இப்னு ஸதக்கத்துல்லாஹ், கடையநல்லூர்.
தன்னை முஸ்லிம் (அல்லாஹ்வுக்கு கட்டுப் பட்டவன்) என்று சொல்லிக் கொள்ளும் ஒருவன் அந்த பெயருக்கேற்ப அல்லாஹ்வுக்கு மட்டும் கட்டுப்பட்டு நடந்தால் அவனுக்கு எந்தவிதமான ஒதுக்கீடும் தேவைப்படாது. அதல்லாமல் முஸ்லிம் என்ற பெயரில் வேறு யாருக்காவது கட்டுப்பட்டு நடந்தால் எல்லாமும் தேவைப்படும் என்பதை பிறிதொரு ஆக்கத்தில் பார்த்தோம். இந்த ஆக்கத்தில், முஸ்லிம்கள் அல்லாஹ்வை விட்டு இந்த முல்லாக்களுக்குக் கட்டுப்பட்டு நடந்ததால், இந்த இட ஒதுக்கீடு விஷயத்தில் மட்டும் எவ்வளவு மோசடி செய்யப்பட்டிருக்கிறார்கள் என்பதைப் பார்ப்போம்.
இந்த முஸ்லிம் முல்லாக்களை விட கிறித்தவ பாதிரிமார்கள் எவ்வளவோ பரவாயில்லை என்று சொல்லலாம். கிறித்தவ பாதிரிமார்கள் கிறித்தவர் களின் மறுமை வாழ்க்கையைத்தான் பாழாக்கி யிருக்கிறார்கள். இவ்வுலக வாழ்க்கையை பொறுத்த வரை அவர்களை நம்பிப் போனவர்களை நல்லபடியாகவே ஆக்கி வைத்திருக்கிறார்கள் என்றே சொல்லலாம். இதைக் கற்பனையாகச் சொல்லவில்லை. இட ஒதுக்கீடு இட ஒதுக்கீடு என்று இந்த முல்லாக்கள் காட்டு கத்தல் கத்துவது போல் கிறித்தவர்கள் யாரும் கத்தவில்லை. இருப்பினும் முஸ்லிம்களுக்கு 3.5% உள் ஒதுக்கீடு செய்யப்பட்டபோது கிறித்தவர்களுக்கும் 3.5% உள் ஒதுக்கீடு செய்யப்பட்டது. ஆனால் கிறித்தவர்களோ அதைத் தேவையில்லை என்று கூறி திருப்பிக் கொடுத்து விட்டார்கள். நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக பாதிரிமார்களின் வண்டவாளங்களை அம்பலமாக்கி வரும் தறுதலை ஜமாஅத் அவர்களின் இந்த செயல் பற்றி ஏன்? என்ன? என்று வாயே திறப்பதில்லை.
அவர்கள் திருப்பிக் கொடுக்கக் காரணம் ஒதுக்கப் பட்ட 3.5%ஐ விட அதிகமாக அவர்கள் அனுபவித்து வருகிறார்கள் என்பதுதான். இது எப்படி ஆயிற்று? விஷயம் இதுதான். அவர்களை நம்பிப் போனவர்களை அவர்கள் உற்சாகமூட்டி படிக்க வைக்கிறார்கள். படித்து முடித்தவர்களுக்கு உள் நாட்டிலும் வெளிநாட்டிலும் வேலை கிடைக்கும் வழியை சொல்லிக் கொடுக்கிறார்கள். சிபாரிசு செய்து சேர்த்து விடுகிறார்கள். அவர்கள் 3.5ஐ விட அதிகமாக அனுபவித்து வரும் வழி இதுதான்.
அதே சமயம் இந்த முஸ்லிம் முல்லாக்கள் செய்ததென்ன? முஸ்லிம்களுக்கான இட ஒதுக்கீடு என்பது காமராஜர் ஆட்சி காலம் வரை இருந்திருக்கிறது. அதன் பின் அண்ணா காலத்திலிருந்து பிற்படுத்தப்பட்டோர் இட ஒதுக்கீடு என்ற பெயரில் இன்றுவரை இருக்கிறது. இந்த வழியாக எத்தனை பேரை இவர்கள் வாழவைத்திருக்கிறார்கள் சொல்ல முடியுமா? இவர்கள் செய்ததெல்லாம் அல்லாஹ்வின் பெயரால், அல்லாஹ்வின் தூதரின் பெயரால் (ஸல்) ஆங்கிலம் ஹராம், கிராப் ஹராம், பேன்ட் ஹராம், கலகம் ஜிஹாத், பிரிவினை ஜிஹாத், பாபர் மசூதி என்றெல்லாம் முஸ்லிம்களின் மண்டையைக் கழுவி அரசியல் சித்து விளையாடி அவர்களின் இவ்வுலக வாழ்க்கையை நாசமாக்கினார்கள். தர்கா, தரீக்கா, தகடு, தாயத்து, மீலாது, மெளலிது, உரூஸ் என்று மண்டையை கழுவி மறுமை வாழ்க்கையை நாசமாக்கினார்கள்.
இந்தப் பழைய முல்லாக்களிடமிருந்து சமுதாயத்தை மீட்டு குர்ஆன், ஹதீஃத் வழியில் வாழ வைக்கப் போகிறோம் என்று கிளம்பினார்கள் புதிய தவ்ஹீது முல்லாக்கள். இவர்கள் கிளப்பி விட்டதுதான் இந்த இட ஒதுக்கீடு மாயை, இன வாதம் பேசுவது கூடாது என்று ஆரம்பத்தில் எழுதியவர்கள் தான் இவர்கள். ஆனால் இனவாதம் பேசாமல் களத்தில் நிற்கவோ, நீடிக்கவோ முடியாது என்பதை விளங்கிக் கொண்ட இவர்கள் இன வாதத்துக்கு ஜிஹாத் என்ற முத்திரை குத்தி பேச ஆரம்பித்தார்கள். இனவாதம் பேசினால் மட்டும் போதாது. வித்தியாசமாக ஏதாவது செய்து இன உணர்வைத் தூண்டி விடவும் வேண்டும் என்பதையும் விளங்கிக் கொண்டார்கள். வித்தியாசமாக என்று இவர்கள் தேடியபோது இவர்கள் கண்ணில் பட்டது பா.ம.க. ராமதாஸ்தான். அவர்தான் வன்னியருக்கு இட ஒதுக்கீடு என்ற கோத்தைக் கிளப்பி அதற்காக பல அதிரடி போராட்டங்களை நடத்தி வன்னிய சமுதாயத்தின் ஏகோபித்த தலைவ ரானார். ராமதாஸின் அந்தப் பணிக்கு இவர்கள் ஸ்டைலில் இழந்த உரிமையை மீட்க இருக்கும் உரிமையைக் காக்க என்றும் ஜிஹாத் என்றும் பெயர் சூட்டினார்கள் இந்த தவ்ஹீது முல்லாக்கள்.
அவரையாவது ஒரு வகையில் போற்றலாம். பேசியபடி 20% இட ஒதுக்கீடு வாங்கிக் கொடுத்தார். தவ்ஹீது முல்லாக்கள் அதையும் செய்யவில்லை. செய்யவும் முடியாது. இவர்கள் சொன்னது என்ன? பொதுப்பிரிவிலிருந்து 13% வாங்கித் தருவோம் என்று சொன்னார்கள். செய்தது என்ன? ஏற்கெனவே, முஸ்லிம்கள் இடம் பெற்றிருந்த பிற்படுத்தப்பட்டோர் இட ஒதுக்கீட்டில் 3.5% என்று வரையரை வாங்கி தந்து விட்டார்கள். அது அப்படியே இருந்தாலும் கூட கிறித்தவர்களைப் போல் அதிகமாக அனுபவிக்கலாம். இப்படியயாரு வரையரை வாங்கியது கொண்டு அதுக்கும் வழியில்லாமல் முஸ்லிம்களுக்கு துரோகம் செய்து விட்டார்கள் என்றே சொல்ல முடியும்.
மேலும் இந்த இட ஒதுக்கீடு வியத்தில் இவர்கள் பேசும் முன்னுக்கு பின் முரணான பேச்சுகள், இவர்கள் முஸ்லிம்களை ஏமாற்றுகிறார்கள், மோசம் செய் கிறார்கள் என்பதற்குப் போதுமான ஆதாரமாகும்.
“ஒத்த கருத்து” என்ற வார்த்தைக்கு 2010 ஜூலை மாநாட்டுக்கு முன் ஒரு விளக்கம், மாநாட்டுக்குப் பின் பிரதமரை சந்தித்த பிறகு மற்றொரு விளக்கம் என முரண்பட்டு பேசி முஸ்லிம்களின் மண்டையைக் கழுவியது.
இந்த இட ஒதுக்கீடுப் பிரச்சனைக்காக மாநாடு, போராட்டம், பேரணி என்பதெல்லாம் இதோடு கடைசி இனிமேல் வேறுவழிதான் என்று மாநாட்டுக்கு முன் உணர்ச்சி பொங்க பேசி மண்டையைக் கழுவியது. மாநாட்டுக்கு பின் இப்போது இட ஒதுக்கீடு கிடைக்கும் வரை போராட்டம் தொடரும் என்று சொல்லி மண்டையைக் கழுவுவது.
மூன் டிவியில் பீ.ஜே.பியின் தமிழிசை சவுந்தர் ராஜனின் மண்டையைக் கழுவ முயன்று அதில் முடியாமல் போய் மன திருப்தியை தவிர இட ஒதுக்கீட்டினால் வேறு எந்த பிரயோஜனமும் இல்லை என்று ஒப்புதல் வாக்குமூலம் அளித்து விட்டு வெளியில் வந்து, இட ஒதுக்கீடு பெற்றால் அரபு நாட்டுக்கு போய் போனில் குடித்தனம் நடத்த தேவையில்லை. வெயி லிலும், பணியிலும் கார் துடைக்கத் தேவையில்லை. தெருக்கூட்டத் தேவையில்லை என்று ஆசை காட்டி மண்டையைக் கழுவிக் கூட்டம் சேர்ப்பது.
1995க்கு முன்பு வரை அல்லாஹ்வும் அல்லாஹ் வுடைய தூதரும்(ஸல்) அறிவைத் தேடிக் கொள்ளுங் கள், எல்லா மொழியையும் கற்றுக் கொள்ளுங்கள் என்று கட்டளையிட்டிருக்க இந்த பரேலவி, தேவ்பந்தி முல்லாக்கள் ஆங்கிலம் படிப்பது ஹராம் என்று ஃபத்வா கொடுத்து நம்மையயல்லாம் படிக்கவிடாமல் செய்து விட்டார்கள் என்று மண்டையைக் கழுவி ஜாக்குக்கு ஆள் பிடித்தார்கள். 95க்கு பிறகு நாம் இந்த நாட்டு விடுதலைக்காக கல்வியை தியாகம் செய்திருக்கி றோம். எனவே, இட ஒதுக்கீடு கேட்பது நமது உரிமை என்று மண்டையைக் கழுவி ததஜவுக்கு ஆள் பிடித்து அரசியல் சித்து விளையாடுகிறார்கள். அவ்வளவு தான்.
ஆக, முல்லாக்களை விட்டொழிக்காதவரை இந்த சமுதாயத்துக்கு விமோசனமேயில்லை என்பது மட்டும் தெளிவு.
7:169 இறைவாக்கு, அவர்களுக்குப் பின் அவர் களுடைய இடத்தை (தகுதியற்ற) ஒரு பிரிவினர் அடைந் தனர். அவர்கள் நெறிநூலுக்கு (நாங்கள்தான்) வாரிசுகள் (நெறிநூல் எங்களுக்குத்தான் விளங்கும் என்று கூறல்) ஆனார்கள். (அழியப் போகும்) இவ்வுல கின் அற்பப் பொருட்களைப் பெற்றுக் கொண்டு (அதற்கு தகுந்தபடி நெறிநூலின் வசனங்களின் பொருளை மாற்றினார்கள்). “”எங்களுக்கு மன்னிப்பு அளிக்கப்படும்” என்றும் கூறிக் கொள்கிறார்கள். இது போன்று வேறோர் அற்பப் பொருள் அவர்களுக்கு வந்து விட்டால், அதையும் எடுத்துக் கொள்வார்கள். “”அல்லாஹ்வின் மீது உண்மையை தவிர வேறு எதுவும் சொல்லக்கூடாது என்று நெறிநூலின் வழியாக அவர்களிடம் உறுதி மொழி வாங்கப்பட வில்லையா?” (இன்னும்) அதிலுள்ள (போதனை களை) அவர்கள் படித்தும் வருகின்றார்கள். (அதை யயல்லாம் அவர்கள் கண்டு கொள்வதேயில்லை) இறையச்சம் உடையோருக்கு (அழியாத) மறுமையின் வீடே மேலானதாகும். நீங்கள் அறிந்து கொள்ள வேண்டாமா?
14:42-ல் மேலும் (இந்த) அக்கிரமக்காரர்கள் செய்து கொண்டிருப்பதைப் பற்றி அல்லாஹ் கண்டு கொள்ளாமல் இருக்கிறான் என்று (கனவிலும் கூட) நீங்கள் நிச்சயமாக எண்ண வேண்டாம். அவர் களுக்கு (தண்டனையை) தாமதப்படுத்துவதெல்லாம், திறந்த கண்கள் திறந்தவாறே இருந்து விடும் நாளுக்காகத்தான்.