அபூ அப்தில்லாஹ்
H. அப்துல் கபூர் என்ற சகோதரர் தேதியிடாத ஒரு நான்கு பக்கக் கடிதத்தை எழுதியுள்ளார். அதில் அபூஹுரைரா, அப்துல்லாஹ் இப்னு முகஃபல், அபூ சுஃப்யான், முஆவியா, யசீது (ரழி-ம்) போன்றோர் முஸ்லிம்கள் அல்ல யஹூதிகள் என்றும் இமாம் புகாரீ(ரஹ்) அவர்களையும் யஹூதி என்று வர்ணித்தும், பல குர் ஆன் வசனங்களுக்குச் சுய விளக்கம் கொடுத்தும் பக்கங்களை நிரப்பியுள்ளார். ஹதீஃத்களை நிராகரிக்கும் இவரும், இவரைப் போன்றோரும் யஹூதிகள் எழுதி வைத்துள்ள சில நூல்களை உருப்போட்டுக் கொண்டு அவற்றை அப்படியே வாந்தி எடுப்பதுடன், அப்பழியை 4:112 இறைவாக்குக் கூறுவது போல் மற்றவர்கள் மீது மிக எளிதாகச் சுமத்துகிறார்கள். உண்மையில் இவர்கள் குர்ஆன் போதனைகள்படியும் நடக்கவில்லை. ஆரம்பக் காலத்தில் முஸ்லிம்களிடையே மதகுருமார்கள் ஏற்படுத்தியுள்ளப் பிளவுகளும், பிரிவுகளும் போதாதென்று, சமீப காலத்தில் இஸ்லாமிய விரோதிகள் மேலும் பிளவுகளை, பிரிவுகளை ஏற்படுத்தும் தீய நோக்குடன் குர்ஆன் வசனங்களுக்குக் கொடுத்த சுய விளக்கங்களை ஷைத்தான் இவர்களுக்கு அழகாகக் காட்டியதின் (பார்க்க : 15:39) விளைவே ஹதீஃத்கள் தேவை இல்லை, குர்ஆன் மட்டும் போதும் என்ற வழிகேடு இவர்கள் தங்கள் உள்ளங்களில் புரையோ டிப் போயிருக்கும் இந்த நச்சுச் சிந்தனையை இக்கட்டுரையைப் படித்து முடிக்கும் வரை ஒதுக்கி வைத்து விட்டு, விருப்பு, வெறுப்பு, கோபதாபம், ஆதரவு, நிராகரிப்பு எதுவும் இல் லாமல் நடுநிலையோடு, சுய சிந்தனையோடு படிக்கும்படி அன்புடன் வேண்டுகிறோம்.
அற்ப அறிவுடனும் (17:85) பலஹீனமானவனுமாகப் படைக்கப்பட்டுள்ள (4:28) மனிதன், இறைவன் அருளியுள்ள நேர்வழியைச் சுயமே விளங்கிச் செயல்பட ஆற்றலுள்ளவனாக இருந்தால், எல்லாம் வல்ல அல்லாஹ் நபிமார்களைத் தனது நேர்வழியை நடைமுறைப்படுத்திக் காட்டத் தெரிவு செய்யாமல் நேரடியாக நேர் வழியைப் பதிவு செய்து கொடுத்திருப்பான். இறைத் தூதர்களை அவதாரங்களாகவும், இறை மகனாகவும், இன்னும் பல வகைகளில் இறைவனுக்கு இணை வைத்து அவர்களைத் தெய்வங்களாக்கி வணங்கும் கேடுகெட்ட நிலை ஏற்பட்டிருக்கவே செய்யாது. அப்படி இருந்தும் அல்லாஹ் நபிமார்களைத் தெரிவு செய்து அவர்கள் மூலம் தனது நேர்வழிச் செய்திகளை ஏன் இறக்கி அருளினான்? சிந்தியுங்கள்.
இதோ அல்குர்ஆன் என்ன கூறுகிறது பாருங்கள்!
(ஆரம்பத்தில்) மனிதர்கள் ஒரே சமூக மாகவே இருந்தனர். பிறகு நன்மாராயம் கூறுவோராகவும், அச்சமூட்டி எச்சரிப்போராகவும் அல்லாஹ் நபிமார்களை அனுப்பி வைத்தான். அத்துடன் மனிதர்களிடையே ஏற்படும் கருத்து வெறுபாடுகளைத் தீர்த்து வைப்பதற்காக அவர்களுடன் உண்மையுடைய நெறிநூலையும் (வேதம்) இறக்கி வைத்தான். எனினும் அதைக் கொடுக்கப்பட்டவர்கள் அவர்களிடம் தெளிவான ஆதாரங்கள் வந்த பின்னரும், தம்மிடையே ஏற்பட்டப் பொறாமை காரணமாகவே மாறுபட்டார்கள். ஆயினும், உண்மையிலிருந்து எதில் அவர்கள் மாறுபட்டார்களோ, அதன் பக்கம் தன் அருளினால் அல்லாஹ் நம்பிக்கை கொண்டோருக்கு நேர்வழி காட்டினான். இவ்வாறே அல்லாஹ் தான் நாடி யோரை நேர்வழியில் செலுத்துகிறான்.
(அல்பகரா : 2:213)
மேலும் அந்நஹ்ல் : 16:44,64 இறைவாக்குகள் என்ன கூறுகின்றன என்று பாருங்கள்.
தெளிவான சான்றுகளையும், நெறிநூல்களையும் (அத்தூதர்களுக்குக் கொடுத்துப்பினோம். நபியே!) மனிதர்களுக்கு அவர்கள் பால் அருளப்பட்டதை அவர்களுக்குத் தெளிவுப் படுத்துவதற்காகவும், அவர்கள் சிந்திப்பதற்காகவும் உமக்கு இந் நெறிநூலை நாம் அருளினோம். (16:44)
(நபியே!) அன்றியும், அவர்கள் எதில் தர்க்கித்துக் கொண்டிருக்கிறார்களோ, அதை நீர் அவர்களுக்குத் தெளிவாக்குவதற்காகவே உம் மீது இந்நெறிநூலை இறக்கினோம். இன்னும், நம்பிக்கை கொண்டுள்ள மக்களுக்கு இது நேர் வழியாகவும், அருளாகவும் இருக்கிறது. (16:64)
குர்ஆனுக்குக் குறிப்பாகச் செயல்படுத்த வேண்டிய முஹ்க்கமாத் வசனங்களுக்கு மேல் விளக்கம் தேவைப்பட்டால், அந்த விளக்கத்தைக் கொடுக்கும் அதிகாரம் நபி(ஸல்) அவர்களுக்கு மட்டுமே உண்டு என்பதை இந்த 2:213, 16:44,64 இறைவாக்குகள் உறுதிப்படுத்துகின்றன. செயல்படுத்த வேண்டிய, நடைமுறைப் படுத்த வேண்டிய, நம்பிக்கை கொள்ள வேண்டிய அனைத்தையும் விளக்கும் முஹ்க்கமாத் வசனங்களுக்கு மேல் விளக்கம் கொடுக்கும் அதிகாரம் அல்லாஹ்வுக்கும் அவனது தூதருக்கும் தவிர வேறு யாருக்கும் இல்லை என்பதை 33:36 இறைவாக்கு அறுதியிட்டு உறுதி கூறுகிறது. அந்த வசனம் வருமாறு:
மேலும் அல்லாஹ்வும், அவனுடைய தூத ரும் ஒரு (மார்க்க) செயலைப் பற்றி முடிவு செய்த பின்னர், அவர்களுடைய அச்செயலில் வேறு அபிப்பிராயம் கொள்ள முஃமினான ஆணுக்கோ, பெண்ணுக்கோ உரிமையே இல்லை. ஆகவே அல்லாஹ்வுக்கும் அவனு டைய தூதருக்கும் எவர் மாறு செய்கிறாரோ, நிச்சயமாக அவர் பகிரங்கமான வழிகேட்டி லேயே இருக்கிறார். (33:36)
இவ்வளவு தெளிவாக நெற்றிப்பொட்டில் சம்மட்டியால் அடிப்பது போல் அல்லாஹ் சொல்லி இருந்தும், அல்லாஹ்வின் குர்ஆன் வழிகாட்டலையும், நபியின் ஆதாரபூர்வமான வழிகாட்டலையும் நிராகரித்து விட்டுப் பின்னர் வந்த அற்ப அறிவையுடைய (பார்க்க : 17:85) மனிதர்களின் வழிகாட்டல்களை ஏற்று நடப்பவர்கள் நாளை மறுமையில் நரகில் கிடந்து வெந்து கரியாகிக் கொண்டு, அவர்கள் நம்பிக்கை வைத்த அகாபிரீன்கள் சாதாத்துகள், அல்லாமாக்கள், அவுலியாக்கள், மவ்லவிகள், அரபி பண்டிதர்கள், உலகியல் அறிஞர்கள், தலைவர்கள் போன்றோரைச் சபித்து, அவர்களுக்கு இரு மடங்கு வேதனைக் கொடுக்கும்படி மன்றாடுவதை 33:66,67,68 இறைவாக்கு கள் படம் பிடித்துக் காட்டுகின்றன. (மேலும் பார்க்க : 7:35-41, 34:31-33, 37:27-33, 38:55-64, 40:47-50, 41:29, 43:36-45) மேலும் 53:2,3,4 இறைவாக்குள் நபி(ஸல்) அவர்களின் சொல், செயல், அங்கீகாரம் அனைத்தும் வஹி மூலம் பெறப்பட்டவையே என்று உறுதிப்படுத்துகின்றன.
நபியின் சுன்னா(நடைமுறை) என்ற ஹதீஃத் தேவையில்லை, குர்ஆன் மட்டும் போதும் என் பது உண்மையானால் 7:3 குர்ஆன் வசனத்தில், அல்லாஹ்வால் இறக்கப்பட்டவற்றையே பின் பற்றுங்கள் என்று இல்லாமல் “”குர்ஆனை மட்டுமே பின்பற்றுங்கள்” என்று அல்லாஹ் நேரடியாகவே கூறி இருப்பான். 53:2,3,4 குர்ஆன் வச னங்கள் நபியின் சுன்னா(ஹதீஃத்)வும் அல் லாஹ்வால் இறக்கப்பட்டவையே என்பதை உறுதிப்படுத்துகின்றன.
இன்னும் 2:213, 16:44,64, 7:157 இறை வாக்குகளை நேரடியாகப் படித்துப் பாருங்கள். 52:48 குர்ஆன் வசனம் கூறுவது போல், அல் லாஹ்வின் நேரடிக் கண்காணிப்பிலும், வஹியின் தொடர்புடனும் இருந்த நபி(ஸல்) அவர்க ளுக்கு, தேவையான முஹ்க்கமாத் வசனங்களுக்கு மேலதிக விளக்கம் கொடுக்கவும், குர்ஆனில் இல்லாத நிலையிலும் சில சட்டத் திட்டங்களை விதிக்கவும் அல்லாஹ்வால் அதிகாரம் கொடுக்கப்பட்டிருந்தார்கள் என்பதை அறிய முடியும். அதே சமயம் 4:59, 33:66-68 இறை வாக்குகள் அல்லாஹ், அவனது தூதர் அல்லாத கலீஃபாக்கள், நபிதோழர்கள், தாபியீன்கள், தப அதாபியீன்கள், இமாம்கள், அவுலியாக்கள், மவ்லவிகள், மவ்லவி அல்லாதவர்கள் என மனி தர்களில் எவருக்குமே வஹி மூலம் பெறப்பட்ட மார்க்கத்தில் அணுவளவும் கூட்டவோ, குறைக்கவோ, அனுமதியே இல்லை என்பதை அறிய முடியும்.
மேலும் 3:32,132, 4:59, 5:92, 8:1,20,46, 24:54,56, 47:33, 58:13, 64:12 ஆகிய 12 இடங்க ளில் அல்லாஹ்வுக்கு வழிபடுங்கள், அவனது தூதருக்கும் வழிப்படுங்கள் என்றும், 3:50, 26:108,110,126,131,144,150,163,179, 43:63, 71:3 ஆகிய 11 இடங்களில் அல்லாஹ்வுக்கு பய பக்தியுடன் நடந்து என்னைப் பின்பற்றுங்கள் என்றும் நபிமார்கள் கூறியதை அல்லாஹ் கூறி இருப்பதும் இவர்களின் கண்களில் பட வில்லையா?
இன்னும் பல திரிபுகளில் ரசூல் என்று வரும் சுமார் 342 குர்ஆன் வசனங்கள், நபி என்று வரும் சுமார் 58 வசனங்களும் இவர்களின் கண்களில் படவில்லையா? இந்த வசனங்கள் அனைத்தையும் தக்வா (இறை உணர்வு)வுடன் படித்து விளங்குகிறவர்கள் நபியின் நடைமுறைகளும் மார்க்கத்திற்கு உட்பட்டவைதான். குர்ஆன் மட்டுமல்ல என்பதை எளிதாக விளங்க முடியும். ஆதாரபூர்வமான ஹதீஃத்களை நிராகரிப்பது குர்ஆனையே நிராகரிப்பதாகும் என்ப தையும் விளங்க முடியும். ஷைத்தான் அல்லாஹ்வின் ஒரேயொரு கட்டளையைச் சுய விளக்கம் கொடுத்து (15:33) நிராகரித்து காஃபிரானான். நரகவாதியானான். இந்த நிலையில் அல்லாஹ்வின் எண்ணற்றக் கட்டளைகளை நிராகரித்து குர்ஆன் மட்டும் போதும். ஹதீஃத்கள் தேவை இல்லை என முஹ்க்கமாத் வசனங்களுக்குச் சுயவிளக்கம் கொடுப்பவர்களின் நிலை என்ன? நாளை அவர்கள் எங்கு போய் சேர்வார்கள்? சிந்திக்க வேண்டாமா? 59:7-ல் அல்லாஹ் நேரடியாகத்தூதர் கொடுப்பதை எடுத்துக் கொள்ளுங்கள். தூதர் தடுப்பதைத் தடுத்துக் கொள்ளுங்கள் என்று கூறி இருப்பதை இவர்கள் படிக்கவில்லையா?
ஹதீஃத்களை நிராகரிப்பவர்கள் நடுநிலையுடன் குர்ஆனைப் படித்து விளங்குவதில்லை. எப்படி மத்ஹபுகாரர்கள், தரீக்காகாரர்கள், ஜ.இ. ஜாக். ததஜ, இதஜ, இன்னும் இவை போன்ற இயக்கத்தினர், முஜாஹித், அஹ்ல ஹதீஃத், ஸலஃபி போன்ற பிரிவினர் அவரவர்கள் நம்பிக்கை வைத்துள்ள ஆலிம், அல்லாமா, பேரறிஞர் போன்றோர் முஹ்க்கமாத் வசனங்களுக்குக் கொடுக்கும் சுய விளக்கங்களை வேத வாக்காகக் கொண்டு செயல்படுகிறார்களோ அதே போல் குர்ஆன் மட்டும் போதும் என்ற பிரிவினரும் அவர்கள் நம்பிப் பின்பற்றும் அறிஞர்கள் முஹ்க்கமாத் வசனங்களுக்குக் கொடுக்கும் சுய விளக்கங்களை வேதவாக்காகக் கொண்டு அவற்றையே மக்களிடையே பரப்பி அவர்களும் வழிகெடுவதோடு, குறுகிய சிந்த னையுடைய இளைஞர், இளம் பெண்களையும் வழிகெடுக்கிறார்கள்.
2:186 இறைக் கட்டளைக்கு முற்றிலும் அடி பணிந்து மனிதர்களில் எவரையும் நம்பாமல் முற்றிலும் அல்லாஹ்வை மட்டுமே நம்பி, 7:3, 18:102-106, 53:2-4, 59:7 குர்ஆன் வசனங்களுக்கு முற்றிலும் கட்டுப்பட்டு, அல்லாஹ்வுக்கும், தங்களுக்குமிடையில் ஆலிம்-மவ்லவி எனப் பெருமை பேசுபவர்களையோ, மவ்லவி அல்லாதவர்களையோ இடைத்தரகர்களாகப் புகுத்தாமல், நேரடியாக குர்ஆனையும், ஆதார பூர்வமான ஹதீஃத்களையும் படித்து, குர் ஆனின் முஹ்க்கமாத் வசனங்களுக்குச் சுய விளக்கம் கொடுக்காமல், எவரது சுயவிளக்கங்களையும் ஏற்காமல் உள்ளது உள்ளபடி யார் எடுத்து நடக்கிறார்களோ அவர்கள் மட்டுமே நேர்வழி நடப்பவர்களாக (0.1%) இருப்பார் கள். மனிதர்களில் எவர் பின்னால் சென்றாலும் நரகை அடையும் (99.9%) பெருங்கூட்டத்து டன் இருப்பார்கள் என்பதை குர்ஆன் அல் ஹிஜ்ர் 15:26 முதல் 44 வசனங்கள் வரை நேரடியாகப் படித்து அறிகிறவர்களே ஏற்பார்கள்.
முஹ்க்கமாத் வசனங்களுக்குச் சுயவிளக்கம், மேல்விளக்கம் கொடுக்கும் ஆலிம்கள், அல்லாமாக்கள், அறிஞர்கள் பின்னால்தான் 99.9% பெருங்கூட்டத்தை ஷைத்தான் செல்ல வைப் பான் என்பதை 15:39 இறைவாக்கும் இன்னும் எண்ணற்ற குர்ஆன் வசனங்களும் உறுதிப்படுத்துகின்றன. பெருங்கூட்டத்தைக் கண்டு மயங்குகிறவர்கள் நரகவாசிகளே! குர்ஆன் மட்டும் போதும் என்று வாதிடுவோர், அதை நேரடியாகக் கூறும் ஒரேயொரு குர்ஆன் வசனத்தையும் தர முடியவில்லை. அதற்கு மாறாக அவர்கள் நம்பிக்கை வைத்துள்ள மனிதர்கள் தரும் சுய விளக்கத்தையே ஆதாரமாகத் தருகிறார்கள். அவர்கள் நம்பிக்கை வைத்துள்ள மனிதர்களை இவர்கள் நரகில் கிடந்து கரியாகிக் கொண்டு வேதனை தாங்க முடியாமல், சபித்து, இரு மடங்கு வேதனை கொடுக்கச் சொல்லி ஒப்பாரி வைப்பதை குர்ஆன் 33:66-68, வசனங்கள் படம் பிடித்துக் காட்டுகின்றன. இந்த வசனங்களும் அல்லாஹ்வின் வழிகாட்டல் படியும் தூதரின் வழிகாட்டல்படியும் நடப்பது கட்டாயம், வெற்றிக்குரிய ஒரே வழி என்பதை உறுதிப் படுத்துகின்றன. படிப்பினைப் பெறத் தவறுகிறவர்கள் பரிதாபத்திற்குரியவர்களே!
இந்தச் சகோதரர் அப்துல் கபூர் அபூஹுரைரா, அப்துல்லாஹ் இப்னு முகஃபல், அபூ சுஃப்யான், முஆவியா, யசீது (ரழி-ம்) ஆகியோரை முஸ்லிம்கள் அல்ல யஹூதிகள் என்று மனம் துணிந்து நம்ப, எழுத அவருக்கு ஆதாரம் என்ன தெரியுமா? 32:29 குர்ஆன் வசனத்தில் வரும் “ஃபத்ஹ்’ என்று அரபி பதத்திற்குத் தீர்ப்பு நாள் என பல தர்ஜுமாக்களில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. ஆனால் வெற்றி நாள் என்பதே சரியான மொழி பெயர்ப்பு. 48:18 கைபர் வெற்றிப் பற்றியும், 61:13 இறைவாக்கு மக்கா வெற்றிப் பற்றியும் கூறுகின்றன. அந்த வெற்றிகளின் சமயத்தில் உயிருக்குப் பயந்து கலிமா சொன்னவர்கள். எனவே அல்லாஹ் அவர்களின் ஈமானை (இறை நம்பிக்கை) அல்லாஹ் ஏற்கவில்லை. எனவே அவர்கள் யஹுதிகள் என்பதே சகோதரரின் தீர்ப்பு.
இந்த 48:18, 61:13 வசனங்கள் யாருக்கு இறங்கின. இறுதித் தூதருக்கா? யூத கைக்கூலிகளுக்கா? இறுதித் தூதருக்குத்தான் இறங்கின என்பதைச் சகோதரர் போன்றோர் மறுக்க முடியுமா? அப்படியானால் 2:213, 16:44,64 இறைக் கட்டளைகள்படி 48:18, 61:13 குர்ஆன் வசனங்களுக்கு தேவைப்பட்ட விளக்கத்தைக் கொடுக்க நபி(ஸல்) அவர்கள் தவறிவிட்டார்களா? அதனால் பின்னால் வந்த அற்ப அறிவையும் (17:85) பெரும் பலவீனத்தையும் உடைய மனிதர்கள் கொடுக்கும் மேல் விளக்கத்தை 15:39 இறை வாக்குக் கூறுவது போல் ஷைத்தான் அவர்களுக்கு அழகாகக் காட்டுவதால் ஏற்று 33:36 இறைவாக்கை நிராகரித்து குஃப்ரிலாகி 33:66-68, இறைவாக்குகள் கூறுவது போல் நாளை நரகை அடைந்து ஒப்பாரி வைக்கப் போகிறார்களா?
இவர் யகூதிகள் எனக் குறிப்பிடும் நபி தோழர்கள் இந்த 48:18, 61:13 குர்ஆன் வசனங்கள் இறங்கிய பின்னரும் நபி(ஸல்) அவர்கள் கூடவே இருந்தார்கள். நபி(ஸல்) அவர்கள் அத் தோழர்களை நீங்கள் எல்லாம் முஸ்லிம்கள் இல்லை, யகூதிகள் என ஃபத்வா கொடுத்து தமது உம்மத்தை விட்டு வெளியாக்கவில்லையே. நபி(ஸல்) அவர்களே செய்யத் துணியாத ஒரு கொடிய செயலை 42:21, 49:16 இறை வாக்குகளை நிராகரித்து குஃப்ரிலாகி முஸ்லிம்களை அதுவும் நபிதோழர்களை யகூதிகள் என்றும், காஃபிர்கள் என்றும் ஃபத்வா கொடுக்கும் அசாத்தியத் துணிச்சல் இவர்களுக்கு எப்படி ஏற்பட்டது? இவர்கள் குர்ஆன் வழிகாட்டல் படி நடப்பவர்களா? அதற்கு மாற்றமாக ஹதீஃத்களை நிராகரிப்பது போல் குர்ஆனையும் நிராகரிக்கும் பாவிகளா? சிந்தியுங்கள்.
இவர்கள் குர்ஆன் மட்டுமே போதும் (அஹ்ல குர்ஆன்) என்ற விதண்டாவாதத்தை நியாயப்படுத்த எடுத்து வைக்கும் ஆதாரங்களில் ஒன்று குர்ஆனோடு ஹதீஃதையும் பின்பற்றக் கடமை என்றால், அல்லாஹ் குர்ஆனைப் பதிந்துப் பாதுகாத்துத் தந்திருப்பது போல், ஹதீஃதையும் பதிந்து பாதுகாத்துத் தந்திருப்பான். அல்லாஹ் தரவில்லை. அதனால் ஹதீஃத் தேவையில்லை என்பதாகும்.
நபி ஆதம்(அலை) அவர்கள் காலத்திலிருந்து இறுதி நபி(ஸல்) அவர்கள் வரை பல்லாயிரக் கணக்கான நபிமார்கள் வந்துள்ளனர். அவர்களில் எவருக்குமே வஹியாக அறிவிக்கப்பட்ட வாழ்க்கை வழிமுறைகளை அல்லாஹ் முழுமைப் படுத்தவில்லை. அவற்றைப் பதிந்து பாதுகாக்கும்படி கட்டளையிடவுமில்லை. அதன் விளைவாக அந்த நபிமார்களின் மறைவுக்குப் பின்னர் அச்சமுதாயங்களில் திருட்டுத்தனமாகப் புகுந்த மதகுருமார்கள், பொய்யான செய்திகளை அல்லாஹ் சொன்னதாக, நபி சொன்னதாகப் புனைந்து மக்களுக்குப் போதித்து வந்தார்கள். அதாவது வேதாந்தங்கள் நிறைந்த வேதங்களாக்கி விட்டார்கள். ஆயினும் ஒரே நேர்வழி நடக்க விரும்பும் மக்கள் அந்த வேதங்களிலிருந்தே உண்மையில் அல்லாஹ் சொன்னதையும், தூதர் சொன்னதையும் பிரித்தறிந்து அவற்றின்படி நடக்கும் சோதனை இருந்தது. அனைத்து நபிமார்களின் சமூகங்களின் நிலை இதுதான்.
அதற்கு மாறாக இறுதித் தூதருக்குக் கொடுக்கப்பட்ட இறுதி வாழ்க்கை நெறிநூல் குர்ஆன் முழுமைப்படுத்தப்பட்டு, பதிந்து பாதுகாக்கவும் பட்டும் விட்டது. உலகம் அழியும் வரை அதுதான் நடைமுறையிலிருக்கும் நெறிநூல் என்று குர்ஆனில் அல்லாஹ் தெளிவாக நேரடியாக அறிவித்தும் விட்டான். (பார்க்க 5:3, 3:19,85, 15:9) இறைவன் புறத்திலிருந்து இறுதித் தூதரின் மறைவுக்குப் பிறகு மார்க்கத்தில் சேர்க்கப் புதிதாக எதுவும் இல்லை என்பதாலும், வஹியின் தொடர்புடைய நபியோ, ரசூலோ வரவே மாட்டார்கள் என்பதாலும் அல்குர்ஆன் பதிந்து பாதுகாக்கப்பட்டதுடன் அல்லாஹ்வால் பாதுகாத்தும் வரப்படுகிறது. (15:9)
அதே சமயம் அல்லாஹ் முன்னைய நபிமார்களின் சமூகங்களுக்கு எப்படிப்பட்ட சோதனையை விதித்திருந்தானோ அதே போல் இறுதி நபியின் சமுதாயத்திற்கும் அப்படிப்பட்ட சோதனை இருப்பதுதானே நியாயம்? இல்லை என்றால் நாளை மறுமையில் முன்னைய நபி மார்களின் சமூகங்கள் இறைவனிடம் “”யா அல்லாஹ்!” இறுதித் தூதரின் சமுதாயத்திற்கு நீ, உனது நெறிநூல் குர்ஆனையும், உனது தூதரின் நடைமுறைகளையும் பதிந்து பாதுகாத்துக் கொடுத்து அவர்கள் நேர்வழி நடப்பதை எளிதாக்கிக் கொடுத்திருக்கிறாய், எங்களுக்கோ, உனது நெறிநூலையும், எங்கள் நபியின் செயல் முறையையும் பதிந்து பாதுகாத்துத் தராமல் எங்களைப் பெரும் துன்பத்திற்கு ஆளாக்கி விட்டாயே! இது நியாயமா? என்று கேட்டால் அதை மறுக்க முடியுமா?
அல்லாஹ்வோ நீதி நியாயம் தவறாதவன், தன் படைப்புகளுக்கு எவ்வித அநீதியும் இழைக்கமாட்டான். எனவே அவனது நடைமுறையில் எவ்வித மாறுதலும் இல்லை என்பதை 17:77, 33:38,62, 35:43, 48:23 ஆகிய இறைவாக்குகளில் திட்டமாக அறிவித்துள்ளான். அல்லாஹ்வின் வழிகாட்டல் முழுமை பெற்று சமபூரணமாகி விட்டதாலும், உலகம் அழியும் வரை அல்குர் ஆனே நடைமுறையில் இருக்க வேண்டியதாலும், புதியதோர் நபியோ, ரசூலோ வந்து அல்லாஹ்விடமிருந்து மார்க்கம் பற்றி புதிதாக வஹி மூலம் செய்தி பெறும் நிலை இல்லாததாலும் குர்ஆன் பதிந்து பாதுகாக்கப்பட்டிருப்பதோடு, அதைப் பாதுகாக்கும் பொறுப்பையும் அல்லாஹ்வே ஏற்றுள்ளான். (15:9)
அதற்கு மாறாக முன்னைய சமூகங்களுக்கு நேர்வழியைக் கண்டறிய சோதனை இருந்தது போல், இறுதித் தூதரின் சமூகத்திற்கும் சோத னையாக இருக்க வேண்டும் என்ற அடிப்படையிலேயே நபியின் நடைமுறைகளை (ஹதீஃத்) அல்லாஹ் குர்ஆனைப் போல் பதிந்து பாதுகாக்கக் கட்டளையிடவுமில்லை. இது முன்னைய சமூகங்ளில் திருட்டுத்தனமாகப் புகுந்து அல்லாஹ் சொன்னதாக, நபி சொன்னதாக பொய்ச் செய்திகளைக் கற்பனை செய்து மக்களை ஏமாற்றி வயிறு வளர்த்த ஷைத்தானின் ஏஜண்டாக, வரம்பு மீறிச் செயல்படும் தாஃகூத்களான அம்மதகுருமார்களை அடிக்கு அடி ஜானுக்கு ஜான் முழத்துக்கு முழம் முஸ்லிம் மதகுருமார்களும், குர்ஆனின் ஒரே பொருளுள்ள இரண்டாவது பொருளே எடுக்க முடியாத, எடுக்கக் கூடாத முஹ்க்கமாத் வசனங்களுக்கு ஆளாளுக்கு விதவிதமான விளக்கங்களைக் கூறி 21:92, 23:52 இறைக் கட்டளைப்படி ஒரே உம் மத்தாகவும் 22:78, 41:33 இறைக் கட்டளைகள் படி முஸ்லிமீன், மினல் முஸ்லிமீன் என்று இருப்பதை நிராகரித்து சுயமாக பல பிளவு, பிரிவுப் பெயர்களை இட்டுக் கொண்டு வழிகேட்டில் செல்கிறார்கள். ஆதாரபூர்வமான ஹதீஃத்கள் அதிகபட்சம் ஆறு ஆயிரத்தைத் தாண்டாத நிலையில் சுமார் 10 லட்சம் பொய்யான ஹதீஃத்களைக் கற்பனை செய்து பெரும் வழிகேட்டில், நரகை நோக்கி மக்களை இட்டுச் செல்வது உண் மைதான். அதற்காக ஆதாரபூர்வமான ஹதீஃத் களையும் நிராகரிப்பது பெரும் வழிகேடேயாகும்.
எனவே ஹதீஃத்கள் குர்ஆன் வசனங்களைப் போல் உடனுக்குடன் பதிந்து பாதுகாக்கப்பட வில்லை. அதனால் மார்க்கத்தை மதமாக்கி அதையே வயிற்றுப் பிழைப்பாகக் கொண்டுள்ள மதகுருமார்கள் பல லட்சக்கணக்கான ஹதீஃத்களைக் கற்பனை செய்து மக்களை வழி கெடுத்து வருகிறார்கள். அதனால் ஹதீஃத்கள் தேவை இல்லை, குர்ஆன் மட்டும் போதும் என்ற வாதம் விதண்டாவாதமாகும். ஹதீஃத் களை மட்டுமல்ல, குர்ஆனையும் நிராகரிக்கும் மிகமிகத் தீய செயலாகும். இட்டுக்கட்டப்பட்ட, பலவீனமான ஹதீஃத்கள் லட்சக்கணக்கில் காணப்படுவதால் தான் எண்ணற்றப் பிளவுகளும், பிரிவுகளும் ஏற்பட்டுள்ளன என்ற விதண்டாவாதமும் ஏற்புடையதல்ல. காரணம் குர்ஆன் மட்டும் போதும் என்று கூறும் அஹ்ல குர்ஆன் சகோதரர்களிட மும் பல பிளவுகளையும், பிரிவுகளையும் பார்க் கத்தான் செய்கிறோம்.
2:213, 42:14 இறைவாக்குகள் என்ன கூறுகின்றன என்று பாருங்கள். நெறிநூல் (வேதம்) கொடுக்கப்பட்டவர்களே அவர்களிடம் தெளிவான ஆதாரங்கள் வந்த பின்னரும், தம்மிடையே உண்டான பொறாமைக் காரணமாக மாறுபட்டார்கள் என்று 2:213விலும், தங்களிடம் ஞானம் (நெறிநூல்) வந்த பின்னர் தங்க ளுக்கிடையேயுள்ள பொறாமையின் காரண மாகவே அன்றி அவர்கள் பிரிந்து போகவில்லை என்று 42:14விலும் அல்லாஹ் தெளிவாக நேரடியாகக் கூறியுள்ளான். இதிலிருந்து என்ன உறுதிப்படுகிறது? உம்மத்தில் பிளவுகளுக்கும், பிரிவு களுக்ரும் குர்ஆனோ, ஹதீஃதோ காரணம் அல்ல; முஸ்லிம்களிடையே குறிப்பாக மதகுரு மார்களிடையே ஏற்படும் போட்டி, பொறாமையே பிளவுகளுக்கும், பிரிவுகளுக்கும் முக்கியக் காரணம் என்பது உறுதிப்படவில்லையா?
உண்மையில் இம்மதகுருமார்கள் இம்மையைவிட மறுமையை அதிகமாக நேசித்து, அல்லாஹ்வின் பொருத்தத்தையும் சுவர்க்கத்தையும் குறிக்கோளாகக் கொண்டு செயல்படுவார்களானால் அவர்களிடம் போட்டி பொறாமையோ அதனால் பிளவுகளோ ஒருபோதும் ஏற்படாது. இதற்கு நபிதோழர்கள் அழகிய முன் மாதிரியாக இருக்கிறார்கள். அதற்கு மாறாக இம்மதகுருமார்கள் மறுமையை விட இம்மையை அதிகமாக நேசிக்கிறார்கள். இல்லை என்றால், வட்டி, அநாதைகள் சொத்து, திருட்டு, கொள்ளையடித்தல், பிறரது பொருள்களை அநீதமாக அபகரித்தல் இப்படி ஹராமான வழிகள் எத்தனை உண்டோ அவை அனைத்தையும் விடக் கொடிய ஹராமான நூற்றுக்கணக் கான குர்ஆன் வசனங்கள் பலவிதமாக மிகக் கடுமையாகக் கண்டிப்பதைக் கண்டு கொள்ளாமல், அவ்வசனங்களை நிராகரித்து குஃப்ரிலாகி தூய மார்க்கத்தை மதமாக்கி அதையே வயிற்றுப் பிழைப்பாகக் கொள்வார்களா? போட்டி பொறாமை, பிளவுகளுக்கு, பிரிவுகளுக்குக் காரணம் புரிகிறதா?
அழிந்துபடும் அற்ப உலகில் கிடைக்கும் பட்டம் பதவி, பணம் காசு, ஆள் அம்பு, பெருங்கூட்டம் இவற்றில் பேராசை கொண்டவர்களே, நரகை நிரப்ப இருக்கும் ஒவ்வொரு ஆயிரத்திலும் 999 நபர்களில் பெருங் கூட்டத்தைத் தங்கள் பின்னால் அணி திரளச் செய்ய வேண்டும் என்ற பேராசையில்தான் ஒன்று பட்ட ஒரே சமுதாயத்தைப் பல பிளவுகளாக, பிரிவுகளாக ஆக்குகிறார்களே அல்லாமல் குர் ஆனோ, ஹதீஃதோ அல்லவே அல்ல.
எப்படிப் பிளவுகளையும், பிரிவுகளையும் ஏற்படுத்துகிறார்கள் தெரியுமா? நம்பிக்கை கொள்ள வேண்டிய, நடைமுறைப்படுத்த வேண்டிய, செயல்படுத்த வேண்டிய, ஒரே பொருளுள்ள, இரண்டாவது பொருளே இல்லாத, இரண்டாவது பொருள் கண்டிப்பாக எடுக்கக் கூடாத. “ஆயாத்தும் முஹ்க்கமாத்” குர்ஆன் வசனங் களுக்கு அவரவர்கள் மனோ இச்சைக்கு ஏற்றவாறு, மனோ இச்சையைக் கடவுளாக்கி (பார்க்க : 7:176, 18:28, 20:16, 25:43, 28:50, 45:23) ஆளாளுக்கு விதவிதமான சுயநல விளக்க்களை தஃப்சீர் என்ற பெயரால் எழுதி வைத்துக் கொண்டு அவற்றைத் தூக்கிப் பிடிப்பதே பிளவு களுக்கும், பிரிவுகளுக்கும் காரணமாகும்.
அவை போதாதென்று லட்சக்கணக்கான பொய் ஹதீஃத்களைக் கற்பனை செய்து கொண் டும், ஒரே கருத்துள்ள ஆதாரபூர்வமான ஹதீஃத் களிலும் தங்கள் மனோ இச்சைக்கு ஏற்றவாறு விதவிதமான பொருள்களைக் கற்பனை செய் தும் அடம் பிடிப்பதால் பிளவுகளும், பிரிவு களும் ஏற்படுகின்றன. ஆக பிளவுகளுக்கும், பிரிவுகளுக்கும் காரணம் அற்பமான இவ்வுலகி யல் ஆதாயங்களைக் குறிக்கோளாகக் கொண்டு அவற்றை அடைவதில் ஏற்படும் போட்டி பொறாமையே பிளவுகளுக்கும், பிரிவுகளுக்கும் காரணமே அன்றி குர்ஆனோ, ஹதீஃதோ அல் லவே அல்ல. எனவே ஆதாரபூர்வமான ஹதீஃத் களை நிராகரிப்பவர்கள் குர்ஆனையும் நிரா கரிக்கிறார்கள் என்பதை இந்த ஆக்கத்தில் எழு தப்பட்டுள்ள முஹ்க்கமாத் வசனங்களின் நேர டிக் கருத்துக்களை உள்ளது உள்ளபடி படித்து விளங்கினால் நிச்சயம் ஒப்புக் கொள்வார்கள்.
மேலும் சகோதரர் அப்துல் கபூர், அவர் எழுதியுள்ள நான்கு பக்கங்களிலும் எவனோ ஒரு யூதக் கைக்கூலி குர்ஆனுக்குக் கொடுக்கும் சுயவிளக்கங்களை எடுத்து எழுதியுள்ளாரே அல்லாமல் குர்ஆன் நேரடியாகக் கூறும் கருத்துக்கள் அல்ல. அவர் தனது கடிதம் 3ம் பக்கத்தில் இரவு 12 மணிக்கு ஒரு வினாடி தாண்டினால் அடுத்த நாள் ஆகிவிடும் என்று எழுதி இருப்பதே அவர் யூத கிறித்தவர்களைப் பின்பற்றுகிறார் என்பதை உறுதிப்படுத்துகிறது. எல்லாம் வல்ல அல் லாஹ் எமக்கும், அவருக்கும், முஸ்லிம்களுக்கும், ஆதத்தின் சந்ததிகளுக்கும் நேர்வழி காட்டப் போதுமானவன். துஆ செய்கிறோம்.