அபூ அப்தில்லாஹ்
சத்தியத்தினுள்ளே மனிதக் கற்பனைகள் நுழையும்போது அது கருத்து வேறுபாடுகளாக உருவெடுக்கிறது. அது இறுதியில் ஒன்றுபட்ட மனித சமுதாயத்தைப் பல மதத்தவர்களாக, அவர்களையும் பல கூறுகளாகப் பிரித்து விடுகிறது. ஆதம்(அலை) காலம் முதல் இன்று வரை இதுவே தொடர் கதையாக இருக்கிறது.
மனிதக் கற்பனை சத்தியத்தை எந்த அளவு நாறடித்து விடுகிறது என்பதற்கு ஓர் உதாரணம் அந்த மனிதனிடமே இருக்கிறது. பரிசுத்தமான உயர் ரகப் பொருட்களைக் கொண்டு தயாரிக்கப்பட்ட கமகம என மணம் கமழும் உயர் ரக ஹல்வா. ஷோகேஸில் இருக்கும்போதே வாய் ஊறும்படிச் செய்கிறது. அனைவரின் கவனத்தையும் ஈர்க்கிறது. அதைத் தயாரிக்கும்போது பலர் கைகள் பட்டு, பல கைகள் மாறி கடைக்கு வந்து, பின் கண்ணாடிப் பெட்டியில் பார்வைக்காகக் கைகளால் வைக்கப்பட்டுப் பின் அதிலிருந்து எடுக்கப்பட்டு விற்கும் வியாபாரி, வாங்கும் நபர், அவர் வீட்டிலுள்ளவர்கள் என்று பல கைகள் மாறுகிறது. ஆயினும் அதன் ஒரிஜினாலிட்டி-பரிசுத்த நிலையில் எந்த மாற்றமும் இல்லை. அப்படியே இருக்கிறது.
மனிதன் தன் கையிலிருந்ததை தன் உள்ளே செலுத்தினான். உள்ளே சென்று கலப்படமாகி வெளியே வந்தது. விளைவு! பார்ப்பவர்களின் வாய் ஊறச் செய்து கவர்ந்திழுத்த ஹல்வா, இப்போது அதே மனிதன் விரண்டோடும் நாற்ற மெடுக்கும் ஒன்றாக மாறிவிட்டது. அது மனிதனைத்தான் விரண்டோடச் செய்கிறது. ஆயினும் இன்னொரு பிராணியை அது கவர்ந்திழுக்கிறது. என்ன ஆச்சரியம் பார்த்தீர்களா?
இதே நிலைதான் இறை கொடுத்த வாழ்க்கை நெறிக்கும் இந்த மனிதனால் ஏற்பட்டு வருகிறது. இறை கொடுத்த வாழ்க்கை நெறி-சத்திய மார்க்கம் அல்லாஹ் தனது முன்னய நெறிநூல்கள் அனைத்தையும் ஒருங்கிணைத்து இறுதி நெறி நூலில் அறிவித்தது அப்படியே இருக்கும் நிலை யில், நபி(ஸல்) அவர்கள் அல்லாஹ்வின் கண்காணிப்பில் அந்த இறுதி நெறிநூலின் அடிப்படையில் செயல்படுத்திய நடைமுறைகள் அப்படியே இருக்கும் நிலையில், எத்தனை கைகள் மாறினா லும் அவற்றின் ஒரிஜினாலிட்டி-பரிசுத்த நிலை மாறாமல் அப்படியே இருக்கும்.
ஆனால் இந்த மனிதன் அவற்றைத் தன்னுள் செலுத்தி தனது கற்பனையைக் கலந்து அதனைக் கலப்படமாக்கி வெளியாக்கினால், பின்னர் அவற்றிற்கும் ஹல்வாவுக்கு ஏற்பட்ட கதியே ஏற்பட்டு விடுகிறது. மனிதப் பண்புடையவர்கள் அவற்றை விட்டு விரண்டோடுவார்கள்; மேற்படி மிருகப் பண்புடையவர்கள் மட்டுமே அவற்றால் கவரப்படுவார்கள். இந்த உதாரணம் மிகவும் கடுமையாக இருந்தாலும், முகஞ் சுளிக்கச் செய்தாலும் சட்டென புரியும் விதத்தில் இருப்பதால் எழுத வேண்டியதாயிற்று. ஆயினும் இவ்வுதார ணத்தை வெறுப்பவர்கள், மனிதக் கற்பனைகள் கலந்த மதங்களை விரும்புவதுதான் ஆச்சரியத்தை தருகிறது. நேர் வழியிலிருந்து வழிகேட்டிற்கு மனிதனை இழுத்துச் செல்ல கங்கணம் கட்டியுள்ள ஷைத்தானின் ஆதிக்கமே இதற்குக் காரணமாக இருக்கிறது. (இங்கு குர்ஆன், ஹதீஸ் பரிசுத்த மாக இருக்கிறது. மனிதர்களின் சுய கற்பனைகளையே இவ்வாறு வர்ணித்துள்ளோம். சுய நலமிகள் திசை திருப்புவார்கள். மயங்க வேண்டாம் என எச்சரிக்கிறோம்)
இறைவன் தான் தேர்ந்தெடுத்த பல ஆயிரக் கணக்கான இறைத் தூதர்களைத் தன் கண்காணிப்பில் வைத்திருந்ததால், வஹியுடன் தொடர்போடு வைத்திருந்ததால், அவர்கள் மனிதர்களாக இருந்தாலும், அவர்கள் மனிதர்கள் என்ற இயல்பின்படி ஏற்படும் மனிதக் கற்ப னையை விட்டும், அவர்கள் மக்களுக்குப் போதித்த சத்திய மார்க்கத்தைக் காப்பாற்றிக் கொடுக்கும் நிலை இருந்து வந்தது.
(பார்க்க: 3:128, 6:52,53, 52:48, 66:1,2, 80:1-10)
ஆனால் நபிமார்கள் அல்லாத வேறு எந்த மனிதருக்கும், அவர் எவ்வளவு சிறப்புக்குரியவ ராக இருந்தாலும் அந்த வாய்ப்பு இல்லை. எனவே அவரது மனிதக் கற்பனைக் கலந்தால் மார்க்கம் மாசுபடும் நிலையே இருக்கிறது. எனவே அல்லாஹ்வுக்கு உண்மையிலேயே அஞ்சி வாழும் நல்லடியார்கள், மார்க்கத்தில் தங்கள் மனிதக் கற்பனையைக் கலக்காமல், இருப்பதை அப்படியே எடுத்துச் சொல்பவர்களாகத் தங்களை ஆக்கிக் கொண்டார்கள். அதனால் அல்லாஹ்விடம் வெற்றி அடைந்தார்கள். தங்கள் கற்பனை களை மார்க்கத்தில் கலந்தவர்கள் பெருங் கொண்ட மக்களால் புகழ்ந்து பாராட்டப்பட்டாலும், அவர்களைப் பின்பற்றிக் கோடிக் கணக்கான மக்கள் சென்றாலும் அவர்கள் மறுமையில் பெரும் நஷ்டவாளர்களே.
உடனே சில சுயநலமிகள் மரியாதைக்குரிய நான்கு இமாம்கள் பற்றித்தான் இவ்வாறு நாம் கூறுவதாக மக்களைத் திசை திருப்புவார்கள். அந்த நான்கு இமாம்களும் மார்க்கத்தில் தங்கள் மனிதக் கற்பனையைக் கலக்கவில்லை. மார்க்கத்தைத் தங்களின் பிழைப்புக்குரிய வழியாக ஆக்க வில்லை. நால்வரும் சுயமாகத் தொழில், வியாபாரம் என்று செய்து தங்கள் குடும்பத்தைப் பராமரித்ததோடு இல்லாதவர்களுக்கும் வாரி வாரிக் கொடுத்ததாகச் சரித்திரத்தில் காணக் கிடைக்கிறது. எனவே எங்களது குற்றச்சாட்டு அவர்களைப் பற்றியதல்ல. மார்க்கத்தை யார் வியாபாரமாக்கினார்களோ, அதைத் தங்களின் பிழைப்புக்குரிய வழியாக ஆக்கிக் கொண்டார்களோ, அதற் கென்றே தங்களின் மனிதக் கற்பனைகளை மார்க்கத்தில் நுழைத்தார்களோ, அவர்களையே குறிப்பிடுகிறோம். அதாவது மார்க்கத்தைத் தங்களின் பிழைப்புக்குரிய வழியாக யார் யாரெல்லாம் ஆக்கிக் கொண்டார்களோ அவர்கள் அனைவருமே மனிதக் கற்பனையை மார்க்கத்தில் நுழைத்தவர்கள் தாம். மார்க்கத்தைப் பிழைப்புக்குரிய வழியாக ஆக்கி இருப்பதே மனிதக் கற்பனையை சத்திய மார்க்கத்தில் நுழைத்துத் தான். மற்றபடி குர்ஆன், ஹதீஃத் போதனைப்படி மார்க்கத்தைப் பிழைப்புக்குரிய வழியாக ஆக்குவ தற்கு அணுவின் முனையளவும் ஆதாரமில்லை. மார்க்கத்தை வியாபாரமாக்குவதைக் கடுமையாகக் கண்டித்துப் பல குர்ஆன் வசனங்கள் காணப்படுகின்றன. (பார்க்க: 6:90,10:72, 11:29, 51, 25:57, 26:109,127,145,164,180, 36:21, 38:86, 42:23)
இந்த நிலையில் மார்க்கத்தைத் தங்கள் பிழைப்புக்குரிய வழியாக ஆக்கிக் கொண்டவர்கள் எந்த அளவு இறையச்சமுடையவர்களாக இருப்பார்கள். சுயநலமற்றவர்களாக இருப்பார்கள். மக்களின் இவ்வுலக, மறு உலக நல்வாழ்வைக் குறிக்கோளாகக் கொண்டிருப்பார்கள் என்பதை நீங்களே முடிவு செய்து கொள்ளுங்கள். தங்களின் அற்ப இவ்வுலக ஆதாயத்திற்காக மக்களை நரக நெருப்பில் தள்ளுவதில் அணுவளவும் கவலைப் படுபவர்களாக அவர்கள் இருக்க முடியாது. மார்க் கத்தைப் பிழைப்புக்குரிய வழியாக ஆக்கிக் கொண்ட புரோகிதர்கள் விஷயத்தில் மக்கள்தான் மிக, மிக எச்சரிக்கையாக நடந்து கொள்ள வேண்டும். அவர்களை நம்பி மோசம் போகக்கூடாது.
இப்போது சர்வத்தையும், சர்வ மக்களையும் படைத்துப் பாதுகாக்கும் எல்லாம் வல்ல அல்லாஹ்வின் இறுதி நெறிநூலான அல்குர்ஆன் வசனங்களில் இந்த புரோகிதர்கள் எப்படி மனிதக் கற்பனைகளைத் திணிக்கிறார்கள் என்பதைப் புள்ளி விபரங்களுடன் அறியத் தருகிறோம். அல்லாஹ் 2:170 இறைவாக்கில்:
“”அல்லாஹ் இறக்கி வைத்த இ(ந்நெறிநூலை) தைப் பின்பற்றுங்கள்” என்று அவர்களிடம் கூறப்பட்டால் அவர்கள் “”அப்படியல்ல! எங்களுடைய மூதாதையர்கள் எந்த வழியில் (நடக்கக்) கண்டோமோ, அந்த வழியையே நாங்களும் பின்பற்றுகிறோம்” என்று கூறுகிறார்கள், என்ன? அவர்களுடைய மூதாதையர்கள் எதையும் விளங்காதவர்களாகவும், நேர்வழி பெறாதவர்களாகவும் இருந்தால் கூடவா? (2:170)
இந்த இறைவாக்கிலிருந்து நேரடியாக நாம் விளங்குவது என்ன?
1. அல்லாஹ் இறக்கி வைத்தவை மட்டும்தான் மார்க்க ஆதாரங்கள்.
2. முன் சென்றவர்களை அவர்கள் நல்லவர் களாக இருந்தாலும், கெட்டவர்களாக இருந் தாலும் அவர்கள் செய்தவை அனைத்தும் சரியாகத்தான் இருக்கும் என்று நம்பிப் பின்பற்றக் கூடாது.
3. அவர்கள் நல்லவர்களாக இருந்தாலும், கெட்டவர்களாக இருந்தாலும், நேர்வழி என்று அல்லாஹ்வால் அறிவிக்கப்பட்டவற்றையும், அல் லாஹ்வால் இறக்கப்பட்டவற்றையும், அறிந்து, அவற்றை சொல்லியிருந்தால், கடை பிடித்திருந் தால் அவற்றை நாமும் எடுத்து நடக்கலாம்.
ஆக எந்த நிலையிலும் அல்லாஹ்வால் மார்க்க மாக இறக்கப்பட்டவை மட்டும்தான் மார்க்கம். மனிதக் கற்பனைகள் மார்க்கமாக முடியாது! என் பதே இத்திருவசனத்தின் தெளிவான எச்சரிக்கை யாகும். 7:3 திருவசனம் இக்கருத்தை மேலும் உறுதிப்படுத்துகிறது.
இப்போது இத்திருவசனத்தைப் புரோகிதர் கள் தங்கள் சுயநலங்கருதி எவ்வாறு திரிக்கிறார் கள் என்று பார்ப்போம். “”அல்லாஹ், நமது முன்னோர்களில் எதையும் விளங்காதவர்களாக வும், நேர்வழி பெறாதவர்களாகவும் இருந்தால் மட்டுமே அவர்களைப் பின்பற்றுவதைத் தடுத் திருக்கிறான். அதற்கு மாறாக அறிந்து விளங்கிய வர்களாகவும், நேர்வழி பெற்றவர்களாகவும் இருந்தால் அவர்களைப் பின்பற்றலாம்” என்று சுய விளக்கம் தருகிறார்கள்.
இந்த மனிதக் கற்பனை கலந்த சுய விளக்கம், நாம் விளக்கியுள்ள மேற்படி உதாரணத்திலுள்ளது போல் பலரைக் கவரத்தான் செய்கிறது. தன்பால் இழுக்கத்தான் செய்கிறது. அப்படிப் பட்ட கூட்டம்தான் மனித இனத்தில் அதிகமாக இருக்கிறது. ஆதத்தின் சந்ததிகளின் பெருங் கொண்ட கூட்டம் மனிதக் கற்பனைகள் கலந்த பல்வேறு மதங்களைக் (முல்லாக்களால் திரிக்கப் பட்ட முஸ்லிம் மதம் (இஸ்லாமிய மார்க்கம் அல்ல) உள்பட) கண்மூடிப் பின்பற்றுவதே இதனால்தான். 2:170 நேரடி கருத்துப்படி இவர்கள் நரகத்திற்குரியவர்களே. எப்படி என ஆராய்வோம்.
மனிதர்களில் யாராக இருந்தாலும், அவர் எவ்வளவு பெரிய அல்லாமா-மேதையாக இருந்தாலும், மனித இயல்பின்படி அவரும் சில தவறுகளைச் செய்பவராகவே இருப்பார். தவறே செய்யாத அல்லாஹ்வாக அவர் ஒருபோதும் ஆக முடியாது. அதே போல் ஒரு மனிதன் எவ்வளவு கேடுகெட்டவனாக இருந்தாலும் மனிதன் என்பதால் அவனிடமும் ஒரு சில உயர்ந்த குணங்கள் அதாவது அல்லாஹ்வால் நல்லவை என அறிவிக்கப்பட்டவை இருக்கத்தான் செய்யும். சுருக்கமாகச் சொன்னால் முற்றிலுமாக நல்ல மனிதனும் மனித வர்க்கத்தில் இல்லை, முற்றிலுமாகக் கெட்ட மனிதனும் மனித வர்க்கத்தில் இல்லை, இதுவே உண்மையாகும்.
இப்போது ஓர் ஐயம் எழலாம் அப்படியானால் மனித வர்க்கத்திலிருந்து தெரிவு செய்யப்பட்ட இறைத் தூதர்களின் செயல்கள் அனைத் தையும் எப்படி நற்செயல்களாக ஏற்றுக் கொள்வது என்பதே அந்த ஐயமாகும். அதற்காகத்தான் அல்லாஹ் அந்த இறைத் தூதர்களை தன் கண்காணிப்பில் “வஹி’யின் தொடர்புடன் வைத்து (பார்க்க 52:48) மனித இயல்பின்படி அவர்களிடமும் ஏற்பட்ட தவறுகளை உடனுக் குடன் திருத்தி அவர்களின் செயல்கள் அனைத் தையும் நற்செயல்களாக ஒழுங்கு படுத்தினான்.
(பார்க்க: 3:128, 4:113, 6:52,53, 66:1,2, 80:1-10)
ஆனால் இந்த விஷேச கண்காணிப்பும் “வஹி’ மூலம் திருத்தும் நடைமுறையும் நபிமார்களல்லாத வேறு எந்த மனிதருக்கும், அவர் எவ்வளவு பெரிய மேதையாக-அல்லாமாவாக-அவுலியாவாக இருந்தாலும் கிடைக்கவில்லை. நபி(ஸல்) அவர்களுக்குப் பிறகு பதவியிலமர்ந்த நாற்பெரும் கலீஃபாக்களுக்கே அந்த விஷேச கண்காணிப்பு இருக்கவில்லை. அதற்குரிய ஆதாரம் குர்ஆனிலோ, ஹதீஃதிலோ இல்லை; அதற்கு மாற்ற மாக அந்த கலீஃபாக்களிடம் ஏற்பட்டுவிட்ட சில தவறுகளை மற்றவர்கள் குர்ஆன் வசனங்களை மேற்கோள் காட்டி திருத்தியுள்ளதற்கே ஆதாரம் கிடைக்கிறது. சுருக்கமாகச் சொன்னால் “நபித்துவ வஹி’ நபிமார்களுக்குக்கல்லாமல் வேறு யாருக்கும் வரவில்லை என்பதே மிகச் சரியாகும்.
எனவே இந்தப் புரோகிதர்கள் முன்சென்ற ஒரு பெரியாரை அனைத்தையும் விளங்கியவர், அனைத்திலும் நேர்வழி பெற்றவர் என்ற குருட்டு நம்பிக்கையில் அவரைக் கண்மூடிப் பின்பற்றச் சொல்லும்போது 7:3, 33:66,67.68 இறைவாக்குகள் படி அல்லாஹ்வுக்கு மாறு செய்து தங்களையும், தங்களை நம்பி தங்கள் பின்னால் வரும் அப்பாவி மக்களையும் நரகில் கொண்டு தள்ளுகின்றனர்.
இதல்லாமல், இன்னொரு பெரிய வழிகேட்டிற்கும் இவர்களின் இந்த குருட்டு நம்பிக்கை வழி வகுக்கின்றது. நபி(ஸல்) அவர்களுக்கு இறக் கப்பட்ட அல்குர்ஆன் உடனுக்குடன் பதியப்பட்டுப் பாதுகாக்கப்பட்டது போல் அவர்களுக்கு முன் சென்ற நபிமார்களுக்கு இறக்கப்பட்ட நெறி நூல்கள் உடனுக்குடன் பதியப்பட்டு பாதுகாக்கப்படவில்லை. நபி(ஸல்) அவர்களின் நடை முறைகள் அறிவிப்பு வரிசையுடன் பதிவு செய்யப் பட்டு பாதுகாக்கப்பட்டது போல் முன் சென்ற மற்ற நபிமார்களின் நடைமுறைகள் பாதுகாக்கப்படவில்லை. எனவே முன்னய நெறிநூல்களின் பெயரால், முன் சென்ற நபிமார்களின் நடை முறைகளின் பெயரால் மனிதக் கற்பனைகளை மார்க்கத்தில் நுழைத்து மதமாக்கும் வாய்ப்பு முன்னுள்ள சமுதாயங்களிலுள்ள புரோகிதர்களுக்குத் தாராளமாகவே இருந்தது.
ஆனால் அல்குர்ஆனும் பதிவுச் செய்யப் பட்டு பாதுகாக்கப்பட்டு விட்டதால், நபி(ஸல்) அவர் களின் நடைமுறைகளும் பதிவு செய்யப்பட்டுப் பாதுகாக்கப்பட்டு விட்டதால், மனிதக் கற்பனைகளை மார்க்கத்தில் நுழைக்க வாய்ப்பு இல்லாமல் போய்விட்டது. புரோகிதர்களுக்கு மார்க்கத்தில் மனிதக் கற்பனைகளை நுழைக்காமல் வருவாய் இல்லையே; அவர்களால் வாழா விருக்க முடியுமா? எனவே ஆரம்பத்தில் நபி(ஸல்) அவர் கள் சொன்னதாகப் பொய்யான லட்சக்கணக் கான ஹதீஃத்களை (பொய் நடைமுறைகளை) புனைந்து மக்களிடையே பரப்பினார்கள்.
இதன் கெடுதியை உணர்ந்த அல்லாஹ்வின் அச்சமுள்ள நல்லடியார்கள், நபி(ஸல்) அவர் களின் நடைமுறைகளை அறிவிப்பாளர் வரிசை களுடன் சேகரித்துப் பரிசீலனை செய்து, பல கடுமையான ஆய்வுகளுக்குப் பின் பதிவு செய்து பாதுகாத்து விட்டார்கள். எனவே நபி(ஸல்) அவர்கள் சொன்னதாக மனிதக் கற்பனைகளை மார்க்கத்தில் நுழைக்கும் வாசலும் அடைக்கப் பட்டுப் போயிற்று. வேறு வழி என்ன என்று ஆராயும்போது அவர்களுக்குக் கிடைத்த ஒரே வழி இதுதான்.
மரியாதைக்குரிய அந்த நான்கு இமாம்களும் உண்மையிலேயே தொண்டு உள்ளத்தோடு மார்க்கத்திற்காகப் பெரும் பணி ஆற்றினார்கள். மார்க்கத்தைத் தங்களின் பிழைப்புக்குரிய வழியாக அவர்கள் ஆக்கவில்லை. சொந்தமாக, வியாபாரம் தொழில் செய்து அதிலிருந்து தங்கள் குடும்பத்தையும் காப்பாற்றினார்கள். தேவையுள் ளோருக்கும் வாரி வாரிக் கொடுத்தார்கள். மார்க்கப் பணியை அல்லாஹ்வுக்காக மறுமையில் கூலியை எதிர்பார்த்துச் செய்ய வேண்டும். கூலிக் காக மாரடிக்கக் கூடாது என்பதை தெளிவாக விளங்கி வைத்திருந்தார்கள். அதன் காரணமாக மக்களிடையே அவர்களுக்கு நல்ல பெயரும், புகழும் ஏற்பட்டிருந்தது. மக்கள் அவர்களை அதிகமாக நேசித்தார்கள்.
மார்க்கத்தை உலக ஆதாயத்திற்காகத் திரிக்கும் புரோகிதர்களின் மூளையில் பளிச்சென இது பட்டது. அல்குர்ஆனிலும் மனிதக் கற்பனைகளை நுழைக்க முடியாது; நபி(ஸல்) அவர்களின் பெயராலும் மனிதக் கற்பனைகளை நுழைக்கும் வாசலும் அடைபட்டுப் போய்விட்டது. நபி (ஸல்)அவர்களுக்குப் பின், இவர்களின் நடை முறைகள் உன்னிப்பாகக் கவனிக்கப்பட்டு அறிவிப்பாளர் வரிசைகளுடன் பாதுகாக்கப் படாத இந்த இமாம்கள் மக்களிடையே மதிப்பு மிக்கவர்களாக இருக்கிறார்கள். இவர்கள் பெய ரால் இவர்கள் சொன்னதாக மனிதக் கற்பனை களை மார்க்கத்தில் நுழைத்தால் அவை எடுபடும் என்பதைத் தெரிந்து கொண்ட இந்த சுயநலப் புரோகிதர்கள் அதனைச் செயல் வடிவில் கொண்டு வந்தார்கள். இந்த இமாம்களை வரம்பு மீறிப் புகழ்ந்து, பொய்யாகப் பல கதைகளை அளந்து, அவர்கள் தவறே செய்யாத தெய்வாம்சம் பெற்றது போல் மக்களை நம்ப வைத்தார்கள். மார்க்கத்தை நன்கு விளங்கியவர்களை-நேர்வழி யில் நடந்தவர்களைக் கண் மூடிப் பின்பற்றலாம் என்று 2:170 வசனத்தில் இவர்களின் மனிதக் கற்பனையைப் புகுத்திச் செயல்படுத்த ஆரம்பித்தார்கள். அது நல்ல பலனைக் கொடுத்தது. நான்கு மத்ஹபுகள் உருவாயின. தங்களின் கற்பனை நல்ல பலனைத் தர ஆரம்பித்தவுடன் அதனை அப்படியே வளர்த்துக் கொண்டார்கள்.
அல்குர்ஆனின் மனிதக் கற்பனைக் கலக்காத நேரடி விளக்கம், தங்கள் வயிற்றை நிரப்பி வளர்க்க உதவாது; அதே சமயம் மனிதக் கற்பனை கலந்து அது கலப்படமாகிவிட்டால், அப்போது அது தங்களுக்குப் பெரிதும் கை கொடுக்கிறது என்பதை அனுபவ வாயிலாகவே அறிந்து கொண்டார்கள்; விடுவார்களா? எனவே “தஃப் ஸீர்’ – குர்ஆன் விரிவுரை (ஒரு சில தஃப்ஸீர்கள் தவிர) என்ற பெயரால் மனிதக் கற்பனைகளை மார்க்கத்தில் நுழைத்தார்கள். இதற்கு முன்னைய சமுதாயங்களிலுள்ள புரோகிதர்கள், தங்கள் வேதங்களில் நுழைத்து வைத்திருக்கும் மனிதக் கற்பனைகள் அனைத்தையும் அப்படியே முஸ்லிம் சமுதாயத்தினுள்ளும் இறக்குமதி செய்தார்கள். தூய இஸ்லாமிய வாழ்க்கை நெறியும் கலப்படமாகி “முஸ்லிம் மதமாக’-“முஹம்மதிய மதமாக’ உருவெடுத்தது. குர்ஆன் வசனங்களுக்கு மனிதக் கற்பனை கலந்து “தஃப்ஸீர்’ என்ற பெயரால் விரிவுரை எழுதியது போல், நபி(ஸல்) அவர்களின் நடைமுறைகளான ஹதீஃத்களுக்கும் மனிதக் கற்பனை கலந்து விளக்கம் என்ற பெயரால் எழுதி நாறடித்தார்கள்.
ஒரிஜினல் குர்ஆன் வசனங்களையும், ஒரிஜி னல் ஹதீஃத்களையும் விட்டுவிட்டு, இவர்கள் மனிதக் கற்பனை கலந்து எழுதிய தஃப்ஸீர் களையும், ஹதீஃத் விரிவுரைகளையும் வைத்து “பிக்ஹு’ சட்டங்கள் வகுத்து அவற்றை அந்த மரியாதைக்குரிய நான்கு இமாம்களின் பெயரால் அரங்கேற்றினார்கள். இன்று நான்கு மத்ஹபின ரும் கடைபிடிக்கும் பிக்ஹு நூல்களுக்கும் அந்த மரியாதைக்குரிய இமாம்களுக்கும் சம்பந்தமே இல்லை. அவர்கள் காலத்திற்கு சுமார் 300 வருடங்களுக்குப் பின் இந்த புரோகித முல்லாக் கள் சுயநல நோக்கோடு அரங்கேற்றியவைதான் இந்த “பிக்ஹு’ நூல்கள். தங்கள் சொந்தப் பெயரைச் சொன்னால் சரக்கு விலையாகாது என்பதால், அந்த மரியாதைக்குரிய நான்கு இமாம்களின் பெயரை அநியாயமாக இவர்கள் இழுத்துள்ளார்கள்.
அவர்கள் நடைமுறைப்படுத்தும் குர்ஆனுக் கும், ஹதீஃதுக்கும் முரணான சில சட்டங்களைச் சுட்டிக்காட்டி இவை அந்த மரியாதைக்குரிய இமாம்கள் வடித்தெடுத்தவைதான்; அவற்றை அவர்கள் நடைமுறைப்படுத்தினார்கள் என்ப தற்கு அறிவிப்பாளர் வரிசைகளுடன், அல்லது அவர்களோ, அவர்களது மாணவர்களோ எழுதி வைத்துள்ள நூல்களிலிருந்து ஆதாரம் தாருங்கள் என்று 1984லிருந்து கேட்டுக் கொண்டிருக்கி றோம். இன்றுவரை அவர்களால் தர முடிய வில்லை. இனியும் அவர்களால் தர முடியாது. இருந்தால் அல்லவா தருவதற்கு. அந்த இமாம் களுக்கும் 200 வருடங்களுக்கு முன் வாழ்ந்த நபி(ஸல்) அவர்களின் நடைமுறைகளுக்கு அறி விப்பாளர் வரிசையுடன் ஆதாரம் இருக்கிறது. அவர்களுக்குப் பின் ஆட்சியிலிருந்த 4 கலீஃபாக்க ளுக்கு அறிவிப்பாளர் வரிசையுடன் அறிவிப்புகள் (அஃதர்கள்) இருக்கின்றன. இந்த நிலையில் அவர்களுக்குப் பின் வந்த இவர்கள் வானளாவப் புகழும்-தெய்வாம்சம் கற்பிக்கும் அந்த இமாம் களுக்கு (இவர்களின் இந்த துர்ச் செயல்களுக்கு அந்த இமாம்கள் பொறுப்பல்ல)
அறிவிப்பாளர் வரிசைகளுடன் ஆதாரங்கள் ஏன் இல்லை?
அறிவிப்பாளர் வரிசைகளுடன் ஆதாரங்கள் இல்லாததுதான் இந்த மதப் புரோகிதர்களுக்குப் பெரிய பிளஸ் பாயின்டாக ஆகிவிட்டது. அவர்களைப் பற்றி எப்படிக் கதை அளந்தாலும், அவர்கள் இயற்றியதாக எந்தச் சட்டத்தைச் சொன்னாலும் அவற்றின் உண்மை நிலையை அறிய உரைகல் இல்லையல்லவா? முன்னாள் மதப் புரோகிதர்களுக்கு அவர்களின் வேதங்க ளின் பெயரால், அவர்களின் நபிமார்களின் பெயரால் கதையளக்க, கற்பனைகளைப் புகுத்த வாய்ப்பிருந்தது போல், முஸ்லிம் மதப் புரோகி தர்களுக்கு இந்த மரியாதைக்குரிய நான்கு இமாம் களின் பெயரால் கதையளக்க-மனிதக் கற்பனை களைப் புகுத்த வாய்ப்பு ஏற்பட்டது. அல்குர்ஆனி லும், நபி(ஸல்) அவர்களின் ஆதாரப்பூர்வமான நடைமுறைகளிலும் (ஹதீஃத்கள்) இவர்கள் தங்கள் மனிதக் கற்பனையைப் புகுத்த முடியாமல் போனதால் இந்த முல்லாக்கள் இந்தத் தந்திரத் தைக் கையாண்டுள்ளனர். இவர்களின் இந்த தந்திரத்தின் அடிப்படையிலேயே “”முஹம்மடன் லா” என்ற சட்ட மும் உருவெடுத்தது. அதுவே இன்றைய இந்திய முஸ்லிம்களின் நடைமுறைச் சட்டம்.
இந்து மதத்திலுள்ள இதிகாசங்கள், புராணங்கள், யூத கிறிஸ்தவர்களிடையே காணப் படும் “இஸ்ராயிலிய்யத்’ எனப்படும் அவர்களின் கட்டுக்கதைகள், முஸ்லிம் முல்லாக்கள் இன்று ஜுமுஆ மேடை, மற்றும் மேடைகளில் அவிழ்ந்து விடும் கட்டுக் கதைகள், கப்ஸாக்கள் இவை அனைத்தினதும் மூலம் ஒன்றாக இருப்பதை அவற்றை உன்னிப்பாகக் கவனிப்பவர்கள் அறிய முடியும். எல்லா மதங்களிலுள்ள இடைத் தரகர்களின்-புரோகிதர்களின் நோக்கமும் ஒன்றே; அதாவது அப்பாவி மக்களை ஏமாற்றி மதத்தின் பெயரால் உலக ஆதாயம் அடைவது; அந்தத் தவறான நோக்கத்தை நிறைவேற்றிக் கொள்ள அவர்கள் அனைவரும் கடைபிடிக்கும் வழியும் ஒன்றே; அதாவது மனிதக் கற்பனையை மார்க்கத்தில் நுழைப்பதாகும். எனவே மார்க்கத் தைத் தங்களின் உலக ஆதாயத்திற்குரிய வழியாக ஆக்கிக் கொண்ட முல்லாக்கள்-ஹஜ்ரத்மார்கள்-மவ்லவிகள் மிகவும் ஆபத்தானவர்கள். அவர்கள் பின்னால் கண்மூடிச் செல்பவர்கள் நரகத்தில் போய் நேரடியாக விழுவார்களேயல்லாமல் வேறு தப்பும் மார்க்கம் அவர்களுக்கு இல்லவே இல்லை. இதை உணர்வார்களாக.
அப்படியானால் இந்த சுயநல முல்லாக்களின்-ஹஜ்ரத்மார்களின்-மவ்லவிகளின் புரோகித வலையிலிருந்து விடுபட வழி என்ன? என்று கேட்கலாம். வழி மிகவும் எளிதானது. இவர்களை நம்பாமல், இவர்கள் பின்னால் செல்லாமல் குர்ஆன் மொழியாக்கத்தை, ஹதீஃத் மொழி யாக்கத்தை நேரடியாக நீங்களே பாருங்கள். அல்லது யாரையாவது படிக்கச் சொல்லி காது தாழ்த்திக் கவனமாகக் கேளுங்கள். அவை மிகவும் எளிதானவை. தெளிவானவை. தனது நெறிநூலை அல்லாஹ் தனது அடியார்களுக்கு விளக்குவதை விட, மேலதிகமாக எந்த முல்லாவாலும் விளக்க முடியுமா? அப்படியானால் இந்த “முல்லா’ அல் லவா அல்லாஹ்வுக்கும் பெரிய அல்லாஹ்வாக ஆகிவிடுவார். இது சாத்தியமா? சிந்தியுங்கள். இந்த முல்லாக்கள் உங்களை ஏமாற்றுகிறார்கள் என்பதை எளிதாக விளங்கிக் கொள்வீர்கள். இவர்கள் ஃபிர்அவ்னின் வாரிசுகளேயாகும்.
தனது அடியார்களுக்கு, நடைமுறைப்படுத்த வேண்டிய தனது வசனங்களை (ஆயாத்தும் முஹக்கமாத்) நடைமுறைப்படுத்திக் காட்ட, தனது தூதரையும் அனுப்பிச் செயல்படுத்திக் காட்டித்தர அல்லாஹ் கட்டளையிட்டிருக்கி றான். (பார்க்க 16:44,64) அவர்களும் தெளிவாக நடைமுறைப்படுத்திக் காட்டிச் சென்றிருக்கி றார்கள். அவர்கள் காட்டித் தராத எந்தச் செயல் பாடும் அது நமக்கு எவ்வளவு அழகாகத் தெரிந்தா லும் அது மார்க்கமாக முடியாது.
உதாரணமாக சூபிஸ முல்லாக்கள், இறை வனை தியானிப்பது பற்றிய சில குர்ஆன் வசனங்களை ஓதிக்காட்டி, இவர்களாகச் சில திக்ரு முறைகளை நடைமுறைப்படுத்தி இறை வனை நேரடியாகப் பார்க்க முடியும் என்றெல் லாம் கதையளக்கிறார்கள். இதில் மயங்கி தங்கள் ஈமானை இழக்கும் படித்தவர்களிலிருந்து, பட்ட தாரிகள் வரை பலர் இருக்கத்தான் செய்கிறார்கள்.
அவர்கள் குறிப்பிட்டுக் காட்டும் வசனங் களுக்கு அவர்கள் சொல்லுவது தான் விளக்கம் என்றால், அதை நிச்சயமாக நபி(ஸல்) அவர்கள் செய்து காட்டித் தந்திருப்பார்கள்; அவர்கள் காட்டித் தரவில்லை. எனவே நபி(ஸல்) அவர்கள் எச்சரித்துள்ளபடி அவை வழிகேடுகளே என்ப தைச் சாதாரண அறிவுபடைத்தவனும் விளங்க முடியும். படித்தவர்களும், பட்டதாரிகளும், அறிஞர்களும் அதில் சிக்குகிறார்கள் என்றால், அல்லாஹ் சொல்லுவதை விட, நபி(ஸல்) அவர்கள் எச்சரித்ததை விட, தங்கள் சொந்த அனுபவத்தில் தெரிவது பெரிது என்று ஷைத்தான் ஊட்டும் நம்பிக்கையில் ஏமாறுகிறார்கள் என் பதே உண்மை. இந்த “சூபிஸ’ தத்துவம் முல்லாக் களால் திரிக்கப்பட்டுள்ள முஸ்லிம் மதத்தில் மட்டுமல்ல, எல்லா மதங்களிலும் காணப்படும் மனிதக் கற்பனையே. அவற்றில் அவர்கள் காணும் சொந்த அனுபவம் கொண்டே தங்கள் மனிதக் கற்பனையிலான மதங்களில் நிலைத்திருக்கி றார்கள். “எம்மதமும் சம்மதம்’ என்ற பொய்த் தத்துவம் இதிலிருந்து உருவானதுதான்.
இதேபோல் குர்ஆன் கூறும் நேரடியான விளக்கத்தை விட்டு, இந்த முல்லாக்கள் கூறும் மனிதக் கற்பனை விளக்கத்தை நம்பியே முஸ்லிம் களில் பெருங்கொண்ட மக்கள் தங்களை நரகிற் குரியவர்களாக ஆக்கிக் கொண்டிருக்கிறார்கள். அவற்றையும் வரிசைப்படுத்தித் தருகிறோம். ஆராய்ந்து பாருங்கள்.
1. 18:102 வசனத்தில் அல்லாஹ் “”தன்னை விட்டு தனது அடியார்களைப் பாதுகாவலர்களாக வழிகாட்டிகளாக ஆக்கிக் கொள்கிறவர்கள் நிராகரிப்பவர்கள்-நரகத்திற்குரியவர்கள்” என நேரடியாக எச்சரிக்கிறான்.
அல்லாஹ்வின் இந்த எச்சரிக்கையைப் பார்த்த மாத்திரத்தில், தர்காக்களில் போய் தங்கள் தேவை களை முறையிடுகிறவர்கள், செத்தவர்களுக்காகச் சடங்குகள் செய்கிறவர்கள் உடனடியாக அவற்றி லிருந்து தெளபா செய்து மீண்டு விட வேண்டும். இதுவே ஈமானின் அடையாளம்.
ஆனால் தர்கா சடங்குகளைக் கொண்டு ஆதாயம் அடையும் முல்லாக்கள், மவ்லவிகள், ஹஜ்ரத்துமார்கள் இதற்கு என்ன சுய விளக்கம் கொடுக்கிறார்கள் தெரியுமா?
இந்த குர்ஆன் வசனம் முஸ்லிம்களுக்கு இறங்கியதல்ல; காஃபிர்களுக்கு இறங்கியது. எனவே நம்மைக் கட்டுப்படுத்தாது. நாம் தாராளமாகச் செத்தவர்களை நமது பாதுகாவ லர்களாக ஆக்கிக் கொள்ளலாம் என்று தங்களின் கற்பனையைப் புகுத்துகிறார்கள். இதில் ஏமாறும் முஸ்லிம்களோ எண்ணற்றோர். இந்த குர்ஆன் வசனம் யாருக்காக இறங்கியதோ அவர்கள் நபி இப்ராஹீம்(அலை) அவர்களின் நேரடி வாரிசுகள், கஃபாவைச் சுற்றி வாழ்ந்தவர்கள். தங்களை முஸ்லிம்கள் என்று நம்பிக் கொண்டிருந்தவர்கள். அவர்கள் தங்களின் முன்னோர்களான இப்றா ஹீம், இஸ்மாயீல் போன்ற நபிமார்களையும், மற்றும் பல அசல் அவுலியாக்களையும் தங்களின் பாதுகாவலர்களாக ஆக்கி, இன்று முஸ்லிம்கள் தர்காக்களில் செய்வது போன்ற சடங்குகளைச் செய்ததன் காரணமாகவே அவர்களை ‘காஃபிர்’ என்று அல்லாஹ் அழைக்கிறான் என்ற உண் மையை உணர மறுக்கிறார்கள். அவர்கள் நபிமார்களையும், அசல் அவுலியாக்களையும் அழைத்த தற்கு மாற்றமாக இவர்கள் டூப்ளிகேட் அவுலி யாக்களையும், கழுதைகளையும், கட்டைகளை யும் புதைத்து தர்காவாக்கிக் கொண்டு செத்த வற்றை அழைக்கிறார்கள். என்னே பரிதாபம்? அல்லாஹ் நேரடியாகச் சொல்லுவதை விட, இந்த மவ்லவிகள் அதற்குக் கொடுக்கும் சுய விளக்கம் இவர்களுக்குப் பெரிதாகத் தெரிய, இந்த அளவு வழிகேட்டில் மூழ்கி இருக்கிறார்கள்.
2. 7:3 குர்ஆன் வசனம் “”இறைவனால் இறக்கப் பட்டதை மட்டுமே மார்க்கமாக எடுத்து நடக்க வேண்டும். மனிதர்களில் யாரையும் பாதுகாவ லர்களாக எடுத்து அவர்களைப் பின்பற்றக் கூடாது” என்று நேரடியாகக் கட்டளைப் பிறப்பிக்கிறது.
இந்த முல்லாக்கள்-ஹஜ்ரத்மார்கள்-மவ்லவி கள் இதற்குக் கொடுக்கும் சுயவிளக்கம் என்ன தெரியுமா? “”வழிகேட்டில் செல்பவர்களைத்தான் பாதுகாவலர்களாக எடுத்துப் பின்பற்றக் கூடாது; நேர்வழி நடந்தவர்களைப் பாதுகாவலர்களாக எடுத்து அவர்களைப் பின்பற்றலாம்” என்று சுயவிளக்கம் கொடுக்கிறார்கள்.
அல்லாஹ் அல்லாத மற்றெவரையும் என்று அல்லாஹ் நேரடியாகக் குறிப்பிடுவதை விட, இந்த மவ்லவிகள் கொடுக்கும் நல்லவர்களைப் பின்பற்றலாம் என்ற சுயவிளக்கம் முகல்லிது-மத்ஹபு முஸ்லிம்களுக்குப் பெரிதாகத் தெரிகிறது.
3. 33:66-ல் நாளை மறுமையில் “”அல்லாஹ்வுக்கு வழிபட்டிருக்க வேண்டுமே! அவனது தூதருக்கு வழிபட்டிருக்க வேண்டுமே? என்றும், முன் னோர்களுக்கும், பெரியவர்களுக்கும் வழிப்பட் டது பெருந் தவறாகிவிட்டது; அதனால் நரகில் கிடந்து வேகும்படி ஆகிவிட்டது” என்று அழுது பிரலாபிக்கும் காட்சியை அல்லாஹ் தெளிவாக எடுத்துக் காட்டியும் முகல்லிது மவ்லவிகளும், மத்ஹபு முஸ்லிம்களும் உணர்வதாக இல்லை. மாறாக இதற்கும் இந்த வசனம் காஃபிர்களுக்கு இறங்கியது என்று சொந்த விளக்கம் கொடுக் கின்றனர்.
அவர்கள் யாரை நல்லவர்களாக, அவுலியாக்களாக மதித்து அவர்களைப் பின்பற்றுகிறார்களோ அவர்களைத்தான் சையிதுமார்கள், சாதாத்துமார்கள், அகாபிரீன்கள் என்று அவர் களே அழைக்கிறார்கள். அப்படிப்பட்டவர் களைப் பின்பற்றியே வழிகெட்டு நரகத்திற்கு வந்து சேர நேரிட்டது என்பதை 33:67 வசனம் நேரடியாகப் படம் பிடித்துக் காட்டியும், அதைக் கொண்டு அறிவு பெறவில்லை என்றால் இவர் களை விட பரிதாபத்திற்குரியவர்கள் இருக்க முடி யுமா? இங்கு நேரடியாக, இவர்கள் பின்பற்று பவர்களைப் பெயர் குறிப்பிட்டுக் கூறியும், அதற் கும் சுயவிளக்கம் கொடுக்கும் மவ்லவிகளை முஸ்லிம்கள் நம்புகிறார்கள் என்றால் பார்த்துக் கொள்ளுங்களேன்.
4. அல்லாஹ் அல்குர்ஆன் 33:40 வசனத்தில் நபி முஹம்மது(ஸல்) அவர்களே முத்திரை நபி: அவர்களோடு நபிமார்களின் வருகைக்கும், வேத வெளிப்பாட்டுக்கும் முத்திரையிடப் பட்டுவிட்டது என்கிறான். அவர்களுக்குப் பின் நபியும் இல்லை. நெறிநூலும் இல்லை என்பதைத் தெளிவாக இது பறைசாற்றுகின்றது.
அதிலும் சந்தேகம் வரக்கூடாது என்பதற்காக விசுவாசிகள் நம்பிக்கை வைக்க வேண்டிய வியங்களைத் தெளிவாகக் கூறும் 2:2-5 இறை வாக்குகளில் குறிப்பாக 2:4 இறைவாக்கில் நபி (ஸல்) அவர்களுக்கு இறக்கப்பட்டதையும், அதற்கு முன்னர் வந்த நபிமார்களுக்கு இறக்கப் பட்டதையும் நம்பிக்கை கொள்ள வேண்டும் என்று கட்டளையிடும் அல்லாஹ், நபி முஹம்மது (ஸல்) அவர்களுக்குப் பின்னர் இறக்கப்படுவது பற்றியோ அதைப் பெறும் நபி பற்றியோ அதை, அவரை நம்பிக்கை கொள்ளவேண்டும் என்பது பற்றியோ எதையும் குறிப்பிடவில்லை. ஆக நபி (ஸல்) அவர்களுக்குப் பிறகு நபியோ, நெறிநூலோ இல்லை என்பது சந்தேகத்திற்கிட மில்லாமல் நேரடியாக விளங்குகிறது.
இதற்கு முரணாக அஹ்மதிகளி(காதியானி கள்)ன் மவ்லவிகள் இந்த 33:40, 2:4 வசனங்க ளுக்கெல்லாம் சுயவிளக்கம் கொடுத்து மக்களைச் சுற்றலில் விடுகிறார்கள். படித்தவர்களிலிருந்து, பட்டதாரிகள் வரை இதில் மயங்கும் பலரைப் பார்க்கிறோம்.
5. 22:78, 41:33 குர்ஆன் வசனங்களும், ஹுதைஃபா(ரழி) அவர்களின் ஹதீஸும் “முஸ்லிம்கள்’ அல்லாத பெயரில் பிரசார பணி புரிவதைத் தெளிவாகவும் நேரடியாகவும் கண்டிக்கின்றன.
தவ்ஹீது மவ்லவிகளோ தங்கள் சொந்த விளக்கத்தைக் கொடுத்துJAQH போன்ற பெயர் களில் செயல்படுவதை நியாயப்படுத்துகின்றனர். தாங்கள் தான் குர்ஆன், ஹதீஃதுக்குச் சொந்தக் காரர்கள் என்று பீற்றிக் கொள்வதை 4:49, 53:32 தெளிவாக நேரடியாகக் கண்டிக்கின்றன. அவர் களோ அதற்கும் சொந்த விளக்கம் கொடுத்துJAQH என்று கூறி பீற்றிக் கொள்கின்றனர். (1994ல் இக் கட்டுரை வெளிவந்த போதுJAQH பிரிவு மட்டுமே இருந்தது இப்போது த.மு.மு.க, த.த.ஜ, இ.த.ஜ. என 7,8 பிரிவுகள் ஏற்பட்டு விட்டன)
ஆக இப்படி குர்ஆன் வசனங்களும், ஹதீஃத் களும் நேரடியாகவும், தெளிவாகவும் இருக்க இவர்கள் தங்கள் சொந்த விளக்கத்தைக் கூறி மக்களை திசை திருப்புகின்றனர். மக்களும் சுய சிந்தனையில்லாது மவ்லவிகள் கூறுவதே சரியாக இருக்கும் என்று நம்பி மோசம் போகின்றனர். இப்படி குர்ஆனுக்கும், ஹதீஃதுக்கும், விருப்பப் பட்டவர்கள் எல்லாம் விருப்பப்பட்ட சொந்த விளக்கம் கொடுக்க முற்பட்டால் கருத்து வேறுபாடுகள் மேலும் மேலும் அதிகமாகி பிளவுகளும், பிரிவுகளுமே ஏற்படும்; இதைத் தவிற்க முடியாது.
ஒரு தரப்பார் தாங்கள் எடுத்து வைக்கும் வாதத்திற்கு ஆதாரமாக சாதாரண நடுத்தர அறிவுள்ளவர்களும் எளிதில் புரிந்து கொள்ளும் வகையில் நேரடியாகக் கூறும் “முஹக்கமாத்’ குர்ஆன் வசனங்களை, ஹதீஃத்களை எடுத்து வைக்க வேண்டும். சுய விளக்கம் கொடுக்க முற்படக் கூடாது. அவர்கள் எடுத்து வைத்த குர்ஆன் வசனத்தில், ஹதீஃதில் அவர்கள் கூறும் வாதத்திற்கு ஆதாரமில்லை என்று கருதும் மறு தரப்பார், முன்னவர்கள் சுற்றி வளைத்துப் பொருள் கொண்டிருந்தால் அதை மறுத்து நேரடிப் பொருளை எடுத்து வைக்கலாம். முன்ன வர்கள் சொன்ன விளக்கத்தை விட இவர்களின் விளக்கம் குறிப்பிட்ட வசனத்திலேயே சாதாரண மக்களும் எளிதில் புரியும்படியாக இருக்க வேண்டும். மற்றபடி குறிப்பிட்ட வசனத்திற்கோ, ஹதீஃதிற்கோ இவர்கள் சுற்றி வளைத்து சுய விளக்கம் கொடுத்து, மக்களைத் தடுமாறச் செய்து, இந்த அறிஞர் நமக்குப் புரியாத ஒரு பெரிய தத்துவத்தைச் சொல்லுகிறார் என்று மயங்கும் நிலைக்கு ஆளாக்கக் கூடாது.
அல்லது முதல் தரப்பார் தரும் விளக்கம் அந்த குறிப்பிட்ட வசனத்திற்கோ, ஹதீஃதுக்கோ இல்லை என்பதை விளக்கும் நேரடியாகவே சாதாரண மக்களும் புரியும் வகையில் அமைந் திருக்கும் வேறு குர்ஆன் வசனத்தையோ, ஹதீஃதையோ எடுத்து வைக்க வேண்டும். முதல் தரப்பாரின் வாதம் தவறாக இருந்தால் அதனை முறியடிக்கும் குர்ஆன் வசனங்களோ, ஹதீஃத் களோ கண்டிப்பாக இருக்கவே செய்யும். அதற்கு மாறாக எதிர் தரப்பாரின் வாதம் தவறாக இருக் கும்போதும் அதை நிலை நிறுத்த நேரடியாகக் கூறும் குர்ஆன் வசனமோ, ஹதீஃதோ கிடைக் காது. அப்போதுதான் அவர்கள் முதல் தரப்பார் எடுத்து வைத்துள்ள வாதத்தை நேரடியாகவே உறுதிப்படுத்தும் குர்ஆன் வசனத்திற்கும், ஹதீஃதுக்கும் சுற்றி வளைத்து இலக்கணம், இலக் கியம் என்றெல்லாம் சுய விளக்கம் கொடுத்து மக்களை ஏமாற் றும் கட்டாயம் ஏற்படுகிறது.
எந்தத் தரப்பார் சுற்றி வளைத்து சாதாரண மக்கள் புரியாத விளக்கத்தை எடுத்து வைக்கிறார்களோ அவர்களே வழிகேட்டில் இருக்கிறார்கள்; மக்களைத் தங்களின் சுயநலத்திற்காக ஏமாற்றுகிறார்கள் என்பதை எளிதில் விளங்கிக் கொள்ள முடியும். 18:102-106, 33:66-68, 7:3, 2:170, 33:40, 2:2-5, 22:78, 41:33 போன்ற குர்ஆன் வசனங்களையும், ஹுதைஃபா(ரழி) அவர்கள் அறிவிக்கும் எல்லாப் பிரிவுகளையும் விட்டு நீங்கி ஜமாஅத்துல் முஸ்லிமீனில் ஒன்றுபட்டுச் செயல் பட வேண்டும் என்று கூறும் ஹதீஃத்களிலும், மேலே சொன்ன அளவுகோளைக் கொண்டு சிறிது சிந்தித்தாலும் நேர்வழியில் இருப்பவர்கள் யார்? வழிகேட்டில் இருப்பவர்கள் யார்? என்பது மிக எளிதாகவே புரிந்துவிடும்.
மார்க்கம் மிகமிக எளிதானது. தெள்ளத் தெளிவானது, இரவும் பகலைப் போல் வெட்ட வெளிச்சமானது; அழிந்து நாசமாகக் கூடியவர்கள் சுற்றி வளைத்து விளக்கும் நிலையில் மார்க்கம் இல்லை என்று கூறும் பல குர்ஆன் வசனங்களை யும், ஹதீஃத்களையும் ஆதாரமாகக் கொண்டே இந்தக் கருத்தை எடுத்து வைத்துள்ளோம்.
கருத்து வேறுபாடுகளைப் பெரிது பண்ணி அற்ப உலக ஆதாயங்களுக்காக சமுதாயத்தில் பிளவை ஏற்படுத்துகிறவர்களை அடையாளம் கண்டு, அவர்களின் விக் கருத்துகளை விட்டும் பாதுகாப்பைப் பெற 4:59 குர்ஆன் வசனத்தில் அல்லாஹ் கட்டளையிடுவது போல் சயவிளக் கத்தை விட்டு குர்ஆன், ஹதீஃத் ஆதாரத்தையே கொள்ள வேண்டும். ஒரு தரப்பார் ஒரு வியத்தில் அவர்களது கருத்தை வலியுறுத்திச் சொல்லும் ஒரு குர்ஆன் வசனத்தையோ ஹதீஃதையோ எடுத்து வைத்தால், மறு தரப்பார், அதற்கு முதல் தரப்பாரின் வாதம் தவறு என்றால், வேறு குர்ஆன் வசனத்தையோ, அல்லது ஹதீஃதயோ எடுத்து வைக்க வேண்டும். அதை விட்டு குறிப்பிட்ட வசனத்திற்கே ஹதீஃதிற்கே சொந்த விளக்கம் கொடுப்பதாக இருந்தால் “”அல்லாஹ் இல்லை” என்றும் சுய விளக்கம் கொடுக்கலாம். அதற்குத் தலையாட்டுவதற்கும் மனித வர்க்கத்தில் ஒரு கூட்டம் உண்டு.
எனவே அல்லாஹ் மீதும், மறுமையின் மீதும் உறுதியான நம்பிக்கையுடைய உண்மையான விசுவாசிகள் கருத்து வேறுபாடுகள் வந்துவிட் டால் சொந்த விளக்கம் கொடுப்பதை விட்டு குர்ஆன் வசனங்களை, ஹதீஃத்களை மட்டும் எடுத்து வைக்க முன்வந்தால் பெரும்பாலான கருத்து வேறுபாடுகளைத் தீர்க்கலாம். 4:59 இறைக் கட்டளைப்படி இதைவிட அழகான முடிவு ஒன்றும் இல்லை. முஸ்லிம்கள் உணர் வார்களா? தங்களின் அற்ப இவ்வுலக ஆதாயங் களை விட, மறுமையில் தங்களுக்கும், தங்களை நம்பிப் பின்பற்றிய முஸ்லிம்களுக்கும் சித்தப் படுத்தி வைக்கப்பட்டுள்ள நரக வேதனையை நினைத்து உண்மையிலேயே அஞ்சி நடப்பவர் களே இந்த முடிவுக்கு வர முடியும். அவர்களே உண்மையான அறிஞர்கள் என்று வல்ல அல்லாஹ் 35:28 அல்குர்ஆன் வசனத்தில் இனங் காட்டியுள் ளான். முஸ்லிம் சமுதாயத்திலுள்ள உலமாக்கள் அப்படிப்பட்ட உண்மையான அறிஞர்களாகத் தங்களை மாற்றிக் கொள்ள வேண்டுகிறோம்.
அல்லாஹ் அருள்புரிவானாக.