ஐந்தாண்டுகளுக்கொரு முறை வழமையாக வரும் தேர்தல் திருவிழா தமிழகத்தில் 2014 ஏப்ரல் 24-ம் தேதி நடைபெற இருக்கிறது. நாட்டை ஆள்வதற்கான திறமையுள்ள தகுதியுள்ளவர்களை முறையாகத் தேர்ந்தெடுக்கும் ஒரு நிகழ்வல்ல இது! மக்களிலேயே ஆகக் கேடு கேட்டவர்கள் மக்களின் பொன்னான வாக்குகளை அற்பக் காசுக்கு வாங்கிக் கொண்டு மக்கள் மன்றத்தில் நுழைந்து உள்ளே அராஜகங்கள் அட்டூழியங்கள் தினசரி செய்ய வாய்ப்பளிக்கும் தேர்தல். நடுத்தர, ஏழை மக்களின் உரிமைகளைப் பறித்துக் கொண்டு, மக்கள் சொத்தைக் கபளீகரம் செய்து பகல் கொள்ளையடித்து, அரசியல் வியாபாரிகள் பல தலைமுறைகளுக்குச் சொத்துச் சேர்க்கப் பெரிதும் வாய்ப்பளிக்கும் தேர்தல் திருவிழா. இது ஜனநாயகத் தேர்தல் அல்ல; பணநாயகத் தேர்தல், குண்டர் நாயகத் தேர்தல், நாட்டைச் சுடுகாடாக்கி, நாட்டு மக்களை வறுமைக் கோட்டுக்குக் கீழாக்கி, கார்ப்பரேட் கம்பெனிகளையும், பண முதலைகளையும் மேலும் மேலும் கொழுக்கச் செய்யும் தேர்தல்.
நாம் இப்படி எழுதுவது குறித்துச் சிலர் கோபப்படலாம். நிதானமிழக்கலாம். அவர்கள் கோபப்படாமல், நிதானம் இழக்காமல் 2009-2014 மக்கள் மன்ற நிகழ்வுகளையும், அடிதடி கலாட்டாக்களையும், பகல் கொள்ளையர் மிளகாய், மிளகுதூள் தூவி கொள்ளையடிப்பது போன்ற நிகழ்வுகள் மக்கள் மன்றத்தில் அரங்கேறி இருப்பதையும் நோட்டமிட்டுப் பார்க்கட்டும். அவர்களுக்கும் உண்மை விளங்கும்.
இந்த ஐந்தாண்டுகளில் மக்கள் மன்றத்தில் ஏற்பட்ட அமளிகளால், மன்ற நிகழ்வுகள் முறையாக நடைபெறாமல் முடக்கப்பட்டதால் மக்கள் வரிப்பணம் பல்லாயிரம் கோடி பாழாகிப் போனதைக் கணக்கிட்டுப் பாருங்கள். என்னதான் மக்கள் மன்றம் முடக்கப்பட்டாலும், அடிதடியால் பொருள்கள் நாசமானாலும் இழப்பு அப்பாவி பொது மக்களுக்குத்தான். M.P.க்களோ அவர்களுக்குரிய சம்பளம், படி, இன்ன பிற வருவாய் என மிகப் பெரும் தொகையைச் சல்லிக் காசும் குறைவில்லாமல் பெற்று அனுபவிக்கிறார்கள். மக்கள் மன்றத்தை முடக்குவதற்கென்றே அவர்களுக்கு ஊதியம் கொடுப்பது போன்ற நிலையே காணப்படுகின்றது.
எனவே அந்த எம்.பி. பதவியை அடைவதற்காக பெரும் அரசியல் கட்சிகளும், சிறு சிறு கட்சிகளும் எப்படிப்பட்ட நாடகங்களை அரங்கேற்றுகிறார்கள், யார் யாருக்கெல்லாம் கூழைக் கும்பிடு போடுகிறார்கள், யார் யாருக்கெல்லாம் பொய்யாகத் துதிபாடுகிறார்கள், வஞ்சகப் புகழை வாரி இறைக்கிறார்கள். நடுத்தர ஏழை மக்களை ஏமாற்ற பொய் வாக்குறுதிகளை அள்ளித் தெளிக்கிறார்கள். உண்மையான நடிகர், நடிகைகள் தோற்றுப் போகும் அளவில் நடிக்கிறார்கள் என்பதை எல்லாம் அன்றாடம் பார்த்துக் கொண்டுதானே இருக்கிறோம்.
இன்றைய அரசியல் வியாபாரிகளிடம் பொது மக்களுக்கு நலன் பயக்கும், அடித்தட்டு மக்களின் தரத்தை உயர்த்தும் உருப்படியான கொள்கையோ, திட்டமோ இல்லவே இல்லை. பச்சோந்தி தனது நிறத்தை இடத்திற்கேற்றால் போல் மாற்றுவது போல், இவர்களும் தங்களின் பேர் புகழுக்கும், கொழுத்தத் தவறான வருமானத்திற்கும் தகுந்தால் போல் தங்கள் கொள்கைக் கோட்பாடுகளை மாற்றிக் கொள்ளும் தரமிழந்தவர்களாகத்தான் காணப்படுகிறார்கள். விதி விலக்காக ஒரு சிலர் இருக்கலாம். இலைமறை காயாக இருக்கலாம். ஆயினும் அவர்களாலும் இன்றைய கேடுகெட்ட அரசியல் சூழ்நிலையை மாற்ற முடியாது. அவர்களும் வழிதவற வாய்ப்பிருக்கிறதே அல்லாமல் கேடுகெட்ட அரசியல் வியாபாரிகளைத் திருத்தும் ஆற்றல் பெறமாட்டார்கள்.
இன்றைய அரசியல் வியாபாரிகளுக்கிருக்கும் அசாத்தியத் துணிச்சல் என்ன தெரியுமா? வாக்காளர்களுக்கு ஆயிரமோ, இரண்டாயிரமோ கொடுத்து அவர்களின் விலை மதிப்பற்ற வாக்குகளை அற்பக் காசுக்கு விலைக்கு வாங்கிவிட்டால், அது கொண்டு எம்.பி. ஆகிவிட்டால் அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு யாரும் தங்களை அசைக்க முடியாது. வாக்களித்து எம்.பி.ஆக்கிய தொகுதி மக்களே தங்களைத் திரும்பப் பெற முடியாது. எப்படிப்பட்ட அராஜகச் செயல்களில் ஈடுபட்டாலும் யாரும் எதுவும் செய்ய முடியாது. அப்படியே வழக்கு வம்பு என்று வந்தாலும், வாய்தாவுக்கு மேல் வாய்தா வாங்கி வழக்கை வருடக் கணக்கில் இழுத்தடிக்க முடியும்.
தாங்கள் கொள்ளை அடித்த பல ஆயிரம் கோடிகளிலிருந்து ஒருசில கோடிகளை அரசு தரப்பு வக்கீலுக்கும், நீதிபதிக்கும் லஞ்சமாகக் கொடுத்து மிக எளிதாக வெளியே வந்து விட முடியும் என்ற அசாத்தியத் துணிச்சலே. அதற்குரிய வழிவகை நாட்டில் மலிந்து காணப்படும் நிலையில் அரசியல் வியாபாரிகள் திருந்துவார்கள் என்பதற்கு ஆதாரம் உண்டா? நீதிபதி பெருந்தொகை லஞ்சமாகக் கொடுத்தே அப்பதவியைப் பெறுகிறார். அரசு தரப்பு வழக்கறிஞரின் நிலையும் அதுவே. இந்த நிலையில் அவர்கள் லஞ்சம் வாங்காமல் பணியாற்றுவார்கள் என எதிர்பார்க்க முடியுமா? ஆம்! லஞ்சப் பேய் ஆட்சியாளர்களையும், அரசு அதிகாரிகளையும், அரசியல் வியாபாரிகளையும் பிடித்து ஆட்டும் போது, காற்றுப்புக முடியாத இடங்களிலெல்லாம் லஞ்சம் புகுந்து தலை விரித்தாடும்போது தேர்தல் நியாயமாக, நீதியாக நடக்கும் என்று எண்ணுவதை விட பேதமை உண்டா? ஆம்! மக்களிலேயே ஆகக் கடைந்தெடுத்த அயோக்கியர்களும், பகற் கொள்ளையர்களும், ஏழை எளிய மக்களின் வாழ்வாதாரங்களைப் பிடுங்கி, கார்ப்பரேட் கம்பெனிகளுக்கும், பண முதலைகளுக்கும் தாரை வார்த்துத் தங்களைப் பல ஆயிரம் கோடிகளுக்கு அதிபதிகளாக்கும் அற்பர்களுமே மக்கள் மன்றத்தினுள் எம்.பி.யாக நுழையும் வாய்ப்புகளே பெருகிக் காணப்படுகிறது.
இன்றைய நாட்டின் சூழ்நிலைகளைப் பார்த்தால், 2009-2014 மக்கள் மன்றத்தை விட மிக மோசமான நடைமுறைகளைக் கொண்ட, மக்கள் பணத்தை வீணடிப்பதோடு, அடிதடி, கலாட்டா, குத்து வெட்டு போன்ற கொடுஞ்செயல்கள், இழி செயல்கள் அரங்கேறும் மன்றமாக 2014-2019 மக்கள் மன்றம் அமையுமோ என்ற அச்சமே நாட்டு நலனையும், மக்கள் நலனையும் விரும்பும் நல்லவர் களிடம் மிகைத்துக் காணப்படுகிறது. இன்றைய அரசியல் தலைவர்கள் எவரிடமும் பண்பட்ட பழக்க வழக்கம் இல்லை! நமது நாட்டில் வாழும் பல இன, மொழி, பிரதேச, மத, மற்றும் பலவிதக் கலாச்சார மக்கள் நிறைந்த இந்திய நாட்டை அமைதியாக, மனிதாபிமானத்தோடு, மனித நேயத்தோடு, அனைத்து மக்களையும் சமமாக நினைத்து, அதில் உறுதியோடு லஞ்சத்தில் மூழ்காமல் ஆட்சி செய்யும் எந்தத் தலைவரையும் இன்று காண முடியவில்லை. எனவே எந்தக் கட்சிக்கு வாக்களித்தாலும், எந்த தலைவருக்கு வாக்களித்தாலும் நாட்டை அழிவுப் பாதையில் இட்டுச் செல்ல நாமும் துணை போகிறோம் என்பதே அதன் பொருளாகும். பெரும் பாவத்திற்குத் துணை போகிறோம்!
அதற்காக நமது வாக்கை அளிக்காமல் இருப்பதும் பெரும் தவறாகும். கண்டிப்பாக நாம் வாக்களிக்க வேண்டும். குறிப்பிட்ட வாக்குச் சாவடிக்கு நேரத்தோடு சென்று, போட்டியிடுபவர்களில் எவருமே அப்பதவிக்குத் தகுதி இல்லை என்ற அடிப்படையில் “”நோட்டா” என்று கடைசியில் இருக்கும் பொத்தானை அழுத்தி நம் வாக்கைப் பதிவு செய்வது சாலச் சிறந்ததாகும். அதுவே நன்மை பயக்கும்!
முன்னராவது வாக்களிக்க விரும்பாதவர்கள், அங்குள்ள அதிகாரியிடம் குறிப்பிட்ட பாரத்தை வாங்கி அதில் பதிவு செய்து கொடுக்கும் நிலை இருந்தது. அதாவது வாக்களிக்க விரும்பாதவர்கள் யார், யார் என்று அறிந்து கொள்ளும் வாய்ப்பு இருந்தது. ஆனால் இந்த முறை அதற்கும் வாய்ப்பு இல்லை.
நாம் தவறாமல் வாக்களித்தோம் என்பது உறுதிபடத் தெரியுமே அல்லாமல், போட்டியிட்ட எவருக்குமே வாக்களிக்காமல் “”நோட்டா”வில் பதிவு செய்தோம் என்பது நம்மையும், நம்மைப் படைத்த இறைவனுக்கும் மட்டுமே தெரியும். எனவே அரசியல் வியாபாரிகளின் தொந்தரவுகளைச் சந்திக்கும் ஆபத்து ஏற்படுமே என்று அஞ்சத் தேவையில்லை.
போட்டியிட்ட வேட்பாளர்களைவிட “”நோட்டா”வில் அதிக வாக்கு பதிவாகி இருந்தால், எம்.பி.யாக போட்டியிட்டவர்களில் எவருக்கும் எம்.பி. ஆவதற்குரிய தகுதி இல்லை. மக்களில் அதிகமானவர்கள் அவர்களில் எவரையும் எம்.பி.யாகத் தேர்ந்தெடுக்க விரும்பவில்லை என்பது உறுதியாகிவிடும். இப்படியொரு நிலை ஏற்பட்டால் அன்றி இந்த அரசியல் வியாபாரிகளைத் திருத்த வேறு வழியே இல்லை. முன்னாள் பிரதமர் இந்திராகாந்தி அவசர நிலையை (Emergency) அறிவித்துத் தனியொருவர் ஆட்சியை அமுல்படுத்திய தால், அரசு நிர்வாகம் சீர்பட்டது. அரசு அதிகாரிகள், ஊழியர்கள் தங்கள் கடமைகளை ஒழுங்காகச் செய்ததை அனுபவத்தில் பார்த்தோம். இப்போது அவசர நிலை தேவையில்லை. அரசியல் வியாபாரிகள் தகுதியுடையவர்கள் இல்லை என்ற காரணத்தால், தனியொரு குடியரசுத் தலைவர் ஆட்சி ஏற்படுவதால், அரசு நிர்வாகமும், அதிகாரிகள், ஊழியர்கள் கடமை உணர்ந்து செயல்படவும் வழி ஏற்படும்.
எமர்ஜன்சி எதேச்சாதிகாரம்; ஆனால் “”நோட்டா” ஜனநாயக வழி முறையே! இல்லை என்றால் நாடு மேலும் மேலும் பேரழிவை நோக்கியே செல்லும். ஏழை மக்கள் மேலும் ஏழைகளாகவும், கார்ப்பரேட் கம்பெனிகளும், பண முதலைகளும் மேலும் மேலும் கொழுக்கவுமே இந்த நமது தவறான தேர்தல் முறை வழிவகுக்கும். மக்களே நன்றாகச் சிந்தித்துச் சீர் தூக்கிப் பார்த்து உங்களின் பொன்னான வாக்குகளை விலைக்கு விற்காமல், உரிய முறையில் செலுத்தி நாட்டையும், நாட்டு மக்களையும் பேரழிவிலிருந்து பாதுகாக்க முன்வாருங்கள்; சிந்தித்துச் செயல் படுங்கள். இது எமது அன்பு வேண்டுகோள்!