பெங்களூர் M.S. கமாலுத்தீன்
கல்விச் சாலைகள் அமைத்து, கல்வியைப் புகட்டி அறியாமை இருள் அகற்றிய முன்னோர்களை “”கல்வித் தந்தை”யாக காலம் இன்னமும் கணக்கில் வைத்திருக்கிறது. அறிவைப் புகட்டுவதை அறமாகச் செய்ததால் அழியாப் புகழுடன் வரலாறுகளில் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். பணத்தைச் சேர்ப்பது மட்டுமே வாழ்க் கையின் லட்சியம் அல்ல. தர்மம் தலை காக்கும். தர்ம காரியங்கள் பல தலைமுறையைக் காக்கும் என்ற திடமான நம்பிக்கை நன்மை செய்யத் தூண்டியது, செய்தார்கள்; அகன்ற மனம் கொண்டவர்கள் இன்று அரிதாகிப் போனார் கள், சுத்தமான சுயநலவாதிகள் பெருகி வருவ தால் பிரச்சனைகளும் பின் தொடர்கின்றன.
கல்வி வியாபாரமாகிப் பல காலம் ஆகிவிட்டது. தெருவுக்குத் தெரு கல்வி நிலையங்கள் கடைவிரித்து “”காசு” பார்ப்பது மட்டுமே லட்சியமாகக் கொண்டு செயல்படுகின்றன. சட்டங்களுக்கும், விதிமுறைகளுக்கும் “”விலை” வைத்திருக்கிறார்கள். துணை போகும் அதிகார வர்க்கத்தால், துன்பமும் இழப்பும் பொது மக்களுக்குத் தான். மறக்கமுடியாத துயரச் சம்பவம் 16.07.2004ல் கும்பகோணம் காசிராமன் தெருவில் நடந்தது. ஸ்ரீ கிருஷ்ணா அரசு உதவி பெறும் பள்ளி. சரஸ்வதி மழலையர் பள்ளி, ஸ்ரீ கிருஷ்ணா பெண்கள் உயர்நிலைப் பள்ளி ஆகிய மூன்று பள்ளிகளும் ஒரே கட்டிடத்தில் இயங்கி வந்தன. உயர்நிலைப் பள்ளியில் 190 மாணவிகளும், அரசு உதவிபெறும் தொடக்கப் பள்ளியில் 400 மாணவர்கள், மழலையர் பள்ளியில் 120 மாணவர்கள் என மொத்தம் 710 பேர் படித்து வந்தார்கள். காலை 10.30 மணியளவில் தரைத் தளத்தில் பின்பக்கமுள்ள சத்துணவு மையத்திலிருந்து ஏற்பட்டத் தீ அருகில் இருந்த கீற்றால் வேயப்பட்ட கூரையில் பிடித்தது. பலத்தக் காற்றும் வீசியதால் தீ மளமளவென முதல் தளத்திற்கும் பரவியது.
பிஞ்சு குழந்தைகள் நெருப்புக்கு அஞ்சி கீழே ஓடிவந்தனர். இரும்பு கேட் பூட்டியிருந்ததால் யாரும் வெளியே செல்ல முடியவில்லை. 90 பேர் அதே இடத்தில் உடல் கருகி இறந்து போனார்கள். தகவல் அறிந்த பெற்றோர்களும், பொதுமக்களும் திரண்டு வந்து பள்ளியிலிருந்த சிமென்ட் ஜன்னல்களை உடைத்துச் சென்று பல பிஞ்சு உயிர்களை காப்பாற்றி கும்பகோணம் அரசு மருத்துவமனையில் சேர்த்தார்கள். சிகிச்சை பலன் தராமல் 4 பேர் அங்கே இறந்தார்கள்.
தீ விபத்தில் உடல் முழுவதும் காயம் ஏற்பட்டோர்களுக்கு சென்னை, மதுரையில் சிகிச்சை அளிக்கப்பட்டது 18 பேர்களுக்கு. இந்த தீ விபத்து குறித்து கும்பகோணம் கிழக்கு போலீசார் வழக்கு பதிவு செய்து, பள்ளி நிறுவனர் பழனிச்சாமி, அவரது மனைவியும், பள்ளித் தாளாளருமான சரஸ்வதி, தலைமை ஆசிரியை சாந்தலெட்சுமி, சத்துணவு அமைப்பாளர் சரஸ்வதி, மழலையர் பள்ளி தலைமை ஆசிரியை விஜயலெட்சுமி, சத்துணவு உதவியாளர் வசந்தி, மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் முத்து பழனிச்சாமி, மாவட்டக் கல்வி, தொடக்கக் கல்வி அலுவலர் பி.பழனிச்சாமி, மாவட்டக் கல்வி அலுவலர் ஆர்.நாராயணசாமி, உதவி தொடக்கக் கல்வி அலுவலர் ஏ.ராதா கிருஷ்ணன், கூடுதல் தொடக்கக் கல்வி அலு வலர் கே.பாலகிருஷ்ணன், தாசில்தார் எஸ்.பரமசிவம், கட்டிடப் பொறியாளர் கே.ஜெயச்சந்திரன், கூடுதல் தொடக்கக் கல்வி அலுவலர் ஆர்.மாதவன், மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலர் ஆர்.பாலாஜி, மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலக உதவியாளர் சிவப் பிரகாசம், மாவட்டக் கல்வி அலுவலக கண் காணிப்பாளர் தாண்டவன், மாவட்டக் கல்வி அலுவலரின் நேர்முக உதவியாளர் சி.துரைராஜ், நர்சரி உதவி தொடக்கக் கல்வி அலுவலர் வி.பாலசுப்பிரமணியன், ஆசிரியைகள் தேவி, மகாலட்சுமி, அந்தோணியம்மாள், மாநக ராட்சி ஆணையர் சத்தியமூர்த்தி, நகரமைப்பு அலுவலர் முருகன், மாநில தொடக்கக் கல்வி இயக்குநர் கண்ணன் ஆகிய 24 பேர்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு அனைவரும் கைது செய்யப்பட்டு, பின்னர் ஜாமீனில் விடு விக்கப்பட்டார்கள்.
இந்த வழக்கு கும்பகோணம் குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் தொடுக்கப்பட்டது. 2005 ஜூலை 5ம் தேதி 3126 பக்கங்கள் கொண்ட குற்றப்பத்திரிகையை போலீசார் தாக்கல் செய்தார்கள். அதில் 488 பேர் சாட்சிகளாகவும் 60 ஆவணங்கள் சாட்சியங்களாகவும் இணைத்திருந்தனர். 2006, மார்ச் 23ம் தேதி குற்றம் சாட்டப்பட்டவர்களிடம் குற்றப் பத்திரிகையின் நகல் வழங்கப்பட்டு விசாரணைத் தொடங்கியது. இந்த வழக்கு 304 பிரிவின் கீழ் பதிவு செய்யப்பட்டதால் 2006, ஜூலை 12ம் தேதி கும்பகோணத்திலிருந்து தஞ்சை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டது. குற்றம் சாட்டப்பட்டவர்கள் நேரில் ஆஜராகி தங்களுக்கும் இவ்வழக்கிற்கும் தொடர்பே இல்லை என கூறி மனுதாக்கல் செய்தனர். நீதிமன்றம் இதை தள்ளுபடி செய்தது. தொடர்ந்து மூன்று ஆண்டுகள் இந்த பள்ளிக்கு அரசு அதிகாரிகள் சோதனைக்குக் கூட செல்லவில்லை என்பதால்.
2010ஆம் ஆண்டு தமிழக அரசின் பரிந்துரையை ஏற்று உயர்நீதிமன்றம் இவ்வழக்கி லிருந்து தொடக்க கல்வி இயக்குநர் கண்ணன், முதன்மைக் கல்வி அலுவலர் முத்து பழனிச்சாமி, தாசில்தார் பரமசிவம் ஆகியோரை விடுவித்தது. இதேபோல் தன்னையும் விடுவிக்க வேண்டும் என அப்போதைய கும்பகோண உதவி தொடக்கக் கல்வி அலுவலர் பாலகிருஷ்ணன் உச்சநீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தார். இதை நிராகரித்த உச்சநீதி மன்றம், “”இந்த வழக்கை விரைந்து விசாரித்து ஆறு மாதங்களுக்குள் தீர்ப்பளிக்க ஆணையிட்டது.
சம்பவம் நடந்து எட்டு ஆண்டுகளுக்கு பிறகு விசாரனை வேகம் பிடித்தது. செப்டம்பர் 24 தேதி 2012-ல் தொடங்கி 2014 ஏப்ரல் 28ல் முடிவடைந்தது. இதையடுத்து அரசுத் தரப்பு வழக்குரைஞர், எதிர்தரப்பு வழக்குரைஞர்களும் வாதப் பிரதி வாதங்கள் 22 மாதங்கள் நடந்து முடிந்தன. இந்த வழக்கில் முதலில் நீதி அரசர் ஜி.சரவணன் முன்னிலையில் 80 பேரும், நீதிபதி ஆர்.சேது மாதவன் முன்னிலையில் 150 பேரும் சாட்சியம் அளித்தனர். இறுதியாக நீதிபதி முகமது அலி தீர்ப்பளித்தார். குற்றம் சாட்டப்பட்ட 21 பேரில் பள்ளி ஆசிரியைகள் உள்ளிட்ட 11 பேரை விடுவித்தும், பள்ளி நிறுவனருக்கு ஆயுள் தண்டனையும், தாளாளர் மற்றும் அன்றைய தேதியில் கல்வித் துறை அதிகாரிகள், சத்துணவுப் பணியாளர் உள்ளிட்ட 8 பேருக்கு 5 ஆண்டு கடுங்காவல் தண்டனையும், கட்டிடப் பொறியாளருக்கு இரண்டு வருடமும் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
இந்தத் தீர்ப்பில் திருப்தி இல்லை. பாதிக்கப்பட்டவர்களுக்கு, நமக்கும் தான், பத்தாண்டு தாமதம் ஒருபக்கம், 11 பேர் விடுவிக்கப்பட்டதும் ஏமாற்றம் அளிக்கிறது. உணர்ச்சிக் கொந்தளிப்போடு இதை அணுகவில்லை. கல்வித் துறை அதிகாரிகள் தங்கள் கடமையைச் சரிவரச் செய்திருந்தால் இத்தனைக் குழந்தைகள் கொத்து கொத்தாக உயிரிழந்திருக்க மாட்டார்கள். அரசாங்க வேலை என்ற அலட்சியம், நம்மை எவனும் கேள்வி கேட்க முடியாது என்ற ஆணவம், நாம் செய்யும் தவறுகளை மறைக்க “”சங்கம்” உள்ளது என்ற தைரியம் இத்தகைய போக்கிற்குக் காரணம்.
“Government Work is God’s Work” என்பார்கள் ஆங்கிலத்தில். இன்றைய ஆட்சியாளர்களுக்காக நாம் வேலை செய்யவில்லை. ஆண்டவனுக்காக நாம் வேலை செய்கிறோம் என்ற எண்ணம் இருந்தால் என் கடமையில் நான் தவறு செய்தால் இறைவன் என்னை விசாரிப்பான். கடும் தண்டனை தருவான் என்ற பயமிருந்தால், வேலைகள் ஒழுங்காக நடக்கும். இப்போது புதிதாகப் பொறுப்பு ஏற்று உள்ள மோடி தலைமையிலான அரசு “”நிர்வாகச் சீர்திருத்தம்” அறிவித்து உள்ளது.
இந்திய அரசுப் பணியில் தலைமைப் பொறுப்பில் இருக்கும் அமைச்சரவைச் செயலரில் தொடங்கி அடிமட்டத்திலுள்ள நான்காம் பிரிவு ஊழியர் வரை செயல்பாடு, திறமை ஆகியவற்றால் எடை போடப்படாமல் பணி மூப்பு அடிப்படையில் எடை போடப்படுவதால் லஞ்சம் ஊழல்களில் மூழ்கி இருப்பதால் நிர்வாக இயந்திரம் மெத்தனபோக்கில் செயல்படுகிறது. இதை மாற்றி அமைக்கும் விதமாக “”அகில இந்தியப் பணி (செயல்பாடு) விதிகள் 1968ல் சில மாற்றங்களைச் செய்திருக்கிறது. சட்டத்திற்குப் புறம்பான, அல்லது புறம்பாக மாறக்கூடிய செயல்பாடுகளில் ஈடுபடாமல் இருப்பது, மக்கள் நலத்தை மட்டுமே கருத்தில் கொண்டு முடிவெடுப்பது; நேர்மையாகவும், நியாயமாகவும் செயல்பட்டு பதவியின் கண்ணி யத்தைக் காப்பாற்றுவது, பாரபட்சமில்லாமல் நடந்து கொள்வது போன்ற 19 அம்ச பட்டியலில் முக்கியமானவை. இவற்றைச் செய்வதால் மட்டுமே நிலமை மாறிவிடாது. “”இறையச்சம்” ஒன்று மட்டுமே சகலத்தையும் சரி செய்யும். ஓர் இறை நம்பிக்கை மட்டுமே முன் எடுத்துச் செல்லும்போது இவை சாத்தியமாகும்.
செத்துக் கொண்டிருக்கும் ஜனநாயக சூழ லில் இருக்கும் சட்டத்தை கொண்டு, இப்படி செய்யலாம். தண்டனைப் பெற்றவர்களும், விடுதலை ஆனவர்களும், இறந்த குழந்தைகளின் உயிரோடு விளையாடி உள்ளார்கள். அவர்களது தவறுதான் முழுக்க முழுக்கக் காரணம். அவர்களின் சொத்துக்களைப் பறிமுதல் செய்து பாதிக்கப்பட்டவர்களுக்கு நஷ்ட ஈடாகத் தர வேண்டும். இதைச் செய்வதன் மூலம் பயம் வரும். சேர்த்து வைத்த சொத்துக்கள் அனைத்துமே பறிபோய்விடும். இந்தப் பயமே ஒழுங்காக வேலை செய்ய வைக்கும். இந்த வழக்கில் இரு தரப்பினரும் மேல் முறையீடு செய்துள்ளார்கள்.
கடந்த காலத்தில் “”கல்வித் தந்தையாக” இந்த சமூகத்திற்குச் செய்த சேவைகளை கருத்தில் கொண்டு, வயது மூப்பையும் கவனத்தில் கொண்டு தண்டனை குறைப்பு செய்ய சொல்வார்கள். அதிகாரிகள் தரப்பும் இதேபோல் பல காரணங்களைக் கண்டுபிடித்துச் சொல்லும். இதன்மூலம் தீர்ப்புகள் திருத்தப்படலாம். “”நானும் தப்பிவிடலாம் என நினைப்பவர்களுக்கு” கடும் தண்டனையை உச்சநீதி மன்றமும் உறுதிப்படுத்த வேண்டும்.
கும்பகோணம் பள்ளித் தீ விபத்து நமக்கு உணர்த்தியிருக்கும் பாடங்களைத் தமிழகம் உணர்ந்ததாகத் தெரியவில்லை. 90 சதவிகித பள்ளிகளில் மிக குறுகலான இடத்தில் ஆடு, மாடுகளை போல் குழந்தைகளை அடைத்துள்ளார்கள். ஏதாவது அசம்பாவிதம் நிகழ்ந்தால் குழந்தைகள் உடனே வெளியேற அகன்ற படிக்கட்டுகள் இல்லை. இவற்றைக் கவனத்தில் கொண்டு எதிர்காலத்தில் அசம்பாவிதங்கள் நிகழாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். இதே போல் கடந்த ஜூன் 28 தேதி மவுலிவாக்கத்தில் அடுக்கு மாடிக் கட்டிடம் இடிந்து விழுந்து 61 பேர் உயிர் இழந்தார்கள். இந்தக் கட்டிடத்திற்கு அனுமதி தந்த அதிகாரிகள் மீது இதுவரை எந்த நடவடிக்கையும் இல்லை. ஐகோர்ட் உத்தரவிட்டும், ஆமை வேக நடவடிக்கையில், நியாயம் எப்போது கிடைக்கும்?
1991 முதல் 1996 வரை முதல்வராக இருந்த ஜெயலலிதா வருமானத்துக்கு அதிகமாகச் சொத்துக் குவித்த வழக்கில் குற்றவாளி என நிரூபிக்கப்பட்டு, 4 ஆண்டு சிறைத் தண்டனையும் 100 கோடி அபராதமும் விதித்து பெங்களூர் சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்து, ஜெயிலிலும் அடைத்தது. 18 ஆண்டுகள், 14 நீதிபதிகள், 150க் கும் மேற்பட்ட வாய்தா வாங்கி வழக்கை இழுத்தடித்தார். எல்லாத் தடைகளையும் தாண்டி தீர்ப்பு வெளிவந்துவிட்டது. தகுதியும் இழந்து விட்டார். 21 நாள் சிறைவாசம், உடல் நிலையை காரணம் காட்டி உச்சநீதிமன்றத்தில் கேட்ட ஜாமீன் கிடைத்துவிட்டது. ஏதோ இவருக்கு மட்டும் ரத்த கொதிப்பும் சக்கரை நோயும் இருப்பது மேல் இவர்கள் கேட்டதும், அவர்கள் கொடுத்ததும் மோசமான முன் உதாரணம்.
மேல் முறையீட்டில் இந்தத் தீர்ப்பும் திருத்தப் படலாம். சட்டத்தில் உள்ள ஓட்டைகள் மூலம் நீதியும், நியாயமும் ஊனமாகலாம். அல்லது தங்களின் அதிகார பலத்தால் சாகடிக்கப் படலாம். ஆனால் இறைவனின் நீதிமன்றத்தில் எவருக்கும் அநீதி இழைக்கப்படாது. நியாய மான தீர்ப்பும் சரியான தண்டனையும் நிச்சயம் கிடைக்கும்.
“”அந்த நாளைப் பற்றி அஞ்சிக் கொள்ளுங்கள்; அன்று நீங்களனைவரும் அல்லாஹ்விடம் மீட்டப்படுவீர்கள்; பின்னர் ஒவ்வொரு ஆத்மாவுக்கும் அது சம்பாதித்ததற்குரிய (கூலி) பூரண மாகக் கொடுக்கப்படும்; மேலும் (கூலி) வழங்கப்படுவதில் அவை அநியாயம் செய்யப்பட மாட்டா. (அல்குர்ஆன் :2:281)