M.T.M முஜீபுதீன், இலங்கை
நவம்பர் 2012 தொடர்ச்சி …
நூஹ்(அலை) அவர்களின் வரலாற்று உண்மைகளும், அக்காலத்தில் இடம் பெற்ற பிரளயம் சார்ந்த விபரங்கள் இந்து, யூத, கிறித்தவ வேதத் தொகுப்புகளில் கூட்டல், குறைவுகளுடன் காணப்படுகின்றன. அதற்குக் காரணம் அவ்வேதத் தொகுப்புகள் களங்கப்பட்டுக் காணப்படுவதாகும். முஸ்லிம்கள் முன்னைய நெறிநூல்களை விசுவாசித்தாலும் பின் அவை மனிதக் கரம் பட்டு மாசடைந்துள்ளதால் அவற்றை ஏற்பதுமில்லை நிராகரிப்பதுமில்லை. அல்குர்ஆன் அருளப்பட்ட பின் முன்னைய நெறிநூல்கள் அல்லாஹ்வினால் இரத்துச் செய்யப்பட்டுவிட்டன. ஆகவே உண்மை வரலாறுகளையும், அல்லாஹ் மனிதனைப் படைத்த நோக்கத்தையும் அறிந்து கொள்வதற்கு இறுதி இறைநெறி நூலான அல்குர்ஆனையும், இறுதி இறைத் தூதர் முஹம்மது நபி(ஸல்) அவர்களின் போதனைகளையும் அறிவது அவசியமாகும்.
இங்கு முன்னைய நெறிநூல்களிலிருந்து சில செய்திகளை முன் வைப்பதன் நோக்கம் அல்குர் ஆனை அவதானித்து முன்னைய நெறி நூல்களின் சத்தியத் தன்மையை அறிவதற்கு ஆகும். அல்குர் ஆனில் முன்னைய இறைத் தூதர்களின் சில செய்திகளை முன்வைக்கிறேன். அவதானியுங்கள்.
இஸ்ராயீல் மக்கள் என்பது யாகூப்(அலை) அவர்களின் பரம்பரையில் வந்த சமுதாயத்தினர் எனக் குறிப்பிடலாம். இஸ்ராயீல் என்பதற்கு அல்லாஹ்வுக்கு முற்றிலும் கீழ்ப்படிந்தவர் என்ற பொருளாகும். யாகூப்(அலை) அவர்கள் எந்த சோதனைகள் வந்தபோதும் அல்லாஹ்வுக்கு முற் றிலும் கீழ்ப்படிந்து பொறுமையுடனும் நம்பிக் கையுடனும் வாழ்ந்ததினால் இவ்வாறு பெயர் வந்தது. முஸ்லிம் என்ற சொல்லும் அல்லாஹ் வுக்கு முற்றிலும் கீழ்ப்படிதல் என்பதையே குறிக்கும். அன்று யூதர்கள் இறுதித் தூதரின் வரவை எதிர்பார்த்து மக்கா நகரைச் சூழ்ந்த பிரதேசங்களில் வந்து குடியேறினர். ஆனால் இறுதித் தூதரை அல்லாஹ் இஸ்ரவேலரின் சகோதர பரம்பரையான இஸ்மாயீல்(அலை) அவர்களின் சந்ததியில் ஒன்றான குறைஷ் குலத்தில் அரபு மொழியைத் தாய் மொழியாகப் பேசும் அப்துல்லாஹ், ஆமினா என்போரின் மைந்தரான முஹம்மது நபி(ஸல்) அவர்களை இறுதி இறைத் தூதராக அல்லாஹ் தேர்ந் தெடுத்தான்.
யூதர்களுக்கு முஹம்மது நபி(ஸல்) அவர்கள் இறுதி இறைத்தூதர் என்பது அவர்களின் நெறி நூலின்படி தெரிந்தே இருந்தது. ஆனால் யூதர்கள் நபிமார்களை மறுத்தே வந்தனர். அல்லாஹ் அவர்களுக்கு அருட்கொடைகளை வழங்கியும் அவர்களின் பரம்பரையில் வந்த இறைத் தூதர் களுக்கு முரண்பட்டு பல தொல்லைகளைக் கொடுத்தே வந்தனர். நபிமார்களைக் கொலை செய்தும் உள்ளனர். அன்று முஹம்மது நபி (ஸல்) அவர்களை அல்லாஹ் இறைத் தூதராக அனுப் பியபோது அவர்களையும் யூதர்கள் அவமதித் தனர். குறை´ நிராகரிப்பாளர்களுடன் இணைந்து சதிகள் பல செய்தனர். இதனால் அந்த யூதர்களுக்கு கொடுத்த அருள்கொடைகளை அல்குர்ஆன் மூலம் ஞாபகப்படுத்தும் நோக்கிலும், எச்சரிக்கும் நோக்கிலும் முன்னைய இஸ்ராயீல் சமுதாயம் பற்றி பின்வருமாறு இறை வசனங்கள் மூலம் ஞாபகம் ஊட்டுவதை அவதானியுங்கள்.
இஸ்ராயீலின் சந்ததியினரே! நான் உங்களுக்கு அளித்த என்னுடைய அருட்கொடையை நினைவு கூறுங்கள். நீங்கள் என் வாக்குறுதியை நிறைவேற்றுங்கள். நான் உங்கள் வாக்குறுதியை நிறை வேற்றுவேன். மேலும், நீங்கள் எனக்கே அஞ்சுவீர்களாக. இன்னும் நான் இறக்கிய(நெறி நூலை)தை நம்புங்கள். இது உங்களிடம் உள்ள(நெறி நூல்)தை மெய்ப்பிக்கின்றது. நீங்கள் அதை (ஏற்க) மறுப்பவர்களில் முதன்மையானவர்களாக வேண்டாம். மேலும் என் திருவசனங்களைச் சொற்ப விலைக்கு விற்று விடாதீர்கள். இன்னும் எனக்கே நீங்கள் அஞ்சி(ஒழுகி) வருவீர்களாக.
நீங்கள் அறிந்து கொண்டே உண்மையைப் பொய்யுடன் கலக்காதீர்கள். உண்மையை மறைக்கவும் செய்யாதீர்கள். தொழுகையைக் கடைப்பிடியுங்கள், ஜகாத்தையும்(ஒழுங்காகக்) கொடுத்து வாருங்கள் ருகூஃ செய்வோரோடு சேர்ந்து நீங்களும் ருகூஃ செய்யுங்கள். நீங்கள் நெறிநூலையும் படித்துக்கொண்டே, (மற்ற) மனிதர்களை நன்மை செய்யுமாறு ஏவி, தங்களையே மறந்து விடுகிறீர்களா? நீங்கள் சிந்தித்துப் புரிந்து கொள்ள வேண்டாமா?
மேலும், பொறுமையைக் கொண்டும், தொழுகை யைக் கொண்டும் (அல்லாஹ்விடம்) உதவி தேடுங்கள்; எனினும், நிச்சயமாக இது உள்ளச்சம் உடையோருக்கன்றி மற்றவர்களுக்குப் பெரும் பாரமாகவே இருக்கும். (உள்ளச்சமுடைய) அவர்கள் தாம், “”திடமாக (தாம்) தங்கள் இறைவனைச் சந்திப்போம், நிச்சயமாக அவனிடமே தாம் திரும் பிச் செல்வோம்” என்பதை உறுதியாகக் கருத்தில் கொண்டோராவர். (அல்குர்ஆன்: 2:40-46)
1434 ஆண்டுகளுக்கு முன் அல்லாஹ் அல்குர்ஆன் மூலம் இஸ்ராயீல் மக்களிடம் முஹம்மது நபி (ஸல்) அவர்களைப் பின்பற்றும்படி வேண்டுகின்றான். ஆனால் அதிகமான இஸ்ரவேலரின் சந்ததியினர் அல்குர்ஆனுக்கு முரண்பட்டவர்களாகவே இருந்தனர். ஆகவே அல்லாஹ் அல்குர்ஆன் மூலம் மேலும் விளக்குகின்றான்.
இஸ்ராயீல் மக்களே! (முன்னர்) நான் உங்க ளுக்கு அளித்த என்னுடைய அருட்கொடைகளையும், உலகோர் யாவரையும் விட உங்களை மேன்மைப்படுத்தினேன் என்பதையும் நினைவு கூறுங்கள். இன்னும், ஓர் ஆத்மா மற்றோர் ஆத்மாவுக்குச் சிறிதும் பயன்பட முடியாதே (அந்த) ஒரு நாளை நீங்கள் அஞ்சி நடப்பீர்களாக! (அந்த நாளில்) எந்தப் பரிந்துரையும் அதற்காக ஏற்றுக் கொள்ளப்படமாட்டாது. அதற்காக எந்தப் பதிலீடும் பெற்றுக்கொள்ளப்பட மாட்டாது. அன்றியும் (பாவம் செய்த) அவர்கள் உதவி செய்யப்படவும் மாட்டார்கள்.
உங்களைக் கடுமையாக வேதனைப்படுத்தி வந்த ஃபிர்அவ்னின் கூட்டத்தாரிடமிருந்து உங்களை நாம் விடுவித்ததையும் (நினைவு கூறுங்கள்). அவர்கள் உங்கள் ஆண்களைக் கொன்று, உங்கள் பெண்களை (மட்டும்) வாழ விட்டிருந்தார்கள். அதில் உங்களுக்கு உங்கள் இறைவனிடமிருந்து ஒரு பெரும் சோதனை இருந்தது. (2:47-49)
(குறிப்பு: மேலே உள்ள அல்குர்ஆனின் (2:49) வசனத்தில் உள்ள அதே விசயம் பைபிள் பழைய ஏற்பாடான விவிலியத்தில் பின்வருமாறு குறிப் பிடப்படுகின்றது. (தோரா) அப்போது பார்லோன் (ஃபிர்அவ்ன்) பிறக்கும் ஆண் பிள்ளைகளையெல்லாம் நதியிலே போட்டு விடவும், பெண் பிள்ளைகளை எல்லாம் உயிரோடே வைக்கவும் தன் ஜனங்கள் எல்லோருக்கும் கட்டளை யிட்டான். (யாத்திராகமம் 1:22)
மேலும், உங்களுக்காக நாம் கடலைப் பிளந்து, உங்களை நாம் காப்பாற்றி, நீங்கள் பார்த்துக் கொண்டிருக்கும் போதே, ஃபிர்அவ்னின் கூட்டத்தாரை அதில் மூழ்கடித்தோம் (என்பதை யும் நினைவு கூறுங்கள்) (அல்குர்ஆன் 2:50)
(குறிப்பு: மேலே உள்ள (2:50) அல்குர்ஆன் வசனத்தின் விரிவான விளக்கம் அல்குர்ஆன் 26:10 முதல் 68 வரையுள்ள வசனங்களில் விளக்கமாக உள்ளன அவதானிக்கவும். இவை மட்டுமல்ல. அல்குர்ஆனில் உள்ள இது பற்றிய செய்திகள் பைபிளில் பழைய ஏற்பாட்டில் யாத்திராகமம்-அத்தியாயம்:14:21 முதல் 29 வரையுள்ள வசனங்களில் உள்ளன. ஆகவே அன்று முஹம்மது நபி(ஸல்) அவர்கள் அல்குர் ஆனில் இருந்து இவ்வரலாறுகளை படித்த போது யூதர்களினாலும், கிறித்தவர்களினாலும் மறுக்க முடியவில்லை. நபி(ஸல்) அவர்கள் தாம் எதிர் பார்த்திருக்கும் இறைத்தூதரே என தனது பிள்ளையை அறிவது போல் அறிந்தே இருந்த னர். இதை அவர்கள் தெரிந்து கொண்டே மறுத்தனர். மேலும் நாம் மூசாவுக்கு (நெறிநூல் அருள) நாட்பது நாட்களை வாக்களித்தோம். (அதற்காக அவர் சென்ற) பின்னர் காளைக் கன்(று ஒன்)றை (கடவுளாக) எடுத்துக் கொண் டீர்கள் (அதனால்) நீங்கள் அக்கிரமக்காரர் களாகி விட்டீர்கள்.
(மேலே உள்ள அல்குர்ஆனின் (2:51) இறை வசனத்திற்கு விளக்கமாக அல்குர்ஆனின் (7:148) வசனம் பின்வருமாறு விளக்குகின்றது. அவதா னிக்கவும். மூசாவின் சமுதாயத்தார், அவர்(தம் இறைவனுடன் உரையாடச் சென்ற) பின்னர் தம் நகைகளால் காளைக் கன்றின் உருவத்தை(ச் செய்து, அதைக் கடவுளாக) ஆக்கிக் கொண்டனர். அதற்கு மாட்டின் சப்தம் இருந்தது. அது அவர் களுடன் பேசாது என்பதும், அவர்களுக்கு நல்வழி காட்டாது என்பதும் அவர்களுக்குத் தெரியாதா? (ஆயினும்) அதை(க் கடவுளாக) ஆக்கிக் கொண்டார்கள். (இதனால்) அவர்கள் அநீதியாளர்களாக ஆகிவிட்டார்கள்.
1500 ஆண்டுகளுக்கு முன் நிகழ்ந்த சம்ப வத்தை முஹம்மது நபி(ஸல்) அவர்கள் இறுதி இறைத்தூதர் என்பதனாலேயே படித்துக்காட்ட முடிந்தது. இதனை விவிலியம் பழைய ஏற்பாடு பின்வருமாறு விளக்கியது.
ஐயோ, இந்த ஜனங்கள் பொன்னினால் தங்க ளுக்குத் தெய்வங்களை உண்டாக்கி, மகா பெரிய பாவம் செய்திருக்கிறார்கள். (யாத்திராகமம்: 32:34)
மேலும் விவிலியம் பழைய ஏற்பாட்டில் பின் வருமாறு காணப்படுகின்றது:
அங்கே அவர் அப்பம் புசியாமலும் தண்ணீர் குடிக்காமலும் இரவும் பகலும் நாற்பது நாள் கர்த்தரோடே இருந்தார். (யாத்திராகமம்: 34:28)
இவ்வாறான செய்திகளை எவ்வாறு தானாகக் கூற முடியும். அவர்கள் அல்லஹ்விடம் இருந்து வஹீயாகக் கிடைத்த இறை வசனங்களையே படித்துக் காட்டினார்கள். அறிவுமிக்க மனித சமுதாயமே சிந்தித்து நேர்வழி அடையக் கூடாதா? மேலும் அவதானியுங்கள்.
இதன் பின்னரும், நீங்கள் நன்றி செலுத்துவ தற்காக நாம் உங்களை மன்னித்தோம்.
இன்னும், நீங்கள் நேர்வழி பெறும் பொருட்டு நாம் மூசாவுக்கு இறைநெறி நூலையும் (நன்மை தீமைகளையும் பிரித்து அறிக்கக் கூடிய) ஃபுர்க் கானையும் அளித்தோம். (என்பதையும் நினைவு கூறுங்கள்)
மூசா தம் சமூகத்தாரை நோக்கி: “என் சமூகத் தாரே! நீங்கள் காளைக் கன்றை (வணக்கத் துக்காக) எடுத்துக் கொண்டதன் மூலம் உங்க ளுக்கு நீங்களே அக்கிரமம் செய்து கொண்டீர் கள். ஆகவே, உங்களைப் படைத்தவனிடம் பாவ மன்னிப்புக் கோருங்கள் உங்களை நீங்களே மாய்த்துக் கொள்ளுங்கள். அதுவே உங்களைப் படைத்தவனிடம், உங்களுக்கு நற்பலன் அளிப்பதாகும்” எனக் கூறினார். (அவ்வாறே நீங்கள் செய்ததனால்) அவன் உங்களை மன்னித்தான் (என்பதையும் நினைவு கூறுங்கள்) நிச்சயமாக, அவன் தவ்பாவை ஏற்(று மன்னிப்)பவனாகவும், பெரும் கருணையுடையவனாகவும் இருக்கிறான்.
(குறிப்பு: இந்த அல்குர்ஆனின் (2:52 முதல் 54 வரையுள்ள) வசனங்கள் விவிலியம் பழைய ஏற்பாடு பின்வருமாறு கூறுகின்றது. அவர் அவர்களை நோக்கி, “உங்களில் ஒவ்வொருவனும் தம் பட்டயத்தைத் தம் அரையிலே கட்டிக் கொண்டு, பாளயமெங்கும் உள்ளும் புறமும் வாசலுக்கு வாசல் போய், ஒவ்வொருவனும் தன் தன் சகோதரனையும் சினேகிதனையும், அயலானையும் கொன்று போடக் கடவன் என்று இஸ்ர வேலின் தேவனாகிய கர்த்தர் சொல்லுகிறார்” என்றார். (யாத்திராகமம்: 32:27)
(இதையும் நினைவு கூறுங்கள்) நீங்கள், “”மூசாவே! நாங்கள் அல்லாஹ்வைக் கண்கூடா கக் காணும் வரை உம்மீது நம்பிக்கை கொள்ள மாட்டோம்” என்று கூறினீர்கள். அப்பொழுது, நீங்கள் பார்த்துக் கொண்டிருக்கும்போதே உங்களை ஓர் இடிமுழக்கம் பற்றிக் கொண்டது.
நீங்கள் நன்றியுடையோராய் இருக்கும் பொருட்டு, நீங்கள் இறந்த பின் உங்களை உயிர்ப்பித்து எழுப்பினோம். இன்னும், உங்கள் மீது மேகம் நிழலிடச் செய்தோம். மேலும் “”மன்னு, ஸல்வா” (என்னும் மேன்மையான உணவுப் பொருள்களை) உங்களுக்காக இறக்கி வைத்து, “”நாம் உங்களுக்கு அருளியுள்ள பரிசுத்த மான உணவுகளிலிருந்து புசியுங்கள்” (என்றோம்). எனினும் அவர்கள் நமக்குத் தீங்கு செய்து விடவில்லை; மாறாக, தமக்குத் தாமே தீங்கி ழைத்துக் கொண்டார்கள்.
இன்னும் (நினைவு கூறுங்கள்) நாம் கூறி னோம்: “”இந்தப் பட்டினத்தினுள் நுழைந்து அங்கு நீங்கள் விரும்பிய இடத்தில் தாராளமாகப் புசியுங்கள். அதன் வாயிலில் நுழையும் போது, பணிவுடன் தலை வணங்கி “”ஹித்ததுன்” (எங்கள் பாவச் சுமைகள் நீங்கட்டும்) என்று கூறுங்கள். நாம் உங்களுக்காக உங்கள் குற்றங்களை மன்னிப் போம்.மேலும், நன்மை செய்வோருக்கு அதிகமாகக் கொடுப்போம்.
ஆனால் அக்கிரமக்காரர்கள் தம்மிடம் கூறப் பட்ட வார்த்தையை அவர்களுக்குச் சொல்லப் படாத வேறு வார்த்தையாக மாற்றிக் கொண் டார்கள். ஆகவே அக்கிரமங்கள் செய்தவர்கள் மீது (இவ்வாறு அவர்கள்) பாவம் செய்து கொண்டிருந்த காரணத்தினால் வானத்திலிருந்து நாம் வேதனையை இறக்கி வைத்தோம்.
(அல்குர்ஆன்: 2:47 முதல் 59 வரை)
அன்று 1434 ஆண்டுகளுக்கு முன் மக்காவைச் சூழவுள்ள பகுதிகளில் வாழ்ந்த யூதர்கள் மூசா (அலை) அவர்களுக்கு வழங்கப்பட்ட நெறி நூல்ச் செய்திகளை அறிந்தே வைத்திருந்தனர். அல்குர்ஆன் அந்த உண்மைகளை முஹம்மது நபி(ஸல்) அவர்கள் மூலமாக மிகத் தெளிவாக முன் வைத்தது. மூசா(அலை) அவர்கள் வாழ்ந்த சமுதாயத்திற்கு அல்லாஹ் செய்த அருட் கொடைகளை அல்குர்ஆன் மேலும் விபரிப்பதை அவதானியுங்கள்.
மூசா சமூகத்தாருக்காகத் தண்ணீர் வேண்டிப் பிரார்த்தித்தபோது-“”உமது கைத்தடியால் அப் பாறையில் அடிப்பீராக!” என நாம் கூறினோம். அதிலிருந்து பன்னிரண்டு நீர் ஊற்றுக்கள் பொங்கியயழுந்தன. ஒவ்வொரு கூட்டத்தினரும் அவரவர் குடி நீர்த் துறையை நன்கு அறிந்து கொண்டனர் “”அல்லாஹ் அருளிய ஆகாரத்தி லிருந்து உண்ணுங்கள், பருகுங்கள்; பூமியில் குழப்பஞ் செய்து கொண்டு திரியாதீர்கள்” (என நாம் கூறினோம்) என்பதையும் நினைவு கூறுங்கள்.
இன்னும், “”மூசாவே! ஒரே விதமான உணவை நாங்கள் சகிக்க மாட்டோம். ஆதலால், பூமி விளைவிக்கும் அதன் கீரையையும், அதன் வெள்ளரிக்காயையும், அதன் கோதுமையையும், அதன் பருப்பையும், அதன் வெங்காயத்தையும் எங்களுக்கு வெளிப்படுத்தித் தருமாறு உம் இறைவனிடம் எங்களுக்காகக் கேளும்” என்று நீங்கள் கூற, “”நல்லதாக எது இருந்ததோ, அதற்குப் பதிலாக மிகத் தாழ்வானதை நீங்கள் மாற்றிக் கொள்(ள நாடு)கிறீர்களா? நீங்கள் ஏதேனும் ஒரு பட்டினத்தில் இறங்கி விடுங்கள். அங்கு நீங்கள் கேட்பது நிச்சயாக உங்களுக்குக் கிடைக்கும்” என்று அவர் கூறினார். வறுமையும் இழிவும் அவர்கள் மீது சாட்டப்பட்டு விட்டன. மேலும் அல்லாஹ்வின் கோபத்திற்கும் அவர்கள் ஆளா னார்கள். இது ஏனென்றால் திட்டமாகவே அவர்கள் அல்லாஹ்வின் வசனங்களை நிரா கரித்தும், அநியாயமாக அவர்கள் நபிமார்களைக் கொலை செய்து வந்ததும் தான். இந்த நிலை அவர்கள் (அல்லாஹ்வுக்குப் பணியாது) மாறு செய்து வந்ததும், (அல்லாஹ் விதித்த) வரம்பு களை மீறிக் கொண்டேயிருந்ததினாலும் ஏற்பட்டது. (அல்குர்ஆன்: 2:60-61)
இஸ்ரவேலர்களுக்கு அல்லாஹ் வழங்கிய பன்னிரண்டு நீர் ஊற்றுக்களைப் பற்றி இங்கு நினைவுபடுத்துகின்றான். அத்துடன் எவ்வித உடலுழைப்பும் சிரமமுமின்றி தான் வழங்கிய “”மன்னு” மற்றும் “”சல்வா” ஆகிய உணவுகளைப் பற்றியும் ஞாபகப்படுத்துகின்றான். ஆனால் இஸ்ரவேலர்கள் அல்லாஹ்வின் தரமான உணவுக் குப் பதிலாக பூமியில் நகரங்களில் கிடைக்கக் கூடிய மலிவான உணவுகளை மூசா (அலை) அவர் களிடம் வேண்டி நின்றனர். இதனை விவிலிய பழைய ஏற்பாடு பின்வருமாறு விபரிக்கின்றது அவதானிக்கவும்.
நாம் எகிப்திலே கிரயமில்லாமல் சாப்பிட்ட மச்சங்களையும், வெள்ளரிக்காய்களையும், கொமட்டிக் காய்களையும், கீரைகளையும் வெங்காயங்களையும், வெள்ளைப் பூண்டு களையும் நினைக்கின்றோம். இப்போது நமது உள்ளம் வாடிப்போகின்றது. இந்த மன்னா வைத் தவிர நம்முடைய கண்களுக்கு முன்பாக வேறொன்றும் இல்லையே என்று சொன்னார் கள். (எண்ணாகமம் : 11:6-7)
அன்று மக்கா நகரில் வாழ்ந்த யூதர்கள் மூசா (அலை) அவர்கள் பற்றி அறிந்து வைத்திருந்த வேதச் செய்திகளை அல்குர்ஆன் மூலம் இறுதித் தூதர் முஹம்மது நபி(ஸல்) அவர்கள் சரியான வரலாற்று உண்மைகளை எடுத்து முன் வைத்தார் கள். இச்சான்றுகள் முஹம்மது நபி(ஸல்) அவர்கள் இறைத் தூதர் என்பதை உண்மைப் படுத்துகின்றன. அத்துடன் முன்னைய நெறி நூல்களிலும் முஹம்மது நபி(ஸல்) அவர்களின் வருகை பற்றிய செய்திகள் முன்னறிவிப்பு செய்யப்பட்டே இருந்தது. அவதானியுங்கள்.
நபி இப்ராஹீம்(அலை) அவர்களுக்கு இரு புதல்வர்கள், அவர்களில் ஒருவர் இஸ்மாயீல் (அலை) ஆவார்கள். அவர்களின் பரம்பரையில் வந்தவரே இறுதி இறைத் தூதர் முஹம்மது நபி (ஸல்) அவர்களாவார்கள். இப்ராஹீம் அவர் களின் இன்னுமோர் மகனும், இஸ்மாயீல் (அலை) அவர்களின் சகோதரரும் ஆகிய இஸ்ஹாக் (அலை) அவர்களின் பரம்பரையில் தோன்றியவர்களே இஸ்ரவேலர்கள் ஆவர். ஆகவே அரபு களான குறை´களும், இஸ்ரவேலர் சமூகத்தின ரும் ஒருவருக்கொருவர் சகோதர பரம்பரையினர் கள் ஆவார்கள். இஸ்ரவேலர்களின் சகோதர பரம்பரையான குறை´ பரம்பரையில் வந்த வரே இறுதித் தூதர் முஹம்மது நபி(ஸல்) அவர் களாவர். பைபிள் பழைய ஏற்பாட்டிலும், புதிய ஏற்பாடுகளிலும் இறுதித் தூதர் முஹம்மது நபி(ஸல்) அவர்களின் வருகை, அவர் வரும் சமு தாயம், அவர் வாயிலாக இறை நெறிநூல் செய்திகள் முன் வைக்கப்படும், அந்த நேர் வழி இறைச் செய்திகளுக்கு செவிகொடுக்க வேண்டும் என்ற விபரம் பற்றிய விசயங்கள் முன்னறிவிப்புச் செய்யப்பட்டிருப்பதை அவதானியுங்கள்.
(இன்ஷா அல்லாஹ் தொடரும்….)