(நீங்கள் அனைவரும் ஒன்றுசேர்ந்து ஒரே) ஜமாஅத்தாக அல்லாஹ்வின் கயிற்றை (குர்ஆனை) பற்றிப் பிடியுங்கள்; (ஒருபோதும்) பிரிந்து விடாதீர்கள். அல்லாஹ் உங்களுக்குக் கொடுத்த அருட்கொடையை நினைத்துப் பாருங்கள்; நீங்கள் பகைவர்களாய் இருந்தீர்கள்; உங்கள் இதயங்களுக்கிடையே அன்பை ஏற்படுத்தினான்; அவனது அருளால் நீங்கள் சகோதரர்களாய் ஆகிவிட்டீர்கள்; இன்னும், நீங்கள் (நரக) நெருப்பிக் குழியின் விளிம்பின்மீது இருந்தீர்கள். அதிலிருந்தும் அவன் உங்களைக் காப்பாற்றினான்; நீங்கள் நேர்வழி பெறும் பொருட்டு, அல்லாஹ் இவ்வாறு தன் வசனங்களை உங்களுக்குத் தெளிவாக்குகின்றான். (3:103) (பார்க்க: 3:101, 4:146,175, 22:78, 41:33, புகாரீ(ர.அ.) 391,392,393)
அல்லாஹ்வுக்கும், அவனுடைய தூதருக்கும் கட்டுப்படுங்கள்; கருத்து வேறுபடாதீர்கள். அவ்வாறாயின் கோழைகளாகி விடுவீர்கள், உங்களின் பலம் குன்றிவிடும். பொறுமையாய் இருங்கள், பொறுமையாளர்களுடன் அல்லாஹ் இருக்கிறான். (8:46)
(பார்க்க : 2:145, 3:125, 7:35-37, 11:115, 22:35, 29:18,68, 32:24)
நம்பிக்கையாளர்களே! அல்லாஹ்வுக்குக் கீழ்ப் படியுங்கள்; இறைத்தூதருக்கும், உங்களில் அதிகாரம் வகிப்போருக்கும் கீழ்ப்படியுங்கள்! ஒரு விவகாரத்தில் உங்களுக்குள் பிணக்கு ஏற்பட்டால், மெய்யாகவே நீங்கள் அல்லாஹ்வையும், இறுதி நாளையும், நம்புபவர்களாய் இருப்பின் அதை அல்லாஹ்விடமும், தூதரிடமும் ஒப்படைத்து விடுங்கள். இதுவே அழகான முடிவாகும். (4:59)
(பார்க்க: புகாரீ (ர.அ.) 7280,6483,1597, 2697, 7306)
உங்களின் இச்சமுதாயம், ஒரே சமுதாயமே! நானே உங்கள் இரட்சகன், எனவே என்னையே வணங்குங்கள். (21:92) (பார்க்க: 21:93, 23:252-56)
தங்கள் மார்க்கத்தைப் பிரித்துப் பல பிரிவினராய் ஆகிவிட்ட ஒவ்வொரு கூட்டத்தாரும் தங்களிடம் இருப்பதைக் கொண்டே மகிழ்கிறார்கள். (30:32)
(பார்க்க: 3:103,105, 6:153,159, 42:13,14, 23:53)
ஒற்றுமைக்கு வேட்டு வைத்துச் சமுதாயத்தைப் பிளவுபடுத்துவோர் யார் என்று பார்த்தால், அவர்கள் மறுமையை விட இவ்வுலகை அதிகமாக நேசிப்பவர்களாக இருப்பார்கள். உலகின் அற்ப, தற்காலிக சுகங்களான பட்டம், பதவி, சொத்து, சுகம், ஆள் அம்பு, பணம், காசு, தலைவர் பதவி இவற்றில் அளவு கடந்து ஆசைப்படுகிறவர்களாகவும் அதற்காக வெறித்தனமாகவும் செயல்படுவார்கள். சமுதாயம் ஒன்றுபட்ட ஒரே ஜமாஅத்தாக இருந்தால் அதற்கு ஒரேயொரு தலைவர் மட்டும்தானே இருக்க முடியும். தலைமைப் பதவிக்கு ஆசைப்படும் நபர்களுக்கு இது பொறுக்குமா? எனவே அவர்கள் ஒன்று பட்ட சமுதாயத்தைப் பிளவுபடுத்துவதிலேயே குறியாக இருப்பார்கள். ஏதாவது நொண்டிக் காரணங்களைச் சொல்லி சமுதாயத்தைப் பிளவுபடுத்தித் தங்களுக்கென்று ஒரு தனிப் பெயரைச் சூட்டிக் கொண்டு, அதற்குத் தலைவர், செயலர், பொருளாளர், உறுப்பினர்கள் என இவர்களாகக் கற்பனை செய்து அதை அரசில் பதிவு செய்து கொண்டு மகிழ்ச்சி அடைவார்கள். உரிமை கொண்டாடுவார்கள். உலகியல் ஆதாயங்களை அடைவார்கள்!
இதைத்தான் 23:53, 30:32 இறைவாக்குகள் நெற்றிப் பொட்டில் அடிப்பது போல் கூறி எச்சரிக்கின்றன. அது மட்டுமல்ல; இவ்வுலகில் கிடைக்கும் அற்ப ஆதாயங்களைக் கொண்டு அவர்கள் நேர்வழியில் இருப்பதாகவும் அதனால்தான் அல்லாஹ் இப்படிப்பட்ட உலகியல் வசதி வாய்ப்புகளைத் தந்திருப்பதாக மனப்பால் குடிக்கிறார்கள். இதையும் அல்லாஹ், 23:53 முதல் 56 வரையுள்ள வசனங்களில் அவர்கள் வீண் மனப்பால் குடிக்கிறார்கள். அது அவர்களுக்குக் கடும் சோதனை என்பதை அவர்கள் உணர்வதில்லை, அவர்கள் திருந்த மாட்டார்கள். எனவே அவர்களை ஒரு காலம் வரை அவர்களின் வழிகேட்டிலேயே தட்டழியும்படி விட்டு விடக் கட்டளையிடுகிறான் 23:54 இறைவாக்கில்.
ஆம்! அழிந்துபடக் கூடிய அற்பமான இவ் வுலகியல் ஆதாயங்களைக் குறியாகக் கொண்டவர்கள் ஒருபோதும் நேர்வழியை அடைய மாட்டார்கள் என்று குர்ஆனின் பல வசனங்கள் கடுமையாக எச்சரிக்கின்றன. அதிலும் குறிப்பாக தலைமைப் பதவிக்கு ஆசைப்படுகிறவர்கள் ஒரு போதும் சமுதாய ஒற்றுமையைச் சரி காணமாட்டார்கள். சமுதாயத்தைப் பிளவுபடுத்துவதிலேயே குறியாக இருப்பார்கள். அவர்களுக்கு 21:92, 23:52 இறைவாக்குகள் கூறும் சமுதாய ஒற்றுமையும், 22:78 இறைவாக்குக் கூறும் “”முஸ்லிமீன்” பெயரும், நபி (ஸல்) அவர்கள் நடைமுறைப்படுத்தி விட்டுச் சென்ற ஒன்றுபட்ட “”ஜமாஅத்துல் முஸ்லிமீன்” ஜமாஅத்தும் எட்டிக் காயாகக் கசக்கும். இந்த இறை வாக்குகள் அனைத்தும் அவர்களுக்கு 17:41 இறை வாக்கு “”அவர்கள் சிந்திப்பதற்காக இந்த குர்ஆனில் நிச்சயமாக அனைத்தையும் தெளிவு படுத்தியுள்ளோம்; எனினும் அவர்களுக்கு அவை வெறுப்பைத் தவிர அதிகப்படுத்தவில்லை” என்று கூறுவது போல் சமுதாய ஒற்றுமை பற்றிய குர்ஆன் வசனங்கள் ஹதீஃத்கள் பதவி வெறியர்களுக்கு எட்டிக்காயாகக் கசக்கும் என்பதில் ஐயமுண்டா?
“”பதவி ஆசை உடையவர்களுக்கோ, பதவியைக் கேட்பவர்களுக்கோ பதவி கொடுக்கக் கூடாது” என்ற நபி(ஸல்) அவர்களின் கடும் எச்சரிக்கையை இவர்கள் கண்டு கொள்ள மாட்டார்கள். ஆட்சி அதிகாரத்தை அல்லாஹ்வே கொடுக்க வேண்டும் என்று கூறும் 24:55 இறைவாக்கையும், பொறுமையுடன் ஒன்றுபட்டு குர்ஆனைப் பற்றிப் பிடித்துச் செயல் பட்டால், அல்லாஹ்வே தலைவரை உண்டாக்கி, அவர்கள் நேர்வழி காட்டுவார்கள். அப்போது அவர்கள் இறைவனுடைய வசனங்களை உறுதியாக நம்பிச் செயல்படுவார்கள் என்று கூறும் 32:24 இறை வாக்கையும் கண்டு கொள்ள மாட்டார்கள். இவை 17:41 இறைவாக்குச் சொல்வது போல் அவர்களுக்கு வெறுப்பையே அதிகப்படுத்தும்.
7:35,36,37,38 இறைவாக்குகளைப் படித்து உணர்கிறவர்கள் குர்ஆன் போதனைகளுக்குச் சுய விளக்கம் கொடுத்து 2:159 இறைவாக்குச் சொல்வது போல் அவற்றின் நேரடிக் கருத்துக்களை மறைப்பவர்கள் அந்த வசனங்களைப் பொய்ப்பிக்கும் பெரும் அக்கிரமக்காரர்கள் என்பதையும், அவர்கள் நரக நெருப்பில் நுழைய இறைவனால் கட்டளையிடப்படும் என்பதையும் உணர முடியும்.
ஆனால் பதவி ஆசையும் அதனால் இயக்க வெறியும் கொண்டு சமுதாயத்தைப் பிளவுபடுத்தும் குறிக் கோளும் கொண்டவர்கள் உண்மையை உணர மாட்டார்கள். அதற்கு மாறாக அல்லாஹ் அவனது தூதர் மூலம் நடைமுறைப்படுத்திக் காட்டிய “ஜமாஅத்துல்முஸ்லிமீன்’-ம் ஒரு பிரிவு-பிளவு ஜமாஅத்துதான் என்று தங்கள் ஆதரவாளர்களைத் தக்க வைக்க முற்படுவார்கள். அதற்கு மேலும் சென்று “”ஜமாஅத்துல் முஸ்லிமீன்” அபூ அப்தில்லாஹ்வின் ஜமாஅத் எனக் கூறித் தங்கள் பக்தர்களைத் தடுமாற வைப்பார்கள். குர்ஆன், ஹதீஃதில் கடுகளவும் ஆதாரமில்லாத பெயர்களைக் கற்பனை செய்து அவற்றிற்கு குர்ஆன், ஹதீஃதுக்கு முரண்பட்ட பைலா தயார் பண்ணி அரசில் பதிவு செய்தும் கொள்வார்கள். அவற்றில் உரிமையும் கொண்டாடுவார்கள். சந்தா வசூலிப்பது, அவர்களின் கற்பனை பைலாவை மீறுபவர்கள் மீது நடவடிக்கை எடுப்பது, வெளியேற்றுவது என சாக்கடை அரசியல் கட்சிகள் செயல்படுத்தும் அனைத்தையும் செய்வது என வழிகெட்டுச் செல்லும் அவர்களின் ஜமாஅத்துகளை கமாலுத்தீன் ஜமாஅத், பீ.ஜை. ஜமாஅத் என்று சொல்லுவதில்லை.
“”ஜமாஅத்துல் முஸ்லிமீன்” அல்லாஹ் பெயரிட்டு (22:78), நபி(ஸல்) நடைமுறைப்படுத்திய ஜமாஅத்; அது எமது கற்பனையில் உதித்த பெயரல்ல; அதற்கு நாம் குர்ஆன், ஹதீஃத் அல்லாத தனி பைலா தயாரிக்கவில்லை. அரசில் பதிவு செய்யவுமில்லை. சந்தா வசூலிக்கவில்லை. குர்ஆனுக்கும், ஹதீஃதுக்கும் முரணாகச் செயல்படுகிறவர்களை வெளியேற்றவும் இல்லை. ஜமாஅத்துல் முஸ்லிமீனுக்கு நாம்தான் அமீர் என்று சொல்லவுமில்லை. ஜமாஅத்துல் முஸ்லிமீனில் எவ்வித உரிமையும் கொண்டாடவில்லை. இந்த நிலையில் ஜமாஅத்துல் முஸ்லிமீன் அபூ அப்தில்லாஹ்வின் பிரிவு ஜமாஅத் என அவதூறு பரப்புகிறவர்கள் எப்படிப்பட்டப் பொய்யர்கள், அநியாயக்காரர்கள் என் பதைச் சாதாரண நடுத்தரச் சிந்தனையுடயவர்களும் விளங்க முடியும்.
இது ஒரு பக்கம்; இன்னொரு பக்கம் சிலர் அபூ அப்தில்லாஹ்வை எந்த ஜமாஅத் அமீராக தேர்வு செய்தது என்றுகேட்டு மக்களைக் குழப்புகின்றனர். அவர்களின் அகராதியில் ஒரு பிளவு-பிரிவு ஜமாஅத்தைக் கற்பனை செய்து அதற்கு பைலா தயாரித்து அரசில் பதிவு செய்து, அதில் தலைவர், செயலர், பொருளாளர், உறுப்பினர்கள் என குறிப்பிட்டிருக்க வேண்டும். அப்போது தான் அந்த ஜமாஅத்தின் தலைவராக இருக்க முடியும். இப்படி எதுவும் செய்யாமல் எப்படி தலைவராக இருக்க முடியும் என்ற ஐயப்பாடே அவர்களின் நிலையாகும்.
நாம் அப்படி ஒரு ஜமாஅத்தை அமைக்கவும் இல்லை. அதற்கு நாம்தான் அமீர் எனப் பிரகடனப் படுத்தவும் இல்லை. எம் தலைமையில்தான் முஸ்லிம்கள் செயல்படவேண்டும். அவர்களே நேர்வழி நடப்பவர்கள் என்று சொல்லவுமில்லை. மற்றவர்கள் முஸ் லிம்கள் இல்லை, முஷ்ரிக்கள், காஃபிர்கள், அவர்கள் பின்னால் தொழுவது ஹராம் என ஃபத்வா கொடுக்கவும் இல்லை. முஸ்லிம்கள் எனப் பிரகடனப்படுத்தும் அனைவரும் முஸ்லிம்களே. புகாரீ(ர.அ.) 391, 392,393 ஹதீஃத்கள் கூறுவது போல் முஸ்லிம்களுக்குரிய அனைத்து உரிமைகளும் அவர்களுக்கும் உண்டு. நாளையே யார் முஸ்லிம், யார் காஃபிர், யார் முஷ்ரிக் என அல்லாஹ் தீர்ப்பளிப்பான் என்று பல இறைவாக்குகளை ஆதாரமாகக் காட்டி எச்சரித்து வருகிறோம்.
முஸ்லிம்கள் அனைவரும் குர்ஆனைப் பற்றிப் பிடித்து ஒன்றுபட்டு ஒரே ஜமாஅத்தாகச் செயல்படும் நேர்வழி உண்டாக வேண்டும். தகுதியுடையவர்கள் அதற்கு அமீராகிக் கொள்ளலாம். அமீர் பதவியில் எமக்கு ஆசையோ, விருப்பமோ அறவே இல்லை என்பதை இதன் மூலம் உறுதியாக அறிவிக்கிறோம். எமது முதிர்ந்த வயதும் அதற்கு இடம் தராது. சமுதாய நலன் நாடும் நல்லுள்ளம் கொண்டோர், எஞ்சியுள்ள ரமழான் நாட்களில் குறிப்பாக ஒற்றைப்பட இரவுகளில் சமுதாய ஒற்றுமைக்கும், அதன் மூலம் முஸ்லிம்கள் மீண்டும் மேன்மை யடைந்து மனித குலத்தை வழி நடத்தவும் அதிகமதிகம் உள்ளச்சத்துடனும், அல்லாஹ்வை ஆதரவு வைத்தும் உருக்கமாக துஆ செய்யும்படி அன்புடன் வேண்டுகிறோம்.