Y.முகமது ஹனீப், திருச்சி
“பிறையைக் கண்ணால் பார்த்துத்தான் மாதத்தைத் துவக்க வேண்டும்’ என்பது சரிதானா?…..! என்றால் அதுதான் இல்லை. பிறகு ஏன் சந்திரப் பிறை பார்த்து ரமழான் நோன்பைத் துவங்குகின்றனர் என்பதுதான் பேதைகளின் கேள்வி. இதற்கான பதில் என்னவென்றால்
முதலாவதாக நாம் இப்படி எடுத்துக் கொள்ள வேண்டும். அதாவது (அது குர்ஆன் ஹதீஃதுக்கு உட்பட்டு வரவேண்டும்) என்ன வென்றால், அந்தக் காலத்தில் விஞ்ஞான கண்டு பிடிப்புக்கள், வானாராய்ச்சிக் கணக்கீடுகள், துல்லியமானதாக இல்லை. ஆகவே பிறையின் தோற்றம் கண்டு நோன்பு பிடித்தார்கள். பூமி சூரியனைச் சுற்றி வருகிறது; அது தன்னைத் தானே சுற்றுகிறது; என்பதெல்லாம் தெரியாத காலம். பூமி தட்டையானதுதான் என்று நம்பிக் கொண்டிருந்த காலம்.இதை சுட்டிக் காட்டவே நபி(ஸல்) “”நாம் விண்கலையை அறியாதவர்களாய் இருக்கிறோம், அதை கணக்கிட்டு எழுதவும் தெரியாத உம்மிகளாய் இருக்கிறோம், ஆகவே மாதம் என்பது 29 ஆகவும் 30 நாட்களாகவும் இருக்கும்,” (காண்க: புகாரி ஹதீஃத் எண் 1913) என்று முன்னறிவிப்புச் செய்தார்கள்.
இன்னொரு உதாரணத்தையும் இங்கு நாம் கணக்கில் கொள்ள வேண்டும். அதாவது: நீங்கள் சூரியனைப் பார்த்து (அதன் ஓட்டத்தை வைத்து) ஐங்காலத் தொழுகை நேரங்களை ஆக்கிக் கொள்ளுங்கள் என்ற நபிமொழிக்கேற்பவா நாம் தற்காலத்தில் தொழுகை நேரங்களைக் கடைபிடித்து வருகிறோம்? அல்லவே! கடிகாரத்தையும் துல்லியமாக நேரக் கணக் கீட்டைக் காட்டக்கூடிய கருவிகளையும் வைத்தல்லவா தொழுகை நேரங்களை அறிகிறோம். அதல்லாமல் வெளியே சென்று சூரியன் எங்கே இருக்கிறது என்று (பிறையைக் காணுங்கள் என்ற “ருய்ய’ என்ற பிறை ஹதீஃதில் வருவதைப் போன்று) “”ருஃய” சூரியனைக் காணுங்கள் என்று போய்ப் பார்த்து வருகிறோமா? சற்று மூளையைக் கசக்கிச் சிந்தித்துப் பாருங்கள். ஆகவே நபிகளார் சொன்னது அந்தக்கால மக்களுக்குப் பொருந்துமேயன்றி விஞ்ஞான காலத்திலுள்ள விண்கலையை அறிந்த இந்தக் கால மக்களுக்கல்ல என்பதை நன்குணர வேண்டும்.
இரண்டாவதாக அன்றைய காலக்கட்டத்தில் ஓர் ஊரில் நடக்கக்கூடிய விஷயம் இன்னொரு ஊருக்கு உடனடியாக எட்டுவது என்பது குதிரைக் கொம்பான விஷயமாகவே இருந்தது. உதாரணமாக: காரைக்குடியில் பெருநாள் கொண்டாடியவர் திருச்சி வந்து பெருநாள் பற்றிய விஷயமாக பேசுவதென்றால் நான்கு ஐந்து நாட்கள் இடைவெளியாகிவிடும். அப்படியே வந்து பேசினாலும் பெருநாளின் மற்ற விஷயங்கள் பற்றி பேசுவார்களே யல்லாமல் எந்தக் கிழமையில் பெருநாள் கொண்டாடினீர்கள் (என்ன தேதியில்) என்று அதுபற்றியெல்லாம் வினாத் தொடுப்பதும் அவசியமற்ற தாகவே இருந்து வந்தது. ஆனால் இன்று அப்படியல்ல; உலகம் என்பது ஓர் உள்ளங்கையில் அடங்கிவிட்டது. இன்று உலகின் மறுபக்கம் நடக்கும் காரியங்கள், நிகழ்வுகள் நமக்கு இங்கு உடனடியாக, நேரடியாக அறிய, பார்க்க முடிகிறது என்றாகிவிட்டது. எனவே பிறையை அவரவர் பகுதியில் பார்த்து நோன்புப் பெருநாள் கொண்டாடுவது என்பது பெரும் குழப்பத்தையும், ஐயத்தையும் உண்டாக்கு வதாகவும், மாற்றாரிடம் நகைப்புக்குரியதாக வும் ஆகிவிடுகின்றது.
மூன்றாவதாக “”பிறையைப் பார்த்து நோன்பைத் துவங்குங்கள் அதைப் பார்த்து நோன்பை விட்டுவிடுங்கள்” என்ற நபிமொழி தலைப் பிறையைத்தான் பார்க்கச் சொல்லுகிறதா? அல்லது பிறையின் அநேக படித்தரங் களைப்பார்த்து அதை நிர்ணயிக்கச் சொல்லுகிறதா? என்ற கேள்வி பிறக்கிறது. இதன் மூலமாக “பார்த்து’ என்ற சொல்லுக்கு நாம் உதாரணம் கண்டால் : “பார்த்து நட’, “நீங்கள் பார்த்து அதைச் செய்து கொடுங்கள்’ போன்ற வாக்கியங்களில் “பார்த்து’ என்ற சொல் கண்ணால் காண்பதை மட்டும் குறிப்பதல்ல; மாறாக “கவனமாக’, “அறிந்து’ போன்ற அர்த்தங்களைக் குறிக்கும் சொல்லாகவே வருகிறது. குர்ஆனும் யாசீன் சூராவில் (பார்க்க 36:39) பிறையின் அநேக படித்தரங்களைப் பற்றியே குறிப்பிட்டு இறுதியான படித்தரமாக “உர்ஜூனில் கதீம்’ என்ற ஈச்சம்பாளையைப் போல் மெல்லியதாக என்றே குறிப்பிடுகிறது.
எனவே பிறை பார்த்து என்பது ரமழான் வருகிறதென்றால் மேற்கே போய் (அன்று ஒரு நாள் மட்டும்) பிறையைத் தேடுவது அல்லது பார்ப்பது என்றில்லாமல், ஷஃபான் மாதப் பிறைகளையும் பார்த்துக் கணக்கிடுதல் அவசிய மாகிறது. ஆகவே குர்ஆன், ஹதீஃத் மற்றும் அதன் மூலம் கிடைக்கும் விண்கலை நியதி யைக் கணக்கில் கொண்டு பிறை பார்க்க வேண்டும் என்றே ஆகிறது. அதனால்தான் பழங்கால முறையாகிய பிறை பார்த்தல் என்பது கைவிடப்படக்கூடிய பழமையான மற்றும் முன்னோர்களின் சந்தேகத்திற்குரிய செயல் வடிவம் என்றே இன்று நிரூபிக்கப்பட்டு விட்டது.
நான்காவதாக பிறை பார்ப்பது என்பது சவூதி அரேபியாவாக இருந்தாலும் அதன் மேலை நாடுகளானாலும் நம் நாட்டு நடை முறையையே பின்பற்றுகின்றனர். ஆகவே தான் மேலே குறிப்பிட்ட உதாரணங்கள் மற்றும் விதிகளின் அடிப்படையில் சவூதி செய்தியும் பொய்யானதாகவும், ஏற்றுக் கொள்ள முடியாததாகவும் ஆகிவிடுகிறது. அந்தக் கணக்கின்படி பார்த்தால் நமது நாட்டில் மூன்றாம் நாள் பிறையே முதல் பிறையாகக் கொள்ளப்படுகிறது. சவூதியில் இரண்டாம் நாள் பிறையையே முதல் பிறையாகக் கொள்ளப்படுகிறது. அதற்கு மேலே உள்ள பிறை தோன்றும் ஏதேனும் ஒரு நாட்டில் முதல் பிறையாகக் கொள்ளப்படுவது அரிதிலும் அரிதாகவே நடக்கிறது. எனவே இந்த பிறை பார்த்தல் முறை என்பது தப்பும் தவறுமான கொள்கை என்பது தெள்ளத் தெளிவாகிறது.
ஐந்தாவதாக : அப்படியானால் பிறையை எப்படித்தான் பார்க்க வேண்டும்? எதுதான் சரியாக வரும்? என்று கேட்டால்… உலகின் தேதிக்கோட்டில் ஆரம்பித்து மறுபடியும் அதே தேதிக் கோட்டில் முடியும் வரை 24 மணி நேரம் ஆகிறது. அதாவது திங்கட்கிழமை என்றால் அதே திங்கட்கிழமையில் உலகம் முழுவதும் பெருநாளைக் கொண்டாடி முடித்துவிட வேண்டும். செவ்வாய், புதன் என்று 48 மற்றும் 72 மணி நேரங்களுக்குப் போகக் கூடாது என்பதுதான் சரியான தீர்வு என்றால் அது எப்படி?…. அது சாத்தியமாகும் வழி முறை தான் என்ன? என்று பார்த்தால், அதுதான் சரியானதும். குர்ஆன், சுன்னா, விண்கலை ஆகிய அடிப்படையில் பொருந்தி வருவதாயும் உள்ளதான உலகிலேயே முதன் முதலான ஆக்க பூர்வமான ஆராய்ச்சி மற்றும் அதன் செயல் வடிவமான துல்லியக் கணக்கீட்டின் அடிப்படையில் அமைந்த சந்திர நாள்காட்டியாகும்! இதன் அடிப்படையில் இன்னும் 10 ஆண்டு களுக்கு அல்லது நூறு ஆண்டுகளுக்கு அப்பால் நடக்க விருக்கும் சந்திர, சூரிய கிரகணங்களின் நாட்களையும், ஈகை, ஹஜ்ஜு பெருநாட்களை யும் இன்றே கூற முடியும் என்றான பின்பு முஸ்லிம்களாகிய நாம் ஏனிந்த தடுமாற்றத்தில் தவிக்க வேண்டும்.
நிரூபணமான இந்த விஞ்ஞான உண்மை “நீங்கள் ரமழானை அடைந்து கொண்டால் நோன்பு நோற்றுக் கொள்ளுங்கள் என்ற குர்ஆன் வசனத்துக்கும், நபிவழி சுன்னாவிற்கும் மாற்றமானதல்லவே!.. மேலும் பிறையை ஒவ்வொருவரும் கண்களால் காணத்தான் வேண்டுமென்பது கட்டாயமானதும், அமல் களில் உள்ளதும் அல்லவே!…
எனவே எளிதாக எல்லாப் பிரிவு சார்பினரும் ஒன்றுகூடி ஒரே நாளில் ரமழானை அடைந்து, ஒற்றைப்படை இரவுகளை அடைந்து, இரு பெரு நாட்களில் நோன்பு நோற்கும் தீமையையும் களைந்து, ஒன்றுபட்ட தோர் முஸ்லிம் சமுதாயத்தை உருவாக்கக் கணக்கீட்டின் அடிப்படையில் அமைந்த சந்திர நாள்காட்டியைப் பின்பற்றிட எல்லாம் வல்ல அல்லாஹ் நம்மனைவர்களுக்கும் கருணை புரிந்து, நேர்வழி காட்டி அதன்மீது நிலைத் திருக்கச் செயவானாக! ஆமீன்.