விமர்சனங்கள்! விளக்கங்கள்!!
விமர்சனம் : அந்நஜாத் டிசம்பர் இதழ் பக்.3-ல் இயக்கங்களின் பெயரால், இணை(ஷிர்க்்) வைக்கின் றனர் என்கிறீர்கள். மெளலவிகளை, இயக்கத் தலை வர்களை தக்லீத் செய்கிறார்கள் என்று சொன்னால் சரி. மாறாக இணை(ஷிர்க்்) வைக்கின்றனர் என்று சொல்வது சரியா? M.அபூ நபீல், தேங்காய்பட்டணம்
விளக்கம் : மார்க்கத்தில் எமது சுய கருத்தைப் புகுத்துவதை விட்டும் அல்லாஹ் எம்மைக் காப்பா னாக. குர்ஆன் கூறும் கருத்தையே கூறுகிறோம். குர்ஆன் 9:31 வசனத்தைப் படித்துப் பாருங்கள். கிறித்தவர்கள் தங்களின் மதகுருமார்கள், துறவிகள், ஈசா(அலை) ஆகியோரை ரப்பாக ஆக்கிக் கொண்டார்கள் என்று குற்றம் சுமத்துகிறான் அல்லாஹ், அப்போது தான் கிறித்தவராக இருந்து இஸ்லாத்தைத் தழுவிய ஒரு நபிதோழர் நபி(ஸல்) அவர்களிடம், “”நாங்கள் ஈசா(அலை) அவர்களை இறைவனின் குமாரன் என்று சொல்லி இணை(ஷிர்க்்) வைத்தது உண்மைதான். ஆனால் மதகுருமார்களையும், துறவிகளையும் ரப்பு கடவுள் எனக் கூறி இணை வைக்கவில்லையே! அல்லாஹ் அவர்களை ரப்பாகக் கொண்டதாகக் குற்றப்படுத்துகிறானே என்று கேட்டார்.
அதற்கு நபி(ஸல்) அவர்கள் கூறிய பதில் என்ன தெரியுமா? “அவர்களின் மதகுருமார்கள், துறவிகள் கூறியது அவர்களின் இன்ஜீலில் இருக்கிறதா எனப் பார்க்காமல், அப்படியே கண்மூடி (தக்லீத்) எற்றார்கள். அதுதான் அவர்களை ரப்பாக-கடவுளாக ஏற்ற தாகும், ஷிர்க்காகும் என்று விளக்கினார்கள். அதேபோல் இன்று முஸ்லிம்கள், மவ்லவிகள், இயக்கத் தலைவர்கள் கூறுவது குர்ஆனில் இருக்கிறதா? ஆதாரபூர்வமான ஹதீஃதில் இருக்கிறதா? என்று பார்க்காமல் அவர்கள் கூறும் அனைத்தையும் அப்படியே கண்மூடி (தக்லீத்) ஏற்று நடப்பதைப் பார்க்கத்தானே செய்கிறீர்கள். இதுவே பெரும்பான்மை முஸ்லிம்கள் மவ்லவிகளையும், இயக்கத் தலைவர் களையும் ரப்பாகக் கொண்டு ஷிர்க்-இணை வைக்கிறார்கள் என்பதை உள்ளங்கை நெல்லிக்கனியாக உணர்த்தவில்லையா? (பார்க்க : திர்மிதி, அஹ்மத், இப்னு ஜகீர்)
விமர்சனம் : அன்பளிப்பில் இருந்து பிறந்தவை தான் குருதட்சணை, வரதட்சணை, மார்க்கப் பணிக்கு கூலி வாங்குதல் இவை போன்றவை. அன்பளிப்பை சரிகாணும் நீங்கள் மேலே கூறிய வற்றை கடுமையாக எதிர்ப்பது ஏன்? M.அபூ நபீல், தேங்காய்பட்டணம்
விளக்கம் : முதலில் அன்பளிப்பு வேறு, குருதட் சணை, வரதட்சணை, கடமையான மார்க்கப் பணிக்குச் சம்பளம் இவை மூன்றும் வேறு என்பதை விளங்கிக் கொள்ளுங்கள். அன்பளிப்பு, எதிர்பாராமல், கேட்காமல் அதுவே ஒருவனைத் தேடி வருவது. மார்க்கம் அனுமதித்தது. குருதட்சணை, வரதட்சணை, கடமையான மார்க்கப் பணிக்குக் கூலி-சம்பளம், பேரம் பேசி, கேட்டு-யாசித்து வாங்குவது. மார்க்கம் தடை செய்யும் கொடிய செயல்கள்.
ஒன்றை நீங்களும் மற்றும் சகோதர, சகோதரிகளும் தெளிவாகப் புரிந்து கொள்ள வேண்டும். மார்க்க விசயங்களில் நாமாக ஒன்றை சரி காண்பதையோ, பிறிதொன்றை எதிர்ப்பதையோ மார்க்கம் எமக்குக் கடுகளவும் அனுமதி தரவில்லை. மார்க்கம் என்றால் அதை குர்ஆனிலிருந்து தரவேண்டும். அல்லது ஆதாரபூர்வமான ஹதீஃதிலிருந்து தரவேண்டும். இந்த அடிப்படை விதிகளை மதியாத மவ்லவிகளும், இயக்கப் பிரிவுகளும் ஆளாளுக்கு தங்கள் தங்கள் சுய கருத்துக்களை மார்க்கத்தில் துணிந்து வழிகேடாக நுழைப்பதால்தான் இன்று முஸ்லிம் சமுதாயம் அவிழ்த்துக் கொட்டப்பட்ட நெல்லிக் காய்களைப் போல் சிதறிச் சின்னாபின்னமாகி நாயிலும் கேடாக, இதர மதத்தினர் முஸ்லிம்களை ஒரு பொருட்டாகவே மதிக்காத நிலைக்கு ஆளாகியுள் ளனர். முஸ்லிம்களே ஒருவரை ஒருவர் வெட்டிச் சாய்க்கின்றனர். சுட்டு வீழ்த்துகின்றனர். இவை மத்ஹப், தரீக்கா, இயக்கப் பிரிவினர், மத்ஹப், இயக்க வெறி காரணமாக இப்படிப்பட்ட ஈனச் செயல்களில் ஈடுபடுகின்றனர். 3:102,103 இன்னும் இவை போல் பல குர்ஆன் வசனங்களுக்கு முற்றிலும் கட்டுப்பட்டு பிரியாமல், ஒரே ஜமாஅத்தாக ஒரே தலைமையின் கீழ் ஒன்றுபட்டு, குர்ஆனைப் பற்றிப் பிடித்து முஹ்க்கமாத் வசனங்களின் நேரடிக் கருத்துக்களை 17:85 இறைவாக்குக் கூறுவது போல் மனிதனின் அற்ப அறிவைப் புகுத்தாமல், சுய விளக்கம் கொடுக்காமல் அவற்றில் உள்ளதை உள்ளபடி எடுத்து நடக்க முன்வந்தால் மட்டுமே இவ்வுலகிலும், மறு உலகிலும் வெற்றி பெற முடியும்.
தூய மார்க்கத்தில் கலீஃபாக்கள், நபிதோழர்கள், தாபியீன்கள், தபஅ தாபியீன்கள், அவுலியாக்கள், இமாம்கள், மதகுருமார்கள், மவ்லவிகள், இயக்கத் தலைவர்கள் பெயரால் 17:85 இறைவாக்குக் கூறுவது போல் மிகமிக அற்ப அறிவையுடைய மனிதக் கருத்துக்களைப் புகுத்தி அவற்றை மார்க்கமாக எடுத்து நடப்பதால் தான் இந்தச் சீரழிவு. அதே அடிப்படையில்தான் மார்க்கப் பணிக்குக் கூலி வாங்குவதை நாம் கடுமையாக எதிர்ப்பது ஏன் என்று கேள்வி எழுப்பி இருக்கிறீர்கள். இது எமது சுய கருத்து இல்லை. குர்ஆன், ஹதீஃத் கருத்தை மட்டுமே அந்நஜாத்தில் எடுத்து வைக்கிறோம். புகாரீ (ர.அ.) என்ற நூலின் புதிய பதிப்பு 2-ம் பாகம், அத்தியாயம் 51, பக்கம் 535லிருந்து 588 வரையுள்ள ஹதீஃத்களை நீங்களே படித்து அன்பளிப்பு ஹலாலா? ஹராமா? என நீங்களே முடிவு செய்யுங்கள். குருதட்சணை, வரதட்சணை பிற மதத்தாரிடம் காணப்படும் ஒரு கலாச்சாரம்; பிற மதத்தார் அதைச் சரிகாணலாம். ஓர் உண்மையான முஸ்லிம் அவற்றை ஒருபோதும் சரிகாண முடியாது. மேலும் அவை அன்பளிப்பில் இருந்து பிறந்தவை என்பதும் பெரும் தவறாகும்.
அன்பளிப்பு என்பது எதிர்பாராத நிலையில், எச் சேவையும் செய்யாத நிலையில் நம்மைத் தேடி வருவதாகும். குருதட்சணையும், வரதட்சணையும் கேட்டு அதாவது யாசித்துப் பெறுவதாகும். மக்களிடம் யாசிப்பது பிச்சை கேட்பது மார்க்கத்தில் தடை செய்யப்பட்டது என்பதை அறியாதவர்கள் இருக்கிறார்களா?
கடமையான, தன்மீது விதிக்கப்பட்ட (பார்க்க: 9:71,103:1-3) மார்க்கப் பணிக்கு கூலி வாங்குவது ஹராம்களிலேயே மகாமகா கொடிய ஹராம் என் பதை நூற்றுக்கணக்கான குர்ஆன் வசனங்கள் உறுதிப்படுத்துகின்றன. அவற்றில் கூலி கூடாது என 6:90, 10:72, 11:29.51, 25:57, 26:109,127,145,164,180, 34:47, 38:86, 42:23, 36:21, 52:40, 68:46 பல வசனங்கள்; மார்க்கப் பணிக்கு கூலி வாங்குவதால் ஏற்படும் தில்லுமுல்லுகள், வழிகேடுகள் பற்றி 2:41,79, 3:78, 187,188, 4:44,46, 5:41,63, 6:21,25,26, 9:9,10,34, 11:18,19, 31:6 இவ்வசனங்கள் கூறுகின்றன.
இந்த மவ்லவிகள் நன்கு அறிந்த நிலையில்தான் இப்படுபாதகச் செயல்களை, மக்களை நரகிற்கு இட் டுச் செல்லும் செயல்களைச் செய்கின்றனர் என்று கூறும் வசனங்கள் 2:75,78,79,109,146, 6:20 இவை உறுதிப்படுத்துகின்றன. மவ்லவிகளின் உள்ளங்கள் கற்பாறைகளை விட கடினமாகிவிடுகின்றன. இதை 5:13, 6:125, 57:16 வசனங்கள் உறுதிப்படுத்துகின்றன.
மவ்லவிகள் தங்கள் வயிறுகளில் நரக நெருப் பையே நிரப்புகின்றனர் என 2:174 இறைவாக்கு உறுதிப்படுத்துகிறது. தூய மார்க்கத்தை மதமாக்கி அதையே தங்களின் வயிற்றுப் பிழைப்பாகக் கொண்ட மவ்லவிகள், அல்லாஹ் தெளிவாக, திட்டமாக, நேரடியாக மனிதகுலத்திற்கென்றே விளக்கியுள்ள குர்ஆன் வசனங்களுக்குச் சுய விளக்கம் கொடுத்து, அவற்றின் உண்மைக் கருத்தை மறைக்கும் கொடிய செயல்களைச் செய்கின்றனர். எனவே அவர்கள் அல்லாஹ்வின், மலக்குகளின், மனிதர்களின் கொடிய சாபத்திற்கு ஆளாகி நிரந்தர நரகத்தை அடைகின்றனர் என்பதை 2:159-162 இறைவாக்குகள் உறுதிப்படுத்துகின்றன.
இவ்வுலகில் “”நாங்கள்தான் மார்க்கம் கற்ற மேதைகள், ஆலிம்கள், நீங்கள் எல்லாம் மார்க்கம் அறியா அவாம்கள்” என பெருமை பேசம் இம் மவ்லவிகள் பெரும் வழிகேட்டில் இருக்கிறார்கள் என்று 7:146 மற்றும் பெருமை பற்றிச் சொல்லும் பல குர்ஆன் வசனங்கள் உறுதிப்படுத்துகின்றன. மேலும் இம்மவ்லவிகளும் இவர்களைக் கண்மூடிப் பின்பற்றிய (தக்லீது) பெருங்கொண்ட முஸ்லிம் களும் நாளை நரகில் கிடந்து வெந்து கரியாகிக் கொண்டு ஒருவரை ஒருவர் திட்டி, சபித்து, ஒப்பாரி வைப்பதை 7:35-41, 33:66-68, 34:31-33, 37:27-33, 38:55-64, 40:47-50, 41:29, 43:36-45 போன்ற எண்ணற்ற வசனங்கள் நெற்றிப் பொட்டில் அடிப்பது போல் உணர்த்துகின்றன.
இவற்றில் சில வசனங்கள் பெருமையடித்தோர் என்று கூறுவது பெருமையடிக்கும் இம்மவ்லவிகளையே குறிக்கின்றது. மேலும் இம்மதகுருமார்களான இம்மவ்லவிகளைக் கண்டித்து நாம் அறிந்த வரை 346 இடங்களில் கடிந்து கூறப்பட்டுள்ளதை அறிய முடிகிறது. இந்த இறைவாக்குகளைப் படித்து விளங்கி குர்ஆனைப் பற்றிப் பிடித்து அதன் போதனைகள்படி நடப்பவர்களும், தங்களின் தீமைகள் தங்களுக்கு அழகாகக் காண்பிக்கப்பட்டு மனோ இச்சையைப் பின்பற்றுவோரும் சமமாவார்களா? இதைப் பட்டவர்த்தனமாக அறிவிக்கிறது 47:14 இறைவாக்கு.
இம்மதிகெட்ட, வழிகெட்ட மவ்லவிகள் கடமையான, மறுமையில் உயர் கூலியை எதிர்பார்த்து செய்யவேண்டிய மார்க்கப் பணியை அற்பமான இவ்வுலகில் கூலியை-சம்பளத்தை எதிர்பார்த்து செய்வதால்தான், அவர்களால் வழிகேடுகளை நேர் வழியாகப் போதிக்கும் துர்பாக்கிய நிலைக்கு (பார்க்க : 7:146) பலியாகி வருகிறார்கள். இன்று அனைத்துலகிலும் பஞ்சமா பாவங்கள் நிறைந்து காணப்படுவதற்கு அடிப்படைக் காரணம் மார்க்கப் பணிக்குக் கூலியை நோக்கமாகக் கொண்டு, மனித குலத்திற்கே சொந்தமான இறைவன் அருளிய இறுதி இறை நூல் குர்ஆனை “”வேதம்” என உளறி அதை முஸ்லிம்களும், மனித குலத்தினரும் நெருங்க விடாமல், தடுத்து வைத்திருப்பதோடு குர்ஆனில் இல்லாததை குர்ஆனில் இருப்பதாக கோரஸ் பாடி மக்களின் உள்ளத்தில் பதிய வைத்திருப்பதால், புரையோடச் செய்திருப்பதால், இன்றைய உலகு வழிகேட்டின் அதலபாதாளத்தில் வீழ்ந்துகிடக்கிறது.
விபச்சாரத்தில் மூழ்கிக் கிடக்கும் நடிகர், நடிகைகள், அரசியல் தலைவர்கள், நூறு தலைமுறையின ருக்குச் சொத்து சேர்த்து குவிக்கும் அறிவீனர்களும், மனோ இச்சைக்கு அடிமைப்பட்டு பரம ஏழைகள், விவசாயிகள் வயிற்றிலடிக்கும் வீணர்களும் மக்களை ஆட்டிப் படைத்து, அவர்களை மயக்கி ஆட்சியில் அமரும் வாய்ப்புகளும் மிக எளிதாகக் கிடைக்கின்றன. இதற்கெல்லாம் அடிப்படைக் காரணம் இம்மவ்லவிகள். உலக மக்கள் அனைவருக்கும் சொந்தமான குர்ஆனை மக்களிடமிருந்து முற்றிலும் மறைத்து, அதைத் தங்களின் வயிற்றுப் பிழைப்பாக ஆக்கிக் கொண்டதே. அதனால்தான் மார்க்கத்தை மதமாக்கி அதை வயிற்றுப் பிழைப்பாக, கூலிக்கு மாரடிக்கும் இந்த அடாத செயலை மிகக் கடுமையாகத் தொடர்ந்து கண்டித்து வருகிறோம்.
விமர்சனம் : இணை வைக்கும் இமாமைப் பின்பற்றக் கூடாது என்று தேவ்பந்து அதிரடி தீர்ப்பு வழங்கியுள்ளது. ஆனால் முஸ்லிம் என்று யார் சொன்னாலும் அவர் இணை வைப்பவராக இருந் தாலும் அவரைப் பின்பற்றித் தொழலாம் என்கிறீர் கள். தேவ்பந்து தீர்ப்பு பற்றி குர்ஆன், ஹதீஃத் என்ன கூறுகிறது?
அபூ நஃபீல், தேங்காய்பட்டிணம்.
விளக்கம் : பூர்வீகப் பள்ளிகளில் இமாமாக இருக்கும் நபர்கள் தர்கா, தரீக்கா போன்ற இணை வைப்புக் காரியங்களில் ஈடுபடுபவர்களாக இருந்தாலும், அவர் தொழுகை அவர்களுக்கு, நம் தொழுகை நமக்கு, அவரது தொழுகை அவரது முகத்தில் எறியப்பட்டாலும் பின்னால் தொழுபவர் சரியாக தொழுதிருந்தால் அவரது தொழுகைக்கு எவ்வித பாதிப்பும் இல்லை. காரணம் ஒருவரது சுமையை பிரிதொருவர் சுமக்கமாட்டார் என்று பல குர்ஆன் வசனங்கள் உள்ளன.
ஒரு விஷயத்தை ஒவ்வொரு முஸ்லிம் ஆணும், பெண்ணும் திட்டமாக அறிந்திருக்க வேண்டும். மார்க்கத்தில் ஒரு சட்டம் யார் சொன்னாலும் அது குர்ஆனில் இருக்க வேண்டும் அல்லது நபிவழியில் இருக்க வேண்டும். குர்ஆனிலோ, நபி வழியிலோ இல்லாத ஒரு சட்டத்தை யார் சொன்னாலும் அவர்கள் பகிரங்கமான வழிகேட்டில் இருக்கிறார்கள் என்று 2:159, 33:36 இறைவாக்குகள் கூறுகின்றன.
அன்று நபியுடைய காலத்தில் இன்றைய முஸ்லிம்களை விட கேடுகெட்ட முஸ்லிம்கள் இருந்தார்கள். இவர்கள் சமாதி வழிபாடு செய்கிறார்கள் அவர்கள் சிலை வழிபாடே செய்தனர் என்பதை 2:8 முதல் 20 வரை குர்ஆன் வசனங்களே உறுதிப்படுத்துகின்றன. அந்த நிலையிலும் ஷிர்க்் செய்யும் இமாம் பின்னால் தொழக்கூடாது என்று நபி (ஸல்) சட்டம் சொல்லவில்லை. அதற்கு மாறாக யார் நமது தொழுகையை தொழுகிறாரோ நமது கிப்லாவை முன்னோக்குகிறாரோ, நாம் அறுத்த தைச் சாப்பிடுகிறாரோ அவர் முஸ்லிம். முஸ்லிம்களுக்குரிய அனைத்து உரிமைகளும் அவருக்கும் உண்டு. அவருக்கு அல்லாஹ்வின் பொறுப்பும், தூதரின் பொறுப்பும் உண்டு. (புகாரீ : 391,392,393)
தேவ்பந்த் ஆலிம்களும் தங்களுக்கும் அல்லாஹ் வுக்கும் இடையில் மத்ஹபு, இமாம் என மனிதர்களைப் புகுத்தி ஷிர்க்் செய்யத்தான் செய்கிறார்கள். அப்படியானால் மவ்லவி, ஆலிம் எனப் பெருமை பேசும் அவர்கள் பின்னாலும் தொழக்கூடாது என்று சட்டம் சொல்ல வேண்டும். சொல்லத்தயாரா?
விமர்சனம் : இஃலாசுடன் கூடிய கருத்து வேறுபாடு களால் ஒருபோதும் பிளவு, பிரிவினை ஏற்படாது என்கிறீர்கள். அதற்கான உதாரணத்தை உங்களால் காட்ட இயலுமா? வானர் நதீர், நாகர்கோவில்.
விளக்கம் : நபி(ஸல்) அவர்களின் காலத்திலேயே நபி தோழர்கள் கருத்து வேறுபாடுகளால் பிணங்கிக் கொண்ட சம்பவங்களை ஹதீஃத்களில் காணப்படு கின்றன. ஒரு சமயம் அபூபக்கர்(ரழி) உமர்(ரழி) இரு வருக்கும் இடையில் கருத்து வேறுபாடு ஏற்பட்டு, அபூபக்கர்(ரழி) மிகுந்த கோபத்திற்கு ஆளாகி, தனது கீழாடையை முழங்காலுக்கும் மேலாகத் தூக்கிக் கொண்டு வேகமாக வந்து நபி(ஸல்) அவர்களிடம் முறையிட முற்பட்டதாக செய்தி பதிவாகியுள்ளது. இந்த அளவு இருவருக்குமிடையில் கருத்து வேறுபாடு இருந்தும் இரண்டாகப் பிளவுபடவில்லை. இரு அமைப்புகளைக் கற்பனை செய்யவில்லை. நபி(ஸல்) அவர்கள் மரணித்த பின் நான்தான் தலைவன் என்று அவர்களில் யாரும் போட்டியிட வில்லை. நீ கலீஃபாவாக ஆகு, நீ கலீஃபாவாக ஆகு என்று ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுத்து, இறுதி யில் உமர் (ரழி) அவர்கள் அபூபக்கர் (ரழி) கையைப் பிடித்து வலுக்கட்டாயமாக பையத் செய்ததாகவே வரலாறு கூறுகிறது.