ஐயம் : தராவீஹ், தஹஜ்ஜத், கியாமுல்லைல், கியாமு ரமழான், வித்ர் இத்தொழுகைகளின் விபரம் தரவும். தராவீஹ் என்ற பெயரால் முன்னிரவில் தொழுவதற்கும் ஜமாஅத்தாகத் தொழுவதற்கும் ஆதாரத்துடன் தெளிவாக குர்ஆன், ஹதீஃத் வழியில் விளக்கம் தரவும்.
அபூபக்கர், சிங்கார், சென்னை-79.
தெளிவு : ஹதீஃத் நூல்களில் தஹஜ்ஜத், கியாமுல் லைல், கியாமு ரமழான், வித்ர் போன்ற பதங்கள் மட்டுமே காணப்படுகின்றன. “”தராவீஹ்” என்ற பதத்தை குர்ஆனிலோ, ஹதீஃதிலோ அறவே பார்க்க முடியவில்லை. மேலும் தஹஜ்ஜத், கியாமுல் லைல், கியாமு ரமழான், வித்ர் ஆகிய நான்கு பதங்களும் நபி(ஸல்) அவர்கள் ரமழான் மற்றும் ரமழான் அல்லாத 355 நாட்களும் இரவில் தொழுத தொழுகையையே குறிப்பிடுகின்றன. இதை புகாரீ (ர.அ.) 2013ல் ஆயிஷா(ரழி) அவர்கள் நேரடியாகக் கூறும் “”ரமழானிலும் ரமழான் அல்லாத மாதங்களிலும் பதினொரு ரகாஅத்களைவிட அதிகமாக நபி (ஸல்) அவர்கள் தொழமாட்டார்கள்” என்று நேரடியாகத் தெளிவாக் கூறியிருப்பது உறுதிப் படுத்துகிறது.
நபி(ஸல்) அவர்கள் 23 ரகாஅத்கள் தொழுதார்கள் என்ற செய்தியும், உமர்(ரழி) அவர்கள் 23 ரகா அத்துகள் ஜமாஅத்தாகத் தொழ ஏற்பாடுசெய்தார்கள் என்ற செய்தியும் பின்னால் வந்தவர்கள் தங்களின் சொந்த ஆதாயங்களுக்காக இட்டுக் கட்டியவையே. 33:36 இறைக் கட்டளைப்படி பகிங்க வழி கேடாகும். நரகில் கொண்டு சேர்ப்பவையே. “”தராவீஹ்” எனப் பெயரிட்டது, அந்தப் பெயரின் அடிப்படையில் இரண்டு ரகாஅத்திற்கிடையில் குறுகிய அவகாசமும், நான்கு ரகாஅத்திற்கிடையில் நெடிய அவகாசமும் எடுத்துக் கொள்வதும், மார்க்கத்தை வயிற்றுப் பிழைப்பாகக் கொண்டவர்களின் கற்பனையில் உதித்தவையே. 7:3, 33:36, 59:7 இறை எச்சரிக்கைகளின்படி பெருத்த வழிகேடே, நரகில் சேர்ப்பவையே.
எண்ணற்ற குர்ஆன் வசனங்களுக்கு முரணாகத் தங்களின் வயிற்றுப் பிழைப்பை நோக்கமாகக் கொண்டு 8+3 ஐ 20+3 ஆக அதிகப்படுத்தியது, “”நபி (ஸல்) அவர்கள் ரமழானிலும், ரமழான் அல்லாத மாதங்களிலும் பதினொரு ரகாஅத்தை விட அதிகமாகத் தொழுததே இல்லை” என்ற ஆயிஷா(ரழி) நேரடியாக அறிவிக்கும் அறிவிப்பும், நான்கு ரகாஅத்திற்கு இடையிடையே இவர்கள் நான்கு கலீஃபாக்களின் பெயரைச் சொல்லி துதிபாடுவதும் இவை நபி(ஸல்) அவர்களின் இறப்பிற்குப் பின்னர் 5:3, 3:19,85, 7:3, 33:21, 36, 59:7 குர்ஆன் வசனங்களை 2:39 இறைவாக்குக் கூறுவது போல் நிராகரித்துப் பின்னால் வந்தவர்கள் கற்பனை செய்தவையே. பித்அத்களே, வழிகேடுகளே, நரகில் சேர்ப்பவையே என்பதை உறுதிப்படுத்தப் போதுமான தாகும்.
தஹஜ்ஜத் தொழுகை வேறு, ரமழான் இரவுத் தொழுகை வேறு என்று இவர்கள் சுயவிளக்கம் கொடுப்பதும் பெருத்த வழிகேடே என்பதை 33:36 குர்ஆன் வசனம் உறுதிப் படுத்துகிறது. இவர்களுக்குச் சுய சிந்தனை இருந்தால் இப்படிப் பிதற்ற முடியாது. இவர்கள் இப்படிக் கூறுவதில் உண்மையாளர்களாக இருந்தால் இஷாவுக்குப் பின் முன்னிரவில் தொழும் தராவீஹ்(?) தொழுகைக்குப் பின் பின்னிரவில் தஹஜ்ஜத் தொழுகைக்குப் பின், தொழ வேண்டிய “வித்ரு’ தொழுகையை முன்னிரவில் தொழலாமா? இதைவிட அறிவீனமான சுய விளக்கம் இருக்க முடியுமா? சிந்தியுங்கள். இவர்களின் அச்செயலே இவர்களாகச் சுயநலத்துடன் ஏற்படுத்தியுள்ள தராவீஹ் தொழுகையும், பின்னிரவில் தொழப்படும் தஹஜ்ஜத் தொழுகையும் ஒன்றே என்பதை உறுதிப்படுத்துகிறது.
இவை அனைத்தையும் நடுநிலையுடன் ஆராய்ந்து அறிபவர்கள் தராவீஹ், தஹஜ்ஜத், கியாமுல் லைல், கியாமு ரமழான், வித்ர் எனப் பல பெயர்களால் சொல்லப்படும் அனைத்துத் தொழுகைகளும் ஒரே தொழுகையே. நடுநிசியில் தூங்கிய எழும்பிய பின் தொழுவது தஹஜ்ஜத், தூங்காமல் முன்னிரவில் தொழுவது கியாமுல் லைல், ரமழான் மாதத்தில் தொழுவது கியாமு ரமழான், இரவின் இறுதிப் பகுதியில் தொழுவது வித்ர் என அறியப்படுகிறது என்பதைப் புரிந்து கொள்ளலாம். “”தராவீஹ்” என்ற பதம் 5:3, 3:19,85, 7:3, 33:21,36, 59:7 குர்ஆன் வசனங்களை நிராகரிப்பவர்களின் சுயநலக் கற்ப னையே என்பதையும் எளிதாகப் புரிந்து கொள்ள முடியும்.
இந்த உண்மையை குர்ஆன் 73:1-7, புகாரீ :1129, 1137, 1147, 2009, 2012, 2013 இரவுத் தொழுகை பற்றிய ஹதீஃத்களும் உறுதிப்படுத் துகின்றன. அடுத்து இத்தொழுகையை தராவீஹ் என்ற பெயரால் முன்னிரவில் இஷாவுக்குப் பின் தொழுவதற்கும் அதையே ஜமாத்தாகத் தொழுவ தற்கும் குர்ஆன், ஹதீஃத் ஆதாரம் இருக்கிறதா என்று விரிவாகப் பார்ப்போம்.
17:79 குர்ஆன் வசனத்தில் அல்லாஹ் நபி(ஸல்) அவர்களை தஹஜ்ஜத் என்ற உபரி தொழுகையைத் தொழுது வருமாறு ஏவுகிறான். நபி(ஸல்) அவர்க ளுக்கு அது உபரி; நமக்கு அது நபி வழியான சுன்னத், நபி(ஸல்) அவர்கள் அத்தொழுகையை தூங்கி எழும்பிய பின், பிந்திய இரவில் தொழுததாகத்தான் ஹதீஃத்களில் காணப்படுகிறது. ரமழானிலும் பிந்திய இரவில் தான் தொழுததாகக் காணப்படுகிறது.
நபி(ஸல்) அவர்கள் பின்னால் நின்று தொழுதவர்கள், தங்களுக்கு சஹர் உணவு தப்பிப் போய் விடுமோ என அச்சமுறும் வகையில் நபி(ஸல்) அவர்கள் அத்தொழுகையை நீட்டித் தொழுததாகச் சொல்வதிலிருந்தே அது பிந்திய இரவில் தொழப் பட்டதுதான் என்பது உறுதியாகத் தெரிகிறது. நபி (ஸல்) அவர்கள் இஷாவுக்குப் பின்னர் அத்தொழுகையைத் தொழுதாக ஒரு பலவீனமான செய்தியும் நாம் அறிந்தவரை இருப்பதாகத் தெரியவில்லை. அப்படியானால் தராவீஹ் என்ற பதமும் 23 ரகா அத்துகளும், இஷாவுக்குப் பின்னர் முன்னிரவில் தொழ எப்படி யாரால் கற்பனை செய்யப்பட்டன என்று அலசும்போது அவற்றின் எதார்த்த நிலை வெளிச்சத்திற்கு வருகிறது. நபி(ஸல்) அவர்களின் அருமை மனைவி ஆயிஷா(ரழி) அவர்கள் நபி(ஸல்) அவர்களின் இறப்பிற்குப் பின் நீண்ட காலம் வாழ்ந்துள்ளனர். நான்காவது கலீஃபா அலீ(ரழி) அவர்களை எதிர்த்துப் போரிட்டது ஜமல் யுத்தம் என்ற பெயரால் மிகவும் பிரசித்திப் பெற்றதாகும்.
புகாரீ 2009வது ஹதீஃத் அபூபக்கர் (ரழி) அவர் களது ஆட்சி காலத்திலும், உமர்(ரழி) அவர்களது ஆட்சியின் ஆரம்ப காலத்திலும் மக்கள் தனித்தனி யாக பின்னிரவில் ரமழான் இரவுத் தொழுகையை தொழுது வந்தார்கள் என்பதை உறுதிப்படுத்து கிறது. உமர்(ரழி) அவர்களது ஆட்சியின் பிந்திய காலத்தில்தான் 8+3=11க்கும் மேலாக அதிகப்படுத்தியும், இஷாவுக்குப் பின்னர் முன்னிரவில் தொழக் கூடிய பித்அத்தான நிலையும் ஏற்பட்டுள்ளது.
இதை அக்காலத்தில் வாழ்ந்த ஆயிஷா(ரழி) அவர்கள் “”நபி(ஸல்) அவர்கள் ரமழானிலும் ரமழான் அல்லாத மாதங்களிலும் 8+3=11 ரகாஅத்து களுக்கு அதிகமாகத் தொழுததே இல்லை என்ற புகாரீ 2013 ஹதீஃதும், உமர்(ரழி) அவர்கள், தமது ஆட்சியின் பிந்திய காலத்தில் இஷாவுக்குப் பின்னர் மக்கள் தனித்தனியா ரகாஅத்துகளை அதிகப் படுத்திச் சிறுசிறு ஜமாஅத்துகளாகவும், தனித் தனியாகவும் தொழுது கொண்டிருந்ததைப் பார்த்து அவர்களை ஒரே இமாம் உபைபின்கஃப்(ரழி) பின்னால் ஜமாஅத்தாக தொழத் திரட்டினார்கள். ஆயினும் இச்செயல் “”நிஃமல் பித்ஆ” என்ற புகாரீ 2010 ஹதீஃதும் உறுதிப்படுத்துகிறது. மேலும் உமர்(ரழி) அவர்கள் உபைபின்கஃப்(ரழி) அவர்களுக்கு 8+3=11 ரகாஅத்துகள் தொழுவிக்கும்படி கட்டளை யிட்ட ஆதாரபூர்வமான செய்தி இமாம் மாலிக் (ரஹ்) அவர்களின் முஅத்தாவில் பதிவாகியுள்ளது.
இவை அனைத்தும் நபி(ஸல்) அவர்களின் இறப்புக்குப் பின்னர் பல ஆண்டுகள் கழித்தே பித்அத்தாக முஸ்லிம்களிடையே 23 ரகாஅத்துகளும், இஷாவுக்குப் பின் முன்னிரவில் தொழுவதும் சுய நலத்துடன் கற்பனைச் செய்யப்பட்டுள்ளன என்பதை உறுதிப்படுத்துகின்றன. நாமும் 1986ல் ரமழான் இரவுத் தொழுகை பற்றி ஆய்வு செய்யும் போது, ரகாஅத்துகள் 8+3=11 மட்டுமே. 20+3=23 ரகாஅத்துகள் பித்அத்-வழிகேடு என்ற உறுதியான நிலைபாட்டை எடுத்தாலும், புகாரீ 2012 ஹதீஃத் அறிவிக்கும். “”இது உங்கள் மீது கடமையாக்கப்பட்டு அதை உங்களால் நிறைவேற்ற இயலாமல் போய்விடும் என்று நான் அஞ்சினேன்” என்று நபி (ஸல்) கூறியுள்ள அடிப்படையிலும், உமர்(ரழி) அவர்கள் தனித்தனியாகவும், சிறு சிறு ஜமாஅத்தாகவும் மக்கள் இஷாவுக்குப் பின்னர் முன்னிரவில் தொழுது கொண்டிருந்ததை ஒரே ஜமாஅத்தாக ஆக்கி அதை “”நிஃமல்பித்ஆ” என்று கூறியதும், ஆயினும் இப்போது முன்னிரவில் தொழுவதை விட, உறங்கிவிட்டுப் பின்னிரவில் தொழுவதே சிறந்ததாகும் என்று புகாரீ 2010ல் உமர்(ரழி) அவர்கள் கூறியுள்ள அடிப்படையிலும், இஷாவிற்குப் பின் ரமழான் இரவுத் தொழுகையை தொழுவதை நாமும் 1986ல் சரிகண்டோம்.
ஆனால் புகாரீயில் ரமழான் இரவுத் தொழுகை பாடத்தில் இடம் பெறாமல் புகாரி முதல் பாகம் தொழுகை நேரங்களை அடுத்து இடம் பெறும் அதான்-பாங்கு பாடத்தில் 731வது ஹதீஃதாக இடம் பெற்றுள்ள செய்தி எம்மைச் சிந்திக்கத் தூண்டியது. அதன் இறுதிப்பகுதி வருமாறு: “”உங்களது நடவடிக்கையை நான் கண்டறிந்தேன். மக்களே! (கூடுதலான தொழுகைகளை) உங்கள் வீடுகளிலேயே தொழுது கொள்ளுங்கள். ஒரு மனிதர் தமது வீட்டில் தொழும் தொழுகையே தொழுகைகளில் சிறந்ததாகும். ஆனால் கடமையாக்கப்பட்டத் தொழுகையைத் தவிர” என்று நபி (ஸல்) கூறினார்கள். இந்த ஹதீஃத் இரு அறிவிப்பாளர்கள் தொடர்களில் வந்துள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. அதே சமயம் “”இது உங்கள் மீது கடமையாக்கப்பட்டு, அதை உங்களால் நிறை வேற்ற இயலாமல் போய் விடுமோ என்று நான் அஞ்சினேன்” என்று நபி(ஸல்) சொன்னது புகாரீ 2012ல் இடம் பெற்றிருந்தாலும் இச்செய்தி இரு அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளதாகக் குறிப்பிடப்படவில்லை. எனவே புகாரீ 731வது ஹதீஃதையே நாம் வலுவான ஆதாரமாகக் கொள்ளக் கடமைப்பட்டுள்ளோம்.
புகாரீ(ரஹ்) எந்த குர்ஆன், ஹதீஃத் ஆதார அடிப்படையில் ரமழான் இரவுத் தொழுகையை “”தராவீஹ்” என்ற தலைப்பில் கொண்டு வந்தார்கள் என்பதும், ரமழான் இரவுத் தொழுகை பற்றிய முக்கிய அறிவிப்பை அந்த பாடத்தில் கொண்டு வராமல், பாங்குடைய பாடத்தில் கொண்டு வந்தார்கள் என்பதும் எம்மால் புரிந்து கொள்ள முடியவில்லை. ஒருவேளை அவர்களுடைய காலத்தில் “”தராவீஹ்” என்ற பெயரும், இஷாவுக்குப் பின் முன்னிரவில் அதை 23 ரகாஅத்துகளாக தொழும் நிலையும் முஸ்லிம்களிடையே வேரூன்றிப் போயிருந்தது அதற்குக் காரணமாக இருக்கலாம்.
அடுத்து உமர்(ரழி) அவர்களே இஷாவுக்குப் பின் அத்தொழுகையை மக்கள் தொழுவதைச் சரி கண்டு, அவர்கள் அனைவரையும் ஒரே ஜமாஅத் தாக ஒரே இமாமுக்குப் பின்னால் தொழ ஏற்பாடு செய்திருக்கிறார்கள் என்றால் அது பித்அத்தா-வழி கேடா-அவர்கள் நரகவாதியா என்று அடுக்கி முஸ்லிம்களைத் திசை திருப்பி எம்மீதுக் கோபப் பட வைத்து அவர்களின் புரோகிதத் தொழிலை நிலைநாட்ட முற்படுவார்கள். உண்மை இதுதான். இவர்கள் உமர்(ரழி) அவர்களை 2:186, 7:3, 33:36 வசனங்களை நிராகரித்து தக்லீது செய்வது போல், உமர்(ரழி) யாரையும் தக்லீது செய்யவில்லை. சுயமாகச் சிந்தித்து முடிவு செய்து நடைமுறைப் படுத்தினார்கள். எனவே அல்லாஹ் அவர்களை குற்றம் பிடிக்க மாட்டான். அவர்களது முயற்சிக்கு நிச்சயம் ஒரு கூலி உண்டு. மேலும் புகாரீ 731வது ஹதீஃத் கூறும் செய்தி அவர்களுக்கு கிடைக்காமலும் இருக்கலாம். வாய்ப்புண்டு.
மேலும் முஸ்லிம்கள் ஒரு முக்கிய எச்சரிக்கையை நிச்சயம் கவனத்தில் கொள்ள வேண்டும். ஆதத்தின் சந்ததிகளில் எவருமே அவர்கள் நபிமார்களாக, கலீஃபாக்களாக, நபி தோழர்களாக, இமாம்களாக, அவுலியாக்களாக, அறிஞர்களாக இருந்தாலும் தவறுக்கு அப்பாற்பட்டவர்களாக இல்லை. தவறே செய்யாத தனித்தன்மை அல்லாஹ்வுக்கு மட்டுமே சொந்தமாகும். இந்த தனிச் சிறப்பை அல்லாஹ் அல்லாத யாருக்குக் கொடுத்தாலும் அவர்கள் 9:31 வசனம் கூறுவது போல் அவர்களை வணங்குகிறார்கள், கொடிய முஷ்ரிக் ஆகிறார்கள். எச்சரிக்கை! நபிமார்கள் அல்லாஹ்வுடன் வஹியின் தொடர்புடனும், அவனது கண்காணிப்பிலும் (52:48) இருந்ததால் அவர்களின் தவறுகள் உடனுக்குடன் திருத்தப்பட்டு நேர்வழியை மட்டுமே போதித்தார்கள்.
மேலும் தாங்கள் நம்பும் சில மவ்லவிகளின் பேச்சை மட்டும் தான் கேட்கவேண்டும். அவர்களது பத்திரிகைகளை மட்டும்தான் பார்க்க வேண்டும், மற்றவர்களின் பேச்சைக் கேட்கக் கூடாது, அவர்களது பத்திரிக்கைகளைப் பார்க்கக் கூடாது என்று தடுப்பவர்கள் தாஃகூத்கள் என்ற மனித ஷைத்தான்களாகும். அவர்களின் இத்தவறான உப தேசத்தை அப்படியே கண்மூடி ஏற்று அதன்படி நடப்பவர்கள் அவர்களை வணங்கும் முஷ்ரிக்கள். அப்படி அவர்களை வணங்குவதை விட்டும் விடுபட்டு எவரது பேச்சாக இருந்தாலும், எழுத்தாக இருந்தாலும் அதைக் கேட்டு, பார்த்து அதிலுள்ள நல்லதை அதாவது குர்ஆன், ஹதீஃத் படி உள்ளதை எடுத்து நடப்பவர்களே அறிவாளிகள், நேர்வழி பெற்றவர்கள், அல்லாஹ்வின் நன்மாராயம் பெற்றவர்கள் என்று குர்ஆன் 39:17,18 வசனங்கள் கூறுவதைப் பல முறைப் படித்து அதை உள் வாங்கி அதன்படி நடப்பவர்களே பாக்கியசாலிகள், சுவர்க்கத்திற்குச் சொந்தக்காரர்கள். ஆயினும் அவர்கள் மிக, மிகச் சொற்பமாகவே இருப்பார்கள். (பார்க்க: 32:13, 11:118,119)
எனவே உமர்(ரழி) அவர்கள் பித்அத்வாதியா? நரகவாதியா? என்று கேட்டு மக்களை வழிகேட்டில் இட்டுச்செல்கிறவர்கள் பெரும் பாவிகளாக மட்டுமே இருக்க முடியும். நபி(ஸல்) அவர்களின் வழிகாட்டல் புகாரீ 731வது ஹதீஃதில் தெள்ளத் தெளிவாக நேரடியாக இருக்கும் நிலையில் அதை நிராகரித்து விட்டு, உமர்(ரழி) அவர்கள் நடை முறைப்படுத்தினார்கள் என்பதைக் காரணம் காட்டி ரமழானில் இஷாவுக்குப் பின்னர் முன்னிரவில் ஜமாஅத்தாக 8+3=11 தொழுதாலும் அது நபி வழியல்ல, 20+3=23 தொழுதாலும் அது நபி வழியல்ல; இஷாவுக்குப் பின்னர் தூங்கிவிட்டு பின்னிரவில் சஹருக்கு முன்னர் எழுந்து தங்கள் வீடுகளிலேயே 8+3=11 ரகாஅத்துகள் தொழுபவர்கள் மட்டுமே புகாரீ 731 ஹதீஃத் கூறும் நபி வழியியைப் பின்பற்றி 33:21 கூறுவது போல் நேர்வழி நடப்பவர்களாகும். அதற்கு மாறாக முன்னிரவில் இஷாவுக்குப் பின்னர் 11ரகாஅத் தொழுதாலும், 23 ரகாஅத் தொழுதாலும் 33:36 இறைவாக்குக் கூறுவது போல் வேறு அபிப்பிராயம் கொண்டு பகிரங்க வழிகேட்டில் செல்பவர்களே என்பது எமது கூற்றல்ல. இறுதி நபியின் எச்சரிக்கையாகும்.
————————————————————-
ஐயம்: ரமழான் நோன்பு ஆரம்பிப்பதற்கு சில தினங்களுக்கு முன் தங்களிடம் தொலைபேசியில் சகோதரர் ஒருவர் தாங்கள் எந்த அடிப்படையில் நோன்பு வைக்கிறீர்கள் என்று கேட்டதாகவும் அதற்கு தாங்கள் சவுதி தலைப்பிறையை வைத்து நோன்பு வைக்கிறோம் என்று பதில் சொன்னதாகவும் கூறுகிறார். தாங்கள் இவ்வாறு பதிலளித்தது உண்மையா? உண்மை என்றால் கணக்கீட்டு முறையை பின்பற்றிக் கொண்டு சவுதியை ஆதாரமாகக் காட்டியது ஏன்? M.Kமுஸ்தஃபா, ஈரோடு.
தெளிவு: நிச்சயமாக நாம் அப்படி கூறி இருக்க முடியவே முடியாது. ஒன்று அவர் நம்மீது அப்பட்ட மான பொய்யை அவதூறாகக் கூறி இருக்கலாம். அல்லது நாம் சொன்னதைத் தவறாகப் புரிந்து கொண்டு அப்படிக் கூறி இருக்கலாம். சவுதி அரசு நாள் அதிகாலை(பஜ்ர்)யில் ஆரம்பிக்கிறது என்ற குர்ஆன் கூறும் கருத்துக்கு மாறாக, யூதக் கலாச்சாரத்தைப்பின்பற்றி நாள் மஃறிபில் ஆரம்பிக்கிறது என்ற மூடக் கொள்கையில் இருக்கிறது. அதனால் ஒவ்வொரு சந்திர மாதமும் சங்கமம் (Conjunction) ஏற்படுவது சவுதிக்குக் கிழக்கில் நிகழ்ந்தால் அடுத்த நாளை முதல் பிறையாகக் கொள்வார்கள். சங்கமம் (Conjunction) மேற்கே சவுதியைத் தாண்டி இடம் பெற்றால் அடுத்த நாளுக்கு அடுத்த நாளை முதல் பிறையாகக் கொள்வார்கள்.
அந்த அடிப்படையில் ஷஃபான் மாத முடிவில் ஏற்பட்ட சங்கமம் (Conjunction) சவுதி சர்வதேச நேரம் 9 ஆக இருக்கும் நிலையில் சவுதிக்குக் கிழக்கே சர்வதேச நேரம் 7.15க்கு இடம் பெற்றது. எனவே சவுதி வழக்கப்படி சரியான நாளில் நோன்பை ஆரம்பித்துவிடுவார்கள் என்று நாம் சொல்லியதைத் தவறாகப் புரிந்து கொண்டு நாம் சவுதி தலைப்பிறையை வைத்து நோன்பு வைக்கிறோம் என்று பதில் சொன்னதாக அவர் சொல்லி இருக்கலாம்.
ஆனால் சவுதியின் வழமையான நடைமுறைக்கு மாறாக யாருடைய நிர்பந்தம் காரணமாகவோ ஜூலை9ல் ஆரம்பிக்க வேண்டிய நோன்பை ஜூலை 10ல் ஆரம்பித்தது. இது சவுதியில் பெரும் பிரச்சனையையும் குழப்பத்தையும் ஏற்படுத்தியது. ரமழான் நோன்பை 28 நாட்களுடன் ஆகஸ்டு 6 செவ்வாயுடன் முடித்துக் கொண்டு, ஆக்ஸ்டு 7 புதன் அன்று பெருநாள் கொண்டாடி விட்டுப் பின்னர் ஒரு நோன்பை கழா செய்யலாம் என்றெல்லாம் அங்கு விவகாரம் முற்றியது. பின்னர் சிலரின் நிர்ப்பந்தம் காரணமாக நோன்பு நோற்பது ஹராமான ஷவ்வால் பிறை ஒன்றில் மக்களை நோன்பு நோற்க வைத்து ஷவ்வால் 2ல் ஈத் கொண்டாடினார்கள். இந்த விவகாரங்கள் அனைத்தும் சவுதியிலிருக்கும் அனைவரும் அறிந்த எதார்த்த உண்மையாகும். சவுதியின் நடைமுறைப்படி 1434 ரமழானை சரியான நாளில் ஆரம்பிப்பார்கள் என்று நாம் சொன்னதை நீங்கள் கூறும் அவர் தவறாகப் புரிந்து கொண்டு நாம் சவுதியைப் பின்பற்றுவதாக தவறாகவோ அல்லது பொய்யாகவோ கூறி இருக்கலாம். இதுவே உண்மை நிலை.