இப்னு ஹத்தாது
அந்நஜாத் வாசகர்களான அன்புச் சகோதரர்கள், சகோதரிகளாகிய அனைவருக்கும் அஸ்ஸலாமு அலைக்கும்(வரஹ்). உங்கள் அனைவருக்கும் ஒரு தெளிவான, நேரடியான எச்சரிக்கை விடுவது அவசியம் என்ற நன்நோக்குடன் இரண்டு சம்பவங்களை உங்கள் அனைவரின் கவனத்திற்குக் கொண்டு வருகிறேன். அந்நஜாத் ஜூலை, செப்டம்பர் 2014 இதழ்களில் சூனியம்-சிஹ்ர் மற்றும் பீ.ஜையும்! சூன்யமும்!! என்ற இரண்டு கட்டுரைகள் இடம் பெற்றதை அறிவீர்கள், இந்த நிலையில் வெளிநாட்டிலிருந்து ஒரு தொலைபேசி அழைப்பு வந்தது. அழைப்பு விடுத்தவர் நமக்கு அறிமுகமானவரோ, அந்நஜாத் சந்தாதாரரோ இல்லை. அந்நஜாத் வலைதளத்தி லேயே அந்த இரண்டு கட்டுரைகளையும் படித்துள்ளார். படித்தது மட்டுமல்ல, அவற்றில் இடம் பெற்ற குர்ஆன் வசனங்கள் அனைத்தையும் சிரமம் பாராமல் பெரும் முயற்சியாக (பார்க்க 29:69) அதாவது ஜிஹாதாக குர்ஆனில் நேரடியாகப் படித்துள்ளார். சூன்யம் பற்றி இது வரை ஒரு முடிவுக்கு வரமுடியாமல் பெரிதும் குழம்பிக் கொண்டிருந்ததாகவும் சந்தேகங்களில் மூழ்கி இருந்ததாகவும், அந்தக் குழப்பமும், சந்தேகங்களும் முற்றிலும் தீர்ந்து விட்டதாகவும், அந்தப் பெரும் மகிழ்ச்சியில்தான் எம்மைத் தொடர்பு கொண்டு பேசுவதாகவும், தொடர்ந்து 30 நிமிடங்கள் வெளிநாட்டிலிருந்து மீண்டும், மீண்டும் இதையே கூறி பேசுவதென்றால் எந்தளவு அவரது உள்ளத்தில் தெளிவு ஏற்பட்டிருக்கும். சிந்தியுங்கள்!
மீண்டும் மீண்டும் அவர் நம்மைப் பாராட்டிக் கொண்டிருந்ததால் நாம், எம்மைப் பாராட்டுவதை விட உங்களுக்கு நேர்வழி காட்டியருளிய அல்லாஹ்வுக்கு நன்றி செலுத்துங்கள். உங்களுக்கு நேர்வழி காடியது நாமல்ல; அந்நஜாத்தல்ல. அதில் இடம் பெற்றிருந்த குர்ஆன் வசனங்கள் அனைத்தையும் சிரமம் பாராமல் சோம்பல் படாமல் நீங்கள் குர்ஆனை எடுத்து ஒவ்வொரு வசனத்தையும் நேரடியாகப் படித்து விளங்கியதால் 29:69 இறை வாக்குப்படி அல்லாஹ் நேர்வழி காட்டியுள்ளான். என்னையோ, மற்ற மனிதர்களையோ, ஆலிம், அல்லாமா, மவ்லவி, மவ்லானா எனப் பெத்தப் பெயர் கொண்டவர்களையோ நம்பாமல், எவர்கள் 2:186 இறைக் கட்டளைப்படி அல்லாஹ்வையே முற்றி லும் நம்பி குர்ஆனைப் பொருள் அறிந்து தினசரிப் படித்து வருகிறாரோ நிச்சயமாக அல்லாஹ் அவர் களுக்கு நேர்வழி (6:153) காட்டுகிறான். அந்த அடிப் படையில் அந்த வெளிநாட்டு சகோதரர் சூன்யம் பற்றிய அந்த இரு கட்டுரைகளிலும் இடம் பெற்ற குர்ஆன் வசனங்களை நேரடியாக நடுநிலையுடன் படித்து விளங்க முற்பட்டதால், சூன்யம் பற்றிய அனைத்துச் சந்தேகங்களும் தீர்ந்து, தெள்ளத் தெளிவான முடிவுக்கு வந்து விட்டார்.
அதுபோல் சூன்யம் பற்றிய தடுமாற்றத்திலுள்ள சகோதரர்கள், சகோதரிகள் அந்த இரு கட்டுரைகளிலும் இடம் பெற்றுள்ள அனைத்து குர்ஆன் வசனங்களையும், நேரம் ஒதுக்கிப் பொறுமையாக, நடுநிலையுடன் குர்ஆனில் பார்த்து விளங்க முற்பட்டால் நிச்சயமாக அல்லாஹ் அதில் சரியான முடிவுக்கு வர அருள்புரிவான். இது அல்லாஹ் அளிக்கும் உத்திரவாதமாகும். (பார்க்க : 29:69)
அடுத்து இன்னொரு சகோதரரின் நிலை பற்றியும் நாம் தெளிவுபடுத்தக் கடமைப்பட்டுள்ளோம். அவர் 1983ல் நாம் குர்ஆன், ஹதீஃத் பயிற்சி ஆரம்பித்தக் காலத்திலிருந்தே தொடர்புள்ளவர். அந்நஜாத் ஆரம்பித்த 1986லிருந்து சந்தாதாரர்; வசதி படைத்தவர். நேரம் ஒதுக்கி அன்றாடம் குர் ஆனைப் படித்து விளங்க முற்படுவதால் அவருக்கு, அவரது தொழிலில், வருமானத்தில் எவ்வித பாதிப்பும் ஏற்படாது. குர்ஆனைப் பார்க்க அவகாசம் இல்லாதவர் என்று சொல்லவும் முடியாது. இந்த நிலையில், வெளிநாட்டுச் சகோதரர் எம்முடன் தொடர்பு கொண்ட ஓரிரு வாரத்தில் இந்தச் சகோதரர் எம்மைத் தொடர்பு கொண்டு சில சந்தேகங்களைக் கிளப்பினார். அவரது சந்தேகங்களுக்குச் சம்பந்தப் பட்ட குர்ஆன் வசனங்களைப் பார்க்கச் சொன்னதுடன், ஏன் சகோதரரே! இந்த குர்ஆன் வசனங்க ளின் அத்தியாயம், வசனம் எண்களைச் சமீபத்தில் அந்நஜாத்தில் இடம்பெறச் செய்துள்ளோம். குர்ஆனை எடுத்து அவற்றை முறைப்படிப் பார்த்து இருந்தால், எப்போதோ உங்கள் சந்தேகங்கள் தீர்ந்து இருக்கும் என்றோம். உடனே அவர் அந்த வசனங்களை அந்நஜாத்தில் எடுத்து எழுதலாமே! வெறும் எண்களை மட்டுமே குறிப்பிடுவது எப்படி என்றார்.
சகோதரரே, அந்த வசனங்கள் அனைத்தையும் அந்நஜாத்தில் எடுத்து எழுதுவதாக இருந்தால், அந்நஜாத்தின் பக்கங்கள் அதிகமாகும்; பொருளாதார சிரமம் ஏற்படும் என்பது ஒரு பக்கம் இருக்கட்டும். நாளைக்கு நஜாத் மத்ஹபு என்று ஒரு மத் ஹபை இம்மதகுருமார்கள் கற்பனை செய்து விடுவார்கள். இன்று மார்க்கச் சட்டம் என்றால் உடனே பிக்ஹு நூல்களைத் தூக்கிப் பிடிப்பது போல், நாளைக்கு நஜாத் இதழைத் தூக்கிப் பிடிக்கும் நிலை உருவாகலாம். அதைத் தவிர்ப்பதற்கென்றே வெறும் குர்ஆன் அத்தியாய வசன எண்களைக் கொடுத்து நேரடியாக குர்ஆனை எடுத்து பார்க்கத் தூண்டுகிறோம். மேலும் அவர்கள் நேரடியாக குர் ஆனோடு தொடர்பு கொள்வதால், இவை அல்லாஹ்வின் கட்டளைகள் என்ற பயம் ஏற்பட்டு அவர்களின் ஈமானில் உறுதி ஏற்படும் என்று சொன்னோம்.
அவர் நாம் சொன்னதைக் காதில் வாங்கிக் கொள்ளாமல், போங்கங்க! இதற்கெல்லாம் எங்க ளுக்கு எங்கே நேரம் இருக்கிறது. போகுமிடமெல்லாம் குர்ஆனைத் தூக்கிக் கொண்டு அலையவா முடியும் என்றார். அதன் விளைவு அவர் 1983லிருந்து 2015 வரை கடந்த 32 வருடங்கள் நம்மோடு தொடர்பிலிருந்தும் பல விஷயங்களில் இன்றும் தடுமாற்ற நிலையில்தான் இருக்கிறார்.
எதற்காக, இந்த இரு சம்பவங்களையும் இங்கு குறிப்பிடுகிறோம் என்றால், அந்நஜாத் மாத இதழைப் படிப்பது கொண்டு மட்டும் யாருக்கும் நேர் வழி கிடைக்காது. அந்நஜாத்தில் இடம் பெறும் குர்ஆன் அத்தியாய வசன எண்களை உடனுக்குடன் வெகு அக்கறையாக பெரும் ஜிஹாதாக (29:69) குர் ஆனை எடுத்துப் பக்கங்களைப் புரட்டி நேரடியாக அந்த வசனங்கள் என்ன கூறுகின்றன என்று பார்ப்பவர்களுக்கு அல்லாஹ் நிச்சயம் நேர்வழி காட்டு வான். (பார்க்க : 6:153)
நபி(ஸல்) அவர்களின் தகப்பனார் அப்துல்லாஹ் கூடப் பிறந்த சகோதரர் அபூ தாலிப், வளர்ப்புத் தந்தை நபி(ஸல்) அவர்களை வளர்த்து ஆளாக்கி வியாபாரம் கற்றுக் கொடுத்து திருமணம் முடித்து அழகு பார்த்தவர். அது மட்டுமா?
நபி(ஸல்) அவர்களுக்கு அவர்களின் 40வது வயதில் நபி பட்டம் கிடைத்ததிலிருந்து அபூ தாலிப் இறக்கும் வரை சுமார் 12 வருடங்களாக குறைஷ்களின் கொடுமைகளிலிருந்து அல்லாஹ்வுக்கு அடுத்தபடியாக இருந்து நபி(ஸல்) அவர்களைப் பாதுகாத்தவர். நபி(ஸல்) அவர்களையும், அவர் களது குடும்பத்தினரையும் ஊர் ஒதுக்கி ஒரு பள்ளத் தாக்கில் வைத்து, மக்களோடு எவ்விதத் தொடர்பும் இல்லாமல், உயிரைக் காப்பாற்ற உணவு கிடைக்காத நிலையில், இலைதழைகளைச் சாப்பிட்டு உயிர் வாழ்ந்த நிலையிலும், அபூதாலிப் கூடவே இருந்து தள்ளாத வயதிலும் அனைத்துத் துன்பங்களையும் அனுபவித்தார். அவரது மரணத்திற்குப் பின்னரே குறைஷ்கள் நபி(ஸல்) அவர்களைக் கொல்லச் சதித் திட்டம் தீட்டி அதை நிறைவேற்ற முற்பட்டனர். அல்லாஹ்(ஜல்) அவர்களை மதீ னாவிற்கு ஹிஜ்ரத் செய்யக் கட்டளையிட்டான்.
முழுமைபெற்ற இஸ்லாத்தின் துவக்கக் காலத்தில், அதன் நிலைப்பாட்டிற்கும், வளர்ச்சிக்கும் அபூ தாலிப் உறுதுணையாக இருந்தது போல் வேறு யாரையும் சுட்டிக்காட்ட முடியாது. அந்தளவு உதவி செய்த ஒத்துழைத்த அபூ தாலிபுக்கு இஸ்லாத்தைத் தழுவும் பெரும் பாக்கியம் கிடைத்ததா? இல்லை. அதற்கு மாறாக இஸ்லாத்தைக் குழி தோண்டிப் புதைக்கவும், நபி(ஸல்) அவர்களைக் கொலை செய்யவும் முற்பட்ட உமர்(ரழி), அபூ சுஃப்யான்(ரழி), காலித் பின் வலீத்(ரழி) ஹிந்தா (ரழி), ஹம்ஸா(ரழி) அவர்களை மறைந்திருந்து கொன்ற வஹ்´(ரழி), இன்னும் இவர்கள் போல் பலருக்கும் இஸ்லாத்தைத் தழுவும் பாக்கியம் கிடைத்தது. என்ன காரணம்?
நபி(ஸல்) அவர்கள், தன்னை வளர்த்து ஆளாக்கியதோடு, இஸ்லாத்தை நிலைநாட்டப் பெரிதும் உதவியாக இருந்த அபூதாலிபின் ஹிதாயத்திற்காக அழுது மன்றாடி, விழுந்து விழுந்து துஆ செய்தபோது, எல்லாம் வல்ல அல்லாஹ் இறக்கிய ருளிய 28:56 இறைவாக்கு காரணத்தைக் கூறுகிறது? அது வருமாறு :
(நபியே!) நீர் நேசிப்பவர்களை (எல்லாம்) நிச்ச யமாக நேர்வழியில் செலுத்திவிட உம்மால் முடி யாது, ஆனால் அல்லாஹ் தான் நாடியவர்களை நேர் வழியில் செலுத்துகிறான். மேலும் நேர்வழி பெறுகிறவர்களை அவனே நன்கறிகிறான் (28:56)
ஆரம்பக் காலத்தில் இஸ்லாத்தின் வளர்ச்சிக்குப் பேருதவியாக இருந்தவர், நபி(ஸல்) அவர்களை அல்லாஹ்வுக்குப் பிறகு குறைஷ்களின் பேராபத்திலிருந்து காப்பாற்றியவர், நபி(ஸல்) அவர்களை உயிருக்குயிராக நேசித்தவர், இப்படிப்பட்ட சிறப்புகள் கொண்ட அபூதாலிபுக்கு நேர்வழி காட்ட இந்தளவு கடுமையாக அல்லாஹ் மறுக்கிறானே ஏன் என்பதைச் சிந்தித்துப் பாருங்கள். கூடப் பிறந்த சகோதரர் அப்துல்லாஹ்வின் மகன், தனது வளர்ப்பு மகன் என்ற பாசம் காரணமாக இந்தளவு பேருதவிகள் செய்தாரே அல்லாமல், நபி(ஸல்) அவர்களுக்கு இறைவன் அருளிய இறுதி வாழ்க்கை நெறிநூல் அல்குர்ஆனின் வசனங்கள் படித்துக் காட்டப்பட்டாலும், அவற்றைக் கேட்டாலும், அவை அவரும் நம்பும் இறைவன் அருளிய நேர்வழி உபதேசங்கள், அவற்றைக் காது கொடுத்துக் கேட்டு, உள்வாங்கி, சிந்தித்து அதன்படிச் செயல்பட வேண்டும் என்ற நேர்வழிச் சிந்தனை அபூதாலிபுக்கு ஏற்படவில்லை.
அதற்கு மாறாகத் தனது முன்னோர்கள் காலம் காலமாக நடைமுறைப்படுத்தி வரும் அம்மதத்தைத்தான், அன்றைய உலமாக்கள் சபையான தாருந் நத்வா ஆலிம்களும், அவர்களின் தலைவன் அபுல் ஹிக்கம்-ஞானத்தின் தந்தை என குறைஷ்களால் வானளாவப் புகழப்பட்டவனும், நபி(ஸல்) அவர்களால் அபூ ஜஹீல்-மடமையின் தந்தை என அடையாளம் காட்டப்பட்டவனும் சொல்வதே நேர்வழி-இறைவன் காட்டும் நேர்வழி என்ற குருட்டு நம்பிக்கையில் உறுதியாக இருந்த ஒரே காரணத்தினால் தான் அல்லாஹ் அபூதாலிபுக்கு நேர்வழி காட்டவில்லை. இதை,
“”மேலும் நேர்வழி பெறுகிறவர்களை அவனே நன்கறிகிறான்” என்ற 28:56-ன் இறுதிப் பகுதி உண்மைப்படுத்துகிறது.
உமர்(ரழி), அபூ சுஃப்யான், காலித் பின் வலீத் (ரழி) போன்றோர் ஆரம்பத்தில் மிகமிகக் கடுமையாக நேர்வழி இஸ்லாத்தையும், அதை போதித்த நபி(ஸல்) அவர்களையும் குழி தோண்டிப் புதைக்கக் கங்கணம் கட்டி உழைத்தவர்கள், குர்ஆன் வசனங்கள் தங்கள் காதில் விழுந்ததும், அல்லது படித்துப் பார்த்ததும் அவற்றை உள்வாங்கி சிந்தித் துணர முற்பட்டதால், 29:69 இறைவாக்கில் அல்லாஹ் உத்திரவாதம் அழித்துள்ளது போல், அவர்களுக்கு ஹிதாயத் -நேர்வழி காட்டினான்.
இறுதித் தூதர் நபி(ஸல்) அவர்களது நபித்துவ காலத்தில் இடம் பெற்ற இரண்டு எதிரும் புதிருமான நிகழ்வுகள் நமக்கு என்ன உணர்த்துகின்றன? இஸ்லாத்திற்கு ஆதரவாளர்களாக இருந்தாலும், அதன் வளர்ச்சிக்குப் பேருதவிகள் செய்பவர்களாக இருந்தாலும், 7:146 இறைவாக்கு முதல் பெருமை பேசுபவர்களின் இழிநிலையைப் படம் பிடித்துக் காட்டும் அனைத்து குர்ஆன் வசனங்களையும் நிராகரித்து விட்டு, நாங்கள்தான் ஆலிம்கள், மவ்லவிகள், மார்க்கம் கற்ற அறிஞர்கள், ஆலிம்களாகிய நாங்கள் சொல்வதைத்தான் அவாம்களாகிய நீங்கள் மார்க்கமாக எடுத்து நடக்க வேண்டும்; அவாம்களான உங்களுக்கு குர்ஆன் விளங்காது, தமிழ் மொழி பெயர்ப்புகளைப் பார்த்து உங்களால் குர்ஆனை விளங்க முடியாது என்று வீண் பெருமை பேசும் மவ்லவிகளை, அவர்கள் எப்பிரிவினர்களாக இருந்தாலும், அவர்களின் 7:146 இறைவாக்குச் சொல்வது போல் கோணல் வழிகளையே நேர்வழி யாகப் போதிக்கும் கேடுகெட்ட நிலையை அறியாமல், அவர்களின் அப்படிப்பட்ட போதனைகளை வேதவாக்காக ஏற்று அதன்படி நடப்பவர்களுக்கு அபூதாலிபுக்கு ஹிதாயத்-நேர்வழி கிடைக்காதது போல் ஒருபோதும் நேர்வழி கிடைக்கவே கிடைக்காது.
அதற்கு மாறாக 2:186, 7:3, 18:102-106, 33: 36, 59:7 போன்ற இறைக் கட்டளைக்கு முற்றிலும் அடி பணிந்து, எம்மையோ, ஆலிம், அல்லாமா, மார்க்க அறிஞர்கள் எனப் பெருமை பேசும் மவ்லவிகளையோ, மனிதர்களில் யாரையுமோ நம்பிப் பின் பற்றாமல், 9:31 இறைவாக்குக் கூறுவது போல் அல்லாஹ்வாக அவர்களை ஆக்காமல் எவரின் கூற்றாக இருந்தாலும் அது குர்ஆனிலோ, ஆதாரபூர்வமான ஹதீஃதிலோ இருக்கிறதா என்று நேரடியாகப் பார்த்து விளங்கி நடக்க முற்படுகிறவர்களுக்கு, நிச்சயம் அல்லாஹ் 29:69ல் வாக்களித்துள்ளபடி ஹிதாயத்-நேர்வழி காட்டுவான். இது உறுதியிலும் உறுதி. அல்லாஹ் அருள் புரிவானாக. (பார்க்க : 39:17,18)
அன்பார்ந்த அந்நஜாத் வாசகர்களே, வாசகிகளே உங்களிடம் எமது அன்பான வேண்டுகோள்! அந்நஜாத்தில் இடம் பெறும் அனைத்து குர்ஆன் வசனங்களையும், நேரடியாக உங்களிடமுள்ள குர்ஆன் தமிழ் மொழி பொயர்ப்பைச் சுடசுட எடுத்து நேரடியாகப் பார்த்து உள்வாங்கிக் கொள்ளுங்கள். அப்போதுதான் இவை அனைத்தும் இறைவனது வாக்குகள் என்ற உணர்வும் தக்வாவும் ஏற்படும். இறைவன் 29:69ல் வாக்களித்துள்ளபடி நேர்வழி காட்டுவான். 1986லிருந்து நீங்கள் அந்நஜாத்தைப் படித்து வருபவர்களாக இருந்தாலும், அதில் இடம் பெறும் குர்ஆன் வசனங்களின் எண்களை வெறுமனே படித்துவிட்டுச் செல்வதாலோ, அல்லது அந்த எண்களை விட்டுவிட்டு படித்துச் செல்வதாலோ உங்களுக்கு நேர்வழி கிடைக்கும் என்ற உத்திரவாதமில்லை. அதற்கு மாறாக 3:103 இறைக் கட்டளைக்கு அடிபணிந்து குர்ஆனைப் பற்றிப் பிடித்து அன்றாடம் படித்து அதன்படி விளங்கி நடந்தால் மட்டுமே உங்களுக்கு நேர்வழி கிடைக்கும். இன்ஷா அல்லாஹ்.
இந்த உண்மையை அறிய முதன்முதலில் அந்த வெளிநாட்டு சகோதரர் போல், குர்ஆனை எடுத்து வைத்துக் கொண்டு சூன்யம் பற்றி எழுதப்பட்ட ஜூலை, செப்டம்பர் 2014 அந்நஜாத் இதழ்களை மீண்டும் கையில் எடுத்து சூன்யம் பற்றிய கட்டுரைகளை மீண்டும் ஒருமுறை படிக்க முன் வாருங்கள். எப்படிப் படிக்க வேண்டும்? அக் கட்டுரைகளில் இடம் பெற்றுள்ள அனைத்து அத்தியாயம் வசனம் எண்கள் குறிப்பிட்டுள்ள வசனங்களை குர்ஆனைப் புரட்டி குறிப்பிட்ட வசனங்களை நீங்கள் நேரடியாக உள்ளத்தைக் காலியாக வைத்துக் கொண்டு நடுநிலையுடன் படித்து உள் வாங்குங்கள். அல்லாஹ் உங்களுக்குக் கொடுத்துள்ள அறிவைக் கொண்டு ஆழ்ந்து சிந்தியுங்கள். சூன்யம் பற்றிய அனைத்துச் சந்தேகங்களும் தீர்கின்றனவா? இல்லையா? என்று நீங்களே பரீட்சித்துப் பாருங்கள். அல்லாஹ் 29:69ல் வாக்களித்துள்ளபடி நேர்வழி காட்டப் போதுமானவன்.