அபூஃபாத்திமா
நம் நாட்டுக்குச் சுதந்திரம் கிடைத்த 1947லிலிருந்து ஜனநாயக ஆட்சி, போலி ஜனநாயக ஆட்சி, பணநாயக ஆட்சி, குண்டர் நாயக ஆட்சி என முன்னேறி(?) இப்போதும் மீண்டும் மனுநீதி ஆட்சியை, அரசு அரியணையில் அமர்த்தியுள்ளோம். ஜனநாயக ஆட்சி பெரும் செல்வந்தர்களை மேலும் மேலும் செல்வந்தர்களாக்குவது, ஏழை மக்களை மேலும் மேலும் ஏழைகளாக்குவது என்ற சித்தாந்த அடிப்படையிலானது என்பதைப் பார்த்து வருகிறோம். மனுநீதி ஆட்சியோ அதிலும் ஒருபடி மேலே போய் மேல் ஜாதி என்ற பெயரில் ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்றி, பெருங்கூட்டத்தைக் கீழ் ஜாதிகளாக்கி, தங்களுக்கு அடிமைகளாக்கி, மேல் ஜாதியினர் உழைக்காமலேயே உண்டு கொழுத்து வாழ்வாங்கு வாழ வழி வகுப்பதாகும்.
அப்படிப்பட்ட பெருங்கொண்ட மக்களுக்குப் பெருத்தப் பாதகத்தை ஏற்படுத்தும் கொடூர மனுநீதி ஆட்சியைத்தான் போலி ஜனநாயகத்தின் பேரால் அரியணையில் அமர்த்தியுள்ளோம், பாவம்! ஏழை எளிய கீழ் ஜாதியினர் என மேல் ஜாதியினரால் அடையாளப்படுத்தப்படும் மக்கள் இன்னும் எவ்வளவு காலம் இந்தக் கொடூர மனுநீதி ஆட்சியின் கொடூரங்களை அனுபவிக்கப் போகிறார்களோ? இறைவ னுக்கே வெளிச்சம்!
இதிலும் இன்னும் வேதனைக்குரிய விஷயம் மேல் ஜாதியினர் எனப் பெருமைப்படும், 5 சத விகிதம் கூட தேறாதவர்களைத் தங்களின் தோள்களில் சுமந்து அவர்களை ஆட்சி அரியணையில் அமர்த்த அயராது உழைப்பவர்கள், கீழ் ஜாதி என இழிவுபடும் கீழ்த்தட்டு மக்களே. இந்த உண்மையை காவிக் கட்சிகளில் இருக்கும் தாழ்த்தப்பட்ட, தீண்டத்தகாதவர்கள் என இழிவுபடுத்தப்படும் மக்களின் எண்ணிக்கையே உணர்த்தும். அற்ப அறிவு படைத்த மனிதன் தனக்குத் தீங்கு ஏற்படுத்துவதை நன்மை பயப்பதாகவும், நன்மை ஏற்படுத்துவதைத் தீமை பயப்பதாகவும் கருதும் மடமை நிறைந்தவன் என்று இறைவனின் இறுதி வாழ்க்கை நெறிநூல் அல்குர்ஆனின் 2:216, 3:117, 10:44 இறைவாக்குகள் உறுதிப்படுத்துகின்றன.
மனுநீதி என்றால் அற்ப அறிவுடைய (17:85) மனிதன் கற்பனையில் உருவான நீதி என்பதே அதன் பொருளாகும். அந்த அடிப்படையில் இன்று உலகம் முழுவதும் நடைபெறும் ஆட்சி முறைகள் அனைத்தும் அற்ப அறிவு படைத்த மனிதர்களின் கற்பனையில் உருவான ஆட்சி முறைகளே. மன்னராட்சி, சர்வாதிகார ஆட்சி, ஜனநாயக ஆட்சி, கம்யூனிச ஆட்சி, மதச்சார்பு ஆட்சி, மதச்சார்பற்ற ஆட்சி, இவைபோல் இன்னும் எத்தனை வகை ஆட்சிகள் இருக்கின்றனவோ அத்தனையும் அற்ப அறிவு படைத்த மனித மூளையில் உதித்தவையே.
“”கற்றது கையளவு, கல்லாதது உலகளவு” என்று அவ்வைப்பாட்டியே மனித அறிவின் அற்பத் தனத்தை அடையாளம் காட்டுகிறார். மனிதனைப் படைத்த இறைவனும் தனது இறுதி வாழ்க்கை நெறிநூல் அல்குர்ஆனின் 17:85 இறைவாக்கில் “”இன்னும் ஞானத்திலிருந்து உங்களுக்கு அளிக்கப்பட்டது மிகச் சொற்பமேயன்றி வேறில்லை” என்று திட்டமாகக் கூறுகிறது. இறைவனின் முழுமை பெற்ற முக்காலமும் அறிந்த அறிவோடு மனித அறிவை ஒப்பிட்டால் கடலில் ஓர் ஊசியை முக்கி எடுத்தால் அதில் ஒட்டியிருக்கும் கடல் நீர் அளவுதான் மனித அறிவு. இந்த அற்பத்திலும் அற்பமான அறிவைக் கொண்டு, இறைவன் படைத்த மனிதன் இவ்வுலகில் வளமாக, அமைதியாக, சுபீட்ச மாக வாழ வழிகாட்ட முற்பட்டால் அது உரிய பலன் தருமா? ஒருபோதும் தராது!
அதன் தீய விளைவுகளைத்தான் இன்று உலகம் முழுக்க மனித குலத்தினர் அனுபவித்துக் கொண்டிருக்கிறார்கள். இந்த விஷயத்தில் மனிதர்கள் படுமூடர்களாக இருக்கிறார்கள் என்பதை ஓர் உதாரணம் மூலம் விளங்கலாம். சைனா தயாரித்த ஓர் அதிநவீன தொழில் நுட்பக் கருவி. அதை இயக்க சைனாவின் வழி காட்டல் நூலையும், சைனா அனுப்பும் பொறிஞரையும் ஏற்கிறோம். வேறு எந்த நாட்டின் வழிகாட்டல் நூலையும், பொறிஞரையும் ஏற்பதில்லை. இப்படி எந்தெந்த நாடு ஒரு கருவியைத் தயாரித்துக் கொடுத்ததோ அந்தந்த நாட்டின் வழிகாட்டல் நூலையும், பொறிஞரையும் மட்டுமே ஏற்கிறோம். இதில் யாருக்கும் மாற்றுக் கருத்து இருக்க முடியாது. இத்தனைக்கும் நம் நாடு முயற்சித்தால் அக்கருவிகளைச் சுயமே தயாரிக்கவும் முடியும். நம்மால் தயாரிக்க முடிந்த ஒரு கருவிக்கே அதைத் தயாரித்தவனின் வழிகாட்டலையும், பொறிஞரையும் ஏற்கும் நாம், நம்மால் தயாரிக்க முடியாத மனிதக் கருவி, இறைவன் மட்டுமே தயாரிக்க முடிந்த மனிதக் கருவி, அக்கருவியை இயக்க மனிதனே வழிகாட்டல் நூல் (ஜனநாயகம், கம்யூனிசம் போன்றவை) தயாரித்து தனது பொறிஞரைக் கொண்டு இயக்க முற்படுவது மடமையிலும் மடமை நிறைந்த ஒரு மாபாதகச் செயல் என்பதை மறுக்க முடியுமா? சிந்தியுங்கள். அத னால்தான் இன்று உலக மக்கள் அழிவின் விளிம்பில், நரகின் விளிம்பில் நிற்கிறார்கள். இந்த நிலையில் மக்களின் சுபீட்ச வாழ்க்கைக்கு வழி காண்பது அவசியமா? இல்லையா?
எல்லாம் வல்ல, முழுமையாக முக்காலமும் அறிந்த ஏகன் இறைவன் ஆதி மனிதனைப் படைத்து இவ்வுலகிற்கு அனுப்பியதிலிருந்தே வளமான, அமைதியான வாழ்க்கைக்கு வழி காட்டும் நெறிநூல்களையும், நடைமுறைப் படுத்திக் காட்ட இறைத் தூதர்களையும் அனுப் பிக் கொண்டே இருந்தான் (பார்க்க : 2:38,39) எப்படிப் பிறந்த குழந்தையின் வளர்ச்சி படிப்படியாக இருக்கிறதோ, அதேபோல் மனித வாழ்வு முறையும் படிப்படியாகவே வளர்ந்தது என்பது மறுக்க முடியாத உண்மையாகும்.
எனவே முன்னைய இறைத் தூதர்களுக்குக் கொடுக்கப்பட்ட நெறிநூல்கள் தற்காலிகமாக இருந்ததால், அவை முழுமை பெறவும் இல்லை; பதிந்து பாதுகாக்கப்படவும் இல்லை. எனவே ஷைத்தானின் நேரடி ஏஜண்டுகளான மதகுருமார்கள் அவற்றில் தங்களின் அற்ப உலக ஆதாயம் கருதி, சுய கருத்துக்களைப் புகுத்தி அவற்றை நடைமுறைச் சாத்தியமில்லாத வேதாந்தங்கள் நிறைந்த வேதங்களாக்கி விட்டனர்.
எப்படிப் பிறந்த குழைந்தையின் வளர்ச்சி 21 வயதுடன் முழுமையடைகிறதோ, அதேபோல் வாழ்க்கை நெறிநூலும் முழுமை பெற்று, நிரந்தரமானதாக ஆகி, பதிந்து பாதுகாக்கப் பட்டு அரபி மொழியில் அல்குர்ஆனாக இறுதித் தூதர் முஹம்மது(ஸல்) அவர்களுக்கு சுமார் 1450 வருடங்களுக்கு முன்னர் சுமார் 23 வருடங்களாகச் சிறிது சிறிதாக அருளப்பட்டது (பார்க்க : 5:3, 3:19,85, 15:9)
அது மட்டுமல்ல, முன்னைய இறைத்தூதர்களுக்கு, அருளப்பட்டு அந்தந்தக் காலத்தில் நடைமுறையிலிருந்த, மதகுருமார்களால் மனி தக் கருத்துக்களைப் புகுத்தி வேதங்கள் ஆக்கப் பட்ட, இந்து வேதங்கள், தோரா வேதம், ஜபூர் வேதம், பைபிள் வேதம் போன்ற அனைத்து வேதங்களையும் ஏகன் இறைவன் இன்றைய நடைமுறைக்கு ஒவ்வாதவை என அவற்றை இரத்து செய்து விட்டான்.
இது ஒன்றும் ஆச்சரியமில்லை. எந்த ஒரு நாட்டிலும் ஒரு நூறு ஆண்டுகளுக்கு முன்னர் அச்சிடப்பட்டு அந்தக் காலத்தில் செலவாணியில் இருந்த (Curruncy) நோட்டுகள் அந்தந்த அரசுகளால் இரத்து செய்யப்பட்டு, இன்று அவற்றைக் கடைகளில் கொடுத்து பொருள்கள் வாங்க முடியாத-செல்லாத நிலை நடைமுறையில் இருக்கத்தானே செய்கிறது. அவற்றை ஞாப கார்த்தமாக வைத்துக் கொள்ளலாம். நடை முறைப்படுத்த முடியாது. (பார்க்க : 2:4)
இறுதியாக அருளப்பட்ட குர்ஆன் முஸ்லிம்களுடைய வேதம் என்று முஸ்லிம் மதகுருமார்கள் கூறி வருவது தார்ப்பாயில் வடித்தெடுத்த அப்பட்டமான பொய், அல்குர்ஆன் அகில உலக மக்களுக்கும் சொந்தமான வாழ்க்கை நெறிநூல். அவர்கள் எந்த நிலையிலும் அதைப் படித்து விளங்கி அதன் போதனைப்படி நடக்க முன்வர வேண்டும். இதுவே ஒரே நேர்வழி. ஆட்சியாளர்கள் இதன் போதனைப்படி சட்டங்கள் அமைத்து ஆட்சி நடத்த முன்வந்தால் மட்டுமே, இன்று உலகைப் பீடித்திருக்கும் அனைத்துப் பீடைகளும் ஒழிந்து சுபீட்சம் பிறக் கும். வையகம் உய்ய வழிபிறக்கும். அறிவு ஜீவிகளே முறையாக, நடுநிலையுடன் சிந்தித்து நல்லதொரு முடிவுக்கு வாருங்கள்!