ஐயம் : 10.7.2013 அன்று ஸஹர் நேரத்தில் ஜெயா டி.வி.யில் ஆலிம் பைஜி ஒருவர் உரையாற்றினார். அதில் குர்ஆன் தர்ஜுமாவைப் பார்க்காதீர்கள். உங்களால் விளங்கிக் கொள்ள முடியாது. உதாரணத்திற்கு நபி மூஸா(அலை) அவர்களிடம் மரம் பேசியது. நானே அல்லாஹ் என்னையே வணங்குங்கள் என்றது. நபியவர்கள் அதனை ஏற்கவில்லை. அறிந்தவர்களிடமே கேட்டு விளக்கம் பெறவேண்டும் என்றார். இவ்வாறு மரம் பேசியதாக நிகழ்ச்சி குர்ஆனில் உள்ளதா? R. முஹம்மது பாரூக்,நெல்லை.
தெளிவு : இப்படிப்பட்ட மவ்லவிகள் பற்றித்தான் குர்ஆன் லுக்மான் : 31:6ல் “”மனிதர்களில் சிலர் இருக்கிறார்கள். அவர் அறிவின்றி இறைவழியிலிருந்து (மக்களை) வழிகெடுக்கவும், இறைவழியைப் பரிகாசமாக்கவும், வீணான பேச்சுக்களை விலைக்கு வாங்குகிறார்கள். இத்தகையோருக்கு இழிவான தண்டனையுண்டு” என்று தெளிவாகக் கூறி அல்லாஹ் எச்சரிக்கிறான். மேலும் இவர்களைப் போன்றவர்களையே 62:5ல் “”ஏடுகளைச் சுமக்கும் கழுதைகள்” என்றும் அல்லாஹ் கூறுகிறான். அல்லாஹ்வின் வசனங்களைப் பொய்யாக்கும் இப்படிப்பட்டவர்களின் உதாரணம் மிகவும் கெட்டதாகும். அக்கிர மக்கார சமூகத்தை அல்லாஹ் நேர்வழி நடத்த மாட்டான் என்றும் இதே 62:5ல் அல்லாஹ் கூறுகிறான்.
இன்னும் இப்படிப்பட்டவர்களையே அல்லாஹ் தாஃகூத் அதாவது மனித ஷைத்தான்கள் என்று 2:256,257, 4:51,60,76, 5:60, 16:36, 39:17 ஆகிய 8 இடங்களிலும், தாஃகூன்-வரம்பு மீறுகிறவர்கள் என்று 51:53, 52:32 ஆகிய 2 இட்களிலும் மிக வன்மையாக அடையாளம் காட்டி மக்களை எச்சரிக்கிறான். காரணம் என்ன? அல்லாஹ்வே தெள்ளத் தெளிவாக நேரடியாக நேர்வழியையும், தெளிவான ஆதாரங்களையும் கொடுத்த பின்னர், அல்லாஹ் விளக்கியதற்கு மேல் விளக்கம் கொடுக்கும் தகுதி மவ்லவிகளாகிய எங்களுக்கே இருக்கிறது என்று ஆணவம் பேசும் இவர்கள், அல்லாஹ்வுக்கே மார்க்கம் கற்றுக்கொடுக்கும் (49:16) ஆசானாகி (நவூதுபில்லாஹ்) 42:21 கூறுவது போல் அல்லாஹ்வுக்கே இணையாளர்கள் ஆகி நாளை நரகம் புகுவார்கள் என்பதில் சந்தேகம் உண்டா?
நாஸ்-மனிதர்கள் என்று 241 இடங்களிலும், 2:21, 168, 4:1,170, 10:23, 10:57, 104,108, 22:1,5,73, 31:33, 35:3,5,15, 49:13 ஆகிய பல இடங்களில் “”ஓ மனிதர்களே” என்று முழு மனித சமுதாயத்தையும் அழைத்து மார்க்கத்தை விளக்கி இருப்பது போல், நபி என்று 43 இடங்களிலும், நபிய்யன் என்று 9 இடங்களிலும், 8:64,65,70, 9:73, 33:1,28, 45,50,59, 60:12, 65:1, 66:1,9 ஆகிய பல இடங்களில் “”ஓ நபியே” என்று அழைத்து மார்க்கத்தை விளக்கி இருப்பது போல், ஒரே ஒரு இடத்திலாவது ஓ மவ்லவிகளே, அல்லது ஓ ஆலிம்களே, அல்லாமாக்களே, மவ்லானாக்களே என்று அழைத்து மார்க்கத்தை விளக்கி இருப்பதாகக் காட்ட முடியுமா? அதற்கு மாறாக அரபி மொழி கற்ற மவ்லவிகள் அல்ல, அல்லாஹ்வை அஞ்சி, அவனுக்கு முற்றிலும் வழிபட்டு குர்ஆனில் உள்ளதை உள்ளபடி எவ்வித சுய விளக்கமும் கொடுக்காமல் எடுத்து நடப்பவர்களே உலமாக்கள் என்று 35:28 இறைவாக்கிலும், அரபி கற்ற மவ்லவிகளுக்கு மட்டுமல்ல, 36:21 இறைவாக்குக் கூறுவதுபோல், ஹராமான முறையில், சாப்பிடாமல், ஹலாலாக உழைத்துச் சாப்பிடுவதன் மூலம் பயபக்தியுடன் நடப்பவர்களுக்கே அல்லாஹ் மார்க்கத்தைக் கற்றுக் கொடுப்பதாக 2:282 இறைவாக்கிலும் கூறுகிறான்.
மேலும் 2:213 இறைவாக்கில் மார்க்கத்தை விளக்கும் அதிகாரம் நபிமார்களுக்குக் கொடுக்கப்பட்டிருந்ததாகவும், குறிப்பாக இறுதி நெறிநூல் குர்ஆனை விளக்கும் அதிகாரம் இறுதித் தூதர் அவர்களுக்கு மட்டுமே கொடுக்கப்பட்டிருந்ததாக 16:44,64 இறைவாக்குகள் தெளிவாக அறிவிக்கின் றன. குர்ஆனின் தெளிவான வசனங்களுக்கு, இறு தித் தூதரின் தெளிவான விளக்கங்களுக்கு மாறாக மேல்விளக்கம் கொடுப்பவர்கள் பகிரங்கமான வழி கேட்டில் இருப்பதாக 33:36 இறைவாக்குக் கடுமையாக எச்சரிக்கிறது. அதையும் மீறி குர்ஆனுக்கும், ஹதீஃத்களுக்கும் மேல் விளக்கம் கூறி மக்களை வழிகேடுகளில் இட்டுச் செல்கிறவர்களும், அவர்க ளைக் கண்மூடிப் பின்பற்றும் பெருங்கொண்ட மக்களும் நாளை நரகில் கிடந்து வெந்து கரிகிக் கொண்டு வேதனை தாங்க இயலாமல் ஒருவரை ஒருவர் சபிப்பதையும், அழுது பிரலாபிப்பதையும் 7:35-41, 33:66-68, 34:31-33, 37:27-33, 38:54-64, 40:47-50, 41:29, 43:36-45 போன்ற எண்ணற்ற இறைவாக்குகளும் படம் பிடித்துக் காட்டுகின்றன.
ஓ மனித வர்க்கமே எச்சரிக்கை! அல்லாஹ்வின் புரத்திலிருந்து வஹி மூலம் பெற்ற மார்க்கமாகிய குர்ஆன் வசனங்களுக்கும், அந்த குர்ஆன் வசனங்களுக்கு நடைமுறை (Practicle) விளக்கம் கொடுத்த இறுதித் தூதர் முஹம்மது(ஸல்) அவர்களின் சொல், செயல், அங்கீகாரத்தை உள்ளது உள்ளபடி விளக்கும் மிகமிக ஆதாரபூர்வமான ஹதீஃத்களுக்கும் மேல் விளக்கம் கொடுக்கும் அதிகாரம் கலீஃபாக்க ளுக்கோ, நபிதோழர்களுக்கோ, தாபியீன்களுக்கோ, தபஅ தாபியீன்களுக்கோ, இமாம்களுக்கோ, அவுலியாக்களுக்கோ, அன்றைய இன்றைய மவ்லவிகளுக்கோ, மனிதர்களில் எவருக்குமோ அணுவல்ல, அணுவின் முனை அளவும் இல்லவே இல்லை என்பதைத் திட்டமாகத் தெரிந்து, 3:103 இறைக்கட்ட ளைப்படி குர்ஆனைப் பற்றிப் பிடித்து, எண்ணற்ற இறைக்கட்டளைக்கு அடிபணிந்து இறுதித் தூதரின் வழிகாட்டலைப் பற்றிப் பிடிப்பவர்களே வெற்றியாளர்கள். அவர்களே நேர்வழி பெற்றவர்கள், அறிவுடையவர்கள், அல்லாஹ்வின் நன்மாராயம் பெற்றவர்கள் என்று புகழ்ந்து கூறுவதை 39:17,18 இறை வாக்குகளைப் படித்து விளங்கிக் கொள்ளுங்கள்.
39:17 இறைவாக்குக் கூறும் தாஃகூத் எனும் மனித ஷைத்தான்கள், நாங்கள்தான் மார்க்கம் கற்ற மேதைகள், எங்களுக்குத்தான் குர்ஆன் விளங்கும். மொழி பெயர்ப்புகளைப் பார்த்து அவாம்களாகிய நீங்கள் குர்ஆனை விளங்க முடியாது என்று கூறும் இந்த மவ்லவிகளையே சுட்டிக் காட்டுகிறது. அவர்களின் இப்படிப்பட்ட வழி கெட்டப் போதனைகளை வேதவாக்காக எடுத்து நடப்பவர்கள் 9:31 இறைவாக்குக் கூறுவது போல் அவர்களை ரப்பாக ஏற்று அவர்களை வணங்குகிறார்கள் என்பதைப் புரிந்து கொள்ளுங்கள். தூய இஸ்லாமிய மார்க்கத்தில் ஆலிம் என்ற ஒரு தனி வர்க்கம்-பிரிவு இல்லவே இல்லை என்பதையும் புரிந்து கொள்ளுங்கள்.
————————————————————————————
ஐயம்: இரயிலில் பயணிக்கும் சகோதரர்கள்(ஒரே இருக்கையில் அமர்ந்து) ஜமாஅத்தாகத் தொழலாமா? R. முஹம்மது பாரூக், திருநெல்வேலிபேட்டை
தெளிவு : பிரயாணிகளுக்கு ஜமாஅத்தும், ஜுமுஆவும் கடமை இல்லை என்பதே மார்க்கம் சொல்லும் செய்தி. அதே சமயம் ஜமாஅத்தாக தொழுவதற்கோ ஒரே இருக்கையில் அமர்ந்து ஜமாஅத்தாக தொழுவதற்கோ மார்க்கத்தில் தடை ஏதும் இல்லை.
————————————————————————————
ஐயம் : வீடு அடமானம் போட்டு (வாடகை இல்லாமல்) குடி போகலாமா? எம்.சர்தார், கிருஷ்ணகிரி.
தெளிவு : அடமானம் என்பது ஒரு பெருந்தொகை கொடுத்து விட்டு வாடகை இல்லாமல் குடி இருப்பதாகும். அந்தப் பெருந் தொகைக்குரிய வட்டி என்ற அடிப்படையில் தான் வாடகை தவிர்க்கப்படுகிறது. எனவே இது மார்க்கத்தில் தடை செய்யப்பட்ட ஒன்றே ஆகும்.
————————————————————————————–
ஐயம்: மாதவிடாய்ப் பெண்கள் பள்ளிக்கு வரலாம், பள்ளியில் தங்கலாம், குர்ஆனை தொடலாம், ஓதலாம்; ஆனால் தொழக்கூடாது. நோன்பு நோற்கக் கூடாது. மாதவிடாய் என்பது நரம்பு நோய் என்கிறார்களே? M.A ஷப்னம், மதுரை.
தெளிவு: மாதவிடாய் நரம்பு நோய் என்பது தவறு. பெண்களுக்கென்று அல்லாஹ் படைத்துள்ள ஒரு நிலை. பெண்களுக்கு மாதவிடாய் வராவிட்டால் தான் அது நோயாகக் கொள்ளப்பட்டு அதற்காக மருத்துவம் பார்க்கப்படும். காரணம் குழந்தைப் பேற்றுக்கு மாதவிடாய் அதி முக்கிய காரணியாக இருக்கிறது. மாதவிடாய் காலத்தில் தொழுவதற்கு, நோன்பு நோற்பதற்கு, பள்ளியில் தங்குவதற்கு (இஃதிகாஃப்) தடை இருக்கிறது. பள்ளிக்குள் போய் வர, கடந்து செல்ல, குர்ஆனைத் தொட, அதைப் படித்து அதிலுள்ள கருத்துக்களை விளங்க எவ்விதத் தடையும் மார்க்கத்தில் இல்லை. இத் தடைகள் எல்லாம் மக்கள் குர்ஆன் கருத்துக்களை விளங்கக் கூடாது, அப்படி விளங்கினால் தங்களின் வண்டவாளங்கள் எல்லாம் தண்டவாளத்தில் ஏறித் தங்களின் ஹராமான வயிற்றுப் பிழைப்புக்கு ஆபத்து வந்து விடும் என்ற அச்சத்தில் இந்த மவ்லவிகள் சொல்லும் புருடாவாகும்.
————————————————————————————–
ஐயம் : ஆஷீரா தினத்தில் 9,10 பிறைகளில் நபி (ஸல்) அவர்கள் நோன்பு நோற்கக் கட்டளையிட்டார்கள்; 9ல் நோற்காதவர்கள் 10,11ல் நோன்பு நோற்கலாம் என தவ்ஹீத்(?) பேச்சாளர் ஒருவர் கூறுகிறார். 10, 11 பிறைகளில் நோன்பு வைக்க லாமா? M.முஹம்மது யூசுப், மதுரை.
தெளிவு : நபி(ஸல்) அவர்கள் பிறை 10ல் நோன்பு நோற்ற சமயம், யூதர்களும் அன்று நோன்பு நோற்கிறார்கள் என்று சொல்லப்பட்டது. யூதர்களுக்கு மாறு செய்ய அடுத்த வருடம் 9,10ல் நோன்பு நோற்பேன் என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்களே தவிர, நாளை 11லும் நோற்பேன் என்று சொல்லவில்லை. இதை ஆதாரமாக வைத்து 1986, 87களில் பீ.ஜை. ஆசிரியராக இருந்தபோது, 9,10ல் மட்டும் தான் நோன்பு நோற்க வேண்டும், 10,11ல் அல்ல என்று எழுதச் சொன்னோம்; அதன்படி அவரும் எழுதினார்.
அஹ்ல ஹதீஃத்காரர்கள் 10,11ல் நோன்பு வைக்கலாம் என்பதற்கு ஹதீஃத்களை(?) பீ.ஜைக்குக் காட்டினார்கள். அதை எடுத்துக் கொண்டு வந்து எம்மிடம் கோபப்பட்டார். அப்போது அவர் மத்ஹபிலிருந்து விடுபட்டப் புதிதால் தடுமாறினார். அந்த ஹதீஃத்களின் தரத்தை ஆராயும்படி கூறினோம். அவற்றை ஆராய்ந்த பின்னர் 10,11 ஹதீஃத்கள் அனைத்தும் பலவீனமானவை என அவரே ஒத்துக்கொண்டார். எனவே 11-ல் நோன்பு நோற்கலாம் என்பது ஆதாரமற்றச் செய்தியாகும்.
———————————————————————–
ஐயம்: உணர்வு பத்திரிகையில் தமிழகத்திற்கான பிறை அறிவிப்பு என்று மாதந்தோறும் அறிவிப்புச் செய்கிறார்கள். அதில் பெரும்பாலும் மேகமூட்டம் காரணமாக 30 நாட்களை பூர்த்தி செய்வதாக தகவல் தருகிறார்களே இது எந்த அளவிற்கு சரியானது? இதை நம்பலாமா?
S. முஹம்மது நவாஸ், கிருஷ்ணகிரி.
தெளிவு : அறிவை முழுவதுமாக இந்த மவ்லவிகளிடம் கடன் கொடுத்துவிட்டு, முழுமையான முகல்லிதாக அதாவது குர்ஆன், ஹதீஃத் பாராமல் கண் மூடிப் பின்பற்றுகிறவர்கள் மட்டுமே இந்த மூடத்தனமானக் கருத்தை ஏற்பார்கள். நாம் வாழும் பூமிக்கு ஒரே ஒரு சந்திரன்தான். இதர கோள்களுக்கு ஒன்று மேற்பட்ட சந்திரன்கள் இருப்பது போல், பூமிக்கு பல சந்திரன்கள் இல்லை. ஒரேயொரு சந்திரன் மட்டுமே இருப்பதால் உலகம் முழுக்க ஒரேயொரு பிறை மட்டுமே இருக்க முடியும்; தமிழகத்திற்கு ஒரு பிறை, கேரளாவிற்கு ஒரு பிறை, சவுதிக்கு ஒரு பிறை என பல பிறைகள் இருந்தால் பல சந்திரன்கள் இருந்தாக வேண்டும். அப்படி இல்லை. எனவே தமிழகத்திற்கான பிறை அறிவிப்பு என எழுதுவதே அவர்களின் மடமையை வெளிப்படுத்துகிறது. மேலும் அன்று போல் இன்றும் மேக மூட்டம் என்று எழுதுவதும் அறியாமையின் உச்ச கட்டம்.
ஹஜ்ஜுக்கு அன்று போல் ஒட்டகத்தில்தான் செல்ல வேண்டும், விமானம் போன்ற வாகனத்தில் செல்லக் கூடாது; தொழுகைளை சூரிய ஓட்டத்தை அன்று போல் இன்றும் கண்ணால் பார்த்துத்தான் தொழ வேண்டும், கடிகாரம் பார்த்துத் தொழக் கூடாது. தூரத்து மரணச் செய்தியை அன்று போல் இன்றும் ஆள் நேரில் வந்து சொன்னால்தான் ஏற்க வேண்டும். தொலைபேசி, அலைபேசி செய்திகளை ஏற்கக் கூடாது என்று ஒருவன் பிடிவாதம் பிடித்தால் அவனை எந்த அளவு அறிவீனன்-மூடன் என்று சொல்வோமோ அதேபோல், அன்று போல் இன்றும் பிறையைப் புறக்கண்ணால் சந்தேகத்திற்குரிய நிலையில்-நாளில் பார்த்து மாதத்தை முடிவு செய்ய வேண்டும். கடிகாரம் போல் நவீன கண்டு பிடிப்பான கணினி கணக்கீட்டை (சில மூடர்கள் தொடர்ந்து சொல்வது போல் எழுதுவது போல் கணிப்பை அல்ல) ஏற்று மிகமிகத் துல்லியமாக மாதம் பிறப்பதை மிக மிக உறுதியாக அறிந்தாலும் அதை ஏற்றுச் செயல்படக் கூடாது. அன்று போல் இன்றும் புறக் கண்ணால் பார்த்தே அதாவது 3ம் நாளை 1ம் நாளாகக் கொண்டு மாதத்தை ஆரம்பிக்க வேண்டும் என்று கூறுபவர்களும் கடைந்தெடுத்த மூடர்களாக மட்டுமே இருக்க முடியும்.
நாம் இப்படி எழுதுவது அவர்களது பக்தர்களுக்கு ஆத்திரத்தை உண்டாக்கலாம். காரணத் தோடுதான் இப்படிச் சொல்கிறோம். சங்கமம் ஆகும் நாள் அதாவது இந்து மக்களின் வழக்கில் அமாவாசையோடு மாத முடிவுற்றுப் புதிய மாதம் துவங்குகிறது என்று ஒப்புக் கொள்ளும் அவர்கள், கண்ணுக்குத் தெரியும் 3ம் பிறையே முதல் பிறை என்று கூறுவதால் முதல் இரண்டு நாள்களை நாள்களே இல்லாத சூனிய நாட்கள் என்று அவர்கள் கருதுவது 2:189, 36:39 இரு இறைவாக்குகளையும், மாதம் 29 அல்லது 30 நாட்கள் மட்டுமே கொண்டது என்ற நபி(ஸல்) அவர்களின் சொல்லும் உண்மை நிலையையும் மறுத்து முதல் இரண்டு நாட்களை நாளில்-மன்ஜிலில் ஏற்காமல் 3ம் நாளை முதல் நாளாகக் கொள்வதை விட அடிமுட்டாள்த்தனம் பிரிதொன்று இருந்தால் அதை அறியத்தரும்படி அவர்களிடம் வேண்டுகிறோம்.
——————————————————————————–
ஐயம் : நான் தினமும் காலை 7 மணிக்கு 40கிமீ. தூரத்திற்குப் பயணித்து என் பணி இடத்திற்குச் சென்று மாலை 5 மணிக்குத் திரும்ப வேண்டி உள்ளது. இதனால் ளுஹர் தொழுவதில் சிரமம் ஏற்படுகிறது. இப்படி பணி நிமித்தம் தினமும் பயணிக்கும் என் போன்றோருக்கு தொழுகையில் சலுகைகள் உண்டா? பயணத் தொழுகையில் சலுகைகள் என்ன? குறைந்தபட்ச தூரம் கி.மீ. எவ்வளவு?
N.ஹாஸிக் முஹம்மது, சென்னை.
தெளிவு : பணி நிமித்தம் பிரயாணம் செய்தாலும் சரி! மார்க்கப்பணி நிமித்தம் பிரயாணம் செய்தாலும் சரி, தினசரி பிரயாணம் செய்பவராக இருந்தாலும் சரி இம்மூவருக்கும் ஒரே சட்டம்தான். பயண தூரம் 1986ல் இன்றைய தவ்ஹீத் மவ்லவிகள்(?) அனைவரும் 5½ கிமீ என்று கூறும் ஹதீஃத்தான் இருக்கும் செய்திகளிலேயே மிகச் சரியானது என்ற முடிவுக்கு வந்து அதை அன்றைய ஆசிரியராக இருந்த பீ.ஜை. தன் பெயரிலேயே தீர்ப்புகள் என்ற தலைப்பில் வெளியிட்டார்.
1987 ஜூலையில் நம்மை விட்டு வெளியேறி பின்னர், வேறு ஹதீஃது எதுவுமே இல்லாது அதே ஹதீஃதை வைத்துப் பேணுதல் என்ற அடிப்படையில் இப்போது சுயவிளக்கமாக அதிகப்படுத்திக் கூறுகிறார்கள். மார்க்கத்தில் பேணுதல் அடிப்படையில்தான் பல பித்அத்கள் புகுத்தப்பட்டுள்ளன. உதாரணமாக சஹர், இஃப்தார் நேரங்களைக் குறிப்பிடலாம். எனவே குர்ஆன், ஹதீஃத் தெளிவாக இருக்கும் போது பேணுதல் என சுய விளக்கம் கொடுப்பது வழிகேடாகும். எனவே பயண தூரம் 5½ கிமீ என்பதே ஹதீஃத் அடிப்படையில் சரி! ஐங்காலமும் விடாமல் அல்லாஹ்வுக்காக மட்டும், கூலிக்காக அல்ல, பேணித் தொழுபவர்களுக்கே இதன் அருமை புரியும்.
தொழுகையில் பேணுதலற்றவர்கள், மக்களுக்குக் காட்டத் தொழுபவர்கள் (பார்க்க: 107:4-6) தங்களை மறந்து ஊருக்கு உபதேசம் செய்பவர்கள் (பார்க்க. 2:43,44, 61:2,3) இப்படிச் சுயவிளக்கம் கொடுத்து, 5:6, 9:91, 24:61, 22:78. 48:17 இறைவாக்குகளுக்கு முரணாக மார்க்கத்தில் சிரமத்தை உண்டாக்கி அதன் மூலம் பெருங்கொண்ட மக்களை தொழுகையற்றவர்களாக்கி, அற்ப உலக ஆதாயங்களை அடையக் குறியாக இருப்பவர்களே இப்படிப் பேணுதல் என்று கூறி சுய விளக்கம் கொடுப்பார்கள். 33:36 இறைக் கட்டளைப்படி அவர்களின் சுய விளக்கங்கள் மார்க்கம் ஆகாது.
எனவே நீங்கள் அன்றாடம் பயணிதான். எனவே பயணிகளுக்குரிய அந்தச் சலுகையை நீங்கள் தாராளமாகப் பயன்படுத்தலாம். நீங்கள் பிரயாணத்தில் இருக்கும்போது தொழுதால் ஜம்உ கஸ்ர் 2+2=4 ளுஹர் அசர் சேர்த்துத் தொழுது கொள்ளலாம். பயணத்தில் தொழ வாய்ப்பு இல்லை என்றால் வீட்டுக்கு வந்து ஜம்உ 4+4=8 தொழுது கொள்ளலாம். (மேலும் பார்க்க புகாரீ: (ர.அ.)1174), முஸ்லிம் 1267, 1268, 1272-1276) பயணத்தின் குறைந்த பட்ச தூரம் 5டி கி.மீ. வெளியூரில் போய் அங்கு பணியில் அமர்ந்து விட்டால் அங்கு அவர் பயணி அல்ல, முகீம். நபி(ஸல்) அவர்கள் மக்காவிலிருந்து ஹிஜ்ரத் செய்து மதீனாவில் தங்கிவிட்ட பின்னர் அங்கு முகீமாக முழுமையாகத்தான் தொழுது வந்தார்கள். ஒருவர் ஒரு வேலையின் நிமித்தம் வெளியூர் போய் அங்கு தங்கும் போது, வேலை இந்தா முடிந்துவிடும், அந்தா முடிந்து விடும் என ஒருவரின் சக்திக்கு மீறி கால தாமதம் ஏற்பட்டால், அவர் அந்தக் காலமெல்லாம் அங்கு ஜம்உ கஸ்ர் செய்யலாம்.
நபி(ஸல்) அவர்கள் ஒரு பயணத்தில் மக்காவில் 19 நாட்கள் வரை தங்கி இருக்கும்போது கஸ்ர் செய்ததாக ஹதீஃதில் காணப்படுகிறது. இப்படி குறுகிய காலம் வெளியூரில் தங்கிய பின்னர் சொந்த ஊர் திரும்பிவிடுவோம் என்ற எண்ணத்தில் இருப்பவர்கள் ஜம்உ கஸ்ர் செய்யலாம். வெளியூரில் வருடக் கணக்கில் பணி புரிகிறவர்கள் அங்கு நிரந்தர மாக ஜம்உ கஸ்ர் செய்யலாம் என்று சிலர் கூறு வதற்கு ஹதீஃத் ஆதாரம் இல்லை. அவர்களின் தீய சுய விளக்கமே அது.
———————————————————————-
ஐயம் : ஒரு ஊர் அல்லது நாட்டில் பிறக்கும் குழந்தைக்கு வேறு ஊரில் அகீகா கொடுக்கலாமா? 7 நாட் களுக்குள் கொடுக்க முடியாவிட்டால் எப்போது கொடுக்க வேண்டும்? தலை முடியின் எடைக்கு வெள்ளி தர்மம் செய்ய வேண்டுமா? ஆண் குழந்தைக்கு 2 ஆடும், பெண் குழந்தைக்கு 1 ஆடும் கொடுக்க வேண்டுமா?
M. ஹாஸிக் முஹம்மது, சென்னை-50.
தெளிவு : குழந்தை பிறந்த ஊரிலேயே அகீகா கொடுக்க வேண்டும் என்றோ, வேறு ஊரில் அகீகா கொடுக்கக் கூடாது என்ற தடையோ மார்க்கத்தில் இல்லை. ஆனால் குழந்தை பிறந்த 7 நாள்களுக்குள் அல்ல, பிறந்த 7வது நாளே அகீகா கொடுப்பது ஆதாரபூர்வமான ஹதீஃத் மூலம் தெரியவருகிறது. 7,14,21 என்று பிரிதொரு ஹதீஃத் கூறுகிறது. ஆனால் அதில் குறைபாடு இருக்கிறது. ஆனால் 7வது நாள் தவறினால் அகீகா கொடுக்கக் கூடாது எனச் சுயமாக 16:116 இறைவாக்கு சொல்வது போல் ஹலால் ஹராம் என்று சொல்வது நேர்வழி அல்ல. அதற்கு மாறாக 7வது நாள் தவறிவிட்டால் அதன் பின்னர் கொடுப்பவர்கள் பிறந்த நாளிலிருந்து 7வது என்ற அடிப்படையில் கணக்கிட்டு அகீகா கொடுப்பதை தடுப்பதற்கு மார்க்கத்தில் ஆதாரமில்லை.
அதே சமயம் தலைமுடியின் எடைக்கு வெள்ளி தர்மம் செய்ய வேண்டும் என்று கூறும் செய்தி பலவீனமானதாகும். ஆண் குழந்தைக்கு 2 ஆடும், பெண் குழந்தைக்கு 1 ஆடும் அகீகா கொடுப்பது நபி வழியாகும். வசதி இல்லாவிட்டால் ஆண் குழந்தைக்கு 1 ஆடும் அகீகா கொடுக்கலாம். நபி(ஸல்) அவர்கள் தமது பேரக் குழந்தைகளுக்கு 1 ஆடு கொடுத்ததாகவே ஹதீஃத் இருக்கிறது.
——————————————————————–
ஐயம் : மாத சம்பளம் வாங்கும் நான் சம்பளத்தில் எத்தனை சதவிகிதம் ஜகாத் கொடுக்க வேண்டும்?
M. ஹாஸிக் முஹம்மது, சென்னை-50.
தெளிவு : நீண்ட காலம் சேமித்து வைக்க முடியாத விவசாயப் பொருள்களுக்கு மட்டுமே அறுவடையானவுடன் ஜகாத் கொடுக்க மார்க்கம் ஏவுகிறது. அதுவும் தானாக விளைந்தால் 10 சதவிகிதமும், நீர் பாய்ச்சி விளைந்தால் 5 சதவிகிதமும் ஜகாத் கொடுக்க வேண்டும். இதை ஆதாரமாகக் காட்டி ஒரு சிலர் கட்டிடங்களின் மூலம் வரும் வாடகைக்கு மட்டும் ஆண்டுக்கு 2½ சதவிகிதம் ஜகாத் கொடுத்தால் போதும் என்று சொல்வது தவறு. அதற்கு மாறாக கட்டிடங்களில் போட்டிருக்கும் பணம் முதலீடாக இருப்பதால், அந்த முதலீட்டிற்கும், வரும் வாடகையில் செலவு போக ஒரு வருடம் எஞ்சியிருக்கும் தொகைக்கும் சேர்த்தே ஜகாத் கொடுக்க வேண்டும்.
அதேபோல் அறுவடையானவுடன் விவசாயப் பொருள்களுக்கு உடன் ஜகாத் கொடுப்பது போல், மாதா மாதம் சம்பளம் வாங்குபவர்கள் உடனடி யாக ஜகாத் கொடுக்க வேண்டும், அது 2½ சதவிகிதம் என்று சிலர் சொல்லுவது தவறாகும். 9:34, 59:7 இறைவாக்குகளைக் கவனமாகப் படிப்பவர்கள் விவசாயப் பொருள்கள் போல் அல்லாமல், பல தலைமுறைகளுக்கு அழியாமல் சேர்த்து வைக்கும் பணம், தங்கம், கட்டிடங்கள் போன்றவை வெளியாரிடம் செல்லாமல், இவர்களிடம் தேக்கி வைக்கப்பட்டால் அப்படித் தேக்கி வைக்கப்பட்டு ஒரு வருடம் பூர்த்தியானால் மட்டுமே ஜகாத் கடமையாகும். அடுத்த வருடமும் அதே பொருள்கள் வெளியாரிடம் செல்லவிடாமல் தேக்கி வைக்கப்பட்டால் அப்பொருள்களுக்கு மீண்டும் ஜகாத் கடமையாகும். இப்படி வெளியே செல்ல விடாமல் தேக்கி வைக்கப்பட்டிருக்கும் காலமெல்லாம் அப்பொருள்களுக்கு வருடா வருடம் ஜகாத் கடமையாகும். ஒருவருக்கு ஒரு கோடி ரூபாய் வந்தது. அந்த ஒரு கோடிக்கும் ஜகாத் உடனடியாகக் கடமையாகாது. ஒரு வருடத்திற்குள் அந்த ஒரு கோடியை அவர் செலவழித்துவிட்டால், அவர் அதற்கு ஜகாத் கொடுக்கவில்லை என்ற குற்றத்திற்கு ஆளாகமாட்டார். அந்த ஒரு கோடியையும் செலவிடாமல் தேக்கித் தன்னிடம் வைத்துக் கொண்டால் வருட இறுதியில் 2டி சதவிகிதம் ஜகாத் கடமையாகும். இப்படி அப்பணத்தை வெளியே செல்ல விடாமல் தடுத்து வைத்திருக்கும் காலமெல்லாம் வருடா வருடம் அதன் மீது ஜகாத் கட்டாயக் கடமையாகும்.
இப்படிச் செல்வந்தர்கள் தங்களின் சொத்துகளுக்குரிய ஜகாத்தை வருடாவருடம் கொடுத்த பொருள்களுக்கே மீண்டும் மீண்டும் கொடுப்பதே அவர்களுக்கு நாளை மறுமையில் உதவும் சொத்தாகும். இங்கு அவர்கள் விட்டுச் செல்வது அவர்களின் வாரிசுகளுக்குரியதாகும். ஜகாத் வருடா வருடம் கொடுக்காவிட்டால் அவர்கள் எப்படித் தண்டிக் கப்படுவார்கள் என்பதை 9:34,35 இறைவாக்குகள் படம் பிடித்துக் காட்டுகின்றன. ஜகாத் வருடா வருடம் கொடுக்காமல், ஒரு வருடம் மட்டும் கொடுத்து விட்டு பின்னால் கொடுக்காமல் தடுப்பவர்கள் வைக்கோலைக் காத்த நாய் போல் ஆகிறார்கள். வைக்கோல் நாய்க்கு எப்படிப் பலனில்லையோ அதுபோல், இவர்களது ஜகாத் கொடுக்காத பெரும் பெரும் சொத்துகளாலும் இவர்களுக்கு எவ்விதப் பயனுமில்லை. அது மட்டுமல்ல, அவர்களுக்குப் பின்னர் அவர்களின் வாரிசுகள் அச்சொத்துக்க ளைத் தவறான வழிகளில் செலவிட்டால், அவர்களின் அப் பாவத்திலும் இவர்களுக்கும் குறையாது பங்கு கிடைக்கும்.
எனவே அறிவுள்ளவர்கள் தங்களின் சொத்துக்களுக்கு வருடா வருடம் ஜகாத் கொடுப்பதிலிருந்து தவறிழைக்க மாட்டார்கள். நீங்கள் வாங்கும் சம்பளத்திற்கு வாங்கிய உடன் ஜகாத் கடமை இல்லை. வருட இறுதியில் உங்களின் செலவுகள் அனைத்தும் போக, நீங்கள் சேமித்து வைக்கும் தொகைக்கே ஜகாத் கணக்கிட்டுக் கொடுக்க வேண்டும். அந்தச் சேமிப்பு எவ்வளவு காலம் செலவழியாமல் உங்க ளது சேமிப்பில் இருக்கிறதோ அந்தக் காலமெல்லாம் நீங்கள் வருடா வருடம் கொடுத்த பொருளுக்கே மீண்டும் மீண்டும் ஜகாத் கொடுக்க வேண்டும். இதற்கு மாறாகச் சட்டம் சொல்கிறவர்கள் அந்த செல்வந்தர்கள் அவர்களின் சுயநலம் காரணமாக விடடெறியும் அற்பக் காசுக்கு, இவர்களின் சுய நலம் காரணமாக தவறான சட்டம் சொல்கிறார்கள் என்பதே குர்ஆன், ஹதீஃத் கூறும் உண்மையாகும்.
———————————————————————–
ஐயம்: அஸர் தொழுகையில் ஷாஃபி மத்ஹபிற்கும், ஹனஃபி மத்ஹபிற்கும் இடையே ஒரு மணி நேரம் வித்தியாசம் இருக்கிறது. இதில் மத்ஹபை சாராதவர்கள் எந்த நேரத்தை எடுத்துத் தொழுவது? அஸருக்குரிய சரியான நேரம் எது?
M. ஹாஸிக் முஹம்மது, சென்னை-50.
தெளிவு : ஒரு பொருளின் உயரத்தை அதே அளவு அதன் நிழல் அடைந்து விடும் நேரமே சரியான அஸருடைய நேரமாகும். அந்த வகையில் ஷாஃபி மத்ஹபினர் கடைபிடிக்கும் நேரமே மிகச் சரியான அஸருடைய நேரம். ஹனஃபி மத்ஹபினர் அதிலிருந்து ஒரு மணி நேரம் கழித்து தொழுதாலும் காலம் தாழ்த்தித் தொழும் தவறே அல்லாமல் அஸருடைய நேரம் சூரியன் மறையும் வரை இருக் கிறது. எனவே இச்செயலைப் பாராதூரமான குற்ற மாகக் கொள்ள முடியாது. ஆயினும் தொழுகையில் ஹனஃபி மத்ஹபினர் கடைபிடிக்கும் இதர சில முறைகள் தொழுகையையே பாழாக்கும் நிலையில் உள்ளன.
மரியாதைக்குரிய நான்கு இமாம்களின் காலம் ஹிஜ்ரி 80லிருந்து 241 வரையாகும். இந்த நான்கு இமாம்களும் தெள்ளத் தெளிவாக-திட்டமாக எங்களை தக்லீது செய்யாதீர்கள், எங்கள் பேரால் மத்ஹ புகள் அமைக்காதீர்கள்; குர்ஆன், ஹதீஃத் வழியே எங்கள் வழி; எங்களுக்கென்று தனி வழி இல்லை; குர்ஆன், ஹதீஃதுக்கு முரணாக நாங்கள் எது சொல்லி இருந்தாலும் அதைத் தூக்கி எறிந்து விடுங்கள் என்று சொன்னவை இன்று மதரஸாக்களில் காணப்படும் நூல்களிலேயே காணக் கிடைக்கின்றன. 36:21 இறைவாக்கை நிராகரித்து மார்க்கத்தைப் பிழைப்பாகக் கொண்ட இம்மவ்லவிகள் எப்படி எண்ணற்ற குர்ஆன் வசனங்களையும், எண்ணற்ற ஆதாரபூர்வமான ஹதீஃத்களையும் தங்களின் அற்ப உலக ஆதாயம் காரணமாக 2:39, 25:30 இறைவாக் குகள் கூறுவது போல் நிராகரிக்கிறார்களோ அது போல் இந்த நான்கு இமாம்களின் நேரடியான போதனைகளையும் நிராகரித்து, அந்தப் போதனைகளுக்கு நேர் முரணாக மத்ஹபுகளைக் கற்பனை செய்து மக்களை வஞ்சித்து நரகில் தள்ளுவதோடு, அவர்கள் வயிறு வளர்க்கிறார்கள்.
மத்ஹபுகள் கற்பனைச் செய்யப்பட்டக் காலம் அந்த மரியாதைக்குரிய இமாம்களின் காலமான ஹி.80-241க்குப் பிறகு 200 ஆண்டுகள் கழித்து ஹிஜ்ரி 400ல் ஆகும். இந்த மத்ஹபுகளைக் கற்பனை செய்து முதன் முதலில் நடைமுறைப்படுத்தியவர் கள் யார் என்று மேற்படி 4 மத்ஹபுகளைக் கண் மூடிப் பின்பற்றுபவர்களுக்கே தெரியாது. அப்படியானால் இந்த நான்கு மத்ஹபுகளும் எந்த அளவு வழிகேடுகளைப் போதிக்கின்றன என்பதை நீங்களே முடிவு செய்து கொள்ளுங்கள். இந்த நான்கு மத்ஹபுகளிலும் பெருத்த வழிகேட்டைப் போதிப்பது இமாம் அபூஹனீபா(ரஹ்) அவர்கள் பெயரால் அவர்களுக்கும் 250 ஆண்டுகளுக்குப் பின்னர் சுய நல யூதர்களாக இருந்து இஸ்லாத்தைத் தழுவிய மத குருமார்களால் கற்பனை செய்யப்பட்ட ஹனபி மத்ஹபாகும். ஹனபி மத்ஹபின் பெரும்பாலான சட்டங்களுக்கு குர்ஆன் ஹதீஃத் ஆதாரம் அறவே இல்லை. உதாரணமாக ஜனசா தொழுகையின் முதல் தக்பீரில் அல்ஹம்து சூரா ஓதாமல், தனா ஓதுவதற்கு எந்தவித ஹதீஃத் ஆதாரமும் இல்லை. அதனால் தான் ஹனஃபி மத்ஹபின் சட்டங்கள் குர்ஆன், ஹதீஃதில் இல்லாவிட்டாலும், குர்ஆன், ஹதீஃதுக்கு முரணாக இருந்தாலும், ஹனஃபி மத்ஹபு சட்டங்களையே பின்பற்ற வேண்டும் என்று அவர்களின் பிக்ஹு நூல்களில் எழுதப்பட்டுள்ளது.
அதற்கு மாறாக சூராஃபாத்திஹா இல்லாமல் எந்தத் தொழுகையும் இல்லை என்பதற்கு ஹதீஃத் ஆதாரம் உண்டு. பர்ழு, சுன்னத், நஃபில், ஜனாசா எந்தத் தொழுகையாக இருந்தாலும் ஃபாத்திஹா சூரா இல்லாவிட்டால் அது தொழுகையே இல்லை என்ற தெளிவான ஹதீஃத் ஆதாரங்களுக்கு முர ணாக ஜனாசா தொழுகையில் ஃபாத்திஹா சூராவைப் புறக்கணித்து தனா ஓதுவதில் பிடிவாதமாக இருக்கிறார்கள் ஹனபி மத்ஹபினர். அது மட்டுமல்ல; ஹனஃபிகள் தொழும் ஐங்காலக் கடமையான தொழுகைகள் இறைவனால் ஏற்றுக் கொள்ளப்படுமா என்பதும் சந்தேகமே!
தொழுகையின் பிரதான அம்சம் சூரத்துல் ஃபாத்திஹா. சூரத்துல் ஃபாத்திஹா இல்லாமல் தொழுகை இல்லை என்பது நபி(ஸல்) அவர்களின் தெளிவான எச்சரிக்கை. தொழுகையின் ஒவ்வொரு ரகாஅத்திலும் ஃபாத்திஹா சூரா ஓதியே ஆக வேண்டும். அதே சமயம் ஜமாஅத் தொழுகையில் இமாம் சப்தமிட்டு ஓதும்போது முக்ததிகள் வாய் மூடி காது தாழ்த்திக் கேட்பது கடமை என 7:204 இறைவாக்கு நேரடியாகக் கூறுகிறது. இமாம் ஓதுவதை முக்ததிகள் வாய்மூடி செவி தாழ்த்திக் கேட்டாலே அவர்களும் ஓதியதாகத்தான் பொருள்.
உதாரணமாக இன்றைய செய்தித் தாளிலுள்ள ஒரு முக்கியச் செய்தியை ஒருவர் சப்தமிட்டுப் படிக்க மற்றவர்கள் அச்செய்தியை காது தாழ்த்தி கேட்டால் அவர்களும் அதைப் படித்தது போல் அச் செய்தியை அறிந்து கொள்வார்கள். அதற்கு மாறாகப் படிப்பவர் சப்தமிட்டுப் படிக்காமல் வாய்க்குள் படித்தார் என்றால் பக்கத்திலிருப்பவர்கள் அச் செய்தியை அறிய முடியாது. அறிய அவர்களும் படிக்க வேண்டும். இது அனைவரும் ஏகோபித்து ஒப்புக் கொள்ளும் உண்மை. இந்த நிலையில் இமாம் சப்த மிட்டு ஓதும்போது முக்ததிகள் வாய்மூடி செவி தாழ்த்திக் கேட்பது 7:204 இறைக் கட்டளைக்கு முற்றிலும் அடிபணிவது முற்றிலும் சரி. இமாம் ஓதும் சூரா ஃபாத்திஹாவை காது கொடுத்துக் கேட்டதால் அவர்களும் ஓதியதாகி விடும்; அவர்கள் ஓத வேண்டியதில்லை என்பதும் சரிதான். அதே சமயம் இமாம், முக்ததிகள் கேட்கமுடியாத நிலையில் வாய்க்குள் ஓதும் ரகாஅத்களிலும் முக்ததிகள் சூராஃபாத்திஹா ஓதக் கூடாது, வெறுமனே நிற்க வேண்டும் என்பது எந்த ஆதார அடிப்படையில்? ஹனஃபி மவ்லவிகள் சுயவிளக்கம் விட்டு குர்ஆன், ஹதீஃத் ஆதாரம் தரமுடியுமா?
இது போலவே இன்னும் சிலர் இமாம் சப்த மிட்டு குர்ஆன் ஓதுவதை 7:204 இறைவாக்குக் கட்டுப்பட்டு அதைக் கேட்காமல், முக்ததிகள் அதைப் புறக்கணித்து இவர்களும் ஃபாத்திஹா சூரா ஓத வேண்டும் என்று சொல்வதும் பெரும் தவறாகும்.
இமாம் ஓதுவதை கேட்க முடியாத நிலையிலும், இவர்களும் சூராஃபாத்திஹா ஓதாவிட்டால் அவர்கள் எப்படி தொழுதவர்களாக ஆகமுடியும். சூரா ஃபாத்திஹா இல்லாவிட்டால் தொழுகை இல்லை என்பதுதானே நபி(ஸல்) அவர்களின் தெளிவான வழிகாட்டல். முக்ததிகளின் தொழுகையைப் பாழாக்கும் இக்குருட்டுச் சட்டத்தை இயற்றியவர்கள் யார் என்று ஹனஃபிகளால் கூற முடியுமா? இதில் இன்னும் வேதனையான விஷயம், ழுஹர், அஸர், இஷா தொழுகைகளில் கடைசி இரண்டு ரகாஅத்திலும், மஃறிபில் கடைசி ஒரு ரகாஅத்திலும் இமாமும் சூராஃபாத்திஹா ஓதாவிட்டாலும் தொழுகை நிறைவேறும் என்ற குர்ஆன், ஹதீஃதுக்கு முற்றிலும் முரணான சட்டமாகும். அதனால் தான் ஹனஃபி இமாம்கள் பின்னால் தொழும் முக்ததிகளில் மார்க்கம் அறிந்து தொழுபவர்கள் இந்த ரகா அத்களில் சூராஃபாத்திஹா ஓத முடியாமல் திணறுகிறார்கள்.
இந்தப் பெரும் குறையுடன் இன்னொரு பெரும் தவறையும் ஹனஃபி இமாம்கள் செய்கின்றனர். ருகூவிலிருந்து எழும்பி நிலைக்கு வந்தார்களோ இல்லையோ சிறு நிலையில் தாமதிக்காமல் சுஜூதுக்குச் செல்கிறார்கள். “”சமிஅல்லாஹுலிமன்ஹமிதா அல்லாஹு அக்பர்” என்று சிறிதும் சிறு நிலையில் நிலைக்காமல் சுஜூதுக்குச் செல்கின்றனர். முதல் சுஜூதுக்கும் இரண்டாவது சுஜூதுக்கும் இடையி லுள்ள சிறு இருப்பிலும் தாமதிக்காமல் அல்லாஹு அக்பர் அல்லாஹு அக்பர் என உடனடியாக இரண்டாம் சுஜூதுக்குச் செல்கின்றனர். இந்தத் தவறான செயல்களை எந்த குர்ஆன் வசனம், ஹதீஃத் ஆதார அடிப்படையில் செய்கிறார்களோ அவர்களுக்கே வெளிச்சம். ஹனஃபி இமாம்கள் பின்னால் தொழும் வியம் அறிந்தவர்கள் அந்த இமாம்களைக் கடுமை யாக வெறுக்கும் நிலையிலேயே தொழ வைக்கின்றனர். இல்லை கூலி-சம்பளத்திற்காக மாரடிக்கின்றனர். ஆம்! தங்கள் தொழுகையை அற்பக் காசுக்கு விற்கின்றனர். அவர்கள் தொழுவிக்கும் முறை அல்குர்ஆன் 107:4,5,6 வசனங்களையும், தொழுகையில் திருடுபவர்கள் பற்றி நபி(ஸல்) அவர் களின் கடுமையான எச்சரிக்கையையும் நினைவு படுத்துகிறது.
இதில் இன்னும் வேதனைக்குரிய விஷயம் என்ன வென்றால் தங்களை ஹனஃபிகள்-சுன்னத் ஜமாஅத்தினர் எனப் பெருமை பேசுபவர்களும் தொழுகையில் திருடும் இத்தொழுகையையே விரும்புகின்றனர். வாய்மூடி மெளனமாக இமாமுக்குப் பின்னால் நின்று, கடகடவென குனிந்து நிமிர்ந்து சுஜூதுகளை வேகவேகமாக முடிப்பதையே விரும்புகின்றனர். மார்க்கம் அறிந்த மார்க்க ஞானமுள்ள இமாம் நிறுத்தி நிதானமாக எல்லா நிலைகளையும் பேணித் தொழுவதை அவர்கள் விரும்புவது இல்லை. இமாம் தொழுகையின் சிறு நிலைகளில் தாமதிக்கிறார் எனக் குற்றம் சாட்டுகின்றனர். அப்படிப்பட்ட இமாம்களை ஹனஃபி மத்ஹப் தொழுகையாளிகள் விரும்புவதில்லை. அந்த அளவு தவறான வழியில் அவர்கள் வழி நடத்தப்படுகிறார்கள்.
அதனால் அப்படிப்பட்ட இமாம்கள் பின்னால் தொழும் தொழுகை கூடாது; அவர்கள் பின்னால் தொழுவது ஹராம் என சுயநல தவ்ஹீத்(?) மவ்லவிகள் ஃபத்வா கொடுத்து சமுதாயத்தைப் பிளவுபடுத்திப் பக்கத்திலேயே போட்டிப் பள்ளி (மஸ்ஜிதுன்ழி ரார்) கட்டி தனி ஆதிக்கம் செலுத்தி வயிறு வளர்க்கின்றனர். அவர்களும் மதகுருமார்கள் என்ற ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள்தான். தொழ வைக்கும் இமாம் எப்படிப்பட்டக் குறைகளைச் செய்தாலும், அவரது தொழுகை சுருட்டி அவரது முகத்திலேயே எறியப்பட்டாலும் அவர் பின்னால் தொழுபவர் சரியான முறையில் தொழுதால் அவரது தொழுகைக்கு எவ்வித பாதிப்பும் இல்லை என்பதற்கே எண்ணற்ற குர்ஆன் வசனங்களும், ஹதீஃத்களும் இருக்கின்றன. பின்னால் நின்று தொழுபவர்களின் வெறுப்புக்கிடையே தொழ வைக்கும் இமாம் பெரும் பாவத்தைச் சுமக்க நேரிடும் என்பதே உண்மையாகும். அதே சமயம் சமுதாயத்தை ஒன்றுபடுத்துவதற்கு மாறாக மேலும் மேலும் பிளவுபடுத்துகிறவர்கள் மாபெரும் வழி கேடர்கள், நரகம் புகுகிறவர்கள் என்பதற்கே எண்ணற்ற குர்ஆன் வசனங்கள் தெள்ளத் தெளிவான ஆதாரமாக இருக்கின்றன. எல்லாம் வல்ல அல்லாஹ் மார்க்கத்தைத் தெளிவாக, சரியாக விளங்கி அதன்படி நடக்க அருள்புரிவானாக!