ஐயமும்! தெளிவும்!!

in 2014 ஜனவரி,ஐயமும்! தெளிவும்!!

ஐயம் : விரலசைத்தல் பற்றி சர்ச்சையாக இருக்கும் பட்சத்தில் மக்கள் எதை தேர்ந்தெடுப்பது?
M.F முன்ஷிசந்தா, பி.ஏ., பாண்டிச்சேரி

தெளிவு : மக்களிடையே கருத்து வேறுபாடு வந்து விட்டால் எப்படிச் செயல்படுவது என்பதற்கு 4:59 அல்குர் ஆன் வசனம் தெளிவான வழிகாட்டலைக் கூறுகிறது. அவரவர் அபிப்பிராயத்தை விட்டு குர்ஆன், ஹதீஃத் பக்கம் மீண்டுவிட வேண்டும். “”சந்தேகமானதை தொடர வேண்டாம்” என்ற 17:36 அல்குர்ஆன் வசனமும் “”சந்தேகமானதை விட்டு சந்தேகமற்றதின்பால் சென்று விடு” என்ற புகாரியில் காணப்படும் ஹதீஃதும் தெளிவு படுத்தியுள்ளபடி முஸ்லிம்கள் செயல்பட முன்வந்தால் கருத்து வேறுபாட்டிற்கு முற்றுப்புள்ளி வைத்து விடலாம்.

இப்போது விரலசைத்தல் பற்றிய சர்ச்சையை எடுத்துக் கொள்வோம். விரலசைப்பது பற்றிய ஹதீஃத்கள் அனைத்திலும் (“”யுரஹ்ரிக்குஹா யதுவூபிஹா”) ஆஸிம் பின் குலைப் இடம் பெறுகிறார். அவரைப் பற்றிய சந்தேகம் கிளப்பப்பட்டுள்ளது. அதே சமயம் சமிக்கை(இஷாரா) செய்வது பற்றிய ஹதீஃத்கள் அனைத்தும் மேற்படி ஹதீஃதை விட தரம் வாய்ந்ததாகக் காணப்படுகின்றன. சமிக்கை என்றால் நீட்டுவதா, அசைப்பதா என்பதற்கு விளக்கமாக கிப்லாவை நோக்கி சமிக்கை அதாவது நீட்டுதல் என்பதை நஸாயீயில் காணப்படும் 1148வது ஹதீஃத் உறுத்திப்படுத்துகிறது.

மேலும் இந்த 1148 நஸாயீ செய்தி விரலசைப்பது ஷைத்தானின் செயல் எனத் தெளிவு படுத்துகிறது. இன்று தவ்ஹீத்வாதிகள் எனப் பெருமை பேசுபவர்கள் வேகமாக விரலசைத்து ஷைத்தானைப் போல் பக்கத்திலுள்ள தொழுகையாளிகளின் தொழுகையைப் பாழ்படுத்துவதை அனுபவத்தில் பார்க்கத்தானே செய்கிறோம்.

எனவே விரலைப்பது பற்றிய ஹதீஃத் தரம் தாழ்ந்தும், விரலை நீட்டுவது பற்றிய ஹதீஃத் தரத்தில் உயர்ந்தும் காணப்படுவதால் விரலை நீட்டுவதைப் பற்றியுள்ள ஹதீஃதை பற்றிப் பிடித்துச் சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைப்பதே சாலச் சிறந்தது. இதுவே குர்ஆன், ஹதீஃத் காட்டும் வழியாகும்.

………………………………………………….

ஐயம்: அத்தஹியாத் இருப்பில் விரலை நீட்டவும் செய்யலாம் என எழுதியிருந்தீர்கள். ஆனால் பல ஹதீஃத்களில் நபி(ஸல்) அவர்களின் பார்வை இஷாராவை கடக்காது என்று வந்துள்ளதே. இது தொழுகை முடியும் வரை இஷாரா நடைபெற்றுக் கொண்டு இருந்தது என்பதைத் தானே குறிக்கிறது. விளக்கம் தாருங்கள்.
ய.முஹம்மது உவைஸ், சென்னை

தெளிவு : விரலை அசைப்பதைவிட விரலை கிப்லாவை நோக்கி நீட்டுவதே குர்ஆன், ஹதீஃதுக்கு நெருக்க மானது. இருப்பில் உட்கார்ந்ததிலிருந்து தொழுகை முடியும் வரை இஷாரா அதாவது கிப்லாவை நோக்கி நீட்டிக் கொண்டிருப்பது தொடர்ந்து இருந்தது என்று விளங்கிக் கொண்டால் சந்தேகம் தீர்ந்து விடும். மேலுள்ள விளக்கத்தையும் பார்க்கவும்.
………………………………………………………..

ஐயம்: வீடு போக்கியதற்கு வாங்கி குடியிருக்க இஸ்லாத்தில் அனுமதி உண்டா? விளக்கவும்.
M. ஜஹாங்கீர், Msc., திருவிடைமருதூர்.

தெளிவு: இஸ்லாமிய முறைப்படி எப்பொருளையும் ஒத்திக்கு வாங்குவதே கூடாது என்றிருக்கும்போது, அதைப் பிறருக்கு வாடகைக்கு விடுவதும் கூடாது. தாமே அதில் குடியிருப்பது என்பதும் கூடாத ஒன்றாகும். பிறர் வீட்டில் குடியிருப்பவர் அந்த வீட்டாருக்கு வாடகை செலுத்தக் கடமைப்பட்டிருக்கும்போது, வீட்டுக்கு வாடகையில்லை. கொடுத்த பணத்துக்கு வட்டியில்லை என்று கூறி விடுவதால் அது வட்டியாகாது என்று கருதுவது தவறாகும்.

“”முமின்களே! உங்களில் ஒருவருக்கொருவர் பொருந்திக் கொள்ளும் முறையில் உள்ள வியாபார முறை அல்லாமல், ஒருவர் மற்றொருவரின் பொருட்களை தவறான முறையில் உண்ணாதீர்கள்!” (அல்குர்ஆன் : 4:29)

“எவரேனும் (அல்லாஹ்வின்) வரம்பை மீறி அநியாய மாக இவ்வாறு செய்தால்” விரைவாகவே அவரை நாம் (நரக) நெருப்பில் நுழையச் செய்வோம்”. (அல்குர்ஆன் : 4:30)

மேற்காணும் வசனங்கள் மார்க்கச் சட்டத்திற்குப் புறம்பாக கொடுக்கல், வாங்கல் செய்வதைத் தடை செய்வதோடு, அத்துமீறி நடப்போருக்கு நரக வேதனை உண்டு என்பதனையும் எச்சரிக்கை செய்கின்றன.
……………………………………………………….

ஐயம் : கழிவரையில் மலம் கழிக்கும் ஒருவர் தும்மி விட்டால் அவர் அல்ஹம்துலில்லாஹ் என்று சொல்லலாமா கூடாதா? அப்துல் காதர் உனைசா, K.S.A.

தெளிவு : மலஜலம் கழிக்கும் போது எந்த திக்ருகளையும் சொல்லக் கூடாது. இரண்டு நபர்கள் மலஜலம் கழித்தல் போது பேசிக் கொண்டிருப்பதையே அல்லாஹ் வெறுக்கிறான் என்பது நபிமொழி. (அஹ்மத், அபூதாவூத், இப்னுமாஜா) உலகப் பேச்சுக்களையே பேசக்கூடாது என்னும் போது திக்ருகள் செய்யலாகாது என்பதை எவரும் உணரலாம். மேலும் மலஜலம் கழிக்கும்போது ஸலாம் சொல்லவும் கூடாது. யாரேனும் ஸலாம் சொன்னால் அந்த நேரத்தில் அதற்குப் பதில் சொல்லவும் கூடாது. “”நபி(ஸல்) அவர்கள் சிறுநீர் கழிக்கும்போது ஒருவர் ஸலாம் கூறினார். நபி(ஸல்) அவர்கள் அதற்குப் பதில் கூறவில்லை” என்ற ஹதீஃத் இப்னு உமர்(ரழி) அவர் களால் அறிவிக்கப்பட்டு “”நஸாயீ” யில் இடம் பெற்றுள்ளது.

…………………………………………………….

ஐயம்: யார் ஒருவன் தாயத்து போடுகிறானோ அவன் அல்லாஹ்வுக்கு இணை வைத்து விட்டான் என்று ஹதீஃத் உள்ளதே. இந்த ஹதீஃத் பொதுவாக உள்ளதால் குர்ஆன் வசனம் எழுதப்பெற்ற தாயத்தும் இந்த ஹதீஃதில் அடங்குமா? உபைதுல்லாஹ், குவைத்.

தெளிவு: எவன் “”தாயத்தை” தொங்கவிட்டுக் கொள்கின்றானோ அவன் அல்லாஹ்வுக்கு இணை வைத்து விட்டான் என்றெல்லாம் எச்சரிக்கும் பல நபிமொழிகள் அஹ்மத், நஸயீ, திர்மிதீ போன்ற நூல்களில் உள்ளன. நபி(ஸல்) அவர்கள் குர்ஆன் வசனங்களை எழுதி தாயத்துக்களாக அணிந்து கொண்ட சான்றும் இல்லை. எனவே எந்த தாயத்துகளாக இருந்தாலும் மேற்படி ஹதீஃதுக்கு உட்பட்டவையே.

………………………………………………….

ஐயம் : வெங்காயம், பூண்டு இவற்றைப் பச்சையாகச் சாப்பிட்டால் மக்ரூஹ் என்று சொல்கிறார்கள். ஷரீஅத் சட்டம் இதுபற்றி என்ன சொல்கிறது. P.M.நாகூர் மீரான், பத்ராவதி

தெளிவு : ஒருவர் நாற்றமடிக்கக்கூடிய இச்செடிகளிலிருந்து உற்பத்தியாகும் வெங்காயம், பூண்டு முதலியவற்றைச் சாப்பிட்டால் நமது பள்ளியை நெருங்க வேண்டாம். (ஏனெனில்) மனிதர்கள் எதனால் தொல்லையடைகிறார்களோ அதனால் மலக்குகளும் தொல்லையடைகின்றனர். அறிவிப்பவர் : ஜாபிர்(ரழி) நூல்:புகாரி, முஸ்லிம்.

வெங்காயம், பூண்டு போன்றவற்றைப் பச்சையாகச் சாப்பிட்டு விட்டு சரியாக பல் துலக்காமல் வாயை சுத்தம் செய்யாமல் பள்ளிக்கு வரக்கூடாது என்று மேற்கண்ட ஹதீஃத் மூலம் தெளிவாகிறது.
…………………………………………………….

ஐயம்: கணவரின் பெயரை மனைவி கூறுவது சரியா? தவறாகுமா? கூறத் தடை உண்டா? A,.முஹம்மத் ஷஹீத், UAE

தெளிவு : ஒருமுறை ரசூல்(ஸல்) அவர்கள் தம் மனைவி ஆயிஷா(ரழி) அவர்களிடம், ஆயிஷாவே நீ என்மீது சந்தோஷ உள்ளத்துடன், அல்லது சினமான உள்ளத்துடன் இருப்பதை நான் நன்கு அறிந்து கொள்வேன் என்றார்கள். அதற்கு ஆயிஷா(ரழி) அவர்கள் எப்படி அறிவீர்கள் என வினவ, அதற்கு நபியவர்கள்.
ஆயிஷாவே நீ பேசும்பொழுது சில சமயம் “”முஹம்மதின் ரப்பின் மீது சத்தியமாக” என்று கூறினால் அன்பு உள்ளத்துடன் நீ இருப்பதாகவும், “”இப்ராஹீமின் ரப்பின் மீது சத்தியமாக” என கூறினால் நீ நல்ல மன நிலையில் இல்லை என்றும் கணித்துக் கொள்வேன் என்றார்கள்.

அன்னை ஆயிஷா(ரழி) அவர்கள் நபியவர்களைப் பார்த்து, “”யா ரசூலல்லாஹ், நான் இப்றாஹீமின் ரப்பின் மீத ஆணையாக என்று கூறியது உங்கள் மீது சினங் கொண்ட மனநிலையில், தங்களின் பெயரைச் சொல்வதைத் தான் தவிர்த்துக் கொண்டேயன்றி, உங்களை வெறுக்கவில்லை” என்றார்கள்.
அறிவிப்பவர் : அன்னை ஆயிஷா(ரழி), ஆதார நூல்: புகாரி, முஸ்லிம்.

அன்னை ஆயிஷா(ரழி) அவர்கள் கணவரின் பெயரைக் கூறியிருக்கிறார்கள். நபியவர்களும் தடுக்கவில்லை. எனவே பெண்கள் பிறருக்குத் தகவல் தெரிவிக்கவோ, இன்னாருடைய மனைவி என்பதை விளக்கக் கணவரின் பெயரைக் கூறுவதோ தவறாகி விடாது.
…………………………………………

ஐயம் : பள்ளிகளில் ஜுமுஆ தொழுகை முடிந்த பிறகு தான் வீட்டில் இருப்பவர்கள் லுஹர் தொழ வேண்டுமா?
நிஸா, தொண்டி.

தெளிவு : அல்குர்ஆனில் ஜுமுஆ தினத்தன்று தொழுகைக்கு அழைப்பு விடுத்து பாங்கு சொல்லப்படுமானால், உங்கள் வியாபாரங்களை விட்டு விட்டு அல்லாஹ்வை தியானிக்க (பள்ளிக்கு) விரைந்து செல்லுங்கள். நீங்கள் (அதன் பலன்களை) புரிந்தவர்களாயிருப்பின் அதுவே உங்களுக்கு மேலானதாயிருக்கும். (62:9)

என்று அல்லாஹ் ஜுமுஆ தினத்தன்று பள்ளிக்கு வந்து தொழுவதை வலியுறுத்திச் சொல்லியிருக்கும் பொழுது ஒருவர் வீட்டில் லுஹர் தொழுவதென்றால் உடல் நலக் குறைவு அல்லது அதுபோன்ற சரியான முகாந்திர மில்லாது ஆண்கள் லுஹர் தொழுவது கூடாது. அவ்வாறு முகாந்தரமிருந்து வீட்டில் தொழும் ஆண்களும், பொதுவாகப் பெண்களும் ஜுமுஆ முடிந்துவிட்டதா? இல்லையா? என்பதை எதிர்பார்க்க வேண்டியதேயில்லை. அவ்வாறு எதிர்பார்த்துத் தொழ வேண்டும் என்று கூறுவதற்கு ஹதீஃத்களில் எதுவும் ஆதாரமிருப் பதாகத் தெரியவில்லை.
……………………………………………….

ஐயம் : மாதவிடாய் காலத்தில் விடுபடும் நோன்பை பின்னர் கழா செய்ய வேண்டுமா? நிஸா, தொண்டி.

தெளிவு : ஆம், கழா செய்ய வேண்டும். மாத விடாய்க் காலம் போன்றே பேறுகாலத்திலும் விடுபட்ட நோன்பு களைக் கழா செய்தே தீர வேண்டும்.
அறிவிப்பவர் : அன்னை ஆயிஷா (ரழி)

நாங்கள் நபி(ஸல்) அவர்களின் காலத்தில் மாதவிடாய் உள்ளவர்களாயிருந்தோம். அப்பொழுது நாங்கள் நோன்பைக் கழா செய்ய வேண்டுமென்று எங்களுக்கு ஏவப்பட்டது. ஆனால் தொழுகையை கழா செய்ய வேண்டுமென நாங்கள் ஏவப்படவில்லை.
அறிவிப்பவர்: அன்னை ஆயிஷா(ரழி) நூல் : புகாரி,முஸ்லிம்
………………………………………………..

ஐயம் : ரமழான் மாதத்தில் மாதவிடாய் ஏற்படாமலிருக்க ஏதேனும் மாத்திரைகள் சாப்பிட்டு விட்டு நோன்பு வைக்கலாமா? அபூ நஃபீல், தேங்காய்பட்டினம்.

தெளிவு : படைத்த அல்லாஹ்வே பெண்கள் நிலையை அறிந்து அவர்களுக்கு மாதவிடாய் போன்ற காலங்களில் நோன்பை விடுவதற்கு சலுகை தந்திருக்கும் பொழுது அதை ஏற்றுக் கொள்ளாது மாத்திரை மருந்துகள் சாப்பிட்டு உடல் நலனைக் கெடுத்து, இவ்வளவு சிரமங்களுக்கு மத்தியில் நோன்பு வைக்க வேண்டிய தேவை என்ன இருக்கிறது? பொதுவாகவே மாத்திரை மருந்துகளால் உடல் நலம் பாதிக்கப்படுவது உறுதி என்பதைத் தெளிவாக மக்கள் புரிந்து பாதுகாப்போடு செயல்படும் இக்காலத்தில், உங்கள் கேள்வியே பெரும் வியப்பை அளிக்கிறது.

நபி(ஸல்) அவர்கள் “”மார்க்கம் மிகவும் எளி தானது அதைச் சிரமமானதாக ஆக்கிவிடாதீர்கள்” என்று கூறியிருக்கும்பொழுது இதெல்லாம் தேவைதானா? வல்ல நாயன் “”உங்கள் கைகளாலேயே உங்களை அழிவின் பக்கம் கொண்டு செல்லாதீர்கள், மேலும் நல்லவற்றைச் செய்யுங்கள். நிச்சயமாக அல்லாஹ் நன்மை செய்வோரை நேசிக்கிறான்” 2:195 என்று கூறி யிருக்கும் போதனைகளை அடிப்படையாகக் கொண்டு மருந்து மாத்திரைகள் சாப்பிட்டு உடல் நலத்தைக் கெடுக்க முற்படுவது சரியில்லை என்பதை உணரலாம்.

………………………………………

ஐயம்: கணவன் மரணமாகி விட்டால் மனைவி எத்தனை நாள் இத்தா இருக்க வேண்டும்? இத்தாவை இருட்டு அறையில்தான் கழிக்க வேண்டுமா? ஆண்களைப் பார்த்தல் கூடாதா? வசதி படைத்தோர் நீண்ட நாட்களும், வசதியற்றோர் 40 நாட்களும் இத்தாவில் இருப்பதை மார்க்கம் அனுமதிக்கிறதா? இப்படி ஏதும் விதி விலக்குகள் உண்டா? விளக்கம் வேண்டுகிறேன். அஷ்ரப் அலி, நிரவி.

தெளிவு : உங்களில் எவரேனும் மனைவியரை விட்டு மரணித்தால், அம்மனைவியர் நான்கு மாதம், பத்து நாட்கள் இத்தா இருக்க வேண்டும். (பொறுத்திருக்க வேண்டும்) அவர்களின் இத்தவணை பூத்தியான பின்பு அவர்கள் (தங்கள் வசதிக்கேற்ப) அவர்கள் காரியத்தில் (பிறரை திருமணம் செய்து கொள்வது போன்ற) சிறந்த முறையில் எதுவும் செய்து கொள்வதில் உங்கள் மீது குற்றமில்லை. இறைவன் நீங்கள் செய்வதை நன்கறிந்த வனாகவே இருக்கிறான். (2:234)

“”அல்லாஹ்வையும், மறுமையையும் நம்பும் எந்தப் பெண்ணும் தனது கணவர் நீங்கலாக வேறு எந்த இறப்புகளுக்காகவும் மூன்று நாட்களுக்கு அதிகமாக துக்கம் அனுஷ்டிப்பது ஆகுமானதல்ல. ஆனால் தனது கணவரின் மரணத்திற்காக நான்கு மாதம் பத்து நாட்கள் துக்கம் அனுஷ்டித்தேயாக வேண்டும்.
உம்மு ஹபீபா(ரழி) ஜைனப் பின்து ஜஹ்ஷ்(ரழி) நூல்: புஹாரி, முஸ்லிம்.

குர்ஆனின், ஹதீஃதின், இவ்விளக்கங்கள் கணவன் காலமான பெண்கள் நான்கு மாதம், 10 நாட்கள் இத்தா இருக்க வேண்டியதைத் தெளிவாக வரையறுத்துக் கூறுகின்றன. இதில் வசதிபடைத்தவர், வசதியற்றவர், மேல் நாட்டவர், கீழ் நாட்டவர் என்ற பாகுபாடின்றி, ஷரீஅத்தின் சட்டத்தை அனைவரும் கடைபிடிக்க வேண்டியதுதான். இதில் எவருக்கும் விதி விலக்கு இல்லை.

இத்தா கடுமையான முறையா?
இத்தா இருத்தலை இஸ்லாம் மார்க்கம் மிக எளிதாக ஆக்கியுள்ளது. இத்தாவில் இருக்கும் பெண் இருட்டறை யில் முடங்கி இருத்தல் வேண்டும். ஆடவரைப் பார்த்தல் கூடாது, நல்ல உணவு உட்கொள்ளக் கூடாது என்ற தவறான தடைச் சட்டங்களை மனிதர்கள் உருவாக்கி இருப்பது வருத்தத்திற்குரியது. இதனாலேயே இத்தாவைச் சிலர் அனுஷ்டிக்கத் தவறுகின்றனர். எப்போதும் போலவே அந்நிய ஆண்களிடம் கோஷா முறையை பெண்கள் இத்தாவுடைய காலத்திலும் கடைப்பிடிக்க வேண்டும். மணம் முடிக்கக் கூடாதவர்களான மஹ்ரமான ஆண் களிடம் பேசவோ, பழகவோ, பார்க்கவோ எவ்வித தடையு மில்லை. இத்தா காலத்திற்கென்று விஷேச கோஷா முறை எதுவுமில்லை.

இத்தாவை அனுஷ்டிக்கும் பெண்கள் கவர்ச்சி தரும் ஆடைகளை, அணிகலன்களை அணிவதையும், வாசனைப் பொருட்களை பயன்படுத்துவதையும் தவிர்த்துக் கொள்ளவேண்டும். தேவையற்ற காரியங் களுக்காக வீட்டை விட்டு வெளியேறுவதையும் தவிர்ப்பது அவசியம். இவை பெண்களின் ஒழுக்கம் பாதுகாப்புக்கு உகந்ததாகும்.

இத்தா காலத்தில் வெளியில் செல்வது பற்றி:
இத்தாவில் இருந்த பெண்ணொருத்தி, பேரீத்த மட்டைகளை வெட்ட முயன்று வெளியில் வந்தபொழுது, ஒருவர் இத்தாவிலிருக்கும் நீங்கள் வெளியில் வருவது கூடாது என்று கூறினார். இதற்குத் தெளிவு பெற எண்ணி, (இத்தாவில் இருந்த) அப்பெண், நபி(ஸல்) அவர்களை நாடி நடந்ததைக் கூற, அதற்கு நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்.

“”பெண்மணியே நீர் சென்று உமது பேரீத்த மட்டையை வெட்டிக் கொள்ளும். அதை நீர் பிறருக்கு தானம் செய்யவோ அல்லது உமது சொந்த உபயோகத்திற்கு பயன்படுத்திக் கொள்ளவோ உதவும்” என்றார்கள்.
அறிவிப்பவர்: ஜாபிர் (ரழி) நூல்: முஸ்லிம்.

ஆகவே தேவையின்… அவசியத்தின் காரணமாக மட்டும் இத்தாவிலிருப்பவர்கள் வெளியில் செல்ல இஸ்லாம் அனுமதிக்கிறது என்பதை அறிகிறோம். கர்ப்பமுடைய பெண்களுக்கு “”இத்தா” அவர்கள் பிரசவிக்கும் வரையாகும். (65:4)
……………………………………………………………..

ஐயம் : ஆண்கள் தங்கம் அணிவது ஹராம் என 1435 ஆண்டுகளுக்கு முன்பே நபி(ஸல்) அவர்கள் கூறினார் கள். இன்று விஞ்ஞானம், “”தங்கம்” அணிவதால் ஆண் களுக்குக் குழந்தை பிறக்கச் செய்யும் செல்களின் வீரியம் குறைகிறது என்றும், பெண்கள் அணிவதால் அந்த செல் களின் வீரியம் கூடுகிறது என்றும் கண்டுபிடித்துள்ளது. அப்படியிருக்க தங்கப் பல் கட்டிக் கொள்ளலாம் என்று கூறும் உங்கள் கூற்று தவறாக எடுத்துக் கொள்ள ஏதுவாகிறதே? M. சாகுல் ஹமீது, சென்னை-4.

தெளிவு : விஞ்ஞானம் வளரக் கூடிய ஒன்றாகும். கடந்த நூற்றாண்டைப் பார்க்கிலும் இந்நூற்றாண்டில் விஞ்ஞான வளர்ச்சி அதிகம் என்பதை எல்லோரும் ஏற்றுக் கொள்வர். முற்றுப் பெறாது யுக முடிவு காலம் வரை வளர்ந்து கொண்டிருக்கும் விஞ்ஞானம் இன்னும் தங்கத்தைப் பற்றி என்னவெல்லாம் சொல்லப் போகிறதோ தெரியவில்லை. ஆனால் நமது மார்க்கம் முழுமையான முற்றுப்பெற்ற ஒன்றாகும். உதாரண மாகத் தங்கப் பல்கட்டுவதை அனுமதிக்கிறதென்றால் இவ்வனுமதி யுக முடிவு காலம் வரையிலும் ஆகுமானதே. இவ்வனுமதியை உலகம் முடியும் வரை எவராலும் மறுக்கவோ முடியாது. இது அல்லாஹ்வினால் அருளப் பட்டது. விஞ்ஞானம் மனிதர்களின் கண்டுபிடிப்பு. அது காலத்திற்கு காலம் மாறுபாடடையும் தன்மையை உடையது. மாறுபாடு அடையும் ஒன்றை என்றுமே மாறுபாடு அடையாத இஸ்லாத்துடன் இணைத்துப் பார்ப்பது முறையல்ல.
………………………………………………………..

ஐயம் : கடன் வாங்கி ஹஜ் செய்யலாம் என்று ஒரு பெரியவர் சொன்னார். இதுபற்றி மார்க்கம் என்ன கூறுகிறது? ஆயிஷா முஹமது அப்னால் பேரணாம்பட்டு.

தெளிவு : இன்னும் அதற்கு(கஃபாவுக்கு)ச் செல்வதற்குரிய பாதையில் பயணம் செய்ய சக்தி பெற்றிருக்கும் மனிதர்களுக்கு அல்லாஹ்விற்காக அவ்வீடு சென்று ஹஜ்ஜு செய்வது கடமையாகும். (அல்குர்ஆன் : 2:97)

அல்லாஹ் இத்திருவசனத்தில் ஹஜ்ஜு செய்வதற் குரிய அனைத்து வசதி வாய்ப்புகள் உள்ளவர்களுக்குத் தானே கடமை என்கிறான். கடன் வங்கி ஹஜ்ஜு செய்ய வேண்டும் எனக் கூறுவது தவறென்பது தெளிவாகப் புரிகிறதே.
………………………………………………

ஐயம்: ஜனாஸா தொழுகை-வக்து தொழுகை இதில் எதை முற்படுத்த வேண்டும்? ஹதீஃத் விளக்கம் தேவை. மு.கா.மு.ஹனீபா, சமுத்திராபட்டி (போஸ்ட்)
தெளிவு: நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். ஜனாஸாவை விரைந்து எடுத்துச் செல்லுங்கள்.அது சிறந்ததாகவிருந்தால் அதை அதனுடைய நல்ல பதவியின் பக்கம் முன்பே கொண்டு போய் சேர்க்கும் நிலை உண்டாகின்றது. அவ்வாறில்லாது (தீயதாயிருப்பின்) அத்தீய ஒன்றை உங்களின் தோளின் மேல் (அதிக நேரம்) சுமக்காது கீழே இறக்கி வைக்க ஏதுவாகிறது.
அறிவிப்பவர்: அபூஹுரைரா(ரழி) நூல்கள்: புகாரி, முஸ்லிம்.

ஸஃதுபின் முஆத்(ரழி) அவர்கள் மரணமான போது நபி(ஸல்) அவர்கள் அந்த ஜனாஸாவை வெகு துரிதமாக எடுத்துச் சென்றார்கள், அவர்களுடன் செல்லும் எங்களின் பாதரட்சைகள் அறுந்து போயின.
அறிவிப்பவர் : நாஃபி உ(ரழி) நூல் :புகாரீ.

மேற்கண்ட ஹதீஃத்களின் அடிப்படையில் வக்து தொழுகையைப் பார்க்கிலும் ஜனாஸா தொழுகையை முற்படுத்த வேண்டும் என்பதை உணரலாம்.
………………………………………………….

ஐயம்: “”இத்தா” இருக்கும் பெண்ணை “”இத்தா காலம்” முடியும் முன்பே திருமணம் செய்து கொள்ள இஸ்லாமிய சட்டத்தில் இடமுண்டா? குர்ஆன், அடிப்படையில் விளக்கம் தரு! S.பஷீர், திருநெல்வேலி

தெளிவு : அவ்வாறு திருமணம் செய்து கொள்ள அறவே இடமில்லை. காரணம், அல்லாஹ் அவ்வாறு செய்வதை பின்வருமாறு தடை செய்கிறான். “”இன்னும் (இத்தாவின்) கெடு முடியும் வரை திருமணத்தைப் பற்றி தீர்மானித்து விடாதீர்கள். அல்லாஹ் உங்கள் உள்ளங்களில் உள்ளதை நிச்சயமாக அறிகிறான் என்பதை நீங்கள் அறிந்து அவனுக்கு (இது விஷயத்தில்) அஞ்சி நடந்து கொள்ளுங்கள். (2:235)

இது விஷயத்தில் மூன்று தலாக்குகள் கொடுத்து இத்தாவிருக்கும் பெண், கணவன் இறந்து “”இத்தா” விருக்கும் பெண்ணைப் போன்றவளே.

ஒரு சமயம் பாத்திமா பின்துகைஸ் என்னும் பெண்ணை அவரது கணவர் “”அபூஅம்ரு பின் ஹப்ஸ்” என்பவர் மூன்று தலாக் சொல்லிவிட்டார். அப்போது அப்பெண்ணனை இத்தாவிருக்கும்படி நபி(ஸல்) அவர் கள் கட்டளை இட்டுவிட்டு, பின்னர் இத்தாவின் தவணை முடிந்த பிறகு தன்னிடம் சொல்லும்படி கூறியிருந்தார்கள். அப்பெண் அவ்வாறு தவணை முடிந்த பின் கூறவே, நபி(ஸல்) அவர்கள் தனது “”ஜைது” என்னும் வளர்ப்பு மகனுடைய மகன் உஸாமா(ரழி) அவர்களுக்கு அப் பெண்ணை மணம் முடித்து வைத்தார்கள்.
அறிவிப்பவர்: அபூஸலமா(ரழி) நூல்: முஸ்லிம்

மேற்கண்ட ஹதீஃதில் நபி(ஸல்) அவர்களின் காலத்தில் இத்தா முடியுமுன் நிக்காஹ் செய்து கொள்வதைத் தவிர்த்து, தவணை முடிந்த பின்னரே மணம் செய்து வைத்திருக்கிறார்கள்.
………………………………………………

ஐயம்: லைலத்துல் கத்ரை பற்றி நபி(ஸல்) அறிவிக்க வந்தபோது இருவர் சண்டைபோட்டுக்கொண்டு இருந்தார்களாம். அதனால் லைலத்துல் கத்ர் மறைக்கப்பட்டு விட்டதாம். உண்மையா? சரியான ஹதீஃதா?
S.ஜமாலுத்தீன், திண்டுக்கல்-2.

ஆம், உண்மைதான், நீங்கள் எழுதிக் கேட்டுள்ள ஹதீஃத் புகாரியில் இடம் பெற்றுள்ளது. உப்பாதா இப்னுஸாமித்(ரழி), இந்த ஹதீஃதை அறிவிக்கின்றார்கள். நபி(ஸல்) அவர்கள் லைலத்துல் கத்ர் பற்றி எங்களுக்கு அறிவிக்க வெளியே வந்தார்கள். முஸ்லிம்களில் இருவர் திட்டிப் பேசிக் கொண்டிருந்தனர். அப்போது நபி(ஸல்) அவர்கள் நான் உங்களுக்கு லைலத்துல் கத்ரைப் பற்றி அறிவிக்க வந்தேன். இன்ன மனிதரும் இன்ன மனிதரும் திட்டிப் பேசிக்கொண்டிருந்தனர். எனவே உயர்த்தப்பட்டு (மறக்கடிக்கப்பட்டு) விட்டது. அது உங்களுக்கு நலமாகவே இருக்கலாம். எனவே லைலத்துல் கத்ரை 29,27,25இல் தேடிக் கொள்ளுங்கள் என்றனர். அறிவிப்பவர்: உப்பாதா இப்னு ஸாமித்(ரழி) நூல்: புகாரி.
……………………………………………….

ஐயம்: நாம் ரமழான் நோன்புக்குப் பிறகு நோன்புப் பெருநாள் கொண்டாடுவது போன்று, ­வ்வால் மாத ஆறு நோன்புகள் நோற்ற பிறகு அதற்கு ஒரு பெருநாள் கொண்டாட வேண்டுமா? அவ்வாறு கொண்டாடுவதற்கு ஹதீஃதில் ஆதாரமுண்டா?
.M.A.S.அஹ்மது மொய்தீன், மேலப்பாளையம்

தெளிவு : இஸ்லாத்தில் ஆதாரபூர்வமாக உள்ள பெரு நட்கள் இரண்டேயாகும். 1. நோன்புப் பெருநாள், 2.ஹஜ்ஜு பெருநாள். இவை தவிர்த்துப் பாமர மக்களால் தோற்றுவிக்கப்பட்டு பெருநாள் என்று சொல்லப்படுபவை அனைத்தும் வெறு நாட்களே! இதுபோன்ற பெரு நாட்களுக்கு ஹதீஃதில் சிறிதும் ஆதாரமில்லை.

……………………………………………

ஐயம்: பாங்கு சொல்லும் முறை எந்த நபியின் காலத்தில் அமுலுக்கு வந்தது? பாங்கு சொல்வதற்கு முன் முரசு அடிக்க வேண்டுமா? முஹம்மது அலி, சார்ஜா.

தெளிவு : பாங்கு சொல்லும் முறை நமது நபி(ஸல்) அவர் களின் காலத்தில்தான் அமுலுக்கு வந்தது.
(நூல்கள்: புகாரி, முஸ்லிம்)

நபி(ஸல்) அவர்களது காலத்திலேயே தொழுகைக்காக அழைப்பு விடுப்பது எப்படி? என்று ஆலோசனை செய் யும்போது, கொம்பு ஊதுதல், மணி அடித்தல் இவை எல்லாம் பரிசீலிக்கப்பட்டு, நபி(ஸல்) அவர்களால் நிராகரிக்கப்பட்டபின் பாங்கு சொல்லும் முறை நபி(ஸல்) அவர்களால் அமுல்படுத்தப்பட்டது. நபி(ஸல்) அவர்களா லேயே நிராகரிக்கப்பட்ட இம்முறைகளை நாம் எடுத்து நடப்பது வெறுக்கத்தக்க செயலாகும். நபி(ஸல்) அவர் களால் காட்டித் தரப்படாத முரசு அடிக்கும் முறையை தவிர்த்துக் கொள்வதே சிறப்புடையதாகும்.
………………………………………………..

ஐயம்: மக்கள் உங்களைப் பைத்தியக்காரன் என்று சொல்லும் அளவிற்கு அல்லாஹ்வை சப்தமிட்டு திக்ரு செய்யுங்கள் என்று அஹ்மத் நூலில் உள்ளதே. பிறர் தொழுகைக்கு இடையூறுகள் இல்லாதவாறுதான் திக்ரு செய்யவேண்டும் என்று சிலர் கூறுகிறார்களே. எது சரி? அப்துல் காதிர், கடையநல்லூர்.

தெளிவு : தொழுகைக்கு இடையூறு ஏற்படாவண்ணம் திக்ரு செய்யவேண்டும் என்று சொல்வதுதான் சரி. ஏன்? குர்ஆன் ஓதுவதும் அவ்வாறு தான். ஆனால் “”சப்தமிட்டு திக்ரு செய்யுங்கள்” என்று வருவதாக எழுதியிருக்கிறீர்கள் அதில் அவ்வாறில்லை. இதோ நீங்கள் அஹ்மதில் இடம் பெற்றிருப்பதாகக் கூறிய ஹதீஃத், உங்களைப் பைத்தியக்காரர் என்று (மக்கள்) சொல்லும் அளவிற்கு “”அல்லாஹ்வை அதிகமாக திக்ரு செய்யுங்கள்” என்று தான் இருக்கிறது.

இந்த ஹதீஃதை ஹதீஃத் கலாவல்லுநர்கள் பலஹீனமான ஹதீஃத்களின் வரிசையில் இடம் பெறச் செய்துள்ளார்கள். காரணம் இந்த ஹதீஃதின் அறிவிப் பாளர்கள் வரிசையில் இடம் பெற்றுள்ள அபுஸ்ஸம்ஹு என்னும் தாராஜ் என்பவர் முஹத்திஸின்களால் புறக் கணிக்கப்பட்டவர் ஆவார்.
இதை குர்ஆன் அழகாகக் கூறுகின்றது. “”நீங்கள் வெற்றியடையும் பொருட்டு அல்லாஹ்வை அதிகமாக “”திக்ரு” செய்யுங்கள்.” (அல்குர்ஆன் : 62:10)

அதே சமயம் திக்ரு மனதிற்குள் பணிவோடும், அச்சத்தோடும், உரத்த சப்தமின்றியும் இருக்க வேண்டும் என்று 7:205 இறைவாக்குக் கட்டளையிடுகிறது.
…………………………………………………..

ஐயம் : எங்களூரில் “”கண்டெடுத்த சாபு” என்ற பெயரால் தர்ஹா ஒன்றிருந்தது. அதை இப்பொழுது சில “”பெரிய மனிதர்கள்” புதுப்பித்து உகாஷ்(ரழி) என்னும் ஸஹாபி அடங்கியிருப்பதாகக் கூறி பிரபல்யம் செய்து, சம்பாதிக்கத் தலைப்பட்டு விட்டார்கள். உகாஷ் பறங்கிப் பேட்டைக்கு வந்ததாக வரலாறு ஏதும் உண்டா?…
………………….. பரங்கிப்பேட்டை.

தெளிவு : “”உகாஷ்” என்ற பெயரால் எந்த ஸஹாபியின் பெயரும் இருந்ததாகத் தெரியவில்லை. ஆனால் “”உகாஷா பின் மிஹ்ஸன் (ரழி)” என்று ஒரு ஸஹாபியின் பெயர் உண்டு. அதைத்தான் “”உகாஷ்” என்று இவர்கள் கூறுவார்கள் போலும். அவர்களின் வரலாற்றைக் காணும் பொழுது இவ்வளவு நெடுந்தூரம் வந்து, அடக்க மாகியிருப்பதற்கு வாய்ப்பில்லை.

அவர்களின் வரலாறு: உகாஷா பின் மிஹ்ஸன்(ரழி) அவர்கள் சிறப்பு மிக்க ஸஹாபாக்களில் ஒருவராவார் கள். குறிப்பாக “”பத்ரு” போரிலும் அதன் பிறகு நடத்த அநேக யுத்தங்களிலும் பங்கு பெற்றுள்ளார்கள். அபூ பக்கர் (ரழி) அவர்களின் ஆட்சியின் ஆரம்ப காலத்தில் நடந்த புரட்சியின்போது “”தல்ஹா பின் குவைலித்” என்ற புரட்சிக்காரனால் வெட்டப்பட்டு, அவர்கள் தம் 45-ம் வயதில் ­ஹீதாகிவிட்டார்கள்.

ஆகவே அவர்கள் இங்கு வந்து அடக்கமாகியுள்ளார் என்று கூறுவது வெறும் பித்தலாட்டமே அன்றி வேறில்லை, இதைப் போன்றுதான் அநேக கப்ருகளின் கதைகளும் இருக்கின்றன.
……………………………………………….

ஐயம்: வீட்டில் தனியே தொழும்போது (பெண்கள்-ஆண் கள்) பாங்கு-இகாமத் சொல்லித்தான் தொழ வேண்டுமா?
அப்துல் மாலிக், திருமானூர்.

தெளிவு : பொதுவாக பாங்கு, இகாமத் சொல்லாவிட்டா லும் தொழுகை நிறைவேறிவிடும். ஆனால் பாங்கு இகாமத் வீட்டில் மட்டுமின்றி வேறு எந்த இடங்களிலும் தனியாகவோ, கூட்டாகவோ, ஆணோ பெண்ணோ தொழுதாலும் கூறுவது அவசியமே.

இதுபற்றி அஸ்மா பின்த்யஜீத்(ரழி), அப்துல்லாஹ் பின் உமர்(ரழி) இவ்விருவரின் வாயிலாக பெண்களுக்கு பாங்கும், இகாமத்தும் இல்லை என்று ஒரு அறிவிப்பைக் காணுகிறோம். அந்த ஹதீஃதின் தொடரில் இடம் பெற்றுள்ள “”உபைதுல்லாஹ்” என்பவர் முஹத்திஸீன் (ஹஸீத்கலை வல்லுனர்)களிடத்தில் நம்பகமற்றவராக கருதப்படுவதால் அவ்வறிவிப்பு பலஹீனமான ஹதீஃத் களின் தொகுப்பில் இடம் பெற்றிருக்கிறது.

ஹதீஃத் தொகுப்பாளர் அபூதாவூத்(ரஹ்) என்பவர்கள் இது குறித்து பின்வருமாறு கூறுகிறார்கள். அதாவது, நான் அஹ்மத் பின் ஹம்பல்(ரஹ்) அவர்கள் வாயிலாக கேள்விப்பட்டிருக்கிறேன்.
அவர்களிடத்தில் பெண்களுக்கு பாங்கு, இகாமத், உண்டா? என்று கேட்கப்பட்டது. அதற்கவர்கள் இவ்வாறே இப்னு உமர்(ரழி) அவர்களிடத்தில் பெண்களுக்கு பாங்கு இகாமத் உண்டா? என்று கேட்கப்பட்டது. அதற்கவர்கள் “”அல்லாஹ்வை நினைவு கூறப்படும் அந்த புனிதமான வாக்கியங்களை (எவ்வித ஆதாரமுமின்றி) நான் எவ்வாறு கூறவேண்டாம் என்று சொல்ல முடியும்? என்றார்கள்.
ஆகவே இப்னு உமர்(ரழி) அவர்களின் இக்கூற்றை ஆதாரமாகக் கொண்டு பெண்களுக்கும் பாங்கு இகாமத் உண்டு என்று கூறினார்கள். மேலும், நபி(ஸல்) அவர்கள் அபூ மஹ்தூர்(ரழி) அவர்களுக்கு பாங்கின் வாசகங்களைக் கற்றுக் கொடுத்து இவ்வாறுதான் (தொழுகை களுக்கு முன்) நீங்கள் பாங்கு சொல்லிக் கொள்ள வேண்டும் என்று ஏவினார்கள்.
அறிவிப்பவர்: அபூமஹ்தூர்(ரழி) நூல்: முஸ்லிம்.

மூன்று நபர்கள் ஒரு இடத்தில் இருந்து கொண்டு அவர்கள் பாங்கு சொல்லாமலும், தொழாமலும் இருப் பார்களேயாயின், நிச்சயமாக ஷைத்தான் அவர்கள் மீது ஆதிக்கம் பெற்று விட்டான் என்று உணர்ந்து கொள் ளுங்கள். அறிவிப்பவர்: அபூதர்தாஃ(ரழி) நூல்: முஸ்னத் அஹ்மத்.

ஒரு மலையின் மேற்பகுதியில் ஆடுகளை மேய்த்துக் கொண்டிருக்கும் ஒருவர் பாங்கு சொல்லித் தொழும் பொழுது உங்களிறைவன் மிக சந்தோசம் அடைவதோடு (மலக்குகளைப் பார்த்து) இதோ எனது இவ்வடியான் என்னை பயந்து பாங்கு சொல்லி தொழுவதைப் பாருங் கள். அவனது பாவங்களை மன்னிப்பதோடு, அவனை சுவர்க்கத்திலும் புகுத்துவேன் என்று கூறுகிறான். அறிவிப்பவர்: உக்பத்து பின் ஆமீர் நூல்கள்: அபூதாவூத், நஸயீ.

எனவே, மேற்கண்ட மூன்று ஹதீஸ்களின் வாயிலாக நபி(ஸல்) அவர்கள் பாங்கு சொல்லும்படி ஏவியிருப் பதையும், பாங்கு, தொழுகை இல்லாதவர்களின் மீது ஷைத்தான் ஆதிக்கம் பெற்றுவிடுவான் என்று எச்சரிக்கை விடுத்திருப்பதையும் ஆதாரமாகக் கொண்டு ஆண்களைப் போன்றே பெண்களும் பாங்கு இகாமத் சொல்ல வேண்டும் என்பதை உணருகிறோம். (ஆனால் பெண்கள் மெதுவாக பாங்கு இகாமத் சொல்லிக் கொள்ள வேண்டும்)
…………………………………………..

ஐயம் : தனது இறுதி நபிக்குப் பின் அல்லாஹ் கலீபாக்க ளிடமோ, வலிமார்களிடமோ, அசரீரியாகப் பேசியுள்ளானா? மூ. ஷாஜஹான், கோவை.

தெளிவு : அல்லாஹ் அவ்வாறு இறுதி நபி(ஸல்) அவர் களுக்குப் பிறகு எந்த கலீபாக்களிடத்திலும், வலிமார் களிடத்திலும் பேசியதற்கு குர்ஆன், ஹதீஃத் அடிப்படை யில் எவ்வித ஆதாரமுமில்லை. “”அல்லாஹ் எந்த மனிதரிடத்திலும் வஹியாகவோ, அல்லது திரைக்கு அப்பால் இருந்தோ, அல்லது தான் விரும்பியதைத் தனது அனுமதி கொண்டு வஹி அறிவிக்கும் ஒரு (மலக்காகிய) தூதரை அனுப்பியோ அன்றி (நேரிடையா கப்) பேசுவதில்லை. நிச்சயமாக அவன் உயர்ந்தோனும் ஞானமிக்கவனுமாவான். (அல்குர்ஆன்: 42:51)
அல்லாஹ்வின் பல்வகைப் பேச்சுக்கள்:
நபி(ஸல்) அவர்களின் உள்ளத்தில் செய்திகளைப் போடுதல், உதாரணமாக, பரிசுத்தமானவன் என் உள்ளத்தில் போட்டான், “”நிச்சயமாக எந்த நபரும் அவரது ரிஜ்கும், தவணையும் முடியாதவரை ஒருபோதும் மரணிக்க முடியாது. ஆகவே அல்லாஹ்வைப் பயந்து ரிஜ்கை சம்பாதிக்கும் வகையில் ஹலாலான (ஆகுமான) சிறந்த முறையைக் கடைபிடிப்பீர்களாக!
நூல்: ஸஹீஹ் இப்னுஹப்பான்.
ஆகவே மேற்கண்ட ஹதீஃதில் உள்ளத்தில் செய்தி களைப் போடுதல் என்பதற்கு விளக்கம் கிடைக்கிறது.
திரைக்கப்பால் இருந்து…
திரைக்கப்பால் இருந்து என்பதற்கு, மூஸா நபி (அலை) அவர்களிடம் பேசியது போன்றதாகும். அவர் கள் அல்லாஹ்விடம் “”எனது ரட்சகனே உன்னை எனக் குக் காட்டுவாயாக! நான் உன்னைப் பார்த்துக் கொள்கி றேன் என்றார்கள். அதற்கு அல்லாஹ் மூஸாவே! நீ என்னை நிச்சயமாகப் பார்க்க முடியாது என்று கூறி னான். (அல்குர்ஆன் : 7:143)
இதன் வாயிலாக மூஸா நபி(ஸல்) அவர்களிடம் திரைக்கு அப்பாலிருந்து அல்லாஹ் பேசியிருக்கிறான் என்பதை உணருகிறோம்.
தனது அனுமதி கொண்டு வஹி அறிவிக்கும் தூதரை அனுப்பி…
தூதரை அனுப்பி என்பதற்கு ஜிப்ரீல்(அலை) அவர் களைப் போன்று மலக்குகளில் ஒருவரை நபிமார்களிடம் அனுப்பி பேசுவதாகும். மேற்கண்டவாறு பற்பல சந்தர்ப் பங்களில் நபிமார்களிடத்திலும் குறிப்பாக நமது நபி (ஸல்) அவர்களிடத்திலும் பேசியுள்ளான் என்பதை உணருகிறோம். ஆதாரநூல்: தப்ஸீர் இப்னுகஸீர்
இவ்வாறு வல்ல அல்லாஹ் யாரிடத்தில் எவ்வாறு பேசியுள்ளான் என்பனவற்றை மிகத் தெளிவாக வரையறுத்து, அல்குர்ஆன் கூறியிருப்பதன் நோக்கம் பின்னால் வரும் பித்தலாட்டக்காரர்களின் சூழ்ச்சியில் நம் போன்றவர்கள் சிக்கிக் கொள்ளாது மிகவும் எச்சரிக்கையுடனிருந்து நம்மை நாம் பாதுகாத்துக் கொள்ள வேண்டும் என்பதுதான்.
ஆகவே அல்லாஹ் இவ்வுலகில் மூஸா(அலை) அவர் களைத் தவிர வேறு யாரிடத்திலும் அசரீரியாகப் பேசி னான் என்பதற்கோ, அல்லது இறுதி நபியாகிய நபி (ஸல்) அவர்களுக்குப் பிறகு யாரிடத்திலும் எதுவும் பேசுவான் என்பதற்கோ குர்ஆன், ஹதீஃதின் அடிப்படையில் எள்ளளவும் ஆதாரம் கிடையாது.
எனவே உண்மை நிலை இவ்வாறிருக்க, அல்லாஹ் அவர்களைக் கூப்பிட்டு அவ்வாறு பேசினான். இவர் களைக் கூப்பிட்டு இவ்வாறு பேசினான் என்றும், விசே­ மாக சிலரை அவர்களது சிறப்புப் பெயரைக் கொண்டே அழைத்து பேசியிருக்கிறான் என்றெல்லாம் கூறி, கதை யளந்து விடுபவர்களை வாசக நேயர்கள் நன்கு அடையாளம் கண்டு கொள்வார்களாக!

இக்கால மக்களிடையே, பக்தி பரவசத்தோடு ஓதப் பட்டுவரும் மவ்லூத் ­ரீபு என்று அவர்களால் சொல்லப் படும் அந்தக் கிரந்தங்களில் இதுபோன்ற ஆதார மில்லாக் கூற்றுக்கள் ஒன்றல்ல இரண்டல்ல ஏராளம் இருக்கின்றன. குர்ஆனுக்கும், ஹதீஃதுக்கும் முற்றிலும் புறம்பான பொய்க் கூற்றுக்கள், அவற்றிலிருக்கின்றன வென்பதை நன்கு புரிந்து கொண்டும் ஏனோ இவர்கள் பிடிவாதமாக இவற்றை ஓதி வருகிறார்களோ தெரிய வில்லை.
……………………………………………

ஐயம்: ய­ய்குல் ஹதீஃத் ஜகரிய்யா மவ்லானா அவர்களின் தஃலீம் தொகுப்பு என்ற நூலில் தொழுகையின் சிறப்பு என்ற முதற் பகுதியில் (பக்.77-78) இத்தகைய காரணங்களால் தொழுகையை விடுவது ஆகுமானதாக இருந்துங்கூட என்று தொழுகையை நோயின் காரண மாக விட்டுவிடலாம் என்ற கருத்தில் எழுதியிருக்கிறார் களே, இதற்கு குர்ஆன், ஹதீஃத் அடிப்படையில் விளக்கம் தரவும்.  அப்துல் அஜீஸ், சென்னை

தெளிவு : மேலும் நான் உயிருடன் இருக்கும் காலமெல் லாம் தொழுகையையும், ஜகாத்தையும் (நிறைவேற்ற) எனக்குக் கட்டளையிட்டிருக்கிறான். (அல்குர்ஆன்:19:31)

மேலும் போர்க்களத்தில் உயிருக்குப் போராடிக் கொண்டிருக்கும் சந்தர்ப்பத்திலுங்கூட தொழுகையை, அதன் நேரத்தில் தொழுதே தீரவேண்டும் என்று கூறி, அவசரகாலத் தொழுகையின் முறைகளையும் எடுத்தோதிய பிறகு கீழ்காணும் சட்டத்தைக் கூறுகிறான்.

அதாவது நிச்சயமாக குறிப்பிட்ட நேரங்களில் தொழு கையை நிறைவேற்றுவது முஃமின்கள் மீது விதியாக்கப் பட்டிருக்கிறது. (4:103) இவை போன்ற பல திருவசனங் களும், பல ஹதீஃத்களும் எக்காரணத்தாலும் உடலில் உயிரிருக்கும் வரை தொழுகையை விடக்கூடாது என்று கூறியிருப்பதோடு, தண்ணீர் கிடைக்காத சமயங்களில் தயம்மும் செய்து கொள்ளவும், நிற்க இயலாவிட்டால் உட்கார்ந்தும், அதற்கும் இயலாவிடில் படுத்துக் கொண்டும் சமிக்கையால் தொழுதுதான் தீரவேண்டும் என்று கூறியிருக்கும்பொழுது, குர்ஆன், ஹதீஃதின் அடிப்படையில் எக்காரணத்தை முன்னிட்டும் தொழு கையை விடுவது சரியில்லை என்பதை உணருகிறோம்.
………………………………………
ஐயம்: “”தன் அனுமதியின்றி பூமியின் மீது வானம் விழுந்துவிடாமல் அல்லாஹ் தடுத்துக் கொண்டிருக்கி றான். நிச்சயமாக அல்லாஹ் மனிதர்கள் மீது மிக்க இரக்கமும், அன்பும் உள்ளவன்”
“”வானம் திடப்பொருளே அல்ல எனும்போது அது எப்படி இடிந்து விழும் விளக்கம் தருக!”
எஸ்.காஜா மொய்தீன், திருத்தணி.

தெளிவு : “”வானம் பிளந்துவிடும் போது” அல்குர்ஆன் 82:1
நாம் நாடினால் அவர்களை பூமியினுள் சொருகி விடுவோம். அல்லது வானத்திலிருந்து அவர்கள் மீது ஒரு துண்டை விழச் செய்து விடுவோம். (அல்குர்ஆன்: 24:9)
இவ்விரு திருவசனங்களிலும், வானம் தாங்கள் கூறுவது போன்று திடப்பொருள் இல்லை என்பதாகத் தெரியவில்லை. ஏனென்றால் பிளப்பதற்கும், ஒரு துண்டை அதிலிருந்து பிரித்தெடுத்து விழச் செய்வதற் கும் திடப் பொருளாக இருந்தால் தான் இயலும். எனவே வானங்களையும், பூமியையும் படைத்த இறைவன் அதை அவனால் பிளக்கச் செய்யவும், அதிலிருந்து ஒரு துண்டை எடுத்து பிறரின் மீது விழச் செய்யவும் முடியும் என்று சொல்லும் பொழுது, திடப் பொருளே அல்ல என்ற கூற்றை எடுத்து வைத்துக் கொண்டு ஒத்துப் பார்ப்பதில் அர்த்தமில்லை.விஞ்ஞானியின் கூற்று மாறுபடலாம். அது வெறும் யூகமே தவிர, இறைவாக்கு அல்ல.
…………………………………………

ஐயம்: குர்ஆனிலுள்ள 3:7 திருவசனத்தில் முஹ்க்க மாத்- முதஷாபிஹாத் (தெளிவான ஒரே கருத்துடை யவை, மாற்றுக் கருத்திற்கிடம்பாலனவை) என்று இரு வகையான திருவசனங்களிருப்பதாகக் கூறப்படுகிறதே, “”லாஇலாஹ இல்லல்லாஹ்” என்னும் வசனம் எந்த வகையைச் சார்ந்தது? முஹம்மத் டைபரோஸ்.

தெளிவு: “”லாஇலாஹ இல்லல்லாஹ்” என்னும் திருவசனம் “”முஹ்க்கமாத்” என்னும் தெளிவான ஒரே கருத்துடையவை என்ற வகையைச் சார்ந்ததாகும். “”ஆகவே, நிச்சயமாக அல்லாஹ்வைத் தவிர (வேறு) இறைவன் இல்லை என்று நீர் அறிந்து கொள்வீராக”.
அல்குர்ஆன் : 47:19

எனவே இவ்வசனத்தின் கருத்து மிகத் தெளிவாக காணப்படுவதை உணருகிறோம்.

Previous post:

Next post: