பேராசை கொண்டுள்ள அரசியல்வாதிகளும், அரசியல் கட்சி யினரும் இத்திட்டத்தைக் கடுமையாக எதிர்ப்பார் கள் என்பதில் ஐயமில்லை. ஆனால் அதற்கு மாறாக நல்லுள்ளம் கொண்ட மக்களுக்கு உண்மையிலேயே தொண்டு செய்யும், சேவை மனப்பான்மையுள்ள சாதாரண எளிய மக்கள் இத்திட்டத்தை வரவேற் பார்கள் என்பதில் ஐயமில்லை.
தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட பின்னர் தேர்தல் பிரசாரத்தின் பேரால் வேட்பாளர்களும், அவர்களின் தொண்டர்களும் தொகுதிகளுக்குள் அனுமதிக்கப்படும் காலமெல்லாம் முன்னால் தேர்தல் ஆணையர் குரை´ சொன்னது போல் வாக்காளர் களுக்கு பணம் கொடுப்பதை ஒருபோதும் தடுக்க முடியாது. தொகுதிகளுக்குள் வேட்பாளர்களும், மந்திரிகளும், கட்சித் தொண்டர்களும் தேர்தல் காலத்தில் நுழைவதைத் தடுத்தால் மட்டுமே வாக்குகளை விலைக்கு வாங்கும் தீயவழி ஒழியும். குறைந்தது குண்டர்நாயகம், பணநாயகம் ஒழிந்து குறைகள் நிறைந்த ஜனநாயகமாவது. மலர வழிபிறக் கும். அறிவு ஜீவிகளே முறையாகச் சிந்தியுங்கள்! செயல்பட முன்வாருங்கள்!