“இலவசம்” இன்று அங்கிங்கெனாதபடி பொது மக்களின் உள்ளங்களில் நீங்கா இடம் பெற்று விட்டது. உலகளாவிய நிலையில் மக்களாட்சியில் மக்களை வசியப்படுத்தி வசப்படுத்த “இலவசம்” மிகப் பெரும் உபகரணமாக உள்ளது. எந்த அரசியல் கட்சி அதிக இலவசங்களை வாரி வழங்குகிறதோ அதற்கு தங்களின் பொன்னான வாக்குகளை அளிக்க மக்களும் தயாராகி விடுகின்றனர். பாவம்! இப்பாமர மக்கள் அறியாதது:- இலவச ஆசை காட்டி ஆட்சிக்கு வரும் எவரும் அவர்களது சொந்த சொத்து சுகங்களிலிருந்து இலவசம் தருவதில்லை.
இந்தியாவை சுமார் 800 வருடங்கள் ஆட்சி செய்த மொளகலாய ஆட்சியில் முஸ்லிகளின் மீது எவ்வித சலுகையுமின்றி 2.5 சதவீதம் இஸ்லாமிய ஜகாத் வரியும், மாற்று மதத்தினரில் வசதியுள்ளவர்கள் மீது மட்டும் (அனைவர் மீதுமல்ல!) போரில் கலந்து கொள்ள வேண்டாமென்ற பெரும் சலுகையுடன் ஒரு சதவீத “ஜிஸ்யா” வரியிட்டதை பெரும் அநீதமாக சரித்திர புரட்டல் செய்துள்ள இந்திய ஆட்சியாளர்கள், அடுத்து சுமார் 150 வருடங்கள் காலனி ஆதிக்கத்தில் இந்தியாவை சுரண்டி கொள்ளையடித்து தன் நாட்டிற்கு கொண்டு சென்ற ஆங்கில ஆட்சியில் உப்புக்குக்கூட வரி விதித்தற்காக “உப்பு சத்தியாகிரகம்” என விடுதலைக் குரல் கொடுத்தவர்கள் இன்றைய மக்களாட்சியில் “இலவச ஆசை காட்டி ஆட்சிக்கு வந்ததும் மக்களுக்கான அத்தியாவசிய பொருட்களான உப்பு, குடிநீர், மின்சாரம், வரிக்கும் வரி எனவும், கழிவு நீர் சுத்தம் செய்வதற்கும் வரியென நம் மீது அளவிலா வரிச் சுமைகளை சுமத்தியோ, அல்லது முழு மனித இனத்தையே பாழ்படுத்தும் மது, மாது, லாட்டரி, சூது அல்லது இவைகளனைத்தையும் கொள்முதலாகக் கொண்ட கேளிக் கூத்து போன்ற ஆட்டம், பாட்டங்கள் மூலமோ மக்களைக் கெடுத்து கிடைக்கும் பணத்தில் ஒரு சில சில்லரைகளை மக்களுக்கு இலவசமாக அளித்து அதனை தங்களின் பெரும் சேவையாகக் காட்டிக் கொள்கின்றனர். மீண்டும் ஆட்சியைப் பிடிக்க முயற்சிக்கின்றனர். இதில் ஓரளவு இன்றைய அரசியல்வாதிகள் வெற்றியும் பெற்றுள்ளனர் என்பதை எவரும் மறுக்க முடியாது.
இலவசத்தை ஏதிர்பார்ப்பது, ஏற்பது பிச்சை எடுப்பதற்கு சமமானது. என்ற சுய மரியாதை இலக்கணத்தைக்கூட அறியா பொது மக்கள் உலகளவில் ஓரளவு இருந்தாலும் குறிப்பாக இந்தியாவில் மிக அதிகம். பொது மக்களின் அறியாமை சென்ற நூற்றாண்டு வரை ஆன்மீகவாதிகளின் மிக உயர்ந்த முதலீடாக இருந்தது. இன்றைய சமய ஆன்மீகவாதிகளுடன், மக்களாட்சியின் அரசியல்வாதிகளுக்கும் செல்வத்துடன் சேர்த்து ஆதிக்க ஆட்சிக்கு வரவும் முதலீடாகவுள்ளது. இயற்கையாக ஒரு நாட்டு மக்களின் நம்பிக்கைகள், சிந்தனைகள், உணர்வுகள், செயல்பாடுகள் பெரும்பாலும் அந்நாட்டின் சமய ஆன்மீகவாதிகளின் கைப்பிடியில் தான் உள்ளது. அதற்கு உரமிட்டு வளர்ப்பது அந்நாட்டை ஆளும் ஆட்சியதிகார அரசியல் வர்க்கம் தான் என்பதை அகில உலக சரித்திர சான்றுகள் சாட்சி பகர்கின்றன. யாசித்து, பிச்சை எடுத்து வாழ்வதையே வாழ்வாதாரமாகக் கொண்ட சமயவாதிகளை, ஏன்? கடவுளே யாசித்து, பிச்சை எடுத்து வாழ்ந்தார் என்ற அடிப்படை கொள்கைகளைக் கொண்ட இந்தியாவில் “இலவசம்” ஒரு தனி மனிதனின் சுய மரியாதை சம்பந்தப்பட்டது என்பது புத்தம் புதிய கருத்தாகும். எனவே நமது தலைப்பான “இலவசத்தை”ப் பற்றி இவ்வுலகில் வாழ அவசியமான உலகியல் ரீதியாகவும், அதனைத் தொடர்ந்து ஆன்மீக ரீதியாகவும் பார்ப்போம்.
“உழைப்பின்றி உயர்வில்லை” “உழைப்பே உயர்வு தரும்” என பாலர் பள்ளி முதல் பாடம் கற்று தரும் நாம் “இலவசம்” என்பது எவ்வித உழைப்புமின்றி, அதற்கான எவ்வித முனைப்பும், முயற்சியு மின்றி கிடைக்கும் வசதிகளில் வாழ்வதாகும். அது சோம்பேறிகளின் வாழ்வாகும் என்பதை அறியாமல் இலவசத்திற்கு அடிமையாவது மிகப் பெரும் பேதமையாகும். இப்பரந்த உலகில் பகுத்தறிவுள்ள மனிதன் சுய மரியாதையுடன் கண்ணியமாக வாழ பல்வேறு வாழ்வாதாரங்களை இயற்கை நமக்கு நல்கியுள்ளதை எவரும் மறுக்க முடியாது. இதனை ஏற்பவரே ஆன்மீகவாதி. இவ்வுலகில் பிறக்கும் ஒவ்வொரு மனிதனும்எதுவுமின்றி, நிர்வாணமாக, புறத்திரையற்ற நிலையில் பிறக்கிறான். பின்பு அவன் வளர, வளர அவனது முயற்சி, உழைப்புக்கொப்ப தன்னுடைய வாழ்வாதாரங்களை சுயமாக சம்பாதித்து பெயரும், புகழுடன் வாழ முற்படுகிறான்; வாழ்கிறான். அதுவே கண்ணியமான வாழ்வாக எல்லோராலும் ஏற்கப்படுகிறது.
பிச்சை எடுத்தோ, யாசித்தோ செல்வம் சேர்த்து வாழ்பவனை சமுதாயத்தில் ஒருவரும் மதிக்க மாட்டார்கள். அவனைக் கண்டு பெரும்பாலோர் நம்மிடமும் வந்து கை ஏந்துவானே! யாசிப்பானே!! பிச்சைக் கேட்பானே! என பயந்து விரண்டோடவே செய்வர். அவனுடன் உறவு கொள்வதையோ, தொடர்பு கொள்வதையோ விரும்பவே மாட்டார்கள். அதாவது இலவசத்தை எதிர்பார்ப்பவனுக்கும், ஏற்பவனுக்கும் முழு மனித சமுதாயத்தில் அவனுக்கான சுயமரியாதை, மதிப்பு கிடைக்கவே கிடைக்காது. பின் எப்படி சுயமரியாதையுடன் அவன் இச்சமுதாயத்தில் பெயரும், புகழுடன் வாழ முடியும். இதன் மூலம் இப்பரந்த உலகில் ரீதியாக இலவசத்தை எதிர்பார்ப்பவனுக்கும், ஏற்பவனுக்கும் முழு மனித சமுதாயத்தில் மதிப்பு, மரியாதையில்லை என்பது நிதர்சனமான சத்தியம்! உண்மை!! அனைவரையும் சீர்தூக்கி, பகுத்தறிந்து சிந்திக்க வேண்டுகிறோம்.
தனிமனித சுயமரியாதை ஏகனுக்கு சொந்தமானது!
இவ்வுலகில் பிறவி எடுக்கும் ஒவ்வொரு மனிதனும் ஏகனிறைவனின் முழுமையான பிரதிநிதி என்பது இயற்கை மார்க்கம் இஸ்லாம் கூறும் சத்திய வாக்கு. (பார்க்க: அல்-குர்ஆன்: 2:30) மனிதன் ஏகனின் பிரதிநிதி என்றால் அவனது சுயமரியாதை ஏகனின் சுய மரியாதை என்பதை எவரும் மறுக்க முடியாது. இதனை திருமறைக் குர்ஆன் கூறும் பாங்கினைப் பாருங்கள்:-
இவர்கள் கண்ணியத்தை தேடுகிறார்களா? நிச்சயமாக கண்ணியமெல்லாம் அல்லாஹ்வுக்கே உரியது. (அல்-குர்ஆன்: 4:139).
அவர்கள் வர்ணிப்பதை விட்டும், கண்ணியத்தின் இரட்சகனான உம்முடைய இறைவன் தூயவன். (அல்-குர்ஆன்: 37:180
எவன் சுயமரியாதை (இஷ்ஷத்தை) கண்ணியத்தை நாடுகிறானோ, அவன், எல்லாக்கண்ணியமும் அல்லாஹ்வுக்கே உரியதாகும் (என்பதை அறிந்து கொள்ளட்டும்); தூய்மையானவாக்குகளெல்லாம்அவன் பக்கமே மேலேறிச் செல்கின்றன.அவன் செய்யும் சீர்திருத்த (ஸாலிஹான) செயல்களையெல்லாம்அவன் உயர்த்துகிறான். (இதன் மூலம் அவனது கண்ணியம், சுயமரியாதை உயர்த்தப்படுகிறது என்பது மய்யக் கருத்து) (அல்-குர்ஆன்: 35:10).
கண்ணியம் அல்லாஹ்வுக்கும், அவனுடைய தூதருக்கும், ஏகனை ஏற்றவர்களுக்கே உரியது, எனினும், இந்நயவஞ்சர்கள் அறிந்து கொள்ளமாட்டார்கள். (அல்-குர்ஆன்: 68:8).
நீர் கூறுவீராக! ஓ அல்லாஹ்! ஆட்சிகளுக்கெல்லாம் அதிபதியே! நீ விரும்புகிறவருக்கு ஆட்சியைக் கொடுக்கிறாய். நீ விரும்புகிறவரிடமிருந்து ஆட்சியை அகற்றியும் விடுகிறாய்! நீ நாடியோரை கண்ணியப்படுத்துகிறாய்! இழிவாக்குகிறாய்! நன்மைகள் யாவும் உன் கைவசமேயுள்ளன. அனைத்து பொருட்களின் மீதும் நீ ஆற்றலுள்ளவன். (அல்-குர்ஆன்: 3:26)
அவர்களுடைய (விரோதமான) பேச்சு உம்மை சஞ்சலப்படுத்த வேண்டாம்; ஏனெனில் நிச்சயமாக அனைத்து (வல்லமையும்)கண்ணியமும் அல்லாஹ்வுக்கே உரியது; அவனே (யாவற்றையும்) செவியுறுபவன், நன்கறிபவன். (அல்-குர்ஆன்: 10:65).
எல்லாம் வல்ல ஏகனிறைவன் தன்னுடைய இவ்வுலக முழுமையான பிரதிநிதியாகிய மனிதன் கண்ணியத்துடன், சுயமரியாதையுடன் வாழ எல்லா வசதி வாய்ப்புகளையும் வாரி, வாரி வழங்கியுள்ளான். மனிதனுடன் தொடர்புடைய இவ்வுலக படைப்புகளும், வானிலுள்ள சூரியன், சந்திரன் பல நூறு கோளங்கள், பல்லாயிரம் கோடி விண்மீன்கள் அனைத்தும் மனிதனுக்கு ஏதாவதொரு விதத்தில் பயனுள்ளதாகவே அமைந்துள்ளன. இம்மனிதன் மற்றப் படைப்பினங்களுக்கில்லாத தன் பகுத்தறிவால் ஆய்வு செய்தால் பற்பல நன்மைகளை தானும் பெற்று, அனுபவித்து மற்ற படைப்பினங்களுக்கும் நல்கி நலமுடன் வாழ முடியும். இதன் மூலம் இவ்வுலகை ஏகன் நாடும் விதத்தில் அமைதிப் பூங்காவாக, சாந்தி, சமாதானச் சோலையாக ஆக்கலாம் என்ற ஏகனின் இறைமறைக் கூற்றுக்கொப்ப இன்றைய நவீன அறிவியல் ஆய்வுகள் மெய்ப்பித்து வருவதை நாம் நிதர்சனமாக கண்டு வருகிறோம். இவையே ஏகனிறைவன் நமக்களித்த மிகப் பெரும் அருட்கொடை. ஏகன் “பொறுப்பாண்மைமிக்க அறக்காவளர் (Trustees)களாக” நம்மை படைத்ததன் முக்கிய நோக்கமென்பதையும் அறியலாம்.
இதனடிப்படையில் ஏகனின் ஆணைக்கு கிஞ்சிற்றும் மாற்றமின்றி தன் கடமைகளை சரியாக நிறைவேற்றி வரும் இயற்கையுடன் நாம் இணைந்து வாழ்ந்தால் அவ்வியற்கை நமக்கு அளவிலா அருட்கொடைகளை வாரி வழங்க ஏகன் அதற்கு கட்டளையிட்டுள்ளான். இயற்கையுடன் இணைந்து வாழ்தல் எப்படி? என்பதை அறியாமல் பெரும்பாலோர் ஏழ்மையிலும், வறுமையிலும், நோய் நொடிகளுடனும் வாழ்ந்து வருகிறோம். ஆதி மனிதன் இப்பூலகிற்கு வந்தபோது இன்றைய நவீன உலகமில்லை. இன்றைய நவீன உலகம் மனிதனின் சுயமுயற்சியால், தொடர் உழைப்பால் உருவானது. சோம்பேறிகளால் உருவாகவில்லை. பூமி எவ்விதம் செம்மைப்படுத்தினால் நாம் நலமாக வாழலாம் என ஆய்தறிந்தவனின் கடிய முயற்சி, உழைப்பு இன்றைய நவீன உலகம்.
இதற்கான வசதி, வாய்ப்புகளையும் ஏகன் மனிதனுக்கு அருளியே நம்மை இப்பூமியில் ஏகனின் பிரதிநிதியாக்கினான். அப்படி உழைப்பவனுக்கு உறுதுணையாக இருக்கவே ஏகன் இயற்கைக்கு ஆணையிட்டுள்ளான். எனவே இயற்கை நம்மிடமிருந்து உழைப்பை எதிர்பார்க்கிறது. உழைப்பவனின் முயற்சிக்கொப்ப உதவி செய்கிறது. சோம்பேறிகளால் உலகிற்கு எவ்வித நன்மையுமில்லை. மனித குலத்தின் வளர்ச்சி, உலக முன்னேற்றம் உழைப்பவர்களால் மட்டுமே முடியும். இலவசத்தில் வாழும் சோம்பேறிகள் இவ்வுலகில் வாழவே அருகதையற்றவர்கள். இதன் மூலம் இயற்கை நமக்கு எதனையும் இலவசமாக தரவில்லை என்பதை உணரலாம். இப்பரந்த உலகில் இலவசத்தை எதிர்பார்ப்பவனுக்கும், ஏற்பவனுக்கும் இவ்வுலகிலும் மதிப்பு, மரியாதையில்லை, இயற்கையும் அவனுக்கு உதவப் போவதில்லை. உலகிற்கே அவன் ஒரு பாரமாக வாழ்ந்து தனக்கும், தன்னைச் சார்ந்துள்ளவர்களுக்கும் பயனற்றவனாகிறான். என்பது நிதர்சனமான சத்தியம்! உண்மை!
இல்லாதோரின் நிலை
இலவசம் பெறும் நிலையில் ஏழை, எளியோர், வறியோர் இவ்வுலகில் உள்ளனரே! அவர்களின் நிலை என்ன? அவர்களுக்கு தான தர்மம் வழங்கி உதவிட எல்லா சமயங்களும் கூறுகின்றன. “தர்மம் தலை காக்கும்!” என ஒழுக்க நியதிகள் அறிவுரை கூறுகிறது! போன்ற நியாயமான வினாக்களுக்கு விடை காணாவிட்டால் இந்த ஆக்கம் அர்த்தமற்றதாகி விடும். செல்வம் உள்ளவனும், இல்லாதவனும் இருப்பதே உலக முன்னேற்றத்திற்கு அத்தியவசிய தேவைகளாகும்; மக்களிடையில் பொருளாதார ஏற்றத் தாழ்வுகள் இருப்பதும் இயற்கையின் நியதியாகும். செல்வம் இருப்பவன் இருப்பதை பாதுகாத்துக் கொள்ளவோ அல்லது அதனை வளர்க்கவோ மேலும் முற்படுகிறான், முயற்சிக்கிறான். செல்வமில்லாதவன் அவனிடம் தன் உழைப்பால் ஊதியம் பெற்று தன் சுயத்தேவையையும் பூர்த்தி செய்து கொள்வது மட்டுமின்றி அதற்கு வாய்ப்பளித்த செல்வந்தனின் செயலுக்கும் உதவுகிறான். இதன் மூலமே உலக முன்னேற்றம் நிகழ்வதை அறியலாம். அனைவரும் செல்வச் செழிப்புடன் தன்னிறைவு கண்டால் உலகில் வேலை செய்ய ஆளே கிடைக்கா நிலை ஏற்பட்டு உலக முன்னேற்றம் ஸ்தம்பித்து விடும். இங்கும் உழைப்புதான் ஊதியமாகிறது. இலவசமல்ல. இருப்போர் ஏதாவதொரு விதத்தில் தன்னுடைய ஆதிக்கத்திலிருப்போருக்கு உதவிட வேண்டும் என்பதும் ஏகனின் ஏற்றமிகு நாட்டமாகும். அதனால் அனவரும் பொருளாதார ரீதியாக சமமாகிவிட முடியாது. கொடுத்தவரே உயர்ந்தவர், அவர் ஏகன் இரட்சகனின் அளவற்ற அருட்கொடையால் மன திருப்தியடைவார் என வாக்குறுதி அளிப்பதையும் பாரீர்:-
அல்லாஹ் உங்களில் சிலரை சிலரைவிட செல்வத்தில் மேன்மைப்படுத்தி இருக்கிறான்; இவ்வாறு மேன்மையாக்கப்பட்டவர்கள்; தங்களுடைய செல்வத்தைதங்கள் வலக்கரங்களுக்கு உட்பட்டு(த்தும் ஆதிக்கத்தில்)இருப்பவர்களிடம்கொடுத்து, அவர்களும் இவர்கள் செல்வத்தில்சமமான உரிமை உள்ளவர்கள்எ ன்று ஆக்கிவிடுவதில்லை(அவ்வாறிருக்க) அல்லாஹ்வின் அருட்கொடையையா? இவர்கள் மறுக்கின்றனர். (அல்-குர்ஆன்: 16:71).
இன்னும், அல்லாஹ் உங்களுக்காக உங்களிலிருந்தே மனைவியரை ஏற்படுத்தியிருக்கிறான்; உங்களுக்கு உங்கள் மனைவியரிலிருந்து சந்ததிகளையும்; பேரன் பேத்திகளையும் ஏற்படுத்தி, உங்களுக்கு நல்ல பொருட்களிலிருந்து ஆகாரமும் அளிக்கிறான்; அப்படியிருந்தும், (தாமே கற்பனை செய்துகொண்ட) பொய்யானதின்மீது நம்பிகைக்கொண்டு ஏகனின் அருட்கொடையை இவர்கள் நிராகரிக்கிறார்களா? (அல்-குர்ஆன்: 16:72).
தான் எவ்வித பிரதியுபகாரமும் நாடாமல், தம் மேலான இரட்சகனின் திருப்பொருத்தத்தை மட்டும் நாடி தான, தர்மம் செய்பவர் ஏகனின் அளவற்ற அருட்கொடையால் திருப்தி பெறுவார். (அல்-குர்ஆன்: 92: 19 முதல் 21).
ஒரு மனிதன் உயிர் வாழ அத்தியவசிய தேவைகள்: ஊண், உடை, இருப்பிடம் மட்டுமே! உலகில் இவை அனைவருக்கும் சரிசமமாக வழங்கப்படவிலை என இயற்கையின் மீதோ, இயற்கையைப் படைத்த ஏகனின் மீதோ குற்றம் சாட்ட முடியாது; குற்றம் சாட்டவும் கூடாது. ஏனெனில், ஏகனின் இயற்கை அனைவருக்கும் சரிசமமாகவே தன் அருளைப் பொழிந்து கொண்டிருக்கிறது. இவ்வுலக மேன்பாட்டின், முன்னேற்றத்தின் முயற்சிக் கொப்பவே அவ்வருளைப் பெற்று தனது சுயத்தேவைக்கு அதிகமாக செல்வ செழிப்புடனோ, குறைவாகப் பெற்று ஏழையாகவோ வாழ்கிறான். இங்கு உழைப்பு, முயற்சிதான் ஒவ்வொரு மனிதனின் பொருளாதார ஏற்றத் தாழ்வுக்கு காரணம் என்பது தெளிவாகிறது.
இயற்கை மார்க்கம் இஸ்லாம் உழைத்து வாழ்வே ஆணையிடுகிறது. உழைக்கும்படியான உடல் வலிமையுள்ளவனும், அறிவு திறனுள்ளவனும் உழைத்துத் தான் வாழ வேண்டும்; எவரிடமும் யாசிக்கவே கூடாது; ஓர் உண்மை இறையடியான் (முஸ்லிம்) ஏகனைத் தவிர எவரிடமும் யாசிக்கவே மாட்டான் என தினசரி ஒவ்வொரு இறைவழிபாட்டி (தொழுகையி)லும் சுமார் 40 தடவைகள் சத்திய வாக்குமூலம் வாங்குகிறது இஸ்லாம். தர்மம் கொடுக்கும் கை உயர்ந்தது; யாசிக்கும் கை தாழ்ந்தது; எனவே மற்றவர்களுக்கு கொடுக்கும் கரங்களாக உயர்வாக இருங்கள், யாசிக்கும் கரங்களாக தாழ்ந்து விடாதீர்கள், யாசித்து வாழ்பவன் மறுமையில் முகத்தில் எவ்வித சதைபற்றுமின்றி அழகுமின்றி எழுப்பப்படுவான், என ஏகனின் இறைத்தூதர் (ஸல்) அவர்கள் யாசித்தலின் பாதிப்பை பட்டியலிட்டு வெறுத்து ஒதுக்கி வாழ அறிவுறுத்தினார்கள். நமக்கருளப்பட்ட இறுதி இறைத்தூதர் (ஸல்) அவர்கள் எவரிடமும் யாசித்து உண்ணவே மாட்டார், என்பது அவரது வருகைக்கு முன்பே அவரைப் பற்றி முந்தைய வேத நூற்கள் கூறிய சத்திய வாக்குகள். இதனடிப்படையில் தான் முந்தைய காலங்களில் வேத நூற்கள் அருளப்பட்ட மஜூஸி, யூத, கிறித்துவ அறிஞர்களான ஸல்மான் பின் அல்-பார்சி (ரழி), அப்துஸ்ஸலாம் (ரழி) போன்ற நபித்தோழர்கள் இஸ்லாத்தில் இணையக் காரணமாயிற்று என்பது சரித்திரச் சான்றுகளாகும்.
தனி மனிதனின் சுயமரியாதையைக் கெடுக்கும் யாசித்தலை தவிர்க்க வலியுறுத்தும் இஸ்லாம் இல்லாதோருக்கு இருப்போர் இலவசமாக தான தர்மங்களை வாரி வழங்கவே ஆணையிடுகிறது. அதற்கான வழிமுறைகளையும், சட்டத்திட்டங்களையும் எதிர்பாராத ஏழ்மையாலும், பஞ்சம், பட்டினியாலும், அன்றாடத் தேவைகளுக்கான பொருளாதார வசதியின்றி வறுமையின் இழிநிலையில் கூனிக் குறுகி யாசிப்போருக்கும், யாசிக்க வெட்கமுற்று முடங்கியிருப்போருக்கும் தனித்தனி சட்டமாக வகுத்து அவரவர் தகுதித் தரமறிந்து அவர்களது சுயமரியாதைக்கு ஊறு ஏற்படாவண்ணம் உதவிட வேண்டும்; இருப்போர், இல்லாதோருக்கான ஒழுக்க விதிமுறைகள் என்னென்ன? ஒருவருக்கொருவர் எப்படி உதவிட வேண்டும், அதற்கான வரையறைகள் யாவை? என்ற இறையாணையை செயல்படுத்தி ஓர் உன்னத உயர் சமுதாயத்தை இறுதி இறைத்தூதர் (ஸல்) மதீனாவில் வாழ்ந்த பத்து வருடங்களில் உருவாக்கித் தந்த சரித்திரச் சான்று இன்றுமுள்ளது. ஆனால், இம்முறையை செயல்படுத்த அவரைத் தங்களின் தலைவராக ஏற்று ஒவ்வொரு இறை வழிபாட்டிலும் அவர் கூறியபடி, செய்தபடி, செய்து காட்டியபடி, அங்கீகரித்தபடி தான் செய்வேன் என பிடிவாதம் பிடிப்போரும் இப்பொருளாதார திட்டத்தை செயல்படுத்த முன் வரவில்லை என்பது வருந்தத்தக்க செய்தியாகும். இங்கு அத்திட்டத்தை விவரிப்பது நமது நோக்கமல்ல. இலவசத்தைப் பற்றி மட்டும் ஆய்வு செய்வோமாக!
இலவசம் பெற்றவனிடமிருந்து எதனையும் எதிர்பார்க்க்க் கூடாது என்பது ஏகனின் இயற்கை விதி. இஸ்லாமிய நியதி. பெயர், புகழ், ஏன்? நன்றியைக் கூட எதிர்பார்க்கக் கூடாது என்பது ஏகனின் இறுதிமறையின் சட்டம். பாரீர்:-
ஏகனின் பொருத்தம் போதுமே! நன்றியைக் கூட எதிர்பாராமல் தர்மம் செய்க!
ஏகனிறைவன் நமக்களித்திருக்கும் எல்லா அருட்கொடைகளும் நமக்களிக்கப்பட்ட இலவசம், தர்மம் அல்ல. இவ்வுலகில் அவனுடைய ஏகபோகப் பிரதிநிதியான நாம் அவன் நாடும் அன்பு, பாசம், பரிவு, சாந்தி, சமாதனம் இப்பூலகில் நிலவப்பட வேண்டும், அதன் மூலம் அவனது எல்லாப் படைப் பினங்களும் பூரண பயன் பெற வேண்டும் என “பொறுப்பாண்மைமிக்க அறக்காவளர்(Trustees)களாக” மனிதனைப் படைத்துள்ளான். அறக்காவளருக்கு கொடுக்கப்பட்ட பொறுப்புகளை அவரிடம் ஒப்படைக்கப்பட்ட அருட்கொடைகளை பொறுப்பு கொடுத்தவரின் விருப்பப்படி நிறைவேற்ற வேண்டுமேயன்றி அவர் விருப்பப்படி உபயோகிக்கவோ, வீணாக்கவோ அவருக்கு உரிமையில்லை. எனவே நம்மைச் சுற்றியுள்ள ஏழை, எளியோருக்கும், ஆதரவற்ற அநாதைகளுக்கும், இன்னல் இடுக்கண், இடர்பாடுகளில் சிறைப்பட்டோருக்கும் எப்படி செலவழிக்க வேண்டுமென்பதையும் நமக்கு பொறுப்பளித்த ஏகன் ஏற்றமுடன் கூறுவதைப் பாருங்கள். இவர்களின் தகுதியறிந்து இலவசமாகவே தரக் கூறுவது எதனை? எப்படி என்பதை சிறிது சிந்திக்கத் தருகிறோம். ஏகனின் பொறுப்பாண்மைமிக்க அறக்காவளராக வாழ்ந்தவர்களை நல்லவர்கள் எனப் புகழ்ந்துரைத்து நவில்வதைப் பாருங்கள்.
நிச்சயமாக நல்லவர்கள் தங்கள் நேர்ச்சைகளை நிறைவேற்றுவார்கள்; (அல்-குர்ஆன்: 76:7).
மேலும், அ(வ்விறை)வன் மீதுள்ள பிரியத்தினால் ஏழைகளுக்கும், அநாதைகளுக்கும், சிறைப்பட்டோருக்கும்உணவளிப்பார்கள். (அல்-குர்ஆன்: 76:8).
“உங்களுக்கு நாங்கள் உணவளிப்பதெல்லாம், அல்லாஹ்வின்முகத்திற்காக (அவன் திருப்பொருத்தத்திற்காக);
உங்களிடமிருந்து பிரதிபலனையோ, (உங்கள்) நன்றியைக்கூட நாங்கள் நாடவில்லை“என்று அவர்கள் கூறுவர்கள். (அல்-குர்ஆன்: 76:9).
வறுமையிலும் கையேந்தாமல் இருப்பதைக்கொண்டு) திருப்தியாய் இருப்போருக்கும், இறப்போருக்கும் உண்ணக்கொடுங்கள். இவ்விதமாகவே, நீங்கள் நன்றி செலுத்தும் பொருட்டு அவற்றை உங்களுக்கு வசப்படுத்திக் கொடுத்திருக்கிறோம். (அல்-குர்ஆன்: 22:36).
இவ்விறையாணைப்படி ஏழை, எளியோர்கள், ஆதரவற்ற அநாதைகள், இன்னல் இடுக்கண், இடர்பாடுகளில் சிறைப்பட்டோருக்கு உணவளித்து உபசரிக்க வேண்டும், அதற்காக அவர்களிடமிருந்து நன்றியைக் கூட எதிர்பார்க்கக் கூடாது என ஆணையிடுகிறான். அவனது திருமறையில் மற்றொரு வசனத்தில் இதனை விளக்கும் விதமாக எதையாவாது எதிர்பார்த்து தர்மம் செய்பவர்களின் நிலையைப் பற்றிக் கூறுகையில் நம் இன்றைய தர்ம கொடையாளிகளின் நிலை ஏகனிடம் எப்படியானது என்பது இலகுவாக விளங்க போதுமானது.
ஏகனிறை நம்பிக்கை கொண்டவர்களே! அல்லாஹ்வின்மீதும், இறுதிநாளின் மீதும் நம்பிக்கை கொள்ளாமல்,மனிதர்களுக்குக் காட்டுவதற்காகவே தன்பொருளைச் செலவழிப்பவனைப் போல், கொடுத்ததைச் சொல்லிக் காண்பித்தும்,நோவினைகள் செய்தும் உங்கள் தான தர்மங்களைப் பாழாக்கிவிடாதீர்கள்;. அவனுக்கு உவமையாவது, ஒரு வழுக்குப்பாறையாகும்;. அதன்மேல் சிறிது மண்படிந்துள்ளது, அதன்மீது பெருமழை பெய்து (அதிலிருந்த சிறிது மண்ணையும் கழுவித்) துடைத்துவிட்டது. இவ்வாறே அவர்கள் செய்த-(தானத்)திலிருந்து யாதொருபலனையும் அடையமாட்டார்கள்;இன்னும், அல்லாஹ் இறைமறுப்பாளர்களை நேர்வழியில் செலுத்துவதில்லை. (அல்-குர்ஆன்: 2:264).
அல்லாஹ்வின் பாதையில் எவர் தங்கள் செல்வத்தைச் செலவிட்ட பின்னர், அதைத் தொடர்ந்து அதைச் சொல்லிக் காண்பிக்காமலும், அல்லது (வேறுவிதமாக) நோவினை செய்யாமலும் இருக்கின்றார்களோ அவர்களுக்கு அதற்குரிய நற்கூலி அவர்களுடைய இரட்சகனிடத்தில் உண்டு இன்னும் – அவர்களுக்கு எத்தகைய பயமுமில்லை அவர்கள் துக்கமும் அடையமாட்டார்கள். (அல்-குர்ஆன்: 2:262).
கனிவான இனிய சொற்களும், மன்னித்தலும்; தர்மம் செய்தபின் நோவினையைத் தொடரும்படிச் செய்யும் தர்மத்தைவிட மேலானவையாகும்;. தவிர அல்லாஹ் (எவரிடத்தும், எவ்விதத்) தேவையுமில்லாதவன்; மிக்க பொறுமையாளன். (அல்-குர்ஆன்: 2:263).
அல்லாஹ்வின் திருப்பொருத்தத்தை அடையவும், தங்கள் ஆத்மாக்களை உறுதியாக்கிக் கொள்ளவும், யார் தங்கள் செல்வங்களைச் செலவு செய்கிறார்களோ அவர்களுக்கு உவமையாவது, உயரமான (வளமுள்ள) பூமியில் ஒருதோட்டம் இருக்கிறது. அதன்மேல் பெருமழை பெய்கிறது. அப்பொழுது அதன் விளைச்சல் இரட்டிப்பாகிறது. இன்னும், அதன்மீது அப்படிப்பெருமழை பெய்யாவிட்டாலும் சிறு தூறலே போதுமானது. அல்லாஹ் நீங்கள் செய்வதையெல்லாம் பார்க்கின்றான். (அல்-குர்ஆன்: 2:265).
இவ்விறை வசனங்கள் நாம் ஏழை, எளிய, வறிய செல்வம் இல்லாதோருக்கு இலவசமாக, தானம், தர்மமாக கொடுத்ததை சொல்லிக் காட்டக்கூட கூடாது என்று வலியுறுத்துகிறது. வலது கை கொடுப்பதை இடது கைகூட அறியா நிலையில் கொடுக்க ஆணையிடுகிறது. இதன் மூலம் எதிர்பாராத ஏழ்மையில், பஞ்சம் பட்டினியால், அன்றாடத் தேவைகளுக்கான பொருளாதார வசதியின்றி வறுமையின் இழிநிலையில் கூனிக்குறுகி யாசிப்போர், யாசிக்க வெட்கமுற்று முடங்கியிருப்போர்களின் தனி மனித சுயமரியாதை, கண்ணியம் பாதுகாக்கப்படுகிறது. இலவசம் பெற்றவர் சமுதாயத்தில் சுயமரியாதை, மதிப்பு, கண்ணியம் நாடுபவரானல் முதல் தடவைப் பெறும் இலவச தானம், தர்மம், “ஜகாத்” இறைவரி போன்றவற்றை தங்களின் பொருளாதார முதலீடாகக் கொண்டு, தங்களின் சுயஉடல் வலிமை, அறிவுத் திறனால் உழைத்து முன்னேறி, மீண்டும் இலவச தானம், தர்மம், “ஜகாத்” இறைவரி போன்றவற்றிக்கு தேவையற்றவர்களாக மாற முடியும், வெகு விரைவில் தாங்களே இலவச தானம், தர்மம், “ஜகாத்” இறைவரி போன்றவற்றை மற்றவர்களுக்கு தரும் இறைப்பேரருள் பெற்றவர்களாக வாழ முடியும். இம்மாற்றம் ஏற்பட தானம், தர்மம் தரும் செல்வந்தர்கள் நாம் மேலே குறிப்பிட்டுள்ள இறையாணக்கு ஏற்ப செயல்பட வேண்டும் என்பது மட்டும் மிக மிக அவசியம்.
அப்படிப்பட்ட ஓர் உன்னத உயர் சமுதாயத்தை தான் இறுதி இறைத்தூதர் (ஸல்) மதீனாவில் வாழ்ந்த பத்து வருடங்களில் உருவாக்கிச் சென்றார்கள். இப்பத்து வருடங்களில் பல நபித்தோழர்கள் இறைத்தூதர் (ஸல்) அவர்களிடமிருந்தும், செல்வந்தர்களான அபூபக்கர் (ரழி), உஸ்மான் பின் அஃபான் (ரழி) போன்ற நபித்தோழர்களிடமிருந்தும் இலவசமாக, தானம், தர்மங்கள், “ஜகாத்” போன்ற இறைவரி போன்றவற்றைப் பெற்றுள்ளதை நபிமொழி நூல்களில் அபரிமிதமாகக் காண முடிகிறது. ஆனால், எந்த நபித்தோழரும் ஒரு தடவைக்கு மேல் இலவச தானம், தர்மம், “ஜகாத்” இறைவரி போன்றவற்றை பெற்றதாகக் காணவே முடியவில்லை. ஆனால், எவ்வித புறத் தொழிலும், உடல் உழைப்புமின்றி மார்க்கத்தை முழுமையாக கசடறக் கற்க முயற்சித்த, நபியவர்களின் கடைசி ஐந்து வருடங்கள் மட்டும் உடனிருந்த அபூஹுரைரா (ரழி), பத்து வயது முதல் நபியவர்களுக்கு சேவகம் புரிந்த அனஸ் பின் மாலிக் (ரழி), அலி பின் அபீதாலிப் (ரழி), கண் ஒளியற்ற உம்மு மக்தூம் (ரழி) போன்றோர்கள்கூட தங்களின் ஏழ்மையிலும் கூனிக் குறுகி எவரிடமும் யாசித்ததாகவோ, கை ஏந்தியதாகவோ நபிமொழி நூல்களில் காண முடியவில்லை.
தான் கொடும் பசியால் வாடியபோதும் தன் சுயமரியாதை குலையா வண்ணம் திருக்குர்ஆன் வசனத்திற்கு பொருள் கேட்பது போல தன் பட்டினி நிலையை தெரிவித்து உணவு கேட்ட விதம் நபி (ஸல்) அவர்களிடமிருந்து அபூஹுரைரா (ரழி) நமக்கு கற்றுத் தரும் நல்லதொரு பாடம். சொந்த ஊரிலிருந்து துரத்தியடிக்கப்பட்டு, இருக்க இடம்கூடமின்றி புலம் பெயர்ந்துமதினாவில் குடி புகுந்த இறைத்தூதர் (ஸல்) அவர்களால் இது எப்படி சாதிக்க முடிந்தது! இது அனைவரும் சிந்திக்க வேண்டிய செய்தியாகினும் இவரை தங்களின் இருலோக வழிகாட்டியாக ஏற்று வாழும் இறை நம்பிக்கையாளர்(முஸ்லிம்)கள் அவசியம் சீர்தூக்கி சிந்திக்க வேண்டுகிறோம். செயல்படுத்த ஆசிக்கிறோம்.
இலவசத்தை எதிர்பார்ப்பதும், ஏற்பதும் மிகப் பெரும் அவமானம், இழிகுணம், தனி மனித சுய மரியாதையைச் சீரழியச் செய்யும் செயல் என்பதை தன் சுய வாழ்வு நெறியாக இறைத்தூதர் (ஸல்) வாழ்ந்து காட்டினார்கள். அவரை முழுமையாகப் பின்பற்றிய நபித்தோழர்களும் செயல்படுத்தினார்கள். ஆரம்பக் காலத்தில் கடிய வறுமையில் ஏழ்மையிலிருந்த நபித்தோழர்கள் முதல் நூற்றாண்டின் முடிவில் அகில உலகே வியக்கும் பொருளாதார சீர்திருத்தங்களை, சட்டத்திட்டங்களை உலகிற்கே வகுத்தளித்தது அசைக்க முடியா சரித்திரச் சான்றுகளாக இன்றுமுள்ளது. இந்த அடிப்படையில் தான் எல்லாமறிந்த ஏக வல்லோன் தன்னுடைய ஏகபோக பிரதிநிதியாக இவ்வுலகிற்கு அனுப்பப்பட்ட மனிதனுக்கு தான் அருளிய அருட்கொடைகள் அனைத்தும் இலவசமாக, தானம், தர்மமாக கொடுக்கவே இல்லை. ஏகனின் பிரதிநிதியாக அவனுடைய எல்லாப் படைப்பினங்களுக்கும் பயனளிக்க வாழவும், வாழ்விக்கவும் கொடுக்கப்பட்டக் கூலி – ஊதியம் என்கிறான்.
நாம் ஒரு அலுவலகத்தில் பணியமர்த்தப் பட்டால் நமக்கு கொடுக்கப்பட்டப் பணியை ஒழுங்காக செய்தால் பணியமர்த்திய முதலாளி மாத முடிவில் அதற்குரிய கூலியை மனமுவந்து கொடுப்பார். அவரது மனம் நெகிழச் செய்தால் முதலாளி யிடமிருந்து பெரும் வெகுமதியும் கிடைக்க வாய்ப்புண்டு. முதலாளியின் விருப்பத்திற்கு மாறாக, நாம் சுய விருப்பத்தில் செயல்பட்டால் நிச்சயம் நாம் முதலாளியின் அன்பைப் பெற தகுதியற்றவர்களாகி விடுகிறோம். மேலும் அவரது கடும் கோபத்திற்கு ஆளாகி அவரது தண்டனைக்கும், வேதனைக்கும் ஆளாக நேரிடும். இவ்வுதாரணம் நம்மை இவ்வுலகின் முழுமையான பிரதிநிதியாக்கிய எல்லாம் வல்ல ஏகனின் மறுமை செயல்பாட்டை விளங்க போதுமானது.
இலவசம் பெற்றவர் உரிமையில் எவரும் தலையிட முடியாது:-
தானம், தர்மம், இலவசத்தைப் பெற்றவர் அச்செல்வத்திற்கு, பொருளுக்கு ஏகபோகமாக முழு உரிமையாளராகி விடுகிறார். அதனை அவர் விரும்பிய வழியில் உபயோகிக்கவோ, செலவழிக்கவோ, அதன் மதிப்பறியாத அவர் அதனை மலிவான விலைக்கு விற்றுவிடவோ (இன்றைய அரசுகள் தரும் இலவச, விலையில்லாப் பொருட்கள் இதற்கு நிதர்சனமான உதாரணமாகும்), மற்றொருவருக்கு கொடுத்துவிடவோ, ஏன்? அதனை சேதப்படுத்தி, வீணடிக்கவோகூட அவருக்கு உரிமையுண்டு. அதனைப் பற்றி வினா எழுப்பவோ, விசாரிக்கவோ அத்தானம், தர்மம, இலவசம் கொடுத்த நபருக்கே உரிமையில்லை. தான் கொடுத்த தானம், தர்மத்தை திருப்பிக் கேட்பது நாயின் இழிகுணம் என ஏகனின் இறுதித்தூதர் (ஸல்) அவர்கள் நமக்கு அறிவுரைப் பகர்ந்துள்ள பாங்கினைப் பாரீர்:-
வாந்தியை விழுங்கும் நாய்
“தான் அளித்த தர்மத்தை திரும்பப் பெற்றுக் கொள்பவன் தன் வாந்தியைத் தானே விழுங்கும் நாய்க்கு ஒப்பாவான். இவ்விழிகுணம் நமக்கில்லை.” என ஏகனின் இறைத்தூதர் (ஸல்) அவர்கள் அறிவுறுத்தினார்கள்.
அறிவிப்பு: அப்துல்லாஹ் பின் அப்பாஸ் (ரழி); ஆதாரங்கள்: புகாரி: CD Nos: 2401, 2430 & 2431; Eng. Nos: 3/762, 790 & 791; (ர.அ.த: 3/2589, 2621 & 2622); முஸ்லிம்: CD Nos: 3047 to 3051; Eng. Nos: 3/3955 to 3970; (ர.அ.த: 3/3317 to 3320); அபூதாவூத்: பாடம்: புயூஃ – எண்: 81; நஸயீ: பாடம்: ஹிப்பாஹ்: எண்கள்: 3 & 4; இப்னு மாஜ்ஜா: பாடம்: ஸதக்காஹ்: எண்: 1; முஸ்னது அஹ்மது: 1/40, 54, 217, 227, 289, 349, 350; 2/27, 175, 208.
தானம், தர்மம், இலவசத்தைப் பெற்றவர் அப்பொருளை சேதப்படுத்துவதையோ, வீணடிப்பதையோ பார்த்து மனம் வெதும்பி அதனைக் கொடுத்தவர் விலை கொடுத்து திருப்பி வாங்கக்கூட இஸ்லாத்தில் இடமில்லை என்பதை கீழ் காணும் நபிமொழி படம் பிடித்துக் காட்டுவதையும் காணீர்:-
உமர் பின் அல்-கத்தாப் (ரழி) அவர்கள் அறிவிக்கிறார்கள்: நான் ஒரு ஏழை நபித்தோழருக்கு என் ஒரு போர்க் குதிரையை இறைவழியில் உபயோகிக்க தர்மமாகக் கொடுத்தேன். அவர் ஒழுங்காக பராமரிக்கவில்லை. எனவே அக்குதிரையை குறைந்த விலைக்கு அவர் விற்றுவிடுவாரோ என பயந்து அக்குதிரையை நானே திருப்பி விலைக்கு வாங்கிக் கொள்ள நாடினேன். ஏகனின் இறுதித் தூதர் (ஸல்) அவர்களிடம் இதற்கான இஸ்லாமிய விதிமுறையைக் கேட்டேன். அதற்கு ஏகனின் இறுதித்தூதர் (ஸல்) அவர்கள், “நீ தானமாகக் கொடுத்த அக்குதிரையை அவர் ஒரு திர்ஹத்திற்கு விற்றாலும் திருப்பி அவரிடமிருந்து வாங்கி விடாதே!” எவரொருவர் “தான் அளித்த தர்மத்தை திரும்பப் பெற்றுக் கொள்கிறரோ அவர் தன் வாந்தியைத் தானே விழுங்கும் நாய்க்கு ஒப்பாவார்”, என அறிவுரை பகர்ந்தார்கள்.
அறிவிப்பு: உமர் பின் அல்-கத்தாப் (ரழி); அப்துல்லாஹ் பின் உமர் (ரழி); ஆதாரங்கள்: புகாரி: CD Nos: 2432; Eng. Nos: 3/792; (ர.அ.த: 3/2623); முஸ்லிம்: CD Nos: 3044 to 3047; Eng. Nos: 3/3949 to 3954; (ர.அ.த: 3/3313 to 3316); அபூதாவூத்: பாடம்: புயூஃ – எண்: 81; நஸயீ: பாடம்: ஹிப்பாஹ்: எண்கள்: 3 & 4; இப்னு மாஜ்ஜா: பாடம்: ஸதக்காஹ்: எண்: 1; முஸ்னது அஹ்மது: 1/40, 54, 217, 227, 289, 349, 350; 2/27, 175, 208.
இந்நபிமொழி ஒழுக்கச்சட்டங்கள் அனைத்தும் தான் கொடுத்த தானம், தர்மம், இலவசத்தைச் சொல்லிக் காட்டக்கூட கூடாது என்று ஏகனிட்ட மேற்கண்ட இறைவாக்குகளின் அடிப்படையிலானது என்பதை எவரும் மறுக்க முடியாது. ஏகனிறைவன் தானிட்ட வாக்குகளுக்கு மாறு செய்வதேயில்லை என்பதும் ஏகனே தனக்கிட்டுக் கொண்ட சட்ட வரம்புகளாகும் (பார்க்க: அல்-குர்ஆன்: 2:80, 3:9, 13:31, 22:47, 30:6, 39:20). அதனடிப்படையில் வாழ்ந்து காட்டிய நம் இருலோக வழிகாட்டி இறைத்தூதர் (ஸல்) அவர்களின் கூற்றின்படியும் இவ்வுலகில் ஏகனின் ஏகபோக பிரதிநிதியாக அனுப்பப்பட்ட மனிதனுக்கு ஏகன் அளித்துள்ள அளவற்ற அருட்கொடைகளான வசதி வாய்ப்புகள் அனைத்தும் இலவசமாகக் கொடுக்கபடவில்லை. அவன் நம்மை அனுப்பிய குறிக்கோளை செம்மையாக, சரியாக செயலாற்றக் கொடுக்கப்பட்டக் கூலி – ஊதியமாகக் கொள்ள வேண்டும். வேரொறு கோணத்தில் அது நமக்கு ஏகனால் கொடுக்கப்பட்ட முன்-கடன் என்றாலும் மிகையாகாது. அதன் விளக்கத்தைப் பார்ப்போம்.-
எல்லாம் அறிந்த ஏகனிறைவன் இம்மனிதனுக்கு அளவற்ற அருட்கொடைகளை இலவசமாகக் கொடுத்திருந்தால் அதனை சொல்லிக் காட்டக்கூட கூடாது என்பது அவனே தன் மீது சட்டமாக்கியுள்ள போது அவன் நமக்களித்த அருட்கொடைகளையும் சொல்லிக் காட்டக் கூடாது. ஆனால் அவனது அருள்மறைக் குர்ஆனில் தான் இம்மனிதனுக்கு அருளிய அருட்கொடைகளைத் தெளிவாக சொல்லிக் காட்டுவதையும், அதனை நினைக்காமல் வாழ்பவன் நன்றிக் கெட்ட அநீதக்காரன் என சாடுவதையும் சான்றோடு காணீர்:-
அல்லாஹ்வின் அருட்கொடைக)ளைநீங்கள்கணக்கிட்டால், அவற்றை (வரையறைசெய்து) நீங்கள்எண்ணிமுடியாது!நிச்சயமாகஅல்லாஹ்மிக்கமன்னிப்பவன்;மிகக்கருணையுடையோன். (அல்-குர்ஆன்: 16:18)
நீங்கள் அவனிடம் கேட்ட அனைத்தையும் அவன் உங்களுக்குக் கொடுத்தான்; ஏகனின் அருட்கொடைகளை நீங்கள் கணிப்பீர்களாயின் அவற்றை நீங்கள் எண்ணி முடியாது! நிச்சயமாக மனிதன் மிக்க அநியாயக்காரன்; மிக்க நன்றி கெட்டவன். (அல்-குர்ஆன்: 14:34)
இதனடிப்படையில் ஏகன் இம்மனிதனுக்கு அருளியுள்ள அளவிலா அருட்கொடைகள் அனைத்தும் இலவசமாகக் கொடுக்கப்படவில்லை என்பது தெளிவாகிறது. மேலும் “தானம், தர்மம், இலவசத்தைப் பெற்றவனின் ஏகபோக தனிமனித உரிமைகளை விளக்கிய இறைத்தூதர் (ஸல்) அவர்கள் “தான் அளித்த தானம், தர்மம், இலவசத்தைத் திரும்பப் பெறவோ, அதனைப் பற்றி விசாரிக்கவோ, ஏன் மலிவான விலைக்குக்கூடத் திருப்பி வாங்கவோ, சிந்திக்கவோகூட கூடாது, அது தன் வாந்தியைத் தானே தின்னும் நாய்க்கு ஒப்பாகும் இழிகுணம்” என நமக்கு அறிவுறுத்தியதும் ஏகனின் நாட்டப்படியே என்பதையும் எவரும் மறுக்க முடியாது. ஆனால், நம்மைப் படைத்து, பரிபாலித்து, பாதுகாத்து இரட்சிக்கும் ஏகன் இரட்சகன் நமக்களித்த அனைத்து அருட்கொடைகளைப் பற்றியும் நியாயத் தீர்ப்பு நாளில் விசாரிப்பேன், அனைத்தும் பதிவு புத்தகத்தில் (Auditing Record book) பதியப்பட்டு பாதுகாக்கப்பட்டு வருகிறது, அதற்காக ஒவ்வொருவர் மீதும் வானவர்கள் (கிராமன் காதிபீன்) பொறுப்பு சாட்டப்பட்டுள்ளனர். மேலும் நமக்கு ஏகனால் அருட்கொடையாக அருளப்பட்டு நாம் நேசத்துடன் பாதுகாத்த நம் உடல் உறுப்புகளே சாட்சிகளாக வரும், நாம் இவ்வுலகில் செய்த ஒவ்வொரு நற்செயலுக்கு வெகுமதியும், தீயச் செயலுக்கு தண்டனையும் வழங்கப்படும், இதில் அணுவளவும் அநீதம் இழைக்கப்பட மாட்டாது, எனவே உலகப் படைப்புகளில் உயர்வான மனிதன் ஏகனிறைவனுக்கு மட்டும் அடிமையாக வாழ்ந்து தன் பொறுப்பை உணர்ந்து இவ்வுலகில் செயல்பட ஏகன் எச்சரிப்பதை இறைவுணர்வுடன் சிந்தித்து செயல்படுங்கள். அவனே நேர்வழி காட்டுவானாக!
நிச்சயம் நாம் விசாரிக்கப்படுவோம்:-
நீர்அநாதையைக் கடிந்து கொள்ளாதீர். யாசிப்போரைவிரட்டாதீர். (அல்-குர்ஆன்: 93:9, 10).
மேலும், உம்முடைய இரட்சகனின் அருட்கொடையைப்பற்றி விசாரிக்கப்பட போவதை அறிவித்துக் கொண்டிருப்பீராக. (அல்-குர்ஆன்: 93:11).
நீங்கள் அதை உறுதியாகக் கண்ணால் பார்க்கும் அந்நாளில் (மறுமையில்) அருட்கொடைகளைப்பற்றி நிச்சயமாக நீங்கள் விசாரிக்கப்படுவீர்கள். (அல்-குர்ஆன்: 102: 7, 8).
நிச்சயமாக அல்லாஹ் நன்மை செய்வோரின் கூலியை வீணாக்கமாட்டான். இவர்கள் சிறிய அளவிலோ அல்லது பெரிய அளவிலோ, (எந்தஅளவு) அல்லாஹ்வின் வழியில் செலவு செய்தாலும், அல்லது (அல்லாஹ்வுக்காக) எந்தப் பள்ளத்தாக்கை கடந்து சென்றாலும், அது அவர்களுக்காக (நற்செயல்களாய்) பதிவு செய்யப்படாமல் இருப்பதில்லை அவர்கள் செய்த காரியங்களுக்கு, மிகவும் அழகானகூலியை அல்லாஹ் அவர்களுக்குக் கொடுக்கிறான். (அல்-குர்ஆன்: 9:120,121).
ஏகனின் விசாரிப்புக்கு பதிவு புத்தகம் பதில் சொல்லும்:-
நிச்சயமாக, உங்கள்மீது பாதுகாவலர்கள் (நியமிக்கப்பட்டு) இருக்கின்றனர். (அவர்கள்) கண்ணியமிக்க எழுத்தாளர்கள்.நீங்கள் செய்கிறதை அவர்கள் அறிகிறார்கள். நிச்சயமாக நல்லவர்கள் “நயீம்” என்னும் சுவனத்தில் இருப்பார்கள். இன்னும்,நிச்சயமாக, தீமை செய்தவர்கள் நரகத்தில் இருப்பார்கள். நியாயத் தீர்ப்பு நாளில்அவர்கள் அதில் பிரவேசிப்பார்கள். மேலும்,அவர்கள் அதிலிருந்து (தப்பித்து) மறைந்து விடமாட்டார்கள். நியாயத் தீர்ப்புநாள் என்னவென்று உமக்கு அறிவிப்பது எது?பின்னும் – நியாயத்தீர்ப்புநாள் என்ன என்று உமக்கு அறிவிப்பது எது? அந்நாளில் ஓர் ஆன்மா பிறிதோர் ஆன்மாவிற்கு எதுவும் செய்யசக்தி பெறாது, அதிகாரம் முழுவதும் அன்று அல்லாஹ்வுக்கே உரியது. (எவரும் தலையிட இயலாது). (அல்-குர்ஆன்: 82:9முதல்19)
இன்னும் (பட்டோலையாகிய) புத்தகம் (அவர்கள்முன்) வைக்கப்படும்; அதிலுள்ளதைக் கண்டு குற்றவாளிகள் மிக்க அச்சத்துடன் இருப்பதைக்காண்பீர்; மேலும்அவர்கள், “எங்கள்கேடே! இந்த ஏட்டிற்கு என்ன (நேர்ந்தது)? சிறியவையோ பெரியவையோ எதையும் வரையறுக்காது இது விட்டுவைக்கவேயில்லையே!” என்று கூறுவார்கள்; இன்னும், அவர்கள் செய்தயாவும் அவர்கள் முன் வைக்கப்படுவதைக் காண்பார்கள்; ஆனால் உம்முடைய இரட்சகன் ஒருவருக்கும் அநியாயம் செய்யமாட்டான். (அல்-குர்ஆன்: 18:49).
பூமியிலோ, வானத்திலோ உள்ளவற்றில் ஓர் அணுவளவும் உம் இரட்சகனுக்குத் (தெரியாமல்) மறைத்துவிடுவதில்லை.இதைவிடச் சிறயதாயினும் அல்லது பெரிதாயினும் விளக்கமான அவன் புத்தகத்தில் பதிவு செய்யப்படாமலும் இல்லை. (அல்-குர்ஆன்: 10:61).
வானங்களிலோ, பூமியிலோ ஓர் அணுவளவும் அவனைவிட்டு மறையாது இன்னும், அதைவிடச் சிறியதோ, இன்னும் பெரியதோ ஆயினும் தெளிவான (லவ்ஹுல்மஹ்ஃபூல்) ஏட்டில் பதிவு செய்யப்படாமல் இல்லை என்றுகூறுவீராக. ஏகனிறை நம்பிக்கைக் கொண்டுசீர்திருத்த (ஸாலிஹான) செயல் செய்பவர்களுக்கு கூலி கொடுப்பதற்காக (அவ்வாறு பதிவு செய்யப்பட்டுள்ளது) அத்தகையவர்களுக்குத்தான் பாவமன்னிப்பும், கண்ணியமான உணவு (வசதியு)ம் இருக்கின்றன. (அல்-குர்ஆன்: 34:3,4).
எவர் ஓர் அணுவளவு நன்மை செய்திருந்தாலும் அத(ற்குரியபல)னை அவர் கண்டு கொள்கிறார், கண்டுகொள்வார். அன்றியும், எவன் ஓர் அணுவளவு தீமை செய்திருந்தாலும், அதனையும் அவன் கண்டு கொள்கிறான், கண்டு கொள்வான். (அல்-குர்ஆன்: 99:7,8).
ஒவ்வொரு செயலுக்கும் உரிய கூலி வழங்கப்படும்:-
ஒவ்வொருவருக்கும் அவரவர் செய்த செய்கைகளுக்குத் தகுந்த பதவிகள் உண்டு – ஆகவே அவர்கள் தங்கள் செயலுக்குரிய கூலியைப் பூரணமாகப் பெறுவதற்காக, ஆகவே அவர்கள் (இதில்) அநியாயம் செய்யப்பட மாட்டார்கள் . அன்றியும் (நரக)நெருப்பின் முன் நிராகரிப்பவர்கள் கொண்டு வரப்படும் நாளில், “உங்கள் உலக வாழ்க்கையின்போது உங்களுக்குக் கிடைத்திருந்த மணமான பொருட்களையெல்லாம், வீண்செலவு செய்து, இன்பம் தேடினீர்கள், “ஆகவே நீங்கள் பூமியில் அநியாயமாகப் பெருமையடித்துக் கொண்டும், வரம்பு மீறிகொண்டும் இருந்த காரணத்தால், இழிவுதரும் வேதனையை இன்று நீங்கள் கூலியாகக் கொடுக்கப்படுகிறீர்கள்” (என்று அவர்களுக்குக் கூறப்படும்). (அல்-குர்ஆன்: 46:19.20).
நம் உடல் உறுப்புகளே நமக்கெதிராக சாட்சி பகரும்:-
நீர்கூறுவீராக: “அவனே உங்களைப் படைத்து உங்களுக்குச் செவிப்புலனையும், பார்வை புலன்களையும் இதயங்களையும் அமைத்தான்; (எனினும்) மிகவும் சொற்பமாகவே நீங்கள் நன்றி செலுத்துகிறீர்கள்.” (அல்-குர்ஆன்: 67:23).
எல்லாம் வல்ல ஏகனிறைவன் இவ்வுலக ஏகபோக பிரதிநிதியான மனிதனை எப்படியெல்லாம் பரிணாம வளர்ச்சியடைய வைத்தான்; உண்மையான அறிவு, மெஞ்ஞானம் பெற அத்தியவசியமான செல்வத்துல் சிறந்த செல்வமான செவிச் செல்வம், அடுத்து பார்த்தறியும் பார்வைப் புலன்கள், இவற்றால் பெற்றதைச் சீர்தூக்கி சீர்திருத்த செயல்கள் புரிய மனித பகுத்தறிவு இதயங்களைப் படைத்தான். இம்முறையில் சத்திய மெஞ்ஞானத்தைப் பெறாமல் மனிடப் பதர்களால் உருவாக்கப்பட்ட ஏட்டறிவில் ஏற்றம் பெற்று இறுமாந்து ஏகனுக்கு நன்றி செலுத்தா அறிவிலிகளாய் வாழ்வதைப் பற்றியும் விசாரிக்கப்படுவோம் என விவரித்து பட்டியலிடும் பாங்கினையும் பாருங்கள்.
அவனேதான் படைத்துள்ள ஒவ்வொரு பொருளையும் அழகாக்கினான்; இன்னும், அவன் மனிதனின் படைப்பைக் களிமண்ணிலிருந்து ஆரம்பித்தான். பிறகு (நழுவும்) அற்பத்துளியாகிய (இந்திரிய) சத்திலிருந்து, அவனுடைய சந்ததியை உண்டாக்கினான். பிறகு அவன் அதைச் சரிசெய்து, அதனுள்ளே தன் உயிரி (ரூஹி)லிருந்தும் ஊதினான் – இன்னும் உங்களுக்கு அவன் செவிப்புலனையும், பார்வைப் புலன்களையும், இருதயங்களையும் அமைத்தான்; நீங்கள் நன்றி செலுத்துவது மிகச் சொற்பமே. (அல்-குர்ஆன்: 32:7 முதல் 9)
உங்கள் மாதாக்களின் வயிறுகளிலிருந்து நீங்கள் ஒன்றுமே அறியாதவர்களாக இருந்த நிலையில் உங்களை அல்லாஹ் வெளிப்படுத்துகிறான்; அன்றியும் உங்களுக்குச் செவிப்புலனையும், பார்வைகளையும், இதயங்களையும் – நீங்கள் நன்றி செலுத்தும் பொருட்டு – அவனே அமைத்தான். (அல்-குர்ஆன்: 16:78).
அவனே உங்களுக்குச் செவிப்புலனையும், பார்வைகளையும், இதயங்களையும் படைத்தவன்; மிகக்குறைவாகவே அவனுக்கு நீங்கள் நன்றி செலுத்துகிறீர்கள். மேலும், அவன்தான் உங்களை இப்பூமியில் பல்கிப் பெருகச் செய்தான்; இன்னும்,அவனிடத்திலேயே நீங்கள் ஒன்று திரட்டப்படுவீர்கள். (அல்-குர்ஆன்: 23:78, 79).
நிச்சயமாக செவிப்புலனும், பார்வையும், இருதயமும் இவை ஒவ்வொன்றுமே (அதனதன் செயல்பற்றி)விசாரிக்கப்படும். மேலும், நீர் பூமியில் பெருமையாய் நடக்கவேண்டாம்; நிச்சயமாக, நீர் பூமியைப் பிளந்துவிட முடியாது மலையின் உச்சி(யளவு)க்கு உயர்ந்து விடவும் முடியாது. (அல்-குர்ஆன்: 17:36, 37).
அல்லாஹ்வின் பகைவர்கள் தீயின்பால் ஒன்று திரட்டப்படும் அந்நாளில், அவர்கள் (செயல்களுக்கொப்பப்)பிரிக்கப்படுவார்கள். இறுதியில், அவர்கள் (அத்தீயை) அடையும்போது, அவர்களுக்கு எதிராக அவர்களுடைய காதுகளும்,அவர்களுடைய கண்களும், அவர்களுடைய தோல்களும் அவை செய்து கொண்டிருந்தவை பற்றி சாட்சிகூறும். (அல்-குர்ஆன்: 41:19,20).
அந்தநாளில் நாம் அவர்களின் வாய்களின்மீது முத்திரையிட்டு விடுவோம்; அன்றியும் அவர்கள் சம்பாதித்துக் கொண்டிருந்தது பற்றி அவர்களுடைய கைகள் நம்மிடம் பேசும்; அவர்களுடைய கால்களும் சாட்சி பகரும். நாம் நாடியிருந்தால், நாம் அவர்களுடைய கண்களைப் போக்கியிருப்போம்; அப்பொழுது (அவர்கள் தப்பும்) வழிதேடி ஓடினால் அவர்கள் எதைப்பார்ப்பார்கள்? (அல்-குர்ஆன்: 36:65, 66).
இச்சிறு ஆக்கத்தில் ஏகனின் உலகப் படைப்பினங்களில் உயர்வான உன்னத மனிதன் தனக்கே உரித்தான சுயமரியாதையுடன் சுயமுயற்சியில் உழைத்து உலக முன்னேற்றத்திற்கு உறுதுணயாக இருக்க வேண்டும். தானம், தர்மங்கள், இலவசங்களில் ஆர்வம் கொண்டு மனித சமுதாயத்தில் சுயமரியாதை இழந்து, இயற்கைக்கு எதிராக, உலகிற்கே பெரும் பாரமாக, ஏகனுக்கே விருப்பமற்ற மானிடப் பதர்களாகிவிடக் கூடாது என்ற மனித நேயத்தில் நம் இயற்கை வாழ்வுநெறியான இஸ்லாமிய கருத்துக்களைப் பதிவு செய்துள்ளோம். தெளிவான இறை வசனங்களை மட்டும் ஆதாரங்களாக காட்டியுள்ளோம். இதற்கான உங்களின் மேலான விமர்சனங்களை எதிர்பார்க்கிறோம். தேவைப்படின் மற்றும் பற்பல நபிமொழி ஆதாரங்களுடன் சிறு நூலாக, ஏகனிறைவன் நாடினால், வெகு விரைவில் வெளி வரும். ஏகனிறைவன் நம்மனைவருக்கும் நேர்வழி காட்டுவானாக! ஆமீன்!!
தொடர்பு கொள்க:- Dr. அம்ரைனி, தொலை பேசி எண்: (0431) 2340 330; கைபேசி எண்கள்: (+91) 97861 14242, 96299 37388. இணைய தள முகவரி:: E.mail: dramraini@gmail.com