கேப்டன் அமீருத்தீன்
“அந்நஜாத்’ மே மாத இதழில் “தொழுகை இருப்பில் விரலசைப்பது’ பற்றிய கட்டுரை யைக் கண்டேன். கடந்த 2010ம் ஆண்டு “சமரசம்’ இதழில் அது பற்றி எனக்கு ஏற்பட்ட ஒரு அனுபவ நிகழ்ச்சியை எழுதியிருந்தேன். பின்னர் அக்கட்டுரையை 2012ம் ஆண்டு “அந்நஜாத்’தில் வெளிவந்த கலாநிதி அஷ்ரஃப் அவர்களின் செய்தியுடன் பூர்த்தி செய்து விரைவில் வெளி வர இருக்கும் “பசுமை பூத்த நினைவுகள்’ (இஸ்லாமிய சிந்தனை) என்ற எனது தொகுப்பு நூலில் இடம் பெறச் செய்துள்ளேன்.
இந்நிலையில் மே மாத அந்நஜாத்தில் மேற்கண்ட கட்டுரையைக் கண்ட பிறகு அது தொடர்பான எனது கட்டுரையை “அந்நஜாத்’ வாசகர்கள் பயனுக்காக அனுப்பியுள்ளேன் “அஸ்பயர்’ (Aspire) என்னும் புகழ்பெற்ற கல்வி நிறுவனம் கடந்த பிப்ரவரி 20ம் தேதி (2010) சென்னை அசோக் நகரில் கிளை (Branch) ஒன்றைத் துவக்கியது. அடையார் கிளை “அஸ்பயர்’ உரிமையை சில மாதங்ளுக்கு முன் நான் எடுத்திருக்கிறேன். அந்த முறையில் புது அலுவலகத் திறப்பு நிகழ்ச்சிக்கு நான் அழைக்கப் பட்டிருந்தேன். நிகழ்ச்சிக்குப் பல தரப்பு மாணவ மாணவியர்களும் அவர்களின் பெற்றோர்களும் வந்திருந்தார்கள்.
நிகழ்ச்சியில் “அஸ்பயர்’ இயக்குனர்களில் ஒருவரும், சிறந்த கல்வியாளரும் (Academic) மனோதத்துவ நிபுணருமான டாக்டர் பால்ராஜ் அவர்கள் “”தேர்வில் 100 சதம் மதிப்பெண்கள் பெறுவது எப்படி?” என்ற தலைப்பில் உரையாற் றினார். அது முழுக்க முழுக்க நடக்க இருக்கும் தேர்வுகளைச் சந்திக்க இருக்கும் மாணவ மாணவியர்களின் நன்மையைக் கருதி அவர்களை முன்னிருத்தியே பேசப்பட்டது. சொற்பொழி வின் முடிவில் அவர் கூறிய சில கருத்துகளும், செய்து காட்டிய செயல் முறையும், பயிற்சி வகுப்பும் அனைவரையும் பெரிதும் கவர்ந்தது. கூட்டத்திலிருந்த நானும் அதில் முழுமையாக ஈர்க்கப்பட்டேன். டாக்டர் பால்ராஜ் கூறினார்.
“”….நாம் விழித்திருக்கும் நிலையிலும், தூக்கத்திலிருக்கும் போதும் நரம்பு மண்டல மான மூளையில் மின் அலைகள் (Electronic Impulses) ஏற்படுகின்றன. விழித்திருந்து செயல் படும் போது அந்த மின்னலைகள் கூடுதலாக வும், உறங்கும் போது குறைவாகவும் இருக்கின் றன. நரம்பு மண்டல மின்னலைகள் நின்று விட்டால் மனிதன் இறந்து விடுகிறான். ஆனால் விழித்துச் செயல்படும் நிலைக்கும் தூக்கத்துக் கும் இடையே ஒரு நடுநிலை இருக்கிறது. அதனை “ஆல்ஃபா நிலை’ (Alpha Status) என்று சொல்லுவார்கள். அது விழித்திருக்கும் நிலை யாக இருந் தாலும் அந்நிலையில் மின்னலைகள் ஒரே சீராக இருக்கும். அந்த நிலையில் மனிதன் உணர்ச்சி வசப்படமாட்டான். கோபம் கொள்ள மாட்டான். அச்சமும் துக்கமும் அவனை அணுகாது. பொறுமையே அவனை ஆளும். சிந்தனைத் திறனையும், மன ஓர்மையை யும் கட்டுப்பாட்டையும் ஒருவர் அந்த நிலை யில் தான் பெற முடியும்.
“”அந்த நிலையிலிருந்து ஒரு மாணவன் பாடத்தைப் படித்தால் அதுவரை அவனுக்கு புரியாமல் இருந்த பாடம் புரிய வரும். தெரியா மல் இருந்த கணக்கு அவனுக்குத் தெரிய வரும். நினைவாற்றல் வளரும். ஞாபக சக்திப் பெருகும். தேர்வு அச்சமின்றி, படபடப்பு, மன அழுத்தம், சோர்வு எதுவுமின்றி மன அமைதியுடன் சுற்றுச் சூழல் பாதிப்பு இல்லாமல் முழுக் கவனத்துடன் தெளிவாக சிறு தவறும் (Silly Mistakes) செய்யா மல் தேர்வு எழுத முடியும். அந்த “ஆல்பா நிலை’ யைச் சாதாரண பயிற்சிகள் செய்து நாம் பெறலாம்”.
மேற்கண்டக் கருத்துகளைக் கூறியபின் டாக்டர் பால்ராஜ் அந்த பயிற்சி முறையை செய்து காட்டினார். சொல்லியும் கொடுத்தார். அங்கிருந்த அனைவரும் அந்தப் பயிற்சியைச் செய்தோம். அதற்கு முன் “”பார்வைப் புலன்” (Sense of Sight) எப்படி செவிப்புலன் (Sense of Hearing) விட நமது கவனத்தை மிகைத்திருக்கிறது என்பதை ஒரு செயல்முறை (Demons-tration)யில் விளக்கினார்.
முதலில் வலது கையை நேராக உயர்த்தி “சுட்டு விரலை’ நீட்டினோம். நீட்டிய அவரது விரலைப் பார்த்துக் கொண்டே அவரவர் கழுத்தின் பக்கம் அவரவர் விரல்களைக் கொண்டு போகும்படி கூறியவர், தமது விரலை மட்டும் தமது கன்னத்தில் வைத்தார். கூட்டத்தி லிருந்த அனைவரும் அப்படியே கன்னத்தில் வைத்தோம். அது பற்றி டாக்டர் பால்ராஜ் விளக்கினார்.
“”ஒரு செயலை நமது கண்கள் காணும் போது இயற்கையாக நமது கவனம் மிகுதியாக “பார்வைப் புலன்’ பக்கமே ஈர்க்கப்படுகிறது. அதனால் தான் “கழுத்தின் பக்கம் உங்கள் விரலை வையுங்கள்’ என்று நான் கூறியதை உங்கள் செவிகள் கேட்டாலும் அதன் பக்கம் உங்கள் கவனம் செல்லவில்லை. என்னைப் பார்த்துக் கொண்டே நீங்களும் விரல்களை உங்கள் கன்னங்களில் வைத்தீர்கள். நாம் இங்கு செய்யப்போகும் பயிற்சியில் நீங்கள் கண்களை திறந்து வைக்கலாம். நீட்டும் சுட்டு விரலை மட்டும் நீங்கள் பார்த்தவண்ணம் இருக்க வேண்டும். கவனத்தை முழுமையாக அதன் மீது செலுத்த வேண்டும். அப்போது தான் அங்கு மிங்கும் சிதறி ஓடும் உங்கள் எண்ணங்களை ஒருமுகப்படுத்த முடியும். மன ஓட்டத்தைக் கட்டுப்படுத்தி ஒரு நிலைக்கு அதனைக் கொண்டு வர முடியும். அந்நிலையில் வெளிப் புற ஓசைகளோ சப்தங்களோ உங்களைத் தீண்டாது, பாதிக்காது, கவனத்தை மறு பக்கம் திருப்பாது. அப்படிச் செய்ய முடியாது என்று நினைப்பவர்கள் மட்டும் கண்களை மூடி பயிற்சியைச் செய்யலாம்.”
பயிற்சி என்னவென்றால், நாற்காலிகளில் உட்கார்ந்திருந்த எங்களை நிமிர்ந்து பின்புறம் சாயாமல் தரையில் பாதங்களை நேராகப் பதித்து கால்களை சற்று விலக்கி அமரும்படி செய்தார். இரு தொடைகளிலும் கைகளை வைத்து விரல்களை நீட்டும்படி செய்தார். வலது கை சுட்டு விரலை மட்டும் நீட்டி மற்ற விரல்களை மடக்கிக் கொள்ளும்படி செய்தார். பார்வையை நீட்டிய சுட்டு விரலில் செலுத்தி கவனத்தை அதன்மீது திருப்பும்படி கூறினார். அந்நிலையில் சுமார் 10 நிமிடங்கள் நாங்கள் அமர்ந்திருந்த போது மனதை ஒருமைப்படுத் தும் வகையில் டாக்டர் பால்ராஜ் பேசினார். அதே நேரத்தில் ஒரு மெல்லிய குழலோசையும் ஒலித்தது. பயிற்சி முடிந்ததும் டாக்டர் பால்ராஜ் அது பற்றி விளக்கினார்.
உங்கள் மனம் “”ஆல்ஃபா நிலை”க்குக் கொண்டு வரப்பட்டால் குழல் ஓசை உங்க ளுக்குக் கேட்காது. நான் பேசுவதையும் கூட நீங்கள் சரியாக அறிய மாட்டீர்கள். உங்கள் மனம் எதை நாடுகிறதோ அதை மட்டுமே நீங்கள் அறிவீர்கள். அந்த நிலையை இந்த மாதிரி 10 அல்லது 15 பயிற்சிகளில் நீங்கள் பெற முடியும். முயற்சி செய்து பாருங்கள்.
கூட்டத்திலிருந்த சிலர் எழுந்து பயிற்சியின் போது தாங்கள் பெற்ற அனுபவங்களைக் கூறினார்கள். பின்னர், நன்றியுரைக்குப் பின் கூட்டம் கலைந்தது. அப்போது டாக்டர் பால்ராஜ் என்னை அழைத்துப் பேராசிரியரே, நீங்கள் ஒன்றும் சொல்லவில்லையே! என்று கேட்டார். நான் கூறினேன்.
“”அற்புதம்! ஒவ்வொரு மாணவனுக்கும் இது அவசியம் தேவை, அதே நேரத்தில் மன அழுத்தம் (Tension) மிகுந்த இந்த காலத்தில் நாம் ஒவ்வொருவரும் இந்த பயிற்சியைச் செய்ய வேண்டும். உண்மையில் இந்த பயிற்சி யைத் தான் ஒரு நாளைக்கு 5 நேரம் பலமுறை முஸ்லிம்கள் செய்கிறார்கள். தொழுகையை முறையாகத் தொழுபவர்களும் உண்டு. சடங்கு சம்பிரதாயமாகத் தொழுபவர்களும் உண்டு. பொடுபோக்காய்த் தொழுபவர்களை “”தொழு கையைத் திருடுபவர்கள் என்று நபி(ஸல்) கண்டித்திருக்கிறார்கள்.
காலாகாலத்தில் நேரம் எடுத்து ஆர அமர முறையாக தொழுபவர்க ளுக்கு நிச்சயம் நீங்கள் குறிப்பிட்ட அந்த “ஆல்ஃபா நிலை’ என்பது கிடைக்கும் என்பதில் சந்தேகமில்லை. தொழுகையின் போது நாங்கள் பல நிலைகளைக் கடைபிடிக்க வேண்டும். அவற்றின் பொருளும், தத்துவங்களும் எனக்கு ஓரளவு தெரியும். ஆனால் ஒன்று மட்டும் எனக்கு இதுவரை தெரியாமல் இருந்தது. இப்போது உங்கள் பயிற்சி வகுப்புக்கு வந்த பின் அதையும் தெரிந்து கொண்டேன்” என்றேன். “”அது என்ன?” என்று ஆர்வமுடன் வினவினார் டாக்டர் பால்ராஜ்.
“”வலது கை சுட்டு விரலை நீட்டுவது பற்றி யது தான் அது. அப்படி ஒரு நிலையும் தொழு கையில் உண்டு. “அத்தஹிய்யாத்’ இருப்பு நிலையில் சுட்டு விரலை நீட்ட வேண்டும் என்று சில அறிஞர்களும், வேகமாக ஆட்ட வேண்டும் என்று சிலரும் கூறுகிறார்கள். “”நீட்டி மடக்க வேண்டும்” என்று மற்றும் சிலரும் கூறுகின்றனர். ஆனால் “”நீட்டிய சுட்டு விரலைப் பார்த்த வண்ணம் நபிகளார் பிரார்த்தனை செய்தார் கள்” என்று ஒரு செய்தி ஹதீஃதில் இருக்கிறது. (ஆதாரம் :The Prophet’s Prayer by Shaik Nasiruddeen Al Bani, page :65) அதன் பொருளை யும், நோக்கத்தையும் நான் இப்போதுதான் புரிந்துக் கொண்டேன். தொழுகையில் சுட்டு விரலை நீட்டுவதற்கு இதை விடவும் சிறந்த காரணம் இருக்க முடியாது. இருப்பினும் இறைவனும் அவன் தூதருமே நன்கு அறிந்தவர்கள்” என்றேன் நான். “”அப்படியா?” என்று டாக்டர் பால்ராஜ் வியப்பின் எல்லைக்கே போனார்.
இருட்டில் தொழுவதற்கு நமக்கு அனுமதி இல்லை. பிற சமயத்தவர் செய்வது போல் கண் களை மூடி மெளன தியானம் செய்வதும், தொழுகையில் இல்லை. இங்கு பல நிலைகள் உண்டு. நிற்பதும், குனிவதும், கைகளை உயர்த்துவதும், முகம் குப்புற வீழ்வதும், மண்டி யிட்டு அமர்வதும் அந்நிலைகள். நிற்கும்போது குர்ஆன் வசனங்களை ஓதுகிறோம். அல்லது இமாம் ஓதுவதை மெளனமாய் கேட்கிறோம். மற்ற நிலைகளில் மெளனமாய் பிரார்த்தனை புரிகிறோம். ஆகவே, இஸ்லாமிய வணக்க வழிபாடு மெய்மறந்த நிலையில் செய்யப்படுவது அல்ல. சுயநிளைவுடன் விழித்த நிலையில் மன ஒருமைப்பாட்டுடன் இறையச்ச உணர்வுடன் செய்யப்படுவது. அப்படியானால் அந்நிலையை அடைவதுதான் எப்படி? நிற்கும் போது “சுஜூது’ நிலையில் நெற்றி படும் இடத்தை நோக்க வேண்டும் என்று நாம் ஏவப்பட்டிருக்கிறோம். அப்படியே “அத்தஹிய்யாத்’ என்னும் இருப்பு நிலையில் நீட்டிய சுட்டு விரலை நாம் நோக்க வேண்டும் என்று நபிகளார் வழிகாட்டுகிறார்கள். “”ஆல்ஃபா நிலை” என்னும் அந்த சாந்த நிலையை அடைவதற்கு அதுவே வழி என்று அறிவியலும் சுட்டிக் காட்டுவது நம் சிந்தனைக்கு விருந்தன்றோ! (விரலை வேகமாக ஆட்டுவது அந்த ஆல்ஃபா நிலையை-சாந்த நிலையை அடையவிடாமல் தடுப்பதாகும் . ஆ-ர்)
விரலைச் சுட்டிக் காட்டுவதே நபிவழி என்று கலாநிதி யூ.எல்.ஏ. அஷ்ரப் Ph.D. Al-Azhar (தலைவர்-தாருல் ஹதீஃத், மற்றும் உதவிப் பேராசிரியர், மன்னர் காலித் பல்கலைக்கழகம், சவுதி அரேபியா) அவர்களும் கருத்து கூறியுள் ளார். பார்க்க அந்நஜாத் :ஜூன் 2012 பக்கம் 15, தனது கருத்துக்கு ஆதாரமாக பேராசிரியர் அஷ்ரப் கீழ்க்கண்ட ஹதீஃத்களை ஆதாரமாகக் குறிப்பிடுகின்றார்.
1. நபி(ஸல்) அவர்கள் தொழுகையில் அமர்ந்தால். தனது இடது பாதத்தை தனது தொடைக்கும் கணுக் காலுக்குமிடையில் வைத்துக் கொண்டு, வலது பாதத்தை விரித்துக் கொள்வார்கள். வலது கையை வலது தொடை யில் வைத்துக் கொள்வார்கள். தனது சுட்டு விரலால் கிப்லாவை நோக்கி சுட்டிக் காட்டுவார்கள் என அப்துல்லாஹ் இப்னு ஸுபைர் (ரழி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
(முஸ்லிம் : 1310)
2. நபி(ஸல்) அவர்கள் தொழுகையில் அமர்ந் தால், தனது வலது கரத்தை வலது தொடையில் வைத்து, எல்லா விரல்களையும் மடித்துக் கொண்டு பெருவிரலுக்கு அடுத்துள்ள விரலால் சுட்டிக் காட்டுவார்கள். தனது இடது கரத்தை இடது தொடையில் வைத்துக் கொள்வார்கள் என அப்துல்லாஹ் இப்னு உமர்(ரழி) அவர்கள் அறிவிக்கிறார்கள். (முஸ்லிம் : 1311)