அபூ அப்தில்லாஹ்
இதோ இறுதி நெறிநூல் அல்குர்ஆன் பறைசாற்றுகிறது!
நிச்சயமாக உங்கள் சமுதாயம் (வேற்றுமை ஏதுமில்லா) ஒரே சமுதாயம்தான். மேலும், நானே உங்கள் இறைவன். ஆகையால், எனக்கே நீங்கள் வழிபடுங்கள். (21:92)
(பின்னர்) அவர்கள் தங்களுக்கிடையே தங்கள் (மார்க்கக்) காரியங்களில் பிளவுபட்ட னர்; அனைவரும் நம்மிடமே மீள்பவர்கள். (21:93)
நிச்சயமாக உங்கள் சமுதாயம் (வேற்றுமை ஏதுமில்லா) ஒரே சமுதாயம்தான். எனவே, நீங்கள் இறை உணர்வுடன் (பயபக்தி) நடங்கள். (23:52)
ஆனால், அ(ச்சமுதாயத்த)வர்களோ தம் (மார்க்கக்) காரியத்தைத் தமக்கிடையே பல பிரிவுகளாப் பிரித்துவிட்டனர்; ஒவ்வொரு பிரிவினரும் தம்மிடம் இருப்பதைக் கொண்டே மகிழ்ச்சியடைபவர்களாய் இருக்கின்றனர். (23:53)
எனவே, அவர்களை ஒரு காலம்வரை தம் அறியாமையிலேயே ஆழ்ந்திருக்க (நபியே!) நீர் விட்டுவிடும். (23:54)
செல்வத்தாலும், பிள்ளைகளாலும் எதை நாம் அவர்களுக்குக் கொடுத்து உதவினோமோ அதுபற்றி அவர்கள் எண்ணிக் கொண்டார்களா? (23:55)
அவர்களுக்கு நன்மைகளில் நாம் விரைந்து வழங்குகிறோம் என்று (அவர்கள் எண்ணிக் கொண்டார்களா?), அவ்வாறல்ல! அவர்கள் (இதை) உணர்வதில்லை. (23:56)
இவை அல்லாமல் 3:103,105, 6:153,159, 30:32, 42:13,14 இறைவாக்குகள் ஒருபோதும் பிரியக்கூடாது. கருத்து வேறுபாடு காரணமாக அல்ல, பொறாமையின் காரணமாகவே பிரிவுகள் ஏற்படுகின்றன என்பதை அழுத்தமாகக் கூறுகின்றன.
6:153 இறைவாக்குக் கூறுவது போல் நேர்வழி நடப்பவர்கள் ஒருபோதும் சமுதாயத்தைப் பிளவு படுத்தக்கூடாது என்றே நாம் சொல்லி வருகிறோம். கோணல் வழிகளில் சென்று நரகை நிரப்பக் கூடியப்(பார்க்க : 32:13, 11:118,119) பெருங் கூட்டத்தினரிடம் இக்கோரிக்கையை வைக்கும் அளவிற்கு எம்மை மதிகெட்டவனாக ஆக்கவில்லை அல்லாஹ். அதற்கு மாறாக அபூ அப்தில்லாஹ் மூளை வரண்டு போய் சாத்தியமில்லாத ஒன்றை மீண்டும் மீண்டும் கூறி மக்களை வழி கெடுக்கிறார். அவர் மவ்லவி அல்ல. அரபி மொழி இலக்கண இலக்கியம் அவருக்குத் தெரியாது. அவருக்கு மார்க்கம் சொல்லும் தகுதி இல்லை என்று பெருமையடிக்கும் அனைத்துத் தரப்பு மவ்லவிகளும் ஏகோபித்துச் செய்தி பரப்புகின்றனர். மக்களை வழிகேட்டில் இட்டுச் செல்கின்றனர்.
உண்மையில் இந்த மவ்லவிகள் எம்மைக் குற்றப்படுத்தவில்லை. அகில உலகையும் படைத்த எல்லாம் வல்ல அல்லாஹ்வையே குற்றப்படுத்துகிறார்கள். ஆம்! அவர்களின் பெருமை காரணமாக குர்ஆனின் இவ்வசனங்களை விட்டும், நேர்வழியை விட்டும் இம் மவ்லவிகள் அல்லாஹ்வாலேயே திருப்பப்படுகிறார்கள். நேர்வழியைக் கோணல் வழியாகவும், கோணல் வழிகளை நேர்வழியாகவும் கொள்வதே அவர்களின் இலட்சியம். (பார்க்க:7:146)
எப்படி என்று பாருங்கள். 21:92, 23:52 இரண்டு இறைவாக்குகளிலும் அல்லாஹ் இந்தச் சமுதாயம் பிரிவுகள் இல்லாத ஒரே சமுதாயம். அந்த ஒரே சமுதாயத்தைப் பற்றிப் பிடியுங்கள். என் கட்டளைக்கே வழிப்படுங்கள் என்று 21:92 வசனத்திலும் 23:52 இறைவாக்கில் எனக்கே இறை உணர்வுடன் (தக்வா) நடந்து கொள்ளுங்கள் எனக் கூறி, நானே உங்களின் இறைவன் என நினைவூட்டிய பின்னரும், இந்தத் தெளிவான வழிகாட்டலை நிராகரித்து-குஃப்ரிலாகி (2:39) ஒன்றுபட்ட ஒரே சமுதாயத்தைப் பல பிரிவுகளாகப் பிரித்து அற்ப உலக ஆதாயம் அடைவதுடன் பிரிவுகளை நியாயப்படுத்தும் இம்மவ்லவிகள் இறை நம்பிக்கை உடையவர்களாக இருக்க முடியுமா? சிந்தியுங்கள்! ஜமாஅத்துல் முஸ்லிமீனும் ஒரு பிரிவு ஜமாஅத்து தான் எனக் கூறி மக்களை வழிகெடுக்க முடியுமா?
அல்லாஹ் ஒன்றுபட்ட ஒரே சமுதாயம் என்று நேரடியாகக் கூறிய பின்னர், ஆயினும் பல பிரிவுகளாகப் பிரிந்து வழிகேட்டில் செல்வீர்கள் என்று எச்சரித்திருப்பது உண்மை தான். இந்த வசனங்களை உறுதிப்படுத்தும் வகையில் நபி(ஸல்) அவர்களும் எனது உம்மத்து 73 பிரிவினர்களாகப் பிரிவார்கள். அவர்களில் 72 பிரிவினர் நரகத்திற்குரியவர்கள், ஒரே ஒரு பிரிவினர் மட்டுமே சுவர்க்கத்திற்குரிய கூட்டம், அவர்கள் நானும் எனது தோழர்களும் எவ்வாறு நடக்கிறோமோ அவ்வாறு நடப்பவர்கள் என்றும் உறுதிப்படுத்தி இருக்கிறார்கள். ஆக ஒன்றுபட்ட ஒரே சமுதாயம் என்று அல்லாஹ் கூறிய பின்னர், ஆயினும் நீங்கள் பிரியத்தான் செய்வீர்கள் என்று கூறியுள்ளதை மக்களுக்கு விளக்கும் கடமையாருடையது? 2:213, 16:44,64 இறைவாக்குகள் என்ன கூறுகின்றன? இந்தக் கட்டளைகளுக்கு அடிபணிந்து நபி (ஸல்) இந்தத் தடுமாற்றத்தைப் போக்காமல் விட்டுச் சென்று விட்டார்களா? 33:21 இறைவாக்குக் கூறுவது போல் நபி(ஸல்) அவர்களிடம் இதற்கு அழகிய முன்மாதிரி இல்லையா? 3:31 இறைவாக்குக் கூறுவது போல், இந்தச் சிக்கலைத் தீர்க்காமல் நபி(ஸல்) தன்னைப் பின்பற்றும்படி கூறிச் சென்றுவிட்டார்களா? சிந்தியுங்கள்!
மார்க்கத்தின் அனைத்து அம்சங்களையும் நான் தெளிவு படுத்திவிட்டேனா? என்று மூன்று முறை கேட்டு, நபி தோழர்கள் அனைவரும் ஏகோபித்து ஆம்! யாரசூலல்லாஹ்!! என்று ஒப்புதல் அளித்த பின்னர், அதற்கு அல்லாஹ் வைத் தவறாக சாட்சியாக்கினார்களா? உங் களை நான் வெள்ளை வெளேர் என்ற நிலையில் விட்டுச் செல்கிறேன். அதன் இரவும் பகலைப் போன்றது. அழிந்து நாசமாகிறவனைத் தவிர வேறு யாரும் வழிகெட்டுச் செல்லமாட்டார் கள் என்று தவறாகச் சொல்லி விட்டார்களா? சிந்தியுங்கள்.
இப்படி நடுநிலையுடன் முறையாகச் சிந்திப்பவர்கள், நபி(ஸல்) அவர்களின் மரணத்திற்குப் பின் மார்க்கத்தில் சுய விளக்கம் கொடுக்கும் அதிகாரம் யாருக்கும் இல்லை; அதிலும் குறிப்பாக மார்க்கத்தை வயிற்றுப் பிழைப்பாகக் கொண்டிருக்கும் இம்மவ்லவிகளுக்கு இல்லவே இல்லை என்பதைத் திட்டமாக அறிய முடியும். மேலும் இப்படி முறையாகச் சிந்திப்பவர்கள், ஒன்றுபட்ட ஒரே சமுதாயத்தை எப்படி நிலைநாட்ட வேண்டும் என்று திட்டமாகத் தெளிவாக நபி(ஸல்) வழிகாட் டியே சென்றுள்ளார்கள் என்பதை நிச்சயம் அறிய முடியும்! எப்படி என்று பாருங்கள்.
நபி(ஸல்) அவர்களின் நபித்துவ 23 வருட வாழ்க்கையில் குறிப்பாக மதீனா 11 வருட வாழ்க்கையில் முஸ்லிம்கள் என்ற நிலையில் இன்றைய முஸ்லிம் சமுதாயத்தில் இருப்பவர்களைவிட ஆகக் கேடுகெட்டவர்கள் நபி(ஸல்) அவர்கள் கூடவே இருந்தார்கள். இன்றைய முஸ்லிம்கள் தர்கா சடங்குகளைத்தான் செய்கிறார்கள். அவர்களோ லாத், மனாத் சிலைகளை மனித ஷைத்தான்களான (தாஃகூத்) தாருந் நத்வா ஆலிம்களுடன் சேர்ந்து வணங்கிக் கொண்டிருந்தார்கள். இந்த உண்மையை அல்குர்ஆன் பகரா 2:8 முதல் 20 வரை வசனங்களையும், மற்றும் 3:167, 8:49, 9:47,64,67,101, 33:12,60, 57:13, 63:1, 4:61,88,138,140,142,145, 9:67,68,73, 29:11, 33:1, 12 -20, 24,48,73, 48:6, 63:1,8, 66:9, 9:67,68, 33:73, 48:6, 57:13, 3:167, 59:11 ஆகிய இறைவாக்குகளில் நயவஞ்சகர் பற்றிக் கூறி இருப்பதையும் நேரடியாகப் படித்து விளங்குகிறவர்கள் நிச்சயம் அறிய முடியும்.
இந்த நய வஞ்சகர்கள் (முனாஃபிக்) அனைவரும் உள்ளத்தால் ஈமான் கொள்ளாமல் உதட்டளவில் முஸ்லிம்கள் என நடித்தவர்கள். அவர்கள் ஈமான் கொள்ளவில்லை, நிராகரிப்பவர்கள் (காஃபிர்கள்) இணை வைப்பவர்கள் (முஷ்ரிக்கள்) குழப்பவாதிகள் என அல்லாஹ் 2:8, முதல் 20 வரை 13 இறைவாக்குகளில் கூறி இருப்பதை அறிய முடியும். இன்று முஹம்மது(ஸல்) அவர்களை இறைத் தூதராகவும், குர்ஆனை இறுதி நெறிநூலாகவும் மனப்பூர்வமாக ஒப்புக் கொள்ளாத ஒரேயோரு முஸ்லிமையும் இம்மவ்லவிகளால் காட்ட முடியுமா? குர்ஆன் உங்களுக்கு விளங்காது என இம்மவ்லவிகள் அண்டப் புளுகைக் கூறி அவர்களை குர்ஆனை நேரடியாகப் படித்து விளங்குவதைத் தடுத்திருப்பதால், வழிகேடுகளை நேர்வழியாகப் போதிக்கும் இம்மவ்லவிகளின் பின்னால் செல்கிறார்கள். அதனாலேயே ஷிர்க், குஃப்ர், பித்அத்களை நேர்வழியாக நம்பி மோசம் போய்க் கொண்டிருக்கிறார்கள். எவர வரது சூன்யப் பேச்சை (6:112) ஷைத்தான் அவர்களுக்கு அழகாகக் காட்டுகிறானோ அந் தந்த மவ்லவிகள் பின்னால் கண்மூடிச் செல்கி றார்கள். அதனாலேயே முஸ்லிம் சமுதாயத்தில் எண்ணற்றப் பிரிவுகள் காணப்படுகின்றன. இப்பிரிவுகள் அனைத்தும் இம் மவ்லவிகளின் பொறாமை குணம் காரணமாகவும், அற்பமான உலகியல் ஆதாயங்களை நோக்கமாகவும் கொண்டே கற்பனை செய்யப்பட்டுள்ளன.
(பார்க்க : 2:90. 213, 3:19, 42:14, 45:17)
இன்றைய முஸ்லிம்கள் இம்மவ்லவிகளின் துர்போதனைகளில் மயங்கி, கோணல் வழிகளை, அதாவது வழிகேடுகளை நேர்வழியாக கண்மூடித்தனமாக நம்பிச் செயல்படுகிறார்களே அல்லாமல், அல்லாஹ்மீதும், இறுதித் தூதர் மீதும் குர்ஆன் மீதும் மனப்பூர்வமான உண்மையான நம்பிக்கை உடையவர்களே. இதை இந்த மவ்லவிகளால் மறுக்க முடியுமா? நபியுடைய காலத்தில் உள்ளத்தால் ஈமான்- நம்பிக்கை கொள்ளாமல் உதட்டளவில் முஸ்லிம்கள் எனக் கூறி நடித்துக் கொண்டு, இஸ்லாத்தைக் குழிதோண்டிப் புதைக்க அவர்கள் செய்த சதித்திட்டங்கள் ஏட்டில் அடங்கா. அவர்களிலும் ஆகக் கேடுகெட்டவன் அப்துல்லாஹ் இப்னு உபை இப்னு ஸலூல் என்ற நயவஞ்சகன். அவனுக்கு நபி(ஸல்) அவர்கள் மீது இருந்த வெறுப்பும், குரோதமும் வேறு எந்த நயவஞ்சக முஸ்லிம்களுக்கும் இருக்கவில்லை. சத்தியத்தை நிலைநாட்ட, இஸ்லாத்தை அழித்தொழிக்கப் படை எடுத்து வந்த குறைஷ்களை எதிர்த்து இடம் பெற்ற யுத்த களங்களில் குறைஷ்களுக்கு மறைமுக உதவி செய்ததுடன், முஹாஜிர்கள், அன்சாரிகளுக்கிடையே சிண்டு மூட்டி விட்டு கலகத்தையும், குழப்பத்தையும் ஏற்படுத்தி யுத்த களத்தில் பலவீனத்தை ஏற்படுத்தினான். ஆயிஷா(ரழி) அவர்கள்மீது படு அவதூறைப் பரப்பி நபி(ஸல்) அவர்களையும், ஆயிஷா(ரழி) அவர்ளையும் சுமார் 50 நாட்கள் அமைதி இழக்கச் செய்தான். நபி(ஸல்) அவர் களது கண்ணியத்தைக் குலைக்கப் பெரும் சதிகள் செய்தான்.
(பார்க்க 24:11-25, புகாரீ 2661, 4751, 6857, 6858)
மேலும் நயவஞ்சகர்களின் கேடுகெட்ட நிலை பற்றி புகாரீ 1270, 1350, 5795, முஸ்லிம் 5353 முதல் 5369 வரை பார்த்து அறியலாம். ரஹீக் 2004 பதிப்பு பக்கம் 312, 396 முதல் 406 வரை நபி காலத்து முனாஃபிக்களின் ´ஷிர்க், குஃப்ர், பித்அத் மற்றும் நயவஞ்சகச் செயல்கள் தெளிவாக விவரிக்கப்பட்டுள்ளன. அவர்களில் அப்துல்லாஹ் பின் உபை பின் ஸலூல் ஆகக் கேடுகெட்டவனாக இருந்தான். சில சந்தர்ப்பங்களில் அவனது பெற்ற மகன் அப்துல்லாஹ் (ரழி), உமர்(ரழி), அப்பாத் இப்னு பிஷ்ர், வேறு சில நபி தோழர்கள், அவனைக் கொல்ல அனு மதி கேட்டபோது, அதை மறுத்து முஹம்மது தனது தோழரை அதாவது முஸ்லிமைக் கொலை செய்கிறார் என்று மற்றவர்கள் குற்றப்படுத்த என்னை ஆளாக்கி விடாதீர்கள் என்று தடுத்த ஆதாரங்களையே செய்திகளாகப் பார்க்க முடிகிறது.
நபிகாலத்து நயவஞ்சக முஸ்லிம்கள் ஈமான் கொள்ள மாட்டார்கள். நாளை அவர்களுக்குத் திட்டமாக நரகம்; அதுவும் நரகின் ஆக அடித் தட்டில் கிடந்து வெந்து கரியாவார்கள் என குர்ஆனின் பல வசனங்கள் கூறிக் கொண்டிருந் தும், அந்த நயவஞ்சக முஸ்லிம்களுக்கு காஃபிர், முஷ்ரிக் ஃபத்வா கொடுத்து, நபி(ஸல்) அவர்கள் தங்களின் உம்மத்திலிருந்து ஏன் வெளியேற்ற வில்லை? சிந்திக்க வேண்டாமா? அப்படி அந்த நயவஞ்சக முஸ்லிம்களை தமது உம்மத்திலிருந்து வெளியாக்கி இருந்தால், இஸ்லாத்திற் கும், நபி(ஸல்) அவர்களுக்கும், அவர்களின் குடும்பத்திற்கும் ஏற்பட்ட எத்தனையோ இடர் பாடுகளை, அவமரியாதைகளை, பொருள் இழப்புகளைத் தாராளமாகத் தடுத்திருக்க முடியுமே! ஏன் நபி(ஸல்) அப்படி குஃப்ர், ´ஷிர்க், ஃபத்வா கொடுத்து அவர்களைப் புறந்தள்ள வில்லை; உம்மத்திலிருந்து வெளியேற்றவில்லை? ஆம்! அந்த அதிகாரத்தை எல்லாம் வல்ல அல்லாஹ் தனது இறுதி தூதருக்கும் தரவில்லை என்பதை 3:128, 6:66,107, 11:12, 39:41, 42:6, 4:109, 17:54,86, 25:43 இன்னும் இவை போல் பல இறைவாக்குகள் உறுதிப்படுத்துகின்றன.
எடுத்துச் சொல்வது மட்டும்தான் உமது கடமை. அவர்களைத் திருத்தி நேர்வழிக்குக் கொண்டு வருவதோ, அவர்களை முஸ்லிம் உம்மத்திலிருந்து வெளியேற்றுவதோ உமது அதிகாரத்தில் உள்ளது அல்ல என்று திட்டமாக அல்லாஹ் எச்சரித்துள்ளதை அறிய முடிகிறது. அன்று நபி(ஸல்) அவர்கள் நயவஞ்சக முஸ்லிம்கள் அனைவரும் காஃபிர்கள், முஷ்ரிக்கள், அவர்கள் பின்னால் நின்று தொழக் கூடாது என்று ஃபத்வா கொடுத்து நயவஞ்சக முஸ்லிம்களை தமது உம்மத்திலிருந்து வெளியேற்றி இருந்தால், அவர்கள் தங்களை முஸ்லிம்கள் என்று சொல்லிக் கொள்ளவோ, முஸ்லிம் உம்மத்தில் மற்ற உண்மையான முஸ்லிம்களுடன் நெருங்கிப் பழகவோ வாய்ப்பு இருந்திருக் குமா? முழுக்க முழுக்க முஸ்லிம் உம்மத்திலி ருந்து ஒதுக்கப்பட்டிருப்பார்களா? இல்லையா? நபி(ஸல்) அவர்கள் அன்றைய நயவஞ்சக முஸ்லிம்களுக்கு குஃப்ர், ´ஷிர்க் ஃபத்வா கொடுக்கவில்லையே! ஏன்? ஆம்! தீர்ப்பளிக்கும் அதி காரம் அல்லாஹ்வுக்கு மட்டுமே உண்டு. அல்லாஹ்வின் அந்தத் தனி அதிகாரத்தில் எவ ருமே தலையிட முடியாது. அந்த தனி அதிகாரத் தையுடைய அல்லாஹ்வே தீர்ப்பளிப்பதை நாளை மறுமைக்கென்று ஒத்திவைத்திருப்பதை (பார்க்க : 2:210, 6:58, 10:11,19, 11:110, 19:39, 75, 41:45, 42:14, 21) நபி(ஸல்) அவர்கள் திட்ட மாக அறிந்திருந்தார்கள்.
அந்த அல்லாஹ்வின் அதிகாரத்தைக் கையில் எடுத்து அந்த நயவஞ்சக முஸ்லிம்களுக்கு குஃப்ர், ´ஷிர்க், ஃபத்வா கொடுத்து நபி(ஸல்) தமது உம்மத்திலிருந்து வெளியேற்றி இருந்தால், அவர்கள் ஏற்படுத்திக் கொண்டிருந்த பெருந் தொல்லைகளை, இடையூறுகளை விட்டும் விடுபட்டு நிம்மதியாக இருக்க முடியும் என்பதை நன்கு அறிந்த நிலையில்தான் நபி(ஸல்) அவர்கள் 42:21, 49:16, 4:140, 5:49, 6:68, 11:12, 12:108, 17:39, 73-75,86, 25:52, 28:85-88, 30:30, 33:1,2, 34:50, 40:35, 42:52, 45:18, 69:44-47 போன்ற இறைவாக்குகள் கூறும் கடுமையான எச்சரிக் கைகளைக் கவனத்தில் கொண்டு, மகாக் கொடிய நயவஞ்சக முஸ்லிம்களுக்கு குஃப்ர், ´ஷிர்க் ஃபத்வா கொடுத்து தமது உம்மத்துக்கு வழி காட்டவில்லை.
ஆனால் இன்றோ மார்க்கம் போதிக்கும் அதிகாரம் பெற்றவர்கள் என அண்டப் புளுகை, ஆகாசப் பொய்யை தொடர்ந்து கூறி பெருங் கொண்ட மக்களை வழிகேட்டில் இழுத்துச் சென்று நரகை நிரப்ப இருக்கும் அனைத்துப் பிரிவு மவ்லவிகளும், அல்லாஹ்வின் இந்தத் தனி அதிகாரத்தைத் தங்கள் கையில் எடுத்துக் கொண்டு சகட்டு மேனிக்குத் தங்களுக்கு வேண் டாவதவர்கள் மீது குஃப்ர், ´ஷிர்க் ஃபத்வா கொடுப்பதில் ஒருவரை ஒருவர் விஞ்சுகிறார்கள். ஃபிர்அவ்ன் சொன்னானே “”அன ரப்புக்கு முல் அஃலா-ரப்புகளுக்கெல்லாம் பெரிய ரப்பு நான்தான்” என்று பெருமை பேசினானே அவனை விடக் கீழ்த்தரமான நிலைக்குச் சென்று, அல்லாஹ்வே தீர்ப்பை மறுமைக் கென்று ஒத்தி வைத்திருக்கும் அந்த தனி அதிகாரத்தைத் தங்கள் கையில் எடுத்துச் சகட்டு மேனிக்கு குஃப்ர், ´ஷிர்க் ஃபத்வா கொடுத்து 21:92, 23:52 இரண்டு இறைவாக்குகள் உறுதியிட்டுக் கூறும் ஒன்றுபட்ட ஒரே சமுதாயத்தை எண்ணற்றப் பிரிவுகள் ஆக்கி அற்ப உலக ஆதா யங்களை அடைந்து வருகிறார்கள்.
இப்படி ஒரு பிரிவு மற்றப் பிரிவினருக்கு குஃப்ர், ´ஷிர்க் ஃபத்வா கொடுக்கின்றனரே அல்லாமல், அவர்களை முஸ்லிம் உம்மத்திலிருந்து வெளியேற்ற முடிகிறதா? அவர்களது பள்ளிக்கே வந்து தொழுவதைத் தடுக்க முடிகிறதா? முஸ்லிம்களோடு முஸ்லிமாக ஒரே மஹல்லாவில் வசிப்பதைத் தடுக்க முடிகிறதா? முஸ்லிம் என்ற நிலையில் சமுதாயத்திலும், அரசிலும் பெறும் உரிமைகளை, அவர்கள் முஸ்லிம்கள் இல்லை என்று நிலைநாட்டித் தடுக்க முடிகிறதா? இல்லையே! அதற்கு மாறாக இவர்களும் தங்களின் ஆர்ப்பாட்டம், போராட்டம் பந்த், சாலை மறியல் என குர்ஆனுக்கும், ஹதீஃதுக் கும் முற்றிலும் முரண்பட்ட ஹராமான செயல் பாடுகளுக்கு, நயவஞ்சகமாக இவர்களால் ´ஷிர்க், குஃப்ர் ஃபத்வா கொடுக்கப்பட்டவர்களையும் முஸ்லிமாக ஏற்றுச் செயல்படத் தானே செய்கிறார்கள். இது கடைந்தெடுத்த பச்சோந்தித்தனம் இல்லையா?
இதிலிருந்து என்ன தெரிகிறது? அவர்கள் அல்லாஹ்வின் சட்டத்தை அமுல்படுத்த வில்லை. அற்பமான உலகியல் ஆதாயங்களைக் குறிக்கோளாகக் கொண்டு, தங்கள் மனோ இச்சையை ரப்பாகக் கொண்டு முஸ்லிம்களைக் காஃபிராக்கும் மிகக் கொடிய செயலைச் செய்து 8:46 இறைவாக்குக் கூறுவது போல் சமுதாயைத்தைப் பலவீனமாக்கி, கோழைகளாக்கி, சிதைத்துச் சின்னாபின்னமாக்கி, அவர்கள் அழிந்து படும் அற்பமான இவ்வுலக வாழ்க்கையை வளப்படுத்திக் கொள்கிறார்கள்.
இன்று, 3:139 இறைவாக்குக் கூறுவது போல், அனைத்துச் சமுதாயங்ளையும் விட ஆக மேலான சமுதாயம் என்ற நிலைக்கு மாறாக, அனைத்து சமுதாயங்களையும் விட ஆக கேடு கெட்டச் சமுதாயமாக, கீழ்மட்டச் சமுதாய மாக, ஏன்? SC, ST சமுதாயங்ளை விடக் கீழான சமுதாயமாக ஆனதற்கு முஸ்லிம் சமுதாயத்தை எண்ணற்றப் பிரிவுகளாக்கியுள்ள இந்த மவ்லவிகள்தான் காரணம் என்பதில் சந்தேகமுண்டா? ஆயினும் அழிந்துபடும் அற்பமான இவ்வுலக வாழ்க்கையில் மயங்கி (பார்க்க : 7:175-179, 47:25) அனைத்துப் பிரிவுகளின் மவ்லவிகளும் பிரிவுகளை நியாயப்படுத்தத்தான் செய்வார்கள். அல்லாஹ் பெயரிட்டு, நபி(ஸல்) அவர்கள் நடைமுறைப்படுத்திய (பார்க்க 22:78, 41:33, 3:103) ஜமாஅத்துல் முஸ்லிமீனும் ஒரு பிரிவு ஜமாஅத்துதான், அபூ அப்தில்லாஹ்வின் ஜமாஅத் என ஜமுக்காளத்தில் கடைந்தெடுத்தப் பொய்யைக் கூறி, தங்கள் தங்கள் ஆதரவாளர்களைத் தங்கள் தங்கள் பிரிவுகளில் தக்க வைத்து உலகியல் ஆதாயங்களை அடைவதோடு, நாளை தாங்களும், தங்கள் பக்தகோடிகளும் நரகை நிரப்ப வழிவகுப்பார்கள். நாளை நரகில் இம்மவ்லவிகளதும், இவர்களது பக்த கோடிகளதும் ஒருவர் மீது ஒருவர் சுமத்தும் குற்றச் சாட்டுக்களை 7:35-41, 33:66-68, 34:31-33, 37:27-33, 38:55-64, 40:47-50, 41:29, 43:36-45 குர்ஆன் வசனங்கள் படம் பிடித்துக் காட்டுகின்றன.
ஆம்! உண்மைதான்; ஜமாஅத்துல் முஸ்லிமீனும் 73 பிரிவுகளின் நேர்வழி நடக்கும் ஒரு பிரிவு ஜமாஅத்துதான்; அபூ அப்தில்லாஹ்வின் ஜமாஅத் அல்ல. அல்லாஹ் பொருந்தி ஏற்றுக் கொள்ளும் ஒரேயொரு ஜமாஅத். இந்த மவ்லவிகள் சுயமாகப் பெயரிட்டு நியாயப்படுத்தும் அனைத்துப் பிரிவு ஜமாஅத்தினரும் நரகத்திற் குரிய ஜமாஅத்துகள் என்பது அல்லாஹ்வும், அவனது தூதரும் உறுதிப்படுத்தும் பேருண்மையாகும். நேர்வழி நடக்கும் ஒரே பிரிவு ஜமாஅத் திற்கும், வழிகேட்டில், சென்று நரகை நிரப்ப இருக்கும் எண்ணற்றப் பிரிவுகளின் ஜமாஅத்திற்கும் உள்ள வேறுபாடுகள் இவைதான்.
வழிகேட்டில் செல்லும் ஒவ்வொரு பிரிவின ரும் தாங்கள் மட்டும் தான் நேர்வழியில் இருப்பதாகப் பெருமைப்படுவார்கள். மற்றப் பிரிவினர் அனைவரும் வழிகேட்டில் இருப்பதாக அறிவிப்புச் செய்வார்கள். மிக எளிதாக அவர்கள் மீது குஃப்ர், ´ஷிர்க் ஃபத்வாக்களை வாரி இறைப்பார்கள். அவர்கள் பின்னால் நின்று தொழக் கூடாது என்று ஃபத்வா கொடுப்பார்கள். அவர்களின் நல்லது கெட்டதுகளில் கலந்து கொள்ளக்கூடாது. அவர்கள் இறந்து விட்டால் அவர்களுக்காக ஜனாசா தொழுகை தொழ வைக்கவும் கூடாது, தொழவும் கூடாது என்றெல்லாம் குர்ஆனுக்கும், ஹதீஃதுக்கும் முரணாக ஃபத்வா கொடுப்பார்கள். தங்கள் பிரிவினரைத் தவிர இதர அனைத்துப் பிரிவின ரையும் முஸ்லிமாக ஏற்கவே மாட்டார்கள். இதுதான் நரகை நிரப்ப இருக்கும் எண்ணற்றப் பிரிவினர்களின் எதார்த்த நிலை.
அதற்கு நேர்மாறாக நேர்வழி செல்லும் ஒரே யயாரு பிரிவினரின் நிலை இருக்கும். வழிகேட்டில் சென்று நரகை நிரப்ப இருக்கும் (பார்க்க 32:13, 11:118, 119) எண்ணற்றப் பிரிவினர் தங்களுக்கென்று சுயமாகக் கற்பனை செய்து விதவிதமாகப் பெயர்களைச் சூட்டிக் கொண்டிருப்பது போல், நேர்வழி நடப்பவர்கள் அல்லாஹ் பெயரிட்டு (பார்க்க: 22:78, 41:33) நபி(ஸல்) அவர்கள் நடைமுறைப்படுத்தி முஸ்லிம்களுக்காக விட்டுச் சென்ற “”ஜமாஅத்துல் முஸ்லிமீன்” அல்லாத பிரிதொரு பெயரைச் சுயமாகக் கற்பனை செய்து சூட்டிக் கொள்ள மாட்டார்கள் “”ஜமாஅத்துல் முஸ்லிமீன்” அபூ அப்தில்லாஹ்வின் ஜமாஅத் என்ற அண்டப் புளுகை, ஆகாசப் பொய்யைக் கூறும் மனித ஷைத்தான்களின் தாஃகூத்களின் கூற்றை ஏற்க மாட்டார்கள். அவர்களை விடக் கேடுகெட்ட ஒரு ஜன்மம் இவ்வானத்தின் கீழே இல்லவே இல்லை என உறுதி கொள்வார்கள்.
தன்னை முஸ்லிம் எனப் பிரகடனப்படுத்தும் ஒருவரை, அவர் உளப்பூர்வமாக ஒப்புக் கொண்டாலும், வெறும் நாவினால் சொன்னாலும் அவரை முஸ்லிமாக ஏற்று அவருக்கு முஸ்லிமுக்குரிய அனைத்து உரிமைகளையும் கொடுப்பார்கள். எந்த முஸ்லிமுக்கும் குஃப்ர், ´ஷிர்க் ஃபத்வா கொடுக்கத் துணிய மாட்டார்கள். எந்த முஸ்லிம் பின்னாலும் தொழக் கூடாது என்று ஃபத்வா கொடுக்க மாட்டார்கள். ஒருவர் முஸ்லிம் என்ற நிலையில் குஃப் ரான, ´ஷிர்க்கான செயல்களைச் செய்வதைத் தம்கண்களால் நேரடியாகக் கண்டாலும், அவை குர்ஆனுக்கும், ஹதீஃதுக்கும் முற்றிலும் முரணானவை, அவற்றை விட்டு தவ்பா செய்து மீளாவிட்டால், நாளை கொடிய நரகை அடைய நேரிடும் என குர்ஆன், ஹதீஃத் ஆதாரங்களைக் காட்டிக் கடுமையாக எச்சரிப் பார்களே அல்லாமல், அப்படிக் கடுமையாக எச்சரித்த பின்னரும், மீண்டும் மீண்டும் அக் கொடிய செயல்களில் அவர்கள் ஈடுபட்டா லும், அதற்காக அவர்களுக்கு குஃப்ர், ´ஷிர்க் ஃபத்வா கொடுக்கத் துணிய மாட்டார்கள்.
அவர்கள் பின்னால் நின்று தொழக் கூடாது, அவருக்காக ஜனாஸா தொழுகை தொழ வைக்கக் கூடாது, தொழவும் கூடாது, அவர்களின் நல்லது கெட்டதுகளில் கலந்து கொள்ளக் கூடாது, அவர்களோடு சலாம், கலாம் என எதுவும் கூடாது என சுயமாக ஃபத்வா கொடுத்து அவர்களை எதிரிகளாக ஒருபோதும் பார்க்க மாட்டார்கள். அவர்களின் இறுதி முடிவை அதிகாரம் படைத்த அல்லாஹ்விடம் விட்டு விட்டு, அவர்களோடு முஸ்லிம்கள் என்ற நிலையிலேயே பழகுவார்கள். எந்த ஒரு நிலையிலும் எப்படிப் பட்டச் சூழ்நிலையிலும், தங்களை முஸ்லிம்கள் என் போரை முஸ்லிம்கள் இல்லை என்றோ, காஃபிர், முஷ்ரிக் என்றோ ஒருபோதும் சொல்லத் துணியமாட்டார்கள். நம்மைப் படைத்த எல்லாம் வல்ல அல்லாஹ்வின் 21:92, 23:52 கட்டளைகள்படி பிளவுபடாத ஒன்றுபட்ட ஒரே ஜமாஅத்துல் முஸ்லிமீனை கட்டிக் காக்க முற்படுவார்கள். இவர்களே நேர்வழி நடுப்பவர்கள்.
ஆனால் கோணல் வழிகளில் சென்று நரகை நிரப்ப இருக்கும் பெருங் கூட்டத்தினருக்கு (பார்க்க : 32:13, 11:118,119) இந்த குர்ஆனின் போதனைகள் எட்டிக் காயாகக் கசக்கவே செய்யும். இது 17:41,45-47,89, 22:72,25:60, 35:42 குர்ஆன் வசனங்கள் கூறும் மறுக்க முடியாத உண்மையாகும். அதற்கு மாறாகப் பல பிரிவுகளில் பிரிந்து வழிகேட்டில் செல்லும் முஸ்லிம்களையும் முஸ்லிம்களாக ஏற்று நேர்வழி நடக்கும் முஸ்லிம்களை வழிகெடுத்து அவர்களையும் கோணல் வழிகளில் அதாவது ஷைத்தானின் வழியில் செல்ல வைக்க, இவ்வழி கேட்டுப் பிரிவினர், “”அவர்கள் உம்மாட்ட சாப்பிட்டியா என்று கேட்டாலும் ஆமா! வாப்பாட்டா சாப்பிட்டியா என்று கேட்டாலும் ஆமா! என்று சொல்லும் அறிவல்லாத சிறு குழந்தைகள் போன்றவர்கள் என்று தங்களின் பக்தகோடிகள் மூலம் அவதூறு பரப்பத்தான் செய்வார்கள். இம்மவ்லவிகளின் அசல் குறிக்கோளே பெருங்கொண்ட மக்களை வழி கெடுத்து நரகில் தள்ளுவதோடு அவர்கள் அற்பமான உலகியல் ஆதாயங்களை அடைவது தானே. அவர்களின் வசீகர, சூன்ய, உடும்புப் பிடியிலிருந்து விடுபட்டவர்களே வெற்றியாளர்கள். நாளை அல்லாஹ்வின் பொருத்தத்துடன் சுவர்க்கம் புகுகிறவர்கள். எல்லாம் வல்ல அல்லாத அந்தச் சின்னஞ்சிறு கூட்டத்தில் எம்மனைவரையும் இணைத்தருள்வானாக.