அனைத்து அகிலங்களையும் படைத்து அணுவளவும் பிசகாது பல்லாயிரம் கோடி ஆண்டுகளாக நிர்வகித்து வரும் இணை, துணை, இடைத்தரகர் இல்லாத எல்லாம் வல்ல ஏகனான இறைவன், மனிதனைப் படைத்து இவ்வுலகிற்கு அனுப்பும் போதே தெள்ளத் தெளிவாகக் கட்டளையிட்டே அனுப்பியுள்ளான். அது வருமாறு:
“”நீங்கள் அனைவரும் இதிலிருந்து இறங்குங்கள். என்னிடமிருந்து உங்களுக்கு(ஒரே) நேர் வழி வரும் போது என் வழியைப் பின்பற்றுவோருக்கு எவ்வித பயமுமில்லை; அவர்கள் துக்கப்படவும் மாட்டார்கள்” எனக் கூறினோம்.(2:38)
நிராகரித்தும், நம் வசனங்களைப் பொய்ப்பிப்பவர்களுமே நரகவாசிகள். அவர்கள் அதில் நிரந்தரமாகத் தங்குபவர்கள். (2:39, 20:123,124)
இறைவன் காட்டி இருப்பது மட்டுமே நேர் வழி. அதற்கு மாறாக மனிதர்கள் காட்டுவது கோணல் வழிகளே, நரகில் சேர்ப்பவையே என்று இந்த நான்கு குர்ஆன் வசனங்களும் உறுதிப்படுத்துகின்றன. அல்லாஹ் அந்த நேர்வழியைத் திட்டமாக, தெளிவாக விளக்கிவிட்டான். அதற்கு மாறாக மேல் விளக்கம் கொடுப்பவர்கள் நேர்வழியை வளைத்துக் கோணல் வழிகளாக ஆக்குகிறார்கள். நேர்வழியை மறைக்கிறார்கள் என்று 2:159 இறைவாக்கு உறுதிப்படுத்துவதோடு, அவர்களின் தவறு சுட்டிக் காட்டப்பட்டப் பின்னரும் அத்தவறிலேயே நிலைத்திருந்தால் அவர்கள் மீது அல்லாஹ், வானவர்கள், மனிதர்கள் அனைவரின் சாபம் ஏற்படுவதோடு நிரந்தர நரகை அடைபவர்கள் என்று அடுத்த 2:160, 161,162 குர்ஆன் வசனங்கள் உறுதிப்படுத்து கின்றன.
2:186 குர்ஆன் வசனம் இறைவன் அருகிலேயே இருப்பதாகவும், 50:16 குர்ஆன் வசனம் பிடறி நரம்பை விடச் சமீபமாக இருப்பதாகவும், அந்த இறைவனையே முற்றிலுமாக நம்பி, நேர்வழியைப் பெற அவனிடமே கேட்கட்டும் என்று கூறுகிறது. எனவே மனிதர்களை நம்புவது வழிகேடு என்பது உறுதியாகத் தெரிகிறது.
மேலும் 7:3 இறைவாக்கு இறைவனால் வஹி மூலம் இறக்கப்பட்டதை மட்டுமே பின்பற்றக் கட்டளையிடுகிறது. 53:2-5 குர்ஆன் வசனங்கள் இறுதி இறைத்தூதர் அறிவித்தவையும் அல்லாஹ்வால் வஹி மூலம் அறிவிக்கப்பட்டவையே என்று உறுதிப்படுத்துவதோடு, எண்ணற்ற இடங்களில் “”அ(த்)தீவுல்லாஹ வஅ(த்) தீவுர்ரசூல்” என்று கட்ட ளையிடுவதன் மூலம் இறைத்தூதரை பின்பற்றக் கட்டளையிடுகிறான். (மேலும் பார்க்க : 3:31, 8:46, 33:21,36, 59:7). 21:92, 23:52 இறைக் கட்டளைகள் படி சமூக ஒற்றுமையை நிலைநாட்ட குர்ஆன், ஹதீஃதுக்கு முரணில்லாதவற்றில் அமீராகிய தலை வரையும் பின்பற்ற 4:59ல் அல்லாஹ் கட்டளையிடுகிறான்.
அல்லாஹ், ரசூல், அமீர் தவிர்த்து மனிதர்களில் வேறு யாரையும் பின்பற்றுவது நேர்வழி என்று குர்ஆனில் சொல்லப்படவில்லை. அதற்கு மாறாக வேறு யாரையும் எந்தப் பெயரிலும் பின்பற்றவே கூடாது என்று 7:3, 33:36 இறைவாக்குகள் திட்ட மாக அறிவிக்கின்றன.
குர்ஆனின் பல வசனங்கள் இவ்வளவு தெளிவாக நேரடியாகக் கூறி இருந்தும் அதிலும் குறிப்பாக 33:36 இறைவாக்கு அல்லாஹ்வின் வழிகாட்டல், ரசூலின் வழிகாட்டல் அல்லாத வேறு மனிதர்களின் வழிகாட்டல், ஆணாக இருந்தாலும் பெண்ணாக இருந்தாலும் அது பகிரங்கமான வழிகேடு நரகில் கொண்டு சேர்க்கும் என்று திட்டமாக தெளிவாக நேரடியாகக் கூறி இருக்கும் நிலையில் மதகுருமார் களுக்கு மார்க்கத்தில் எங்கே அனுமதி இருக்கிறது?
அனுமதியே இல்லை. அல்லாஹ் கொடுத்தருளிய நேர்வழியான தூய இஸ்லாமிய மார்க்கத்தில் ஆதி நபி ஆதம்(அலை) முதல் இறுதித் தூதர் முஹம் மது(ஸல்) வரை அல்லாஹ்வுக்கும் அடியானுக்கும் இடையில் இடைத்தரகர்களாக-மதகுருமார்களாகச் சட்டவிரோதமாக-திருட்டுத்தனமாகப் புகுந்துள்ளவர்களே மதகுருமார்கள் என்பது உறுதியாத் தெரியவில்லையா? நடுநிலையோடு சிந்திப்பவர்களுக்குத் தெளிவாகவே புரியும்.
ஆம்! ஆதம்(அலை) அவர்களிலிருந்து இறுதித் தூதர் முஹம்மது(ஸல்) அவர்கள் வரை அனைத்து இறைத்தூதர்களுக்கும் அல்லாஹ் கொடுத்தருளிய நேர்வழியான இஸ்லாமிய மார்க்கத்தை எண்ணற்றக் கோணல் வழிகளாக, பற்பல மதங்களாக அவற்றிலும் பல பிரிவுகளாகத் தோற்றுவித்தவர்கள் துஷ்டர்களான மதகுருமார்களே. குர்ஆனில் பல இடங்களில் பலவிதமாக மிகமிகக் கடுமையான வார்த்தைகளால் அர்ச்சிக்கப்பட்டிருப்பவர்கள் இம் மதகுருமார்களும் அவர்கள் பின்னால் கண்மூடிச் செல்லும் பெருங்கொண்ட மக்களுமேயாவர். அவர்கள் இறுதியில் ஒதுங்குமிடம் கொடிய நரகமே என்பதையும் அல்குர்ஆன் பல இடங்களில் எச்சரிக்கத் தவறவில்லை. அங்கு அந்த இருவகை முகல்லிதுகளும் ஒருவரை ஒருவர் குற்றம் சாட்டி ஒப்பாரி வைப்பதையும் குர்ஆன் படம் பிடித்துக் காட்டுகிறது. (பார்க்க : 2:39,7:35-41, 33:66-68, 34:31-33, 37:27-33, 38:55-64, 40:47-50, 41:29, 43:36-45). 34:31-33 வரை காணப்படும் இறைவாக்குகளில் பெருமையடித்தவர்கள், என மீண்டும் மீண்டும் கூறப்பட்டிருப்பது, நாங்கள் தான் இறைவனுக்கு நெருக்கமானவர்கள், மக்களுக்கு நேர்வழி காட்டக் கூடியவர்கள் நேர்வழி காட்ட அதிகாரம் பெற்றவர்கள், சாதாரண மக்களுக்கு(அவாம்) மார்க்கம் விளங்காது என மமதை பேசும் மதகுருமார்களையே குறிக்கிறது என்பதில் ஐயமுண்டா?
இவ்வளவு கடுமையாக நேரடியாக அல்லாஹ் அல்குர்ஆனில் எச்சரித்திருந்தும் இம்மதகுருமார்களுக்கு உறைக்காதது ஏன்? ஆம்! அவர்களின் உணவு, உடை, இருப்பிடம் அனைத்தும் அல்லாஹ்வின் எண்ணற்றக் கட்டளைகளை நிராகரித்து முற்றிலும் ஹராமான வழியில் அமைந்திருப்பதால் அவர்களின் உள்ளங்கள் இறுகி இறைவனின் நேர் வழியை கோணல் வழிகளாக்குகிறார்கள். இறை அறிவிப்புகளின் அர்த்தங்களை அநர்த்தங்களாக்குகிறார்கள். இதையும் அல்லாஹ் 5:13, 6:125, 39:22 இறைவாக்குகளில் படம் பிடித்துக் காட்டுகிறான்.
மார்க்கப்பணிக்கு அற்பமான இவ்வுலகில் சம்பளம் வாங்கவே கூடாது என நபிமார்களையே எச்சரித்து அதை மக்கள் முன் பிரகடனப்படுத்தச் சொல்லி 6:90, 10:72, 11:29,51, 25:57, 26:109.127, 145,164,180, 34:47, 38:86, 42:23 ஆகிய பல இறை வாக்குகளில் கூறி இருந்தும் இந்த இறைவாக்குகள் அனைத்தையும் நிராகரித்துவிட்டு சம்பளம் வாங்குகிறார்கள். சம்பளம் வாங்கி மார்க்கப் பணி புரியும் இம்மத குருமார்கள் நேர்வழியில் இல்லை; கோணல் வழிகளையே நேர்வழியாகக் காட்டுவார்கள் என்று 36:21 இறைவாக்கு உறுதிப்படுத்துகிறது. மதகுரு மார்கள் வாங்கும் சம்பளமே சமூகத்தின் அதல பாதாள வீழ்ச்சிக்குக் காரணம் என 52:40, 68:46 இறைவாக்குகள் உறுதிப்படுத்துகின்றன.
அற்பமான இந்த சம்பளத்திற்காக மதகுருமார்கள் எப்படிப்பட்ட தவறுகளைச் செய்கிறார்கள், தில்லுமுல்லுகள் செய்யும் அவசியம் ஏற்படுகிறது என்பதை 2:41,75,78,79,109,146,159,160,161,162, 174,188, 3:78,187,188, 4:44,46, 5:41,62,63, 6:21, 25:26, 9:9, 10,34, 11:18,19, 31:6 ஆகிய பல குர்ஆன் வசனங்களை நேரடியாகப் படித்து விளங்குகிறவர் கள் நிச்சயம் உணர முடியும். மேலும் இந்த இறை வாக்குகளை முழுமையாகப் படித்து விளங்குகிறவர்கள் மார்க்கப் பணிக்குச் சம்பளம் வாங்குவதை விட மிகக் கொடிய ஹராம் வேறு எதுவும் இருக்க முடியாது என்பதையும் அறிய முடியும். உலகியல் நப் பாசையே இம்மதகுருமார்களை நாயிலும் கேடான ஒரு நிலைக்குத் தள்ளுகிறது என்பதை 7:175-179, 47:24-30 குர்ஆன் வசனங்களை நேரடியாகப் படித்து அறிகிறவர்கள் நிச்சயம் உணர முடியும்.
மேலே விவரித்துள்ள குர்ஆன் வசனங்கள் அனைத்தும் நூற்றுக்கு நூறு உண்மை. அதில் சந்தேகமே இல்லை. ஆனால் இவை அனைத்தும் உலகில் காணப்படும் அனைத்து மதங்களையும் வழிநடத்திச் செல்லும் மதகுருமார்களையே குறிக்கும். முஸ்லிம் மதகுருமார்களை இந்த இறைவாக்குகள் ஒருபோதும் கட்டுப்படுத்தா எனக் கூறி அப்பாவி பொதுமக்களை ஏமாற்றி வஞ்சிப்பார்கள் முஸ்லிம் மதகுருமார்கள்.
ஆனால் உண்மை என்ன? மேலே குறிப்பிட்டுள்ள இறைவாக்குகள் அனைத்தும் முழுக்க முழுக்க முஸ்லிம் மதகுருமார்களைக் கடுமையாக எச்சரிப்பவையே. மற்ற மதங்களின் மதகுருமார்கள் செய்து வரும் அனைத்து வகை இணை வைத்தல் களையும் பாவங்களையும், குற்றச் செயல்களையும் ஜாணுக்கு ஜாண், முழத்திற்கு முழம் அடிபிசகாது முஸ்லிம் மதகுருமார்களும் பின்பற்றுகிறார்கள். இதை இறுதித் தூதர் அவர்களே முன் அறிவிப்புச் செய்து விட்டார்கள். நாளை மறுமையில் மற்ற மதங்களின் மதகுருமார்களை விட முஸ்லிம் மதகுருமார்களே மிகக் கடுமையாகத் தண்டிக்கப்படுவார்கள். காரணம் இவர்களிடம் மட்டுமே நிறைவு செய்யப்பட்ட(5:3, 3:19,85) பாதுகாக்கப்பட்ட (15:9) மனிதக் கலப்படமே இல்லாதத் தூய வாழ்க்கை நெறிநூல் அல்குர்ஆன் இருக்கிறது. அது மட்டுமா? அந்த குர்ஆனை நாத்திகர்களும், மாற்று மதத்தினரும், சாதாரண முஸ்லிம்களும் படித்து விளங்க முற்படக்கூடாது என கொடிய ஹராமான சட்டத்தை இம்முஸ்லிம் மதகுருமார்கள் தான் இயற்றி வைத்திருக்கிறார்கள். எனவே இறுதி நெறிநூலைப் படித்து விளங்கிச் செயல்பட வாய்ப்பை இழந்தவர்கள் செய்யும் பாவச் செயல் களுக்கும் இம்முஸ்லிம் மதகுருமார்களாகிய ஆலிம், மவ்லவி, மவ்லானா, அல்லாமா என பெருமை பேசும் முஸ்லிம் மதகுருமார்களே நாளை மறுமையில் பொறுப்பு ஏற்கும் நிலைக்குத் தள்ளப்படுவார்கள்.
2:213 இறைவாக்குக் கூறுவது போல் ஆரம்பத் தில் மனிதகுலம் ஒன்றுபட்டு ஒரே சமுதாயமாக இருந்ததை, இம்மத குருமார்களுக்கிடையே ஏற்பட்ட போட்டி பொறாமையே பல பிரிவினர்களாக்கியது; பல மதங்கள் கற்பனை செய்யப்பட்டன. அடுத்து இம்மதகுருமார்களிடையே ஏற்பட்ட போட்டி பொறாமையே மனிதக் கற்பனைகளிலான மதங்களிலும் பல உட்பிரிவுகள் ஏற்பட்டன. அதே வரிசையில் வழமை போல் இறைவன் கொடுத்த நிறைவு செய்யப்பட்ட தூய இஸ்லாமிய மார்க்கத்தை-ஒரே நேர்வழியை மடமைகள், மூட நம்பிக்கைகள், மூடச் சடங்கு சம்பிரதாயங்கள் கொண்ட இணை வைப்புகள் நிறைந்த முஸ்லிம் மதமாக்கிய பெருமை இம்முஸ்லிம் மதகுருமார்களான மவ்லவி, ஆலிம், அல்லாமா, மவ்லானா என பெருமை பேசும்பவர்களையே சாரும்.
வழமை போல் இம்முஸ்லிம் மதகுருமார்களுக்கிடையே ஏற்பட்ட போட்டி பொறாமையே இவர்களிலும் தக்லீது, தஸவ்வுஃப், மத்ஹபு, தரீக்கா, மஸ்லக், முஜாஹித், அஹல ஹதீஸ், ஜாக், ததஜ, இதஜ இன்னும் இவை போல் எண்ணற்றப் பிரிவுகள் ஏற்படக் காரணமாயிற்று. ஆக இப்படித் தூய இஸ்லாமிய மார்க்கத்தை முஸ்லிம் மதமாக்கி அதிலும் எண்ணற்றப் பிரிவுகளாகப் பிளவுபடுத்திச் சமுதாயத்தைச் சீரழித்துச் சின்னாபின்னமாக்கும் இம் முஸ்லிம் மதகுருமார்களைவிட கேடுகெட்டவர்கள் இந்த வானத்தின் கீழ் இருக்க முடியுமா?
இதையே “”ஒரு காலம் வரும்; அக்காலத்தில் மார்க்க அறிஞர்கள் என்போர் வானத்தின் கீழுள்ள படைப்புகளிலேயே ஆகக் கேடுகெட்டப் படைப்பாக இருப்பார்கள். தீய செயல்கள் அனைத்தும் அவர்கள் மூலமே வெளியாகும் என நபி(ஸல்) முன்அறிவிப்புச் செய்துள்ளார்கள்.
(பைஹகி 1908. மிஷ்காத் பாகம் 1. பக்கம் 91)
ஆம்! நாங்கள்தான் மார்க்கத்தை மக்களுக்குச் சொல்ல அதிகாரம் பெற்றவர்கள் எனக் கூறி 2:186, 7:3, 33:36, 59:7 ஆகிய குர்ஆன் வசனங்களை நிராகரித்து அல்லாஹ்வுக்கும் அடியானுக்கும் இடையில் இடைத்தரகர்களாக-புரோகிதர்களாகப் புகுகிறவர்கள், நாளை மறுமையில் இறுதியில் சென்று புகுவது கொடிய நரகமே. அவர்களை தக்லீது செய்த-கண்மூடிப் பின்பற்றியவர்களும் நரகவாசிகளே. மவ்லவிகளான மதகுருமார்களினதும், அவர்களை தக்லீது செய்து அதாவது கண்மூடிப் பின்பற்றி நரகம் புகுந்த பெருங்கொண்ட முஸ்லிம்களினதும் பிதற்றல்களையும், ஒப்பாரியையும் தான் மேலே எடுத் தெழுதியுள்ள பல குர்ஆன் வசனங்கள் படம் பிடித்துக் காட்டுகின்றன.
முஸ்லிம் மதகுருமார்களில் தங்களை பரேல்வி அகீதா மவ்லவிகள், தேவ்பந்தி அகீதா மவ்லவிகள், தர்கா மவ்லவிகள், தரீக்கா மவ்லவிகள், மத்ஹபு மவ்லவிகள், தப்லீஃக் மவ்லவிகள், ஜ.இ. மவ்லவிகள், அஹ்ல ஹதீஸ் மவ்லவிகள், முஜாஹித் மவ்லவிகள், தவ்ஹீத் மவ்லவிகள், ஸலஃபி மவ்லவிகள், ஸலஃபி மின்ஹஜ் மவ்லவிகள், இன்னும் இவை போல் எத்தனைப் பிரிவுகள் உண்டோ அவற்றின் மவ்லவிகள் ஆக அனைத்துப் பிரிவு மவ்லவிகளும் ஒரே குட்டையில் ஊறிய மட்டைகளே. எப்படிக் கழுதை விட்டையில் முன்விட்டை, பின் விட்டை என வேறுபாடு இல்லையோ அதுபோல் இந்த மவ்லவிகளிலும் வேறுபாடு இல்லவே இல்லை.
இந்த மவ்லவிகள் அனைவரும் 2:186, 7:3, 50:16, 56:85 ஆகிய இறைவாக்குகளுக்கு முற்றிலும் முரணாக, அவற்றை நிராகரித்தவர்களாக அல்லாஹ்வுக்கும் அடியானுக்கும் இடையில் தரகர்களாகத் திருட்டுத்தனமாகப் புகுகிறவர்களே-வழி கேடர்களே. தன்னை மவ்லவி, ஆலிம், மார்க்கத்தில் அதிகாரம் பெற்றவன்; அவாம்கள் நான் சொல்கிற படிதான் நடக்க வேண்டும் என்று சொல்கிறவனை விட பொய்யன், புரட்டன், அயோக்கியன், அண்டப் புழுகன், ஆகாசப் பொய்யன் பிரிதொருவன் இருக்க முடியாது என்பதே குர்ஆன் கூறும் உண்மையாகும். குர்ஆன் கூறும் அனைத்து சுடு சொல்களும், கடும் எச்சரிக்கைகளும் இம்மதகுருமார்கள் பற்றிய வையே!.
எல்லாம் வல்ல ஏகன் மனித குலத்திற்கென்றே மார்க்கத்தை-நேர்வழியை தெள்ளத் தெளிவாக விளக்கிய பின்னர் (2:159) அல்லாஹ் விளக்கியது போதாது, நாங்கள் விளக்கித்தான் மக்கள் விளங்க முடியும் என்று ஆணவம் பேசும் இம்மவ்லவிகள், அல்லாஹ்வை விட தாங்கள் தான் மக்களுக்கு விளக்கும் ஆற்றல் மிக்கவர்கள் என்றுதானே பிதற்றுகிறார்கள். இவர்கள் 42:21, 49:16 வசனங்கள்படி அல்லாஹ்வுக்கே மார்க்கத்தைக் கற்றுக் கொடுக்க முற்படும் மாபெரும் ´ஷிர்க் செய்யும் பெரும் பாவிகள் என்பதில் சந்தேகமுண்டா?
இந்த அனைத்து வகை மவ்லவிகளும் அரும்பாடு பட்டு குர்ஆனுக்கும், ஹதீஃதுக்கும் முற்றிலும் முரணான தக்லீதை வளர்ப்பவர்களே. இந்த மவ்லவிகள் பின்னால் செல்லும் சுன்னத் வல்ஜமாத், அஹ்ல ஹதீஸ், முஜாஹித், தவ்ஹீத், ஸலஃபி முஸ்லிம்களும் முகல்லிதுகளே. அவர்களில் யாருமே குர்ஆன், ஹதீஃதை நேரடியாகப் படித்து விளங்கி நடப்பவர் அல்லர். அவரவர்கள் நம்பும் மவ்லவிகள் சொல்வதை வேதவாக்காகக் கண்மூடி நம்பி அதன் படி நடப்பவர்களே!
மவ்லவிகளான இந்த மதகுருமார்கள் குர்ஆன், ஹதீஃதையே பின்பற்றுகிறோம் என்று கூறுவதில் படு பொய்யர்களே. அதனால்தான் பொய்யர்களான இவர்கள் மீது “”அல்லாஹ்வின் சாபம் உண்டாகட்டும்” என்று 2:89,161, 3:61, 87, 7:44, 11:18,60,99, 13:25, 15:35, 24:7, 28:42, 40:52 வசனங்கள் கூறுகின்றன. இன்னும் “”லஃனத்” செய்யப்படும் பல வசனங்களும் இந்த ஒட்டு மொத்த மதகுருமார்களையும், அவர்களை தக்லீது செய்யும் மக்களையுமே குறிக்கும்.
மேலும் வரம்பு மீறி நடக்கும் தாஃகூத்கள்-மனித ஷைத்தான்கள் என்று 2:256,257, 4:51,60, 76, 5:60, 16:36, 39:17 மற்றும் “”தாஃகூன்” என்று 51:53, 52:32லும் கூறி எச்சரிக்கப்பட்டிருப்பது வரம்பு மீறும் இம்மதகுருமார்களும், அவர்களை தக்லீது செய்யும் மக்களுமேயாவர். இந்த மவ்லவிகளும் அவர்களை தக்லீது செய்யும் முஸ்லிம்களும் குர்ஆன் ஹதீஃதை மட்டும் பின் பற்றவில்லை. சுன்னத் ஜமாஅத்தினர் இஜ்மா, கியாஸ் என்றும் ஜாக், ததஜவினர் லாஜிக், பாலிசி என்றும், ஸலஃபுகள் முன் சென்றவர்கள் விளங்கிய படி விளங்க வேண்டும் என்றும் மனிதக் கற்பனைகளைப் புகுத்தியே மக்களை வழிகெடுக்கின்றனர். அவர்களை நம்பும் மக்களும் அவர்களைக் கண் மூடிப் பின்பற்றுகின்றனர்; தக்லீது செய்கின்றனர்.
முஸ்லிம்களிலுள்ள அனைத்துப் பிரிவு மவ்லவிகளான மதகுருமார்கள் ஏதாவதொரு வகையில் தக்லீதை வளர்க்கும் முகல்லிதுகளாகவும், அவர்களை நம்பி அவர்கள் பின்னால் செல்பவர்கள் அவர்கள் கொடுக்கும் மேல் விளக்கங்களை வேத வாக்காக(?) நம்பி கண்மூடிச் செயல்படும் முகல்லிதுகளாகவுமே இருக்கிறார்கள். மதகுருமார்களான மவ்லவிகள் பின்னால் செல்லும் யாராக இருந்தா லும் குர்ஆன், ஹதீஃதைப் பின் பற்றுகிறோம் என்று கூறுவதில் பெரும் பொய்யர் களே. பொய்யர்கள் மீது அல்லாஹ்வின் சாபம் உண்டாவது நிச்சயம்.
இந்த மதகுருமார்கள் உண்மையிலேயே குர்ஆன், ஹதீஃதை மட்டுமே பின்பற்றுகிறவர்களாக இருந்தால் 3:102,103,105, 6:153,159, 22:78, 30:32, 41:33, 42:13,14 ஆகிய எண்ணற்ற குர்ஆன் வசனங்களை நிராகரித்து 2:39 இறைவாக்குச் சொல்வது போல் காஃபிராகி அல்லாஹ் பெயரிட்டு அழைக்கச் சொன்ன பெயரான “”முஸ்லிமீன்”, ஜமாஅத்அல் முஸ்லிமீன்” பெயர்களை நிராகரித்து நரகத்திற்குகுரிய வழியில் ஆளாளுக்கு அவர்களாகத் தனித் தனிப் பெயர் சூட்டிக் கொண்டு அப்படி அழைத்துக் கொள்வதில் பெரும் மகிழ்ச்சி அடைவார்களா?
(பார்க்க : 23:53, 30:32)
இந்த அனைத்துப் பிரிவுகளின் மவ்லவிகள் எப்படிப்பட்டக் கல்வி கற்றுள்ளார்கள். அவர்களின் தராதரம் என்ன? மக்களை வழிநடத்திச் செல்லும் தகுதி அவர்களுக்கு இருக்கிறதா? இந்த உண்மைகளை அறிந்து கொள்ள ஆரம்பத்திலேயே தெளிவு படுத்தி எழுதிய “”தக்லீது”, “”ஸில்ஸிலயே நிஜாமிய்யா”, இன்றைய மதரஸாக்கள் ஆகிய மூன்று தலைப்புகளில் நாம் ஆய்வு செய்து எழுதிய ஆக்கங்களையே மீண்டும் இந்த இதழில் இடம் பெறச் செய்துள்ளோம். இவை எதுவும் எமது கற்பனைகளோ, சொந்தச் சரக்குகளோ அல்ல.
அனைத்திற்கும் குர்ஆன், ஹதீஃத் நேரடிக் கருத்துக்களையே எடுத்து வைத்துள்ளோம். குர்ஆனை எடுத்து நேரடியாகப் பார்த்து ஒவ்வொருவரும் விளங்க வேண்டும் என்ற நல்ல நோக்கத்துடனேயே அந்த வசனங்கள் இடம் பெறும் அத்தியாயம், வசனங்கள் அனைத்தையும் மட்டுமே கொடுத்துள் ளோம். 29:69 இறைவாக்கு சொல்வது போல், 2:186 இறைவாக்குக்குக் கட்டுப்பட்டு நேரடியாக குர்ஆன் வசனங்களைப் படித்து விளங்குகிறவர்கள் நிச்சயம் நேர்வழி பெற முடியும்.
தன்நம்பிக்கை இல்லாமல் இந்த மதகுருமார்களான மவ்லவிகளை நம்பி அவர்கள் பின்னால் கண் மூடிச் செல்பவர்கள் நாளை, நரகில் கிடந்து வெந்து கருகிக் கொண்டு, இம்மதகுருமார்களையே சபித்து ஒப்பாரி வைப்பதை 33:66,67, 68 இறைவாக்குகளை நேரடியாகப் படித்து அறிந்து கொள்ளலாம்.
நாம் இங்கு எடுத்து எழுதியுள்ள குர்ஆன் வசனங்கள் அல்லாஹ் 51:55 இறைவாக்கில் சொல்லி இருப்பது போல் உள்ளத்தில் உண்மையில் ஈமான்-இறை நம்பிக்கை உடையவர்களுக்கே பலன் தரும். அவர்களே அல்குர்ஆனை கையில் எடுத்து அவர்களுக்கு தெரிந்த மொழிகளிலுள்ள மொழிபெயர்ப்புகளை நேரடியாகப் படித்து விளங்கி இவை அனைத்தும் தங்களைப் படைத்த அல்லாஹ்வின் நேரடிக் கட்ட ளைகள் என உறுதியாக நம்பி அதன்படி நடக்க முன் வருவார்கள். அவர்களுக்கே குர்ஆன் வசனங்களைப் படித்தவுடன் உள்ளச்சம் ஏற்பட்டு அவர்களின் உள்ளங்கள் நடுங்கும். “”சமிஃனாவஅதஃனா”-கேட்டோம் வழிப்பட்டோம்” என்பதே அவர்க ளின் கூற்றாக இருக்கும். (பார்க்க : 2:285, 4:46, 5:7, 24:47,51) இது ஈமானுடையவர்களின் அடையா ளம்-இவர்களே சுவர்க்கத்தின் வாரிசுகள்.
(பார்க்க:50:31-37)
அதற்கு மாறாக 32:13, 11:118,119, 4:117-121, 17:62-64 இன்னும் இவைபோல் பல வசனங்கள் கூறுவது போல் நரகை நிரப்ப இருக்கும் மக்கள் குர்ஆன் போதனையைக் காது கொடுத்துக் கேட்க மாட்டார்கள், குர்ஆனை ஏறெடுத்தும் பார்க்க மாட்டார்கள், அப்படியே கேட்டாலும் 6:68, 40:4,35 இறைவாக்குகள் கூறுவது போல் விதண்டா வாதம் செய்து வீண் தர்க்கம் செய்வார்கள். எவ்வித ஆதாரமுமின்றி 2:159 சொல்வது போல் நேரான கருத்தைத் திரித்து வளைப்பார்கள். அல்லாஹ்வுக்கும் அடியானுக்கு இடையில் சட்ட விரோதமாகப் புகுந்து தக்லீதை வலியுறுத்தும் மதகுருமார்களும், அவர்களை தக்லீது செய்யும் முகல்லிதுகளும் இத்தரத்தைச் சேர்ந்தவர்களே. நரகை நிரப்ப இருப்பவர்களே. (33:66,67,68) இம் மவ்லவிகளுக்குப் பின்னால் கண்மூடிச் செல்வதை விட பெருத்த வழிகேடு வேறொன்றுமில்லை. ஷைத்தான் அவன் கூறியபடி இப்படிப்பட்ட பெருத்த வழிகேடுகளை அழகாக-நற்செயல்களாகக் காட்டத்தான் செய்வான். அவன் வலையில் சிக்கியவர்கள் இறுதியில் ஒதுங்கும் இடம் நரகமே. (பார்க்க: 45:23, 47:25, 7:175-179)
இந்த உண்மையை சமீப காலங்களில் தர்கா மவ்லவிக்கும், தவ்ஹீத் மவ்லவிக்கும், மத்ஹப் மவ்லவிக்கும், தவ்ஹீத் மவ்லவிக்கும் இடையில் நடந்த வாதப் பிரதிவாதங்கள் உண்மைப்படுத்துகின்றன. முஸ்லிம் அல்லாதவர்கள் பொழுது போக்காக நடத்தும் எரிந்த கட்சி எரியாத கட்சி, நீயா? நானா? பட்டிமன்றங்கள் தோற்றுப் போகும் வகையில் இவர்களின் விவாதங்கள் அமைந்திருந்தன என்பதை இம்மவ்லவிகளை தக்லீது செய்யாமல் நடு நிலையோடு, சுய சிந்தனையோடு கேட்டவர்கள் உணர முடியும்.
நரகம் புக இருக்கும் மிகமிகப் பெருங்கூட்டத்தில் பெரும் பகுதியை தம் பக்கம் இழுத்து நரகில் தள்ளி ஷைத்தானிடம் முதல் பரிசைத் தட்டிச் செல்ல வேண்டும் என்ற பேராசையோடு அவர்களில் ஒவ்வொருவரும் அரும்பாடுபட்டதை அறிய முடியும். ஒவ்வொருவரும் தங்கள் தங்கள் வீரப் பிரதாபங்களை வீராவேசமாக எடுத்து வைத்தனரே அல்லாமல் அல்லாஹ்வுக்கு அஞ்சி குர்ஆன், ஆதார பூர்வமான ஹதீஃதை மட்டுமே எடுத்து வைத்து சத்தியத்தை-நேர்வழியை-சுவர்க்கம் செல்லும் வழியை அவர்களில் யாரும் எடுத்து வைக்கவில்லை. கைசேதம். 3:7 இறைக் கட்டளைப்படி பின்பற்ற வேண்டிய அடிப்படை “”முஹ்க்கமாத்” வசனங்களுக்கு 2:213, 16:44,64 இறைக் கட்டளைகள் கூறுவது போல் இறைத் தூதர் அல்லாத வேறு யாரும் மேல் விளக்கம் கொடுக்க அருகதை பெறமாட்டார். எஞ்சிய “”மு(த்)தஷாபிஹாத்” வசனங்களுக்கு ஆளாளுக்கு விளக்கம் கொடுக்க அனுமதி இருந்தாலும் அதையே இறுதியாக்கிப் பின்பற்ற முடியாது. உள் ளத்தில் நயவஞ்சக நோய் இருப்பவர்களுக்கே அத்துணிவு ஏற்படும்.
சு.ஜ.வினர், இஜ்மா, கியாஸ் என்றும் ததஜவினர் லாஜிக், பாலிசி என்றும் தங்களின் சுய புராணங்களைப் பாடினார்களே அல்லாமல் சத்திய மார்க்கத்தை எடுத்து வைக்கவில்லை. நேர்வழி பெற குர்ஆன், ஹதீஃத் இரண்டு மட்டுமே; மூன்றாவதாக ஒன்று இல்லவே இல்லை என்று அவை இரண்டும் பல இடங்களில் அழுத்தமாக அடித்துச் சொல்கின்றன; மதகுருமார்கள் உணர மாட்டார்கள். இதற்கு அடிப்படைக் காரணம் அவர்கள் பெற்றிருப்பது குர்ஆன், ஹதீஃத் கல்வி அல்ல. குர்ஆன், ஹதீஃத் பெயரால் “”தக்லீது” கல்வியாகும். “”ஸில்ஸிலயே நிஜாமிய்யா” என்று மனிதன் கற்பனை செய்த கல்வியாகும். ஓசியில் தங்க வைத்துத் தெண்டச் சோறு ஊட்டிப் புகட்டப்பட்டப் புரோகிதக் கல்வியாகும். குர்ஆன், ஹதீஃதை முறைப்படிக் கற்றவர்கள் அல்ல. தொண்டையே தொழிலாக வயிற்றுப் பிழைப்பாகக் கொண்டவர்கள் எப்படி சத்தியத்தை எடுத்து வைக்க முடியும்.
இந்த மதகுருமார்களான மவ்லவிகள் பின்னால் அவர்களின் பொய்க் கூற்றுக்களை வேதவாக்காகக் கொண்டு அவர்களை, தக்லீது-கண்மூடிப் பின்பற்றுகிறவர்களில் அல்லாஹ் நாடும் ஒரு சிலராவது நேர்வழி பெறமாட்டார்களா என்ற நல்லெண்ணத்தில் அந்நஜாத் ஆரம்பித்த ஆரம்ப நாட்களில் வெளி யிட்ட தக்லீது, ஸில்ஸிலயே நிஜாமிய்யா கல்வித் திட்டம், இன்றைய மதரஸாக்கள் இம்மூன்று ஆக்கங்களையும் மீண்டும் வெளியிட்டுள்ளோம். குர் ஆன் மொழி பெயர்ப்பைப் பக்கத்தில் வைத்துக் கொண்டு குர்ஆன் வசனம் ஒவ்வொன்றையும் நேரடியாகப் படித்து விளங்க முயற்சிப்பவர்களுக்கு 29:69-ல் அல்லாஹ் வாக்களித்துள்ளபடி நிச்சயமாக நேர்வழியைக் காட்டுவான். அல்லாஹ் அருள் புரிவானாக.