மிர்ஸா குலாமை நபி என்று சொல்ல காதியானிகள் என்னதான் ஆதாரம் தருகிறார்கள்?

in 1996 பிப்ரவரி,எதிர் வாதம்,காதியானிகள்,விமர்சனங்கள்! விளக்கங்கள்!!

விமர்சனம்: அபூ அப்துல்லாஹ்வும், பி.ஜே.யும் தங்கள் சொந்த ஊகங்களாலும், வாதங்களாலும் தான் மிர்ஸா குலாமை நபி இல்லை என்று சொல்கிறார்கள். குர்ஆன், ஹதீஸ் ஆதாரம் எதுவும் அவர்கள் சொல்வதில்லை என இங்கு சில காதியானிகள் பிரசாரம் செய்கிறார்கள். உண்மையிலேயே குர்ஆன், ஹதீஸ் ஆதாரம் இல்லையா? தெளிவுபடுத்தவும்.மிர்ஸா குலாமை நபி என்று சொல்ல காதியானிகள் என்னதான் ஆதாரம் தருகிறார்கள்? அவர்களுடைய போலி முகத்திரையை கொஞ்சம் கிழித்துக் காட்டுங்களேன். அவர்களுடன் அடிக்கடி கருத்தரங்கங்கள் நடத்தியதில் தாங்கள் பெற்ற படிப்பினை என்ன? விளக்கவும். P.K முஹம்மது ஜவாஹிர், கோயமுத்தூர்.

விளக்கம் : இஸ்லாம் மார்க்கம் நிறைவு செய்யப்பட்டு விட்டது; அல்குர்ஆன் இறைவன் புறத்திலிருந்து இறங்கிய வேதங்களில் இறுதி வேதம்; நபி முஹம்மது(ஸல்) அவர்கள்தான் இறுதி நபி; அவர்களுக்குப் பின் அல்லாஹ்வின் புறத்திலிருந்து புதிய அல்லது மக்களிடமிருந்து மறைக்கப்பட்டு விட்ட உண்மைச் செய்திகளை “வஹி’ மூலம் பெற்று அறிவிக்கும் எந்த நபியும் வரப் போவதில்லை என்பன போன்ற உண்மைச் செய்திகளுக்கு எண்ணற்ற குர்ஆன் வசனங்களும், ஆதாரப் பூர்வமான ஹதீஸ்களும் காணக்கிடைக்கின்றன. அஹ்மதி சகோரர்கள் தங்கள் உள்ளத்தில் நிறைத்து வைத்திருக்கும் அவர்களின் தவறான கொள்கைகளை அகற்றி வைத்து விட்டு நடுநிலையோடு அந்த குர்ஆன் வசனங்களையும், ஆதாரப்பூர்வமான ஹதீஸ்களையும் உற்று நோக்கினால் அவர்களுக்கும் அந்த உண்மை தெளிவாகவே விளங்கும். அவர்களும் இறுதிவேதம் என்று ஒப்புக் கொண்டிருக்கும் அல்குர்ஆனின் இரண்டாம் அத்தியாயம் 2-ம் வசனம் முதல் 5-ம் வசனம் வரை,

“”ஈமான்- விசுவாசம் -நம்பிக்கை கொண்டவர்களின் இருதயங்கள் அல்லாஹ்வையும், உண்மையுடன் இறங்கியவற்றையும் நினைத்து பயந்து நடுங்கக் கூடிய நேரம் வரவில்லையா? இவர்களுக்கு முன்னர் வேதங் கொடுக்கப்பட்டவர்களைப் போல், இவர்களும் ஆகிவிட வேண்டாம். அவர்கள் மீது ஒரு காலம் சென்ற பின், அவர்களுடைய இருதயங்கள் கல்லாய்ச் சமைந்து விட்டன. அவர்களில் பெரும்பாலோர் பாவிகளாகிவிட்டனர்.” (அல்குர்ஆன் 57:16)

இங்கும் நபி(ஸல்)அவர்களுக்கு முன்னர் இறக்கப்பட்ட வேதங்களை மறுத்தவர்களை எச்சரித்திருப்பதை மட்டுமே பார்க்கிறோம். அஹ்மதிகளின் வாதப்படி மிர்ஸாகுலாம் ஒரு நபியாக இருந்தால் நபி(ஸல்) அவர்களுக்குப் பின்னர் இறக்கப்படுபவற்றை மறுப்பவர்களையும் எச்சரித்திருக்க வேண்டுமே. இங்கும் அல்லாஹ் மறந்து விட்டானா? இன்று மிர்ஸா குலாமை மறக்கும் முஸ்லிம்கள் நிறைந்து காணப்படுகின்றனரே?

அஹ்மதிகள்தான் மிர்ஸா குலாமை ஒரு நபி என நிரூபிக்க நேரடி ஆதாரம் எதுவுமே இல்லாமல் வெறும் யூகங்களையும், சொந்த வாதங்களையும் எடுத்து வைக்கிறார்களோ அல்லாமல்,  நாங்களோ நேரடியான தெளிவான ஆதாரங்களையே தருகிறோம்.

“தூதுத்துவமும் நபுவ்வத்தும் முடிந்துவிட்டன; எனக்குப்பின் எந்த நபியும், எந்த ரஸூலும் இல்லை; எனினும் நற்செய்தி கூறும் கனவுகள் மட்டும் எஞ்சியுள்ளன” என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர் :அனஸ்பின் மாலிக்(ரழி),
நூல்கள்: திர்மதி 2374, ஹாகிம், அஹ்மத்.

இப்படி நபி(ஸல்) அவர்களுக்குப் பின்னர் தூதுத்துவமும் இல்லை; நுபுத்துவமும் இல்லை; நபியும் இல்லை; ரஸூலும் இல்லை என்று நேரடியாக தெளிவாகக் கூறும் பல ஹதீஸ்கள் எண்ணற்ற ஹதீஸ் நூல்களில் குர்ஆன் வசனங்களுக்கு விளக்கமாக காணக்கிடைக்கின்றன. அஹ்மதி சகோதரர்கள்தான் அவற்றின் நேரடி விளக்கங்களை மறுத்து கோணல் புத்தி காரணமாக கோணல் விளக்கங்களையும், சொந்த விளக்கங்களையும் கூறி அறிவு குறைந்த மக்களைக் குழப்புகின்றனர்.

நபிமார்களுக்கும் அல்லாஹ் ” வஹி’ மூலமே அறிவித்தான் என்றே நம்முடைய நம்பிக்கை இருக்க வேண்டும். இல்லை என்றால் அந்த ஷரீஅத் கொடுக்கப்பட்ட நபிக்கு இறக்கப்பட்டவை எவ்வித கூடுதல் குறைவு செய்யப்படாமல் பரிசுத்தமான நிலையில் மக்களிடையே பாதுகாக்கப்பட்டிருந்தது என்று நம்ப வேண்டும். ஆனால் நபி முஹம்மது(ஸல்) அவர்களுக்கு முன்னர் இறக்கப்பட்ட எந்த வேதமும் பாதுகாக்கப்படவில்லை; அவற்றை பாதுகாக்கும் பொறுப்பை அல்லாஹ் ஏற்கவில்லை. அந்த வேதங்கள் அவற்றை பின்பற்றுபவர்களாலேயே கொடுக்கப்பட்டன என்பதற்கு எண்ணற்ற குர்ஆன் வசனங்களும், ஆதாரப்பூர்வமான ஹதீஸ்களும் காணக்கிடைக்கின்றன.

எனவே பனீ இஸ்ரவேலர்களுக்கு மத்தியில் வந்த ஷரீஅத் இல்லாத நபிமார்களுக்கு “வஹியின்’ தொடர்பின் அவசியம் நமக்கு நன்கு புலப்படுகின்றது. அவர்கள் அல்லாஹ்விடமிருந்து வஹியாகப் பெற்று மக்களுக்கு அறிவித்தார்கள் என்பதில் எவ்வித சந்தேகத்திற்கும் இடமில்லை. அவர்களை மக்கள் நபியாக ஒப்புக் கொண்டு அவர்களிடமிருந்து கிடைத்த, ஆனால் வேறு எந்த வழி மூலமும் கிடைக்க முடியாத தூய வாழ்க்கை நெறியைப் பேணி நடக்கும் கட்டாயம் இருந்தது.

ஆனால் அப்படிப்பட்ட ஒரு நிலையை அஹ்மதிகள் இப்போது கற்பனை செய்வது பெரும் பாவமாகும். அல்குர்ஆன் திரிக்கப்பட்டு அல்லாஹ்வின் புறத்திலிருந்து இறக்கப்பட்டவை மாசுபடுத்தப்பட்டிருந்தால் மட்டுமே புதியதொரு நபி தோன்றி அல்லாஹ்விடமிருந்து தூய்மையான அந்த வாழ்க்கை நெறியை வஹியாகப் பெற்று அறிவிக்கும் கட்டாயம் ஏற்படும். அல்குர்ஆன் திரிக்கப்படாமல், மாசுபடுத்தப்படாமல் உலகம் அழியும் வரை பாதுகாக்கப்பட்டிருக்கிறது. அது இறுதி வேதம்; அதற்குப் பின் வேதம் இல்லை என்று ஒப்புக் கொள்ளும் அஹ்மதிகள் மிர்சா குலாமை ஒரு நபியாக ஏற்றிருப்பது பற்றி அவர்கள் தான் மறுபரிசீலனை செய்ய வேண்டும்.

எவ்வித தேவையும் இல்லாமல், எவ்வித அவசியமும் இல்லாமல், புதிதாக அறிவிக்க வேண்டிய ஒரே ஒரு செய்தி கூட இல்லாத நிலையில், அதல்லாமல் அவர்கள் தங்கள் வாதத்தை நிலைநாட்ட எடுத்து எழுதி வரும் மேலேயுள்ள குர்ஆன் வசனங்களை முழுமையாகப் பார்ப்பவர்கள் நாம் விளக்கி இருப்பது போல், அல்லாஹ்விடமிருந்து வஹி மூலம் “தூய வாழ்க்கை நெறி’யைப் பெற்று மக்களுக்கு அறிவிக்கும் நபிமார்கள் பற்றி கூறப்பட்டிருக்கிறதேயல்லாமல், மிர்ஸா குலாம் போன்ற டம்மி நபி பற்றி அல்ல என்பது தெளிவாக விளங்கும். உதாரணமாக “இன்னும் அல்லாஹ் உங்களுக்கு மறைவானவற்றை அறிவித்து வைப்பவனவாக இல்லை; ஏனெனில் (இவ்வாறு அறிவிப்பதற்கு) அல்லாஹ்தான் நாடியவரைத் தன் தூதர்களிலிருந்து தேர்ந்தெடுக்கிறான். ” (அல்குர்ஆன் 3:179)

“ஆதமுடைய மக்களே! உங்களிடம்” உங்களிலிருந்தே (நம்) தூதர்கள் வந்து, என் வசனங்களை உங்களுக்கு மெய்யாகவே ஓதிக் காண்பிக்கும் போது” (அல்குர்ஆன் 16:2)

(அச்சமூட்டி எச்சரிக்கக் கூடிய) நம்முடைய தூதரை அனுப்பாதவரை, நாம் வேதனை செய்வதில்லை (அல்குர் 17:15) மற்றும் முன்னர் விளக்கிய 57:16, 17 வசனங்கள் மக்களுக்குத் தேவையான செய்திகளை வஹி மூலம் அல்லாஹ்விடமிருந்து பெற்று மக்களுக்கு அறிவிக்கும் நபிமார்களைப் பற்றிக் குறிப்பிடுகின்றனவே அல்லாமல் மிர்ஸா குலாம் போன்ற டம்மி நபி பற்றி குறிப்பிடவில்லை.

4:69,70 வசனங்கள் உண்மையான நல்லடியார்கள், நபிமார்கள், சத்தியவான்கள், பிராணத்தியாகிகள், நல்லொழுக்கமுடையவர்களுடன் இருப்பார்கள் என்று கூறுகின்றனவே அல்லாமல், அவர்களும் நபிமார்கள் ஆகிவிடுவார்கள் என்பது அபத்தமான விளக்கமாகும்.

“மந்திரிகளுக்கு ஜால்ரா போடுகிறவர்கள் மந்திரிகளுடன் இருப்பார்கள்” என்று சொன்னால்,அதற்கு அவர்களும் மந்திரிகளாகி விட்டார்கள் என்று பொருள் கொள்வது எப்படி அபத்தமோ அது போன்ற அபத்தமாகும்.

“அனாதைகளை ஆதரிப்பவர்களும் நானும் இவ்வாறு இருப்போம்”என்று ஆள்காட்டி விரலையும், நடுவிரலையும் இணைத்துக் காட்டினார்கள் நபி(ஸல்). அதனால் அனாதைகளை ஆதரிப்பவர்களும் நபி(ஸல்) அவர்களின் நிலைக்கு உயர்ந்துவிட்டார்கள் என்று யாரும் கூறினால் அது எவ்வளவு பெரிய அபத்தமோ அது போன்ற அபத்தமே அஹ்மதிகள் 4:69, 70க்கு கொடுக்கும் விளக்கமாகும்.

அல்குர்ஆன் 22:75 அல்லாஹ் மலக்குகளிலிருந்தும், மனிதர்களிலிருந்தும், தூதர்களைத் தேர்ந்தெடுப்பதைக் கூறுகின்றது. இந்த வசனத்தை நபி(ஸல்) அவர்களுக்குப் பின் நபி வர முடியும் என்பதற்கு ஆதாரமாக எடுத்து வைக்கும் அஹ்மதிகளின் அறியாமை பற்றி என்ன சொல்ல முடியும்? இனிமேல் மலக்குகளையும் அல்லாஹ் நபியாக அனுப்புவான் என்று வாதிடப் போகிறார்கள்? இப்படி அவர்களின் விளக்கங்கள் எல்லாம் அறிவிற்கே பொருந்தாத அபத்தங்களாகவே இருக்கின்றன. இந்த விளக்கங்களில் மயங்கும் முஸ்லிம்கள் நிதானமாகச் சிந்திக்க வேண்டும்.

டம்மி நபி மிர்ஸா குலாமை நபியாக நிலைநாட்ட உலகின் அழிவுக்குச் சமீபத்தில் இறங்கி இந்த உம்மத்தில் ஒருவராகப் பணியாற்றி மரணிக்க இருக்கிற இப்னு மர்யம்(அலை) அவர்களை இப்பொழுதே மரணித்துவிட்டார்கள் என அடம்பிடிக்கும் கட்டாயம் அஹ்மதிகளுக்கு ஏன் ஏற்பட்டது? அதற்காக எண்ணற்ற நேரடி குர்ஆன் வசனங்களுக்கு இவர்கள் சொந்த விளக்கம் கொடுத்து முஸ்லிம்களைக் குழப்பும் கட்டாயம் எதனால் ஏற்பட்டிருக்கிறது?

உதாரணமாக,
“”நிச்சயமாக நாங்கள் அல்லாஹ்வின் தூதராகிய மர்யமின் குமாரராகிய – ஈஸா மஸீஹை கொன்று விட்டோம் என்று அவர்கள் கூறுகின்றனர்; அவர்கள் அவரைக் கொல்லவுமில்லை; அவரை அவர்கள் சிலுவையில் அறையவுமில்லை; மாறாக அவர்களுக்கு (ஆள்) மாறாட்டம் செய்யப்பட்டது. மேலும் இதில் அபிப்பிராய பேதம் கொண்டனர்; வெறும் சந்தேகத்திலேயே இருக்கின்றனர்; வெறும் ஊகத்தைப் பின்பற்றுவதன்றி அவர்களுக்கு இதில் உறுதியான அறிவு கிடையாது.”
“நிச்சயமாக அவர்கள் அவரைக் கொல்லவே இல்லை; ஆனால் அல்லாஹ் அவரைத் தன்னளவில் உயர்த்திக் கொண்டான். இன்றும் அல்லாஹ் வல்லமைமிக்கோனாகவும், ஞானமுடையோனாகவும் இருக்கிறான்.” (அல்குர்ஆன் 4:157, 158)

இந்த இரு வசனங்களில் அல்லாஹ் தெள்ளத் தெளிவாக ஈஸா(அலை) அவர்களின் நிலை பற்றி சந்தேகத்திற்கிடமின்றி அறிவிக்கிறான். அல்லாஹ்வின் வல்லமையின் பூரண நம்பிக்கை கொண்டிருக்கும் எந்த முஸ்லிமும் அல்லாஹ்வின் இந்தக் கூற்றில் சந்தேகம் கொள்ள முடியாது. ஈஸா(அலை) அவர்களை அல்லாஹ் எப்படி உடலுடன் உயர்த்தி இருக்க முடியும்? அப்படியொரு முன் உதாரணம் காட்ட முடியும்? என்றெல்லாம் அல்லாஹ்வின் குத்ரத் – வல்லமையில் சந்தேகப்படும் நாஸ்திக சிந்தனை படைத்தவர்களுக்கே சந்தேகம் எழ முடியும். அல்லாஹ்வின் உள்ளமையில் சந்தேகத்தை சில காரணங்களைக் கூறி நாஸ்திகர்கள் கிளப்பும் போது நாஸ்திக சிந்தனை படைத்தவ்களுக்கு அவை உண்மை போல் தோற்றம் அளிக்கிறதல்லவா?அதே போல் இறைநம்பிக்கையில், இறைவனது வல்லமையில் குறைவான நம்பிக்கையுடையவர்களே இங்கு அப்படிப்பட்ட ஐயங்களைக் கிளப்ப முடியும்.

இங்கு உடலுடன் உயர்த்தப்பட்டதாக அல்லாஹ் கூறி இருக்கிறானா? என்ற அஹ்மதிகள் வினாத் தொடுப்பதே முழு அறியாமையாகும். கொல்லப்படாத நிலையில் உயர்த்துவதாக இருக்கும் போது உடலுடன் உயர்த்தப்பட்டதாகச் சொல்லுவதுதான் அறிவீனமாகும். “ஒருவன் வெட்டப்பட்டுக் கிடந்தான். ஆனால் இறக்கவில்லை. அவனை மருத்துவமனைக்குத் தூக்கிச் சென்றார்கள்” என்று அஹ்மதிகளிடம் கூறப்பட்டால் உடலுடனா தூக்கிச் சென்றார்கள்? என்ற மடமையான கேள்வியை அஹ்மதிகள் நிச்சயம் எழுப்ப மாட்டார்கள். காரணம் மருத்துவமனைக்குத் தூக்கிச் செல்வதென்றால் அது அவர்களின் அறிவில் உறைக்கிறது. பகுத்தறிவு ஏற்றுக் கொள்கிறது. இங்கு உடலுடன் தூக்கிச் சென்றார்கள் என்று கூறுவதே அபத்தம் என்று அவர்களே சொல்வார்கள். கொல்லப்பட்ட நிலை, இறந்த நிலை ஏற்பட்டால் மட்டுமே உடலைப் பற்றிய பிரஸ்தாபம் ஏற்படும். கொல்லப்படாத நிலையில், விஷயத்தில் இப்படியயாரு சந்தேகம் கொள்ளக் காரணம் என்ன?

இதற்கு முன் உதாரணம் கேட்டால் அதன் பொருள் என்ன? முன் உதாரணம் இன்றியே வானம், பூமி அனைத்தையும் படைத்த அல்லாஹ்வின் இந்த அற்புதச் செயலுக்கு முன் உதாரணம் கேட்கும் அஹ்மதிகளின் ஈமானின் நிலை என்ன? மனிதர்கள் சாகாத ஒருவனை உடலுடன் மருத்துவமனைக்கு தூக்கிச் செல்லும் ஆற்றல் உள்ள அளவு கூட அல்லாஹ்வுக்கு ஆற்றல் இல்லை என்றுதானே எண்ணுகிறார்கள்? இது எவ்வளவு பெரிய இறைமறைப்பு; ஈமானுக்குப் பங்கம் விளைவிக்கும் சிந்தனை.
அஹ்மதி ஜமாஅத்திலிருந்து தங்ளின் பிரசார பணிக்கு கூலி பெறும் மவ்லவிகள் – புரோகிதர்கள் உண்மையை உணர்ந்தாலும் அதனை ஏற்றுக் கொள்ள முன் வருவது கடினமே. ஆனால் எவ்வித உலக ஆதாயத்தையும் நோக்கமாகக் கொள்ளாமல், தங்கள் கைக்காசை செலவிட்டுக் கொண்டு அஹ்மதி ஜமாஅத்தில் இருப்பவர்கள் தங்கள் தவறை உணர்ந்து சத்தியத்தின்பால் வர வேண்டும் என்ற நோக்கத்திலேயே இந்த அளவு விளக்குகிறோம்.

4:158 வசனத்தில் அல்லாஹ் அவரைத் தன் அளவில் உயர்த்திக் கொண்டான் என்பதற்கு அல்லாஹ் அவரின் பதவியை உயர்த்திக் கொண்டான் என்று அஹ்மதிகள் பொருள் கொள்வதும் ஏற்கத்தக்கதல்ல. பதவி பற்றி குறிப்பிடும் இடங்களில் எல்லாம் தெளிவாக தரஜாத், மகானன் அலியா என்று தெளிவாக அல்லாஹ் குறிப்பிட்டுள்ளான். அதே போல் உடல் இவ்வுலகிலிருக்கும் நிலையில் தூக்கத்திலும், இறப்பிலும் ஆன்மாவைக் கைப்பற்றுவதாகக் கூறியுள்ளான். ஈஸா(அலை) அவர்கள் மரணிக்காத நிலையில்தான் அல்லாஹ் அளவில் உயர்த்தப்பட்டார்கள் என்பதை 3:55 இறைவாக்கும் நேரடியாகச் செல்லுகிறது.

அல்குர்ஆன் 3:54 இறைவாக்குடன் 3:55 இறைவாக்கை இணைத்துப் பார்க்கும் போது ஈஸா(அலை) மரணிக்காத நிலையில் அவர்கள் உயிருடன் இருக்கும் போது அவர்களுக்குக் கொடுக்கப்பட்ட உறுதிமொழிகளாகும் இவை. அவர்களை மரணிக்கச் செய்து அவர்களின் பதவியை உயர்த்துவதான் அந்த உறுதிமொழி என்றால், அவரின் ஆத்மாவை(நஃப்ஸை) கைப்பற்றி அவரது பதவியை (தரஜாவை) உயர்த்துவதாக தெளிவாகவே அறிவிக்கப்பட்டிருக்கும். ஆனால் அல்லாஹ் ஈஸா(அலை) அவர்கள் உயிருடன் இருக்கும் நிலையில் அவர்களை நேரடியாக விழித்து “”உம்மைக் கைப்பற்றுவேன்; இன்னும் என்னளவில் உம்மை உயர்த்திக் கொள்வேன்” என்ற உறுதிமொழிகள் அவர்கள் உயிருடன் உடலுடன் உயர்த்தப்பட்டதையே நேரடியாகவே அறிவிக்கிறது. மேலும் அதே 3:55 வசனத்தின் பிற்பகுதியில் ஈஸா(அலை) அவர்களையும் சேர்த்து “”பின்னர் உங்களுடைய திரும்புதல் என்னிடமே இருக்கிறது” என்று காணப்படுகிறது. அல்லாஹ்வால் கைப்பற்றப்பட்டு வைக்கப்பட்டிருக்கும் ஈஸா(அலை) அவர்கள் மீண்டும் இவ்வுலகிற்கு வந்தால்தான் “”பின்னர் உங்களுடைய திரும்புதல் என்னிடமே இருக்கிறது” என்ற உறுதிமொழி நிறைவேற முடியும்.

இன்னும் இதுபோல் 3:144, 5:75, 116: 117, 43:61 ஆகிய குர்ஆன் வசனங்கள் அவர்களின் இன்றைய மரணமற்ற நிலையையும், உலக அழிவிற்குச் சமீபம் அவர்கள் இவ்வுலகிற்கு வருவார்கள் என்ற முன் அறிவிப்பையும் தெளிவாக அறிவிக்கின்றன. இவற்றை மிகத் தெளிவாக எமது “”ஈஸா(அலை) அவர்கள் மரணிக்கவில்லை, ஆயினும் மரணிப்பவர்களே !” என்ற நூலில் விரிவாக விளக்கியுள்ளோம். அதற்கு மறுப்பாக தனி நூல் வெளியிடுவதாக 1988-ல் அவர்களின் பிப்ரவரி இதழின் 10-ம் பக்கம் வாக்குறுதி அளித்து அறிவிப்பு வெளியிட்டிருந்தனர். 9 வருடங்கள் ஆகியும் இன்னும் தனி நூல் வெளிவரவில்லை. 1996 ஜனவரி 14,15,16 மூன்று நாட்கள் திருச்சியில் நம்மோடு கலந்துரையாடல் செய்ய வந்த அவர்கள் மீண்டும் அதன் மறுப்பை தனி நூலாக வெளியிடுவதாக வாக்களித்துச் சென்றுள்ளனர். அவர்கள் வாக்களித்தபடி தனி நூல் வெளிவந்தால் உங்களைப் போன்றவர்கள் இரு நூல்களையும் பக்கத்தில் வைத்துக் கொண்டு படித்துப் பார்த்து யாருடைய கருத்து குர்ஆன், ஹதீஹுக்கு நெருக்கமாக இருக்கிறது என்று எளிதாக முடிவுக்கு வர முடியும்.

அவர்களின் ச.வ. டிச.95, ஜன.96 இதழ்களில் அவர்கள் கிளப்பியிருக்கும் ஐயங்களுக்குரிய விளக்கங்களை இன்ஷா அல்லாஹ் பின்னால் பார்ப்போம்.

Previous post:

Next post: